Advertisement

தூறல் – 5

“ம்மா நான் டைலர் ஷாப் போயிட்டு வர்றேன்மா…” என்றுவந்து நின்ற கண்மணியை பார்த்து லேசாய் முறைத்து வைத்தார் சியாமளா.

“என்னம்மா??!!”

“நாளன்னைக்கு உன்னை பொண்ணு பார்த்து வர்றாங்க.. நீ என்னடான்னா வெயில்ல அலைஞ்சிட்டு வர்றேன்னு சொல்ற. உன் அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளோதான்..” என்றவருக்கு என்ன சொல்ல முடியும் அவளால்..

தீபா வேறு ‘வா வா…’ என்று சொல்லிக்கொண்டு இருக்க, கண்மணிக்கு நிஜமாகவே டைலர் கடைக்கு செல்லும் வேலை இருந்தது.. அன்று அவள் சொன்னதும் நிஜமே.. முதன்முதலில் அலங்கார் சென்றுவந்த போது வரும் வழியில் அவள் டைலர் கடைக்கு சென்று வந்தாள் தான்.

என்ன அவர் நான்கு நாட்கள் என்று சொன்னதை மட்டும் ஒருவாரம் என்று மாற்றி கூறியிருந்தாள். எப்படியும் தெரியும் தீபா தன்னை அழைப்பாள் என்று. அதுவுமில்லாது, கண்மணி என்ன கண்டாளா தன்னை பெண் பார்க்க வருவார்கள் என்று??

ஆனால் இப்போது அம்மா இப்படி சொல்லவும், என்ன சொல்வது என்று யோசிக்க, அதற்குள் தீபா அழைத்தேவிட்டாள்.. அம்மாவின் முன்னால் போனும் கட் செய்ய முடியாது. அது தேவையில்லாத இன்ன பிற கேள்விகளை எல்லாம் எழுப்பும்.. ஆனால் எடுத்து பேசினாலும் யார் என்ன என்ற கேள்விகள் வருமே.. இதற்கும் ஒரு யோசனை தான் அவளுக்கு.

“கண்மணி என்ன அப்படியே நிக்கிற.. போன் எடுத்து பேசு..” என்று சியாமளா சொல்ல,

“ம்ம்…” என்றவள் “ஹ… ஹலோ…” என்று மெதுவாய் சொல்ல,

“ஹே கண்ஸ்.. கிளம்பிட்டியா இல்லையா??” என்று கத்தாத குறையாய் கத்தினாள்..

“ஷ்… மெதுவா!!” என்று மெதுவாகவே சொன்னவள், சியாமளாவைப் பார்க்க அவரோ வேலையாய் இருந்தார்.

“தீப்ஸ்.. நீயே வாங்கிட்டு போயேன்…” என்று பேசியபடி கண்மணி நகர,

“என்ன கண்ஸ் நீ இப்படி சொல்ற?? நீயும் வாயேன்… உன் அண்ணனுக்கு நாளைக்கு பர்த்டே அன்னிக்கு அழகா விஷ் பண்ணி கொடுக்கலாம்னு பார்த்தா, நாளைக்கு அவனுக்கு மீட்டிங் இருக்காம்.. எங்கயும் வர முடியாதுன்னு சொல்றான்.. அட்லீஸ்ட் உன்கிட்ட கொடுத்து கொடுக்க சொன்னா, நைட் நீ விஷ் பண்றப்போ கொடுத்திடுவ தானே…” என்றாள் தீபா பாவமாய்..

அவள் சொல்வதும், அவளின் எதிர்பார்ப்பும் கண்மணிக்கு புரிந்தாலும், அதனை வெளியே சொல்ல முடியுமா என்ன?? தீபாவை கண்மணிக்கு பிடிக்கும் என்பதையும் தாண்டி, இப்போதெல்லாம் அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.

அவளின் வீட்டிலும் தான் வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கண்ணனோ கண்மணிக்கு அமைந்த பின்னே தான் வீட்டிலேயே சொல்லவேண்டும் என்றுவிட்டான்.. தீபா இரு பக்கமும் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலைதான் எப்போதும்..

எப்போதாவது மனது கேளாமல் இவளிடம் புலம்புவாள். “அட்லீஸ்ட் நான் எங்க வீட்ல சொன்னாலாவாது இவங்க எனக்கு மாப்பிள்ளை பார்க்காம இருப்பாங்க தானே கண்ஸ்.. ஆனா அந்த பெரிய கண்ஸ் எதுக்குமே விடமாட்டேங்கிறான்.. நான் என்னதான் செய்ய..” என்று அவள் கவலைப் படுகையில்,

‘கடவுளே, இவன்களுக்காகவாது எனக்கு சீக்கிரம் அமையணுமே…’ என்று வேண்டிக்கொள்வாள் கண்மணி.

ஒருபக்கம் அண்ணனை எண்ணி அவளுக்கு பெருமையாய் இருந்தாலும், இன்னொரு புறம், ஒரு பெண்ணாய் அவளுக்கு தீபாவின் உணர்வுகள் நன்கு புரியவும், அண்ணனின் மீது கோபமும் வந்தது. அரிதில் கோபமே வராத கண்மணிக்கு கூட கோபம் வருகிறது என்றால், அது இந்த விசயத்தில் தான்.

அவளுக்குமே கண்ணன் இப்படி அமைதியாய் இருப்பதில் அர்த்தமில்லை என்பதாகத் தான் பட்டது. அவ்வப்போது கண்ணனோடு தனியே பேசும் வாய்ப்புகள் கிடைத்தாள் கண்டிப்பாய் கேட்கவும் செய்வாள்.

அப்போதெல்லாம் அவனும், “ப்ளீஸ் கண்ஸ்… என் நிலை எனக்குதான் புரியும்.. வீட்ல சொல்ல ஒரு நிமிஷம் ஆகாது.. ஆனா அடுத்து தேவையில்லாத பேச்சு எல்லாம் வரும்.. ஒருத்தரை ஒருத்தர் வார்த்தையால காயப்டுத்துற நிலை வரும்.. அது வேண்டாம்னு நினைக்கிறேன்..” என்பான்..

அவன் சொல்வதும் சரிதான். ஆனால் இப்போது தீபா சொன்னதை கேட்டு, கண்மணிக்கோ ‘ஏன் இந்த அண்ணன் இப்படி பண்றான்…’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.

“ஹலோ… ஹலோ… கண்ஸ்… லைன்ல இருக்கியா???” என்று தீபா கத்திக்கொண்டு இருக்க,

“ம்ம்…” என்றுமட்டும் சொன்னாள்..

“என்ன டி ம்ம்… வர்றியா இல்லியா???”

“இரு ஒரு டென் மினிட்ஸ்…” என்று வைத்தவள், திரும்பவும் சியாமளாவிடம் செல்ல, அவரோ “என்னடி டைலர் ஷாப் போகலையா??” என்றார் இவளைப் பார்த்து.

அவர் சொன்னதை கேட்டதும் கண்மணியின் கண்கள் லேசாய் அதிர்ச்சியில் விரிய “என்ன கண்மணி…?? போறேன்னு சொல்லிட்டுத்தானே வந்து நின்ன?? இப்போ என்ன?? அப்பா வர்றதுக்குள்ள போயிட்டு வா..” என்றவர்,

“ஹா அப்புறம்.. முகத்துக்கு எதுனா பண்ணிட்டு வா.. நாளன்னைக்கு பளிச்சின்னு இருக்கும்தானே..” என்றவருக்கு வழக்கம் போல, ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டாள்..

‘ஹப்பாடி…’ என்றுதான் இருந்தது அவளுக்கு.. இம்முறை நடந்து செல்லாது, அவளின் ஸ்கூட்டியை எடுத்துக்கொள்ள, சொன்னதுபோலவே பத்தே நிமிடத்தில் அலங்கார் சென்றுவிட்டாள்..

எப்படியும் தீபா மேலே கடிகார பிரிவில் தான் இருப்பாள் என்று தெரியும், ஆக நேராய் அங்கே போக, அங்கேயோ தீபா இல்லை அதிரூபன் மட்டுமே இருந்தான்.

தீபா இல்லை என்றதுமே, அவளில் இருந்த வேகம் குறைந்து, அதிரூபன் மட்டுமே இருக்கவும் ஒரு தயக்கம் பிறக்க, உள்ளே நுழைவதா இல்லை அப்படியே கீழ இறங்குவதா என்று யோசித்து நின்றாள் கண்மணி.

கண்ணாடி கதவுகளை தள்ளும்போதே அதிரூபன் கண்மணியைப் பார்த்துவிட, அடுத்தநொடி ஏனென்று தெரியாது அவனின் இதயம் கொஞ்சம் சப்தமாய் வேகமாய் துடித்தது நிஜம்.   உள்ளே வருவாளோ என்று அதிரூபன் பார்க்க,

அவளோ தீபா இல்லை என்றதுமே, நொடிப்பொழுது தயங்கியவள், இவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, திருப்பிப் போகப் பார்க்க, ‘போகிறாளோ…’ என்று தொன்றவுமே அதிரூபன் “உள்ள வாங்க…” என்று அழைத்துவிட்டான்..

அழைக்கவேண்டும் என்று அவன் அந்த நொடிக்கு முதல் வரைக்கும் கூட நினைக்கவில்லை. ஆனால் அழைத்திருந்தான். தீபா வந்தது அவனுக்கும் தெரியும். கண்மணி வர நேரமாகும் என்பதால், கீழ் தளத்தில் இருப்பதாக கூறிவிட்டு சென்றிருந்தாள். அது தெரியாது கண்மணி நேராய் மேலே வந்திட, அவள் வந்து திரும்புகிறாளே என்றுதான் ஆனது அவனுக்கு.. 

அதிரூபனின் குரல் கேட்டதுமே, நின்று அவனைப் பார்த்தவள் “இல்ல…” என்று லேசாய் தயங்க,

“உங்க பிரண்ட் கீழ்தான் இருக்காங்க.. நீங்க வந்தா கூப்பிட சொன்னாங்க…” என்று அவளை போகவிடாது அவனாய் ஒரு காரணம் சொல்ல,

“ஓ!!” என்று இதழ் குவித்தவள், மெதுவாய் அவனை நோக்கி உள்ளே வர, அதற்குள் கீழ் தளத்திற்கு அழைத்து, தீபாவை மேலே வர சொல்லுமாறு சொல்லிக்கொண்டு இருந்தான் அதிரூபன்..

பார்வை அனைத்தையும் கண்மணி மீது இருந்தாலும், பேசிவிட்டு வைத்தவன், கடிகாரத்தை எடுத்து அவள் முன்னே வைக்க, அதனைக் கண்டவளோ ‘வாவ்..!!!’ என்று அடுத்து இதழசைக்க,

அப்போதும் அவன் மனம் ‘பேசவே மாட்டாளோ…’ என்றுதான் எண்ணியது.

கண்மணி கேட்டதுதானே இது.. அவன் கை கடிகாரம் போன்றே இல்லை இல்லை அதன் சாயலில் ஒன்று செய்து தர முடியுமா என்றுதானே கேட்டாள்.. ஒருவேளை இதனை தீபா கேட்டிருந்தால் அவன் சம்மதம் சொல்லியிருப்பானோ என்னவோ?!!

ஆனால் கேட்டது கண்மணி ஆயிற்றே..

கண்ணனுக்கான ப்ரேத்யேக கடிகாரத்தை பார்க்கவுமே கண்மணியின் கண்கள் அடுத்து நோக்கியது அதிரூபனின் கையில் இருந்த அவனின் கடிகாரத்தை தான்.. அவளின் பார்வை கண்டே அவளின் எண்ணம் புரிந்தவனாய், மெதுவாய் ஒரு புன்னகை சிந்தி தன்னுடைய கை கடிகாரத்தை கழட்டி அவளிடம் நீட்டினான்..

முகத்திற்கு நேரே திடீரென அவன் கடிகாரத்தை நீட்ட, கொஞ்சம் அதிர்ந்து தான் பார்த்தாள் கண்மணி.. பார்வை மட்டும் அவனை நிமிர்ந்து நோக்க, அவள் கண்ணில் தெரிந்த அதிர்ச்சி கண்டு,

“நீங்கதானே என்னோடது மாடல்ல வேணும் சொன்னீங்க??” என்றான் சிரிப்புடனே..

அவன் சொன்னதும், அவளுக்குமே முகத்தினில் புன்னகை விரிந்திட,  அவன் நீட்டிய கடிகாரத்தை வாங்கிக்கொண்டாள். ஆனால் இரண்டையும் வைத்து அவள் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அவன் கொடுத்ததற்காக சும்மா வாங்கிக்கொள்ள,

“ஹே கண்ஸ்…” என்றபடி தீபாவும் மேலே வந்துவிட்டாள்..

தீபாவின் குரல் கேட்டதுமே திரும்பியவள், “நீ இங்க இருப்பன்னு வந்தேன் தீப்ஸ்…” என்றாள் மெதுவாய்.

“கீழ வருவன்னு நான் அங்க இருந்தேன்..” என்று சிரித்தவள், “வாட்ச் பார்த்தியா??” என்றாள் ஆவலோடு..

“ம்ம்…” என்று தலையை கண்மணி ஆட்ட, அவளின் கையில் இருந்த அதிரூபனின் கடிகாரம் கண்டு, “இதென்ன??” என்றாள்.

‘இவரோடது…’ என்று விரலினை அவனின் புறம் காட்டியவள், “ஓ… மேட்ச் பார்த்தியா…” என்ற தீபா தான், இரண்டு கடிகாரத்தையும் பார்க்க, அதற்குள் கண்மணி அவனிடம் அவனின் கடிகாரத்தை கொடுத்துவிட்டாள்.

‘என்னடி….’ என்று தீபா பார்க்க, கண்மணியோ “அதெல்லாம் நல்லா பண்ணிருப்பாங்க..” என்றாள் முணுமுணுப்பாய்.  

அவள் என்ன நினைத்து அப்படி சொன்னாளோ, ஆனால் கண்மணி அப்படிச் சொன்னது அதிரூபனுக்கு அப்படியொரு மகிழ்வை கொடுத்தது என்பது அவன் மட்டுமே உணர முடிந்த ஒன்று.. ஒருசில விஷயங்கள் காரணமே இல்லாது நமக்குள் தாக்கம் ஏற்படுத்தும்..

அப்படித்தான் கண்மணி ஆனாளோ அதிரூபனுக்கு?? அவனுக்கே இது தெரியுமோ என்னவோ..

ஆனாலும் சொன்னது அவள்தான் இதன் சாயலில் வேண்டும் என்று.. இப்போது அவளே அதனை பார்க்காது நன்றாய் தான் இருக்கும் என்று சொல்கையில் என்னவோ அது அவனின் உழைப்பின் மீது அவள் காட்டும் நம்பிக்கை தெரிய அதைவிட பெரும் சந்தோசம் அவனுக்கு என்ன இருக்கப் போகிறது..

ஆனாலும் சும்மா “இல்ல செக் பண்றதுன்னா பண்ணுங்க…” என்று திரும்ப அவனின் கடிகாரத்தை நீட்ட,

“இல்ல இல்ல இருக்கட்டும்…” என்று கண்மணி வேகமாய் மறுத்தாள்..

தீபா இவர்கள் இருவரையும் பார்த்தவள், கண்ணனுக்காக இருக்கும் கடிகாரத்தை கையில் எடுக்க, அப்போது தான் அதன் வடிவைமைப்பு கண்மணிக்கும் நன்கு மனதில் பதிந்தது. அப்படியே அதிரூபனின் கடிகாரம் போன்றே என்று சொல்ல முடியாது..  ஆனால் அதில் சின்னதாய் ஒரே ஒரு மாற்றம்..

ஆங்கில எழுத்துக்கள்  ‘K’ மற்றும் ‘D’ வருவதுபோல் வடிவமைதிருந்தான். அதாவது 2018 என்பதனை ‘2K18’ என்றும், ஆண்டுகள் மட்டும் மாறும்படியும் அந்த ‘K’  என்ற ஆங்கில எழுத்து மாறாது அப்படியே போலவும், கிழமைகளை குறிப்பதற்கு ஆங்கில எழுத்து ‘D’ போட்டு அதனருகே சின்னதாய் கிழமைகள் மட்டும் மாறும் படியும் செய்திருந்தான்.

பெண்கள் இருவருக்கும் அதனைப் பார்த்து கண்கள் விரிந்தது தான் மிச்சம்.. தீபாவிற்கு பார்த்ததுமே ‘கண்ணன் தீபா…’ என்ற இவர்களின் பெயரின் முதல் எழுத்து என்று புரிந்து போய்விட, அவளின் உணர்வுகளுக்கு வார்த்தையே இல்லை..

“தேங்க்ஸ்… தேங்க்ஸ் தேங்க்ஸ் எ லாட் ப்ரோ….” என்று அடுத்த நொடி அதிரூபனை அண்ணனாக்கி விட்டாள் அவள்..

அதிரூபனை பொறுத்த மட்டில் அது அவனின் உழைப்பிற்கான பாராட்டு, ஆக, அதே உணர்வில் “தேங்க்ஸ்…” என்றுமட்டும் சொல்ல, கண்மணியோ இன்னமும் வியப்பாய் பார்த்துகொண்டு இருந்தாள்.

‘நீயும் ஏதாவது சொல்லேன்…’ என்று அதிரூபன் பார்க்க, அவளோ தன் பார்வையிலேயே அவளின் உணர்வுகளை பிரதிபலித்துக்கொண்டு இருந்தாள்.

தீபாவோ அவளுக்கிருந்த சந்தோஷத்தில் “என்னடி கல்யாண பொண்ணு.. வாட்ச் செமையா இருக்குல்ல…” என்று கேட்க, அத்தனை நேரமிருந்த மோன நிலையை சுட சுட நீர் காய்ச்சி ஊத்தி கலைத்தது போல் இருந்தது அதிரூபனுக்கு..

‘கல்யாண பெண்ணா???’ என்று அதிர்ந்து ஒருவித குழப்பமாய் கண்மணியைப் பார்க்க, அவளோ “ச்சு.. சும்மா இரு தீப்ஸ்…” என்று செல்லமாய் அவளை கடிந்துகொண்டு இருந்தாள்..

“ஹே ஹே என்ன வெக்கமா!!! எப்படியோ இந்த மாப்பிள்ளை மட்டும் ஓகே ஆச்சுன்னா எனக்கும் கொஞ்சம் ரூட் கிளியர் ஆகும்.. கொஞ்சமில்ல ரொம்பவே கருணை பண்ணு கண்ஸ்…” என்று தீபா வளவளக்க, இவர்கள் பேசுவது அதிரூபனுக்கு எதுவுமே புரியவில்லை என்றாலும் கொஞ்சம் புரிந்தது.

அதாவது கண்மணிக்கு வரன் பார்த்திருக்கிறார்கள் என்பது வரைக்கும்.. என்னவோ இந்த எண்ணம் அவனுக்கு அவ்வளவு உவப்பாய் இல்லை.. மனம் ஒரு சுனங்களை உணர, அமைதியை தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்..

கடிகாரத்தில் அனைத்தும் சரியாய் பொருந்தி இருக்கிறதா என்று மீண்டும் ஒருமுறை சரி பார்த்தவன், “கிபிட் பேக் பண்ணிடவா??” என்று தீபாவை பார்த்து கேட்க,

அவளும் “யா பண்ணிடுங்க…” என்றுவிட்டு திரும்ப கண்மணியோடு பேச்சினை தொடங்க, அடுத்து அதிரூபன் கண்மணி பக்கம் திரும்பவே இல்லை..

ஆனால் கண்மணியோ நொடிக்கு ஒருமுறை அவனின் முகத்தினை தான் பார்த்துகொண்டு இருந்தாள்.. இத்தனை நேரமும் தீபாவோடு தான் பேசினாள், இல்லை தீபா பேசுவதை கேட்டுக்கொண்டு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டு இருக்க, இப்போது என்னவோ அதிரூபன் அவளைப் பார்க்காது வேலை செய்தது அவளுக்கு ஒரு புது உணர்வை கொடுத்தது..

என்னவோ பல நாட்களாய் இருவரும் பேசி பழகியது போலவும், இப்போது அவன் பாராமுகம் காட்டுவது போலவும் இருக்க ‘என்னாச்சு இவருக்கு…’ என்றுதான் அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ எனக்கு என் வேலைதான் முக்கியம் என்பதுபோல் இருக்க, அவளையும் அறியாது கண்மணிக்கு முகம் கூம்பிப் போனது.

“கண்ஸ்.. நான் பேசுறது கேட்கிறயா இல்லையா??” என்று தீபா அவளின் தோளில் தட்ட,

“ஹா…!!!” என்று லேசாய் தன் தோளை தடவியள், “சொல்லு தீப்ஸ்…” என்றாள் மெதுவாய்.

“என்னாச்சு அப்படியே சைலென்ட் ஆகிட்ட…” என்றவள் “அதுசரி நீ எப்போ பேசிருக்க..” என்றுவிட்டு மீண்டும் தன் பேச்சினை தொடங்க, அதற்குள் அதிரூபன் அவன் வேலையை முடித்து, பில்லும் போட்டு தீபாவின் முன் டேபிளில் வைக்க, அப்போதும் அவனின் பார்வை கண்மணி பக்கம் திரும்பவில்லை..

‘டேய் டேய் நீயும்தான் நாளன்னைக்கு பொண்ணு பார்க்க போற..’ என்று அவன் மனம் சொன்னாலும், அதெல்லாம் அவனுக்கு உறைக்கவேயில்லை.

கண்மணியின் முகத்தினில் வந்த போதிருந்த ஒரு ப்ளீச் இப்போது இல்லை. எப்போதும் அமைதியாய் இருப்பவளிடம் இப்போது இன்னுமொரு அமைதி வந்து அமர்ந்துகொள்ள, தீபாவின் பேச்சுக்குரலும், இடை இடையே அதிரூபனின் பதில்களும் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்தது.

அனைத்தும் முடிந்து, பெண்கள் இருவரும் கிளம்ப, அடுத்து ஒரு ஐந்து நிமிடம் ஆக, உள்ளே வந்தது போலவே கண்மணி கண்ணாடி கதவுகளை தள்ளிக்கொண்டு வெளியே போனவள், என்ன நினைத்தாளோ நின்று ஒருமுறை அதிரூபனை பார்த்துவிட்டு செல்ல, அவனுமே கூட அத்தனை நேரம் பார்க்காது இருந்தவன் அவள் போகிறாள் என்றதும் தன் பார்வையை அவள் பின்னே விட்டான்..

இருவரின் பார்வை என்ன பேசியதோ, இல்லை பேச வேண்டும் என்று ஆசை கொண்டதோ, அதற்குள் தீபா “கண்ஸ்…” என்றழைக்க, அதன்பின் கண்மணி அப்படியே திரும்பிவிட்டாள்.

தீபாவிற்கு மற்ற நேரம் என்றால் இந்த இருவரின் மாற்றத்தையும் கவனித்து இருப்பாளோ என்னவோ, ஆனால் இப்போது அவளுக்கு இருக்கும் மன நிலையில் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.

நாளை கண்ணனுக்கு பிறந்தநாள், இருவரும் நேரில் சந்திக்கும் சூழல் அமையாது போக “கண்ஸ்.. இதை நீயே என் சார்பா கொடுத்திடேன்…” என்று அவளின் முன்னே கிப்ட் பேக் செய்யப்பட்ட வாட்சினை நீட்டினாள் தீபா..

கண்மணியோ அதனை வாங்காது முறைக்க “என்ன டி?? இந்தா.. நான்தான் சொன்னேன்ல…” என்றுசொல்ல,

“நீதான் கொடுக்கணும்.. அது தான் சரியும் கூட…” என்றவள், முன்னே நடக்க,

“ஹே என்ன விளையாடுறியா.. உன் அண்ணனுக்கு மீட்டிங்காம்.. வர முடியாது சொல்லிட்டான்..” என்றபடி இவளும் பின்னேயே போனாள்..

இவர்களின் இந்த பேச்சு வார்த்தை கேட்காவிடினும், அவர்கள் அலங்கார் விட்டு கிளம்பி வெளியே போகும் வரைக்கும் அதிரூபன், கணினி வழியே இவர்களையே பார்த்துகொண்டு இருக்க, அவனின் பார்வை எல்லாம் கண்மணி மீதே இருந்தது.

‘இவளுக்கு கல்யாணமா??!!’ இதே கேள்வி அவனின் மனதினில் திரும்ப திரும்ப தோன்றி ஒருவித தொல்லை செய்ய,

‘ச்சே என்னடா இது…’ என்று சலிப்பாகவும் இருந்தது.

அவனின் சலிப்பு அவனது அம்மாவிற்கு எட்டியதோ என்னவோ அலறிக்கொண்டு இருக்கும் அலைபேசியை பார்த்தவனுக்கு அழைப்பது மஞ்சுளா என்றதும் “ஹலோ ம்மா…” என்றான் வேகமாய்..

“ரூபன்.. வர்றபோ கடைல இருந்து மைல்ட் கலர்ல புது ஷர்ட் ஒண்ணு எடுத்திட்டு வா.. நாளன்னைக்கு போட்டுட்டு போகணும்..” என,

“ம்மா.. புதுசே தான் போடணுமா?? வீட்லயே புதுசு இருக்கும்மா…” என்றான் அப்போதும் ஒருவித சலிப்பில்..

“எல்லாம் பார்த்துட்டேன்.. அவ்வளோ ஒண்ணும் பளீச்சுன்னு இல்லைடா ரூபன்.. சொன்னா கேளு. மைல்ட் கலர்ல எடுத்துட்டு வா.. டார்க் கலர் பேண்ட் போட்டா உனக்கு அம்சமா இருக்கும்..”

“ம்மா…!!!!!”

“சும்மா சும்மா எல்லாத்துக்கும் பிடிவாதம் பண்ணாத ரூபன்.. எங்க எப்படி போகணுமோ அப்படி போகணும்.. மாமா அத்தை எல்லாம் நாளைக்கு சாயங்காலம் வந்திடுவாங்க.. அவங்க முன்னாடி இதெல்லாம் சொல்ல முடியாது.. இல்லைன்னா நானே இப்போ கடைக்கு வரவா???” என்று மஞ்சுளா அடுத்த கொக்கியை போட,

“வேணாம் வேணாம்.. நானே எடுத்திட்டு வர்றேன்…” என்று வேண்டா வெறுப்பாய் சொல்லி வைத்தான் அலைபேசியை..

அன்றைய தினம் காலை வரைக்கும் கூட அவனுக்குத் தெரியவில்லை எதுவும்.  நாளை மறுநாள், மத்திய கைலாஷ் கோவிலில் வைத்து பெண் பார்ப்பதாய் ஏற்பாடு.. அதுக்கூட இவன்தான் சொன்னான் வீட்டில் எல்லாம் வேண்டாம் ஏதாவது பொது இடத்தில் வைத்து பார்ப்போம் என்று. பெண் வீட்டினருக்கும் அதுவே எண்ணம் போல, இவர்கள் சொல்லவும் சரியென்று சொல்லிவிட்டனர்.

‘உனக்கு எந்த பெண் பிடித்தமோ, பேசி முடி…’ என்று அதிரூபன் சொல்லிட, மஞ்சுளாவிற்கு சட்டென்று ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. ஏனெனில் அவர் தேர்வு செய்திருந்த இரண்டு பெண்களுமே அதிரூபனுக்கு பொருத்தமாய் இருப்பதுபோல் இருக்க, முடிவினை எடுக்கும் பொறுப்பை மகனிடம் கொடுத்தார்.

அவனோ நீங்களே முடிவெடுங்கள் என்றுவிட, கொஞ்சம் திணறலாய்தான் இருந்தது. நிவின் கூட ‘என்னம்மா இது ஸ்பீடா போன.. இப்போ சிக்னல்ல மாட்டிக்கிட்ட…’ என்று கிண்டல் அடித்தான்..

ஆனாலும் மஞ்சுளா கிடைத்த வாய்ப்பினை விடுவாரா என்ன, கொஞ்சம் நேரம் எடுத்தேனும் யோசித்து இரண்டு பெண்களில் ஒருத்தியை தேர்ந்தெடுத்து, அவர்கள் வீட்டிலும் பேசி இதோ பெண் பார்க்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். அவரைப் பொருத்தமட்டில், நேரில் பார்த்து மேற்கொண்டு பேசி முடிவெடுக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.

ஆனால் அதிரூபனுக்கோ பெண் பார்க்கத் தானே போகிறோம் என்ற எண்ணமும் இருந்ததுவோ என்னவோ, அத்தனை நேரம் மனதில் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இப்போது கண்மணி வந்து செல்லவும் என்னவோ ஒரு சலனம் அவன் உணர்ந்தது நிஜமே..

அதிலும், அதே மத்திய கைலாஷ் கோவிலில் வைத்துதான் கண்மணியையும் பெண் பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தால் இவன் என்ன செய்வானோ…      

                                                                                      

 

 

Advertisement