Advertisement

தோற்றம் – 12

‘இருக்காது இல்ல.. இருக்க கூடாது.. அவ்வளோதான்..’ என்று பொன்னி பிடிவதமாக சொல்லவும், புகழேந்தி படுத்திருந்தவன் வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டான்..

‘ஏன் என்னாச்சு???’ என்பதுபோல் பார்த்தவள், அவளும் எழுந்து அமர, அவனோ பொன்னியை தான் பார்த்திருந்தான்..

“என்னங்க???!!” என்றாள் புரியாமல்..

“இல்ல.. புரியலை.. நீ ஏன் இப்படி பேசின இப்போ??” என்றான் புருவத்தை சுருக்கி..

“ஏன்.. நான் என்ன பேசினேன்??”

“சாதரணமா தானே பேசிட்டு இருந்தோம்.. ஆனா நீ பேசினது அப்படியில்ல.. ஏன் இவ்வளோ சீரியஸா பேசின??” என்றான்..

“இல்ல.. அப்படியில்ல…” என்று பொன்னி சொல்லும்போதே,

“இல்ல கண்ணு.. நான் பார்த்துட்டு தானே இருந்தேன்.. உன் பேஸ்ல அப்படியொரு ரியாக்சன்.. அசோக் அமுதா விஷயம் எங்க வீட்ல யாருமே நினைக்கல.. சாதரணமா தான் சொன்னேன்.. அதுக்கு நீ இவ்வளோ ரியாக்ட் பண்ணிருக்க வேண்டியது இல்லை..” என்றான் வேகமாய்..

கொஞ்சம் கோபமும் அவனிடம் எட்டிப் பார்ததுவோ என்னவோ… அவளுக்கு பார்க்கையில் அப்படித்தான் தெரிந்தது.. புகழேந்தி பேசியதற்கு பதில் பேசாமல் அவனையே பார்த்தவள்,

“நீங்க என்ன நினைக்கிறீங்க…?? நான் அப்படியொன்னு நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறதா  நினைக்கிறீங்களா??” என்று வினவ,

“ஹ்ம்ம்….” என்று கண்களை மூடித் திறந்தவன், “கண்ணு விடு.. இந்த பேச்சே வேண்டாம்.. இல்லாத ஒண்ணை பேசி நமக்குள்ள ஏன் சண்டை வரணும்.. சோ வேண்டாம்.. தூங்கலாம்..” என,

“இதைதான் நானும் சொன்னேன்.. இல்லாத ஒண்ணுன்னு.. நீங்க சொன்னா சரி.. இதேது நான் சொன்னா தப்பா???” என்றவள், அவனின் பதிலுக்கு காத்திராமல் மீண்டும் படுத்துவிட்டாள்..

அடுத்து பேச்சே இல்லை.. புகழேந்திக்கு இந்த பேச்சை ஆரம்பித்தே இருந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது.. மனம் விட்டு என்ன பேசுவதாய் இருந்தாலும், அவளும் அவனுமாய் வாழப் போகும் தனிப்பட்ட தனிக்குடித்தன வாழ்வில் பேசியிருக்கவேண்டும் என்று இப்போது நினைத்துகொண்டான்..

ஏனெனில் இங்கே இவர்களுக்குள் நடக்கும் சிறு சிறு விசயமும் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது.. பொன்னிக்கு அவன் வீட்டினரை அத்தனை தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் அவனுக்கு ஒவ்வொருவரின் சுபாவமும் புரியுமே..

யாரும் மட்டமில்லை.. ஆனால் சூழல் எப்போதும் ஒன்று போல் இருக்காதல்லவா???!!! இனிமேல் பார்த்து பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டான்..

அடுத்தடுத்த நாட்கள் எல்லாம் அமைதியாய் கழிய, புகழேந்தி ஒருமுறை சென்னை சென்றுவந்தான்.. அவனுக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்திருந்தது.. திருவள்ளூருக்கோ இல்லை சென்னைக்கோ இரண்டில் எதுவென்றாலும் சரி என்றுதான் இருந்தான்.. அவன் நினைத்தது போல் சென்னைக்கே கிடைத்திருந்தது..

வீட்டிற்கு வந்தவன், ஹாலில் மன்னவனும் ஜெயபாலும் இருப்பதை கண்டது, அங்கே போனவன் “அப்பா சென்னைக்கே ட்ரான்ஸ்பர் கிடைச்சிடுச்சு.. இன்னும் ரெண்டு நாள்ல ஜாயின் பண்ண சொல்லிருக்காங்க…” என்று சந்தோசமாய் சொல்ல,

“அட சந்தோசம்ப்பா… ரொம்ப சந்தோசம்… நீ பாம்பேல இருக்கப்போ எல்லாம் கொஞ்சம் சங்கடமா இருக்கும்.. சின்ன விசயம்னா கூட சட்டுன்னு வர முடியலைன்னு.. இப்போ என்ன அடிக்கடி பார்த்துக்கலாம்..” என்றார் ஒரு தந்தையாய் மகிழ்ந்து..    

ஜெயபாலும் “பரவாயில்ல புகழு.. இனி நாங்களும் அடிக்கடி அங்க வரலாம்..” என்று சொல்ல, இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு, உள்ளிருந்த பெண்கள் முன்னே வந்தனர்..

மகராசி அருகேயே பொன்னி நின்றுகொள்ள, “தாயே மகராசி.. சென்னைக்கே வேலை வந்திடுச்சு…” என்று சொல்ல,

“நல்லது கண்ணு…. இப்போதான் நிம்மதியா இருக்கு…” என்றார் நிஜமான சந்தோஷத்தில்..

பொன்னிக்கும் இவன் சொன்னது கேட்டு மகிழ்ச்சியே.. அவள் படித்து கொஞ்ச நாட்கள் வேலையும் பார்த்த ஊரல்லவா…?? ஆனால் இரண்டே நாளில் இவன் அங்கே போகவேண்டும் என்றால் எப்படி?? என்ற யோசனை இருந்தாலும், அதனை தவிர்த்து அவளும் சந்தோசமாகவே புகழேந்தியைப் பார்த்து சிரித்தாள்..

அன்பரசியோ “அப்போ வீடெல்லாம் புதுசா பாக்கணுமா புகழு…” என,     

“ஆமாக்கா.. குவாட்டர்ஸ்க்கு எழுதி கொடுக்கணும்.. இல்லைன்னா தனி வீடுதான் பார்க்கணும்…” என்றான் இவனும்..

“அப்போ கண்ணு.. இப்போ போய் எங்க தங்குவ???” என்று மகராசி கேட்க,

“பிரண்ட் ரூம்லம்மா… வீடு கிடைச்சதுக்கு அப்புறம் அங்க மாறனும்..” என,

“ஓ.. அப்போ நீ முன்ன போக வேண்டி வரும்.. மருமகளை அடுத்துதானே வந்து கூட்டிட்டு போக முடியும்.. வீடெல்லாம் பார்க்கிறதுன்ன நல்ல பாதுகாப்பான இடமா பார்க்கணும்…” என்றார் மன்னவன், அடுத்து அப்படியே பேச்சு நீண்டது..

அனைவரும் ஒவ்வொரு பேச்சாய் பேசிக்கொண்டு இருக்க, பொன்னி மட்டும் அமைதியாய் அனைத்தையும் பார்த்துகொண்டு இருந்தாள்.. வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் கேட்பதற்கு கேள்விகள் இருக்க, இவளோ ஒன்றுமே கேட்காது வெறுமெனே நின்றிருந்தாள்….

புகழேந்தி அவளை மட்டும் இங்கே விட்டு செல்கிறான் என்றதுமே மனதில் ஒரு சுணக்கம்.. இத்தனை நாள் இங்கேயே இருந்துவிட்டு இப்போது அவன் கிளம்புவது அவளுக்கு கொஞ்சம் சங்கடமாய் இருந்தது.. அனைவரோடு பேசினாலும் புகழேந்தி இதனை கவனித்துதான் இருந்தான்..

வேலைகள் எல்லாம் முடிந்து பொன்னி அறைக்கு வர, இதற்காகவே காத்திருந்தது போல், புகழ் கேட்டுவிட்டான் “என்னாச்சு உனக்கு??” என்று..

அவனது கேள்வியில் அவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,   “ம்ம் ஒண்ணுமில்ல…” என்றுசொல்லி நகரப் போனவளை இழுத்துப் பிடித்தவன்,

“என்னன்னு சொல்லு கண்ணு… எல்லாரும் பேசினாங்க.. ஆனா நீ ஒண்ணுமே சொல்லலை..” என்றான் அவளது விழிகளைப் பார்த்து..

“என்.. என்ன பேச… நீ.. நீங்க ஊருக்கு போறீங்க…!!!!” என்றவளின் முகவாட்டத்தின் காரணம் அப்போதுதான் அவனுக்குப் புரிய,

“கண்ணு…” என்றவன், அப்படியே அவளை தன் மீது சாய்த்துகொள்ள,

“வீடு எப்போ கிடைக்கும்??” என்றாள் பொன்னி..

“போய் தான் குவாட்டர்ஸ்க்கு எழுதி கொடுக்கணும் கண்ணு.. வேக்கன்ட் இருந்தா டூ டேஸ்ல கீ கிடைச்சிடும்..”

“இல்லைன்னா????!!!”

“ஹ்ம்ம் இல்லைன்னா… வேற வீடு பார்க்கணும்.. எப்படியும் ஒரு டென் டேஸ்ல நான் வந்து உன்னை கூட்டிட்டு போயிடுவேன் போதுமா???”

“ம்ம்ம்ம்…”

“ம்ம்ச் இப்படி டல்லா இருக்காத.. சங்கடமா இருக்கு…”

“எனக்கும்தான் சங்கடமா இருக்கு.. நீங்க பாட்டுக்கு வந்தீங்க.. பிடிச்சிருக்கு சொல்ல சொன்னீங்க.. அடுத்து கல்யாணம் பண்ணீங்க.. இப்.. இப்போ கிளம்பி போறீங்க…..” என்றவளுக்குமே தெரியவில்லை அவள் ஏன் இப்படி உணர்கிறாள் என்று..

நிஜமாகவே ஒருமாதிரி நெஞ்சமெல்லாம் கனமாய் உணர்ந்தாள் பொன்னி.. அவனைப் பிடித்திருந்து.. விரும்பி திருமணம் செய்தாளா?? அதுவுமில்லை.. சரி வீட்டில் பார்த்து பேசி முடித்த திருமணமா அதுவுமில்லை..

ஆனால் அவனோட திருமணம் நடந்த பிறகு இருவருக்குமே ஒருவித உணர்வு இருந்தது நிஜம் தான்.. உனக்கு நான் எனக்கு நீ என்ற உணர்வு இருவரையும் பிணைப்பதும் நிஜம்..

ஆகையால்தானோ என்னவோ புகழேந்தி கிளம்பும் நேரம் வரவும் அவளுக்கு இயல்பாய் இருக்க முடியவில்லை..

“ஹேய்.. செல்லம்.. இங்க பாரேன்.. இப்போ என்ன ஒரு டென் டேஸ் தான.. கண்டிப்பா அதுக்குள்ள வந்து கூட்டிட்டு போயிடுவேன்.. சரியா..” என, அவளும் சும்மா தலையை அசைத்தாள்.

“எதுவும் நினைக்காம எப்பவும் போல இரேன்.. இப்படி சட்டன்னு நீ டல்லான எப்படி??”

“ம்ம் சரி.. நான் ஒன்னும் நினைக்கல..” என்றவள் “அங்க போனா நேரத்துக்கு சாப்பிடனும்.. அடிக்கடி போன் பண்ணனும்…” என்று லிஸ்ட் போடத் துவங்க,

“அட அட.. போதும்.. இன்னும் ரெண்டு நாள் இருக்கு நான் கிளம்ப இப்போ இருந்தே ஆரம்பிக்காத சரியா..” என்றான் அவளை கொஞ்சம் இலகுவாக்க..

“ச்சே உங்கக்கிட்ட சொன்னேன் பாருங்க..” என்றவள் அவனை முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்..

பொன்னி போகவும் ஒருநொடி அப்படியே நின்றிருந்தவன் “ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டு, கொஞ்ச நேரம் அப்படியே கட்டிலில் அமர்ந்திருந்தான்..

மும்பையில் இருந்து இங்கே கிளம்பி வருகையில் இருந்த அவனின் மனநிலையும், எண்ணங்களும் வேறு.. ஆனால் இங்குவந்தபிறகு நடந்தது எல்லாமே வேறு.. திருமணம் நடக்கும் அதுவும் ஒருத்தியை பிடிவாதம் செய்து திருமணம் செய்வான் என்றெல்லாம் அவன் நினைத்தே பார்க்கவில்லை.. திருமணத்திற்கு முன் அவன் பார்த்து பழகிய பொன்னி வேறு..

இப்போது இருப்பவளின் செயல்களும்… பேச்சுக்களும்.. பார்வையும் வேறு…. பொன்னியிடம் சென்று ‘என்னை பிடிச்சிருக்கு.. சொல்லு..’ என்று கேட்கும்போது அவனது சிந்தையில் திருமணம் பிறகான வாழ்வு பற்றிய எண்ணமில்லை..

அந்த நேரத்தில் அவளின் வாயில் இருந்து தன்னை பிடித்திருக்கு என்று அவள் சொல்லிட வேண்டும்.. அவளை சொல்ல வைத்திட வேண்டும்.. அதுமட்டுமே.. அதன் பின் திருமணம்…. அதுவும் ஒரு பிடிவாதத்தில் அவன் நடத்திவிட்டான்..

ஆனால் இப்போது பத்து நாட்களே என்றாலும் புகழ் பொன்னியை விட்டு தனியே செல்வது அவனுக்கும் கொஞ்சம் சங்கடமாய்தான் இருந்தது.. என்ன அவளின் முன்னே காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவே..

புகழ் தன் யோசனையில் மூழ்கி அமர்ந்திருக்க, கட்டிலில் கிடந்த பொன்னியின் அலைபேசி சப்தமிட்டு அவனை திசை திருப்பியது தன்பக்கம்..

“ஹ்ம்ம் போன் வச்சிட்டு போயிட்டாளா…” என்றபடி அவளின் அலைபேசியை எட்டி எடுக்க, திரையில் அழகாய் பொன்னியும் அசோக்கும் சிரித்துக்கொண்டு இருந்தனர்.. அண்ணா என்ற பெயர் மின்ன,

“அசோக்….” என்று சொல்லிக்கொண்டவன், எடுப்போமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் அழைப்பு நின்றுவிட்டது..

‘சரி போய் போன் கொடுப்போம்…’ என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன் பொன்னியை தேடி வெளியே போக, அவளோ நித்யாவோடும் அமுதாவோடும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்..

புகழேந்தி அவர்களிடம் செல்வதற்குள் திரும்பவும் அழைப்பு வர, கொஞ்சம் வேகமாய் அவளிடம் சென்றவன் “உனக்கு கால்..” என்றான் அலைபேசியை நீட்டி..

“யாருங்க??!!!” என்றபடி அலைபேசியை வாங்கியவள், திரையில் ஒளிரும் படத்தை பார்த்ததும் “அசோக்…” என்று சந்தோசமாய் சொல்லியபடி, “ஹலோ அண்ணா…!!!!” என்றாள் உற்சாகம் தெறிக்கும் குரலில்..

அசோக்கின் அழைப்பு அவளுக்கு சந்தோசமாய் இருந்தாலும், அங்கே அமர்ந்திருந்த அமுதாவிற்கு திடுக்கிடலாய் இருந்தது.. அவளும் முதல் நாளிருந்து பார்த்துகொண்டு தானே இருந்தாள்.. பொன்னி புகழ் திருமணத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அசோக் அவளின் முகத்தினை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை..

அனைத்து விசயங்களையும் முன் நின்று, இன்முகமாய் செய்தவன், புகழ் வீட்டினர் அனைவரோடும் எந்தவித ஒதுக்கமும் இல்லாது பேசியவன், அமுதாவிடம் மட்டும் ஒன்றும் பேசவில்லை.. சாதரணமாய் இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள எதுவுமில்லை என்றாலும், அமுதாவே அவனிடம் ஒரு சாரியும் தேங்க்ஸ்ம் சொல்லவேண்டும் என்று அவனிடம் பேச போகையில், அசோக் அவளை அழகாய் தவிர்த்துவிட்டான்..

அதன்பிறகும் சரி.. அசோக் இங்கே வீட்டிற்கு வரவில்லை என்றதும் அமுதாவிற்கு மனதில் பெரும் குற்றவுணர்வாய் போனது..

என்ன இருந்தாலும் அவன்மீது விழுந்த பழி எத்தனை பெரியது… அதுவும் அவளால் எனும்போது.. அமுதாவிற்கு மனதில் பெரும் சங்கடம் குடிகொண்டது நிஜம்..

அவளின் முன்னே யாரும் அசோக் பற்றி பேசுவதில்லை என்பதால் அவளின் உணர்வில் அவளுடனே இருக்க, இப்போது அவளின் முன்னேயே பொன்னி அசோக்கிடம் பேசவும், வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்..

பொன்னி பேசிக்கொண்டு இருந்தவள், அமுதா இப்படி பட்டென்று எழுந்து சென்றதை கண்டு ஒருநொடி பேசுவதை நிறுத்தி புகழேந்தியைப் பார்க்க, அவனோ ஒன்றுமில்லை நீ பேசு என்று சைகை செய்துவிட்டு அமுதாவை தேடித் போக, அமுதாவோ பின்னே கொள்ளைப்புற படிக்கட்டில் அமர்ந்திருந்தாள்..

முகத்தில் அப்படியொரு கவலை.. கண்களில் நீர் படலம்..

“அம்மு.. என்னாச்சு…??!!!” என்று புகழ் அவளின் அருகே அமர,

“அ.. அண்ணா..” என்றவள் அப்படியே தன் முகத்தில் தோன்றிய பாவனையை மாற்ற,

“உன்கிட்ட எத்தனை தடவ சொல்லிருக்கேன் அம்மு.. என்கிட்ட ப்ரீயா பேசுன்னு..” என்றான் ஆதரவாய் ஒரு புன்னகை சிந்தி..

“ஹ்ம்ம் சாரிண்ணா…”

“எதுக்கு சாரி..??”

“இல்ல.. என்னால தானே எல்லாம்…. மதினிக்கும் மனசுல வருத்தம் இருக்குமில்லையா.. அவங்க அண்ணன் இங்க வர போக இல்லைன்னு..” என்று சொல்ல,

“அப்படின்னு பொன்னி சொன்னாளா?? அதுவும் உன்கிட்ட??” என்றான் இவன்..

“ம்ம்ஹும்…” என்று அமுதா தலையை அசைக்க, “பின்ன ஏன் நீ இப்படி நினைக்கிற?? இங்க பாரு அம்மு.. இப்போதான் எல்லாமே கொஞ்சம் சரியாகிருக்கு.. நீ மறுபடியும் மனசுல எதுவும் போட்டுக்காத சரியா.. நீ நினைக்கிற மாதிரி எதுவுமில்ல.. சோ கில்டியா பீல் பண்ணாத. எல்லாமே சீக்கிரம் சரியாகும்..” என்றான்..

“ஹ்ம்ம் சரிண்ணா… நீ போ.. நீயும் அடுத்து ஊருக்கு கிளம்பிடுவ.. போ போய் அண்ணிக்கிட்ட பேசு..”

“ஆகா.. நீயல்லவோ சிறந்த தங்கச்சி.. எப்பவும் சந்தோசமா இரு டா..” என்று அவள் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு சென்றான் புகழ்..

அங்கேயே ஹாலில் பொன்னி மட்டும் அமர்ந்திருக்க, “என்ன கண்ணு பேசியாச்சா??” என்றவன் “மதினி எங்க ?? இங்கதானே இருந்தாங்க…” என்றான்..

“இளங்கோ மாமா வந்தாங்க.. அதான் உள்ளே போயிட்டாங்க..” என்றவள், “அமுதாக்கு என்னாச்சு..” என்று எழ,

“அவளுக்கு ஒண்ணுமில்ல… நீ எதுவும் காட்டிக்காத பேசிருக்கேன்.. ரிலாக்ஸ் ஆகிடுவா.. நீயும் அடுத்து எதுவும் கேட்காத..” என,

“ஏன் எதுவும் பீல் பண்ணாளா??” என்றாள்..

“கொஞ்சம் நாள் அப்படித்தான் இருக்கும் சரியாகிடுவா..”

“சரியாகிட்டா சந்தோசம் தானே..” என்றவள் “என்னங்க அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வரலாமா?? அசோக் ஊருக்கு கிளம்புறானாம். நீங்களும் அடுத்து கிளம்பிடுவீங்க..” என்றாள் என்ன சொல்வானோ என்று அவனின் முகத்தைப் பார்த்து..

“ஓ..!!!” என்றவன் கொஞ்சம் யோசனையாய் நிற்க,

“என்னங்க??” என்றாள் இவனை தொட்டு…

“இல்ல.. ஊருக்கு கிளம்புறது அசோக் தானே.. நம்ம எங்கயோ இருந்தா பரவாயில்லை.. இதோ மூணு சந்து தள்ளி இருக்கோம். முன்ன எப்படியோ ஆனா நீ இப்போ கல்யாணம் ஆனா பொண்ணு.. சொல்றதுன்னா வந்து சொல்லிட்டு போறது தானே முறை..” என்றான் யோசனை மாறாத முகத்துடன்..

“ம்ம்.. எல்லாம் தெரிஞ்சு நீங்களே இப்படி கேட்கலாமா??”

“தெரியுது.. எல்லாம் புரியுது.. நாங்களும் வந்து மன்னிப்பு கேட்டாச்சு.. உங்க வீட்ல பொன்னே குடுத்தாச்சு இங்க.. இதுக்குமேலயும் அசோக் இப்படி வந்து போகாம இருக்கிறது எல்லாருக்குமே சங்கடம் தான்.. யாரும் எதுவும் காட்டிக்கல.. ஆனா உள்ள எல்லாருக்குமே இருக்கும்…” என்றான் அமுதாவை மனதில் வைத்து..

பொன்னிக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை. இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது.. இன்னும் அவர்களுக்கான வாழ்வு கூட சரியாய் ஆரம்பித்து இருக்கவில்லை.. அப்படியிருக்கையில் அவளால் அசோக்கை வற்புறுத்த முடியவில்லை.. நீ வந்துதான் ஆகவேண்டும் என்று..

எல்லாமே தானாய் நடக்கவேண்டும் என்று இருந்தாள்.. ஆனால் புகழேந்தியின் பேச்சில் இருக்கும் நியாயமும் புரியாமல் இல்லை. ஆனாலும் உடன் பிறந்தவனை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை..

“ஹ்ம்ம்… இந்த ஒன் டைம் எனக்காக அசோக்கை போய் பார்த்துட்டு வரலாமே…” என்றாள் மெதுவாய்..

“கண்ணு.. உனக்காக ஒன் டைம்னு சொல்லாத.. உனக்காகன்னு எப்போவேனா எதுவும் பண்றதுக்கு நானிருக்கேன்… ஆமா இப்போ உனக்காக தான் இது..” என்றவன் “சரி கிளம்பு போலாம்..” என்றான்..

அவன் போகலாம் என்றதும் அப்படியே ஒரு பளிச் புன்னகை வந்து அவள் முகத்தில் ஒட்டிக்கொள்ள, “தேங்க்ஸ்…” என்றாள் சந்தோசமாய்..

“லூசு.. தேங்க்ஸ் சொல்றா…” என்றவன் “போ.. போய் அம்மாக்கிட்ட சொல்லிட்டு வா..” என,

“சொல்லணுமா?? கேட்கணுமா???” என்றாள் இரு புருவங்களையும் மாறி மாறி தூக்கி..

“கேட்டாலும் தப்பில்லை.. ஆனா கேட்கிற விதத்துல கேட்கணும்..” என, “எல்லாம் எங்களுக்குத் தெரியும்…” என்றவள் மகராசியை நோக்கி போனாள்..

அவரோ அன்பரசியோடு சேர்ந்து டிவி பார்த்துகொண்டு இருக்க,  “அத்தை…” என்றுபோய் நின்றாள் இவளும்..

“என்ன கண்ணு???!!” என்று கேட்டவரிடம், அசோக் பற்றி பேசினால் எதுவும் பேச்சு வருமோ என்று அதனை மறுத்து அசோக் ஊருக்கு செல்லும் விஷயம் சொல்லாது, புகழ் இன்னும் இரண்டு நாளில் கிளம்புவதால் அம்மா வீடு வரைக்கும் போய் வரவா என்று மட்டும் கேட்டாள்..

ஒருநொடி அவளைப் பார்த்தவர் “ஹ்ம்ம் சரி கண்ணு.. ஆனா நேரத்தோட வந்திருங்க…” என்றவர் அடுத்து டிவியைப் பார்க்கத் தொடங்க, இந்த பேச்சு இவ்வளவு தான் என்று பொன்னிக்கு புரிந்துபோனது..  

அவளும் சரியென்று சொல்லி கிளம்பிவிட்டாள்.. என்னவோ மகராசிக்கு புகழை அழைப்பது போல் தான் இவளையும் அழைக்க வந்தது.. சமயத்தில் அவர் கண்ணு என்கையில் புகழேந்தியும் சரி இவளும் சரி ஒரே நேரத்தில் திரும்பிப் பார்ப்பதும் அங்கே நடந்துகொண்டு தான் இருந்தது..

“தாயே மகராசி.. என்ன ஒரே அழைப்பு ரெண்டுபேருக்கும்…” என்று புகழ்கூட கிண்டலாய் கேட்டுவிட்டான்..

பொன்னியோ “அம்மாவும் மகனும் ஒரேமாதிரி கூப்பிட்டா நான் என்ன செய்ய???” என்று புகழேந்தியின் சட்டை பட்டனை திருகியபடி கேட்க, “அந்த கண்ணு வேற.. இந்த கண்ணு வேற…” என்று அவன் இறுக்கமாய் அணைத்து முத்தமிட்டது இப்போதும் நியாபகம் வந்தது அவளுக்கு..

“என்ன எங்கம்மா இப்பவும் கண்ணுன்னு சொல்லிட்டாங்களா??” என்றான் இவளின் முகத்தைப் பார்த்தே புகழ்..

“ஆமாம்மா.. கிளம்பலாமா.. அத்தை சீக்கிரம் வர சொல்லிருக்காங்க…” என்றவளை புகழும் அழைத்துக்கொண்டு செல்ல, பொன்னி சந்தோசமாய் தான் கிளம்பிச் சென்றாள் பிறந்த வீட்டிற்கு..

    

          

Advertisement