Advertisement

தூறல் – 8

“அப்போ… எனக்காகவும் தீபாக்காகவும் தான் நீ வருணுக்கு சரின்னு சொன்னியா கண்மணி..” என்றுகேட்ட கண்ணனின் முகத்தினில் வருத்தமே மேலோங்கி இருக்க, அவனின் குரலுமே கூட அதை அப்படியே பிரதிபலித்தது.

ஆனால் கண்ணன் இப்படி கேட்பான் என்று சிறிதும் நினைத்துக்கூட பார்த்திராத கண்மணியோ அவளின் அண்ணனின் கேள்வியில் அதிர்ந்து தான் நின்றாள்.

“பதில் சொல்லு கண்ஸ்…” என்று கண்ணன் திரும்பக் கேட்க,

“ஆ.. அண்ணா..!!!” என்றவளுக்கு பேச்சே வரவில்லை..

அவளது முகத்தினில் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்த மாற்றங்களை கண்ட கண்ணனோ, கண்களை இடுக்கி,

“சோ இதான் ரீசன் அப்படிதானே….” என்றும் கேட்க, கண்மணியோ இல்லை என்று தலையை ஆட்டினாள்..

“பின்ன நான் கேட்டதுக்கு ஏன் இவ்வளோ ஷாக் ஆன??”

“நீ இப்படி கேட்பன்னு நினைக்கலைண்ணா அதான்..” என்றவளை இப்போதும் கண்ணன் நம்ப முடியாது பார்க்க,

“நிஜம்ம்மா…” என்று அழுத்தி சொன்னாள் கண்மணியும்.

“பின்ன.. பின்ன எப்படி வருண உனக்கு பிடிச்சதா??”

இந்த கேள்வியை வெவ்வேறு விதங்களில் கண்ணன் பல தடவை கேட்டு விட்டான். இன்று நேற்று இல்லை.. வருணின் புகைப்படம் இந்த வீட்டிற்கு வந்த நொடியில் இருந்து, கண்மணி சம்மதம் என்று சொன்ன நொடியில் இருந்து எப்படி எப்படி எல்லாம் வளைத்து வளைத்து கேட்க முடியுமோ அப்படி அப்படியெல்லாம் கேட்டுவிட்டான்..

என்னவோ கண்ணனுக்கு உள்மனதில் ஒரு எண்ணம்.. எண்ணம் என்பதனை விட, சொல்ல முடியாத ஒரு உணர்வு இருந்துகொண்டே இருந்தது. அது அன்று கண்மணியோடு அலங்காருக்கு சென்று வந்ததில் இருந்தே இருக்க, இப்போது கண்மணி வருணை திருமணம் செய்ய சம்மதம் என்று சொன்னதும் இன்னமும் அவ்வுணர்வு மேலெழும்பியது..

கண்மணியோ ‘இந்த கேள்வியை எத்தனை தடவ கேட்ப…’ என்று பார்க்க,

“ம்ம்ச் சொல்லு கண்ஸ்.. சும்மா சும்மா இப்படி பார்த்து வைக்காத.. நீ அமைதியா இருந்தாலும் உன்னை சும்மா விடமாட்டேன்…” என்று இப்போது கொஞ்சம் அழுத்தமாகவே கண்ணன் சொல்ல,

“ஹ்ம்ம்.. உனக்கு இப்போ என்ன ப்ராப்ளம்??” என்று கேட்டேவிட்டாள் கண்மணி..

“என்.. எனக்கு என்ன??”

“பின்ன ஏன் ண்ணா இவ்வளோ கேள்வி உனக்கு?? போட்டோ பார்த்தேன் நல்லாருந்தார்.. நேர்ல பார்த்தோம் எல்லாருமே.. நீயும் தானே பார்த்த, தனியா பேச போனப்போ டீசன்ட்டா பேசினார்.. பேமிலி எல்லாம் ஓகேன்னு இருக்கு.. பின்ன இதுல நான் நோ சொல்ல என்ன இருக்கு??” என்று கண்மணியும் பொறுமை இழுத்து பிடித்தே கேட்க,

“அது.. அது இல்ல கண்ஸ்…” என்று தயங்கியவன் “எனக்கு என்னவோ மனசுல ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு.. அப்பா அம்மாவும் வேற அடுத்து ஆடுதுன்னு வேகமா முடிவு பண்ணிட்டு இருக்காங்களா அதான் என்னவோ ஒரு தயக்கம்..” என்றான் மறைக்காது..

அவனையே ஒருநொடி பார்த்தவள், “தயக்கம் இல்ல பயம்..” என்றுசொல்ல,

“பயமா…??!!” என்றான் இவனோ வியந்து..

“ம்ம்..”

“எ… எனக்கு என்ன பயம்??”

“எல்லாம் டக்குன்னு நடக்குதா.. அடுத்து நீ வேற உன் விசயம் வீட்ல பேசணுமா.. அதான் என்னாகுமோ ஏதாகுமோன்னு பயம்..” என்று கண்மணி விவரமாய் அங்கே சுத்தி இங்கே சுத்தி கண்ணனின் காதல் விசயத்திற்கு வந்துவிட,

“ம்ம்ம்…” என்று தலையை ஆட்டியவன், “நீ பயங்கரமான ஆளு தான் கண்ஸ்.. அமைதின்னு நினைச்சேன்.. ஆனா பயங்கர அழுத்தம்..” என்று தங்கையை சொல்ல, எப்போதும் சிந்தும் சிரிப்பை மட்டும் சிந்திக்கொண்டாள்.

“எல்லாத்துக்கும் சிரி…” என்றவன், “ ஆனா இப்பவும் சொல்றேன்.. எந்த முடிவா இருந்தாலும் யோசிச்சு எடு..” என்றுசொல்லியபடி அவளின் அறையில் இருந்து கண்ணன் வெளிவர,

“நீயும் யோசி.. வீட்ல எப்படி சொல்றதுன்னு…” என்றபடி அவனோடு வந்தவள், கண்ணன் அறை வாசலை தாண்டவும், கதவினை அடைத்துக்கொண்டு அப்படியே அதன்மீது சாய்ந்துகொண்டாள்..

சிறிது நேரம் அப்படியே நின்றவளுக்கு கோவிலில் நடந்தவையே கண்முன்னே வர, மனது என்னவோ ஒரு நிலை இல்லாது இருப்பது போலிருந்தது. இத்தனை நேரம் அமைதியாய் இருந்த மனது இப்போது ஏன் இப்படி எண்ணுகிறது என்று தெரியவில்லை அவளுக்கு..

ஒருவேளை கண்ணன் வந்து பேசியதாலா??

இல்லவே இல்லை என்று அடித்து சொன்னது அவளது மனம்..

கண்மணியும், வருணும் சிறிது நேரம் பேசிவிட்டு, பெரியவர்கள் இருந்த பக்கம் செல்ல, இரண்டு வீட்டு ஆட்களுமே கொஞ்ச நேரத்தில் “என்னப்பா முடிவு பண்ணிருக்கீங்க…” என்று கேட்க,

சியாமளாவும் மகளிடம் “கண்மணி உனக்கு சம்மதமா..” என்று காதை கடித்தார்..

அவளோ ஒருநொடி யோசித்தவள் “உங்க எல்லாருக்கும் சரின்னா எனக்கும் சரிதான் ம்மா..” என்றுவிட,

அந்த பக்கம் வருண் என்ன சொன்னானோ “ரொம்ப சந்தோசம்ப்பா..” என்ற மூர்த்தியின் குரலே இவளின் காதில் விழுந்தது..

அதன் பின் வழக்கமான பேச்சுக்கள் இருக்க, சற்று நேரத்தில் வருண் வீட்டினர் எல்லாம் கிளம்பிவிட, நிவின் இவர்களை தேடிக்கொண்டு வந்தான்.

நிவினைப் பார்த்ததுமே சிரித்தவள், அவனை அப்பா அம்மா கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைக்க,  சடகோபன் அவனை கேள்வியாய் பார்ப்பதை உணர்ந்துகொண்டவன் “அதொண்ணுமில்ல அங்கிள் எங்க அண்ணனுக்கும் இன்னிக்கு பொண்ணு பார்க்க வந்தோம்.. இப்போதான் பேசி முடிச்சோம்.. கண்.. கண்மணிய பார்த்தேன்.. அதான் பேசிட்டு…” என்று அவன் சொல்லி முடிக்குமுன்னே,

“ஓ.. அப்படியா சந்தோசம் ப்பா.. கண்மணிக்கும் பேசி முடிச்சாச்சு…” என்றார் சடகோபன்..

ஆனால் கண்மணிக்கோ நிவின் சொன்ன செய்தியே மனதினில் ஓடியது.. அப்படியே அதிரூபன் இருக்கிறானா என்று அவளின் பார்வையும் இங்கே அங்கே என்று ஓட, அவனை என்ன தேடியும் காணவில்லை.. அவளால் அதனை கேட்கவும் முடியாதே, ஆக வெறுமெனே நின்றிருந்தாள்.

நிவின் சில நொடிகள் பேசிவிட்டு “வாழ்த்துக்கள் கண்மணி…” என்ருசொல்லியும் விட்டு நகரவும், தான் இவர்கள் கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.

அவனும் அவனின் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னான். நிவின் என்னவோ அதிரூபனிடம் தன் மகிழ்ச்சியை பங்குகொள்ளவே அப்படி பேசியது. ஆனால் அதன்பின் நடந்த விஷயங்கள் எதுவும் மகிழ்ச்சியானது இல்லையே..

அதிரூபன் மருத்துவமனையில் இருப்பது மகிழ்வான விசயமா என்ன??

கண்ணாடி மேஜையோடு குஸ்திப் போட்டால், நட்டம் யாருக்கு?? அடி யாருக்கு படும்.. கண்ணாடி சிதறும் தான் ஆனால் அதன் அடையாளங்கள் சிவப்பு நிற குருதியோடு நம் கையில் அல்லவா வழிந்தோடும்..

அப்படியே ஆனது அதிரூபனுக்கு.. அவனின் நல்ல நேரமோ என்னவோ கடையில் வேலை செய்பவர் அங்கே வந்துவிட, அவர் பதறி “அய்யயோ என்ன சார் ஆச்சு…??” என்று கேட்பது தான் நிவினுக்கு கேட்டது.

அதிரூபன் தான் பேசவேயில்லையே..

அவனோ “அண்ணா.. அண்ணா.. என்னாச்சு..” என்று கத்த, அதிரூபனோ பதிலே சொல்லவில்லை..

அவன் அப்படியே நிற்பதை பார்த்த கடை ஆள் தான் அதிரூபனின் மற்றொரு கரத்தில் இருந்த போனை வாங்கி “சார், சாருக்கு கையில அடி.. நான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்…” என்று வேகமாய் மொழிந்துவிட்டு,

அதிரூபனையும் “சார் வாங்க சார் போலாம்..” என்றுசொல்லி உலுக்க, அதன் பின்னே அவனுக்கு சுய நினைவு வந்தது..

அதன் பின்னே  தான் வலியும் உணர முடிந்தது…

அந்த நேரத்திலும் கூட “கண்மணி…” என்று அவனின் இதழ்கள் முணுமுணுக்க,

“சார் சார் வாங்க சார் போகலாம்..” என்று அந்த நபர் இழுக்காத குறையாய் இழுக்க,

“ம்ம்ச்…” என்ற சலிப்போது கையினை பார்த்தவன், அவனின் வலியை முகத்தில் காட்டாதவாறு கிளம்பிப்போனான்..

இதேது வீட்டினர் என்றால் எதுவும் பேசியிருப்பானோ என்னவோ, ஆனால் பாவம் தனக்காக பதறி பரிவு காட்டும் நபரிடம் என்ன செய்வது.. அருகே இருந்த மருத்துவமனையில் அதிரூபனை சேர்த்துவிட்டு, நிவினுக்கு அழைத்து விபரம் சொல்லப்பட, அவனோ அதற்குள் கடைக்கே வந்துவிட்டான்..

அழைப்பு வந்ததுமே மருத்துவமனைக்கு போக, அதுவரைக்கும் மஞ்சுளாவிற்கு எதுவும் தெரியாது.

“அண்ணனை பார்த்துட்டு வர்றேன்..” என்றுசொல்லி தான் நிவின் கிளம்பியிருந்தான்..

சரியாய் இவன் மருத்துவமனைக்குள் நுழையவும்  மஞ்சுளா அழைத்தவர் “என்னடா என்ன பண்றான்..?? போன குடு.. நான் போட்டதுக்கும் எடுக்கல.. இப்படிதான் செய்வானா??” என்று கேட்க,

“ம்மா… ம்மா ப்ளீஸ்.. ஒரு டென் மினிட்ஸ்ல நானே அண்ணன் கூட்டிட்டு வீட்டுக்கு வர்றேன்..” என்று வைத்தவன், அதிரூபனை தேடித் போக,

அவனோ அங்கே இருந்த அறை ஒன்றினில் ஒரு கையில் கட்டு போட்டும், மற்றொரு கையில் ட்ரிப்ஸோடும் படுத்திருந்தான்..

“ண்ணா.. என்ன ண்ணா…” என்று நிவின் பதறிப் போக,

அவனைப் பார்த்த அதிரூபனோ எவ்வுணர்வையும் வெளிக்காட்டாது சும்மா அப்படியே பார்க்க,

“நிறைய ரத்தம் போயிடுச்சு சார்.. சாயங்காலம் வரைக்கும் ட்ரிப்ஸ் போடணும் சொல்லிருக்காங்க…” என்றார் அழைத்து வந்தவர்..

“ர..ரத்தம்… எப்.. எப்படிண்ணா?? என்னாச்சு..” என்று அப்போதும் நிவினின் பார்வை அதிரூபன் மீதே இருக்க,

“க…” என்று அவர் சொல்லும் போதே, அதிரூபன் அவரை ஒரு பார்வை பார்த்தவன் “கண்ணாடி டேபிள்ல இடிச்சிட்டேன்..” என்றான் வேகமாய்..

“டேபிள்ல இடிச்சா.. இப்படியா ஆகும்..”

“ம்ம்ச் இப்போ என்ன உனக்கு?? ஆகிடுச்சு அவ்வளோதான்…” என்று அதிரூபன் எறிந்து விழ,

ஒருவேளை வலியினால் இப்படி பேசுகிறானோ என்றெண்ணிய நிவின் “அண்ணா நீங்க போங்க.. அங்க கடையில ஒரே சல சலப்பு.. போய் கொஞ்சம் பார்த்துகோங்க.. ஆள் விட்டு மேல கிளீன் பண்ணிடுங்க..” என்று அவரிடம் சொல்லி அனுப்பிவிட்டு

“என்னண்ணா..??” என்று திரும்ப கேட்டபடி அதிரூபனிடம் வந்து அமர்ந்தான்..

“என்னடா??”

“உண்மைய சொல்லு.. டேபிள்ல இடிச்சா இப்படியா ஆகும்?? நீ என்னவோ பண்ணிருக்க.. நானும் பார்த்தேன் நீ கோவில்ல இருந்த சரியில்ல.. இங்க பாரு உனக்கு இந்த பொண்ணு பிடிக்கலைன்னா அதை வெளிப்படையா சொல்றதுக்கு என்ன??” என்று நிவின் மனதில் பட்டதை கேட்டேவிட,

“ம்ம்ச்…” என்று சலிப்பு மட்டுமே அதிரூபனிடம் இருந்து பதிலாய் வந்தது.

அவனையே பார்த்த நிவின் “நீ… உன்.. உன் மனசுல வேற…” என்று கேட்கும்போதே, திரும்ப மஞ்சுளா அழைத்துவிட்டார்..

“ம்மா என்னம்மா…??” என்று நிவினும் இப்போது ஒருவித எரிச்சலில் கேட்க,

“என்னதான் டா பண்றீங்க ரெண்டு பெரும்.. பாதியில ரூபன் கிளம்பி போனான்.. அவனை பார்க்க போன நீயும் இன்னும் வரலை.. என்னதான் டா பிரச்னை உங்களுக்கு…” என்ற மஞ்சுளாவின் குரலில் அப்படியொரு வலி..

அதிரூபனை நிவின் பார்க்க, அவனோ ‘சொல்லாத…’ என்று இதழசைத்தான்.

“அதும்மா… அண்ணனுக்கு வேலை..”

“என்னை நம்ப சொல்றியா??”

“இல்லம்மா நிஜமா…” என்று நிவின் சொல்லும்போதே “இங்க பாரு இன்னும் பத்து நிமிசம்தான் ரெண்டுபேரும் இங்க வர்றீங்க.. இல்லை நான் கடைக்கு வருவேன்..” என்று மஞ்சுளா சொல்ல,

இதற்குமேலும் சொல்லாமல் விடுவது சரியில்லை என்றெண்ணி “அதும்மா அண்ணனுக்கு சின்னதா கையில அடி.. அதான் ஹாஸ்பிட்டல்…” என்று சொல்லும் போதே,

“டேய் என்னடா…” என்று எரிந்து விழுந்தான் அதிரூபனும்..

“நீ சும்மா இரு…” என்று அவனிடம் கடிந்தவன் “ம்மா.. அண்ணன் வீட்டுக்கு வர சாயங்காலம் ஆகும்.. நான் இருந்து கூட்டிட்டு வர்றேன்..” என்று நிவின் சொல்ல,

“டேய் என்ன சொல்ற நீ?? என்.. என்னாச்சு.. அவன்.. ரூபனுக்கு என்னாச்சு..” என்ற மஞ்சுளாவின் குரல் அழுகைக்கே போய்விட்டது.

மஞ்சுளாவின் அழுகை நிவினை என்ன செய்ததோ ‘நீயே பேசு’ என்று ஸ்பீக்கரை ஆன் செய்ய, அவனோ தம்பியை முறைத்தபடி “ம்மா..” என்றான்..

“ரூபன்.. ரூபன் என்னடா ஆச்சு???!!!!” என்று மஞ்சுளா அழ,

“ம்மா ப்ளீஸ்.. சின்ன காயம் தான்.. அழாத…” என்று இவன் சொன்னாலும் மஞ்சுளா அதிகமாய் தான் அழுதார்..

“ம்மா…!!!!”

“எந்த ஹாஸ்பிட்டல்..?? நான் வர்றேன்…” என்றவர் பிடிவாதமாய் நிற்க, நிவினும் எங்கே என்று சொல்லிவிட, அடுத்த இருபது நிமிடத்தில் மஞ்சுளா, சுப்பிரமணி சாந்தி மூவரும் இங்கே இருந்தனர்.

“இது சின்ன காயமா??” என்று மஞ்சுளா கேட்க, அதற்கு அதிரூபன் பதிலே சொல்லவில்லை..

“எப்படியாச்சு..??” என்று அடுத்த கேள்வி வர, அவனுக்கோ அங்கே மனது பாடாய் பட்டுக்கொண்டு இருந்தது..

“உன்னத்தான் டா.. கைல தானே அடி.. வாய் நல்லாதானே இருக்கு பதில் சொல்லு..” என்று மஞ்சுளா ஆற்றாமையில் பேச,

“மஞ்சு…” என்று சுப்பிரமணி அதட்டினார்.

“இல்லண்ணா… பொண்ணு பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து இவனுக்கு என்னாச்சோ தெரியலை.. ஒன்னொண்ணுக்கும் அப்படியொரு பிடிவாதம்.. இன்னிக்கும் எழுந்து வந்துட்டான்.. வந்தவனுக்கு இப்படின்னா நம்ம என்ன நினைக்கிறது…” என்றவர்,

“நீ உண்மையை சொல்லித்தான் ஆகணும் ரூபன்..” என்று மஞ்சுளா அழுத்தம் திருத்தமாய் சொல்லும்போதே, அதிரூபனின் அலைபேசி அலறியது..

ஒரு கையில் ட்ரிப்ஸ் போட்டிருக்க, மற்றொரு கையில் கட்டு போட்டிருக்க, அவனால் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றதும் நிவின் தான் அழைப்பினை ஏற்று, அதிரூபனின் காதினில் வைத்தான்..

புது எண்ணில் இருந்து அழைப்பு எனவும், சரி தொழில் விசயமாய் யாரும் இருக்கும் என்றெண்ணியே அதிரூபன் ‘ஹலோ…’ என்றுசொல்ல,

மறுதிசையில் பேசும் நபர் யார் என்று தெரியவும் அவனுக்குள் ஒரு சிறு அதிர்வு..

“ஹ.. ஹலோ…” என்று திரும்பவுமா அதிரூபன் சொல்ல,

“சார்.. நான் இப்போ நீங்க பார்த்துட்டு போனீங்களே பவித்ரா.. நான் தான்.. ப்ளீஸ் நான் சொல்றதை மட்டும் கேளுங்க..” என்றவளின் குரலில் ஒரு பதற்றம் தெரிய,

அதிரூபன் சுற்றி இருப்பவர்களை ஒருமுறை பார்த்தவன் பின் “ம்ம் சொல்லுங்க..” என்று சாதாரணமாய் கேட்பது போல் கேட்டான்..

“அது.. அது.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.. சோ ப்ளீஸ் இதை நீங்களே எப்படியாவது ஸ்டாப் பண்ணிடுங்க.. நான் வேற ஒருத்தர லவ் பண்றேன்.. வீட்ல என்ன சொல்லியும் கேட்கலை…” என்று அழுது விடுபவள் போல பவித்ரா பேச, இவனுக்கோ மெல்ல மெல்ல மனதில் இருக்கும் வெம்மை தனிவதாய் இருந்தது.

வீட்டினர் அனைவரும் இவனின் முகம் பார்த்து அமர்ந்திருக்க, அவனால் தெளிவாய் எதுவும் பேசவும் முடியவில்லை. இருந்தாலும் இந்த சந்தர்ப்பம் இதோடு அடுத்து கிடைக்காது என்றெண்ணி

“ஓ.. இதை நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாமே..” என்றான் வெறுமெனே கேட்பது போல்.

“இல்ல சார்.. எங்க வீட்ல என்ன சொல்லியும் கேட்கலை.. சரி கோவில்ல வச்சு, உங்கக்கூட எப்படியாவது பேசி உண்மையை சொல்லிடணும்னு தான் வந்தேன்.. ஆனா நீங்க கி.. கிளம்பிட்டீங்க… எனக்கு வேற வழி தெரியலை.. நீங்க உங்க சைட் இருந்து ஸ்டாப் பண்றது போல பண்ணிடுங்க.. ப்ளீஸ்..” என்கையில் அப்பெண்ணின் குரல் நடுங்கியதோ என்னவோ,

ஆனால் அவள் வேறு ஒருவனை காதலிக்கிறேன் என்று சொல்லும்போதே அதிரூபன் ஒரு முடிவிற்கு வந்துவிட்டான்..

ஊரான் காதலை ஊட்டி வளர்த்தால், அவனின் காதலை கொடைக்கானலாவது வளர்க்காதா என்ன??

இதழில் மெல்லியதாய் ஒரு புன்னகை தோன்ற “ஓகே.. நான் பார்த்துக்கிறேன்.. ஆல் தி பெஸ்ட்..” என்று பேசி முடித்தவன், நிவினைப் பார்க்க, அவனும் அண்ணனின் பார்வை புரிந்து அலைபேசியை எடுத்துவிட்டான்.

சாந்தியோ “மஞ்சு விடு எதுன்னாலும் வீட்ல போய் பேசிக்கலாம்..” என்றுசொல்ல,

மஞ்சுளாவோ “என்னவோ அண்ணி.. எனக்கு மனசு ஒரு நிலையாவே இல்லை…” என்றார் வருத்தமாய்..

அம்மாவின் வருத்தம் இவனை என்ன செய்ததுவோ “மாமா.. நீங்க அம்மா அத்தை எல்லாம் வீட்டுக்கு போங்க.. இன்னும் கொஞ்ச நேரம் தானே நானும் நிவினும் வந்திடுவோம்..” என்றான்..

மஞ்சுளாவோ தன் கேள்விகள் எதற்குமே பதில் சொல்லாது இப்போது கிளம்புங்கள் என்று சொல்லும் மகனை முறைக்க, “ம்மா.. சொன்னா கேளு ப்ளீஸ்.. வீட்ல வந்து நிதானமா பேசலாம்.. ”  என்று தன்மையாகவே சொல்ல,

“மஞ்சு கிளம்பு வா..” என்று சுப்பிரமணியும் சொல்ல,

நிவினோ “ம்மா நான் பார்த்துக்கிறேன்.. நீங்க எல்லாம் கிளம்புங்க..” எனவும், முகத்தை அழுந்த துடைத்தபடி மஞ்சுளா கிளம்பி சென்றார்..

அனைவரும் சென்றபிறகு நிவினோ “நீ கொஞ்சம் தூங்கு..” என்றுவிட்டு அவனும் அங்கிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொள்ள, அதிரூபனின் மனது வேகமாய் யோசிக்கத் தொடங்கியது..

இது அவனுக்கு கிட்டிய நல்லதொரு வாய்ப்பு.. எல்லா பக்கமும் பேசவேண்டுமே என்று எண்ணியிருந்தவனுக்கு, இப்போது ஒருவேளை மிச்சம் என்ற நிலை வரவும், இதை எப்படி வீட்டினில் சொல்வது, அந்த பெண்ணுக்கும் பாதகமில்லாமல் காரியத்தை முடிக்கவேண்டுமே என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

ஆம் அதிரூபன் ஒரு முடிவுக்கே வந்துவிட்டான்.. வீட்டினில் பேசிவிட்டு அடுத்து கண்மணியிடம் பேசவேண்டும் என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.   

‘பொண்ணு தானே பார்த்துட்டு போயிருக்காங்க.. சோ வாட்…??!!!’ என்ற எண்ணம் அவனின் மனதினுள்ளே வெகு வேகமாய் பரவியது.. ட்ரிப்ஸில் இருக்கும் மருந்து அவனின் குருதியோடு கலப்பது போல்.

Advertisement