Advertisement

தூறல் – 15

“பணத்திற்காக, மத்திய அரசாங்கத்தின் தகவல்களை சில தனியார் நிறுவனங்களுக்கு விற்றமைக்காக, சென்னையை சார்த்த வருண் என்ற இளைஞரும் அவனின் நண்பர்கள் சிலரும், மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் இன்று கையும் களவுமாக பிடிக்கப் பட்டனர்…”

 என்ற தலைப்பு செய்தியே மாறி மாறி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க, அதனைப் பார்த்த சடகோபனோ ஏற்கனவே பதற்றத்தின் உச்சத்தில் இருக்க, இப்போதோ சியமாளா கேட்கவே வேண்டாம்.

‘அய்யோ…’ என்று நெஞ்சில் கை வைக்க, “சியாமி… சியாமி…” என்ற சடகோபனின் அழைப்பு, அவரை திரும்பிப் பார்க்க வைத்தது.

சடகோபனோ முகமெல்லாம் வியர்த்து ஒருமாதிரி இருக்க, “என்னங்க பண்ணுது??” என்று பதறியவர்,

இதற்குமேல் அமைதியாய் இருத்தல் நலமன்று என்று, வேகமாய் “கண்ணா…” என்று மகனை அழைக்க, பக்கத்து அறையில், அப்போதுதான் உறங்கச் சென்ற கண்ணனோ சியாமளாவின் அலறலில் அடித்துப் பிடித்து எழுந்து வந்தான்.    

“என்னம்மா என்னாச்சு??!!!” என்றபடி வர, அதற்குள் இவரின் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த ஒருசில உறவுகளும் எழுந்திட, கண்மணியும் வேகமாய் வர, கண்ணனோ அறையினுள் நுழைந்தவன்,

“அப்பா…” என்று சடகோபனின் கரத்தினை பற்றியிருந்தான்.

என்ன விசயம் என்று தெரியாது, அப்பாவிற்கு என்னவோ என்றுமட்டும் புரிய, அவரோ கண்மணி உள்ள வரவும் அவளைப் பார்த்து இன்னும் வருத்தமாய் முகத்தினை வைத்து, கண்ணனிடம் என்னவோ சொல்ல முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை..

“ப்பா.. என்னப்பா என்ன பண்ணுது??” என்று கண்ணன் கேட்கும்போதே, கண்மணி “ப்பா…” என்று மறுபுறம் வர,  உறவுகளோ “என்னாச்சு??” என்று விசாரிக்க,

சியாமளாதான் “கண்ணா பேச நேரமில்லடா.. ஹாஸ்பிட்டல் போயிடலாம்.. எதுன்னாலும் அங்க பார்த்துப்போம்..” என்று சொல்ல, சடகோபனோ “வேண்டாம்…” என்று தலையை ஆட்டி மறுத்தார்.

“ப்பா ப்ளீஸ் ப்பா..” என்றவன், “ம்மா கூட்டிட்டு வாங்க..” என்று வேகமாய் போய் காரை கிளப்ப, சியாமளாவிற்கு உள்ளே பதறினாலும், கொஞ்சம் திடமாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டே கணவரை அழைத்துக்கொண்டு மெதுவாய் நடக்க,

அவரின் வாயோ “ஒண்ணுமில்லைங்க.. எல்லாம் நல்லதுக்குன்னு நினைப்போம்..” என்று சொல்ல, கண்மணிக்கோ எதுவுமே புரியவில்லை..

“ப்பா தைரியமா இருங்க…” என்று அவரின் உடலுக்காக ஆறுதல் சொல்ல, அவரோ மகளின் முகம் கண்டு மேலும் மேலும் வேதனையுற்றார்.

கண்மணிக்கு அப்பாவின் பார்வையில் என்ன புரிந்ததோ, அம்மாவை கேள்வியாய் பார்க்க, அவரோ “பார்த்து பார்த்து…” என்றுசொல்லி சடகோபனை காரினுள் அமர வைத்தவர்,

“கண்மணி நீ வீட்ல இரு.. இத்தனை பேர் இருக்காங்க.. பாத்துக்கணும்.. ஒண்ணுமில்ல பிரசர் கூடிருக்கும்…” என்றுவிட்டு, சியமாளாவும் காரில் ஏறிட, அடுத்து வேகமாய் காரும் நகர்ந்திட, கண்மணியோ அப்படியே வாசலில் நின்றிருந்தாள்..

மனம் பதறிக்கொண்டே இருந்தது. என்னாச்சு?? அப்பா நல்லாதானே இருந்தார்.. ஏன் திடீர்னு?? என்று பல கேள்விகள் அவளுள். அனைத்தையும் தாண்டி “கடவுளே அப்பாக்கு எதுவும் இருக்கக் கூடாது…” என்று மனது வேண்ட,

“கண்மணி உள்ள வா மா..” என்று வீட்டினுள் இருந்து சத்தம் வர, வேகமாய் உள்ளே விரைந்தவள், அனைவரோடும் சும்மாவாது இருக்க வேண்டுமே என்று ஹாலில் அமர்ந்திருக்க, அடுத்து ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பேச ஆரம்பித்தனர்.

ஆனால் அவர்களின் பேச்சினைக் கேட்டு, கண்மணிக்கோ எரிச்சலாய் வந்தது. இங்கே என்ன நிலவரம், அதைவிட்டு இப்படியா பேசுவது என்று.. மருத்துவமனை சென்றவருக்கு எதுவும் இருக்கக்கூடாது என்று நினைப்பதை விட்டு என்று எண்ணியவள், வேண்டியபடியே, அப்பா அம்மா அறைக்குள் செல்ல, அங்கேயோ இன்னமும் கூட தொலைக்காட்சி தன் ஒளிபரப்பினை செய்துகொண்டு தான் இருந்ததது..

ஸ்விட்ச் போர்ட் நோக்கிப் போனவளோ தற்செயலாய் பார்வையை டிவியில் பதிக்க, அது அந்த நேரம் பார்த்து மீண்டும் வருண் பற்றிய செய்தியினை ஒளிபரப்ப, கண்மணியின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்து, இமைக்கவும் மறந்து  அப்படியே நின்றுவிட்டாள்.. மனதினுள்ளே ஒரு உணர்வு.

ஏமாற்றமா?? வலியா?? தெரியவில்லை… அதிர்ச்சிதான் அதிகம் இருந்தது..

‘வருண் இப்படியானவனா??!!’ என்ற கேள்வி..

இதுநாள் வரைக்கும் அவனைப் பற்றிய ஒரு ஆராய்வு அவள் மனம் நிகழ்த்தியதில்லை. அதற்கு முயன்றதுமில்லை. தோன்றியதுமில்லை.. ஆனால் இன்றோ, முடிவே எழுதிவிட்டது எனலாம். ‘பணத்திற்காக….’ என்ற வார்த்தை அவள் முகத்தினை சுறுக்க வைக்க,  “ச்சே..” என்று கண்மணியின் இதழ்கள் முணுமுணுத்தது.

‘இது பார்த்து தான் அப்பா டென்சன் ஆனாரோ…’ என்றெண்ணியவள், டிவியை அமர்த்திவிட்டு, வேகமாய் அவளின் அறைக்கு வந்து அலைபேசியில் கண்ணனை அழைக்க, அங்கே மருத்துவமனையிலோ, கண்ணனும் சியாமளாவும் அமர்ந்திருக்க, சடகோபனை உள்ளே மருத்துவர்கள் பரிசோதித்துக்கொண்டு இருந்தனர்.

கண்ணனோ “எத்தனை தடவ சொன்னேன்.. கொஞ்சம் விசாரிப்போம்.. கொஞ்சம் பொறுமையா முடிவு பண்ணலாம்னு..” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,

“இந்தளவு தப்பிச்சோம்னு நினைக்கணும் கண்ணா…” என்றார் சியமாளா தைரியம் சொல்லும் விதமாய்.

சடகோபனை காட்டிலும் சியமாளாவிற்கு அதிர்ச்சிதான். அடுத்து என்ன?? கண்மணியின் வாழ்வில் அடுத்த முடிவு என்பது என்ன?? சடகோபனின் உடல்நிலை இதெல்லாம் அவர் மனதிலும் ஓடியது தான். ஆனால் அவரும் கலங்கிப் போனால் பிள்ளைகளுக்கு யார் ஆறுதல் சொல்வது??  வீட்டில் இருக்கும் பெண்மணி கலங்கினால், மொத்த குடும்பமும் தான் ஆட்டம் காணும்.. ஆக சியாமளா தன்னைத் தானே திடம் செய்துகொண்டார்.   

“ஆனாலும் ம்மா…” என்று கண்ணன் சொல்லும்போதே, கண்மணியின் அழைப்பு வந்திட, எடுத்துப் பார்த்தவனோ  “என்ன சொல்லட்டும்…” என்று அம்மாவினை கேட்க,

“செக்கப் பண்ணிட்டு இருக்காங்கன்னு மட்டும் சொல்லு வேறெதுவும் இப்போதைக்கு வேணாம்..” என, அவனும் அப்படியே சொன்னான்..

“வே.. வேற எதுமில்லையே??” என்று கண்மணி பயந்தே கேட்டாள்.

“அப்பாக்கு பிரசர் தான் கூடிருச்சு போல.. வேறொன்னும்மில்லை.. நீ எதுவும் டென்சன் ஆகாத…” என்று எத்தனை மென்மையாய் கூற வேண்டுமோ கண்ணன் அப்படி பேச, கண்மணிக்கோ அண்ணனுக்கும் தெரிந்தது என்ற எண்ணத்தில் தொண்டை அடைத்தது..

கண்ணனுக்கும் அப்படித்தான். ஆனால் காட்டிக்கொள்ள வில்லை. கண்மணிக்கு ஒரு நல்ல இடம், அதுவும் ஓரளவு தெரிந்தவர்கள் குடும்பம் என்று அமைந்து வருகையில், அதுவும் கூட முடிவே செய்து நிச்சய தேதி குறித்து அனைவரும் சந்தோசமாய் இருக்கையில் இப்படியா என்று தோன்றினாலும், சியாமளா சொல்லியது போல் இந்தளவு தப்பித்தோம் என்று மனம் நிம்மதியடைய, கண்மணி இதனை எப்படி ஏற்றுக் கொள்வாளோ என்று அவளை எண்ணி கவலையாய் இருந்தது.

“ம்ம் சரிண்ணா…” என்றவள் வைத்துவிட,

சிறிது நேரத்தில் செக்கப் முடிய, மருத்துவர்களோ “திடீர் அதிர்ச்சி.. அதனால பிரசர் கூடிருச்சு.. வேறே பிரச்சனையில்லை.. கொஞ்சம் டென்சன் இல்லாம பார்த்துக்கோங்க….” என்றுவிட, அதன் பின் இவர்கள் வீடு வரகொஞ்ச நேரமானது.

சியாமளாவோ  வீட்டிற்கு வந்ததுமே “பிரசர் கூடிருச்சு..” என்றுமட்டும் சொல்ல,

“அப்பா நீங்க ரெஸ்ட் எடுங்க..” என்று கண்ணனும் அவரை அழைத்து செல்ல, கண்மணியோ அமைதியாய் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டாள்.

சடகோபனின் பார்வை மகளின் முகத்தினில் படிய, “ஒண்ணுமில்ல ப்பா… நீங்க ரிலாக்ஸா இருங்க..” என்றவள், அவரோடு உள்ளே வர,

வீட்டில் இருந்த உறவுகளோ அங்கே சியாமளாவிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டு நச்சரித்துக்கொண்டு இருந்தனர். அனைவர்க்கும் ஒருவேளை, கண்ணனின் காதலினால் தான் சடகோபனுக்கு இப்படியானதோ என்று பேச,

சியாமளாவோ “அதெல்லாம் ஒண்ணுமில்ல….” என்று சமாளித்தார்.

“கண்மணி நீ அப்பாவோட இரு… நான் போய் வெளிய பாக்குறேன்…” என்றுவந்த கண்ணனோ, அனைவரின் பேச்சையும் பார்த்து,

“எங்கப்பாக்கு எப்பவுமே அவர் பிள்ளைகளை நினைச்சு பெருமைதான்.. நாங்களும் அவரை மீறினது இல்லை.. ஆனா இப்போ வேறொரு பிரச்சனை.. கண்மணி கல்யாணம் கொஞ்சம் தள்ளி போகற சூழல்.. அதுதான்..” என்றுவிட்டான். இன்னது விஷயம் என்றும் சொல்லாமல், ஆனால் இதுதான் சூழ்நிலை என்றும் சொல்லி..

“என்னாச்சு?? அடுத்த வாரம் நிச்சயம் வச்சிட்டு இப்படி பேசுற..” என்று சடகோபனின் அக்கா கேட்க, “அண்ணி.. எதுன்னாலும் காலையில பேசிக்கலாம்…” என்றார் சியமாளா..

“சியாமளா எதுன்னாலும் எங்களுக்கு சொன்னாதானே தெரியும்…” என, அவரோ மகனின் முகம் பார்க்க, கண்ணனோ ‘இதற்குமேல் சொல்லாமல் இருந்து என்ன செய்ய..’ என்றெண்ணி சொல்லிவிட,

“அடக்கடவுளே….!!!” என்று அங்கிருந்த அனைவருமே புலம்ப ஆரம்பித்தனர்.

சடகோபன் உறக்கத்திற்கு செல்ல, கண்மணி அதன்பின்னே எழுந்து வெளியே வர, அனைவரும் அவளைப் பாவமாய் பார்க்கவும், கண்ணனுக்கோ இன்னமும் சங்கடமாய் இருந்தது. ஏன் இவளுக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்றும் தோன்ற

“கண்ஸ்….” என்று எதுவோ சொல்ல வந்தவனை ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாய் அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.

அவளின் பார்வையே சொன்னது, எனக்கும் எல்லாம் தெரியும் என்று.  சியாமளாவும், கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, சியமளாவோ, வீட்டில் இருப்பவர்களை உறங்கச் செல்லுமாறு கூறிவிட்டு, மகளைப் பார்க்கப் போக,

கண்மணியோ “ம்மா… நான் எதுவும் நினைக்கல…” என்றுவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவளுக்கு இப்போது ஆறுதல், அரவணைப்பை தாண்டியும் ஒரு தனிமை தேவைப்பட்டது..  அவளின் அதிர்ச்சியை ஜீரணிக்க.. அவ்வளவே.. அதை தாண்டி, வருண் தன் வருங்கால கணவன் என்றோ.. அவனது இப்போதைய நிலையை எண்ணியோ.. அடுத்தது வீட்டினில் என்ன முடிவெடுப்பர் என்றோ எந்த சஞ்சலங்களும் அவள் மனதினில் இல்லை.

அவளின் தேவை இப்போது தனிமையே..

அதை அவளே ஏற்படுத்திக்கொள்ள, வீட்டினரின் மனதோ ஒவ்வொரு விதமாய் இருந்தது. கண்ணனோ “ம்மா அப்பா போன் எடுத்து கொடு…” என்றுசொல்லி அதனை வாங்கிக்கொண்டு அவனின் அறைக்கு சென்றுவிட்டான்.. வருண் வீட்டினர் ஒவ்வொருவருக்கும் அழைத்துப் பார்க்க, அதுவோ அலைபேசி அமர்த்தியிருப்பதாகவே செய்தி வர அவனுள் அப்படியொரு கோபம்..

அனைவரும் சேர்ந்து தங்களை ஏமாற்றியதகவே பட, காலையில் விடிந்ததும் முதல் வேலையாய் மூர்த்தி வீட்டிற்கு போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

நல்ல வேலை, மறுநாள் பொழுது புலர்ந்ததும், வீட்டில் இருந்த உறவுகளும், “பார்த்துக்கோங்க…” “யோசிச்சு முடிவு பண்ணுங்க…” என்று அறிவுரையும் ஆறுதலும் சொல்லிவிட்டு கிளம்ப, அதன்பின்னே தான் இவர்களாலும் கூட கொஞ்சம் இயல்பில் வருத்தம்கொள்ள முடிந்தது.

சடகோபனோ வாயே திறக்கவில்லை. மனது அவருக்கு நிறைய காயம் பட்டிருக்கிறது என்பது அவரைப் பார்த்தாலே புரிய, கண்ணனின் காதல் விஷயம் கேட்டு கூட கலங்காத மனிதர், மகளின் வாழ்விற்கென தேர்ந்தெடுத்த ஒருவன் இப்ப்டியானவனா என்று தெரிந்து பெரிதும் கலங்கிப் போனார்.

சிறிது நேரத்திலேயே கண்ணன் “ம்மா நான் மூர்த்தி அங்கிள் வீட்டுக்கு போறேன்..” என்றுவிட்டு யாரின் பதிலையும் எதிர்பாராது கிளம்பிட,

சடகோபனோ கண்மணியை அழைத்து அருகே சும்மா அமர வைத்துக்கொள்ள அவளும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள். தன் பங்குக்கு, அவரும் வருண் வீட்டினரோடு தொடர்புகொள்ள முயல, அப்போதும் யாரும் எடுத்தாரில்லை.

அதனைப் பார்த்த கண்மணியோ “ப்பா.. விடுங்கப்பா..” என்றுமட்டும் சொல்ல, அவளின் குரலும் முகமும் காட்டிய பாவனையில் சியாமளா வந்த அழுகையை விழுங்கிக்கொண்டார்..

இறுக்கமான சூழல் தான், ஆனால் ஓருவருக்காக மற்றவர், அதனை தளர்த்திக்கொள்ளவே விரும்ப, கண்ணனும் வந்து சேர்ந்தான். அடக்கப்பட்ட கோபத்தோடு.

“அங்க போனா ஒருத்தரும் இல்லை.. வீடு பூட்டிருக்கு.. அந்த வருணை பத்தி மூர்த்தி அங்கிளுக்காவது தெரியுமா தெரியாதா?? எத்தனை தடவ சொன்னேன் என்னவோ சந்தேகமா இருக்குன்னு…” என்று வந்தமர்ந்தவனுக்கு கண்மணி குடிக்க நீர் கொண்டு வந்து கொடுக்க,           

இவளால் எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று அனைவர்க்கும் அந்த நொடி கண்மணியை எண்ணி வியப்பாகவே இருந்தது.

கண்ணனோ “கண்மணி.. நீ ஏன் இப்போ இப்படி இருக்க??” என, அவளோ ‘எப்படி??’ என்று பார்த்து வைத்தாள்.

“எதுவும் மனசு விட்டு ப்ரீயா பேசு… இல்ல அழனுமா அழு… உன்னை நீயே ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத…” என,

“நா.. நான் ஏன் அழனும்??” என்று கேட்டவளை எண்ணி அனைவர்க்கும் இன்னும் வியப்பு மேலிட,

“கண்மணி…!!!!”

“ம்மா ப்ளீஸ்.. எதுவும் பேசவேணாம்.. இதுக்குமேல எப்படி ரியாக்ட் பண்றது தெரியலை. ஆனா அழனும்ங்கிற அளவுக்கு எல்லாம் எதுவுமில்லை…” என்றவள், எழுந்து சென்றுவிட்டாள்.

சடகோபன் அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர், “அவளை எதுவும் சொல்லவேணாம்..” என்றுசொல்ல,  அன்றைய தினமும், அடுத்து வந்த தினமும் அப்படியே தான் நகர்ந்தது. வருண் குடும்பத்தினரோடு எவ்வித தொடர்பும் கொள்ள முடியவில்லை.      

இரண்டு நாட்கள் கழித்து அன்றுதான் அதிரூபன் அவனின் அலங்காருக்கு வந்துகொண்டு இருந்தான். அதுகூட மஞ்சுளா செய்த விரட்டியடிப்பு தான். சுப்பிரமணியும், சாந்தியும், இதற்கு முதல்நாள் தான் அவர்களின் ஊருக்குச் சென்றிருந்தனர். இவனுக்கு கை நன்றாகவே ஆகிவிட, அதற்குள் கண்மணி தனக்கு நிச்சயம் என்ற குண்டை போட இதோ இப்போதோ அதிரூபனின் நிலை அந்தோ பரிதாபம். என்ன முயன்றும் அதிரூபனுக்கு கண்மணியின் எண்ணங்களில் இருந்து வெளிவரவே முடியவில்லை.  அதன் பொருட்டு அறையில் இருந்தும் வெளிவராது இருக்க, மஞ்சுளா தான் “கிளம்பு கிளம்பு கடைக்கு போயிட்டு வந்து பீல் பண்ணிக்கோ..” என்று துரத்திவிட்டார்.

“ம்மா ஏன் ம்மா… என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ…”

“டேய் நீ லவ் சொல்லி பிரச்சனையாகி வந்து இப்படி முகத்தை தூக்கி படுத்தா கூட, நான் ஏதாவது சொல்வேன்.. ஆனா நீ சொல்லவே சொல்லாத லவ்வுக்கு எல்லாம் உன்னை புரிஞ்சுக்க முடியாது.. பொழப்ப பாக்குற வழிய பாரு..” என, அதிரூபனுக்கு மனது குமுறிக்கொண்டே இருந்தது.

ஆனால் வீட்டில் மட்டும் இருந்து என்ன செய்ய?? கடையில் இருந்து அவனின் இன்னொரு எண்ணுக்கு அத்தனை அழைப்புகள்.. ம்ம்ச் என்று சலித்தவனை எல்லாம் சேர்ந்து கிளம்ப வைக்க, அலங்காருக்கு வந்து கடைக்கு கொஞ்சம் தள்ளி பைக்கை நிறுத்த, தீபாவை எதேர்ச்சயாகத்தான் அதிரூபன் பார்க்க நேர்ந்தது.

பேசாது கடந்து விடுவோம் என்று எண்ணுகையில், தீபாவோ “ப்ரோ…” என்று சத்தமாய் அழைத்துவிட, ஒருவித திணறலோடு தான் நின்றான் அதிரூபன்.

‘கடவுளே இவ என்ன சொல்லப் போறாளோ…’ என்று பார்க்க, “என்னை தெரியுதா??” என்றாள் தீபா.

“ம்ம்…” என்றவன் “வாழ்த்துக்கள்…” என்றுசொல்ல,

“தேங்க்ஸ்…” என்றவள்  “உங்களுக்கு எப்படி தெரியும்???” என்று தீபா கேட்க, ‘ஐயோ உளறிட்டோமோ…’ என்று பார்த்தான் அதிரூபன்..

ஆனால் தீபாவோ “கண்ஸ் சொன்னாளா??” என்றுவிட்டு “பாவம் அவ எங்களுக்கு நல்லது நினைச்சா ஆனா அவளுக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே..” என்று தன் போக்கில் சொல்ல, “ஏன் ஏன் என்னாச்சு???” என்றான் இவன் வேகமாய்.

மனதில் லேசாய் ஒரு பொறி தட்டியது, ‘அதிரூபா காத்து உன் பக்கம் வீசுதுடா…’ என்று மனம் சொல்ல, தீபாவோ, நடந்ததை சுருக்கமாய் சொல்லிட, கண்மணி வீட்டினரை எண்ணி ஒருபுறம் வருத்தம் இருந்தாலும், அதிரூபனுக்கு நிஜமாகவே சந்தோசமாய் தான் இருந்தது

“என்ன என்ன சொல்றீங்க??” என்று கேட்டவன் முகத்தினில் அப்பட்டமாய் சந்தோசமே வெளிப்பட, தீபாவோ அதெல்லாம் கவனிக்கும் மன நிலையில் இல்லை போல,

“ம்ம்.. பாவம் எங்க கண்ஸ்.. இப்போதான் கோவிலுக்கு போறா.. நான் உங்க கடைல கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வீட்டுக்கு போலாம்னு வந்தேன்…” என்றவளிடம்,

“ஓ.. சரி சரி நீங்க உள்ள போய் பாருங்க.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..”  என்றவன் கிளம்பிவிட்டான்.    

அவனுக்குத் தெரியும்.. மனதில் ஒரு எண்ணம்.. எண்ணமோ ஊர்ஜிதாமோ, அடுத்த நொடி பைக்கில் பறந்தான்..

‘கண்மணி… இதோ வர்றேன்…’ என்று பறக்க, “அதிரூபா உனக்கு ஹெல்ப் பண்ண அந்த கடவுளே இருக்காருடா…” என்றவன் அத்தனை வேகமாய் சென்ற இடம், வேறெங்கே, மத்ய கைலாஷ் தான்..

பின்னே கண்மணி அங்கேதானே இருப்பாள்.. அந்த எண்ணம் அவனுக்கு உறுதியாய் இருக்க, அவனின் உறுதியும் வீண் போகவில்லை.. நேரே உள்ளே சென்றவன் அன்று அவள் அமர்ந்த இடத்திற்கு செல்ல, அன்றுபோலவே இன்றும் சிலையென அமர்ந்திருந்தாள் கண்மணி..

‘ஆனா ஊனா சிலையாகிடுவா…’ என்றெண்ணியவனுக்கு என்ன முயன்றும் அவனின் மகிழ்வை மறைக்கவே முடியவில்லை..

“கண்மணி…” என்று மெதுவாகவே அழைக்கவேண்டும் என்று எண்ணியவன் அவனையும் மீறி சத்தமாய் அழைத்திட, வேகமாய் திரும்பிப் பார்த்தவளின் முகத்தினில்  ‘எப்படி வந்தாய்…??’ என்ற கேள்வியே இருக்க,

“நீ இங்கதான் இருப்பன்னு தெரியும்…” என்றான் சந்தோசமாய்.

கண்மணி கண்களை சுருக்கிப் பார்க்க, “இப்போதான் தீபாவ பார்த்தேன்.. எல்லாம் சொன்னாங்க..” என, “ஓ…” என்று வழக்கமான இதழ் குவிப்பு அவளிடம்..  

‘அதிரூபா.. கொஞ்சம் அடக்கிவாசி…’ என்று அவனின் அறிவு சொல்ல, “ம்ம் ம்ம்” என்று மண்டையை உருட்டியவன், “அப்பா எப்படி இருக்கார்??” என,

“ம்ம் நல்லாருக்கார்…” என்றாள் பார்வையை எங்கோ வைத்து..

“கண்மணி பீல் பண்றாளோ??” என்று அதிரூபன் ஆராய, அவளோ டக்கென்று இவனை நேருக்கு நேராய் பார்த்து, “நீங்க ஏன் அப்படி பேசினீங்க அன்னிக்கு..” என்றாள்..

அவனுக்கு சுத்தமாய் தான் கோவப்பட்டு கத்தியது எல்லாம் நினைவிலேயே இல்லை.. இப்போது அவனும் கண்மணியும் நேருக்கு நேர் நிற்கின்றனர் அவ்வளவே.. அதுமட்டுமே மனதிலும், நினைவிலும்.. ஆக, “எப்.. எப்போ??” என்று கேட்டுவிட,

“அ… அதான்.. நா.. நான் வருண்கிட்ட பேசினேன் சொன்னப்போ..” என்றாள் பார்வை முழுதையும் அவன் முகத்திலேயே பதித்து..

‘இப்படி பார்த்தா நான் எப்படி பேசுவேன்…’ என்று அவனுக்கு சொல்லத் தோன்றியதோ என்னவோ, ஆனால் வருண் என்ற பேச்சே அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் கண்மணியின் இதழ்கள் அவனின் பெயரை உச்சரிப்பதா?? ம்ம்ஹும் கூடவே கூடாது என்றெண்ணியவன்

“இப்போ எதுக்கு அது.. விடேன்..” என்றான் கொஞ்சம் சலுகையாய்.

“ஆ..!!! திட்டு வாங்கியது நானு..” என்று கண்மணி பார்க்க,  

“நீ ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? அழுதியா என்ன?? இதுக்கெல்லாம் நீ அழலாமா??” என்று இவள் வருந்தியிருப்பாளோ என்ற எண்ணத்தில் அதிரூபன் கேட்டுவிட்டான்..         

“என்ன இதையே எல்லாரும் கேட்கறீங்க?? அப்போ நான் அழனுமா??” என்று கண்மணி கோவப்பட,

“ஹே ஹே நான் அப்படி சொல்லலை..” என்று அதிரூபன் சாமாதானத்தில் இறங்க, அவனின் குரலோ கொஞ்சத்தான் செய்தது.

“பின்ன எப்படியாம்??” என்று புருவம் சுளித்து முகத்தை உர்ரென்று வைத்தே கண்மணி கேட்டாலும், அது அவனிடம் இருக்கும் உரிமையை காட்டுவதாகவே அவனுக்குத் தெரிய,

“சரி சரி கோவிக்காத கண்மணி…” என்றான் இன்னமும் மிருதுவாய்..

“நான் கோவப்படல.. ஆனா இப்படி கேட்டா எப்படி?? நான் ஏன் அழனும்…”

“சரி சரி கூல்…” என்றவனுக்கோ, கண்மணியின் பேச்சிலேயே அவளின் மனது  புரிந்துபோக, அவனின் மனமும் கூல் ஆனது தான்.  

“நிஜமா சொன்னா எனக்கு வருத்தமோ, ஏமாற்றமோ எல்லாம் இல்லை.. ஒரு ஷாக் இருந்தது அவ்வளோதான்..” என்று வேகமாய் அப்போதும் கூட முனுமுனுப்பாகவே பேச,

அதிரூபனுக்கு அவள் இப்படி அவனிடம் உரிமையாய் பேச பேச,  “ஹ்ம்ம் நான் உன் கண்ண பார்த்து பேசணும் நினைக்கிறேன்.. ஆனா நீ இங்க பார்த்து பேச வைக்கிற..” என்று கண்மணியின் இதழ்களை நோக்கி அதிரூபன் விரல் நீட்டி சொல்ல,

“ஹா…!!!!!” என்று அதிர்ச்சி பாவனை தான் காட்டினாள் கண்மணி..

“என்ன அப்படி பாக்குற நிஜமாதான் சொல்றேன்… நீ இப்படி மெதுவா பேசினா நான் உன் வாய் பார்த்துட்டே நிக்கணும்..” என, அவளையும் அறியாது ஒரு மென் முறுவல் அவன் சுட்டிக் காட்டிய அவ்விதழில்..

“ஆ.. அது.. கண்மணி இப்படி சிரிச்சாதான் அழகு…” என, அவளுக்கு இன்னமும் புன்னகை விரிய, “சாமி பார்த்தாச்சா???” என்றாள்..

‘சாமி பாக்கவா நான் வந்தேன்..’ என்றெண்ணியவன், “ம்ம்ம் சுத்தி வந்தேன்.. உன்னை பார்த்தேன்..” என,

 “ம்ம் நான் வந்து நேரமாச்சு கிளம்பட்டுமா??” என்று கேட்டுக்கொண்டே எட்டு வைக்க, “நான் இப்போதானே வந்தேன்..” என்றான் அவனும் நடந்த படியே.

கண்மணிக்கு மனது ஒரு இதம் உணர்வதாய் இருக்க, கோவிலுக்கு வருகையில் இருந்த மன சஞ்சலம் எல்லாம் இப்போது துடைத்து தூர போனது போல ஓர் உணர்வு. வீட்டினில் இருந்த இறுக்கம் இப்போது இங்கில்லை. அதுவும் அதிரூபனோடு பேசவும் அவளால் சிரிக்கவும் கூட முடிகிறதே..

‘இவர்கிட்ட என்னவோ மேஜிக் இருக்கு..’ என்று தனக்கு தானே முணுமுணுக்க,

“மறுபடியும் முணுமுணுக்குற…” என்று அதிரூபன் அதட்ட, அதற்குள் இருவரும் கோவில்விட்டு வெளியே வந்திருந்தனர்.

“சும்மா…” என்றவள் “கை எப்படி இருக்கு??” என்று அவனின் கை பார்க்க, “இப்போ எந்த வலியும் தெரியாது..” என்றான் இவனோ சந்தோசமாய்.

“என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க?? நல்ல விசயமா எதுவும்??” என்று கண்மணி ஆராய்ச்சி பார்வை பார்க்க,

“ம்ம்ம் அப்படியும் கூட சொல்லலாம்.. இனி நல்லது மட்டும் தான் அப்படின்னு கூட..” என்றவன் “நீயும் சந்தோசமா இரு.. அப்படித்தான் இருக்கணும்..” என, கண்மணி பதில் சொல்லுமுன்னே கண்ணன் அழைத்துவிட்டான் அவளை..

இவள் எடுத்துப் பேசவும் “கண்ஸ் நீ கோவில்ல இருக்கன்னு தீபா சொன்னா.. அங்கயே இரு.. அந்த சைட் தான் வந்துட்டு இருக்கேன்..” என, அவளோ திடுக்கிட்டு அதிரூபனைப் பார்த்தாள்.

வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. கண்ணன் வந்தால், கண்டிப்பாய் அதிரூபனோடு பேசுவது கண்டு எதுவும் சொல்வான்.. என்ன செய்வது என்ற யோசனையோடு “ம்ம்..” என்றுமட்டும் சொல்லி போனை வைத்தவள், “அண்ணன் வர்றான்..” என,

“வரட்டுமே…” என்றான் அதிரூபனும் கூலாய்..

“இ.. இல்ல.. அது.. வந்து..” என்று கண்மணி இழுக்க, “கண்மணி.. நீ எதுக்கும் இப்படி இனிமே டென்சன் ஆகக்கூடாது.. வரட்டும் நான் பார்த்துக்கிறேன்.. அதுக்காக இப்படியே உன்னை விட்டு போக முடியாது.. உன்னை பார்க்கலைன்னா அது வேற.. பார்த்துட்டு இப்படியே போக முடியாது..” என்றவனின் குரல் அப்படியொரு உரிமையை வெளிப்படுத்த,

கண்மணியின் மனது அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் அதிர்வை உணர்ந்தது,

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் முன்னேயே அவளின் இதழ்களோ “அப்.. அப்போ.. எப்பவும் என்னைவிட்டு போகமாட்டீங்களா???” என்று கேட்டும் இருந்தது.                      

 

                 

   

 

       

     

          

    

Advertisement