Advertisement

குருபூர்ணிமா – 21

“நீ எதுவுமே சொல்லவேண்டாம்… பேசாம தூங்கு…” என்று திரும்ப பாலகுரு சொல்ல,

“ம்ம்ச் என்னை பேச விடேன்…” என்றாள் கொஞ்சம் எரிச்சலாய்..

“முடியாது.. எனக்கு இது பத்தி பேசுறது பிடிக்கலை…”

“அதான் ஏன்??? உன்னை இது டிஸ்டர்ப் பண்றதுனால தானே பிடிக்கல.. என் பாஸ எது டிஸ்டர்ப் பண்ணாலும் எனக்கும் பிடிக்காது.. சோ நான் பேசுவேன்…” என்று பூர்ணிமாவும் பிடிவாதமகா சொல்ல, பாலகுரு அவளை முறைக்கதான் செய்தான்..

“என்ன முறைக்கிற???”

“எனக்கு பிடிக்கலைன்னா விடு…” என,

“முடியாது பாஸ்.. மனசுக்குள்ள நீ வச்சு வச்சு யோசிப்ப.. எனக்கு தெரியும்..” என்று அவள் சொன்னதுமே, அவளை பார்க்காது பார்வையை திருப்பிக்கொண்டான் பாலகுரு.. 

பின்னே இவனாகவும் கேட்கமாட்டான்.. அவளாக சொல்ல வந்தாலும் பேச விடாது இருந்தாள் அவளும் என்ன செய்வாள்?? இத்தனை நாளில் ஒருமுறையாவது ‘நீ ஏன் டி இப்படி சொன்ன???’ என்று கோபப்பட்டு கத்தியிருந்தால் கூட பூர்ணிமா அவளின் காரணத்தை சொல்லியிருப்பாளோ என்னவோ..

ஆனால் அவனோ ‘நீ எப்படி என்னை இப்படி சொல்லலாம்…’ என்று தானே குதித்தது..

அவனுக்கு இன்னமும் கூட அப்படித்தான்.. ‘பூர்ணி எப்படி என்னை அப்படி சொல்லலாம்.. நான் எது பண்ணாலும் அவதானே எனக்கு முதல்ல சப்போர்ட் பண்ணனும்..’ என்ற எண்ணமே அவனுக்கு இப்போதும் கூட.. கோபம் போய் எரிச்சல் போய் ஆனாலும் அதன் தாக்கம் ஒருவகையில் மனதில் அவனுக்கு இருந்து கொண்டே தான் இருந்தது..

ஆனால் பூர்ணி கர்ப்பம் என்று தெரியவுமே அதை அப்படியே ஒதுக்கிவிட்டான்.. ஏன் ஏதாவது பேசிக்கொண்டு, அதற்கு அவள் பதிலும் சொல்லிக்கொண்டு, திரும்ப ஏதாவது கிளம்பும் என்று அதனை அப்படியே விட எண்ணினான்.. கஷ்டம் தான் ஆனாலும் விட எண்ணினான் ..

ஆனால் பூர்ணி விடவில்லை.. அவளுக்குமே மனது போட்டு அரித்துக்கொண்டே இருந்தது.. காரணம் பாலகுருவின் குணம் அவளுக்குத் தெரியும்..  எதையும் அத்தனை எளிதில் விட்டுவிட மாட்டான்.. அதிலும் பூர்ணி சொன்ன வார்த்தைகள் அவனுக்கு எப்படியொரு தாக்கம் கொடுக்கும் என்று அவனுக்கு நன்கே தெரியும்..

இருந்தும் அவன் சும்மா இருக்கிறான் என்றால் மனதிற்குள் போட்டு போட்டு உருட்டுவான் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன??

“ம்ம்ச் என்னை பாரு பாஸ்…” என்று அவனின் முகம் திருப்ப,

“நான் சொல்றதை நீ கேட்கலை.. பின்ன என்ன??” என்றவன் விட்டால் முதுகின் புறம் கூட முகம் திருப்புவான் போல.. அப்படி கழுத்தை திருப்பியிருந்தான்..

“உன் கழுத்து சுளுக்கினா நான் ஆள் இல்லை…” என்றவள், அவன் முகம் பார்த்து நகரப் போக,

“ம்ம்ச் இப்போ ஏன் நீ அசையுற??” என்றான் எரிச்சலாய்..

“அப்போ நீ என்னை பாரு…”

“சொல்லித் தொலை…” என்றவன் எரிச்சலாய் பார்க்க,

“நான் அப்படி சொன்னது தப்புதான் பாஸ்.. உனக்கும் எனக்கும் செட்டாகாதுன்னு சொன்னது தப்புதான்..” என,

“அதான் சொல்லிட்டியே.. பின்ன என்ன??” என்றான் பிகு குறையாது..

“ஆனா ஏன் அப்படி சொன்னேன்னு நீ யோசிக்கலை தானே..” என்றவள் “இவ எப்படி இப்படி பேசலாம்னு தான் நினைச்சிருப்ப..” என்று சரியாய் அவன் மனதை கணித்து சொல்ல,

“ம்ம் ம்ம்…”  என்றான் அப்போதும் அதே கடுப்பில்..

மனதினுள்ள ‘பார்ரா சரியா சொல்றா…’ என்ற நினைப்பு இருந்தாலும்,  பூர்ணிமா அப்படி பேசியது எண்ணி கடுப்பாய் தான் வந்தது.. கோபமில்லை தான் ஆனாலும் ஒருவித கடுப்பு. ‘அய்யோ இந்த பேச்சை விட்டுத் தொலை..’ என்று கத்தும் கடுப்பு.

அது அவனின் முகத்தினில் தெரிய பூர்ணிமா லேசாய் புன்னகைத்தவள், மெதுவாய் எம்பி அவனின் கன்னத்தில் முத்தமிட “கூல் டவுன் பாஸ்…” என்றும் சொல்ல,

“இப்போ ஏன் டி என்னை படுத்துற???” என்று கத்தினான்.

“இங்க பாரு நமக்குள்ள எதுவுமே டிஸ்டர்ப்பா இருக்க கூடாது.. பேசி தீர்த்துக்கணும்.. அதைவிட்டு நீ ஒண்ணு நினைச்சிட்டு.. நான் ஒண்ணு நினைச்சிட்டு இருந்தா அது நம்ம பேபிய தான் பாதிக்கும்..” என,

“ஏய்…” என்று அதற்கும் கத்தினான்..

“ம்ம்ச் கத்தாத…” என்று பூர்ணிமா பார்க்க,

“பின்ன கத்தாம?? எல்லாத்துக்கும் காரணம் நான்னு சொல்லுவ, நான் கோவப்பட்ட அது தப்புன்னு சொல்லுவ.. இப்போ சரி எதுவும் வேண்டாம் அப்படின்னு அமைதியா இருந்தா அதுக்கும் என்னை தப்புன்னு சொல்றியா போ டி.. நீ ஒன்னும் சொல்லவேணாம்..” என்று பாலகுரு இத்தனை நாள் மனதில் அமிழ்த்தி வைத்திருந்ததை எல்லாம் பேச, மௌனமாய் அவனையே பார்த்துகொண்டு இருந்தாள் பூர்ணிமா..

“என்ன பாக்குற… நான் கேட்டேனா?? இல்லை நான் கேட்டேனான்னு கேக்குறேன்…” என்றவன் தலையணையை தூக்கி எறிய, அப்போதும் அவள் அமைதியாகவே இருந்தாள்..

“பேசு பூர்ணி….!!!” என்றான் எரிச்சலில்..

“ம்ம்ம்.. அப்போ இவ்வளோ டென்சனும் உள்ள இருக்கு.. அப்படிதானே..” என்றவள் அவனை பிடித்து தன்னருகே இழுத்துக்கொள்ள,

“ஒன்னும் வேணாம் விடு டி..” என்று முறுக்கினான்..

“அடடா நான் ஒன்னும் செய்யலை..” என்றவள் “நான் உன்னை தப்பா நினைப்பேனா பாஸ்???” என,

“பின்ன ஏன் அப்படி சொன்ன???” என்றான் பார்வையை எங்கோ வைத்து..

“அதை கேட்க உனக்கு இவ்வளோ நாளா?? பாரு நான் கன்சீவ் கூட ஆகிட்டேன்…” எனும் போதே பாலகுரு சிரித்துவிட்டான்..

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்…” என்று..

“சிரிக்காத.. நானும் நீ எப்போ கேட்ப கேட்பன்னு பார்த்தா நீ இதை பத்தி பேசுறதாவே இல்லை..”

“பேசினா திரும்ப நமக்குள்ள சண்டை வரும்.. அதான்..”

“சண்டை ஏன் வரணும்.. பேசினா.. கிளியர் பண்ணிக்கிட்டா சண்டை எல்லாம் வராது…”

“சரிம்மா சொல்லு.. இல்ல இல்ல கிளியர் பண்ணு…” என்றவன் வாகாய் சாய்ந்துகொண்டு அவளையும் தன் மீது சாய்க்க,

“எனக்கு இப்படிதான் நல்லாருக்கு…” என்றவள் தனியே சாய்ந்து காலை நீட்டிக்கொள்ள, பாலகுரு எதுவும் சொல்லவில்லை..

“அந்த போஸ் கூட நீ சண்டைக்கு போறப்போ எல்லாம் எனக்கு எவ்வளோ பயமா இருக்கும் தெரியுமா???” என்று பூர்ணிமா சொல்லி முடிக்கவில்லை, பாலகுரு முன்னைவிட சத்தமாய் சிரிக்க, இப்போது பூர்ணிமா முறைத்தாள்..

“நிஜமா நீ சொல்றது காமடியா இல்லை.. அங்க என்னை சுத்தி என்கூட அத்தனை பேரு.. என்கிட்டே கன் வேற இருக்கு.. அப்புறம் என்ன பயம்.. ஆனா நீ என்னையே மிரட்டுற ஆள்.. அப்ப்டியிருக்கப்போ என்ன பயம்..??”

“ஆமா உன்னை மிரட்டினேன் தான்.. அதுவும் நீ அவனை எதுவும் செய்யக் கூடாதுன்னு அப்படி பண்ணேன்.. நீ ஏதாவது செஞ்சு, பதிலுக்கு அவன் ஆளுங்க ஏதாவது செஞ்சு… இதெல்லாம் தேவையா பாஸ்…

நீ அவனை சும்மா விட்டபோதே அவன் உன்னை போட ஆள் அனுப்பினான்.. அப்போ எனக்கு அந்த பயம் இருந்தது சரிதானே..” என,

“எல்லாம் சரிதான்… ஆனா அதுக்காக அவனுக்கு அந்த பொண்ணை, அதுவும் விருப்பமே இல்லாத பொண்ணை கட்டி வைக்க சொல்றியா???” என்றவனை இப்போது நன்றாகவே முறைத்தாள்..

“என்ன டி..”

“அந்த பொண்ணை யோசிக்க நீங்க யாருமே டைம் கொடுக்கலை.. அதையும் விட அந்த போஸ், அவனை நீங்க அவனோட லவ்வ கன்வே பண்ணவே நீங்க யாரும் சரியா விடலை.. அப்போ அவன் என்ன செய்வான் அவனுக்கு தெரிஞ்ச வழில தான் போவான்.. நான் இதை சரின்னு சொல்லலை.. எனக்கும் போஸ் பத்தி தெரியும்.. அவனுக்கு உன் கூட தான் சண்டை மத்தபடி அவன் ஒழுக்கமான ஆள் தான்..” என,

“போதும் போதும் அந்த நாதாரிக்கு நீ சர்டிபிகேட் கொடுக்காத…” என்றான் கடுப்பாய்..

“ஹா ஹா இல்லை பாஸ்… ஒருவேளை இதுல நீ நடுல போகாம இருந்திருந்தா அவனுக்கு அவன் பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சிருக்கும் தானே.. அந்த பொண்ணுக்குமே கூட அவனை பிடிக்க ஆரம்பிச்சு இருக்கலாம்.. நீங்க யாரும் அதுக்கு வாய்ப்பே கொடுக்கலை அதான் உண்மை..”

“ஷ்..!!!! இப்போ அவசியம் அவனை பத்தி பேசணுமா.. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு..” என்றான் கடுப்பாய்..

“நான் அந்த பொண்ண பத்தி பேசலை.. நீ பண்ணதை பத்திதான் பேசினேன்..” என்றவள்,

“எல்லாருக்குமே ஒரே நேரத்துல லவ் வந்திடுறது இல்லை… ஒருத்தருக்கு முன்னே பின்னே ஆகும்..” என்றுவிட்டு அவனை நைசாய் பார்க்க, அவனோ அவளையே நேராய் பார்த்திருந்தான்..

“உண்மைதானே..??!!!” என்று பூர்ணிமா கொஞ்சம் அழுத்தமாகவே கேட்க,

“ம்ம் ம்ம்…” என்றவன் முகத்தை திருப்ப, “அதுபோலத்தான் எல்லாமே… புரிஞ்சதா???  என்றதற்கும்,

“ம்ம் ம்ம்..” என்றுமட்டுமே சொன்னான்..

அவள் சொல்வதின் நியாயம் புரிந்தது.. இருந்தாலும் அந்த போஸ் அவனை நல்லவன் என்று ஏற்றுகொள்வதா?? ச்சே ச்சே என்று மனது முகத்தை சுருக்கியது.. அவனெல்லாம் ஒரு ஆளா… என்று நினைத்தாலும், பாலகுருவின் வாழ்வில் பூர்ணிமா வருவதற்கு அதி முக்கிய காரணமே அந்த போஸ் தான்..

அவன் பாலகுருவிற்கு நல்லவனோ, கெட்டவனோ, போஸ் நிச்சயமாய் நல்லது நினைத்து எதுவும் செய்யவில்லை தான்.. ஆனால் அவன் செய்தது இவனுக்கு நல்லதனமாய் தான் முடிந்தது.. அதெல்லாம் பாலகுருவிற்கு புரியாது இல்லை.

இருந்தாலும் இவனெல்லாம் ஒரு ஆளா என்ற எண்ணம் தான்.. அது எப்போதும் மாறப்போவதுமில்லை.. ஆனாலும் பூர்ணி சொல்வதும் ஒரளவு சரியென பட, எதுவும் சொல்லவில்ல..

கொஞ்ச நேரம் பூர்ணிமா அவனையே பார்க்க, அவளால் அவனின் எண்ணங்களை யூகிக்க முடிந்தது.. அவளுக்கும் போஸை பிடிக்கும் பிடிக்காது என்றெல்லாம் இல்லை.. அவனால் எதற்கு பிரச்சனை?? அவனிடம் எதுக்கு பிரச்சனை??

இது தான் அவளுக்கு..

அதனால் தான் அப்படி அவனிடம் சொல்ல, அவனும் இப்போது புரிந்ததாய் தெரிந்தது..

“பாஸ்….” என,

“ம்ம்…” என்றான்..

“இப்போ என்ன சைலென்ட் ஆகிட்ட???”

“ஒண்ணுமில்ல.. அடுத்து சொல்லு..” என்றவன், அவளையே பார்க்க,

“நிர்மலா விஷயம் தானே..” என்றாள்..

“நீ தான் விடமாட்டியே சொல்லித் தொலை..” என்றவன் சலிக்க,

“இப்பவும் சொல்றேன் பாஸ் நிர்மலா சொன்னது சரிதான்..” என, அவளை அனேகத்துக்கும் முறைத்தான் பாலகுரு..

“ஷ்… நிர்மலா சொன்னது சரின்னுதான் சொன்னேன்.. அதுக்காக நீ தப்புன்னு சொல்லலை.. அது புரியுதா..” என்றவள், அவனிடம் நெருங்கி முன்னே அவன் சாய்த்தது போல் தானாக அவன் மீது சாய்ந்தவள்,

“பொண்ணுங்க எதிர்பார்ப்பு அதான் பாஸ்…” என்றாள் மெதுவாய்..

அவனுக்கு சுத்தமாய் புரியவில்லை, என்ன எதிர்ப்பார்ப்பு இது?? என்ன வகை இது என்ற எண்ணமே அவனுக்கு.. எண்ணம் என்றதை விட யோசனை… ஆனாலும் கேட்காது அமைதியாய் இருக்க,

கொஞ்சம் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “நான் சொன்னேன் இல்லையா, நம்ம லவ் பண்ணிருந்தா கண்டிப்பா நமக்கு செட்டாகி இருக்காதுன்னு.. அதுக்கும் இதான் ரீசன்…” என,

இப்போது யோசனையில் இருந்து திரும்ப பாலகுருவிற்கு கோபமாய் முகம் மாறியது..

“யம்மா நீ பேசாம படு.. அது இதுன்னு சொல்லி இம்சை பண்ணாத.. எனக்கு எந்த விளக்கமும் வேணாம்.. இப்போ என்ன லவ் பண்ணிருந்தா செட்டாகி இருக்காது.. அந்த இம்சையை செய்யலை தானே.. கல்யாணம் பண்ணோம்.. இதோ இப்போ குழந்தை கூட வரப் போகுது.. இப்போ எல்லாம் செட் ஆகிடுச்சு தானே..” என்றவன்

“பேசாம படு டி…” என்று கடுப்பில் சொல்லிவிட்டு அவன் படுக்கப் போக, அவள் எழுந்து போய் திவானில் அமர்ந்து ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்..

‘இவள….’ என்று பல்லைக் கடித்து பார்த்தவன், கொஞ்சம் நேரம் அப்படியே இருக்க, அவளோ எழுந்து வருவதாய் இல்லை..

நேரம் கடந்து கொண்டு தான் இருந்தது.. இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை.. அவளோ இவனைத் திரும்பியும் பார்க்காது இருக்க, ஒருநிலையில் இவனே தான் அழைத்தான் “பூர்ணி…” என,

அவளோ ‘ம்ம்..’ என்று கூட சொல்லவில்லை..

அவளுக்குமே மனதில் ஒரு கடுப்பு வந்துவிட்டது.. பின்னே என்ன, என்ன சொல்ல வருகிறோம் என்பதனை கூட பொறுமையாய் கேட்காது கத்தினாள் அவளும் என்ன செய்வது..

எடுத்து சொல்லி இன்றோடு இதெல்லாம் முடித்திடவே அவள் எண்ணினாள், ஆனால் திரும்பவும் அவன் அப்படியே சொல்லவும், அவளும் எழுந்து போய்விட்டாள் நீ என்னவோ செய் என்று.. நேரம் செல்ல செல்ல அவனுக்குத் தான் கொஞ்சம் ஒருமாதிரி ஆனது..

‘பேசட்டும் என்று விட்டிருக்கலாமோ..’ என்றுகூட தோன்றியது..

காரணம் என்றுமே பூர்ணி இப்படி செய்தது இல்லை.. அவனோடு சண்டை என்றாலும் சரி இப்படி எழுந்து போக மாட்டாள்.. நேருக்கு நேரே தான் எதுவும்.. அதையும் தாண்டி நிர்மலா விஷயம் பேசுகையில் அவளுக்கும் தானே மனதில் ஒரு உறுத்தல் இருக்கும்..

இது தோன்றவுமே பாலகுரு எழுந்து அவளிடம் சென்றுவிட்டான்.. நொடிப் பொழுதும் யோசிக்கவில்லை.. போய் அவளின் அருகே “பூர்ணி…” என்று அமர, அவனை பார்த்தவள்,

திரும்பவும் முகத்தினை திருப்பிக்கொள்ள “சரி சரி.. நீ என்ன சொல்லணுமோ சொல்லு..” என்றான் கொஞ்சம் இறங்கி..

“ஒன்னும் வேணாம்.. போ..” என்றவள் கையை ஆட்ட, அவளின் அதே கரத்தை பற்றியவன்,

“வேணாம் ரொம்ப சீன் போடாத.. பின்ன என்ன செய்வேன் எனக்கு தெரியாது…” என்று வம்பில் இருக்க,

“சீன்.. நானு.. ஆரம்பத்துல இருந்தே ஓவர் சீன் போடுறது யாருன்னு எல்லாருக்கும் தெரியும் பாஸ்..” என்றவளை

‘போ டி போ…’ என்றுதான் பார்த்தான்..

“நீ தான் சரியான சீன் பார்ட்டி…”

“ஆமா அப்படித்தான் போ டி.. சீன் போட கெப்பாசிட்டி இருக்கு போடறேன்.. வெத்து ஜம்பம் ஒன்னும் செய்யலையே… சிலது எல்லாம் தன்னால வரும்.. தனியா செய்யனும்னு இல்லை..” என்றவனின் தோரனையை லேசாய் ரசிக்கத் தொடங்கிய மனதினை எண்ணி அவளே சிரித்துக்கொண்டாள்..

“என்ன என்ன சிரிப்பு..??”

“சிரிக்கவும்  கூடாதா??” என்றவள் “இப்போ எப்படி எந்திரிச்சு வந்த??” என,

“ஹா… தவழ்ந்து வந்தேன் ..” என்றான் அவனும்..

“அது இன்னும் கொஞ்ச நாள்ல நீ செய்யத்தான் வேணும்..” என்றவள் “நான் எழுந்து வந்துட்டா நீ கொஞ்ச நேரத்துல வரணும்னு எனக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது.. நீயும் அதுபோல வந்துட்ட.. அதையே தான் அன்னிக்கு நிர்மலா வேற விதமா பண்ணா..” என்றாள் தீர்க்கமாய்..

“ம்ம்ச் அவ என்னவோ பண்ணிட்டு போறா…”

“தப்பு பாஸ்.. அந்த நிலைமை அப்போ உங்க ரெண்டு பேருக்கும் தான் மேரேஜ் அகறதா  இருந்தது.. அப்போ அவளுக்கு நீதான் ப்ரியரா இருக்கணும்னு ஒரு எண்ணம் இருக்கும்.. ஆனா நீ ‘பூர்ணி யாரோ இல்லை…’ அப்படின்னு சொன்னா எந்த பொண்ணுக்கு அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியும் சொல்லு..

ஈவன் நானே அந்த நிலைமைல இருந்தாலும் நானும் இதை தான் பண்ணிருப்பேன்.. உன்னை எப்படியாவது என் பக்கம்.. என் பின்னாடி வர வைக்கணும் நினைச்சிருப்பேன்.. என்ன அதுக்கு அவ சூஸ் பண்ண வழி தப்பு.. அதுக்கு குடும்பத்துல இருக்க எல்லாரையும் இழுத்தது ரொம்ப தப்பு..

இதேது உன்கிட்ட வந்து நீ எப்படி அவளை அப்படி சொல்லலாம்னு சண்டை போட்டிருந்தா சரி…” என்றவள்,

“ஆனா அப்போவும் நீ இப்படிதான் ஸ்டபர்னா இருந்திருப்ப?? அப்படிதானே…” என, பாலகுருவின் தலை தானாய் ஆம் என்று ஆடியது..

அவனுக்குத் தெரியவில்லை தான் ஏன் அன்று அப்படி இருந்தோம் என்று.. ஆனால் பூர்ணி சொல்வது வைத்து யோசிக்கையில் இது நிர்மலாவின் தவறே என்றாலும் அவனுமே அதற்கு ஒரு காரணம் அது தான் நிஜம்.. ஆனாலும் அவனின் குணம் அவனை எங்கேயும் இறங்கிப் போக விடவில்லை..

அது பூர்ணிமாவாக இருந்தாலும் சரி.. இல்லை நிர்மலாவாக இருந்தாலும் சரி.. அவன் யாரிடமும் இறங்கிப் போகும் பழக்கமில்லை..

பூர்ணியை கூட ‘நீ என்னை கல்யாணம் செய்ற…’ என்று மிரட்டலாய் தான் சொன்னனே தவிர இன்று வரைக்கும் அவன் அதில் இருந்து மாறவில்லை..

“இதனால தான் பாஸ் சொன்னேன்.. நமக்கு…” என்று சொல்ல வந்தவளை போதும் என்று பார்த்தவன்,

“நம்மதான் முன்னாடி லவ் பண்ணலல சும்மா சும்மா அதே சொல்லாத போதுமா…” என்றவன் ‘பேசி முடிச்சாச்சா தூங்கலாமா??’ என்று பார்க்க,

பூர்ணிமாவோ கண்களை சுருக்கி அவனைப் பார்க்க “இன்னும் என்ன டி கதை வச்சிருக்க… அதான் முடிஞ்சதுல்ல…” என்றவன் கைகளை தூக்கி சோம்பல் முறிக்க,

“அப்போ நான் சொல்றது எல்லாம் கதையா…??” என்றாள் நன்றாய் முறைத்து..

“கதையோ கத்திரிக்காயோ.. இன்னிக்கோட இதெல்லாம் முடி..” என்றவன்

“இல்ல இல்ல போதும் நானே சொல்லிக்கிறேன்.. நம்ம லவ் பண்ணிருந்தா, ஒருவேளை அதுல நமக்குள்ள கருத்து வேறுபாடு வந்திருந்தா, நீ கோவிச்சிட்டு போயிருந்தா… கண்டிப்பா நான் உன்னை காம்ப்ரமைஸ் பண்ண வந்திருக்க மாட்டேன்.. அதாவது நானா உன்னை தேடி வந்திருக்க மாட்டேன்.. சோ அப்போ நமக்கு செட்டாகி இருக்காது.. அதானே..” என்றவன் அவளைப் பார்க்க,

‘ஆமாம்…’ என்று அவளும் தலையை ஆட்ட,

“சரி அதெல்லாம் ஒன்னும் நடக்கலைல இப்போ வந்து படு..” என்றவன் எழுந்து போக,

“அதான் இப்போ நடந்திருச்சே..” என்றவள் அவனோடு எழுந்தாலும்,

“பசங்களுக்கு எப்படி லவ் பண்ற பொண்ணு நம்மள விட்டு போக கூடாதுன்னு எண்ணமிருக்கோ, அதேபோல பொண்ணுங்களுக்கும் இருக்கும் நம்மளை தேடி ஒன் டைம்மாது வரணும்னு அதை புரிஞ்சுக்கோங்க…” என்று ஒரு கருத்து சொன்னவள், போய் படுக்க,

“தோடா மெசெஜாக்கும்…” என்றபடி அவனும் போய் படுக்க, இருவருக்குமே மனது லேசாய் இருந்தது அந்த ஷணம்..

அவள் சொன்னதை அவன் ஆமோதிக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை.. கேட்டுக்கொண்டான் அவ்வளவே.. அவளும் அதனையே தான் எதிர்பார்த்தாள், தான் சொல்ல வருவதை கேட்கவாது வேண்டும் என்று.. அது இன்று நடந்தது.. அக அவளுக்கும் ஒரு நிம்மதி இருக்க,

அவனுக்கும் பூர்ணிமா என்னை தவறாய் நினைக்கவில்லை என்ற எண்ணமும் சேர்ந்து அப்படியொரு தூக்கம் வந்தது இருவருக்கும்..

மறுநாள் காலை இருவரும் தாமதமாகவே எழ, பாலகுரு வேகமாய் ஹார்பர் கிளம்பிக்கொண்டு இருக்க, பூர்ணிமா அவனின் வேகம் பார்த்து அவனுக்கு வேகமாய் தட்டு வைக்க,

மைதிலி வந்தவர் “நீயும் உட்கார் ..” என்று சொல்லி அவளுக்கும் சேர்த்தே எடுத்து வைக்க,

முத்துராணி வந்து மணி பார்த்தவர் “எது எப்படினாலும் நேரத்துக்கு சாப்பிடனும்…” என்று அதட்டல் போட்டுவிட்டே சென்றார்..

பூர்ணி சரி என்று தலை ஆட்டினாலும், பாலகுரு அதனை கவனித்தவன் “ஒழுங்கா சாப்பிடு.. ரெஸ்ட் எடு.. இனியும் போட்டு அதை இதை நினைக்காத…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்..

‘ரெஸ்ட்டா…!!!!!’

‘நான் டெய்லி அப்படிதானே இருக்கேன்..’ என்று நினைத்தவளை கொஞ்ச நேரத்தில் சாருவும் அவளின் மாமியாரும் பார்க்க வந்திட, அடுத்து அவர்களோடு நேரம் போனது..

மகிலா வெளியூர் என்பதால் அவளோடு அலைபேசியில் மட்டும் பூர்ணிமா பேசிக்கொள்ள, சாரு வந்ததும் அவளோடு வெளியே சென்று வரலாம் என்று ஆசை வேறு தோன்ற,

முத்துராணியோ “அதெல்லாம் வேணாம்.. நாலு மாசம் போகட்டும் இப்போ ரொம்ப அலைய கூடாது..” என்றார் கண்டிப்பாய்..

“ம்ம் சரிங்க பெரியத்தை…” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..

இப்படி வீட்டிலேயே தினமும் அவளின் பொழுது போக, சந்தியா இரண்டு நாளுக்கு ஒருமுறை வந்து செல்ல, அவளுக்கு போர் அடிப்பதாய் இருந்தது..

பாலகுருவை தான் போட்டு நச்சரிக்க ஆரம்பித்தாள்..

“எனக்கு போர் அடிக்குது வெளிய கூட்டிட்டு போ..” என்று..

ஆனால் பாலகுருவிற்கு வேலைகள் நிறைய நிறைய இருந்தது.. கப்பல்கள் புதிதாய் இரண்டு வாங்க, அதற்கான கடைசி நேர வேலைகள் இருக்க, அவன் பூர்ணிக்காக என்றும் ஒரு சிறு படகு வீடு வாங்கியிருந்தான்..

இதனை யாரிடமும் அவன் சொல்லவில்லை.. எப்படியும் புது கப்பலுக்கு பூஜை போடவென வீட்டினர் எல்லாம் ஹார்பர் வருவர் என்று சொல்லிகொள்வோம் என்று இருந்தான்.. பூர்ணிமாவிற்க்கும் இது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும் என்று அவன் சொல்லவேயில்லை..      

அவனும் வீட்டிற்கு வர நேரமாக, அவன் வந்ததுமே “சீக்கிரம் வந்தா என்ன எனக்கு எவ்வளோ போர் அடிச்சது தெரியுமா???” என்பாள்..  

நாளுக்கு நாள் அவள் இதையே சொல்ல,  “சரி நாளைக்கு கூட்டிட்டு போறேன்..” என்றான் வெறுமெனே.

நாள் கூட இல்லை .. மாதங்கள் ஆகியிருந்தது.. இரண்டு மாதம் கட கடவென ஓடியிருந்தது.. இந்த இரண்டு மாதமும் பூர்ணி ஹாஸ்பிட்டல் மட்டுமே வெளியே போனது… என்னவோ முத்துராணி “குழந்தை பிறக்குற வரைக்கும் தேவையில்லாம அசைய கூடாது..” என்று சொல்ல, பூர்ணிக்கு வேறு வழியே இல்லை..

சந்தியாவோ “அவங்க சொல்றதை கேள்..” என்றுவிட,

அவள் யாரிடம் போவாள், பால்குருவிடம் தானே..    

“எங்க பாஸ்???” என்றவள் வேகமாய் அவனருகே வர, “மெதுவா நடக்கணும் பூர்ணி..” என்றவன் அவளை தன் மடியில் அமர வைக்க,

“எல்லாம் இதே சொல்லுங்க.. மெதுவா நடக்காத.. வெளிய போகாத.. அது இதுன்னு.. ம்ம்ச்.. எனக்கு மட்டும் அக்கறை இல்லையா என்ன??” என்று கடிந்தவள்

“போ பாஸ்…” என்று சலிப்போடு எழுந்து செல்ல, ‘என்னடா…’ என்றானது அவனுக்கு..

அவனுக்கு தெரியும்.. முத்துராணி ஒருவிசயத்தை திரும்ப திரும்ப சொல்வார் என்று.. அவரைப் பொறுத்த மட்டில் பூர்ணியை  காவந்து காப்பது நம் கடமை என்று சொல்ல, இவளுக்கோ அதுவே ஒருவித அழுத்தம் கொடுப்பதாய் இருந்தது..

ஆனால் அவரிடம் போய் சொல்லவும் முடியாதே, இப்படி சொல்லாதே என்று..

“பூர்ணி உன்னோட நல்லதுக்கு தானே..” என,

“அது எனக்கு தெரியாதா???” என்றாள் பட்டென்று..

“சரி சரி.. நாளைக்கு கண்டிப்பா கூட்டிட்டு போறேன்..” என்றவன் வந்து மெதுவாய் அவளின் நெற்றியில் இதழ் பதிக்க,

“ம்ம்ச் போ…” என்று தள்ளினாள் அவனை..

“என்ன பூர்ணி…” என்றவனுக்கு அவள் புதிதாய் பிடிவாதம் செய்வதாய் தெரிந்தது..

Advertisement