Advertisement

தூறல் – 11

‘கண்மணி நீ பேசாத.. நான் பேசிக்கிறேன்…’ என்று கண்ணன் தன், பார்வையிலேயே அவளுக்கு செய்தி சொல்ல, அவளோ அதெல்லாம் சரிவராது என்பதுபோல்,

“ப்பா நான் கொஞ்சம் பேசணும்…” என்றாள்..

எப்போதுமே பிறர் பேசுவதை கவனித்து, அவசியத்திற்கு மட்டுமே வாய் திறக்கும் மகள், இன்று ஒருவித பிடிவாதத்துடன் வந்தமர்ந்து பேசவேண்டும் என்று சொன்னது சியாமளா, சடகோபன் இருவருக்குமே விநோதமாய் பட, கொஞ்சம் ஆச்சர்யமாகவும் கூட இருந்தது.

ஒருவேளை மகள் தாங்கள் நினைத்தது போல் இல்லையோ என்றுகூட தோன்ற செய்தது கண்மணியின் முகத்தினில் இருந்த உறுதி.

“என்னம்மா சொல்லு…” என்று சடகோபன் சொல்லவும்,

கண்ணனோ, “ப்பா நான் சொல்றேன்…” என்று ஆரம்பிக்க,

“அண்ணா….” என்றழைத்து அவனை ஒரு பார்வை பார்த்தவள்,

“நான் பேச போறது என் கல்யாணம் பத்தி…” என்றுசொல்ல, அவ்வளோதான் கண்ணனும் வாயடைத்துப் போனான்..

கண்மணியா இது??

அமைதியானவர்கள் என்றால் அவர்களுக்கு அழுத்தமாய் பேச தெரியாதா என்ன?? பிறர் பேசுவதை கேட்டு சரி என்பவர்கள் என்றாவது ஒருநாள், நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லும் சூழல் வந்தால், அதற்கு யார் என்ன செய்ய முடியும்??

அனைத்துமே அவன் செயல் என்பதா?? இல்லை காரண காரியங்கள் மட்டும் நம்மது, ஆடிப்பார்ப்பவன் யாரோ என்பதா??

வாழ்க்கையே பொம்மலாட்டம் தானே.. நாமெல்லாம் பொம்மைகள், நம்மின் கயிறு இறைவனிடம் அல்லவா உள்ளது. பிறர் மூலமாய் ஆட்டம் காட்டுகிறான், ஆடிப்போகிறோம். ஆட்டுவிக்கிறான்  ஆடுகின்றோம் இதுதானே வாழ்க்கை.

சிறிது நேரத்திற்கு முன்பு வரை கண்ணனும் கண்மணியும் ஆடித்தான் போயிருந்தனர். ஆனால் இப்போது கண்மணியுள் ஒரு தெளிவு வந்திருக்க, அதன் பொருட்டே அவளின் இப்படியான வார்தகைகளும்..

சடகோபனோ, மனைவியின் முகத்தை தான் பார்த்தார். உனக்கெதுவும் தெரியுமா என்பதுபோல். ஏனெனில் வீட்டினில் எப்போதுமே சியமாளாவிடம் சென்றுவிட்டுத்தான் ஒருவிசயம் அவரிடம் வரும். ஆனால் இப்போதோ சியாமளா ‘எனக்கெதுவும் தெரியாது..’ என்று தலையை ஆட்ட,

“ம்ம் சொல்லு கண்மணி. உன் கல்யாணத்துக்கு அப்பா என்ன செய்யணும்??” என்றார் வேறெதையும் வெளிக்காட்டாது..

“எ.. எனக்கு எதுவும் வேணாம் ப்பா.. ஆனா இப்.. இப்போ இந்த பொண்ணு விஷயம் எ.. எனக்கு பிடிக்கல…”

தயங்கியே சொன்னாலும், அவளது சொல்லில் இருந்த உண்மையும் உறுதியும், மீண்டும் பெற்றவர்களை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள செய்தது..

“ஏன்?? ஏன் கண்மணி பிடிக்கல?? சொல்லப்போனா நீதான் ரொம்ப சந்தோசப் படனும்.. அதே வீட்டு பொண்ணு இங்க வந்தா நல்லதுதானே.. உறவும் பலப்படும்..” என்று சியாமளா அவரின் எண்ணத்தை சொல்ல, கண்மணி முகத்தினில் ஒரு அதிருப்தியின்மை தெரிந்தது.

“சியாமி….” என்ற சடகோபன், “ஏன் பிடிக்கல கண்மணி??” என்றார் பொறுமையாகவே.

“எனக்கு தெரியலைப்பா.. ஆனா பிடிக்கல… ஒருவேளை நம்ம வேணாம் சொன்னா அதுக்கென்ன சொல்வாங்க?? ஈசியா எடுத்துப்பாங்களா??”என்றவள், பின் முடிவாய்,

“ஒருவேள அந்த பொண்ண அண்ணனுக்கு கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்னு அவங்க எதுவும் சொன்னா, எ.. எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ப்பா..” என்றுவிட்டாள்.

கண்மணி முதலில் சொன்னது சரியென்றாலும், அடுத்து சொன்னது யாராலும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று.. சொல்லப்போனால் அதே கேள்வி சடகோபன் மனதிலும் இருந்தது தான்.

ஒருவேளை பெண்ணை நேரில் பார்த்து, தங்களுக்கோ இல்லை கண்ணனுக்கோ பிடிக்கவில்லை என்றால், அதை வெளிப்படையாய் சொல்லவும் முடியுமா?? அப்படி சொன்னால் அது கண்மணி வருண் திருமணத்தை பாதிக்காதா??

அவர்கள் வீட்டினில் ஒரு பெண்ணை மறுத்துவிட்டு, நம் வீட்டு பெண்ணை மட்டும் அங்கே அனுப்பினால் அங்கே உள்ளவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வர். அன்னியம் அசல் என்றால் கூட மறுத்து சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லிடலாம்.

ஆனால் இப்போதோ, என்னவோ ஒரு விடை தெரியாத சூழல். சியாமளா தான் பெண்ணை பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஆனால் கண்மணியோ இந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லவும் கூட நான் தயங்கமாட்டேன் என்பதுபோல் பேசிட, இது கண்ணனுக்கே கூட அதிர்ச்சிதான்..

“ஏ கண்மணி.. என்ன சொல்ற நீ…” என்று சியாமளா அதட்ட,   சடகோபனோ மகளின் இந்த பேச்சில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்.

கண்மணிக்கு தன் மனதில் இருப்பதை சொல்லும் வரைக்கும் இருந்த திடம், சொல்லி முடித்த பின்னே கொஞ்சம் ஆட்டம் கண்டது.. எப்படியும் ஏதாவது வரும் என்றே பெற்றவர்களை பார்க்க, சடகோபனோ  என்ன பேச்சு இதெல்லாம் என்றுதான் மகளைப் பார்த்தார்.

“இல்ல அது…”

“என்ன டி அது இதுன்னு.. என்ன பேச்சு இது.. இருந்திருந்து ஒரு நல்லது நடக்குதுன்னு சந்தோசமா இருந்தா, இப்படி பேசுற?? இத்தனை நாள் இப்படியில்லை நீ.. சரி இந்த பொண்ணு பேசுறது பிடிக்கலன்னு சொன்ன, அதுக்கூட சரிதான், ஆனா அதுக்காக இந்த கல்யாணமே வேண்டாம் அப்படின்னு பேசினா, பின்ன வீட்ல நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்…” என்ற  சியாமளாவிற்கு உள்ளம் நடுங்கித்தான் போனது.

கண்மணி ஓரளவு இதெல்லாம் எதிர்பார்த்து தான் வார்த்தைகளை விட்டாள், ஆக அமைதியாய் அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்க, கண்ணனுக்கோ கண்மணி தனக்காக தான் இப்படி சொன்னால் என்று தெரியாதா என்ன?

தன்னால் தான் இப்போது இப்படி பேச்சும் வாங்குகிறாள் என்று புரியாதா என்ன??

இதற்குமேல் அமைதியாய் அவனால் இருந்திட முடியுமா?? அதுவும் அவனின் அன்பு தங்கை திட்டு வாங்குகையில்.  மனதில் தைரியம் வரவழைத்துக்கொண்டு,

“ப்பா.. ம்மா… நானும் ஒரு விஷயம் சொல்லணும்…” என்றான் பார்வையை கண்மணியிடம் ஒருமுறை செலுத்திவிட்டு.

‘நீ என்ன சொல்லப் போகிறாய்..’ என்று இருவரும் பார்க்க, பேச்சினை தொடங்கியவன் சிறிது வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்க, 

“கண்ணா…” என்றார் சடகோபன்.

அவரின் அழைப்பிலேயே அவர் மனதில் இருக்கும் உணர்வு தெரிய, மகள் மீது காட்ட முடியாத கோபத்தை மகனிடம் காட்டும் வாய்ப்பு நிறையவே அதில் தெரிந்தது.

இருந்தாலும் ஆரம்பித்தாகிவிட்டது என்ன வந்தாலும் இனி சரிதான் என்று “அது.. ப்பா.. நா.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்…” என்றான் மூச்சை இழுத்து பிடித்து.

சொன்னவனுக்கு காது அடைத்தது போல் இருந்ததா, இல்லை அங்கே அத்தனை அமைதியா தெரியவில்லை. ஆனால் அப்படியொரு மௌனம் சூழ்ந்திருந்தது. இதை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை என்பதுபோல் சடகோபனும் சியாமளாவும் அமர்ந்திருக்க,

கண்மணியோ ‘இப்போவாது சொன்னியே…’ என்றுதான் பார்த்தாள்.

அவள் முகத்திலும் ஒரு கலவரம் தெரியத்தான் செய்தது. எங்கே அடுத்து என்ன நடக்குமோ என்று. கொஞ்சம் பயத்துடனே அப்பா அம்மாவின் முகம் பார்க்க, அவர்களோ அப்படியேதான் அமர்ந்திருந்தனர்.

காதல் திருமணம் இன்னமும் கூட அவர்களின் குடும்பத்தில்  அத்தனை எளிதானது அல்ல. அப்படியொன்று இதுவரைக்கும் அவர்களின் குடும்பங்களில் நடந்ததும் இல்லை.  அப்படியிருக்க இது கொஞ்சம் இல்லை நிறையவே  சிரமம் என்பது கண்ணனுக்கும் சரி கண்மணிக்கும் சரி நன்றாகவே தெரியும்.. ஆனால் அப்படியே சும்மா விட முடியுமா??

கண்ணனும் சிறிது நேரம் பொறுத்தவன், “அப்பா… அம்மா…” என்றழைக்க,

“போதும்டா…. ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்று அழுதுகொண்டே பேச,

“ம்மா ப்ளீஸ்…” என்றாள் கண்மணியும்..

அத்தனை நேரம் அமைதியாய் இருந்த சடகோபன், “கண்மணி..” என்றழைக்க, அவளோ வேகமாய் தன் அப்பாவினை பார்த்தாள்.

“உனக்கு இது தெரியுமா??” என்று கண்ணனை பார்த்து கேட்க, கண்ணனோ சொல்லாதே என்று தங்கையைப் பார்த்தான்..

அவன் பார்ப்பது புரிந்தும், கண்மணி “ம்ம்ம்…” என்றுமட்டும் சொல்ல,

“ஓஹோ…!!!” என்றவர் வேறெதுவும் சொல்லாது, எழுந்து அறைக்குள் சென்றுவிட, சியாமளாவோ இன்னும் அழுகையை கூட்டினார்.

“ம்மா ப்ளீஸ் ம்மா…”என்று கண்ணன் அம்மாவின் கை பிடிக்க, அவரோ வெடுக்கென்று அவன் கைகளை தட்டிவிட,

“ம்மா..” என்றாள் கண்மணியும் பாவமாய்.

“என்ன டி அம்மா அம்மா.. என்ன அம்மா?? மத்த எல்லாத்துக்கும் இந்த அம்மாக்கிட்ட வர தெரிஞ்சதுல ரெண்டு பேருக்கும். இப்போ அவ்வளோ அமுக்குனியா இருந்திருக்கீங்க.. இதுக்குதான் அப்பப்போ அண்ணனும் தங்கச்சியும் கூடி கூடி பேசினீங்களா??

இந்த வீட்ல தான டி நானும் அவரும் இருக்கோம்.. கூட இருந்தே இப்படி முட்டாள் ஆக்கிட்டீங்கல்ல.. என்ன ஒரு நெஞ்சழுத்தம் உனக்கு கண்மணி.. அவன்தான் மறைச்சான்னா நீயுமா??”

“ம்மா அவமேல எந்த தப்பும்….” என்று கண்ணன் சொல்ல வருகையிலேயே,

“உன்கூட நான் பேச விரும்பல..” என்றவர்,

“சொல்லு டி.. எவ்வளோ நம்பினோம் உங்க ரெண்டு பேரையும்… ஏன் மறைச்ச??” என்று மகளிடம் தான் பாய்ந்தார்..

சியாமளா பேச பேச, கண்மணிக்கு உள்ளே பதறிக்கொண்டு தான் இருந்தது, எப்படியும் திட்டு விழும் என்று   தெரியும், ஆனால் அப்பாவின் பதிலின்மையும், அம்மாவின் அழுகையும் பிள்ளைகள் இருவருக்குமே மனதில் சுருக்கென்று தைத்தது.

காதலிப்பது குற்றமில்லை அவர்களைப் பொருத்தமட்டில். ஆனால் அனைவருக்கும்  இப்படியான கருத்து இருக்காதே.  அதுவும் குடும்ப கௌரவம் என்னாவது என்ற கேள்வியிலேயே பலரின் காதல்கள் மாண்டு போகிறது.

இப்போது கண்ணனின் நிலையோ, சொல்லவே வேண்டியதில்லை. இப்படியொரு சூழலில் சொல்லும் நிலை வரும் என்றும் அவன் நினைக்கவில்லை. ஆனால் முன் வைத்த காலை பின் வைக்க முடியாதே.

“ம்மா கண்ஸ் பாவம்மா.. அவ சொல்லுன்னு தான் சொன்னா நான் தான் அவளுக்கு ஒரு…”

“ஓஹோ.. தங்கச்சிக்கு கல்யாணம் முடியவும் சொல்லலாம்னு இருந்தியோ.. அட அட என்ன ஒரு நல்ல மனசுடா உனக்கு..” என்றவர்,

“எந்திரிச்சி போயிடு.. என் முன்னாடி இருக்காத…” என்றார் மூச்சு வாங்க..

“ம்மா…..!!!!”

“நீ போறியா… இல்ல நான் இப்படியே கிளம்பி போகவா….” என்று சியாமளா கத்த,

“சியாமி..!!!” என்ற ஒரு அதட்டல் அழைப்பு உள்ளிருந்து வந்தது.

சடகோபன் தான்.. இத்தனை நேரம் அமைதியாய் அனைவரும் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார். கண்ணன் காதலை சொன்னதை விட, மகள் அது தெரிந்தும் தங்களிடம் சொல்லாமல் மறைத்தது வலி நிறைய கொடுத்தது. அதிலும் இப்போது மனைவி வீட்டை விட்டு போவேன் என்பதுபோல் பேசியது இன்னமும் அதிகமாய் வலி கொடுக்க, அவரையும் மீறி தான் அழைத்துவிட்டார்.

தன் பிள்ளைகள் இருவரையும் மாறி மாறி பார்த்த சியாமளாவோ, பின்னே எழுந்து உள்ளே செல்ல, கண்ணனோ தொய்ந்து போய் இருக்கையில் சாய, கண்மணியோ அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.

சில வினாடிகள் கடந்திருக்க, “நீ ஏன் கண்ஸ் சொன்ன தெரியும்னு..” என்று கண்ணன் மெதுவாய் கேட்க,

“அதுதானே உண்மை…” என்றாள் இவள்..

“நானே சொல்லி நானே திட்டும் வாங்கிருப்பேன்.. நீ ஏன்..”

“எப்போவாது பொய் சொல்லலாம். அவசியத்துக்கு.. எப்பவுமே பொய் சொல்ல கூடாது….” என்றவளுக்கு உள்ளே, தான் செய்ததும் தவறுதானோ என்று உறுத்தல் இருந்தாலும்,

அதை வெளிக்காட்டாது “கொஞ்ச நேரம் கழிச்சு போய் பேசு… யோசிச்சு பேசு…” என்று சொல்லி எழ,

“நீ ஏன் அப்படி சொன்ன??” என்றான்.

‘எப்படி??’ என்று கண்மணி பார்க்க, “அதான் இந்த கல்யாணமே வேணாம் அப்படிங்கிற போல..” என்று கண்ணனும் பாயிண்டை பிடிக்க,

‘அது…..’ என்று தயங்கியவள்,  “தெரியலை.. தோணிச்சு.. சொல்லிட்டேன்..” என்றுவிட்டு அவளும் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்..

கண்ணனுக்கோ அனைத்துப் பக்கமும் அடைபட்ட சூழல். ஒரு பக்கம் கண்மணியின் கல்யாணம். இன்னொரு பக்கம் தீபா.. மற்றுமொரு பக்கம் அவனின் அப்பா அம்மா..

‘அய்யோ..!!!!!!!!’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. சொல்லப்போனால் அப்படியொரு ஓலம் அவன் மனது இட்டது தான். அது அவனுக்கு மட்டுமே கேட்டது அவ்வளவுதான்..

அறையினுள்ளே சென்ற கண்மணிக்கோ மனது தவியாய் தவித்தது. அண்ணன் பக்கம் மட்டும்  யோசித்தவள், தீபாவின் நிலை எண்ணி செயல்பட்டவள், அப்பா அம்மாவையும் நினைத்து பார்த்திருக்க வேண்டும் தானே.. மகளும் கூட தங்களிடம் சொல்லவில்லையே என்ற ஏமாற்றம் பெரியவர்கள் இருவரின் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது தானே.

கண்களை இறுக மூடித் திறந்தவளுக்கு அடுத்தது என்ன என்ற எந்த யோசனையும் வரவில்லை.

அன்றைய நாள் அப்படியே கழிய, கண்ணன் என்ன பேச முயன்றும் சடகோபனும் சியாமளாவும் அவனை கண்டுகொள்ளவே இல்லை.. பின்னேயே திரிந்தான். ஆனால் பதில் எதுவுமே இல்லை. அதுசரி அவர்களின் கோபத்தையும் எப்படி காட்டுவது.

மனது சிலதை ஏற்றுகொள்ள நாள் பிடிக்குமே.. அது பிள்ளைகளின் விசயமே என்றாலும்..

ஆனால் சொல்லிவிட்ட பின்னோ கண்ணனுக்கு ஒரு தைரியம் எப்படியும் சமாளிக்கலாம் என்று, கண்மணி கூட அப்படித்தான் இருந்தாள்.. அப்பாவிடம் பேச முடியவில்லை என்றாலும் அம்மாவிடம் பேசினாள்.

“ம்மா தீபா நல்ல பொண்ணும்மா…” என்றுசொல்ல,

சியாமளாவோ “ஓ..!! பேசிருக்கியா?? இல்ல நேர அவங்க வீட்ல பேசி முடிச்சிட்டே வந்துட்டீங்களா அண்ணனும் தங்கச்சியும்…” என்று கடிந்தார்.

கண்ணனோ “இனிமே நீ இதை பத்தி பேசாத கண்ஸ்.. நானே பார்த்துக்கிறேன்.. ப்ளீஸ்.. நீ திட்டு வாங்காத..” என்றுவிட,

இந்த இவர்களின் சூழலுக்கு விடை யார் சொல்வாரோ.. ??

விஷயம் அனைத்தும் அறிந்த தீபாவோ ஒரு பாடு அழுது தீர்த்தாள். அவள் வீட்டிலும் தங்களின் காதலை சொல்லியிருப்பாள் போல, அவர்களோ கண்ணனை நேரில் வந்து பேச சொல்ல, அவனோ நான் மட்டும் வந்து பேசினால் அது முறையல்ல என்றான்..

தீபாவிற்கு கண்மணியை விட்டால் வேறு  இருக்கிறார்கள்??

“கண்ஸ்… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல டி..” என்று புலம்ப,

“எனக்கும் தான் தீப்ஸ்..” என்றாள் இவளும்..

இப்படியே பேச்சு போக, திடீரென தீபா “கண்ஸ் நீ ஏன் வருண் கிட்ட இதை பேசக்கூடாது.. யங் பீப்பிள் கொஞ்சம் புரிஞ்சு செய்வாங்க..” என்றுசொல்ல, அதை தான் இப்போது கண்மணியும் அதிரூபனிடம் சொன்னாள்.

ஆனால் அவனோ “என்னது???!!” என்று அதிர, கண்மணிக்கு அவனின் இந்த அதிர்ச்சி ஏன் என்று புரியவில்லை.

‘என்னாச்சு??!!’ என்று கண்மணி பார்க்க,

‘டேய் ரூபன்.. எது நடந்தாலும் சரி, கண்மணி அந்த வருண் கிட்ட பேசிடவே கூடாது.. அவனும் ஹெல்ப் பண்றேன்னு ஏதாவது ஸ்கோர் செஞ்சுட்டா அவ்வளோதான்.. எல்லாமே காலி.. களத்துல குதிடா அதிரூபா…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவன்,

“இதுக்கு ஏன் அவர்கிட்ட பேசணும்??” என்றான் முகத்தினை சீரியசாக வைத்து..

“இ.. இல்ல அது.. அவங்க வீட்ல…” என்று கண்மணி சொல்லும்போதே,

“உங்க வீட்லயே உன்னால பேசி சமாளிக்க முடியலை பின்ன எப்படி அவர்கிட்ட பேசுவ..” என்றான் சாதாரணமாய் சொல்வது போல்.

ஆனால் அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை புரிந்து கண்மணியும் முகம் மீண்டும் வாடத் தொடங்க,

“ஹேய் ஹேய் கண்மணி… நீ பீல் பண்ணாத… கண்டிப்பா ஏதாவது ஒரு வழி கிடைக்கும்..” என்றான் வேகமாய்..

“அதான்.. தீபா….” என்று கண்மணி மீண்டும் வருணிடம் பேசும் விஷயம் பற்றி சொல்ல வர,

“அது சரி வராது கண்மணி…” என்றான் பட்டென்று..

கண்களை சுருக்கி ‘ஏன்??’ என்று கண்மணி பார்க்க,

“வருண் பத்தி உனக்கு என்ன தெரியும்? ஒருவேளை அவருக்குமே இந்த ஏற்பாடு பிடிச்சிருந்தா?? அப்போ என்ன செய்வ?? இல்லை உங்க வீட்ல சொல்லிட்டா அப்போ??” என்று லேசாய் கண்மணியின் மனதில் பயத்தினை கலந்தான்..

ஏற்கனவே விஷயம் தெரிந்தும் கண்மணி மறைத்தாள் என்று அப்பாவும் அம்மாவும் கோபத்தில் இருக்க, இனி வருணிடம் பேசி அது வீட்டில் தெரிய வந்துவிட்டால் அவ்வளவு தான் சொல்ல வேண்டியதே இல்லையே..

“ம்ம்ம் அதுவும் சரிதான்…” என்றாள் மெதுவாய்..

“அதுதான் சரி.. எதையும் டக்குன்னு பண்ணிடாலம் தான் ஆனா அதோட விளைவுகள் நம்மனால தாங்க முடியலைன்னா கஷ்டமில்லையா???”

“ம்ம்ம்..”

“யோசிப்போம்…” என்று தானாகவே தன்னையும் இதில் இணைத்துக்கொண்டவன்,

“என் நம்பர் நோட் பண்ணிக்கோ.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளு…” என்றுசொல்லி அவனின் அலைபேசி எண்ணை சொல்ல,

அந்த நேரத்தில் கண்மணிக்கு ஏன் எதற்கு என்றெல்லாம் யோசிக்கும் நிலை இல்லை என்பதால், அவன் சொல்ல சொலல் ‘ம்ம் ம்ம்..’ என்றுசொல்லி தனது அலைபேசியில் அவனின் எண்ணை பதியச் செய்தாள்.

‘அப்பாடி செல்போன் குள்ள போயிட்டோம்.. அப்படியே கண்மணி மனசுக்குள்ளயும் போயிடனும்…’ என்றெண்ணி அதிரூபன் நிற்க

“தேங்க்ஸ்…” என்றாள் இவள்..

“ஹே கண்மணி அதெல்லாம் வேணாம்…” என்றுசொல்ல,

“அதுக்கு சொல்லல..” என்றாள் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி..

“பின்ன…”

“என்னை கண்மணி சொன்னதுக்கு.. கண்ஸ் சொல்லாம இருந்ததுக்கு…”

‘ஆஹா..!!! இது ஒரு ரூட்டா… அதிரூபா.. இனிமே எப்பவுமே எல்லாத்துக்குமே கண்மணி தான்டா.. அதை தவர வாய்ல எதுவும் வரக்கூடாது…’ என்று அவன் மனது சொல்லும் போதே,      

“நீ கவலைப்படாத கண்மணி.. எல்லாம் நல்லதே நடக்கும்…” என்று அதிரூபன் சொல்லவும், லேசாய் சிரித்தவள்,

“நீங்களும் தான்….” என்றாள்.

அவள் சொல்வது அவனுக்கு புரிந்து அவனும் சிரிக்க, சரியாய் இவனை அழைத்துப் போகவென சுப்பிரமணி கோவிலுக்கு வந்தவர், இவனை காணவில்லை என்று தேடி வர, இருவரும் சிரித்தபடி நிற்பதே அவரின் கண்களில் பட்டது.

கோவிலில் உள்ள அனைத்து கடவுகளின் சிலைகளும், ‘அட அட.. பேஷ் பேஷ்.. அடுத்தது என்ன??’ என்று ஆவலாய் பார்க்க,

சுப்பிரமணியோ ‘யாரிந்த பொண்ணு…’ என்று ஆராய்ச்சியாய் பார்த்தார்.

                              

 

    

   

 

Advertisement