Advertisement

தூறல் – 16

அதிரூபனுக்கு காதல் நேரடி தாக்குதல் செய்தது போல் அல்லாது கண்மணிக்கு காதலென்பது மாறுவேடத்தில் வந்து தாக்கியதோ என்னவோ?? எது எப்படியானாலும் தாக்குதல் நிகழ்ந்தது என்பது நிஜம்தானே.. என்ன அதனை உணர்ந்துகொள்ள சில நேரம் பிடிக்கும்..

இங்கே கண்மணிக்கோ சில நாட்கள் பிடித்தது.. தனக்கு எது பிடித்திருக்கிறது.. யார் பிடித்திருக்கிறது என்று புரிந்துகொள்ள. ஆனாலும் அவள் புரிந்ததை உணருமுன்னே, அவளின் வார்த்தைகள் கொண்டே கண்மணியின் மனது தன் எண்ணம் இதுதான் என்று வெளிப்படுத்தி விட, தான் கூறிய வார்த்தைகள் புரிந்து கண்மணியோ நொடிப் பொழுதில் அதிர்ந்து தான் போனாள்..

கண்கள் விரித்து, அதிர்ச்சி பாவத்தோடு, ‘அச்சோ.. என்ன சொல்லிட்டேன்…’ என்று திகைத்து அதிரூபனைப் பார்க்க, அவனோ காதல் வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்ட களிப்பில் இருந்தான்.

“என்ன?? என்ன சொன்ன??!!” என்று திரும்பவும் அதிரூபன் கேட்க,

கண்மணியோ கொஞ்சம் தடுமாறினாலும், “நா… நான் என்ன சொன்னேன்??” என்றாள் கண்டுகொண்டானோ என்று அஞ்சி..

“இல்ல இப்போ நீ என்னவோ சொன்ன…”

“அ.. அது.. அண்ணன் வர வரைக்கும் போக மாட்டீங்களான்னு கேட்டேன்??” என்றாள் பதற்றத்தை மறைத்து..

உள்ளம் மட்டுமா பதறியது.. இதை கூறுவதற்குள் கண்மணியின் இதழ்களில் அத்தனை நடுக்கும்.. இமைகளில் அப்படியொரு ஆட்டம்.. அதிரூபனுக்கோ அனைத்துமே காண கிடைக்காத காட்சி போல் இருந்தது.. ஒன்றும் சொல்லாது “ம்ம்ம்…” என்றுமட்டும் தலையை ஆட்டி அவன் சிரிக்க,

“எ… என்ன??” என்றாள் திணறி..

“ஒன்னுமில்லையே…” என்று தோளை குலுக்க,

“ம்ம் நீங்க கிளம்புங்க…” என்றாள் இவளும் பிடிவாதமாய்..

“ஏன் என் கால் நான் நிக்கிறேன்..”

“இல்ல அது…..”

“அதுதான்.. அதே தான்….” என்றான் அதிரூபன் சிரித்து..

‘கடவுளே.. சிரிக்கிறானே…’ என்று நினைத்தவள், “ம்ம்ச் எது தான்..” என்று கோபமாய் கேட்க முயன்று தோற்றுப் போனாள்.

அவளையும் அவளின் குரலில் ஒரு துள்ளலும் ஒரு குழைவும் ஏற்பட, “அதான்… நீ சொன்னியே அந்த அது…” என்று அதிரூபன் அவளின் வழியில் செல்ல,

“நான் எதுவுமே சொல்லலை…” என்றாள் பட்டென்று..

‘அடடே இது கூட நல்லாருக்கே… அதிரூபா… இனி உனக்கான ஒரே வேலை கண்மணியை பேச வைக்கிறதுதான்.. லவ் எல்லாம் தானாவே வொர்க்கவுட் ஆகிடும்டா.. கண்மணி வாய் திறக்கிறது தான் முக்கியம்…’  என்று அவன் யோசிக்கும் போதே,

“உங்களுக்கு வேலை இல்லையா??” என்றாள் கண்மணி..

கண்களை சுறுக்கி, அவனின் முகத்தைப் பார்த்து கேள்வி கேட்டவளை கூர்மையாய் அதிரூபன் பார்க்க, அவளோ இப்போது பார்வையை திருப்ப,

“நீ என்ன பேசினன்னு எனக்கும் தெரியும்.. எனக்கு தெரியும்னு உனக்கும் தெரியும்.. நான் ஏன் வந்தேன்னும் கூட இப்போ உனக்கு தெரியும்…” என்று வார்த்தைகளில் விளையாட ஆரம்பித்தான்..

“எனக்கு எதுவும் தெரியாது….”

பட்டென கண்மணியிடம் இருந்து பதில் வந்தாலும், உள்ளே ஒரு பூரிப்பும், ஒரு புத்துணர்வும் பாய்வது அவளுக்கே உணரத்தான் முடிந்தது. ‘கடவுளே நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்..’ என்று அவளுக்கு அவளே சொல்லும் நேரம் சரியாய் கண்ணன் வந்திட,

வந்தவனுக்கோ இப்படியொரு காட்சி கிடைக்கும் என்று எண்ணவேயில்லை போல.. அதிரூபனையும் கண்மணியையும் அவன் யோசிக்கவேயில்லை.  இருவரின் மீதும் பார்வை யோசனையாய் படிந்து மீள,

அதிரூபனோ “ஹாய்….” என்று சொல்ல,

“ஹலோ…” என்றவன், “என்ன கண்மணி…” என்றான் தங்கையைப் பார்த்து..

“அ… அது.. கோவில்ல பார்த்தோம்… அதான் பே…” என்று கண்மணி சொல்லி முடிக்கும் முன்னே,

“தனியா நின்னுட்டு இருக்கா.. எப்படி விட்டு போக முடியும்..” என்றிருந்தான் அதிரூபன்..

அதிரூபனுக்குத் தெரியும், இந்த வார்த்தைகளே போதும் கண்ணனுக்கு எங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதனை புரிந்துகொள்ள என்று. சொன்னவன் நேருக்கு நேராய் பார்க்க, பதிலைக் கேட்டவனோ கூர்மையாய் பார்த்து வைத்தான்..

‘அச்சோ…’ என்று கண்மணி பார்க்க, அடுத்து யாருக்கு என்ன பேசுவது என்பது தெரியவில்லை..

அதிரூபனுக்கோ என்னவோ, கண்ணன் முகத்தில் ஒரு திருப்தியின்மை இருப்பதுபோன்றே தோன்றியது. ஏன் அப்படியென்ன என்னிடம் குறை இவனுக்கு?? இந்த கேள்வி.. இந்த கேள்வி வந்ததுமே யாருக்கேனும் ஒரு நிமிர்வு தன்னைப்போல் வரும்..

அதிலும் ஆண்களுக்கு.. அதிலும் இளம் வயது ஆண்களுக்கு சொல்லவேண்டியதே இல்லை..

அவனும் கண்ணனைப் போலவே இப்போது பார்வையை கூர்மையாய் மாற்றிக்கொண்டு பார்க்க, இருவருக்கும் இடையில் கண்மணி தான் முழித்து நின்றாள்..

தங்கைகள் வேண்டுமானால் அண்ணன்களின் காதலை எளிதில் ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் அண்ணன்கள்?? அவ்வளவு எளிதில் ஒருவனிடம் தங்கையை ஒப்படைத்து விடுவரா என்ன?? அதுவும் ஏற்கனவே ஒருவனை நம்பி அவனின் சாயம் வெளுத்த பின்னே..

“தனியா நின்னா… கூட நிக்கனுமா என்ன??” என்று கண்ணன் கேட்க,

“தனியா நிக்கிறது கண்மணி.. அப்போ நான் நிக்கத்தான் செய்வேன்…” என்றிருந்தான் அதிரூபனும்..

பேச்சு போகும் திசை கண்மணிக்கு இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து, இத்தனை நேரம் இருந்த இதமான ஓர் உணர்வை மறையச் செய்தது. அண்ணனும் சரி, அதிரூபனும் சரி தேவையில்லாது வார்த்தைகளை விடுகிறார்களோ என்று தோன்ற, இப்போது இங்கிருந்து கிளம்புவதே சரி என்றும் தோன்ற,

“அ.. அண்ணா.. போலாமா??!” என்றாள் கெஞ்சலாய்.

அவளின் குரலில் அத்தனை கெஞ்சல் இருந்தாலும், முகத்தினில் ஒருவித பதற்றம் இரு ஆண்களையுமே கொஞ்சம் அசைக்கத் தான் செய்தது. கண்மணி இருவருக்குமே இன்றியமையாதவள் இல்லையா… ஆனால் என்ன நேரமோ இல்லை யாரின் நேரமோ தெரியவில்லை, பேச்சு தான் வளரும் படி ஆகிற்று..

“ஓ..!! ரொம்ப தேங்க்ஸ்.. இனியாது போய் உங்க வேலை பாருங்க.. தேவையில்லாத விசயத்துல தலையிட வேண்டாம்…” என்று கண்ணன் சொல்லியபடி “வா கண்ஸ்…” என்று நகர,

“ஓஹோ..!! எனக்கு எது தேவை தேவையில்லைன்னு நான் தானே முடிவு செய்யணும்…” என்று அதிரூபனும் பதில் சொல்ல,

நின்று திரும்பி பார்த்த கண்ணனோ “நல்லது.. ஆனா கண்மணி விசயத்துல யார் தலையிட்டாலும் எனக்கு பிடிக்காது.. அவளை யார் டென்சன் பண்ணாலும் எனக்கு பிடிக்காது..” என்றான் அன்று அவள் பதற்றமாய் அதிரூபனின் எண்ணிற்கு அழைக்க முயன்று கொண்டு இருந்த காட்சியை நினைவில் வைத்து..

இருவரின் பேசும் ஒன்றிற்கு ஒன்று முரணாய் இருக்க, இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று எரிப்பது போலிருக்க, கண்மணிக்கோ சடுதியில் கண்கள் கலங்கிப்போனது..

“அண்ணா.. ப்ளீஸ்… வேணாம்..” என்றவளின் குரலில் இருந்த நடுக்கமும், கண்களில் தெரிந்த மெல்லிய நீர் கோடும்  இருவருக்குமே என்ன உணர்த்தியதோ,

“கண்ஸ்…” என்று கண்ணனும்,

“கண்மணி…” என்று அதிரூபனையும், அதிர்ந்து அழைக்கச் செய்ய,

“ப்ளீஸ்.. நீங்களும் கிளம்புங்களேன்…” என்றாள் அதிரூபனைப் பார்த்து..

கண்மணி அழுகிறாளா…??!!! கண்ணனுக்கு பெரும் அதிர்ச்சி இது.. வீட்டில் அப்படியொரு நிகழ்வு நேர்ந்தபோதும், அவளுக்கு என்று பார்த்து பேசி முடித்து வைத்தவன் கைது என்று தெரிந்த போதும் கூட ‘நான் ஏன் அழனும்…’ என்று கேட்ட கண்மணி, இப்போது இந்த ஒரு சிறு பேச்சிற்கு கண்கள் கலங்குகிறாளா? என்று பார்த்து நின்றுவிட்டான்.

ஆனால் அதிரூபனுக்கோ கோபமே வந்துவிட்டது. அவனின் கண்மணி அழுவதா.. அதுவும் இப்படி பொது இடத்தில் நின்று.. இதென்ன?? என்று தோன்ற,

“உங்களுக்கு என்ன பிடிக்குது பிடிக்கலை எல்லாம் எனக்கு தேவையில்லை.. ஆனா எனக்கு கண்மணி அழறது பிடிக்காது.. பிடிக்கலை.. அது யார்னால இருந்தாலும் சரி.. என்னால இருந்தா என்னையே எனக்கு பிடிக்காது…” என்று கண்ணனைப் பார்த்து சொன்னவன்,

“கண்மணி.. கிளம்பு.. எதுன்னாலும் பார்த்துக்கலாம்…” என்றவன் பைக்கைக் கிளம்பிக்கொண்டு சென்றுவிட, அண்ணனும் தங்கையும் அப்படியே நின்றுவிட்டனர்.

கண்மணிக்கு அதிரூபனின் வார்த்தைகளும், அதன் அர்த்தங்களும் மனதில் ஒரு பெறும் தாக்கம் கொடுக்க, அதனோடு சேர்த்து ஒரு  மென் வருடலையும் தந்திட, சின்ன சின்னதாய் ஓர் இதமான அதிர்வு அவளுள் லப் டப் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தது..

‘கண்ணனோ.. என்ன இவன் இப்படி சொல்லிட்டுப் போறான்…’ என்று தங்கையைப் பார்க்க, அவளோ இமைக்கவும் மறந்து தான் நின்றுகொண்டு இருந்தாள்.. இப்போது இங்கே எது பேசினாலும் அது சரி வராது என்று புரிந்து,

“கண்ஸ்… போலாமா…” என்று கேட்க,

“ஹா.. அ.. அண்ணா அது..” என்று அவள் இழுக்க,

“வீட்டுக்கு போய் பேசிக்கலாம்..” என்றவன் வண்டியை கிளப்பவும் இவளும் சரியென்று வந்தாள்.

ஆனால் வீட்டிற்கு வந்தாலோ, பேசும் நிலை இல்லை. மூர்த்தியும் அவர் மனைவியும் வந்திருந்தனர். சடகோபனும் சியாமளாவும் இறுகிய முகத்துடன் அமர்ந்திருக்க, கண்ணனோ என்ன விசயம் என்பதுபோல் தான் பார்க்க, கண்மணியோ இவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்றுதான் பார்த்தாள்.

“கண்ணா உன் கோபம் சரிதான். ஆனா நாங்களும் இப்படி ஆகும்னு நினைக்கலப்பா..” என்று மூர்த்தி திரும்பவும் தன் விளக்கவுரையை சொல்ல, சடகோபனோ மகனின் முகத்தைப் பார்த்தார் தேவையில்லாது வார்த்தைகளை விட்டுவிடாதே என்று.

அப்பாவின் பார்வையை உணர்ந்தவனோ “எல்லாம் சரிதான் அங்கிள்.. தப்பு எங்க மேலயும் தான்.. நாங்க இன்னும் விசாரிச்சு முடிவு பண்ணிருக்கணும்..” என்றான் கசந்து போன குரலில்.

மூர்த்தியின் மனைவியோ “கண்மணி.. நீ.. நீ மனசுல எதுவும் வச்சுக்காதம்மா.. உன் குணத்துக்கு நல்ல வாழ்க்கைதான் அமையும்..” என்று சொல்ல, கண்மணி பதிலே சொன்னாள்  இல்லை.

வருண் என்ற ஒருவன் அவளின் எண்ணத்தில் எப்போதுமில்லை.. ஆக இப்போதுமில்லை. அவன் இல்லையென்பதால் அவளின் வாழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. வருண் என்றவன் வந்ததாலும் இல்லை.. போனதாலும் இல்லை. அவளின் எண்ணங்களில் என்ன இருக்கிறது.. யார் இருக்கிறார்கள் என்றதெல்லாம் இப்போது தான் கண்ணனுக்கு வெட்ட வெளிச்சமாகிப் போனதே.

தங்கையைப் பார்த்தவன் “கண்ஸ் நீ போய் ரெஸ்ட் எடு..” என, அவளோ இது தான் சாக்கென்று அறைக்குள் வந்துவிட்டாள்.

வந்தபின்னே தான் அவளுக்கு இயல்பாய் சுவாசம் செய்வதாய் ஓர் உணர்வு.. வேகமாய் தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள், அதிரூபனிடம் இருந்து எதுவும் தகவல் வந்திருக்கிறதா என்று?? இதென்ன எதிர்பார்ப்பு?? அவளுக்கு விளங்கவில்லை.. ஆனாலும் மனது எதிர்பார்த்தது.

வெளியே அவர்கள் பேசுவது எல்லாம் காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவில்லை. போய் கண்ணாடியின் முன் நின்றவளுக்கு தானே புதிதாய் தெரிவது போல் இருந்தது.. காதலா?? எனக்கா?? அதுவும் அதிரூபன் மீதா??

விந்தையிலும் விந்தை..

அட.. காதல் விந்தைகள் செய்யவும் வைக்கும். பல வித்தைகள் காட்டிடவும் வைக்கும் தானே..

அண்ணன் என்ன நினைப்பான் என்றெல்லாம் அவளுக்கு இப்போது மனதில் இல்லை. மாறாக அதிரூபன் இப்போது என்ன நினைப்பான்?? என்னை நினைப்பானா?? என்றெல்லாம் யோசனை ஓட, இதழில் தானாக ஓர் புன்னகை.. எப்போதும் அவளிடம் இருக்கும் அவளின் புன்னகை. இப்போது திரும்ப வந்து அவளிடமே ஒட்டிக்கொள்ள,

“கண்மணி…” என்ற குரலில் தான் திரும்பிப் பார்த்தாள்.

கண்ணன் தான்.. அவளுக்கும் தெரியும் அண்ணன் எதுவும் கேட்பான், கேட்க வருவான் என்று.. மனது ஒருவித தயார் நிலையில் தான் இருந்தது. ஆனால் கண்ணனோ வேறு எண்ணினான்..

“இங்க பார் கண்ஸ்.. நான் எதுவும் உன்னை கேட்க போறதில்ல.. ஆனா இமோசன்ல எந்த முடிவும் எடுக்கிறது சரியில்லை.. இப்போ நம்மளை சுத்தி நிறைய குழப்பம் இருக்கு.. நிறைய அதிர்ச்சியானது எல்லாம் நடந்தாச்சு.. இந்த மாதிரி நேரத்துல சில விஷயங்கள் எல்லாம் நமக்கு சாதகமா தெரியும்.. சிலது நமக்காகவே நடக்கிறது போல இருக்கும்..

ஆனா எதையும் அத்தனை சீக்கிரத்துல முடிவு பண்றது சரியில்லை.. அது எதுவா இருந்தாலும்.. நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்..” என்று ஒரு அண்ணனாய் அறிவுரை சொல்ல,

“ம்ம்.. சரிண்ணா..” என்றுமட்டும் சொல்லிக்கொண்டாள்.

“கண்ஸ்… எனக்கு ஒன் வீக் ஹைதராபாத்ல ட்ரைனிங் போட்டிருக்காங்க.. நாளைக்கு கிளம்பனும்.. எனக்கு இப்படியொரு சூழ்நிலைல போகவும் மனசில்லை.. ஆனா போய்தான் ஆகனும்.. இங்க அப்பா அம்மாவை நீதான் பார்த்துக்கணும்..”

“ம்ம் சரிண்ணா…”

“உனக்கு சொல்ல வேண்டியது இல்லை.. ஆனா எதுன்னாலும் சட்டன்னு முடிவு பண்ணி உன்னை நீயே குழப்பிக்காத..”

“ம்ம் சரிண்ணா…”

கண்மணியின் இந்த பதில், கண்ணனுக்கு என்ன உணர்த்தியதோ, ஆனால் கண்டிப்பாய் ஊருக்கு போய்விட்டு வந்து இந்த விசயத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று மட்டும் எண்ணிக்கொண்டான்.

“சரி வா.. அவங்க எல்லாம் போயாச்சு…” என்று கண்ணன் இவளை வெளியே அழைக்க, இருவரும் வெளியே வரவுமே,

சடகோபன் “கண்ணா.. நீ ஊருக்குப் போயிட்டு வந்ததும், நம்ம கண்மணிக்கு இதை விட நல்ல இடமா பாக்கணும்டா.. இந்த வருண் எல்லாம் என்ன ஆளுன்னு சொல்றது போல நல்ல இடமா பாக்கணும்.. நல்ல வேலைல.. நல்ல குடும்பமா பாக்கணும்டா..” என்று சொல்ல,

கண்மணிக்கு ‘அய்யோ…!!’ என்ற அதிர்ச்சி..

அது அவளின் முகமே காட்டிவிட, சியாமளா அதனைப் பார்த்தவர் “கண்மணி நீ எதுக்கும் கவலைப் படாத..” என்று சொல்ல,  ஹ்ம்ம் அவள் எதற்கு கவலைப் படுகிறாள் என்று அவளுக்குத் தானே தெரியும்..

கண்ணனோ “ப்பா.. எதுன்னாலும் பொறுமையா பாப்போம் ப்பா..” என்று சொல்லி இந்த விஷயத்தை முடித்துவிட்டான்..

அங்கே கடைக்கு சென்ற அதிரூபனுக்கோ காற்றில் மிதக்காத குறைதான்.. கண்மணி காட்டிய ஒவ்வொரு பாவனையும்.. கண்மணி பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்.. கடைசியாய் கண்மணியின் அந்த கண்ணீர் விழிகளும், அவள் மனதில் இருப்பதை தெள்ளத் தெளிவாய் புரிய வைத்தது..

‘ஹ்ம்ம் இவ எந்த தைரியத்துல கல்யாணத்துக்கு சரின்னு சொன்னா.. இப்போ இல்லைன்னாலும் ஒரு ஸ்டேஜ்ல கண்மணியே அதை நிறுத்தியிருப்பா…’ என்று அவனுக்கு அவனே கேள்வியும் பதிலுமாய் பேசிக்கொள்ள,

“சார் இந்த ஆர்டர் இன்னிக்கு கொடுக்கணும்..” என்று கடையில் இருப்பவர் சொல்ல,

“ஓ… கொடுத்துடலாமே…” என்று சந்தோசமாக பதில் சொன்னவனைப் பார்த்து அந்த மனிதருக்கே ஆர்ச்சர்யமா போனது..

கையை உடைத்து கட்டுப் போட்டு, கடுகடு முகத்தோடு இருந்தவனா என்றுதான் பார்த்தார்.. அவர் பார்வை எல்லாமா அவனுக்கு முக்கியம்..?? வேலை என்ன ஏது என்று பார்த்தவன், பின் டாக்கென்று அவனின் அலைபேசி எடுத்துப் பார்க்க, அது இன்னும் அமர்த்தி தான் வைக்கப் பட்டு இருப்பது கண்டு,

“ச்சே….” என்று நொந்தபடி ஒரு சிரிப்பை உதிர விட்டவன், வேகமாய் ஆன் செய்து முதல் வேலையை வாட்ஸ் அப்பில் கண்மணிக்கு “ஹாய்..” அனுப்ப,

அதன் பின் என்ன இரண்டு அலைபேசி நெட்வொர்க்களுக்கும் இடையில் காதல் கன்னத்தில் கை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தது.. பச்சை கொடியை ப்ளூ டிக் வருமா?? என்று பார்க்க, டிக் என்னவோ சிறிது நேரத்தில் வந்துவிட்டது, ஆனால் பதில் தான் வர வெகு நேரமானது.

கண்மணிக்கு அதிரூபனின் எண்ணில் இருந்து ‘ஹாய்..’ வரவுமே.. ஒரு திடுக்கிடல்.. கைகள் இரண்டும் போனைப் பிடித்திருந்தாலும், கம் போட்டு ஒட்டியது போல் விரல்களோ நகர்வேணா என்று அடம் பிடித்தது..

“நீ படிச்சிட்டன்னு தெரியும்.. பதில் சொல்லிடேன்..” என்று சிரிப்பு பொம்மையோடு திரும்பவும் அவனிடம் இருந்து அடுத்த மெஸ்சேஜ் வர, அதே சிரிப்பு பொம்மையாய் கண்மணி மாறிப்போனாள்..

‘ம்ம் என்ன அனுப்ப??!!’ என்று அவளின் மூளை வேலை செய்வதற்குள், “கண்மணி…” என்ற அம்மாவின் அழைப்புச் சத்தம் கேட்க,

“வர்றேன் ம்மா..” என்றவள், அப்படியே அலைபேசியை கட்டிலில் கிடத்திவிட்டு போய்விட, அதிரூபனோ பார்த்தவிழி பார்த்தபடி இருந்தான்..

வேலைகள் ஒருப்பக்கம் கை செய்தாலும், கண்கள் என்னவோ அவளின் பதிலுக்காகவே காத்திருந்தது.. ‘காதல் சொல்லடி என் கண்மணி.. காத்திருப்பேனடி அடி நானடி..’ அவனாக வார்த்தைகளை கோர்த்து ஒரு ஹம் செய்துகொண்டு இருக்க, அவர்களின் பொழுதில் அடுத்து அடுத்து இனிய மொழிகள் இனி பேசிக்கொள்ளும் என்று காலமும் சொல்லிக்கொண்டது..                        

                       

       

       

Advertisement