Advertisement

தோற்றம் – 10

“இங்க பாரு பொன்னி கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விசயமில்லை. ஆனா அடுத்து வாழ்ற வாழ்க்கை தான் முக்கியம்.. எடுத்தோம் கவுத்தோம்னு இனியும் எதையும் பட்டுன்னு பேசாம, இனிமே கொஞ்சமாது பொறுமையா போக பாரு..

என்னவொரு முடிவு எடுக்கிற முன்ன மாப்பிள்ளைக்கிட்ட கலந்து பேசி முடிவு எடு… நல்ல பொண்ணுன்னு பேரு வாங்கி கொடு..” என்று அறிவுரையை வழங்கிக்கொண்டு இருந்தது யாராய் இருக்க முடியும் மங்கை தான்..

மறுவீடு முடிந்து, பெண் மாப்பிள்ளையை திரும்பவும் மாப்பிள்ளை வீட்டில் கொண்டுவந்து விட என்று வந்திருந்தனர்.. ஒரே ஊர்.. கொஞ்சம் அருகருகே வீடு என்றாலும் செய்யும் முறைகள் எதையும் ஒன்று விடாமல் செய்துவிட்டார் மங்கை..

அவர்கள் ஊரில் மறுவீடு முடிந்து தான் சீர் கொண்டு செல்லும் பழக்கம் என்பதால் புகழேந்தியும், பொன்னியும் திரும்ப புகழின் வீடு செல்லும்போது  பாத்திரம் பண்டம்.. நகை நட்டு… வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் அடுக்கியிருக்க, புகழ் வீட்டினருக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..

ஆனால் அனைவரும் சங்கடமாய் உணர்ந்த ஒருவிசயம், அசோக் அங்கே வரவில்லை..

திருமண வேலைகளிலும் சரி, திருமணத்தின் போதும் சரி, இல்லை புகழின் வீட்டு மனிதர்களோடு பழகுவதிலும் சரி, அசோக் பொன்னியின் அண்ணன் என்ற நிலையை எங்கேயும் விட்டுவிடவில்லை. எந்த இடத்திலும் பொன்னியை விட்டுக்கொடுக்கவும் இல்லை. அனைத்திலும் முன்நின்றான்..

ஆனால் இப்போது மறுவீடு என்று வருகையில் அசோக் வரவில்லை இவர்களுடன். பொன்னி கிளம்புவதற்கு முன்னவே இதனை அவளிடம் சொல்லிவிட்டான் வரவில்லை என்று..  பொன்னி கலக்கமாய் அவனைப் பார்க்க,

“இப்போ வேணாம்… எல்லாருக்கும் நம்ம காட்சி பொருளா ஆகணும்…” என்றுவிட்டான்.

புகழுக்கும் தெரியாது, கிளம்பும்போது, அனைவரோடும் அசோக்கும் வருவான் என்று சாதாரணமாய் இருக்க, வீடு வந்தபிறகு தான் கவனித்தான் அசோக் வரவில்லை, மங்கையும் அவரின் தங்கை வீட்டு ஆட்களும், பொன்னியின் அப்பா வீட்டு ஆட்களும் தான் வந்திருந்தனர்.

வீடு நிறைய ஆட்கள் இருக்க, புகழேந்திக்கு பொன்னியிடம் எதையும் கேட்கவும் முடியவில்லை.. அசோக் ஏன் வரவில்லை என்று புகழின் வீட்டினராலும்  வெளிப்படையாக கேட்கவும் முடியவில்லை..

பொன்னியும் சரி மங்கையும் சரி, இதெல்லாம் பார்த்தும் அதனை பெரிது படுத்த விரும்பவில்லை.. வந்த வேலை என்னவோ அதனை மட்டும் பார்த்தனர். ஒருவழியாய் அனைத்தும் முடிந்து அனைவரும் கிளம்புகையில் தான், மங்கை தன் மகளுக்கு அறிவுரை வழங்க, அனைத்தையும் மௌனமாய் தலையசைத்து கேட்டுக்கொண்டாள்.

புகழேந்திக்கு கூட ஆச்சர்யம் தான். ‘இவ்வளோ அமைதியா இருக்கா???’ என்று பார்த்துகொண்டு இருந்தான்..

அவன் வீட்டினர் பேசுவதற்கும் சரி, இல்லை அவளின் வீட்டினர் சொல்வதற்கும் சரி, இன்முகமாய் ஒரு தலையசைப்பு அவ்வளவே. வேறு எந்த பிரதிபலிப்பும் இல்லை அவளிடம்..

‘என்ன நினைச்சு இவ்வளோ அமைதியா இருக்கா???’ என்று புகழேந்தியின் மனம் பொன்னியை எண்ணிக்கொண்டு இருக்க,

வந்தவர்கள் அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப, பொன்னி அமைதியாய் கொஞ்ச நேரம் வாசலில் நின்று, செல்பவர்களை பார்த்துகொண்டு இருந்தாள்.

மங்கை ஒருமுறை திரும்பிப்பார்த்துவிட்டு செல்ல, பொன்னிக்கு மனம் கொஞ்சம் பாரமாய் இருப்பது போல் இருந்தது. இத்தனை நேரமில்லாத ஒரு கலக்கம் வந்து சூழ்ந்துகொள்ள, அப்படியே நின்றிருந்தாள்.  

புகழேந்தி வந்து அவளின் கரங்களை பற்றியவன், “இன்னும் எவ்வளோ நேரம் இப்படி நிப்ப.. உள்ள வா கண்ணு…”என்றழைக்க, அதற்கும் ஒரு மௌன தலையசைப்பு மட்டுமே.

“எல்லாத்துக்கும் தலையை ஆட்டு.. என்னாச்சு உனக்கு…” என்று புகழ் கேட்கும் போதே, நித்யா அங்கே வந்தவள்,

“வெளிய ரொம்ப நேரம் நிக்கவேணாம்.. உள்ள வாங்க ரெண்டுபேரும்…” என்று சொல்ல, அதற்குமேல் இருவருக்கும் பேசிக்கொள்ள முடியவில்லை.

வீட்டினுள்ளே சென்றதுமோ, போட்டிருந்த இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்திருக்க,  மகராசியும், அமுதாவும் சற்று தள்ளி கீழே அமர்ந்திருக்க, நித்யாவும் அமுதாவும் இரவு உணவுக்கு சமைக்க என்று வேலையைப் பார்க்கக் கிளப்ப, பொன்னிக்கு இப்போது புது குழப்பம்..

உள்ளே வந்தாகிவிட்டது, இனி என்ன செய்வது.. இங்கே அமரவா?? இல்லை உள்ளே சென்று அவர்களோடு வேலையில் பங்குகொள்ளவா?? என்று யோசிக்கும் போதே, புகழேந்திக்கு அலைபேசி அழைக்க,

“ஆபிஸ் கால்.. பேசிட்டு வந்திடுறேன்..” என்று பொதுவாய் சொன்னவன், அவனின் அறைக்கு சென்றுவிட்டான்.. இவளுக்கு தான் கால்கள் பின்னியதுபோல் இருந்தது..

ஆனால் பரவாயில்லை நொடி தாமதம் இல்லாமல், அமுதா “மதினி… இப்படி வாங்க.. வந்து உட்காருங்க…” என்றழைக்க,

‘ஹப்பாடி…’ என்ற ஒரு நிம்மதியில் அங்கே சென்று அமர, மகராசி பொன்னியை பார்த்தவர் “எவ்வளோ நேரம் இதே சேலையில இருப்ப.. போய் துணி மாத்துறதுன்னா மாத்தேன்…” என்றுசொல்ல,

‘கொஞ்ச நேரம் போகட்டும்…’ என்றுகூட அவளால் சொல்ல முடியவில்லை..

இதே ஆட்களை கொஞ்ச மாதங்களுக்கு முன்பு எப்படி பேசினாள், இதே மகராசி பொன்னியை காணும்போதெல்லாம் எப்படி பேசியிருப்பார் என்பது அனைவருக்கும் அறிந்த விசயமே..

ஆனால் இன்று உறவென்று ஆகி, அதுவும் ஒரே குடும்பாகிவிட்டபின் அதிலும் அவர் மாமியார் இவள் மருமகள் என்றான பிறகு முன்னிருந்த சங்கதிகள் எல்லாம் கொஞ்சம் காணாமல் தான் போயிருந்தது..

மகராசி நித்யாவிடம் எப்படி பேசுகிறாரோ அதேபோல்தான் இவளிடமும் பேசுவதாய் இருந்தது. ஆனால் பொன்னிக்குத் தான் யாரோடும் சட்டென்று ஒட்ட முடியவில்லை. என்னவோ ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது..

“அட என்ன பொன்னி.. போ துணி மாத்திக்க.. பட்டு சேலை கட்டி கசகசன்னு இருக்கும்ல..” என்று இரண்டாவது முறையாய் சொல்லவும்,

“சரி…” என்றுசொல்லி எழ, “சரிங்கத்தைன்னு சொல்லணும்…” என்றார் அழுத்தம் திருத்தமாய் மகராசி..        

பொன்னி ஒருநொடி அவரின் முகத்தைப் பார்க்க, அவளுக்கோ சிரிப்பை அடக்கமுடியவில்லை.. ஆனாலும் என்ன செய்ய, சிரிக்க முடியாதே ஆகையால் அப்போதும் வெறுமெனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு, வேகமாய் அறைக்கு சென்றுவிட,  உள்ளே வந்தவளோ, வேகமாய் கதவை தாளிட்டுவிட்டு கதவின் மேலேயே சாய்ந்து நின்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்..

போன் பேசுவதற்கு என்று புகழேந்தி இங்கேதான் வந்தான் என்பது எல்லாம் அவளுக்கு மறந்து, மகராசி சொன்னதை மட்டும் நினைத்து மேலும் மேலும் சிரிப்பு வர, அடக்கமாட்டாமல் தான் சிரித்தாள். கண்ணில் லேசாய் நீர் படலம் கூட.. அப்படியொரு சிரிப்பு..

பொன்னி உள்ளே வந்ததுமே புகழேந்தி அவளைக் கண்டவன், அவளின் செய்கைகளில் ‘என்னாச்சு இவளுக்கு..’ என்று எண்ணியவன், வந்திருந்த அழைப்பில் கொஞ்சம் துரிதபடுத்தி பேசி முடித்து,

“கண்ணு என்னாச்சு…” என்று அவளின் கிட்டே வர,

‘அச்சோ இவனும் இங்கதான் இருக்கானா???’ என்று சிரிப்பை அடக்கியவள், ஒன்றுமில்லையே என்பதுபோல் பார்த்தாள்..

இந்த கொஞ்ச நொடிகளில் அவளின் முகத்தில் அத்தனை பாவனைகள்..

“கேக்குறேன்ல என்னாச்சு.. ஏன் இப்படி ஒரு சிரிப்பு..??” என்று புகழேந்தி கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. சும்மா..” என்றவள், “நான் ட்ரஸ் மாத்தனும்…” என,

“மாத்து.. அதுக்கு நான் என்ன செய்ய??” என்றான் கிண்டலாய்..

அவனின் கிண்டல் புரிந்தாலும் புரியாதவள் போல “உங்களை மாமா கூப்பிட்டாங்க.. சோ கிளம்புங்க…” என்று கதவினைத் திறக்கப் போக, அவளின் கரங்களை இறுகப் பற்றியவன்,

“நான் கேட்டதுக்கு பதில் கிடைக்காம நான் போகமாட்டேன்.. நீ ட்ரஸ் மாத்துறது எல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை..” என்று சொல்ல, அவளுக்குத் தான் கொஞ்சம் சங்கடமாகி போனது.

“ம்ம் சொல்லு கண்ணு.. என்ன அப்படி சிரிப்பு???”

“இல்ல அதெல்லாம் இல்ல.. நி.. நிஜமா மாமா உங்களை கூப்பிட்டாங்க…” என்று அவனை எப்படியாவது கிளப்பும் முயற்சியில் பொன்னி இறங்க,

“சரி நான் போய் அப்பாக்கிட்ட கேட்டுக்கிறேன் பொன்னிக்கிட்ட சொல்லிவிட்டீங்களா என்னை வரசொல்லின்னு….” என்று அவன் கதவினை இப்போது திறக்கபோக,

“அச்சோ இல்லை…” என்று வேகமாய் அவனின் கரங்களை தடுத்துப் பிடித்தாள் கதவினைத் திறக்க விடாது..

“என்ன கண்ணு… இரு நான் போய் கேட்கிறேன்…” என்று அவன் மேலும் முன்னேற,

இவளோ இன்னும் கதவினில் சாய்ந்து நிற்க, அவனோ அவளின் மீது சாய்ந்தும் சாயாமல் நிற்க, இருவருக்கிடையிலும் ஒரு மோனம் வந்து நின்றுகொண்டது..

ஒருவரின் பார்வை ஒருவரில் லயிக்க, பொன்னி சாய்ந்து நின்றிருந்தவளின் விழிகளோ புகழின் முகத்தினில் நிலைத்திருக்க, புகழின் பார்வையும் அவளிடம் நிலைத்திருக்க, அவனின் கரங்களோ கதவு தாளில் இருந்து விலகி பொன்னியின் இடையே பற்ற, மெல்ல அவளிடம் குனிந்தவன், பொன்னியின் தோள்களை தனதுரிமை ஆகிக்கொண்டு தொங்கிய பூச்சரத்தை நுகர்ந்தபடி,

“ம்ம் சொல்லு கண்ணு… எதுக்கு சிரிச்ச???” என்று கேட்க,  அவளுக்கோ அவன் என்ன கேட்கிறான் என்பதுகூட விளங்கவில்லை…

தன்னிடையில் பதிந்த அவனின் கரங்களை விளக்கவென்று அவனின் கரம் மீது தன் கையை பொன்னி வைக்க, அவனோ அவளின் கரத்தோடு சேர்த்து அவளின் இடையை பற்றிக்கொள்ள, பொன்னிக்கு அது இன்னமும் அவஸ்தையாகி போனது..

“ம்ம்ச் என்ன இது…” என்று எழும்பாத குரலில் பொன்னி கேட்க,

“ஹ்ம்ம் நான் கேட்டதுக்கு பதில் வரலைன்னா இப்படிதான்…” என்றவன் இன்னமும் அழுத்தம் கொடுக்க,

“சிரிச்சது ஒரு தப்பா???” என்றாள் சலுகையாய்..

அவனருகே இப்படி நிற்பது ஒருவித கூச்சம் கொடுத்தாலும், விலகும் எண்ணமும் கொடுக்கவில்லை.. இதற்கும் அவர்களுக்குள் தொட்டு பேசும் எல்லையைத் தாண்டி வேறெதுவும் இதுவரைக்கும் இருவரும் கடக்கவில்லை..

“தப்பில்ல.. சொன்னா நானும் சிரிப்பேன்ல கண்ணு…” என்றவன் அப்படியே அவளின் கழுத்தினில் முகம் புதைக்க,

“ம்ம்ம்.. இது.. இதெல்லாம் நம்ம தனியா போனப்புறம் பாத்துக்கலாம் சொன்னீங்க..???” என்றபடி அவனின் முகத்தினை பொன்னி விளக்க,

“இப்போவும் தனியா தானே இருக்கோம்…” என்றான் லேசாய் கண் சிமிட்டி…

“ம்ம்ம்…” என்றவள் பேசாது நிற்க,

“சொல்லு கண்ணு.. உள்ள வந்து ஏன் அப்படி சிரிச்ச.. கண்ல தண்ணி வர அளவு.. அப்போ வெளிய என்னவோ நடந்திருக்கு…” என்றான் விடாது..

“வெளிய ஒன்னும் நடக்கல.. ஆனா முன்ன ஒண்ணு நடந்தது அதை நினைச்சு சிரிச்சேன்..” என்றாள் அவளும்..

“முன்ன நடந்ததுக்கா அப்படி ஒரு சிரிப்பு???!!!” என்றான் நம்பமாட்டாமல்..

“ஹ்ம்ம் சொன்னா நீங்களும் சிரிப்பீங்க???” என்றவள்,

“முன்னாடி நம்ம ரெண்டு வீட்டுக்கும் பிரச்சனையானப்போ ஒருநாள் உங்கம்….” என்று சொல்ல வந்தவள் வேகமாய் நாக்கினை கடித்து

“அத்தை சொன்னாங்க என்னைப் பார்த்து, உன்னை எல்லாம் மருமகளா கொண்டுபோறவ ரொம்ப பாவம்னு.. ஆனா இன்னிக்கு என்னைப் பார்த்து அத்தைன்னு சொல்லனும்னு சொன்னாங்களா.. அதான் சிரிப்பு தாங்களை…” என்று பொன்னி அப்போதும் சிரித்தபடி சொல்ல,

அவளின் சிரிப்பு அவனையும் தொற்றியதோ என்னவோ, “அடிப்பாவி.. லாஸ்ட்ல எங்கம்மாவ கிண்டல் பண்ணி சிரிச்சிருக்க..” என்று கடிவது போல் அவளை கொஞ்ச,

“ஏன் ஏன் பண்ணா என்னவாம்.. இப்போ நீங்க மட்டும் சிரிக்கலையோ…” என்றாள் முகத்தினை லேசாய் சுருக்கி..

“ஹ்ம்ம் நீ எவ்வளோ பெரிய ஆளு.. உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்..” என்று அவனும் பதிலுக்கு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவர்களின் அறைக்கதவு தட்டப்பட,

“அச்சோ நான் ட்ரஸ் மாத்தன்னு வந்தேன்.. இப்போ பாருங்க கூப்பிட வந்துட்டாங்க…” என்று பொன்னி படபடக்க,

“அதுனால ஒண்ணுமில்ல..” என்றவன், “நீ கொஞ்சம் உள்ள போய் நில்லு..” என்றுசொல்லிவிட்டு, அவள் நகரவும் கதவை திறந்தான்..

அன்பரசி நின்றிருக்க “என்னக்கா…” என்றான் முகத்தினில் ஒன்றும் காட்டாமல்..

“பொன்னியையும் கூப்பிட்டிட்டு சாப்பிட வா புகழு…” என்றுவிட்டு அன்பரசி செல்ல, “சாப்பிட கூப்பிடுறாங்க..” என்றான் பின்னே திரும்பி..

“நீங்க போங்க நான் ட்ரஸ் மாத்திட்டு வந்திடுறேன்…” என்று அவளும் சொல்ல, “ம்ம் சரி…” என்று புகழேந்தியும் வெளியே சென்றிட, பொன்னியும் அடுத்து வேறு புடவை சாதாரணமாய் கட்டிக்கொண்டு வந்தாள்..

மன்னவன், இளங்கோ, ஜெயபால், புகழேந்தி நால்வரும் அமர்ந்திருக்க, மகராசியும் அமுதாவும் பரிமாறிக்கொண்டு இருந்தனர்.. பிள்ளைகள் இருவருக்கும் நித்யாவும் அன்பரசியும் உணவு ஊட்டிக்கொண்டு இருக்க, பொன்னிக்கு இப்போது மீண்டும் தயக்கம் வந்து சூழ்ந்து கொண்டது.

இப்போது நான் என்ன செய்திட வேண்டும் என்று..

கொஞ்சம் தயங்கி அப்படியே நிற்க, அமுதா அவளைப் பார்த்தவள் “மதினி நீங்களும் வந்து அண்ணன் கிட்ட உட்காருங்க..” என்றழைக்க,

வேகமாய் பொன்னி மகராசியைத் தான் பார்த்தாள்.. என்னவோ அமுதா அழைத்ததுமே அவளின் பார்வை மகராசியைத் தான் தொட்டது.

புகழேந்தியும் வருகிறாயா என்பதுபோல் அவளைப் பார்க்க, பொன்னி வேகமாய் “இல்.. இல்ல அமுதா.. நம்ம எல்லாம் சேர்ந்து உட்காந்துக்கலாம்..” எனவும்  கண் சிமிட்டும் பொழுதில் மகராசியின் முகத்தில் ஒரு மெச்சுதல் பாவனை வந்து போனதோ என்னவோ..

ஆனால் அப்படித்தான் தோன்றியது பொன்னிக்கு..

அடுத்து புகழும் ஒன்றும் சொல்லாமல்  சாப்பிட்டு எழுந்துவிட, பிள்ளைகளும் உண்டுவிட்டு விளையாட, பெண்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உண்ண, புகழேந்தி பொன்னி உண்டுவிட்டு வரும்வரைக்கும் அங்கேயே தான் காத்திருந்தான்..

மன்னவன்,  ஜெயபால், இளங்கோவோடு பேசியவனின் பார்வை அவ்வப்போது பொன்னியைத் தான் தொட்டு தொட்டு மீண்டது.. அறைக்குள்ளே தன்னோடு சகஜமாய் பேசிய பொன்னி இப்போது இல்லை.. அதற்குமாறாய் ஒருவித ஒதுக்கமும், தயக்கமும் அவளிடம் தெரிய சரி புதிதாய் வந்திருப்பதால் அப்படி இருக்கிறாள் போல என்று நினைத்துகொண்டான்..

ஆனாலும் என்னவோ ஒன்று பொன்னி ஒருவித யோசனையில் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது.

ஒருவழியாய் அனைத்து வேலைகளும் முடிந்து அவரவர் அவர்களின் அறைக்குச் செல்ல, பொன்னி அறைக்கு வரவுமே அவளிடம் தன் மனதில் தோன்றியதை கேட்டும்விட்டான் புகழேந்தி..

“ஏன் எனக்கென்ன யோசனை.. அதெல்லாம் இல்லையே..” என்று அவள் சமாளிக்கப் பார்க்க,

“ஏய் கண்ணு.. சும்மா சும்மா என்கிட்ட எதுவும் மறைக்கப் பார்க்காத..” என்றான் புகழேந்தி கொஞ்சம் அழுத்தமாய்..

“நான் என்ன மறைச்சேன்..??”

“அப்படி இல்லைன்னா என்ன யோசனை பண்ணன்னு சொல்லு…”

“ம்ம் அதொண்ணுமில்ல.. இத்தனை நாள் நான் இவங்க எல்லாரையும் நினைச்சு இருந்தது ஒண்ணு.. இப்போ கண்ணு முன்னாடி பாக்குறது ஒண்ணு.. அதான்.. கொஞ்சம் யோசனை.. எது நிஜம் எது பொய்னு…” என்று சொல்ல,

அவள் என்ன சொல்கிறாள் என்பது அவனுக்கு நன்கு புரிந்தது.. அவள் நிலையில் இருந்து பார்த்தால் அதுசரி தானே.. நடந்து முடிந்திருந்த பிரச்சனையில் அவன் வீட்டினரும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாய் நடந்திடவில்லை என்பது அவனது ஊர்க்கார நண்பர்களே சொன்னார்களே..

அப்படியிருக்கையில் பொன்னி திருமணத்திற்கு சரியென்று சொன்னதே பெரிது, இதில் வீட்டிற்கு வந்ததுமே அவள் அனைவரையும் இவர்கள் என் சொந்தம் என்று ஏற்று அவர்களோடு சகஜமாய் பழகிடவேண்டும் என்று நினைப்பது சரியல்லவே என்று தோன்ற, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் புகழேந்தி அமைதியாய் இருந்தான்..

“ஹ்ம்ம் நீங்க எதுவும் பீல் பண்ண வேண்டாம்.. நான் எதையும் மனசுல வச்சு சொல்லலை.. பொதுவா கண்ணு பாக்குறதை தானே மனசு சட்டுன்னு நம்பும்.. முன்ன ஒருவிசயம் மனசுல பதிஞ்சு போச்சு.. ஆனா இனிமே கொஞ்சம் கொஞ்சமா மாறிடும்..” என்றவள், லேசாய் அவனின் தோள் மீது சாய்ந்துகொள்ள,

“ஹ்ம்ம்.. நீ இப்படித்தான் இருக்கணும்னு நான் எப்பவுமே உன்னை கண்ட்ரோல் பண்ணமாட்டேன் கண்ணு.. ஆனா என்னால என் வீட்டு ஆளுங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது.. அதே நேரம் உன்னோட மரியாதையை காப்பத்த வேண்டியது என் பொறுப்பு..” என,

“இதை நீங்க சொல்லணுமா என்ன??” என்றாள் பொன்னி முழுக்க முழுக்க அவனை சமாதானம் செய்யும் விதமாய்..

“ஹ்ம்ம் அசோக் வராதது எனக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு..” என்றான் அவனின் உள்ளத்தை மறைக்காதது..

“எனக்கும்தான்.. ஆனா அவன் கொஞ்சம் சங்கடமா பீல் பண்றான் இங்க வர.. கொஞ்ச நாள் போனா சரியாகிடும்..” என்று பொன்னி சொல்ல,

“இருக்கும்தான்.. அதான் நானும் எதும் அப்போ கேட்டுக்கலை…” என்றவன் “சங்கடம் யாருக்குத்தான் இல்லை.. நானுமே கூட நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறக்குள்ள ரொம்பவும்தான் சங்கடப்பட்டு போயிட்டேன்..” என்றான் கொஞ்சம் கசந்த குரலில்..                                 

 

Advertisement