Advertisement

தூறல் – 9

மூன்று நாட்கள்  கண் மூடித் திறப்பதற்குள் ஓடிவிட, மஞ்சுளா மறுபடியும் தன் பெரிய மகனோடு பேசாது இருந்துகொண்டார். நல்லவேளை நிவினோடு பேசிக்கொண்டு தான் இருந்தார். அந்தமட்டும் நிவின் தப்பித்தான் .

அதிரூபன் முதல் இரண்டு நாள் பேசி பேசி பார்த்தான், பின்னே என் மீது எவ்வித தவறும் இல்லை என்று பேசாது இருந்துகொண்டான். அவனுக்குமே தான் எத்தனையை பார்ப்பது. பெண் பார்க்கப் போனது, பவித்ராவே அழைத்து வேண்டாம் என்று சொல்ல சொன்னது இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவனுக்கு கண்மணியை எப்படி அணுகுவது என்பது இன்னமும் ஒன்றும் புரியவில்லை.

முதலில் அவளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய எண்ணினான். ஒருவேளை நிஜமாகவே அவளுக்கு அந்த வரன் பிடித்திருந்தாள்..?? இந்த கேள்வி அவன் மனதினுள்ளே புகுந்து பேயாட்டம் போட்டது..

கையில் கட்டுப் போட்டுக்கொண்டு அவனால் எங்கும் போகவும் முடியவில்லை. வீட்டினில் இருந்தாலோ, அவனும் மஞ்சுளாவும் மட்டும், அவரோ முகத்தினை தூக்கியபடி இருந்தார். வேளா வேளைக்கு பார்த்து அனைத்தும் செய்பவர் அவனோடு பேசுவது மட்டுமில்லை.

மஞ்சுளாவின் ஆயுதம் இதுவே, பேசாது இருப்பது. முதல் ஒருமுறை வேலை செய்தது. ஆனால் இப்போது அதிரூபனும் அமைதியாய் இருந்துகொண்டான். அவனுக்கு யோசிக்க நிறைய இருந்தது.

நேரடியா போய் கண்மணியின் வீட்டினிலே கூட அவனால் பேசிட முடியும் தான். ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்க கூடாது அல்லவா.. அதுவும் அவளுக்கு ஏற்கனவே பேசி முடித்திருக்கும் நிலையில் சற்றே யோசித்து தான் செயல்பட வேண்டும் என்று எண்ணினான்..

அதன் பொருட்டே முதலில் கண்மணியின் மனநிலையை கணிக்க வேண்டும், அதற்கு அவளை காண வேண்டும், பின்னே கொஞ்சமாது கதைக்க வேண்டும். இந்த எண்ணம் வந்ததுமே.

‘ம்ம்ஹும்.. பேசிட்டாலும்… பார்வைல பதில் சொல்வா இல்லையோ முணுமுணுன்னு பேசிட்டு போவா…’ என்றுதான் தோன்றியது அவனுக்கு..

மனது லேசாய் கண்மணியை கடிந்தாலும், அவளது நினைவு வரவும் தானாய் ஒரு புன்னகை வேறு அவனுக்கு வந்து ஒட்டிக்கொள்ள, தானாக சிரித்துக்கொண்டான்..

அதே நேரம் இவனுக்கு ஜூஸ் போட்டு எடுத்துக்கொண்டு மஞ்சுளா அறைக்குள்ளே வர, இவனோ இதழில் கசியும் புன்னகையோடு, பார்வையில் பொங்கும் காதலோடு, ஒரு மோன நிலையில் இருக்க, மஞ்சுளாவோ தான் வந்ததை கூட கவனிக்காது அப்படியே அமர்ந்திருக்கும் மகனை வித்தியாசமாய் தான் பார்த்தார்.

கையில் இருந்த டம்ப்ளரை டங்கென்று டேபிளில் வைக்க, அப்போதும் அவன் அசைவதாய் இல்லை. அசைவது என்ன கண் இமை கூட அடிக்கவில்லை.

‘இவனுக்கு என்னாச்சு… தனியா சிரிச்சிட்டு இருக்கான்…’ என்று மஞ்சுளா இப்போது கொஞ்சம் அதிர்ச்சியாகவே பார்க்க, அவனையும் அறியாது அதிரூபன் பார்வையை திருப்ப, அவனின் பார்வை வட்டத்தில் மஞ்சுளா குழப்பமாய் நிற்பது கண்டு வேகமாய் தன் முக பாவனைகளை மாற்றிக்கொண்டான்..

‘என்னடா இது…’ என்று மஞ்சுளா பார்க்க,

‘என்னம்மா…’ என்று இவனும் பார்த்தான் ஒன்றுமே தெரியாதவன் போல்..

காதல் வந்தால் கள்ளத்தனமும் வந்துவிடும் போல. முன்னெல்லாம் மஞ்சுளாவிடம் எதையும் மறைக்காதவன் இப்போது பவித்ரா விசயத்தை கூட மறைத்துவிட்டான்.. இப்போது வரைக்கும் கூட சொல்லவில்லை அவன்..

பவித்ரா, அதிரூபனை அழைத்து பேசியது பற்றி சொல்லாமலே, மருத்துமவனை விட்டு வந்தவன் அன்று இரவே “ம்மா.. எனக்கு இந்த பொண்ணு பிடிக்கல… அதுனால இந்த கல்யாணம் வேணாம். அவங்க வீட்ல சொல்லிடுங்க…” என்றான் இது தான் என் முடிவு என்பதுபோல்.

சுப்பிரமணியும் சாந்தியும் சற்றே தள்ளி அமர்ந்திருக்க, நிவினும் மஞ்சுளாவும் தான் அதிரூபன் அருகே அமர்ந்திருந்தனர். அவன் சொன்னது அனைவருக்குமே கேட்டாலும், அதனை நம்ப யாராலும் முடியவில்லை.

காரணம், பெண்ணை புகைப்படத்திலும் பார்த்தான் நேரிலும் பார்த்தான் என்று அவர்களாகவே நினைத்திருக்க, அவனோ அங்கெல்லாம் விட்டு இப்போது இவர்கள் சரி என்று சொன்ன பிறகு, இப்போது வேண்டாம் என்று சொல்லவும் அனைவருக்குமே அதிர்ச்சி தான்..

“டேய் ரூபன் என்ன சொல்ற??” என்று மஞ்சுளா கத்தியே விட்டார்.

நிவினோ இத்தனை நேரம் தன்னோடு தானே இருந்தான், இதுபற்றி ஒருவார்த்தை சொல்லவில்லையே என்று பார்க்க, அவனுக்குமே அதிரூபன் சொன்னது கொஞ்சம் அதிர்ச்சியாய் தான் இருந்தது.. மதியத்திற்கு மேல அதிரூபன் யோசனை செய்துகொண்டே இருப்பது போல் தான் இருந்தது.

நிவின் கூட “என்னண்ணா..” என்று கேட்டான் தான்.

“ஒண்ணுமில்ல டா சும்மா…” என்று சொன்னவன், வீட்டிற்கு வந்து இப்படி சொல்லவும், கொஞ்சம் அதிர்ச்சி கலந்த கோபம் அவனுள்.

அதைவிட மஞ்சுளாவிற்கு..

சுப்பிரமணியும் சாந்தியும் புரியாது பார்க்க, அதிரூபனோ  திரும்பவும் “ப்ளீஸ் ம்மா.. எனக்கு பிடிக்கல. அதுனால தான் எழுந்து வந்தேன்.. இனியும் நம்ம சொல்லாம இருந்தா தப்பாகிடும்.. சோ சொல்லிடுங்க…” என,

“என்னடா விளையாடுறியா??” என்றார் மஞ்சுளா கோபமாய்.

மகனுக்கு அடிப்பட்டு விட்டதே என்ற வருத்தம் எல்லாம் இப்போது காணாது போக, இவன் ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறான் என்று புரியாது அவனையே கேட்டார்.

“இல்லம்மா நான் நிஜமா தான் சொல்றேன். எனக்கு அந்த பொண்ணு வேணாம்.. செட்டாகும்னு தோணலை…”

“ஏன் இதை போட்டோ பார்த்தப்போவே சொல்லிருக்க வேண்டியது தானே..”

“ம்ம்ச் அதான் இப்போ சொல்லிட்டேன்ல ம்மா..” என்றான் ஒருவித சலிப்பாய்.

அதிரூபனின் இந்த சலிப்பே மஞ்சுளாவிற்கு மேலும் கோபத்தை கொடுக்க, “இல்ல.. நீ இந்த கொஞ்ச நாளா சரியே இல்ல.. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா ரூபன்..” என்று அவர் அழுத்தம் திருத்தமாய் கேட்கவும்,

வேகமாய் அதிரூபன் நிமிர்ந்து பார்த்தான். அம்மாவிற்கு எதுவும் தெரிந்திருக்குமோ என்ற ஐயம் அந்த நொடி அவன் மனதினில் வர, அவனின் கண்களும் அதே ஐயத்தை பிரதிபலிக்க, மூச்சு வாங்க, அவனை முறைத்த மஞ்சுளாவோ,

“இத்தனை நாள் நீ பண்ணது எல்லாம் சரி. அதுனால நான் எதுவும் சொல்லலை.. ஆனா அப்படியே எல்லாத்துக்கும் சும்மா இருக்க முடியாது ரூபன்..” என்றார் தீர்மானமாய்..

சுப்பிரமணியும் சாந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள, நிவின் தான் “ம்மா நீ கொஞ்சம் அமைதியா இரு, நான் பேசுறேன்..” என்றவன்,

“ண்ணா.. இப்போ ஏன் வேணாம் சொல்ற.. சொல்றதுன்னா காலையில கோவில்ல வச்சே சொல்லிருக்கணும் தானே..” என்று கேட்டான்..

அதிரூபன் தான் யார் கேட்டாலும் எதுவும் சொல்லக்கூடாது என்ற முடிவினில் இருந்தானே. ஒருநிமிடம் ஆகாது பவித்ரா அழைத்து சொன்னதை சொல்ல, ஆனால் தேவையில்லாது அவளின் பெயர் இங்கே அனைவரின் வாயிலும் அடுத்து அரைபடும். ஒருவேளை மஞ்சுளா ஒருவேகத்தில் பவித்ராவின் வீட்டிலேயே கூட இதனை சொன்னாலும் சொல்லலாம்..

அவர் சொல்லவில்லை என்றாலும் கூட, நாளை எதோ ஒரு ரூபத்தில் இவ்விசயம் வெளியே போகலாம். அது பவித்ராவிற்கு நல்லதாய் அமையுமோ இல்லை எப்படியோ எதுவென்றாலும் அவனுக்கு பவித்ராவின் வேண்டுகோளை வைத்து இதனை சொல்லிட விரும்பவில்லை.

பவித்ராவே அழைக்கவில்லை என்றாலும் இன்று அதிரூபன் இதனை தான் வீட்டினில் சொல்லியிருப்பான். அந்த உறுதி அவன் மனதில் இருந்தது. என்ன பவித்ராவின் காரணம் இன்னும் ஒரு ஊட்டமாய் போனது.

“பதில் சொல்லுண்ணா..”

“ம்ம்ச் என்னடா சொல்லு சொல்லுன்னு.. அதான் சொல்லிட்டேனே.. எனக்கு பிடிக்கல அவ்வளோதான்.. சும்மா சும்மா கேட்டாலும் இதான் பதில்…”  என்று முதல் முறையாய் நிவின் மீது எரிந்து விழுந்தான்.

இதுவரைக்கும் அதிரூபன் இப்படி செய்தது எல்லாம் இல்லை. அமைதியான பேர்வளி இல்லையென்றாலும் அதற்காக அடாதடி ஆளும் அல்ல அவன். வீட்டினில் அண்ணன் தம்பி இருவருக்கும் எப்போதுமே ஒரு ஜாலியான மனநிலை தான் இருக்கும். ஆனால் இன்றோ நிவினை இப்படி பேசிட, மஞ்சுளாவிற்கு அதுவும் வருத்தமாய் போனது.

“நிவின் நீ பேசாத..” என்றவர் “அப்போ இதான் உன் முடிவா??” என்றார் பெரிய மகனிடம்.

“ஆமா…”

“சரி எதுன்னால பிடிக்கல?? நான் தான் கேட்டேனே பொண்ணுகூட தனியா பேசுறியான்னு அப்போ வேணாம் சொல்லிட்டு இப்போ என்ன..”

“சிலதுக்கு எல்லாம் காரணம் சொல்ல முடியாதும்மா…” என்றான் அதிரூபன் வேகமாய்..

“ஓ…!!!!!” என்றவர் தன் அண்ணன் அண்ணி முகம் பார்க்க, அவர்களோ யாருக்கு என்ன சொல்வது என்று தெரியாது பார்த்துகொண்டு இருந்தனர்.

தங்கையின் பார்வையை உணர்ந்த சுப்பிரமணி “ரூபன் நீ சொல்றபடியே வர்றோம்னு வை.. ஆனா பொண்ணு வீட்ல நாங்க காரணம் சொல்லணுமே..” என்று சரியான பாயிண்டை பிடிக்க,

“மாமா அவங்க வீட்டு நம்பர் கொடுங்க நான் பேசிக்கிறேன்..” என்றான் பட்டென்று..

வீட்டினர் ஒவ்வொருவரும் ஒன்றொன்று சொல்ல சொல்ல, அதிரூபனின் பிடிவாதம் மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போனது. அவனும் தான் என்ன செய்ய முடியும் சூட்டோடு சூட்டாய் முடித்தால் தான் இதெல்லாம். ஆரப் போட்டு முடிக்கும் விஷயமல்லவே..

ஆக எத்தனை சூடாய் இருந்தாலும் தாங்கிக்கொண்டுத் தான் ஆகவேண்டும் என்ற திண்ணம் அவனுள். ஒருமுறை ஆழ மூச்செடுத்து விட்டு, கண்களை இறுக மூடித் திறந்தவன்,

“ஒண்ணு நீங்களே நல்லவிதமா சொல்லி நிறுத்துங்க, இல்லையா என்னை பேசவிடுங்க.. அதுவுமில்ல இதான் முடிவுன்னா…” என்று பேச்சை நிறுத்தியவன், ஒருமுறை கட்டுப் போட்டிருந்த தன் கரத்தினையும், வீட்டினர் மற்றவர்களின் முகத்தினையும் பார்த்தவன்,

“கையை தான் அடிபட வச்சேன்.. அடுத்து எப்படி போய் எங்க விழுவேன் தெரியாது…” என்றான் பார்வையை எங்கே பதித்தபடி.

அவ்வளவுதான் அடுத்தநொடி அங்கே அப்படியொரு நிசப்தம், ஆனால் மஞ்சுளாவோ,       

“அண்ணா வேணாம்.. இவன் என்னவோ செய்யட்டும்.. விட்ருங்க.. என்னவோ ஆகிடுச்சு இவனுக்கு.. அதான் இப்படியெல்லாம் பண்றான்..” என்றுவிட்டு  கடைசியில் அழவே தொடங்கி விட்டார்

“ம்மா…” என்று நிவின் கையை பிடிக்க,

“ம்ம்ச் விடு டா.. இவனுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு பாக்கணும்னு ஆசைப்பட்டது தப்பாடா.. உனக்கு பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு எத்தனை தடவ கேட்டேன்.. அப்போ சொல்லிருந்தா நம்ம ஏதாவது சொல்லிருக்க போறோமா டா..” என்றவர் இன்னமும் அழ,

“அம்மா…” என்று அதிரூபனும் அவரின் அருகே வர,

“நீ பேசாத..” என்று விரல் நீட்டி எச்சரித்தவர், அதன்பின் அவனோடு பேசவேயில்லை.

அத்தனை நேரம் பேசாதிருந்த சாந்தி தான் “என்ன ரூபன் இதெல்லாம். என்கிட்டே கூட ஒருவார்த்தை சொல்லிருந்தா நான் நேரம் பார்த்து எதுவும் சொல்லிருப்பேனே..” என்று தன்மையாய் கேட்க,

“நான்.. நான் யோசிச்சு முடிவு பண்ண வேணாமா அத்தை..” என்றான் இவனும்..

“அண்ணி வேணாம்.. இனிமே அவன்கிட்ட யாரும் எதுவும் கேட்கவேணாம்.. அவன் இஷ்டம் தானே எல்லாம் இனிமே.. என்னவோ செஞ்சுக்கட்டும்..” என்று மஞ்சுளா எழுந்து உள்ளே சென்றுவிட,

சுப்பிரமணி வேறு வழியே இல்லாததால், பவித்ராவின் வீட்டிற்கு அழைத்து, அதிரூபனுக்கு சின்னதாய் விபத்து நடந்துவிட்டதாகவும், ஜோசியரிடம் கேட்டதற்கு அவர் இப்போதைக்கு இந்த திருமண பேச்சே வேண்டாம் ஆறு மாதங்கள் போகட்டும் என்றுவிட்டதாகவும் சொல்லி, கூடவே ஒரு மன்னிப்பையும் கேட்டுவிட்டு வைக்க, அதுநேரம் வரைக்கும் அதிரூபன் மூச்சினை இழுத்து பிடித்து அமர்ந்திருந்தான்.

பேசி முடிக்கவும், சுப்பிரமணி எழுந்து சென்றுவிட, சந்தியும் மஞ்சுளாவை பார்க்க சென்றுவிட நிவினும் அதிரூபனும் மட்டுமே இருந்தனர்.. நிவின் அண்ணனின் முகத்தினையே பார்த்தபடி இருக்க, சிறிது நேரத்தில் அதிரூபனே

“என்னடா..??” என்றான்.

“உனக்கு என்னண்ணா ஆச்சு??”

“ஒண்ணுமில்ல ப்ரீயா விடு..” என்றவன் எழுந்து அறைக்கு செல்ல, பின்னோட நிவினும் வந்தான்..

“இப்போ என்னடா???” என்று அதிரூபன் சற்று சத்தமாகவே கேட்க, “இல்ல கைல அடிபட்டு இருக்குல அதான் ஹெல்ப்…” என்று நிவின் இழுக்க,

“ம்ம் ம்ம்.. மனசுல எதுவும் வச்சிக்காத. எல்லாமே நல்லதுக்கு தான்..” என்று அதிரூபன் சொல்ல, ‘யாரோட நல்லதுக்கு…’ என்று நிவின் கேட்க நினைத்தாலும் அமைதியாய் இருந்துகொண்டான்.

பேசி பேசி பிரச்சனையை வளர்ப்பானேன்.. அனைவரையுமே அமைதியாகி விட்டால், மனதினில் ஒரு தெளிவு கிடைக்கும் என்றெண்ணி நிவின் அடுத்து இதனைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் மஞ்சுளாவோ அதிரூபனோடு பேசவேயில்லை.

சுப்பிரமணியும் சாந்தியும் மறுநாள் கிளம்ப, “மாமா நான் கடைக்கு போறது வரைக்கும் நீங்க போய் பார்த்துக்கோங்க..” என்று அதிரூபன் சொல்லி அவர்களை இருக்க வைத்துவிட்டான். 

நிவின் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து இருந்தான், பின் மூன்றாம் நாள் கட்டு பிரித்து வேறு கட்டு போட்டு வந்த பின்னே,

“நீ ஆபிஸ் போ நிவின்.. எத்தனை நாள் இப்படியே இருக்க முடியும்.. நீ கிளம்பு..” என்று அனுப்பிவிட்டான் பெரியவன்.

புதிதாய் செய்ய வேண்டிய கடிகார ஆர்டர்களை மட்டும் என்ன ஏதென்று விபரம் பார்த்தவன், ஓரளவு அதெல்லாம் முடிக்கும் தருவாயில் தான் இருப்பதால், கஸ்டமர்களுக்கு அழைத்து விபரம் சொல்லி சற்று அவகாசம் கேட்டுக்கொண்டான்.

எல்லாம் சரிதான் ஆனால் திரும்பவும் மஞ்சுளாவின் பார்வையில் மாட்டிக்கொண்டானே என்ன செய்ய??? அவனை ஒருவித சந்தேகமாய் பார்த்தபடி நின்றிருந்தார்..

அவனோ ஒன்றும் அறியாதவன் போல மற்றொரு கரத்தினால் ஜூஸை எடுத்து பருகியவன், டம்ப்ளரை வைத்துவிட்டு, உறக்கம் வருவதுபோல் கண்களை மூடிக்கொண்டான்.

மஞ்சுளா இரண்டு நிமிடம் நின்றவர், அவன் எதுவுமே அசையாது இருக்கவும் மனதில் பலவேறான சிந்தனைகளோடு வெளியே செல்ல, இவனோ மனதினுள்ளே ‘சாரிம்மா…’ என்றும் வேறு சொல்லிக்கொண்டான்.

சத்தமாய் சொல்லியிருந்தால் கூட மஞ்சுளாவின் கோபம் கொஞ்சம் மறைந்திருக்குமோ என்னவோ..

அம்மாவை சமாளித்த நிம்மதியில், அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு அடுத்த இரண்டு நாட்களும் நகர்ந்திருக்க, அவனுக்கு கை பழையபடி அசைக்க வந்திருந்தது. அழுத்தி எந்த வேலையும் செய்ய முடியவில்லை என்றாலும், ஓரளவு அவனின் தேவைகளை அவனே பார்க்க முடிந்தது.

கட்டு பிரித்து வேறு கட்டு வேறு போட்டிருக்க, மகனின் உடல்நிலையில் தேறுதலை கண்ட மஞ்சுளா நிவினிடம் “கைல தானே அடி.. இப்போ பரவால தானே கோவிலுக்கு போயிட்டு வர சொல்லு..” என்று முணுமுணுத்துவிட்டு செல்ல, அது இவனின் காதிலும் விழுந்தது..

நிவின் இவனைப் பார்க்க, அதிரூபனுக்குமே எங்காவது போனால் கொஞ்சம் நன்றாய் இருக்கும்போல் இருக்க “கோவில்ல டிராப் பண்ணிட்டு நீ ஆபிஸ் போ..” என்றான்..

“வர்றப்போ…”

“ஆட்டோல வந்துப்பேன்.. இல்லையா மாமாவ வர சொல்லி வந்துக்கிறேன்..” என்றுசொல்ல, அண்ணன் தம்பி இருவரும் அதே மத்ய கைலாஷிற்கு கிளம்பினர்.

அதிரூபனுக்கு கிளம்புகையிலேயே என்னவோ மனது ஒருவித உணர்வு கொள்ள, ‘கடவுளே உன்னைப் பார்க்கத் தான் வர்றேன்.. ஆனா எனக்கு கண்மணியை கண்ல காட்டிடு..’ என்று வேண்டியபடியே கிளம்பினான்.

அதிரூபனின் வேண்டுதல் கண்மணிக்கு கேட்டதுவோ என்னவோ, கடவுளுக்கு கேட்டு, ததாஸ்து சொல்லிவிட்டார்..

கோவிலில் இறக்கிவிட்டு நிவின் அலுவலகம் சென்றுவிட, கோவிலினுள்ளே நுழையும் போதே அதிரூபனுக்கு இதயம் வேகமாய் அடித்துக்கொள்ள தொடங்கியது.. என்னடா இது என்று யோசித்தவனுக்கு, கண்மணி இங்கேதான் அவனுக்கு அருகே தான் இருப்பதுபோல் தோன்ற, பார்வை இங்கே அங்கே தேடியபடி நடந்து சென்றான்.

விநாயக பெருமானை வேண்டிவிட்டு, பிராகாரம் சுற்றி வருகையில் கண்மணி அங்கே ஒருபுறம் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். சாதாரணமாகவே கடந்தவன், பின்னே அது கண்மணி தான் என்று உணர்ந்த பிறகு,

‘ஆகா…. பிள்ளையாரப்பா… கோடானு கோடி நன்றிகள்…’ என்று எண்ணிக்கொண்டவன், பக்கவாட்டில் அவளைப் பார்க்க, அவளின் கவனமோ சிறிதும் அவன்மீது இல்லை..

முகத்தினில் லேசாய் ஒரு வாட்டம் இருக்க, பார்வை எல்லாம் வேறெங்கோ இருக்க, அப்படியே சிலையாய் அமர்ந்திருந்தாள்..

‘என்னாச்சு இவளுக்கு..’ என்றெண்ணியவனின் கால்கள் நேராய் அவளிடம் போக விழைய,

‘நோ நோ..’ என்று சொல்லிக்கொண்டவன், அடுத்த சுற்று சுற்றி, வேண்டுமென்றே கண்மணியை தாண்டும்போது, “ஹலோ… நீங்க பேசுறது சரியா கேட்கல.. நான் கோவிலுக்குள்ள இருக்கேன்..” என்று வராத அழைப்பில் பேசிக்கொண்டே மெதுவாய் நடக்க, அவனின் இந்த குரலில் கண்மணி எனும் சிலைக்கும் உயிர் வந்திட, பார்வை அவனைத் தீண்டியது.

அதிரூபனும் இலகுவாய் பேசிக்கொண்டே திரும்புபவன் போல திரும்ப, அப்போது தான் அவளைப் பார்ப்பது போல ஒரு சிநேக பாவ புன்னகை அவன் முகத்தினில் தவழ விட, அவளோ எப்போதும் போல் ஒரு சிரிப்பு.. ஆனால் இம்முறை அந்த புன்னகையில் ஒரு குழப்பமும் ஒதுக்கமும் இருந்தது போல் இருந்தது அதிரூபனுக்கு..

அவள் அமர்ந்திருந்த இடத்திற்கும் இவன் நின்றிருந்த இடத்திற்கும் மூன்று அடிகளே இடைவெளி இருக்கும், அவளைப் பார்த்தே வந்தவன், சாதாரணமாய் அலைபேசியை அடிபட்ட கரத்தினில் பிடித்து பாக்கெட்டினுள் வைக்கப் போக, அதுவோ லேசாய் வலி எடுக்க,

‘ஷ்ஷ்..’ என்று முனங்கியவன், கரத்தினை மாற்றிக்கொள்ள,

“அச்சோ… என்னாச்சு உங்களுக்கு??” என்று பதற்றத்துடன் கேட்டபடி அவனின் அருகே வந்திருந்தாள்..                            

                                         

 

          

 

       

Advertisement