Advertisement

தோற்றம் – 14

புகழேந்தி சென்னை சென்றும் நான்கு நாட்கள் ஆகியிருந்தது.. முதல் இரண்டு நாட்கள் பொன்னிக்கு கொஞ்சம் ஒருமாதிரி இருந்தாலும், பின் அவளே அவளை அந்த வீட்டின் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொண்டாள்..

அவன் கிளம்புகையில் சொல்லிவிட்டே போனான்..

“கண்ணு… மிஞ்சி போனா டென் டேஸ் தான்.. நான் வந்து உன்னை கூட்டிட்டு போயிடுவேன்.. சோ இங்க யார் என்ன பேசினாலும்.. என்ன சொன்னாலும் கண்டுக்காத.. அப்படி உனக்கு ரொம்ப போர் அடிச்சா அம்மாக்கிட்ட சொல்லிட்டு அத்தை கூட போய் இருந்திட்டு வா..

இல்லையா பால்வாடிக்கு போகனுமா போயிட்டு வா.. மத்தபடி யார் என்ன பேசினாலும் மனசுல போட்டுக்காத.. ஆனா எங்க போறதுன்னாலும் அம்மாக்கிட்ட ஒருவார்த்தை முன்னாடியே சொல்லிடு” என,

“நான் பார்த்து இருந்துப்பேன்..  நீங்க டென்சன் இல்லாம போயிட்டு வாங்க..” என்றாள் சிரித்த முகமாய்..

“நீ இருந்துப்ப.. ஆனா எனக்கு தான் அங்க டென்சனா இருக்கும்.. இங்க என்ன நடக்குதோ என்னவோன்னு நினைச்சிட்டே இருப்பேன்.. அக்கா கொஞ்சம் படபடன்னு பேசுவா ஆனா மனசுல எதுவும் இருக்காது.. நித்யா மதினி எப்போ எப்படி பேசுவாங்கன்னு சொல்லவே முடியாது.. அதான்…”

“அடடா.. நானும் இந்த ஊர்க்கார  பொண்ணுதான.. புதுசா ஒன்னும் இங்க கல்யாணம் பண்ணி வரலையே.. நமக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இவங்களை எல்லாம் நான் ஃபேஸ் பண்ணிருக்கேன்.. அதுனால ஒன்னும் பிரச்சனையில்லை..” என்று ஒருவழியாய் அவனை சமாதானம் செய்தாள்.  

என்னதான் புகழேந்திக்கு சமாதானம் சொல்லிவிட்டாலும் அவளுக்கும் அவன் கிளம்புவது கொஞ்சம் கஷ்டமாய் தான் இருந்தது.. பத்து நாட்கள் தான் கண் மூடித் திறப்பதற்குள் கடந்துவிடும் தான்.. ஆனாலும் என்னவோ மனதில் ஒருவித வருத்தம் தோன்றாமல் இல்லை..

இருந்தாலும் அவன் வேலை அவன் கிளம்பவேண்டும் என்பதெல்லாம் இவளுக்கு தெரியும்தானே.. என்னதான் எதுவும் வெளிக்காட்டாமல் இருக்க முயற்சித்தாலும், என்னவோ அவளால் பழைய உற்சாகத்தில் இருக்க முடியவில்லை..

அதை புகழேந்தியும் கவனித்திருந்தான் போல.. அவன் கிளம்புவதற்கு முன்னே வெகு நேரம் அவளை அணைத்தபடி நின்றிருந்தவன் தோன்றும் போதெல்லாம் அவள் நெற்றியில் இதழ் பதிக்க,   

“என்னங்க நீங்க புதுசா வேலைக்கு போறதுபோல இப்படி பண்ணிட்டு…” என்று சொன்னவளும் விலகி நிற்காமல் இருக்க,

“என்னன்னு தெரியலை.. மனசு என்னவோ பண்ணுது…” என்றவன், “எனக்கும் குடு…” என, “ஹா…!!!” என்றுதான் பார்த்தாள் பொன்னி..

“என்ன என்ன?? இவ்வளோ நேரம் ஹாயா வாங்குனல்ல.. எனக்கும் குடு..” என்று கன்னம் காட்ட,

“நானா கேட்டேன்…” என்றவள் உதட்டை சுளித்தாள்..

“நீ கேட்கலைன்னாலும் உனக்கு பிடிக்காததையா கொடுத்தேன்.. இல்ல லிமிட் க்ராஸ் பண்ணேனா??” என,

“ஹலோ ஹலோ… லிமிட்ஸ் அது இதுன்னு அன்னிக்கு கிளாஸ் எடுத்தது எல்லாம் நீங்கதான் நானில்லை.. வீட்ல தங்கச்சி இருக்கா.. ஆளுங்க இத்தனை பேர் எதுவா இருந்தாலும் நம்ம தனியா போகவும் பார்த்துக்கலாம்னு ரெண்டு மார்க் கேள்விக்கு கட்டுரை எழுதினது நீங்க..” என்றாள் பொன்னி வேகமாய்..

“ஓ.. அப்போ மேடம் எக்ஸாம்க்கு ரெடியாதான் வந்தீங்களா???” என்றவன் திரும்பவும் அணைக்க,

“அய்யே.. என்ன பேச்சிது… முதல்ல தள்ளுங்க.. சும்மா சும்மா கட்டிக்கிட்டு…” என்றவள் அவனை விளக்கப் பார்க்க,

“நீ தராட்டி போ டி…” என்றவன் அவனாகவே, அவளிதழில் அவன் கேட்டதை எடுத்துக்கொண்டவன், அவள் முகத்தை நிமிர்த்தி,  

“இப்பவும் சொல்றேன்.. இங்க எது நடந்தாலும் மனசுல போட்டுக்காத.. முன்ன எப்படியோ.. ஆனா இப்போ நீ என் பொண்டாட்டி…” என,

“யார் இல்லைன்னு சொன்னா???!!! நானும் அதையே தான் சொல்றேன்.. நான் உங்க பொண்டாட்டி.. அதுவும் இவளைத்தான் கட்டுவேன்னு நீங்க பிடிவாதம் பண்ணி கல்யாணம் பண்ண பொண்ணு..

இந்த வீட்ல உங்களுக்கு, மத்தவங்களுக்கு எல்லாம் என்ன உரிமை இருக்கோ அது எனக்கும் இருக்கு.. அதேபோல இது என் குடும்பம்னு நானும் நினைச்சு நல்லபடியா அனுசரிச்சு இருந்துப்பேன்.. போதுமா.. இதையே சொல்லிட்டு.. பத்து நாள்ல என்னாகிட போது….” என்று லேசாய் சலிப்பது போல் சொன்னவள், அவன் எதிர்பாரா நேரத்தில் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்..

“ஹ்ம்ம் இதெல்லாம் சும்மா ஓசில முட்டாய் கொடுக்கிற மாதிரி….” என்றவன் அவள் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைய,

“ஹ்ம்ம்ம்ம் போயிட்டு போன் பண்ணனும்…” என்றவளுக்கு குரல் உள்ளே சென்றுவிட்டது..

“ஹேய் பாத்தியா.. என்ன சொன்ன இப்போ நீ என்னவாம்???” எனும்போதே கதவு தட்டப்பட்டது..

பொன்னிதான் போய் கதவு திறக்க, மகராசி நின்றிருந்தார்..

“அத்தை உள்ள வாங்க…” என,

“ஹ்ம்ம் நல்ல நேரம் முடியறக்குள்ள கிளம்பணும் கண்ணு..” என்றபடி அவரும் உள்ளே வந்தார்..

“ம்மா நான் என்ன புதுசாவா வேலைக்கு போறேன்…” என்று புகழ் சொல்ல,

“புதுசா இல்ல கண்ணு.. கல்யாணம் பண்ணி இப்போதான் முதல் முதல்ல கிளம்புற அதான் சொன்னேன்.. எல்லாம் எடுத்து வச்சிட்டியா..?? உன் கூட்டாளிங்கக்கிட்ட சொல்லிட்டியா??” என,

புகழும் அவனின் உடமைகளை எடுத்து வெளியே வைத்தபடி “எல்லாம் சொல்லியாசும்மா.. அட்ரெஸ் அனுப்பிட்டாங்க.. நான் அங்க போய்டுவேன்…” என,

“ஓ..!! அப்போ சாப்பாடு???” என்றார் கேள்வியாய்..

“ம்மா.. தாயே மகராசி.. என்ன கேள்வி இது.. பசங்க எல்லாம் சமையல் பண்ணிதான் சாப்பிடுறாங்க.. காலைல நைட்டும் அங்க.. மதியம் ஆபிஸ் கேண்டீன்ல சப்பிட்டுப்பேன்…”

“ஹ்ம்ம்.. என்னவோ கண்ணு..” என்றவர் என்ன நினைத்தாரோ “ஏன் கண்ணு… பொன்னி அண்ணன் வீடு இருக்குல்ல அங்கக்கூட இவன் போய் தங்கலாம்ல… எதுக்கு யார் கூடவோ போய் இருக்கணும்… இதுன்னா உனக்கு மச்சான் வீடுன்னு ஆகிடும்ல…” என்று சாதாரணமாய் தான் கேட்டார்.. ஆனால் சட்டென்று புகழேந்தியின் முகம் மாறிவிட்டது..

பொன்னியோ “அத்தை இதைதான் அம்மாவும் அண்ணனும் சொன்னாங்க.. இவர் தான் வேணாம் பிரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டேன் அப்படின்னு சொல்லிட்டார்..” என,

“ஏன் கண்ணு அப்படி சொன்ன???” என்றார் மகனிடம் மகராசி..

‘இப்போ இந்த பேச்சு தேவையா??’ என்பதுபோல் புகழ் பார்க்க, “என்னடா கேட்டா பதில் சொல்லு அதைவிட்டு பார்த்தா என்னர்த்தம்…”

“ம்ம் சில கேள்வி எல்லாம் கேட்கவே கூடாதுன்னு ஆர்த்தம்…” என்றவன்,      

‘பார்த்தாயா என் வீட்டினர் மனத்தில் எதுவுமில்லை.. பெண் எடுத்தது முதற்கொண்டு அங்கே போய் தங்கு என்று சொல்வது வரைக்கும்…’ என்றதாய் ஒருபார்வை பொன்னியை பார்த்து வைத்தான்..

‘என்ன பேச்சு இது…’ என்று கொஞ்சம் குழப்பமாய் பொன்னி அவனைக் காண, அவளுக்கு அவன் பார்த்த விதமும் வித்தியாசமாய் பட, என்னவென்று கேட்பதற்குள்,

மகராசி “ஹ்ம்ம் என்னவோ நீங்க எல்லாம் படிச்சவங்க எதையாவது சொல்வீங்க..” என்றபடி “கண்ணு  அப்பா சாமி கும்பிட்டு தின்னூறு பூசி விடனும் சொன்னாரு வாங்க…” என்றழைக்க, புகழேந்தி மட்டும் அவரோடு நடந்தான்..

“கண்ணு நீயும்தான் வா.. என்ன அப்படியே நின்னுட்ட..” என்றவர் மருமகளையும் அழைக்க,

பொன்னி புகழ் இருவரும் பூஜையறைக்கு செல்ல, மன்னவனும் மகராசியும் அவர்களுக்கு சாமி கும்பிட்டு திருநீறு பூசிவிட, இருவரும் அவர்களின் இருவர் காலுக்கும் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டனர்..

என்னவோ பொன்னிக்கு மனது அப்போது கொஞ்சம் நிம்மதியாய் இருப்பதுபோல் இருந்தது.. புகழேந்தி கடைசியாய் பேசியதும்  பார்த்ததும் அவளுக்குக் கொஞ்சம் உறுத்தலாய் இருந்தாலும் அவன் கிளம்புகையில் எதையும் கேட்டுக்கொண்டு சிறு விசயத்தையும் பெரிது படுத்த கூடாது என்று அப்படியே விட்டுவிட்டாள்..

புகழுக்கும் அப்படித்தான் இருந்ததுவோ என்னவோ. ஆக அவனும் அடுத்து வேறெதுவும் சொல்லாது “பார்த்து இருந்துக்கோ.. நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குத்தான..” என்றவன் அவளின் கரங்களை ஒருமுறை அழுத்தி பிடித்து விடுவிக்க, அவளோ அவனையே பார்த்தபடி தலையை தலையை மட்டும் உருட்டினாள்..  

அடுத்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டவன், கிளம்பிவிட்டான்.. மொத்த குடும்பமும் வெளியில் வந்து நின்று வழியனுப்ப, பொன்னியும் அவர்களோடு நின்றிருந்தாள்.. அவன் கிளம்பி சென்றபின்னும், மற்றவர்கள் எல்லாம் வீட்டினுள்ளே சென்றபின்னும் கூட பொன்னி கொஞ்ச நேரம் வாசலில் நின்றிருந்தாள்..

புகழேந்தியின் கார் சென்ற திக்கை பார்த்துக்கொண்டே நின்றிருந்தவளுக்கு, அவளை எண்ணியே ஆச்சர்யமாய் இருந்தது.. முதல்முறை புகழேந்தியைக் காண்கையில் அவன்மீது உனக்கு ஒரு பிடிப்பு ஏற்படும் என்றோ, இல்லை இவன்தான் உன்னுடைய வாழ்க்கை துணை என்றோ யாரென்னும் கூறியிருந்தால் சொன்னவர்கள் நிலை அதோகதிதான்..

ஆனால் இன்று??

நினைக்கையில் அவளுக்கு சிரிப்புதான் வந்தது.. நிஜமாகவே சிரித்தும் இருந்தாள்..

பொன்னி வீட்டிற்குள் வரவில்லை என்றதும் அன்பரசி அமுதாவை விட்டு அவளை அழைத்து வர சொல்ல, அமுதாவும் வெளிய வர, அப்போதுதான் பொன்னி தானாக சிரித்துக்கொண்டு இருந்தாள்..

“மதினி..” என்று அவளின் தோள் தொட்டவள், “என்ன மதினி.. நீங்களா சிரிக்கிறீங்க???!!” என்றாள் அவளின் முகத்தையே பார்த்து..

‘அச்சோ…’ என்று தலையில் அடித்துக்கொண்டவள், “ஒண்ணுமில்ல வா போவோம்..” என்று அமுதாவையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்..   

புகழேந்தியும் சென்னை சென்று சேர்ந்ததும், மன்னவனுக்கு அழைத்து விஷயம் சொல்லிவிட்டு, பின் பொன்னிக்கு அழைத்தும் பேசினான்..

பொன்னிக்கு அவன் கிளம்புகையில் சொன்னது எல்லாம் சுத்தமாய் மறந்து, இப்போது அவன் இங்கில்லை என்பது மட்டுமே நினைவில் இருக்க, வேறெதுவுமே அவள் பெரிதாய் நினைக்கவில்லை..

“நேரத்துக்கு சாப்பிடுங்க… ப்ரீ கிடைக்கும் போது கால் பண்ணுங்க…” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள், அவனும் அதற்கு தக்க பேச கொஞ்ச நேரம் பேச்சு நீண்டது..

கடைசியில் பொன்னிதான் “சரி சீக்கிரம் தூங்குங்க.. நாளைக்கு ஆபிஸ் போகணும் இல்லையா…” என்று சொல்லி போனை வைத்தாள்..

அவள் பேசி முடித்து அடுத்த ஐந்து நிமிடத்தில் அமுதா வந்தாள் அங்கே.. உள்ளே வர கொஞ்சம் தயங்கி தயங்கி பொன்னி முகம் பார்த்து மெதுவாய் வந்தவளிடம்,

“என்ன அமுதா.. வா.. என்ன இவ்வளோ தயக்கம்…” என்று பொன்னி அழைக்க,

“இல்ல மதினி.. அம்மாதான் உங்களுக்கு துணையா படுக்க சொன்னாங்க…” என்று சொல்ல,

“ஓ.. அப்படியா.. சொல்லிருந்தா நானே உன் ரூமுக்கு வந்திருப்பேன்ல.. அதுக்கேன் இவ்வளோ தயக்கம்…” என்றாள் பொன்னி..

“அது.. அது அப்போவே வந்தேன்.. நீங்க அண்ணாக்கிட்ட பேசிட்டு இருந்தீங்க போல…”

“ஹ்ம்ம் ஆமா..” என்றவள் “சரி உனக்கு இங்க தூங்கினா தூக்கம் வருமா?? இல்லை உன் ரூம்ல தூங்கினாத்தான் தூக்கம் வருமா??” என, அமுதா புரியாமல் பார்த்தாள்..

“என்ன அமுதா அப்படி பாக்குற??? சிலருக்கு அவங்கவங்க இடத்துல தூங்கினாத்தான் தூக்கம் வரும்.. அதுனால தான் கேட்டேன்..”

“ஓ.. எனக்கு அப்படியெல்லாம் இல்ல மதினி.. தூக்கம் வந்தா தூங்கிடுவேன்..” என்றவள் “உங்களுக்கு அப்படியா???” என்றாள் லேசாய் சிரித்து.

அமுதா எதைக் கேட்கிறாள் என்று பொன்னிக்கும் புரிந்தது.. திருமணம் முடிந்து இந்த இடமும் உனக்கு புதிது தானே பின்னே எப்படி உறக்கம் வந்தது என்று கேட்காமல் அமுதா கேட்க, பொன்னியும் அதனை சரியாய் புரிந்துகொண்டவள்,

“இப்போ பழகிடுச்சு…” என்றுமட்டும் சொல்லி சிரிக்க,

“ஹா ஹா அடுத்து சென்னையும் பழகிடும்..” என்று அமுதாவும் சொல்லி சிரிக்க,

இத்தனை நாள் இருவருக்குள்ளும் இருந்த தயக்கம், கொஞ்சம் மிச்சம் மீதி ஓட்டிக்கொண்டு இருந்த ஒதுக்கம் எல்லாம் ஓடிவிட்டது..

அடுத்தது என்ன ?? பேச்சு பேச்சு பேச்சு தான்..

அண்ணன் மனைவி, கணவனின் தங்கை என்பதெல்லாம் தாண்டி இருவருக்குள்ளும் ஒரு நல்ல புரிதலும் ஒரு நட்புணர்வும் வர, இருவராலுமே இயல்பாய் சில விசயங்களை பேசிக்கொள்ள முடிந்தது.. அதை வைத்துத்தான் பொன்னி அமுதாவிடம் கேட்டாள்,

“அமுதா சொல்லு உன்னோட பியூச்சர் ப்ளான் என்ன??” என்று..

“என்ன மதினி பெரிய ப்ளான் அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்று அமுதா ஏனோதானோவென்று சொல்ல,

“என்ன இப்படி சொல்ற???” என்றாள் பொன்னி..

“ஹ்ம்ம் ஆமா மதினி.. மேற்கொண்டு படிக்கணும்னு ஆசையிருக்கு.. ஆனா இப்போ என்னால அதெல்லாம் முடியுமா தெரியலை..”

“ஏன் ஏன் முடியாது???”

“என்ன மதினி.. எவ்வளோ பிரச்சனை ஆச்சு.. அதெல்லாம் தாண்டி நான் இப்போ போய் படிக்கணும்னு கேட்டா வீட்ல விடுவாங்களா.. நல்லவேளை புகழ் அண்ணா சொன்னதுனால இப்போ கல்யாணம் பத்தி பேசாம இருக்காங்க.. இல்லையா எப்போவோ யாரைவது பார்த்து கல்யாணம் பண்ணிருப்பாங்க..” என,

பொன்னிக்கு அவளின் நிலையை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.. தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு தவறு, இன்று அவளின் நியாயமான ஆசைகளை கூட வெளிப்படுத்த தடையாய் இருக்கிறது..

அமுதா மட்டுமல்லா நம்மில் பலரும் கூட இது போன்றதொரு சூழலில் சிக்குகிறோம் தானே.. என்றோ ஒருநாள், எப்போதோ… நாம் செய்வது தவறு என்று உணராமலே செய்த ஒரு விஷயம், பின் அதன் வீரியம் உணர்ந்து, அதன் உண்மையான தன்மை உணர்ந்து,

‘ஐயோ இப்படி பண்ணிட்டோமே..’ என்று வருந்தி, நம்மை நாமே திருத்தி நாட்களை கடத்தினாலும், சில பல நேரங்களில் நம்முடைய நியாயமான எண்ணங்கள் கூட பழைய விஷயங்களினால் தகர்த்தெறிய படுகிறது.

பொன்னிக்கு அமுதாவின் நிலை நன்கு புரிய, அவளை வேறெதுவும் கேட்காது, “இப்ப என்ன அமுதா?? இத்தனை நாள் அவர் இங்கதானே இருந்தாரு.. அவர்கிட்ட சொல்லிருக்கலாம் தானே..” என்றாள்..

“சொல்லிருக்கலாம் தான் மதினி.. ஆனா இப்போதான் உங்க கல்யாணமே முடிஞ்சிருக்கு.. எல்லாமே இப்போதான் கொஞ்சம் சந்தோசமா இருக்காங்க.. நான் வேற எதையாவது கேட்டு, அண்ணன் அதுக்கு வீட்ல சத்தம் போட்டு இதெல்லாம் வேண்டாம்னு தான் அமைதியா இருந்தேன்…” என்றாள் அமுதாவும்.

“ஹ்ம்ம் சரி விடு.. நேரம் வரும்போது நான் பேசுறேன்..”

“ஐயோ அதெல்லாம் வேணாம்.. காலேஜ் போகணும்.. ஹாஸ்ட்டல் சேரணும்னு கேட்டா அவ்வளோதான்.. அன்னிக்கு ஒருநாள் ரொம்ப போர் அடிக்குது என் பிரண்ட் வீட்டுக்கு போகட்டுமான்னு கேட்டதுக்கு அக்கா எந்த நம்பிக்கைல உன்னை வெளிய அனுப்பன்னு கேட்டிருச்சு..” என, பொன்னிக்கு ஐயோ என்றிருந்தது..

“என்ன பேச்சிது..??!!”

“அதுனால தான் மதினி.. நான் அமைதியாவே இருந்துக்கிறேன்.. என்னால பேச்சு வாங்க எல்லாம் முடியாது..” என்றவள் அடுத்து ஒன்றும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டாள்.

அமுதாவின் மனம் இப்போது என்ன மாதிரி ஒரு வேதனையை அனுபவிக்கும் என்று பொன்னியால் நன்கு உணர முடிந்தது.. அவளை விட இரண்டொரு வயது சின்னவள், அவளால் புரிய முடியாதா என்ன?? கொஞ்ச நேரம் அமைதியாய் யோசித்து படுத்திருந்தவள்,

“நீ ஒன்னும் பீல் பண்ணாத அமுதா.. நான் சென்னைக்கு போய் கொஞ்சம் செட்டாகவும் நானே அவர்க்கிட்ட பேசி வீட்ல பேச சொல்றேன்.. நீ கண்டிப்பா மேற்படிப்பு படிப்ப…” என்றாள் உறுதியாய்..

பொன்னியின் உறுதி தான் அமுதாவிற்கும் நன்கு தெரியுமே.. கண்களை மூடியிருந்தவள், வேகமாய் அவளைப் பார்த்து, “ரொம்ப தேங்க்ஸ் மதினி…” என, இருவருமே சிநேகமாய் புன்னகைத்துக்கொண்டனர்..

பொன்னி இதைப் பற்றி புகழிடம் கூட எதுவும் சொல்லவில்லை.. முதலில் அங்கே சென்று செட்டில் ஆகவும் அடுத்து அமுதாவின் விஷயம் பேசவேண்டும்.. இப்போதே அது இது என்று எதையும் சொல்லி யாரையும் குழப்பக் கூடாது என்றெண்ணிக்கொண்டாள்

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் நல்லபடியாகவே சென்றது.. வீட்டிலும் யாரும் அப்படியொன்றும் எதுவும் பேசிடவில்லை..

நித்யாவும் அன்பரசியும் அவரவர் வேலையைப் பார்க்க, மகராசி சொல்லும் வேலைகளை பொன்னிப் பார்த்தாள்.. இடையில் அமுதாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வந்தாள்.. அவளின் அம்மா வீட்டிற்கு கூட போய்விட்டு வந்தாள்..    

ஐந்தாவது நாள் புகழ் அழைத்து, “குவாட்டர்ஸ் கிடைச்சிடுச்சு கண்ணு.. பட் அதுல கொஞ்சம் அல்டரேசன் வொர்க் இருக்கு போல, ஒரு ஒன் வீக்ல கீ கிடைச்சிடும்…” என,

“அப்படியா.. அப்போ நடுவுல நீங்க இங்க வரமாட்டீங்களா??” என்றாள் மேலும் ஒரு வாரம் அவனைப் பாராமல் இருக்கவேண்டுமே என்று..

“அட என்ன கண்ணு நீ..” என்றவன், “இப்போதான் இங்க ஜாயின் பண்ணிருக்கேன்.. உடனே லீவ் எல்லாம் போட முடியாது..” என்று அவன் சூழலை சொல்ல,

“சரி பரவாயில்ல..” என்றவள் வேறொன்றும் கேட்கவில்லை..

இப்படியே அவனோடு அலைபேசியில் பேசுவதும், வீட்டில் வேலைகள் செய்வதுமாய் அவளின் நாட்கள் செல்ல, ஒருநாள் நித்யாவின் பெற்றோரும் அவளின் தங்கை சத்யாவும் அங்கே வந்தனர்..

நித்யாவின் அம்மா வேறு யாருமில்லை மன்னவனின் உடன்பிறந்த தங்கை.. உறவு என்பதையும் தாண்டி உரிமை அங்கே நிறையவே இருந்தது.. நித்யாவின் தங்கை சத்யாவோ வந்ததில் இருந்து உம்மென்று தான் இருந்தாள்..

அப்போதுதான் பொன்னிக்கு தெரிந்தது, இந்த பெண் சத்யா இவர்களின் திருமணத்திற்கு கூட வரவில்லை என்று.

ஆனால் புதிதாய் வந்திருப்பவளிடம் ஏன் வரவில்லை என்று கேட்க முடியுமா ஆகையால் வந்தவர்களோடு சகஜமாய் இருப்பது போலவே இருந்துகொண்டாள்..

ஆனால் வந்தவர்கள் அப்படி இருக்கவேண்டுமே.. நித்யாவின் அப்பாவை பற்றி பெரிதாய் ஒன்றும் இல்லை.. ஆனால் அவளின் அம்மா பரஞ்சோதியும், சத்யாவும் தான் என்ன ரகம் என்றே கணிக்க முடியவில்லை..

அதிலும் பொன்னியை பார்க்கும் பார்வையே அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.. என்ன செய்ய கொஞ்சம் பல்லைக் கடித்து பொறுத்துக்கொள்ள வேண்டியது தான்.. நித்யாவோ  வந்தவர்களுக்கு வால் பிடித்துக்கொண்டே திரிய, வீட்டில் வேலையும் சரியாய் இருந்தது..

மூன்று வேலையும் விருந்து தான்.

“எத்தனை வயசானாலும் பிறந்த வீடு இருந்து, அங்க போய் தங்கிட்டு வர்றது போல சுகம் என்ன இருக்கு..” என்று பரஞ்ஜோதி சொல்ல, மகராசியோ அளவாய் சிரித்து மட்டும் வைத்தார்..

சரியாய் அங்கே பொன்னி வர, “ஏம்மா, இன்னுமா உன் அண்ணன்காரன் இங்க வராம இருக்கான்?? பொண்ணையே கட்டி குடுத்தாச்சு.. வந்து போகன்னு இருக்கவ் வேணாமா??? இன்னும் என்ன மான ரோசம் பார்த்துக்கிட்டு…??” என்று அவர் கேட்டுவிட, பொன்னிக்கு சுல்லென்று கோபம் வந்துவிட்டது..

முகத்தை சுளித்தவளை மகராசி வேகமாய் கைகளை பிடித்து அழுத்த அவரை ஒருபார்வை பார்த்தவள், தன் உணர்வுகளை மென்று விழுங்கி, சிரமப்பட்டே அடக்கினாள்..

ஆனாலும் ஏழரை நடக்கவேண்டும் என்றால் எந்த மூலையில் இருந்தும் நடந்து வருமே.. அப்படித்தான் ஆனது அன்று..

சத்யா சும்மா இருக்காது, “என்னம்மா கேள்வி இது… புகழு மாமா தான் வெக்கம் மானமில்லாம அங்க போய் கட்டிக்கிட்டு வந்தா.. அவங்களும் அப்படி இருப்பாங்களா??” என்று கேட்டிட,

பொன்னி மகராசியின் கரங்களை உதறியவள் “என்ன சொன்ன??!!” என்று அவளை நெருங்கிவிட்டாள்..                      

                                      

                 

Advertisement