Advertisement

தோற்றம் – 2

எதிரே நின்றவளும் அவனைப் பார்க்க, அவனும் பார்க்க, பொன்னியின் கரங்களைப் பிடித்து நின்றிருந்த குட்டிகளோ, ‘மாமா…’ ‘சித்தப்பா..’ என்று மழலையாய் ஆளுக்கு ஒன்றாய் சொல்ல, அவர்களைப் பார்த்து சிரித்தவன், திரும்பவும் அவளைப் பார்த்து நின்றான்..

‘இவன் எங்க இங்க…’ என்று பொன்னி நினைக்கும் போதே, “குட்டீஸ கூட்டிட்டு போக வந்தேன்..” என்றான்..

“எந்த குட்டீஸ்??” என்று அவளும் தெரியாதது போல்..

அவளுக்கும் தெரியும் என்று அவனுக்குத் தெரியாது இல்லையா.. ஆக, “இதோ…” என்று பிள்ளைகளைப் பார்த்து அவன் கைகளை நீட்ட, “இவங்க யாரு…” என்பதுபோல் பார்த்தாள் பொன்னி..  

“எங்க வீட்டு குட்டீஸ் தான்.. அண்ணா பையன்.. அக்கா பொண்ணு..” என, “ஓ..” என்றவள்,

குட்டீஸைப் பார்த்து “அப்படியா…” என்பதுபோல் தலையை ஆட்ட, அவர்களும் “ஆமாம்..” என்று தலையை ஆட்டினர்..

“எப்பவும் இவங்க அம்மா இல்லை அத்தை தான் வருவாங்க…” என்றபடி பிள்ளைகளை அவனை நோக்கி அனுப்ப,

“எனக்கு அண்ணியும் அக்காவும்…” என்றபடி இருவரையும் ஒரே நேரத்தில் புகழ் இரண்டு கைகளிலும் தூக்க, அதனைப் பார்த்துக்கொண்டு இருந்தவளின் பார்வை அப்படியே மாறிவிட்டது..

இப்படிதான் சிறுவயதில் அவளின் அப்பா பொன்னியையும் அவளின் அண்ணன் அசோக்கையும் ஒன்றாய் ஒரே நேரத்தில் இரு கைகளிலும் தூக்குவார்.. அந்த காட்சி அப்படியே மனதில் வந்துபோக, காலத்தின் பிடியில் அவளின் அப்பா, மாண்டுவிட, இத்தனை வருடங்கள் வீட்டின் தூணாய் பொன்னிக்கும் மங்கைக்கும் அரணாய் இருந்த அசோக் இன்று இருந்தும் அவர்களோடு இருக்க முடியாது போன சூழல்..

அதுவும் யாரால் இதோ எதிரே இருக்கிறானே அவனின் குடும்பத்தினரால் என்று நினைக்கும் போதே அவள் முகமும் பார்வையும் மாறிட, பிள்ளைகளை தூக்கியவன் அவளை சிரித்தபடி காண, அவளோ ஒருமாதிரி அடக்கப்பட்ட கோபம் கொண்டு அவனைப் பார்க்க,

“என்னங்க?? என்னாச்சு…”  என்று புகழ் கேட்க,

“ஒண்ணுமில்ல.. வந்த வேலை முடிஞ்சதுல்ல கிளம்புங்க..” என்றவள் மற்ற பிள்ளைகளை நோக்கி நடையை போட்டாள்.

இத்தனை நேரம் நன்றாய் இருந்தவள், இப்படி முகம் மாறி திரும்பவும்,  “ஏங்க நில்லுங்க..” என்றபடி பிள்ளைகளையும் தூக்கியபடி அவளைத் தொடர,

“இங்க பாருங்க.. இப்படி பின்னாடி எல்லாம் வர வேண்டாம்.. இனி அதுவேற பிரச்சனை ஆகணுமா.. கிளம்புற வழியைப் பாருங்க..” என்றவள் பால்வாடியினுள் சென்றுவிட்டாள்..

‘என்னாச்சு என்ன பிரச்சனை…’ என்று அவன் யோசிக்கும்போதே, அவன் கையில் இருந்த இளங்கோவின் மகன் முகேஷ் இறங்க முயல,

“டேய் என்னடா..” என்றபடி புகழ் அவனை இறுக்கிப் பிடிக்க, “மிஸ்ட…” என்றபடி அவனோ கீழே தொங்கிக்கொண்டே போனான்..

‘கடவுளே…’ என்று புகழ் புலம்பியபடி, அண்ணன் மகன் ஒருபுறம் அக்கா மகள் மறுபுறமாய் தூக்கிக்கொண்டு புகழேந்தி பால்வாடியினுள் நுழைய, உள்ளே நுழைந்தவன் ஒருநொடி அதிர்ந்து அதிசயித்து தான் நின்றான்.. கிராமப்புறங்களில் இருக்கும் பால்வாடி என்று அவன் எண்ணி வந்தது வேறு.. ஆனால் உள்ளே நுழைந்ததும் அவன் கண்ணில் காண்பது முற்றிலும் வேறாய் இருந்தது..

வட்டம்,   சதுரம்.. செவ்வகம்.. நட்சத்திரம் என்று பல பல வடிவங்களில், பல பல வண்ணங்களில் சின்ன சின்னதாய் மேஜைகள், அதனை சுற்றி குட்டி குட்டி இருக்கைகள், பல பல விளையாட்டு பொருட்கள், அறிவை வளர்க்கும் விதமான வண்ண வண்ணமாய் சார்ட்கள் அங்கே தொங்க விடப்பட்டிருக்க,  

அவன் எண்ணி வந்ததுமாய், இதற்குமுன்னே எப்போதோ பார்த்த பால்வாடி போல் இல்லாமல், முற்றிலும் வேறுவிதமாய் அங்கே சிட்டிகளில் எப்படி இருக்குமோ அதுபோல இருக்க அசந்து தான் போனான்..

பொன்னி வேகமாய் உள்ளே வந்தவள், அங்கே இருந்த மற்ற பிள்ளைகளை கிளப்பிக்கொண்டு இருக்க, வாசலை மறைத்து கையில் இரண்டு பிள்ளைகளையும் வைத்து புகழ் நிற்பதை கண்டு, ‘இவன் இன்னும் போகலையா..’ என்பதுபோல் பார்த்தவள்,

“அப்புறம் வேடிக்கை பாருங்க.. பசங்க எல்லாம் கிளம்பனும்..” என்று சொல்ல, “ஹா.. என்னது…” என்றவனுக்கு இன்னமும் அந்த ஆச்சர்யம் போகவில்லை.. அதே ஆச்சர்யத்தோடு தள்ளி நிற்க,  

“வில்லேஜ்ல இருக்க பால்வாடின்னா அவ்வளோ மட்டமா??” என்று மீண்டும் அவளாது குரல் கேட்க,

“நான்.. நான் எங்க மட்டமா நினைச்சேன்…” என்றான் அவன்..

“உங்க பார்வையே சொல்லுதே…” என்று பேசிக்கொண்டே, வெளியே நின்றிருந்த ஒரு பெண்மணியிடம் அவரின் குழந்தையை கொண்டு போய் விட்டவள், திரும்ப உள்ளே வர,

“நான் மட்டமா பார்க்கலையே…” என்றான் புகழும் விடாது..

“நீங்க ஆச்சர்யமாதான் பார்த்தீங்க.. ஆனா.. வில்லேஜ்ல இப்படி இருக்குன்னு நினைக்கல இல்லையா?? அப்போ அதுக்கு அதான் அர்த்தம்..” என,

அவனுக்கோ அவளது பெயரைக் கேட்க வேண்டும் என்பது எல்லாம் மறந்து, “எஸ்…” என்று உண்மையை ஒத்துக்கொள்ள,

“அதான்.. சிட்டில ப்ளே ஸ்கூல்னு சொல்றோம் வில்லேஜ்ல பால்வாடின்னு சொல்றோம்.. எல்லாம் பேசிக்கா ஒண்ணுதான்.. பார்க்கிற விதம் தான் வேற..” என்று அவள் அவனுக்கும் சேர்த்து வகுப்பெடுக்க, அமைதியாய் அவள் பேசுவதைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் புகழேந்தி..

“மாமா..” என்று அன்பரசியின் மகள் ஸ்வேதா அவன் கன்னத்தை சொரண்ட, “என்ன குட்டி..” என்றவனுக்கு அப்போதுதான் தான் என்ன செய்கிறோம் என்றே நினைவில் வந்தது..

‘ச்சே என்னடா புகழ்.. இப்படியா வாய் பார்த்துட்டு நிக்கிறது…’ என்று தன்னை தானே நொந்தவன், அவளைத் தேட, அவளோ வீட்டிற்கு கிளம்ப என்று அவளது பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருந்தாள்.  

“ஏங்க உங்க நேம் என்ன…” என்றவன் அவளருகே வர,

“ஓ.. நீங்க இன்னும் உங்க வீட்ல கேட்கலையா??” என்று அவனை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்தாள்..

“உங்க நேம்.. உங்கட்ட தான் கேட்கணும்…” எனும்போதே அவனின் அலைபேசி அலறியது… ஸ்வேதாவை இறக்கிவிட்டு, அலைபேசியை எடுத்துப் பார்க்க,   அவனின் அம்மாதான்.. மகராசிதான் அழைப்பது..

“ம்மா…” என,

“டேய் கண்ணு.. என்ன இவ்வளோ நேரம்.. அவ பிள்ளைகள அனுப்ப முடியாது சொன்னாளா???” என்றார் பக்கா ஸ்ருதி ஏற்றத்தில்..

“எவ??” என்று புகழேந்தி புரியாமல் கேட்கும்போதே,

பொன்னி அவனைப் பார்த்தவள், இதழில் ஒரு கிண்டல் சிரிப்பை உத்திரவிட்டு நிற்க, புகழின் பார்வை பொன்னியின் மீது பாய, அவள் முகத்தில் தெரியும் பாவனையில் மகராசி அவளைத்தான் சொல்கிறார் என்று அவனுக்கும் புரிந்துபோனதும்..

ஆனாலும் ஏன் இப்படி சொல்லவேண்டும் என்று கேள்வி எழ, அதே கேள்வியைத் தாங்கி அவளைப் பார்த்தவன், “ம்மா என்ன பேச்சிது…” என்றான் ஒருமாதிரி கண்டிக்கும் குரலில்..

“என்ன பேச்சிதுன்ன?? என்ன கண்ணு.. நீ போய் எத்தன நேரமாகுது.. இன்னும் வரல.. அதான்.. அவ.. அந்த சண்டிராணி ஒருத்தி இருப்பாளே.. அவ எதுவும் சொன்னாளா..??” என்று மகராசி மகன்தானே என்று தன் மனதில் நினைத்ததை பேச,

காலையில் அவனும் அப்படித்தானே நினைத்தான், இப்போது மகராசியும் அப்படியே கூற, ‘என்னடா இது…’ என்று எண்ணியவன், பொன்னியைப் பார்க்க, அவளோ வாசல் அருகே போய் நின்றிருந்தாள்..

“ஹலோ.. புகழு.. கண்ணு.. பேசுடா…” என்று மகராசி அங்கே கத்திக்கொண்டு இருக்க,

“ம்மா தாயே மகராசி.. வந்துட்டு இருக்கேன்.. கத்தாத..” என்றபடி பேசி முடித்து, மீண்டும் ஸ்வேதாவை தூக்கிக்கொண்டு அவனும் வெளிய வர, வேகமாய் பொன்னி பால்வாடியின் கதவினை இழுத்து பூட்டியவள், கிளம்ப,

“ஏங்க.. புல்லு கட்டு.. ஐயோ ச்சே.. ஏங்க.. கண்ணு..” என்று அவளை என்னவென்று சொல்லி அழைப்பது என்று தெரியாமல் அவள் பின்னேயே போக,

அவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்ன வேணும் உங்களுக்கு.. அப்போவே போக சொன்னேன்.. கிளம்புங்க.. உங்க வீட்டாளுங்க யாரும் பார்த்தா இன்னும் பிரச்சனை தான்..” என்று சொன்னவள் விடுவிடுவென்று நடக்க,

“என்ன என்ன பிரச்சனை? நானும் பாக்குறேன்.. அதையே சொல்றீங்க.. என்ன பிரச்சனை..” என்று புகழேந்தி முகத்தை சீரியசாய் வைத்துக் கேட்க,

“அதை உங்க வீட்ல கேட்டுக்கோங்க.. ஏன்னா பிரச்சனை பண்ணது அவங்கதான்..” என்றவள் ஒரு சிறு சந்தில் நுழைந்து வேகமாய் நடந்துவிட்டாள்..

கையில் இரண்டு பிள்ளைகளை தூக்கிக்கொண்டு அவனால் அத்தனை வேகத்தில் நடக்க முடியவில்லை.. பாவம் அந்த சிறுசுகளும் அவன் போகும் வேகத்திற்கு எல்லாம் சமாளித்து அவனது கழுத்தை கட்டிக்கொண்டு அவனது நடையில் குலுங்கித்தான் வந்தனர்..

சென்னையை ஒட்டி இருக்கும் கிராமம் தான் இவர்களது. தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் சற்று உள்ளே தள்ளி வந்தால், அழகான வயல் வரப்பு பூமியை தாண்டி ஊருக்குள் நுழையவேண்டும்.. ஊரும் அத்தனை ஒன்றும் பெரிதெல்லாம் இல்லை.. கிட்டத்தட்ட ஒரு பத்து அல்ல பதினைந்து சந்துகளும் அதனை ஒட்டி வீடுகளும், பின் மீண்டும் தோப்புகளும்… காடுகளும்.. அதனை ஒட்டி ஆங்கங்கே சிறு சிறு வீடுகளுமாய் இருக்கும் ஊர்

ஆக அதற்குள் எங்கே சுற்றினாலும் ஏதாவது ஒரு சந்தினுள் நுழைந்தால் மற்ற ஒன்றை பிடித்துதான் ஆக முடியும்..

புகழேந்தியும் என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள எண்ணி, வேகமாய் வீட்டை நோக்கி நடைப் போட்டவன், வாசலில் அவன் வீட்டின் பெண்மணிகள் நிற்பதைப் பார்த்து,

“பிடிங்க..” என்று பிள்ளைகளை கொடுத்தவன், வேகமாய் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு பொன்னி போன சந்தை நோக்கிப் போக,

“டேய் கண்ணு எங்கடா போற..” என்ற மகராசியின் குரல் காற்றோடு போனது..

‘எங்க போனா இவ.. அதுக்குள்ள..’ என்று பார்வையை அலசியபடி அடுத்தடுத்த குறுக்கு சந்துகளில் நுழைய,

“டேய் மாப்ள… எப்போடா வந்த??” என்றபடி எதிரே மூன்று இளைஞர்கள் வர, ‘இவனுங்களா…’ என்று பார்த்தவன்,

“டேய் எப்படிடா இருக்கீங்க…??”என்று அவனும் ஆரவாரமாய் கேட்பது போல், கேட்டு அவர்களை நோக்கி முன்னே வர, அடுத்து என்ன ஒரே பேச்சு.. நலம் விசாரிப்பு.. சிரிப்புதான்..

அனைவரும் அவனது பால்ய சிநேகிதர்கள்.. புகழேந்தி படிப்பு.. வேலை என்று வெளியே சென்றிட, எப்போதாவது ஊருக்கு வருகையில் தான் இவர்களை காண முடியும்.. மற்றபடி ஃபோனில் பேசுவது எல்லாம் கிடையாது.. நேரில் பார்க்கையில் பேசுவர் அவ்வளவே.. ஆக இப்போதும் அப்படி நின்று பேசும் நிலை..

ஆனால் மனதோ அங்கே அவளைத் தேடிக்கொண்டு இருக்க, ‘ஹ்ம்ம் இந்நேரம் வீட்டுக்கு போயிருப்பாளோ..’ என்று எண்ணியது..

“டேய் புகழு.. என்னடா.. யார தேடுற…??” என்று ஒருவன் கேட்க,

“அது….” என்று என்ன காரணம் சொல்லி மழுப்புவது என்று யோசித்தவன், இங்கேயே இருப்பவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரியாதா என்று “அந்த பால்வாடில்ல..” என்று சொல்லும்போதே,

“டேய் டேய்.. விடுடா.. இப்போதான் கொஞ்சம் எல்லாம் அமைதியா இருக்காங்க.. மறுபடியும் பிரச்சனை வரணுமா என்ன??” என்று சொல்லிய ஒருவன்,

“இங்க பாரு மாப்ள.. நடந்தது என்னனு எங்களுக்குத் தெரியாது.. ஆனா.. அந்த பொண்ணு அவங்க அம்மா.. அண்ணன் எல்லாம் நல்ல ஆளுங்கதான்..” என்று சொல்ல, இவனுக்கு மொத்தமாய் ஒன்றுமே புரியவில்லை..

“டேய் என்னடா சொல்றீங்க??” என்று புகழ் கேட்க,

“ஒண்ணுமில்ல.. நைட்டு எல்லாம் தோப்புக்கு காவல் போறோம்.. நீயும் வர்றதுன்னா வா.. இப்போ நாங்க கிளம்புறோம்..” என்று சொல்லி நகர்ந்திட,

‘எனக்குன்னு வந்து சேர்ந்தானுங்க பாரு…’ என்று சலித்துக்கொண்டே புகழேந்தி மீண்டும் வீடு திரும்ப, அங்கே பொன்னியோ,

“ம்மா.. அந்த வீட்ல மொத்தம் எத்தன பசங்க..??” என்றாள் கேள்வியாய்..

“எந்த வீட்ல டி??” என்றபடி மங்கை அவளுக்கு காப்பி கலந்து கொடுக்க,

“அதான்.. அந்த அமுதா வீட்ல…” என்றவள் முகத்தை சுருக்க,

“ஏன்.. ஏன் .. மறுபடியும் எதுவும் பிரச்சனை பண்ணாங்களா ??” என்றார் மங்கை பதறி..

“அதெல்லாம் இல்லை.. நான் என்ன அசோக் மாதிரியா.. எதுன்னாலும் தலையை தலையை உருட்ட.. என்கிட்ட பிரச்சனை பண்ண அவ்வளோதான்..” என்றவள் “சொல்லு.. எத்தன பசங்க..” என்று திரும்பவும் கேட்க,

“ரெண்டு பசங்க.. ரெண்டு பொண்ணுங்க…” என்றவர் ஏன் கேட்கிறாய் என்பதுபோல் பார்க்க,

‘ஓ.. அப்போ வந்தது ரெண்டாவது..’ என்று எண்ணியவள் “ஒண்ணுமில்ல சும்மாதான்..” என்றுவிட்டு, நகர,

“பொன்னி.. உண்மையை சொல்லு எதுவும் பிரச்சனையா??” என்று மங்கை கேட்டபடி பின்னேயே வர,

“இதுவரைக்கும் இல்லை..  ஆனா இனிமே ஆகுமான்னு தெரியாதும்மா..” என்றவள் “சரி அசோக்குக்கு எல்லாம் எடுத்து வச்சிருக்கியா.. பஸ் ஆறு மணிக்கு இருக்கு.. இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும்..” என,

“எடுத்து வச்சிருக்கேன் டி.. நானும் வர்றேனே..” என்றார் பாவமாய்..

“நீ வந்துட்டா.. அங்க வந்து அவன் சும்மா இருக்கவனையும் அழுது பேசி எதுவும் குழப்புவ. வேணாம்.. இங்க மாடு கன்னுக்குட்டி எல்லாம் யார் பார்ப்பா.. ரெண்டு நாளைக்கு தேவையான புல்லு எல்லாம் இருக்கு.. பார்த்துக்கோ.. நான் நாளன்னைக்கு மதியம் போல வந்திடுவேன்..” என்றவள் சென்னை கிளம்ப தயாரானாள்.

மங்கையின் சொந்த ஊர் இதேதான்.. முப்பது வருடங்களுக்கு முன் வாக்கப்பட்டு போனது பக்கத்து கிராமம்..அங்கே அவரின் கணவருக்கு பஞ்சாயத்தில் சிறு அரசாங்க உத்தியோகம்.. எளிமையான நிறைவான வாழ்வு இரண்டு பிள்ளைகளோடு என்று  இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அவரின் கணவர் இறந்திட, வேறு வழியில்லாது அங்கே இருந்த வீடு, கொஞ்சம் நிலம் எல்லாம் விற்றுவிட்டு தான் பிறந்த ஊருக்கு வந்து குடியேறினார்..

அசோக்கும், பொன்னியும் கல்லூரி படிப்பு வேலை  எல்லாம் சென்னையில் தான் என்றாலும், மங்கை இந்த ஊருக்கு வந்ததும் பொன்னி அம்மாவோடு இருந்துகொள்ள, அசோக் மட்டும் வாரம் ஒருமுறை இங்கே வந்து செல்வான்..   

ஆனால் இப்போதோ சூழல் அவன் வாரம் என்ன மாதம் ஒருமுறை கூட இங்கே வரமுடியாத நிலை.. ஆகையால் இந்த இரண்டு மாதங்களாய் பொன்னி அவனை காணவென்று இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வார விடுமுறை நாட்களில் சென்னை செல்கிறாள்..

இன்றும் அதுபோலவே கிளம்பி சென்றிட, புகழேந்தியோ ஊர் முழுவதும் அவளைத் தேடிவிட்டான்.. அவள் இங்கே இருந்தால் தானே கண்ணில் அகப்பட, தேடி தேடி கலைத்து, பின் வேறு வழியில்லாது வீட்டில் கேட்க,

“புகழ் அதல்லாம் நாங்க பார்த்துப்போம்.. நீயே எப்போவோதான் ஊருக்கு வர.. ரிலாக்ஸா இரு…” என்று அவனின் அப்பா சொல்லிட, ஜெயபாலோ “டேய் மாப்ள.. உனக்கு யார் சொன்னது பிரச்னைன்னு..” என்று வினவ,

அன்பரசி “மாமா.. வெள்ளிகிழமை பிள்ளைகள கூப்பிட தம்பிதான் போனான்.. அவ சொல்லிருப்பாளா இருக்கும்…” என்று சொல்ல,

இளங்கோவோ “உன் கார சரி பண்றது விட்டு நீயேன்டா இதெல்லாம் பார்த்துட்டு இருக்க..” என்றவன்

“ம்மா.. அவனை கவனிக்கிறதை விட்டுட்டு என்ன பண்றீங்க எல்லாம்..” என்றான் கொஞ்சம் எரிச்சலாய்..

புகழேந்திக்கோ அதைவிட கடுப்பாய் எரிச்சலாய் கோபமாய் இருந்தது.. என்னவோ ஒரு பிரச்சனை இருக்கிறது.. நடந்திருக்கிறது..

ஆனால் அதை இத்தனை நாள் சொல்லாது, இப்போது கேட்டும் சொல்லாது வீட்டினர் மற்றது எல்லாம் பேச,

“கொஞ்சம் எல்லாம் நிறுத்துறீங்களா??” என்று கத்திவிட்டான்..

“புகழு…” என்று மகராசி பார்க்க, “பின்ன.. நான் இந்த வீட்ல இல்லைன்னா நான் இந்த வீட்டு மனுஷன் இல்லையா?? என்னவோ நடந்திருக்கு.. ஆனா எதுவுமே சொல்லலை.. இப்போ நானா கேட்கிறப்போவும் சொல்லாம இருந்தா எப்படி??” என்று பார்க்க,

“பாவி மக.. இத்தன நாள் கழித்து ஊர்ல இருந்து வந்த புள்ளைக்கிட்ட என்னத்த சொல்லிவிட்டாளோ..” என்று மகராசி ஆரம்பிக்க,

“ம்மா.. என்ன பேச்சிது.. அன்னிக்கு ஃபோன்லயும் இப்படிதான் என்னவோ சொல்ற.. நம்ம வீட்லயும் பொண்ணுங்க இருக்காங்க.. அதை மனசுல வச்சு பேசு..” என்று புகழேந்தி பதில் கொடுக்க,

“புகழ்…” என்று அழுத்தமாய் அழைத்த மன்னவன் “இதைப் பத்தி யாரும் இங்க பேசவேணாம்னு இருக்கோம்..” என்றார்..

“யாருமா?? இல்லை நானாப்பா??” என்று புகழேந்தியும் அவரைக் காண, “எல்லாரும்தான்…” என்றவர் “எல்லாம் போய் வேலையைப் பாருங்க…” என்று எழுந்து செல்ல, மற்றவர்களும் அதுபோலவே செய்ய,

நித்யாதான் மெதுவாய் “என்ன இருந்தாலும் தம்பிக்கும் சொல்லனும்ல..” என்று இளங்கோவிடம் சொல்லிக்கொண்டு நடக்க,

“ஏன் வந்தவன் நிம்மதியா இருக்ககூடாதா..” என்று அவனும் சொல்லியபடி செல்ல, பிள்ளைகள் இருவரும் ஒருபக்கம் அமர்ந்தது விளையாடிக்கொண்டு இருக்க.. அமுதாவோ வீட்டில் இருக்கிறாளா இல்லையா என்றுகூட தெரியவில்லை..

புகழேந்தியோ பாதி பேச்சில் கடந்துபோனவர்களை  அனைவரையும் வெறித்துப் பார்த்து நின்றிருந்தான்..    

 

Advertisement