Advertisement

தோற்றம் – 1

புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது.. சூரியன் இப்போதுதான் துயில் எழுகிறான் என்பதற்கிணங்க வானம் ஒரு பக்கத்தில் வர்ணஜாலங்கள் காட்ட, மறுபக்கத்தில் சாம்பல் நிறமாகவும், கரிய நிறமாகவும் பல வர்ண மாற்றங்களை காட்டிக்கொண்டு இருந்தது..

சாலையின் இருபுறமும் இருந்த வயல் வெளிகள் இன்னமும் தன் பச்சை நிறத்தை காட்டாது, கதிரவனின் வெளிச்சத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க, அதே சாலையின் நடுவே, பார்ப்பதற்கு வண்டு போலிருக்கும் நானோ காரை நிறுத்தி எரிச்சலாய் முகம் வைத்து, நின்றிருந்தான் புகழேந்தி..

அவனின்  அப்பாவிற்கு, அண்ணனிற்கு, மாமாவிற்கு… என்று வீட்டில் இருக்கும் ஆண்கள் அனைவர்க்கும் அழைத்துப் பார்த்துவிட்டான்.. யாரும் எடுப்பதாய் இல்லை..

“இவங்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம்னு நினைச்சது என் தப்புதான்.. நடுரோட்ல நிக்கிறேன்…” என்று கடுப்படித்துக்கொண்டே, அவனின் அம்மாவிற்கு அழைத்தான்..

வெகு நேரம் ஆனது அழைப்பு எடுக்கப்பட.. மகராசி அவன் அம்மா.. மக்களை பெற்ற மகராசி என்பதற்கிணங்க.. மகராசி – மன்னவனுக்கு நான்கு பிள்ளைகள்..

மூத்தவன் இளங்கோ.. அடுத்தது அன்பரசி.. அடுத்துத்தான் நம் நாயகன் புகழேந்தி.. அவனுக்கு அடுத்து அமுதா.. இளங்கோவிற்கு அவனின் அத்தை மகள் நித்யாவையும், அன்பரசிக்கு தாய்மாமன் ஜெயபாலையும் மணமுடித்திட அனைவரும் ஒரே வீட்டில் தான் கூட்டுக் குடும்பமாய் வசித்து வருகின்றனர்..

‘அம்மா தாயே.. மகராசி.. ஃபோன் எடு …’ என்று புலம்பியபடி புகழேந்தி மூன்றாவது முறை அழைப்புவிடுக்கையில் தான் அழைப்பு எடுக்கப்பட்டது..

“டேய் கண்ணு புகழு… என்னடா இந்நேரத்துக்கு…” என்று கேட்கையிலேயே மகராசியின் குரலில் ஒரு பதற்றம் தெரிய,

“ம்மா எனக்கு ஒண்ணுமில்ல. நல்லாத்தான் இருக்கேன்.. எங்க அப்பா மாமா அண்ணன் எல்லாம்.. யாருமே ஃபோன் எடுக்கல..” என்றான் புகழேந்தி..

“அவங்களுக்கு எதுக்குடா கண்ணு ஃபோன் போட்ட..??” என்று மகராசி நீட்டி முழக்க,

“ம்மா உனக்கு எத்தனை தடவ சொல்றது கண்ணு சொல்லதான்னு.. ஊருக்கு வெளிய நிக்கிறேன்.. வண்டி ரிப்பேர்.. யாரையாவது அனுப்பும்மா…” என,

“புகழு.. ஊருக்கு வர்றியாடா.. சொல்லவேயில்ல..” என்று மகராசி மகன் வரும் சந்தோசத்தில் பேச,

“ம்மா…” என்று பல்லைக் கடித்தவன் “நடுரோட்ல நிக்கிறேன்.. யாரையாவது அனுப்பும்மா…” என்றுசொல்ல,

“அவங்க எல்லாம் விடியக்காலையே தோப்புக்கு போயிட்டாங்க கண்ணு..” என்று மகராசி அவனுக்கு இன்னும் கொஞ்சம் எரிச்சலை ஏற்ற,

“இதான் விடியக்காலை.. இன்னமும் சரியா விடியக்கூட இல்லை..” என்று இவனும் விடாது பேச,

“சும்மா கத்தாத கண்ணு.. வர்றவன் சொல்லிட்டு கிளம்பிருக்கணும்.. முடிஞ்சா நடந்து வா இல்லையா கார்குள்ளவே படு. கொஞ்ச நேரத்துல வண்டி எதுவும் வந்தா ஏறி வா..” என்று யோசனை சொல்ல, புகழேந்தி மகராசி சொன்ன யோசனையில் நொந்து தான் போனான்..

“ரொம்ப நன்றி தாயே உன் யோசனைக்கு..” என்று கடுப்பாய் கூறியவன் ஃபோனை வைத்துவிட்டான்..

‘சொல்லிட்டே வந்திருக்கலாமோ..’ என்றுகூட தோன்ற, குளிர் வேறு சரியாய் அடித்தது.. ‘ஊப்… ஊப்…’ என்று சுவாசக்காற்றை வெளியேத்திக் கைகளை தேய்த்துக்கொண்டு நிற்க, சாலையோர செடிகளில் இருக்கும் சிறு சிறு பூச்சிகளின் ரீங்காரம் அப்போதும் கேட்டுக்கொண்டு இருக்க,

‘ஹ்ம்ம் கார்ல படுக்கணுமாம்.. இல்ல நடந்து வரணுமாம்.. மகராசி மகராசி..’ என்று வைகிறானா கொஞ்சுகிறானா என்றே விளங்காது அவனே புலம்பலாய் நின்றிருக்க, மெல்ல மெல்ல வெளிச்சம் ஏறத் தொடங்கியது..

நடந்துபோவது என்றால் இன்னும் ஊருக்குள்ளே ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக நடந்து போகவேண்டும்.. இரவு முழுவதும் கார் ஒட்டிக்கொண்டு வந்தது அவனுக்கு களைப்பாய் இருக்க, எத்தனை நேரம் அப்படியே நிற்பதும் என்றும் தெரியவில்லை.. வண்டியும் எதுவும் வருவதாகவும் தெரியவில்லை.. சும்மா நிற்பதற்கு அப்படியே மெதுவாய் நடப்போம் என்று நடக்கத் தொடங்கினான்..  

‘ஊருக்குள்ள எல்லாருமே தூங்குறாங்களா?? ஒருத்தன் கூட இந்தபக்கம் வரலை..’ என்று யோசனையோடு நடக்க, தூரத்தில் ஒரு டிவிஎஸ் பிப்டி வரும் சத்தம் கேட்டது..

‘ஆகா எவனோ வர்றான்..’ என்று புகழேந்தியின் மனம் சடுதியில் ஒரு சிறு மகிழ்ச்சியில் பொங்கிட, தூரத்தில் வரும் வண்டி அவனை நெருங்குவதற்காக கொஞ்சம் தள்ளி நிற்க,

வந்தது எவனோ இல்லை.. எவளோ..

வருவது ஆண் என்று நினைத்து வேகமாய் லிப்ட் கேட்பதுபோல் புகழேந்தி கைகளை ஆட்டி நிற்க, வந்த வண்டியும் அவனருகே நின்றிட, ‘அட பொண்ணு…’ என்றுதான் பார்த்தான் புகழேந்தி..

சேலைதான் கட்டியிருந்தாள், இழுத்து சொருகி.. அவளின் டிவிஎஸ் பிப்டியின் பின்னே பெரிதாய் புல்லுக் கட்டு.. வண்டியில் இருந்தவள் என்னவென்பதுபோல் பார்க்க, அவனோ ‘ஒண்ணுமில்ல போங்க…’ என்பதுபோல் பார்த்தான்..

அவனுக்காகவே மனதில் ஒரு எண்ணம் லிப்ட் கிடைக்காது என்று..  அப்படி நினைத்து அவளைப் போக சொல்ல வாயெடுக்கும் போதே,

“எங்க போகணும்…??” என்ற கேள்வி அவனை நோக்கி வர,

“ஹா.. இல்.. இல்ல கண்ணு..” என்று சொன்னவன் “ச்சே..” என்று தன் தலையில் தட்டி.. “நீங்க போங்க..” என்று சொல்ல,

“ஏன்?? பொண்ணுங்க லிப்ட் கொடுத்தா வரமாட்டீங்களோ??” என்று பொன்னி தன் புருவங்களை உயர்த்திட,

“இல்ல.. அது..” என்று இழுத்தவன், “அல்ரடி டைட்டா இருக்கு…” என்று அவளுக்கு பின்னே இருந்த புல்லு கட்டை காட்ட,

“ஓ..” என்றவள், “புல்லு கட்டு மேல உட்கார்ந்துட்டு வங்க..” என்றாள் கூலாய்..

“என்னது??!!!!” என்று புகழேந்தி கண்களை விரிக்க,

“வேணும்னா வாங்க.. இல்லாட்டி..” என்று தன் தோள்களை குழுக்கியவள், வண்டியைக் கிளப்ப முயல,

“ஹே.. ஸ்டாப் ஸ்டாப்.. பேக் எடுத்துட்டு வர்றேன்…”  என்றவன் அவனின் பையை எடுத்துக்கொண்டு காரை லாக் செய்துவிட்டு வந்தவன், எப்படி ஏறி அமர்வது என்று யோசிக்க,

‘இது வேலைக்காகாது…’ என்று பொன்னி எண்ணியவளாய் “சரி.. வேற வண்டி வரும்…” என்று சொல்லி கிளம்பிட,

“ஏங்க ஏங்க இருங்க…” என்று வேகமாய் சொன்னவன், கொஞ்சம் தயங்கி “நான் கூட வண்டி ஓட்டுறேன்..” என,

“இது என்ன உங்க வீட்டு வண்டியா…??” என்றாள் பட்டென்று..

‘தாயே மகராசி…. நீ இருக்கியே…’ என்று அந்த நேரத்தில் அவன் அம்மாவை தான் கடிய முடிந்தது அவனால்.. ‘இதுக்கு பேசாம கார்லயே தூங்கிருக்கலாமோ…’ என்றும் யோசனை ஓட,

“ஹலோ…” என்று அவன் முன்னே சொடக்கு போட்டவள், “என்ன.. வர்றீங்களா இல்லையா??” என்று கேட்க,

“அது… ம்ம் வர்றேன்..” என்றவனுக்கு சத்தியமாய் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.  

அத்தனை நேரம் கொஞ்சம் இருட்டாய் இருந்த பொழுது இவளோடு பேசிய இந்த ஐந்து நிமிடங்களில் நன்கு விடிந்தது போல் தோன்றியது அவனுக்கு.. ஒருவேளை இன்னும் கொஞ்ச தூரம் நடந்துபோனால் வேறு யாரேனும் வண்டியில் வருவரோ.. இல்லை வீட்டிலிருந்து கூட யாரேனும் வந்தால் வருவரோ என்ற நப்பாசை வேறு அவனுக்குத் தோன்ற, அவளோ டிவிஸ் பிப்டியை உறுமவிட்டாள்..

‘ஷப்பா.. சரியான சண்டிராணியா இருப்ப போலவே…’ என்றெண்ணியவன்,

“அட இரும்மா.. ஏறிக்கிறேன்” என்று சலிப்பாய் சொல்வது போல் சொல்ல, அவளோ வேகமாய் ஒரு துண்டை நீட்டினாள்..

‘இது எதுக்கு???’ என்று அவன் பார்க்க,

“உட்கார போறது குஷன் சீட்ல இல்ல.. புல்லு கட்டுமேல.. சின்ன சின்ன பூச்சி இருக்கும்.. இல்லை முள்ளு கூட இருக்கும்..” என்றவளின் பார்வை அவனைக் காண, அவனோ தன் காரில் போகிறோம் என்ற மிதப்பில் முட்டி வரைக்கும் ஷார்ட்ஸ் போட்டு வந்தது எண்ணி நொந்து போனான்..

அவளது பார்வையும் அதுவே உணர்த்த, வேகமாய் அவன் மனதில் ஒரு ரோசம் பிறந்தது.. இதென்ன நான் என்னவோ இந்த ஊருக்கு இந்த மண்ணுக்கு புதிது என்பதுபோல் பேசுகிறாள்.. என்னவோ கொஞ்ச நாள்.. இல்லை இல்லை கொஞ்சம் வருடம் இங்கே இல்லை. அதுக்கு.. புல்லு கட்டை நான் பார்த்ததே இல்லை என்பதுபோல் இதென்ன பார்வை என்றெண்ணி

“நாங்களும் புல்லு கட்டு மேல உட்கார்ந்து போயிருக்கோம்…” என்று வீராப்பாக சொல்ல,

“சரிதான்..” என்றவள் அவனிடம் நீட்டிய துண்டை தன் தோள் மீது போட்டுகொண்டு,

“பொழுது விடிஞ்சிருச்சு.. கன்னுக்குட்டிக்கு போய் புல்லு போட்டு அடுத்து வேலைக்கு கிளம்பனும்..” என்று முணுமுணுப்போடு வண்டியைக் கிளப்ப, அவனோ அசலாட்டாய் ஏறி அமர்வதுபோல் பாசங்கு செய்து, புல்லுக்கட்டு மீது ஏறி அவளின் முதுகுப் பக்கம் தன் முதுகுபுறம் இருக்கும்படியாய் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர, கொஞ்ச நேரத்தில் புல்லின் ஈரம் அவன் உடலில் பாயத் தொடங்கியது..

“எங்க போகணும்???” என்று இரண்டுமுறை பொன்னி கேட்ட கேள்வி அவன் காதில் விழாதுபோக,

“ஹலோ.. உங்களைதான் எங்க போகணும்னு கேட்டேன்..” என்று அவள் தோளில் போட்டிருக்கும் துண்டை ஒருமுறை பின் நோக்கி வீசி மீண்டும் முன்னே போட,

‘என்னடா இவ ஒரு லிப்ட் கொடுத்துட்டு இத்தனை படுத்துறா…’ என்று எண்ணியவன், அவனது வீடை சொல்ல, ஒருநொடி அவளது வண்டி நின்றதுபோல் தோன்றியது அவனுக்கு..

‘என்னாச்சு இவ வண்டியும் போச்சா..’ என்று நினைத்து முடிப்பதற்குள்ளேயே மீண்டும் வண்டி கிளம்ப, ‘ச்சே ச்சே இல்லை இல்லை..’ என்று அவனாகவே எண்ண, வண்டியை ஒட்டியவளின் முகமோ பெரும் யோசனையை பூசியது..

‘அந்த வீட்டு ஆளா..’ என்ற யோசனை..

இதற்குமேல் இப்படியே இவனை அழைத்துப் போவதா.. இல்லை இறக்கி விடுவதா.. என்று இருவேறான எண்ணங்கள் அவளின் மனதில்..

நம்பி ஏறிவிட்டான்.. இப்படி பாதியில் இறக்கிவிடுவது அவளுக்கு சரியானதாய் தெரியவில்லை..  

‘இவனை கூட்டிட்டு போனா அதுக்கும் எதாவது பேச்சு வருமே.. என்ன பண்றது…’ என்று யோசித்தபடி வண்டியை செலுத்த, சாலையில் இருக்கும் குண்டு குழி எல்லாம் அவளது கண்களுக்கு தெரியாமல் போக, பின்னே இருந்தவனோ ஆடாது அசையாது அமர பெரும் பாடுபட்டு போனான்.

“ஏங்க கொஞ்சம் மெதுவா போங்க…” எனும்போதே, அவளும் “கொஞ்சம் ஆடாம இருக்கீங்களா??” என,

‘எனக்குத் தேவைதான்…’ என்று சொல்லிக்கொண்டவன், அவனது பிடிமானத்திற்கு எதுவும் கிடைக்குமா என்று பார்க்க, வேறுவழியே இல்லாது புல்லு கட்டு காட்டியிருந்த கயிற்றை இறுகப் பற்றிகொண்டான்..

மேலும் ஒரு ஐந்து நிமிடம் கடந்திருக்கும், அவர்களது ஊரில் மக்கள் நடமாடும் இடம் தொடங்கவும், வண்டியை சற்று ஓரமாய் நிறுத்தியவள் அவன் இறங்குவான் என்று பார்க்க, அவனோ இறங்கவில்லை.. அப்படியே இருக்க,

“கொஞ்சம் இறங்குறீங்களா..??” என்ற குரல் கேட்டதும்தான்,

“ஹா.. தேங்க்ஸ்..” என்று இறங்கியவன், அப்போதுதான் பார்த்தான் அவனது வீட்டின் முன் தான் இறங்கவில்லை என்று.

“ஏங்க என்னங்க..” என்று அவளைக் காண, “இப்படியே நடந்து போனா அஞ்சு நிமிஷம் கூட ஆகாது உங்க வீடு வர..” என,

“அது எனக்குத் தெரியும்.. ஆனா ஏன் இங்க இறங்க சொல்றீங்க.. அஞ்சு நிமிசத்துல போற வீட்டுக்கு வண்டில விட்டா ரெண்டு நிமிசம்ல போவேன்ல..” என,

‘உனக்கெல்லாம் லிப்ட் கொடுத்ததே பெருசுடா…’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள்..

“ஆ… சரி சரி..” என்றவன் அவனது பையை தோள் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு,

“உங்க பேர் என்ன??” என்று கேட்க,

“உங்க வீட்ல கேளுங்க சொல்வாங்க…” என்றவள் அடுத்த நிமிடம் கிளம்பிட, அவனோ இதென்ன பதில் இது என்று யோசித்து, கொஞ்சம் குழம்பி என்று கலவையான மனநிலையில் நிற்க,

“டேய் புகழு.. என்னடா நடு ரோட்ல நிக்கிற..” என்ற குரல் கேட்டு திரும்ப, அவனின் அண்ணன் இளங்கோ நின்றிருந்தான்..

“டேய் அண்ணா…” என்று இவன் செல்ல,

“என்னடா நீ எப்போ ஊருக்கு வந்த.. வந்து ஏன் இப்படி நிக்கிற??” என்றவனும் அவனது பைக்கில் இருந்து இறங்க, இத்தனை நேரம் இருந்த மனநிலை மாறி தன் அண்ணனை முறைதான் புகழேந்தி..

“என்னடா கேள்வி கேட்டா முறைக்கிற…”

“பின்ன.. போன டைம் என்னைப் பார்க்க வந்தப்போ நியு மாடல் ஃபோன் வாங்கிக் குடுன்னு என்னை படுத்தி ஒரு ஃபோன் வாங்கினியே அது எங்க?? ” என்று புகழேந்தி கேட்க,

“ம்ம்ச் நான் என்ன கேட்கிறேன் நீ என்ன கேட்கிற???” என்றான் கடுப்பாய் பெரியவன்.

“சொல்லுடா எங்க அது??”

“வீட்ல இருக்கு.. நான் தோப்புல இருந்து வர்றேன்..”

“சரி வீட்டுக்கு போய் அதை எடுத்துப் பாரு.. நான் ஏன் நடுரோட்ல நிக்கிறேன்னு தெரியும்.. இப்போ கிளம்புவோம்..”  என்று புகழேந்தி பைக்கின் அருகே செல்ல,

“ஹ்ம்ம் என்னவோ நீ ஒரு மார்க்கமா தான் வந்திருக்க.. சரியில்லை.. அம்மாக்கிட்ட சொன்னாதான் ஆச்சு..” என்றபடி பெரியவனும் வண்டியைக் கிளப்ப,

“தாய் மகராசி தான… அவங்களும் உனக்கு ஒரு கதை சொல்வாங்க…” என்றபடி இருவரும் பேசியபடி வீடு போய் இரண்டு நிமிடத்தில் சேர்ந்தனர்..

அண்ணனைப் பார்த்ததும் புகழேந்திக்கு தனக்கு லிப்ட் கொடுத்தவளின் நினைப்பு கொஞ்ச நேரம் காணாது போனது தான்.. ஆனால் வீட்டிற்கு சென்று இறங்கியதும், மகராசி,

“டேய் கண்ணு புகழு.. எப்படிடா வந்த..??” என்றவர், பின்னோடு இளங்கோ வரவும், “இளங்கோ நீயாடா கூட்டிட்டு வந்த??” என்றார் மக்களைப் பார்த்து,

“நடுரோட்ல நின்னுருந்தான்மா.. என்னடான்னு கேட்டா வீட்ல போய் பாரு தெரியும்னு சொல்றான்…” என்று இளங்கோவும் சொல்ல, அதற்குள் அவ்வீட்டின் மகள்கள், மருமகள் எல்லாம் அங்கே வந்திட,

“சித்தப்பா…” என்று இளங்கோவின் மூன்று வயது மகனும், “மாமா…” என்று அன்பரசியின் நான்கு வயது மகளும் வர “டேய் குட்டீஸ்…”  என்று அவர்களை இரு கைகளிலும் தூக்கிக்கொண்டான்..

அதன்பின் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசி முடிக்க நேரம் செல்ல, இளங்கோ இவர்கள் செய்துவைத்திருந்த காலை உணவை வாங்கிகொண்டு மீண்டும் தோப்பு நோக்கி செல்லக் கிளம்ப,

“நீயும் வர்றியாடா??” என்று கேட்க,

“ஹ்ம்ம் இல்லைடா.. நைட்டெல்லாம் டிரைவ் பண்ணேன்.. கொஞ்சம் தூங்கனும்..” என்று சோம்பல் முறித்தான் புகழேந்தி..

மகராசி அதற்குமேல் எப்படி வந்தாய் என்று கேட்காமல் போனதால், அவனுக்கு தன்னை இறக்கிவிட்டவளின் பேச்சை பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பொன்னியோ அவளது வீட்டில் அவள் வளர்க்கும் ஒரு பசுமாட்டிற்கு தீவனம் கலக்கி வைத்துவிட்டு, கையை கழுவிக்கொண்டிருக்க,

“பொன்னி.. இத்தன நேரமா.. நாலு மணிக்கு போனவ.. இனிமே நல்லா விடிஞ்சப்புறம் போ.. உன்னைய அனுப்பிட்டு நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு..” என்றபடி வந்தார் அவளின் அம்மா, மங்கை..

அவளோ பதில் சொல்லாது கன்னுக்குட்டியை கொஞ்சிக்கொண்டு நிற்க, “ஏய் உன்னைத் தான்டி சொல்றேன்..” என்று மங்கை கடிய,

“ம்மா.. தினமும் தான் இதை நீ சொல்ற.. தினமும் தான் நாலு மணிக்கு கிளம்பி போறேன்..” என்றாள் முகத்தை திருப்பாது..

“அதுக்கில்ல பொன்னி.. காலம் கெட்டுக்கிடக்கு.. யாரையும் நம்ப முடியாது..” என, காலையில் அவளிடம் லிப்ட் கேட்டவனின் முகம் வந்து போனது அவளுக்கு மனதினுள்..

‘காலம் கெட்டுக்கிடக்கு…’ என்று மங்கை சொன்னது இன்னமும் அவள் காதில் ஒலிக்க,

எந்த தைரியத்தில் இவனுக்கு தான் அந்த ஆள் அரவமற்ற பொழுதும் புலராத வேளையில் அவனை தன்னோடு ஏற்றிக்கொண்டு வந்தோம் என்று தோன்றியது..

அம்மா அடிக்கடி சொல்வதுபோல் தனக்கு ‘அசட்டுத் துணிச்சல் தானோ..’ என்று எண்ணிக்கொண்டாள்..

“என்ன பொன்னி இவ்வளோ யோசனை?? நேரமாச்சு கிளம்பி வா..” என்று மங்கை சொல்ல,

“ம்ம்.. நான் குளிக்க போறேன் ம்மா..” என்றவள் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு போக, அவனுக்கு வண்டியில் அமர தான் துண்டு நீட்டியது அவளுக்கு நினைவில் வந்தது..

அவள் நீட்டியதும்.. அவன் மறுத்ததும்..

“முள்ளு கிள்ளு ஏதாவது குத்தியிருந்தா என்ன செஞ்சிருப்பான்…” என்று நினைக்கும் போதே, அவளுக்கு சிரிப்பும் வந்துவிட்டது..

சிரிக்கும் அதே நொடி, அவன் யாரின் வீட்டு மகன் என்பதும் நினைவில் வர, அந்த புன்னகை அப்படியே தேய்ந்து மறைந்து, ‘ஹ்ம்ம் இவன் மட்டும் எப்படி இருக்க போறான்..’ என்று எண்ணியவள், மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடாது குளித்துவிட்டு அவளின் வேலைக்குக் கிளம்பிச் சென்றாள்.  

அன்றைய நாள் முழுதும் பொன்னிக்கு அவளது வேலையிலும், புகழேந்திக்கு பாதி நாள் உறக்கமும் மீதி நாள் நல்ல வீட்டு சப்பாடுமாய் இருக்க,

மாலை ஒரு நான்கு மணிப்போல், “அண்ணி குட்டீஸ் எங்க.. வீடே அமைதியா இருக்கு..” என்றான் நித்யாவிடம்..

“எல்லாம் ஸ்கூலுக்கு போயிருக்காங்க புகழ்..”

“ஸ்கூலா.. அதுவும் இந்த வயசுல??” என்று புகழ் பார்க்க,

“ண்ணா.. எல்லாம் பால்வாடிக்கு போயிருக்குதுங்க..” என்றாள் அமுதா..

“ஓ.. எப்போ வருவாங்க…??”

“இப்போ வர நேரம் தான் புகழு.. போய் கூட்டிட்டு வரணும்..” என்று அன்பரசி சொல்ல,

“சரி நான் போறேன்..” என்று கிளம்பினான்..

“இல்ல புகழு.. தெரிஞ்சவங்க போனாதான் விடுவாங்க..” என்று நித்யா சொல்ல,

“என்னை குட்டீஸ்க்கு தெரியும்தான..” என்றபடி கிளம்பிப்போனான்..

பால்வாடி வேறெங்கிலும் இல்லை அவன் வீட்டிலிருந்து ஒரு ஐந்து நிமிட நடை..

‘இந்த நேரத்துல பால்வாடிக்கு போய் என்ன பண்ணுதுங்க..’ என்று அவனாய் நினைத்தபடி அங்கே போக, அனைத்துப் பிள்ளைகளும் வீடு போவதற்கு தயாராய் நிற்பது தெரிந்தது..

‘நம்ம வீட்டு குட்டீஸ் எங்க??’ என்று அவன் பார்க்க, அவன் வீட்டு பிள்ளைகள் இருவரும் ஒருத்தியின் கரங்களை பிடித்து நின்றிருக்க,

‘எவ அவ…’ என்று பார்வையை கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற்றியவன், அவளின் முகம் தெரிய, ‘அட நம்ம புல்லு கட்டு…’ என்று எண்ணிக்கொண்டு வேகமாய் அங்கே அவர்களை நோக்கிப் போனான்..     

      

  

               

Advertisement