Advertisement

குருபூர்ணிமா – 9

முத்துராணிக்கு அப்படியொரு கோபம்… பாலச்சந்திரனோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாய் இருக்க, பாலகுருவோ அவன் மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்பதனை கூட யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை.. முகத்தினில் அப்படியொரு இறுக்கம்..

சாருலதா அடுத்து என்ன நடக்குமோ என்று கலங்கிப் போய் இருக்க, மைதிலியும் தனபாலும் தான் அனைவரிடமும் சிக்கிக்கொண்டு முழிக்கும் நிலையானது. அவர்கள் இருவரும் தான் சாருலதா திருமண விஷயம் பேசிவிட்டு அப்படியே பாலகுரு பூர்ணிமாவின் திருமணம் பற்றியும் பேச, பூர்ணிமா சந்தியாவிடம் சொன்ன அதே பதிலைத்தான் இவர்களிடமும் சொன்னாள்..

அனைவரையும் விட மைதிலிக்கு நிரம்பவே ஆச்சர்யம்.. அவருக்குதான் முன்னயே தெரியும் பூர்ணிமாவின் விருப்பம் என்னவென்று.. அப்படியிருக்கையில், பாலகுருவும் இதற்கு சம்மதம் என்று சொன்ன நிலையில், பூர்ணி வேண்டாமென்பது அவருக்கு அதிர்ச்சியே..

“ஏ பூர்ணி.. என்ன சொல்ற நீ???” என்றவரிடம்,

“சின்னத்தை ப்ளீஸ்… நீங்க இதுக்கும் சாறு மேரேஜுக்கும் எதுவும் ரிலேட் பண்ணிக்காதீங்க.. எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. ப்ளீஸ்…” என்றிட, ராமலிங்கமும் சரி சந்தியாவும் சரி எதுவும் பேச முடியா சூழ்நிலை கைதிகள் ஆகினர்..

தனபாலோ “என்ன பூர்ணி இப்படி சொல்ற.. பாலாவத்தான் உனக்கு பிடிக்குமே…” என,

“எனக்கு மட்டும்தானே மாமா பிடிக்கும்…” என்றாள்..

அவ்வளவுதான் இதற்குமேல் அவர்களாலும் என்ன சொல்லிட முடியும்.. சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி வீடு வர, முத்துராணியோ, “நிஜமாவே வேணாம்னு சொன்னாளா???” என்று மைதிலியை பார்த்து கேட்க,

“ஆ.. ஆமாக்கா..” என்றவர் தயங்கி தயங்கி பாலகுருவின் முகம் பார்க்க,

“என்ன மைதிலி.. இன்னும் என்ன?? வேற எதுவும் சொன்னாளா?? அன்னிக்கு நான் பேசினப்போ அமைதியா தானே இருந்தா.. இப்போ என்னவாம் இவளுக்கு..??” என்ற முத்துராணிக்கு மனதினுள் பயம், எங்கே பாலகுரு திரும்பவும் கிளம்பிச் சென்றிடுவானோ என்று…

அதையும் மீறி பூர்ணிமா மீது அப்படியொரு கோபம் என் மகனை வேண்டாம் என்று சொல்கிறாள்  அதுவும் விரும்பிக்கொண்டே.. நிர்மலா மீது வராத கோபம் பூர்ணிமா மீது வந்தது.. ஒருவேளை எல்லாம் சேர்த்து வைத்து வேடித்ததோ என்னவோ..

“நானே நேர்ல போய் பேசுறேன்.. இத்தனை நாள் அமைதியா இருந்துட்டு நாளைக்கு பேசி முடிக்கலாம்னு சொல்றப்போ முடியாதுன்னு சொல்வாளா??? அவ முடியாதுன்னு சொன்னாலும் சரி அவதான் இந்த வீட்டு மருமக.. பொண்ணு கொடுக்கமாட்டேன் சொல்லிடுவாங்களா… அதையும் பார்த்துடலாம் ..”  என்று முத்துராணி மனதில் தோன்றியதை எல்லாம் பேசிவிட்டு கிளம்ப,

“ம்மா.. நீ எதும் போய் பேசவேணாம்…” என்ற பாலகுருவின் வார்த்தைகள் அவரை நிற்க வைத்தது..

“ஏன்டா என்ன நினைச்சிட்டு இருக்காங்க எல்லாரும்… உனக்காக சாவு வரைக்கும் போவாளாம் ஆனா உன்கூட வாழமாட்டாளாமா??”

“ம்மா சொன்னா கேளு.. நீ போகாத..”

“ஏன்?? நான் போவேன்… கேட்பேன்… அன்னிக்கு சொல்றப்போ வாய் மூடிட்டு இருந்தா…” என்று திரும்பவும் முத்துராணி கிளம்ப,

பாலச்சந்திரனோ “முத்து சொன்னா கேளு.. நீ போய் சத்தம் போடவேணாம்.. பூர்ணி மனசுல என்ன இருக்கோ.. நம்ம பேசித்தான் பார்க்கணும்…” என்று அவரும் பேச,

“யாருமே பேசவேணாம்…” என்றபடி எழுந்துவிட்டான் பாலகுரு..

அவனது குரலில் என்ன இருக்கிறது தெரியாது, ஆனால் அவன் சொன்ன வார்த்தையில் மிக மிக அழுத்தம் இருக்க, யாருமே இங்கிருந்து நகரக்கூடாது என்ற செய்தியும் அவன் பார்வையில் தெரிய, அனைவரும் ஏன் என்று அவனின் முகம் தான் பார்த்தனர்..

பாலகுருவும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து, “எனக்காக நீங்க யாரும், யார்கிட்டயும் இனியும் போய் நிக்க வேணாம்.. போதும்.. இது என்னோட வாழ்க்கை தானே.. நானே பேசிக்கிறேன்.. பார்த்துக்கிறேன்..” என்று இவர்கள் நிர்மலாவிடம் பேச சென்றதை நினைத்து சொன்னவன்,

“பூர்ணிக்கிட்ட நான் பேசுறேன்..” என்றுவிட்டு கிளம்பிச் சென்றான்..

அவனுக்குமே உள்ளே கோபம் தான் எரிமலையாய் வெடித்துக்கொண்டு இருந்தது.. என்ன நினைத்துகொண்டு இருக்கிறாள் இவள் என்று. ஏனோ நிர்மலா இந்த திருமணம் சரிவராது என்று சொன்னபோது எழாத உணர்வுகள் எல்லாம், பூர்ணிமா சொன்ன இந்த ஒரு வேண்டாமில் வெடித்து சிதறியது..

“நா… நான்.. வேணாமா இவளுக்கு..??” என்று திரும்ப திரும்ப  அவனே அவனிடம் கேள்விகள் கேட்டு கேட்டு எரியும் மனதிற்கு இன்னும் கொஞ்சம் நெய் வார்த்துக்கொண்டான்

எத்தனை வேகத்தில் காரினை செலுத்தினானோ தெரியாது, பூர்ணிமாவின் வீடு செல்ல, சந்தியாவே அவனை எதிர்கொண்டார்.

“பூர்ணி எங்கத்தை??” என்றவனின் பார்வை வீட்டை அலச,

“மா.. மாடில இருக்கா பாலா.. கூப்பிடவா??” என்றவருக்கும் மகளின் செயலில் வருத்தமே..

“இல்லத்தை நானே பார்த்துக்கிறேன்…” என்றவன் அவர் பதிலுக்காக எல்லாம் காத்திருக்கவில்லை, மாடியேறிவிட, அவளோ அங்கேயிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கண்களை மூடி இயர் போனை காதில் மாட்டி பாடல் கேட்டுக்கொண்டு இருந்தாள்..

கண்களை மூடி இருந்தவளின் முகத்தினில் ஒரு அசாத்திய அமைதி தெரிய, ஊஞ்சல் மெதுவாய் ஆடிக்கொண்டு இருக்க, பூர்ணி முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு இருக்க, அவளை பார்க்க பார்க்க இவனுள் ஆத்திரம் தான் பிறந்தது..

‘ராட்சசி.. வேணாம் சொல்லி, தேடி வர வச்சிட்டா…’ என்று மனதினுள் வைதவன், அவளின் செவிகளில் மாட்டியிருந்த இயர் போனை வெடுக்கென்று பிடுங்க,

“ம்ம்ச்..” என்ற எரிச்சலில் இமைகள் திறந்தவளுக்கு, அப்படியே அதிர்ச்சி பாவனை கண்ணில் தெரிய, ‘பாஸ்..’ என்று அவளின் இதழ்கள் முணுமுணுத்தன..

“ஆமா டி பாஸ் தான்… பாஸ் பாஸ்னு சொல்லித்தான் என்னை இப்படி வந்து இப்போ நிக்க வச்சிருக்க…” என்று பாலகுரு கத்த,

“எ.. என்ன சொல்ற.. நா.. நான் என்ன பண்ணேன்…” என்றாள் இவன் ஏன் இத்தனை கோபமாய் வந்திருக்கிறான் என்று யூகித்தும்.

“ஓ… உனக்கு எதுமே தெரியாது இல்லையா.. நடிக்காத டி…”

“ம்ம்ச் இப்படி கத்தாதா பாஸ்.. என்னாச்சு உனக்கு???”

“என்ன ஆச்சா??? இன்னும் என்ன ஆகணும்… இல்லை நீதான் எனக்கு என்ன ஆகணும்னு நினைக்கிற??” என்றவன் அவள் அமர்ந்திருந்த ஊஞ்சலை எட்டி உதைக்க, அது அதன் வேகத்தில் தன்னைப்போல் ஆட, அதை விட வேகமாய் பூர்ணிமா எழுந்து நிற்க,

ஊஞ்சல் பின்னே வேகமாய் போய் முன்னே வர, அந்த நேரத்திலும் அது அவளின் மீது இடித்திடாது இருக்க, அவளையும் தன்னோடு சேர்த்தே நகர்த்தி பாலகுரு நிறுத்த, எதிர்பாராத இந்த இழுப்பில் அவனோடு முட்டி ஒட்டியே பூர்ணிமா நிற்க, இருவருக்குமே க்ருதயம் வேகமாய் தான் துடித்துக்கொண்டு இருந்தது..

ஒருவரின் பார்வை மற்றவரின் முகத்தினில் இருக்க, இருவரும் அப்படியே நிற்க, ஊஞ்சல் மட்டுமே ஆடிக்கொண்டு இருக்க, பூர்ணியின் முகத்தின் அருகே நெருங்கியவன்,

“சொல்லு ஏன் என்னை வேணாம் சொன்ன???” என்றான் அவனின் பிடியை இறுக்கி..

“உன்னை வேணாம் சொல்லலை… இந்த கல்யாணம் வேணாம் சொன்னேன்.. அவ்வளோதான்..” என்றவள், அவனில் இருந்து விலக முற்பட, அது முடியவேயில்லை அவளால்..

“ம்ம்ச் விடு பாஸ்…”

“முடியாது… ஏன் விடனும்.. உன்னை விட முடியாது…” என்றவன் இன்னமும் தன்னோடு இறுக்கி,

“அப்போ நான் உனக்கு வேணாம் அப்படித்தானே…” என,

“கடவுளே..!!!! உன்னை எப்போ வேணாம் சொன்னேன்…” என்றாள் எரிச்சலாய்..

“ஓ…!!! அப்போ கல்யாணம் வேண்டாம் சொன்னதுக்கு என்ன அர்த்தம்?? என்னைத்தானே கல்யாணம் பண்ண சொன்னாங்க??? அப்போ உனக்கு நான் வேணாம்னு தானே அர்த்தம்… இல்லை கல்யாணம் பண்ணாம வாழனும்னாலும் சரி…” என்று சொல்ல,  

‘அடப்பாவி..!!!!’ என்றுதான் வாய்பிளந்து பார்த்தாள் அவள்..  

“என்ன?? என்ன பாக்குற… வா.. உனக்கு கல்யாணம் மட்டும் தானே வேணாம்…” என்று அவளை இழுக்க,

“அய்யோ… பாஸ்… என்ன பேச்சு இது.. இப்போ ஏன் நீ இப்படி பேசற..???” என்று பூர்ணி கேட்க,

“அட அட.. பிரமாதம்… நீ எதுக்குடி கல்யாணம் வேணாம் சொன்ன.. ஏன் என்னோட வாழ கசக்குதா..??” என்று கத்தினான்..

“சும்மா கத்தாத பாஸ்.. உனக்குத்தான் என்னை கல்யாணம் பண்ணிட்டு வாழ்ற எண்ணமில்லையே பின்ன எப்படி நான் சம்மதிப்பேன்…”

“ஓஹோ… எனக்கு இல்லைன்னா என்ன?? உனக்கு இருக்குல்ல.. எப்படி எப்படி லவ் பண்ணுவியாம்.. பார்க்கிறப்போ பேசுறப்போ எல்லாம் பாஸ் பாஸ்னு உருகுவியாம்.. அவ்வளோ ஏன் உயிரையே கொடுக்கக்கூட யோசிக்கமாட்டாளாம்.. ஆனா கல்யாணம் பண்ண மட்டும் வேணாமாம்… என்னை என்ன டி நினைச்சிட்டு இருக்க நீ???

தொலைச்சிடுவேன் ராஸ்கல்… இங்க பார் இந்த கல்யாணம் பிடிக்குது பிடிக்கல.. ஆனா உனக்கு என்கூட தான் கல்யாணம்… வேணாம் சொல்றதுக்கா என்னை தேடி வந்த?? இல்லை என்னை காப்பாத்தின… இப்பவும் சொல்றேன்.. உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும்.. முடிஞ்சா நீ தடுத்துக்கோ…” என்று விரல் நீட்டில் மிரட்ட,

‘அம்மாடியோ…!!!!!’ என்று பூர்ணிமா அசந்துதான் போனாள்..

‘பண்ணது எல்லாம் இவன்… நான் லவ் சொன்னப்போ வேணாம் சொல்லிட்டு.. இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண நிச்சயமும் பண்ணிட்டு இப்போ வந்து இப்படியொரு மிரட்டல்.. திண்ணக்கம் தான் இவனுக்கு…’ என்று எண்ணியவள்,

“நீ பேசுறதுல ஏதாவது லாஜிக் இருக்கா பாஸ்…??” என்றாள் நேருக்கு நேராய் அவனைப் பார்த்து.

அவனும், நான் உனக்கு சளைத்தவன் இல்லை என்பதாய், அவளை நேருக்கு நேராகவே பார்த்து, “வாழ்க்கைல எல்லா நேரமும் லாஜிக் பார்க்க முடியாது.. கூடாது..” என்று சொல்ல,

“ஓ… சரி.. அப்போ உனக்கு எந்த பீலும் இல்லைன்னா நான் வேணாம்.. இப்போ என்னவோ தோணவும் வந்து இவ்வளோ கத்துற.. நான் உன்ன லவ்  பண்றேன் தான்.. ஆனா நடந்தது எல்லாம் நானும் பார்த்துட்டு தானே இருந்தேன்.. நான் அதை பத்தி பேசலைன்னா அதை மறந்துட்டேன்னு அர்த்தமா???.” என்றவளுக்கு இப்போது நிஜமாகவே கோபம் துளிர்த்தது….

உணர்வுகளின் அலைக்கழிப்பு அவளை போட்டு பாடாய் படுத்தியது.. நீ என்னவோ செய்துகொள் நான் விரும்புவதை விரும்பிக்கொள்கிறேன் என்றுதானே இருந்தாள்.. ஒருத்தியோடு திருமணம் எனும் பந்தத்திற்குள் செல்ல இருந்தான்.. பின் அது நின்றதும் இவள் கோபித்தாள் என்று ஊரைவிட்டே சென்றான்.. திரும்பி வந்ததும் இப்போதும் திருமணம் செய்துகொள் என்று இத்தனை களேபரம்..

இதற்கெல்லாம் மேலாய் ஒருவார்த்தை, ‘உன்னை பிடித்திருக்கிறது..’ என்று சொல்லியிருந்தால் அவள் என்ன சொல்லியிருக்கப் போகிறாள்.. சந்தோசமாய் சம்மதம் என்று சொல்லியிருப்பாளே.. பூர்ணிமாவிற்கு தெரிந்தது எல்லாம் பாலகுருவை நேசிப்பது மட்டும் தான்..

அது அவன் எந்த நிலையில் இருந்தாலும் சரி.. எப்படி இருந்தாலும் சரி.. அவள் மனம் கொண்டது எல்லாம் அவன்மீது கொண்ட காதல் மட்டுமே…

ஆனால் இவனது வார்த்தைகளில் ஒரு சிறு அளவேனும் அவள்மீதான நேசம் வெளிப்பட்டால் அவள் மகிழ்வாளே.. அதை செய்யாமல் வற்புறுத்தல் மட்டுமே வார்த்தைகளில் தெரிய, இன்னும் இன்னும் பூர்ணிமாவிற்கு மனம் பிடிவாதம் கொண்டது..

இறுகிய முகத்துடனே அவனை ஏறிட்டாள்.. அவள் விழிகளில் அதீதமாய் ஒரு பாவனை.. நீ என்ன செய்தாலும் சரி நான் இதற்கு சம்மதிக்கவே மாட்டேன் என்று.. என்மீத உன் நேசம் இல்லாது அப்படியொரு வாழ்வே வேண்டாம் என்பதாய் ஒரு திடம் அவளில் தோன்ற, அது பாலகுருவிற்கு புரியாதா என்ன??

அவனும் அவளையேத்தான் பார்த்துகொண்டு இருந்தான்.. அவளை மட்டுமேதான் பார்த்துகொண்டு இருந்தான்.. அவனுக்குமே புரியவில்லை ஏன் தனக்குள் இப்படியான ஒரு உணர்வு குவியல் என்று.. இவளைத்தானே நாம் முன்னோர் நாளில் வேண்டாம் சொன்னோம் என்று யோசிக்கவேயில்லை அவன்.. யோசிக்கத் தோன்றவில்லையோ என்னவோ..

ஆனால் இப்போதோ ஓர் பிடிவாதம்.. பூர்ணி என்னை வேண்டாம் என்பதா?? அதுவும் என்னை நேசிக்கும்போதே.. அது எப்படி சாத்தியம்.. இல்லை இல்லை.. அவளுக்கு நான் வேண்டும்.. அவளுக்கு நான் வேண்டும் என்பதற்காகவாவது எனக்கு அவள் வேண்டும்… இதெல்லாம் அவனுக்கும் மனதில் ஓட,

பூர்ணியின் முகத்தினை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் “நான் இல்லாம வாழ்ந்திடுவியா நீ…??” என,

“நீ இன்னொருத்தி கூட வாழப் போறன்னு தெரிஞ்சே நான் உயிரோட தானே இருந்தேன்…” என்று அவளும் அசராது கூற, அவள் கன்னங்களை பற்றியவனின் கரம் அழுத்தியதில், தான் கூறிய வார்த்தைகள் அவனுக்கு எத்தகைய வலியை கொடுக்கும் என்று பூர்ணிமாவிற்கு நன்கு புரிந்தது..

இதனை அவள் பேசவேகூடாது என்று இருந்தாள்… நிர்மலாவை அவன் திருமணம் செய்ய சம்மதித்தான் என்றால் அது அவனது விருப்பம்.. எப்படி இவளது விருப்பத்தில் யாரது தலையிடலும் பூர்ணியால் ஏற்றுகொள்ள முடியாதோ அதுபோலவே தானே அனைவர்க்கும்.. அதனை முன்னிட்டே அவள் அப்போது அமைதியாய் இருந்தது.

அவன் வாழ்வு அவன் விருப்பம் என்று.. ஆனால் இப்போது அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மறந்ததாய் நினைத்தவைகளை கிளறிவிட அவளையும் அறியாது தான் இந்த கேள்வியை கேட்டுவிட்டாள்… அவ்வளவுதான் பாலகுரு அப்படியே நின்றுபோனான்…

பிடி இறுகியது.. பார்வை நிலைத்தது.. ஆனால் அசைவில்லை அவனிடம்.. கண்களில் அப்படியொரு வலி தெரிய, அவன் உடல் தொய்வது அவளால் உணர முடிந்தது..

“பா… பாஸ்…” என்று பூர்ணிமா அவனது கரங்களை பிடிக்கும் போதே அவளருகே இருந்து பின்னே தள்ளி நின்றான்..

திரும்பவும் “பாஸ்…” என்று அவனைத் தொட, “விடு பூர்ணி…!!!” என்றவன் சோர்வாகவே அந்த ஊஞ்சலில் அமர, அவளுக்கோ ‘ஐயோ…’ என்றாகிப் போனது..

அவனைப் பற்றித்தான் அவளுக்கு நன்றாய் தெரியுமே… இதனை சொன்னால் இவன் காயம்படுவான் என்று நினைத்து நினைத்தே இந்த பேச்சினை தவிர்த்தவள், இன்று அவனை நோகடிக்க,

“ஸா.. ஸாரி பாஸ்.. நா.. நான் நிஜமா அப்படி..” எனும்போதே, அவளை பேசாதே என்று சைகை செய்தவன், அவளை தன்னோடு அமர்த்திக்கொண்டான்..

வெகுநேரம் ஒன்றுமே பேசவில்லை.. அவளும் சரி.. அவனும் சரி.. எதுவும் பேசவில்லை.. மௌனமாய் அமர்ந்திருக்க, ஊஞ்சல் ஆடும் சத்தம் மட்டுமே கேட்க, பூர்ணி வாய் திறக்கவேயில்லை.. அவனாகவே பேசட்டும் என்றுவிட, பாலகுருவிற்கோ இத்தனை நேரம் கத்திக்கொண்டு இருந்தவனின் கோபம் எங்கே போனது என்றே தெரியவில்லை..

ஆனாலும் மனம் என்னென்னவோ நினைக்க, அவற்றை எல்லாம் கோர்வையாய் வார்த்தைகளால் வெளிப்படுத்தவும் அவனால் முடியவில்லை..

அவனது மௌனமே அவளை பேசவைக்க “பாஸ்… பேசு…” என்றாள் திரும்ப…

“ம்ம்ச் என்ன பேச… போ…” என்றவன் என்ன நினைத்தானோ, அவள்புறம் திரும்பி அமர்ந்து, “என்னை பார்த்தா உனக்கு செல்பிஷ் போல தெரியுதா??” என்று கேட்க,

“ச்சி ச்சி..” என்று வேகமாய் பூர்ணி தலையை ஆட்டினாள்…

“ஆனா நான் இப்போ பண்றது சுயநலமாத்தான் எனக்கு தெரியுது பூர்ணி…” என்றவனின் முகத்தினில் உணர்வுகளே இல்லை..

“பாஸ்.. விடு.. நீ எதும் பேசாத.. நான்.. நான் சாரி.. அப்படி பேசியிருக்கக்கூடாது..”

“ஹா ஹா போ டி.. பண்ணது எல்லாம் நான் நீ சாரி கேட்கிறியா???” என்று விரக்தியாய் சிரித்தவனை, வியந்து பார்த்தவள்,

“ஏன் இப்படி சிரிக்கிற…??” என்று கேட்க,

“வேறென்ன செய்ய.. சந்தோசமா சிரிக்கிறது போல எதுவும் நடக்கலை.. அட்லீஸ்ட் இப்படியாவது சிரிக்கிறேனே…” என்றதும்,

“ம்ம்ச் பாஸ்.. இதுக்கு நீ கோவமா கூட பேசிடேன்..” என்றவளின் கரங்களை இன்னும் தன்னோடு பிணைத்துக்கொண்டான்..

பூர்ணியும் எதுவும் சொல்லாது இருக்க, “எனக்கும் அந்த போஸுக்கும் என்ன பிரச்சனை தெரியுமா???” என்று பாலகுரு கேட்க,

“ஹார்பர்ல எதுவும் பிரச்சனையா??” என்றாள்..

“ம்ம்ஹும்.. பொதுவா ஹார்பர் பிரச்சனை எல்லாம் அங்கேயே முடிஞ்சிடும்.. முடிச்சிடவும் செய்வேன்.. ஆனா இது வேற.. ஒரு பொண்ணு விஷயம்.. அதான் அவன் என்னை கொல்ற அளவுக்கு வெறி…”

“என்னது??!! பொண்ணு விசயமா…???”

“ம்ம் ஆமா.. பொதுவா ஜென்ட்ஸ்க்கு பொண்ணு விசயத்துல அசிங்கப்பட்ட ரொம்ப ஈகோ வந்திடும்.. அதும் அவன் என்னை சொன்னான் நீ எப்படி லைப்ல ஒரு பொண்ணோட வாழறன்னு நானும் பார்க்கிறேன்னு… அப்போ ஆரம்பிச்சது பிரச்சனை..”

“நீ என்ன பண்ண முதல்ல???” என்றவளை பார்த்து இன்னமும் சிரித்தான்..

“நான் என்ன பண்ணேன்?? ஹார்பர்ல வேலை செய்றவர் பொண்ணு பின்னாடி சுத்தி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான்.. நான் ரெண்டு தட்டு தட்டினேன்.. அடுத்து ஒவ்வொரு பிரச்சனையா பண்ணான்.. அந்த பொண்ணுக்கு இஷ்டமே இல்லை.. கடைசில அப்பாக்கிட்ட சொல்லி அந்த பொண்ணுக்கு வேற பையன் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சோம்.. அதான் இவ்வளோ கோவம்..” என்று அவன் சொன்னதும்,

‘அடப்பாவி…!!!’ என்று பூர்ணி பார்க்க,

“என்ன பாக்குற.. அந்த பொண்ணுக்கு சுத்தமா இவனை பிடிக்கல அப்படியிருக்கப்போ நாங்க என்ன செய்ய முடியும்…” என,

“ம்ம்ம் ஒருவேளை அவன் உண்மையா லவ் பண்ணிருந்தா அவனுக்கு நிஜமா எவ்வளோ ஹர்ட் ஆகிருக்கும்..” என்று பூர்ணி சொன்னதும்,

“ம்ம் அதனால தான் அவனை விட்டுட்டேன்…” என்றவன், சிறிது நேரம் விட்டு “உனக்கு வலிச்சது போலத்தானே அவனுக்கும் வலிச்சிருக்கும்… என்ன நீ பெருந்தன்மையா நான் வாழட்டும்னு நினைச்ச.. அவன் என்னை கொல்லனும் நினைச்சான்…” என்றவன் மேலும் சிறிது நேரம் இடைவெளி விட்டு,

“ஐம் சாரி பூர்ணி…” என, அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவள் அப்படியே அழத் தொடங்கிவிட்டாள்..                 

                       

  

 

                               

 

           

Advertisement