Advertisement

காதல் சிந்தும் தூறல் – 2

“அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்..

‘ஏன் டா இப்படி…’ என்று அதிரூபன், நிவினை பார்க்க,

நிவினோ ‘நான் சரியாய் தானே சொன்னேன்…’ என்று பார்த்தான்.

“அப்.. அப்போ இது போல டிசைன் பண்ண மாட்டீங்களா???” என்று தீபா கேட்க,

“இல்ல இது எனக்கே எனக்குன்னு நான் பர்ஸ்ட் பர்ஸ்ட் பண்ணது..” என்றான் அதிரூபனும்.

“ஓ…!!!” என்று தீபா சொல்ல, கண்மணியோ அமைதியாகவே அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

‘இவ அண்ணனுக்கு வாட்ச் வாங்க, அவ ஏன் பேசுறா..??’ என்று இப்போது நினைத்தது நிவின் தான்.. அதை அப்படியே கேட்டும்விட்டான்.

“கண்ஸ் வாட்ச் உங்க அண்ணனுக்கு தானே…” என்றதும்,

தீபாவை பார்த்து சிரித்த கண்மணி “எங்க அண்ணனோட பியான்சி இவ….” என்று தீபாவை சொல்ல,

அண்ணன் தம்பி இருவருமே ‘ஓ…!!!!!!!’ என்றுமட்டும் மனதினுள் சொல்லிக்கொள்ள முடிந்தது.

‘மறுபடியும் முதல்ல இருந்தா…’ அப்படி என்பதுபோல் தீபா திரும்பவும் அதிரூபனின் கடிகாரம் காட்டி கேட்க,

அதனுள் வேகமாய்  கண்மணி “இதேபோல இல்லைன்னாலும், கொஞ்சம் அல்டர் பண்ணி…” என்று அவள் கண்களை மட்டும் லேசாய் விரித்து, அதிரூபனை நேருக்கு நேராய் பார்த்து கேட்க,

‘இல்லை….’ என்று சொல்ல எண்ணியவனின் வாய்க்கு தான் மனம் இல்லை என்று சொல்லி, தலையை சரி என்று ஆட்ட வைத்தது.

நிவினுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்… எப்படியும் அண்ணன் சரி சொல்லமாட்டான், ஆனால் கண்மணிக்காக நாம் பேசி எப்படியாவது சரி சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்க, அதிரூபன் சரி என்றது அவனுக்கு அப்பட்டமான அதிர்ச்சியே..

தம்பி அறியாத அண்ணனா???!!! ஆனால் இப்போது…. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே நிகழ்ந்தது. அந்த மாற்றம் யாரினாலோ அதான் தெரியாது..

ஆனால் பெண்கள் இருவருக்கும்  நிரம்பவும் சந்தோசம்.. அப்பாடி என்ற உணர்வு கூட.. எங்கே மாட்டேன் என்பனோ என்ற தயக்கம் இருந்தது.. தீபாவும் கண்மணியும் ஒருவர் முகத்தினை ஒருவர் சந்தோசமாய் பார்த்துவிட்டு “தேங்க்ஸ்…” என்று தீபா சொல்ல, கண்மணி அதே நன்றியை தன் பார்வையில் காட்டினாள்..

நிவினுக்கு இது பெரிதாய் தெரியவில்லை.. ஆனால் அதிரூபனுக்கு ‘பேசமாட்டாளோ…’ என்றே தோன்றியது.

அவனுக்கே அவனின் எண்ணம் ஆச்சர்யம்தான்.. பொதுவாய் யாரையும் இப்படி நினைக்கமாட்டான்.. நினைத்ததில்லை.. இன்று என்னவோ கண்மணியின் ஒவ்வொரு சிறு அசைவிற்கும் அவனின் மனம் கேள்வி எழுப்பிக்கொண்டு இருந்தது.. ஒருவேளை அவனின் மனதையே எழுப்பிவிட்டாளோ என்னவோ??

“ஒன் வீக்ல கிடைச்சிடும் தானே…” என்று தீபா திரும்ப கேட்க,

“ரெடி பண்ணிடலாம்…” என்றான் அதிரூபனும்..

“கண்ஸ்.. நீ எதுவும் வாங்கலையா??” என்று நிவின் கேட்க,

“நான்…” என்று அவள் சொல்லும் போதே, மீண்டும் ‘அயிகிரி நந்தினி…’ பாடியது..

அலைபேசியை எடுத்துப் பார்க்க, அழைப்பது அவளின் அப்பா சடகோபன் என்றதும் சற்றே கலவரமாய் “அப்பா…” என்று தீபாவை பார்த்து உதடு அசைத்தவள்,

“அப்பா….” என்றாள் வேகமாய்.. ஆனால் சத்தமே வரவில்லை.

கண்மணியின் முகத்தினில் இருந்த பதற்றம் விட, தீபாவின் முகத்தினில் அதிகம் இருந்ததுபோல் இருந்தது ஆண்கள் இருவருக்கும்.. அனைவரும் கண்மணியைப் பார்க்க, அவளோ ஒரு அவஸ்தையில் நிற்பது போலிருந்தது. சட்டென்று தள்ளிப் போயும் பேச முடியவில்லை..

“நா… நா… டைலர் ஷாப்ல இருக்கேன் ப்பா…” என்று அவள் வார்த்தைகளை மென்று விழுங்க, தீபாவை தவிர, அண்ணன் தம்பி இருவருக்கும் லேசாய் ஒரு அதிர்வு..

பின்னே இது அப்பட்டமாய் ஒரு பொய் தானே.. இருவரும் ஒருவரை பார்த்துக்கொள்ள, கண்மணியும் சங்கடமாய் பார்த்துவைத்தாள்.. பார்வை இவர்களில் இருக்க, பேச்சு அவளின் அப்பாவோடு இருந்தது.  

“ஹ்ம்ம்.. இல்ல… இல்லப்பா நானே வந்திடுவேன்.. கிளம்பிட்டேன்தான். ஜ.. ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ்ல வந்திடுவேன்.. நீங்க அலைய வேண்டாம்..” என்றவள் பேசி முடித்து வைத்ததும்,

“தீப்ஸ்.. நீ பார்த்து என்னன்னு பேசிட்டு கிளம்புறியா.. நான் கிளம்பிடுறேன்..” என்றாள் கொஞ்சம் டென்சனாய்..

“அதானே பார்த்தேன்… ம்ம்ச் போ கண்ஸ்…” என்று சலித்தவள்,

“அட்வான்ஸ் எவ்வளோ கொடுக்கணும்??” என்று பேச்சினை அதிரூபனிடம் தொடங்க,

அவனுக்கு இவர்கள் இருவரும் செய்வது எல்லாம் வேடிக்கையாய் இருந்தாலும், எதுவும் கேட்கவும் முடியாது இல்லையா ஆக வெறும் பார்வையாளன் மட்டுமே, ஆனால் நிவின் உடன் படித்தவன் என்ற அடிப்படையில்,

“என்ன கண்ஸ் இப்பவும் இப்படித்தான் இருக்கியா நீ?? படிக்கும்போது தான் சைலென்ட்.. இப்பவுமா???  ஏன் அங்கிள இங்க வர சொல்லி இருக்கலாம்தானே…” என்றான்..

“அச்சோ..!!!” என்று கண்மணி வாயில் கை வைத்தவள், “அவர் வந்தா அவ்வளோ தான்..”  என்றுவிட்டு, நான் கிளம்புகிறேன் என்று அனைவரையும் பார்க்க,

“ஏன்?? என்னாகும்???” என்றான் அடுத்த கேள்வியை தூக்கிப்போட்டு..

அவள் கிளம்பும் அவசரத்தில் இருக்க, நிவின் அடுத்து அடுத்து கேள்வியாய் கேட்பது அதிரூபனுக்கு சரியென்று படவில்லை. அவரவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கும். இருக்கும் இடத்தை சொல்லாது மாற்றி சொல்லும்போதே புரிந்துகொள்ள வேண்டும்தானே. அதைவிட்டு நிவின் கேட்டுகொண்டே இருக்க,

“ம்ம்ச் நிவின்…” என்ற அழைப்பு மட்டுமே அதிரூபனிடம்..

“இல்லண்ணா… அது…” என்று நிவின் இழுக்க,

“அவங்க போகட்டும்…” என்ற அதிரூபனின் பார்வை கண்மணியை தொட்டு மீள,

அவளோ லேசாய் தலையை ஆட்டிவிட்டு கிளம்பியவள் “தீப்ஸ் வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு… பை நிவின்..”  என்றவள், அதிரூபனிடம் வெறும் தலையசைப்பு மட்டுமே..

அவ்வளவுதான் கண்மணி கிளம்பிவிட்டாள்.. இத்தனை நேரம் இருந்ததற்கு அதிரூபனுக்கு அவளின் பெயர் கூட என்னவென்று தெரியாது. தீபாவும் சரி நிவினும் சரி ‘கண்ஸ்…’ என்றே அழைக்க, அவனுக்கு அவளின் பெயர் கூட தெரியவில்லை..

கண்மணி கிளம்பியதுமே, தீபா தான் சாக்காய் “கண்மணி அப்பாக்கு நாங்க இங்க வந்தது தெரியாது….” என்று நிவினிடம் சொல்ல,

அதிரூபனின் மனதோ ‘கண்மணி…’ என்று உச்சரிக்கத் தொடங்கியது..

அவன் அறிந்தோ அறியாமலோ, அந்த பெயரை அவனின் மனம் உச்சரிக்க,

நிவினோ “அட என்னங்க நீங்க.. வருங்கால மாமனார்க்கு இவ்வளோ பயமா உங்களுக்கும்…??” என,

அவன் கேட்ட விதத்தில் லேசாய் சிரித்தவள் “மாமனார்னு நான் சொல்லிக்கிட்டா போதுமா?? அவர் சொல்லனும்தானே..” என்றவள் “நானும் கண்மணி அண்ணனும் லவ்வர்ஸ்…” என்றாள் அதே சிரிப்பினூடே..

“வாவ் சூப்பர்…” என்று நிவினும்,

‘ஆகா..!!! அண்ணன் லவ்வரோட, அண்ணனுக்கே கிப்ட் எடுக்க வந்திருக்களா… ’ என்று எண்ணியது அதிரூபனே..

தீபா, “சார்.. அட்வான்ஸ் எவ்வளோ பே பண்ணனும்?? இதே மாடல்ல சேஞ்சஸ்னா அது எப்படி செய்வீங்க??” என்று கேட்க,

“உங்களோட பட்ஜெட் என்ன??” என்றான் இவனும்..

இப்போது நிவின் வெறும் பார்வையாளனே.. அவனுக்குத் தெரியும், தொழில் நேரத்தில் தேவையில்லாதது எதுவும் பேசினால் அதிரூபனுக்கு பிடிக்காது என்று.. அதிலும் இப்போது கண்மணியிடம் கேள்விகள் கேட்டதற்கு நிச்சயம் தீபா கிளம்பவும் எதுவும் சொல்வான் என்று தெரியும், ஆக, பேசாமல் இருந்துகொண்டான்.   

தீபா அவளின் பட்ஜெட்டினை சொல்ல, கொஞ்ச யோசித்த அதிரூபன், “ஹ்ம்ம் ஓகே.. ஒன் வீக்ல பண்ணிடலாம்…” என, தீபாவின் முகத்தினில் அத்தனை சந்தோசம்.

“ஓகே சார் ரொம்ப சந்தோசம்… திஸ் இஸ் மை நம்பர்… ரெடியானதும் கால் பண்ணிடுங்க…” எனும்போதே, அதிரூபன் பார்த்த பார்வையில், கடையில் இருந்த ஆள், லெட்ஜர் எடுத்து வந்து அவள் சொன்ன விபரங்களை எல்லாம் எழுதிக்கொண்டன்.  

அடுத்து தீபா கிளம்பியதும், நிவின் அவனின் அண்ணன் முகம் பார்க்க, “என்னடா???” என்றான் அவனும்..

“இல்லண்ணா.. நீ உன் வாட்ச் போல யாருக்கும் பண்ண மாட்டியே..” என்றான் யோசனையாய்..

“இப்பவும் என்னது போல பண்ணலையே.. கண்டிப்பா அது என்னோடது போல இருக்காதுடா.. பாவம், பார்த்த தானே ரெண்டுபேர் முகமும் எப்படி மாரிடிச்சுன்னு…”

“ஓஹோ..!!! பாப்போம்… பாப்போம்…” என்றவன், “சரி அம்மா கொடுத்துவிட்டதை பாரு.. ரெண்டுமே ஜாதகம் நல்லா பொருந்தி வருதாம்.. மாமாவும் நல்லா விசாரிச்சிட்டார்.. உனக்கு பிடிச்சா மேற்கொண்டு பேசுறதுதான் வேலை..”  என்றிட

“அதை கடைக்கே கொடுத்து விடணுமா?? ஏன்டா நான் வீட்டுக்கே வரமாட்டேனா என்ன??” என்று சலித்தபடி அதிரூபனும் அந்த கவரினை பிரித்துப் பார்க்க,

அதில் இருந்த இரண்டு பெண்களின் புகைப்படங்களுமே நன்றாய் தான் இருந்தது. அவர்களின் விபரங்களும் கூட மனதிற்கு திருப்தியாய் இருந்தது. ஒருத்தி அரசு வேலையில், இன்னொருத்தி ஐடியில் வேலை..

‘ம்ம்ம்…’ என்று அவனின் புருவங்கள் உயர, இரண்டு புகைப்படங்களையும் பார்த்தவன், “அம்மா என்ன சொன்னாங்க???” என்று வினவினான்..

“அம்மாக்கு இந்த ரெண்டு பொண்ணுமே ரொம்ப பிடிச்சிருக்குண்ணா…” எனும்போதே,

“அப்போ உனக்கொன்னு எனக்கொன்னு பேசி முடிக்கப் போறாங்களா???” என்றான் அதிரூபன் கிண்டலாய்..

“ண்ணா…!!!!” என்று நிவின் அதிர்ந்து பார்த்தவன், அண்ணன் முகத்தினில் இருந்த சிரிப்பினை கண்டு “நீ இருக்க பாரேன்…” என்று சிரித்திட,

“பின்ன என்னடா.. நானுமே ரெண்டும் பிடிச்சிருக்குன்னு சொன்னா எனக்கு ரெண்டு பேரையும் கட்டி வைப்பாங்களா??” என்று அடுத்த சிக்ஸர் போட,

நிவினோ “தெய்வமே….” என்று கை எடுத்து கும்பிட்டவன், “நீயே வந்து அம்மாக்கிட்ட பேசிக்கோ..” என்று கிளம்ப,

‘ஆ..!! அது…’ என்று அவனை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தவன் “கிளம்பு கிளம்பு..” என்றுசொல்லி அந்த கவரையும் தூக்கி அவன் கையினில் திணிக்க,

“ஹ்ம்ம் அப்போ இதுவும் புஷ்ஷாஷா!!!!” என்றபடி நிவினும் கிளம்பினான்..

நிவின் கிளம்பியதும் சிறிது நேரம் யோசனை செய்வதுபோல் அமர்ந்திருந்த அதிரூபனுக்கு, அப்படி எந்த யோசனையுமே வரவில்லை.. வெறுமெனே சும்மா அமர்ந்திருந்தான். மனது வேறு எதையுமே நினைக்க மறுத்தது என்றுதான் சொல்லிட வேண்டும்.

ஒருவேளை நேற்று இந்த பெண்களின் புகைப்படங்களை காட்டியிருந்தால் கூட இரண்டு பெண்களில் ஒருவரை தேர்வு செய்திருப்பானோ என்னவோ, ஆனால் இன்று, நிச்சயமா அந்த புகைப்படங்களை பார்க்கையில் அவனுக்கு மனதினில் எவ்வித உணர்வுமே தோன்றவில்லை..

மாறாக கண்மணியும், தீபாவும் வந்து போனதே நினைவில் வர, அடுத்து அவனது வேலையும் நினைவில் வர, ஒருமுறை அவனின் கடிகாரத்தைப் பார்த்தவன், பின் பென்சிலும் பேப்பரும் எடுத்து லேசாய் ஒரு சில மாதிரிகளை வரையத் தொடங்கிவிட்டான்..

கண்மணியோ எப்படியாவது வீட்டிற்கு சீக்கிரம் போய்விட வேண்டும் என்று வேக வேகமாய் எட்டுக்களை போட்டுக்கொண்டு இருக்க, அதற்குள் அவளின் அம்மா சியாமளா அழைத்துவிட்டார்.

“ம்மா வந்துட்டே இருக்கேன்ம்மா…”

“கண்மணி,  மெயின் ரோட் முக்குல வாழைப்பழம் விப்பாங்க.. பார்த்து நல்லதா வாங்கிட்டு வா.. நாளைக்கு சாமிக்கு வைக்க இல்லை…” என்று அம்மா சொல்ல,

“ம்ம் சரிம்மா…” என்றவள் திரும்பவும் வந்த வழியே நடக்கத் தொடங்கினாள்..

இதையே கொஞ்ச நேரம் முன்னே சொல்லியிருந்தால் என்ன?? நான் வந்துவிட்டேன்.. போம்மா அப்பா வேற போன் பண்ணிட்டார்.. இதுபோல சாக்குகள் எல்லாம் அவளிடம் வரவில்லை.. அம்மா சொன்னதற்கு மறுப்பேதும் இல்லாது அப்படியே சரி என்று திரும்ப நடக்கத் தொடங்கினாள். இதுவே அவளின் சுபாவம்.. வீட்டினர் யார் என்ன சொன்னாலும் அதற்கு அவளிடம் மறுப்பு இருக்காது.

அவளுக்கு பிடித்தமாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, வீட்டினர் சொன்னால் செய்வாள். முகத்தினில் ஒரு சலிப்பு சுளிப்பு எதுவும் காட்டாது செய்வாள்.. அதனாலேயே என்னவோ வீட்டினருக்கும் கண்ணனை விட கண்மணி என்றால் கொஞ்சம் ஸ்பெசல்..

அதிலும் சடகோபனுக்கு  மகளின் மீது அலாதி ப்ரியம்.. ஆனால் வெளியே காட்டிட மாட்டார்.. ஆனால் மகளுக்கு செய்வதை எல்லாம் சரியான நேரத்தில் சரியாய் அதுவும் உயர்வாய் செய்வார். அதேபோலத்தான் இப்போதும். கண்மணிக்கு நல்ல வரனாய் பார்த்து திருமணம் செய்து வைத்திடவே அவரின் விருப்பம்.. நல்ல வரன் என்றால் குடும்பம், பாரம்பர்யம், வேலை, சம்பாத்யம் என்று அனைத்திலும் நல்லதாய் பார்த்து கட்டிக்கொடுக்க ஆசை..

அதனாலேயே என்னவோ வரும் வரன்களில் பாதி அவருக்கு பிடிப்பதே இல்லை.. அப்படியே ஒருசிலது பிடித்து இருந்தாலும், ஜோசியரிடம் போனால் அது பொருந்தாது. கண்ணன் எப்போதுமே இதை சொல்லி வீட்டில் சியாமளாவிடம் சத்தம் போடுவான்..

“ம்மா.. நல்ல குடும்பமா.. பையன் படிச்சு நல்ல வேலைல பார்க்க ஓரளவு நல்லாருக்கானா.. நம்ம கண்மணிக்கும் பிடிச்சிருக்கா.. அதை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கணும்.. அதைவிட்டு, எல்லாமே டாப்ல இருக்கணும்னா எப்படிம்மா??” என்று சத்தம் போடுவான்..

ஆனால் சியாமளவோ “இதெல்லாம் நீ உங்கப்பாக்கிட்ட தான் பேசணும்..” என்பார்..

அவரிடம் எங்கே பேச… பழைய பஞ்சாங்கம் எல்லாம் பேசுவார்.. ‘டேய் உங்க பாட்டி எப்பேர் பட்ட குடும்பத்துல இருந்து வந்தாங்க தெரியுமா.. உன் அத்தைக்கு மாப்பிள்ளை பார்க்கிறப்போ எங்கப்பா எப்படி எப்படி பார்த்தார் தெரியுமா… உங்கம்மாவோட பிறந்த வீடு எப்படின்னு தெரியும்தானே.. ’ என்று ஆரம்பித்து,

“நம்ம கண்மணி போற வீடு எல்லா விதத்துலையும் சிறப்பா இருக்கணும்னு நினைக்கிறது என்ன தப்பு..??” என்ற அவரின் கேள்வியில் அவனால் ஒன்றும் சொல்ல முடியாது..

இன்றும்கூட கண்மணி வீட்டினுள் நுழைகையில் அதேபோலவே ஒரு பேச்சுத்தான். ஆனால் பேசியது கண்ணன் அல்ல, சியாமளா.. அதிசயத்திலும் அதிசயமாய்

“என்னங்க.. எல்லாரும் எல்லாத்துலையும் பெஸ்ட்டா இருக்க முடியுமா?? நிறை குறை யார் வீட்ல தான் இருக்காது…” என்ற பேச்சு இவள் வாசலில் நிற்கையிலேயே காதில் விழ,

‘கடவுளே…’ என்ற முணுமுணுப்போடு தான் உள்ளே போய் அவளின் அம்மா கையில் வாழைப் பழத்தினை கொடுத்தாள்.

சியாமளா சொன்னதற்கு பதில் சொல்லாத சடகோபன் “கண்மணி.. டைலர் கடைக்கு நீ ஏன் தனியா போற… போன் பண்ணி சொன்னா வந்து கொடுத்துட்டு போறான்.. இல்லை அம்மாவை கூட்டிட்டு போக வேண்டியது தானே..” என்று கேட்க,

வெயிலில் நடந்தது வந்தது ஒருபுறம் இவர் கேட்பது ஒருபுறமாய் அயர்வாய் இருந்தாலும், “அடுத்த டைம் அம்மாக்கூட போறேன் ப்பா…” என்றவள் நகரந்து விட்டாள்.

அவள் அப்புறம் நகர்ந்ததுமே, “என்ன பண்ற சியாமி நீ.. அவளை பழம் வாங்கிட்டு வர சொல்வியா?? ஏன் நான் இங்கதானே இருக்கேன்.. என்கிட்டே சொன்னா என்ன??” என்று ஒரு எகிறு எகிற,

“கண்மணி வெளிய போயிருக்காளேன்னு தான் சொன்னேன்…” என்ரவற்கும் நகர்ந்து கண்மணியிடம் பேச போய்விட்டார்..

“என்னடி டைலர் என்ன சொன்னான்..?? வெறும் கையோட வந்திருக்க இன்னும் தச்சு முடிக்கலையா???” என்றபடியே பின்னோடு அம்மா வருவார் என்று அவளுக்கு தெரியுமோ என்னவோ,

“ஒரு வாரம் ஆகுமாம் ம்மா.. அவரே சொல்றேன் சொல்லிருக்கார்.. முகூர்த்த வேலையாம் அதுனால நம்மளது கொஞ்சம் லேட்..” என்று தயாராய் ஒரு பதில் சொன்னாள்.

பின்னே அடுத்த வாரம் எப்படியும் அந்த வாட்ச் வாங்க தீபா இவளையும் அழைப்பாள், அதற்கு ஏற்றபடி இப்போதே சொள்ளியும்விட்டாள். இல்லையெனில் அடுத்த வாரமும் ஒரு காரணம் தேடவேண்டுமே..

“ஹ்ம்ம் சரி சரி.. இனிமே உங்கப்பா வீட்ல இருக்கப்போ வெளிய போகாத.. சும்மா அதையும் இதையும் சொல்றார்.. நாளைக்கு கட்டி கொடுத்துட்டா, நீ வெளிய போற வேலை எல்லாம் நாங்களா வந்து செய்ய முடியும். அது அவருக்கு புரியவேயில்லை..” என்று அவளிடம் சொன்னதுபோல் தன் போக்கில் சொல்லிச் செல்ல, கண்மணி அதையும் ஒரு புன்னகையோடு தான் பார்த்திருந்தாள்..

அடுத்து தீபாவிற்கு ஒரு மெசேஜ் தட்டியவள், உடைமாற்றி விட்டு ஹாயாக வந்து டிவி முன் அமர, அவளின் பொழுதுகள் எப்போதும் போலவே கழிந்தது..

சடகோபன், அரசு துறையில் வேலையில் இருந்து ரிட்டயர்ட் ஆனவர், ஆக அந்த மிடுக்கு எப்போதுமே அவரிடம் உண்டு. அவரின் அப்பாவும் அந்த காலத்தில் அரசு துறையில் தான் பணி, ஆக கண்ணனையும் எப்படியும் அரசு வேலையில் இணைத்திட எண்ணினார்.

அதற்கான பரிட்சைகள் கூட எழுத சொல்ல, அவனோ இதில் பிடிவாதமாய் “தயவு செஞ்சு எனக்கு பிடிச்ச வேலையை செய்ய விடுங்கப்பா..” என்றுவிட,

“அப்போ பேங்க் வேலைக்கு ட்ரை பண்ணு..” என்று அடுத்தது சொல்ல, அவன் தலையில் கை வைத்தே அமர்ந்துவிட்டான்..

நல்லவேளை கண்மணிக்கு இப்படியான பிடுங்கல்கள் இல்லை. அவளை இதுநாள் வரைக்கும் அவர் எதுவுமே சொல்லியதில்லை.. பள்ளி முடிந்ததும் கேட்டார் என்ன படிக்கவேண்டும் என்று. அவளும் என்ஜினியரிங் என்று சொல்ல, மறுப்பே சொல்லாது அவள் கேட்ட படிப்பை படிக்க அனுப்பினார்.

‘என்னிக்கு இருந்தாலும் இன்னொரு வீட்ல வாழப் போற பொண்ணு.. இங்க இருக்க வரைக்கும் அவளுக்கு பிடிச்சது செய்யட்டும்..’ என்ற எண்ணம் அவருக்கு..

ஆனால் மகனின் மீதோ, ‘எப்படியாவது நல்ல நிலைல உட்கார வச்சிடணும்..’ என்ற ஆசை..

சடகோபன் சொன்னதுபோலவே கண்ணனுக்கு பேங்கில் தான் வேலை. வேறு வேலை முயற்சித்தான் தான்.. ஆனால் சும்மா பரிட்சை அப்பாவின் சொல்லுக்காக எழுத போய், அதுவே அவனுக்கு வேலையும் கொடுத்துவிட்டது..

‘பார்த்தியாடா.. நான் சொன்னா சரியாதான் இருக்கும்..’ என்று சடகோபன் பெருமையாகவே மகனை பார்த்தார்..

கண்மணிக்கு மாப்பிள்ளை பார்க்கவே இத்தனை அலம்பல், இதில் கண்ணனுக்கு பெண் பார்க்கத் தொடங்கினால் என்னென்ன செய்வரோ தெரியாது. அதை எண்ணி அண்ணன் தங்கை இருவருக்கும் ஒரு பயம் இருந்துகொண்டே தான் இருந்தது.

“அண்ணா பேசாம அம்மாக்கிட்ட மட்டுமாது சொல்லிடலாமா??” என்று கண்மணி எத்தனையோ முறை கேட்டிருக்கிறாள்.

ஆனால் கண்ணனோ “இல்ல கண்ஸ்.. உனக்கு முடியட்டும்.. அப்புறம்தான்..” என்று உறுதியாய் இப்போது வரை இருக்கிறான்..

அவனின் இந்த உறுதி எல்லாம் எத்தனை நாளைக்கோ…      

     

   

 

                                 

 

       

Advertisement