Advertisement

குருபூர்ணிமா – 8

பாலகுரு, இமைக்க மறந்து, சுவாசிக்க மறந்து சுற்றி இருப்பதெல்லாம் மறந்து, தான் எங்கிருக்கிறோம்.. என்ன செய்யவேண்டும் என்பதுகூட மறந்து அப்படியே நின்றிருந்தான்..

தூரத்தில் வந்துகொண்டு இருந்த போட், அதில் இருந்த பூர்ணிமா.. இப்போது வெகு அருகே.. வானம் கருமை பூசிக்கொள்ள, சுற்றிலும் இருந்த இருட்டில் அந்த போட்டில்  இருந்த விளக்கொளியில், கடல் காற்றில் கேசம் பறக்க, பார்வையை இவனிருந்த பெரிய கப்பலின் மீதே பதித்து இருந்தவளின் தோற்றத்தில் கொஞ்சம் ஆடித்தான் போனான் பாலகுரு..

மெலிந்திருந்தாள்.. அது அவன் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது.. அவள் இவனைக் கண்டாளா தெரியவில்லை.. இத்தனை பெரிய கப்பலில் அவன் நிற்பதுகூட அவளுக்கு தெரிந்திருக்குமா தெரியாது.. ஆனால் பார்வை எல்லாம் இங்கேதான் இருந்தது… பாலகுருவிற்கும் அப்படியே.. பார்வை எல்லாம் அவளின் மீதே தான்..

‘பூர்ணி…’ என்று இதழ்கள் முணுமுணுத்தாலும், அடுத்தநொடி ‘இவ எதுக்கு வர்றா…’ என்ற கோபம் எழுந்தது..

‘கண்ணு முன்னாடி வராத சொல்லிட்டு இப்போ எதுக்கு இவ என் முன்னாடி வர்றா…’ என்ற வேகம் எழ,

அத்தனை நேரம் அவள் மட்டுமே தெரிய, இப்போது அவளின் அருகே இருந்த பாண்டியாவும் தெரிய,

‘டேய் இருக்குடா உனக்கு…’ என்று பல்லைக் கடித்தான்..

அதற்குள் பாண்டியா பூர்ணிமாவிடம் எதோ சைகை செய்ய, அவளும் அந்த கப்பலில் தொங்க விடப்பட்டிருந்த ஏணி மீது கால் வைக்க, அதனை பார்த்த  பாலகுருவிற்கு இன்னும் டென்சன் ஏறியது..

‘அறிவு கெட்டவன் எப்படி கூட்டிட்டு வர்றான்…’ என்று முனங்கியவன், ஒருமுறை குனிந்து பார்க்க, பூர்ணிமாவோ தட்டுத் தடுமாறி ஏணி மீது ஏற, அவ்வளவுதான் பாலகுரு யோசிக்கவேயில்லை, வேகமாய் இரண்டாம் தளம் வந்தவன்,

ஏணி இருக்கும் திசை நோக்கி போக, அந்த ஏணியை ஒட்டி சிறு கதவு ஒன்று இருக்க, அத்தனை உள் பக்கமாய் திறந்து, அதன் பலகையில் கால் வைத்து மெதுவாய் எட்டிப்பார்க்க, பூர்ணி இன்னும் இரண்டொரு எட்டில் அவனின் அருகே வந்துவிடுவாள் என்று புரிந்தது..

அதுவரையிலும் கூட அவன் முகத்தினை வெளியே காட்டவில்லை.. ஒருவேளை தன்னைப் பார்த்தால் விழுந்தாலும் விழுந்திடுவாள் என்று எண்ணினானோ என்னவோ.. பூர்ணிமாவின் தலை தெரிய இன்னும் நன்றாய் உள்ளே தள்ளி நின்றுகொண்டான்..

“யக்கா பாத்து போங்கக்கா…” என்ற பாண்டியாவின் குரலும்

“ம்ம் ம்ம்… ஆனாலும் இப்படி எல்லாம் செய்ய கூடாது.. கொள்ள கூட்டத் தலைவனை பார்க்க போறது மாதிரி இருக்கு.. கப்பல்ல யாருக்கும் தெரியாம ஏறிக்கிட்டு…” என்று அவளது குரலும்,

“நீங்கதானே க்கா பாஸ் பாஸ் சொல்லிக்கின்னே இருப்பீங்கோ….” என்ற பாண்டியாவின் கிண்டலும்,

“எல்லாம் என் நேரம்…” என்ற பூர்ணியின் கடிதலும் பாலகுருவிற்கு இதழில் ஒரு புன்னகையை கொடுக்க, சரியாய் பூர்ணி அந்த கதவை தாண்டி மேலே செல்லும் நேரம் பார்த்து அப்படி அவளின் இடையோடு சேர்த்து பக்கவாட்டில் கை போட்டு ஒருநொடியில் உள்ளே இழுத்துவிட்டான் இவன்..

“ஐயோ போச்சு…!!!!!!!” என்று கண்களை இறுக மூடியவள், சிறிது நேரத்திற்கு பின் தான் கீழே விழவில்லை என்று உணர்ந்து கண்களை திறந்து சுற்றி முற்றி பார்க்க, அங்கே யாருமேயில்லை..

இதயம் வேறு படக் படக் என்று அடித்துக்கொள்ள, இன்னமுமே அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க, பாண்டியா அப்போதுதான் ஏணியில் இருந்து அந்த கதவின் வழியே உள்ளே வந்துகொண்டு இருக்க,

“இ.. இங்க யார் இருக்கா?? நான்.. நான் எப்படி வந்தேன்…” என்று அவனைப் பார்த்து கேட்க,

“யக்கா சோக்காகீதுக்கா.. நீங்க உள்ள போயிக்கினீங்கன்னுதான் நானும் வந்தேன்…” என்று அவனும் சுற்றி முற்றி பார்க்க, 

“பாஸ்… நீதான இது.. இங்கதானே இருக்க…” என்று ஏறக்குறைய கத்தினாள்..

அதிர்ச்சி ஒருபுறம்.. அவன்தானோ என்ற ஆவல் ஒருபுறம்.. கண் முன்னே வராது இதென்ன கண்ணாமூச்சி என்ற தவிப்பு ஒருபுறம், எல்லாம் சேர்ந்து அவளை கத்ததான் வைத்தது..

அமைதியான கடல் அலைகளின் சப்தமும், கப்பலில் இருக்கும் ஆட்களின் சப்தமுமே பதிலாய் வர,

“பாஸ் வந்திடு..” என்றவளுக்கு இப்போது குரல் நடுங்கத் தொடங்க, அப்போதும் வந்தானில்லை..

“உனக்கு அவ்வளோதான் மரியாதை.. ஒழுங்கா வந்து என் கண்ணு முன்னாடி நில்லு பாஸ்…” என்றவளுக்கு அழுகையே வந்திட, அப்படியே முட்டிகால் போட்டு அமர்ந்துவிட்டாள்..

“யக்கா இன்னாக்கா இது…” என்று பாண்டியா அவளின் அருகே போகும் முன்னே, பூர்ணியின் பின்னே காலடி சத்தம் கேட்க, அவள் திரும்பி பார்த்தாள் இல்லை..

பாண்டியாவோ “ண்ணா….” என்று சொல்ல, பூர்ணி கண்களை இறுக மூடித் திறந்தாள்..

பாலகுரு வந்து அமைதியாய் நிற்க, பாண்டியாவிற்கோ உள்ளே நடுங்கத் தொடங்கியது.. என்ன சொல்வானோ என்று.. பூர்ணி கேட்டதினால் அழைத்து வந்துவிட்டான்.. இத்தனை மாதங்களாய் காத்த ரகசியத்தை இன்று போட்டு உடைத்ததினால் என்ன சொல்வானோ என்ற பயமாய் இருக்க, பாலகுருவை அச்சத்தோடு தான் பார்த்தான்..

பூர்ணிமா அப்படியே இருக்க, “பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன??” என்ற பாலகுருவின் கேள்வி யாருக்கென்று தெரியவில்லை.. ஏனெனில் மற்ற இருவருக்குமே அது பொருந்தும் தானே.. 

இருவருமே அமைதியாய் இருக்க “நீ போ…” என்றான் பாண்டியாவிடம்..

“இல்லண்ணா அது…”

“அதான் வந்த வேலை முடிஞ்சதுல்ல போடா.. செய்றதை செஞ்சிட்டு நிக்கிறான்.. பெருசா.. போ.. போயிடு…” என்று பாலகுருவும் கத்த,

“ண்ணா.. அக்கா பாவம் ண்ணா…” என்று பாண்டியா எதுவோ சொல்லவர,

“இப்போ நீ போகலை… உன்னை தூக்கி கடல்ல போட்டிருவேன்…” என்று இவனும் மிரட்ட,

“ம்ம்ச் போதும் பாஸ்…” என்றாள் அவனை விட சத்தமாய் பூர்ணி..

இப்போதுதான் பார்வையை அவள்புரம் திருப்பினான் பாலகுரு.. பூர்ணியும் கூட… அடையாளமே தெரியாத அளவிற்கு மாற்றம் என்பார்களே அதுபோல இருந்தான் அவன்.. அதை அப்படியே பூர்ணியின் கண்கள் பிரதிபலிக்க, அவனுக்கும் அவள் மாற்றங்கள் கண்டு வருத்தமே…

‘ஸ்லிம் பியூட்டி…’ என்று கிண்டல் செய்தவனுக்கு நிஜமாகவே இவளின் மெலிவு கவலையை கொடுத்தது..

“என் மேல இருக்க கோபத்தை ஏன் அவன் மேல காட்டனும்…” என்றவளின் பார்வையும் பேச்சும் ஒரு கடுப்பை கொடுக்க,

“உன்னை போக சொன்னேன்…” என்றான் திரும்ப பாண்டியாவிடம்..

பூர்ணிமாவும் “என் கார் வெளிய நிக்கும் எடுத்துட்டு வந்து முன்ன நிறுத்து.. கொஞ்ச நேரத்தில வந்திடுவோம்..” என்றவள் சாவியை அவனிடம் நீட்ட,  இந்த அளவு தப்பித்தது பெரிது  என்று கிளம்பிவிட்டான் பாண்டியா.. 

இருவருக்கும் இடையில் பெருத்த மௌனம்.. ஆனால் இருவரின் கண்களும் மற்றவரின் தோற்றத்தை ஆராய்ந்துகொண்டு இருக்க, கொஞ்ச நேரத்தில் ஒன்றுபோலவே ‘என்ன இது…???’ என்று ஒருவரை காட்டி ஒருவர் கூட, க்ஷண நேரத்தில் ஒரு புன்னகை கீற்று இருவர் இதழிலும் ஒட்டிக்கொள்ள, பூர்ணி முந்திக்கொண்டாள்..

“தயவு செஞ்சு இப்படியே வந்திடாத.. குருவி கூடு கட்டிடும் போல உன் தாடில… ஹேர் கட் பண்ணி எத்தனை நாளாச்சு.. இது ஏன் இவ்வளோ வெய்ட் போட்டிருக்க….” என்று அடுத்தடுத்து பேச,

‘ஆரம்பிச்சிட்டியா…’ என்று அவனின் பார்வை மாறியது..

“என்ன பாக்குற பாஸ்… உன்னை கூட்டிட்டு வந்துட்டா.. நான் உன்னை என்ன வேணா பண்ணலாமாம்.. தெரியுமா??!!!!” என்று நக்கலாய் சொல்ல,

“ஹா ஹா அப்படியா யார் சொன்னா???” என்றான் அவனும் அதைவிட நக்கலாய்..

“பெரியத்தை….”

அவளின் பதிலில் சின்னதாய் ஒரு அதிர்வு அவனுள்ளே.. ஆனாலும் வெளிக்காட்டாதவன், “என்ன பண்ணுவ?? இல்ல என்ன பண்ணிட முடியும்.. இப்போகூட நான் தனியா தானே இருக்கேன் உன் முன்னாடி என்ன செய்யணுமோ செய்…” என்று இரு கைகளையும் பாலகுரு விரித்து நிற்க,

“என்னது…!!!!” என்று கண்களை அகல விரித்து ஆச்சர்யமாய் பார்த்தாள் பூர்ணிமா..

“ஹா ஹா நீ எதுவுமே பண்ண மாட்ட.. அப்படியே பண்ணிருந்தாலும் என்னிக்கோ பண்ணிருப்ப…” என்றவனின் வார்த்தைகளில் என்ன அர்த்தம் இருந்ததோ அதை ஆராயா முற்படாமல்,

“சரி சரி கிளம்பு போலாம்…” என்றாள்..

“எங்க????”

“ம்ம்ச் இதென்ன பாஸ்.. வீட்டுக்குத்தான்.. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.. சாருக்கு கல்யாணம் பேசுறாங்க.. நீ இல்லாம எதுவும் முடிக்க முடியாது. சோ நீ வா…”

“ஓ…!! அப்போ சாரு கல்யாணத்துக்காக நான் வரனும் அப்படிதானே…” என்றவனின் பார்வை அவளை துளைக்க, ‘இதென்ன என்றுமில்லாத பார்வை…’ என்று நினைக்க, அவளால் பதில் சொல்ல முடியவில்லை..

“சொல்லு பூர்ணி… சாரு கல்யாணத்துக்காக வரணும் அப்படிதானே..”

“ஆ.. ஆமா…”

“ம்ம்.. சரி.. பட் கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப கிளம்பிடுவேன்..” என்றவன் நகர,

“பாஸ்.. இதென்ன??? நீ ஏன் இப்படி பண்ற.. அங்க உனக்கு எதுமே இல்லையா??!! எல்லாத்தையும் விட்டு ஏன் போற நீ..” என்று அவளும் அவன் பின்னேயே போக,

“எதுக்கோ போறேன்… எனக்கு அங்க நிம்மதியில்ல… போதுமா.. நீ என்னை கண் முன்னாடி வந்திடாத சொல்ற.. அதான் போனேன்.. இப்போ சாரு கல்யாணத்துக்கு வான்னு சொல்ற.. சரி கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிடுறேன்னு சொன்னதுல என்ன தப்பிருக்கு…” என்றான் ஒவ்வொரு வார்த்தைகளையும் கடித்து துப்பி..

பூர்ணிமா அசந்துதான் போனாள்.. இவன் இருக்கமாட்டாமல் கிளம்பி போனான் என்றால், கடைசியில் அழகாய் பழியை தூக்கி தன் மீது போட்டுவிட்டானே என்றிருந்தது..

‘இல்ல இல்ல பூர்ணி… வேணாம்.. எப்படியாவது இவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடனும்.. மத்தது எல்லாம் அவங்க பார்த்துக்கட்டும்..’ என்று உறுதியாய் எண்ணிக்கொண்டவள்,

“கிளம்பு போலாம்…” என,

“ஒருவேளை நான் இன்னிக்கு இங்க வந்திருக்கலன்னா நீ என்ன பண்ணிருப்ப???” என்றான், என்ன சொல்வாளோ என்ற ஆவல் எட்டிப் பார்க்கும் குரலில்..

“நீ இருக்கிற இடம் தேடி வந்திருப்பேன்னு எல்லாம் சொல்லமாட்டேன்.. பட் ஏதாவது பண்ணிருப்பேன் அவ்வளோதான்…” என்றவள், அந்த கதவினை நோக்கி போக,

அவளின் பதிலில் கண்கள் சுருங்க நின்றவன் “எங்க போற??” என்றான்..

“வெளிய போக வேணாமா???!!!”

“அதுக்கு இதான் வழியா… வா என்கூட…” என்றவன் வேறெதுவும் சொல்லாது, அவனது உடமைகளை எடுத்துக்கொண்டு கப்பல் விட்டிறங்கி, ஹார்பர் உள்ளே நடந்து வர, அவனைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யமே..

அவனின் ஆட்கள் எல்லாம் சூழ்ந்துகொள்ள, அதற்குள் தகவல் பாலச்சந்திரனுக்கு சென்றிருக்க, அவரும் வந்துவிட்டார்..

“பாலா… டேய்…” என்று மகனைப் பார்க்க, அவனோ சின்னதாய் ஒரு சிரிப்பு, மனதிற்குள்ளோ வீட்டில் யாரேனும் ‘ஏன் போனாய்..’ என்று கேட்டால் என்ன சொல்வது என்ற யோசனை..

பூர்ணி சொன்னதுபோல பாண்டியா அவளின் காரை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்தி சாவியை அவளிடம் கொடுக்க, பாலச்சந்திரனோ அவரின் காரை கிளப்பிக்கொண்டு இருந்தார்.. பூர்ணிமாவோ எதில் போகப்போகிறான் என்று இரு கார்களையும் மாறி மாறி பார்க்க,

“ப்பா… உங்க கார் இங்கயே இருக்கட்டும்.. பூர்ணி நம்ம வீட்டுக்கு வந்திட்டு தானே போவா.. அதுல போயிக்கலாம்…” என்றவன், சாவி வாங்க அவளின் முன் கை நீட்ட,

அவளோ “நா.. நானே டிரைவ் பண்றேன்…” என, வெடுக்கென்று சாவியை  பிடுங்கி, காரை கிளப்பிட,

பாலச்சந்திரனோ “அவன் வீட்டுக்கு வர வரைக்கும் எதுவும் பேசதம்மா…” என, அடுத்து இருவரும் காரில் ஏற, பாலகுரு காரை செலுத்தினான்..

காரை விட்டு இறங்கும்போதே, முத்துராணியும், மைதிலியும் ஆரத்தி தட்டோடு வாசலில் நிற்க, பூர்ணிமாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை, ‘சூறாவளி சுற்று பிராயாணம் முடிச்சிட்டு வந்திருக்கான்.. இவனுக்கு ஆரத்தி ஒண்ணுதான் கேடு..’என்று நினைக்க, அவளின் இதழ்கள் புன்னகை பூசி மலர்ந்தது..

பாலகுருவிர்க்கு அவளின் எண்ணவோட்டம் புரிய. அவளை முறைத்தபடியே வாசலில் நிற்க, முத்துராணி இருவரையும் பார்த்தவர், ஆரத்தி சுத்தி பாலகுருவிற்கும் அவனின் பின்னே இருந்த பூர்ணிக்கும் போட்டு வைத்துவிட, அனைத்தையும் மௌனமாகவே பார்த்துக்கொண்டு இருந்தான் அவன்..

அனைவரும் பாலகுருவிடம் சலசலவென்று பேச, பூர்ணி ஒரு ஓரமாய் போய் அமர்ந்துவிட்டாள்.. என்னவோ வீடு வரும் வரைக்கும் ஒரு திடம் ஒரு நிம்மதி இருந்தது.. இங்கே வந்த பிறகு அது இல்லை.. ஒருவித அலுப்பு.. ஒருவித அசதி வந்து ஒட்டிக்கொண்டதாய் தோன்ற, அமர்ந்திருந்த இருக்கையிலேயே இன்னும் நன்றாய் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்துகொண்டாள்..

வீட்டினர் அனைவரும் பாலாவிடம் “எங்க போன?? இப்படி பண்ணலாமா??? எங்களை எல்லாம் நியாபகமே இல்லையா?? அப்படி என்ன உனக்கு எங்க மேல கோவம்..” என்று மாறி மாறி பேச,

முத்துராணியோ “இனிமே நீ இப்படி செஞ்சுப் பாரு.. அப்புறம் இருக்கு…” என்று மகனை மிரட்ட, அனைவருக்குமே ஒரு புன்னகை மட்டுமே பதிலாய் கொடுத்தவன்,

“நானே இன்னிக்கு வந்திருப்பேன்.. நீங்கதான் அவளை அலைய வச்சிடீங்க…” என்றதும்,

‘அடப்பாவி பச்சை பொய்…’ என்று வேகமாய் கண்களை திறந்து திரும்பிப் பார்த்தாள் பூர்ணிமா..

அவனை சுற்றி அவனின் வீட்டினர் இருக்க, இவளோ சற்று தள்ளி இருக்க, இனிமேலும் தான் இங்கே இருக்கவேண்டுமா என்றும் தோன்ற, சாருவை அழைத்தவள்,

“ரொம்ப தலைவலி சாரு.. நான் கிளம்புறேன்..” என்றவள் எழவும்,

“ம்மா பூர்ணி கிளம்புறாளாம்…” என்றாள் சாருலதா சத்தமாய்..

‘கடவுளே… அமைதியா கிளம்பி போய்டலாம்னு நினைச்சா இப்படியா…’ என்று சாருவை எரிச்சலாய் பூர்ணிமா பார்க்க, பாலகுரு எதுவும் பேசாது தான் இருந்தான்..

ஏன் போகிறாய்.. இரேன்.. அதெல்லாம் எதும் சொல்லவில்லை.. அப்பா அம்மா சித்தப்பா சித்தி என்று அனைவரோடும் பேசிக்கொண்டு இருக்க பார்வை மட்டும் அவ்வபோது அவளிடம் வந்துபோக, இப்போது கிளம்புகிறேன் என்றதும் அவளிடமே நிலைத்து நின்றது ஆனால் வாய் பேசவில்லை.. மற்றவர்கள் தான்

“ஏன்..??”                                    

“என்னாச்சு..??”

“இரேன்..”

“அதுக்குள்ளே என்ன??” என்று கேள்விகளாய் கேட்க,

“இல்ல.. நான் வந்து ரொம்ப நேரமாச்சு.. கொஞ்சம் டியர்ட்டா இருக்கு…” என்று பூர்ணிமா கிளம்புவதிலேயே குறியாய் இருக்க,

முத்துராணியோ “தனியா எல்லாம் போக வேணாம்..” என்றவர் “என்னங்க கூட போயிட்டு வாங்க…” என்று சொல்ல,

‘இதேதடா அதீத அக்கறையா இருக்கு…’   என்று அனைவருக்குமே தோன்றிவிட்டது..

“இல்ல பெரியத்தை அது…” என்று அவள் சொல்லும்போதே,

“ச்சு.. மறுத்து பேசக்கூடாது.. லேட்டாச்சு.. தனியா டிரைவ் பண்ணிட்டு போக வேணாம்..” என்றவர், கணவரை பார்க்க,

“ஆமா பூர்ணி.. எனக்கும் அங்க கொஞ்சம் வேலை இருக்கு நானும் வர்றேன்…” என்று பாலச்சந்திரனும் உடன் கிளம்ப அவளால் அதற்குமேல் மறுக்க முடியவில்லை..

வீட்டிற்கு வந்ததுமே அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள், பாலச்சந்திரன் வந்து இங்கே அவளின் அப்பா அம்மாவிடம் என்ன பேசினார் என்பதை கூட கவனிக்கவில்லை.. ஓய்ந்து போனதுபோல் இருந்தது..

திரும்பவும் வீட்டினுள்ளே முடங்கிப்போக, நான்கு நாட்கள் கடந்து போனது.. பாலகுருவும் இவளைத் தேடி வரவில்லை.. ஒரு போன் கால் கூட இல்லை.. இவளும் அதனை எதிர்பார்க்கவில்லை போல.. அவள் வேலைகளை செய்துகொண்டு எப்போதும் போல் இருக்க வீட்டினர் கூட என்ன ஏதென்று எதுவும் கேட்கவில்லை..

ஐந்தாவது நாள் காலையில் வந்து சந்தியா “பூர்ணி, நாளைக்கு சாருவ பேசி முடிக்க வர்றாங்க. அப்படியே ஒரேதா உனக்கும் பாலாக்கும் பேசி முடிக்கலாம்னு இருக்கோம்.. சந்தோசம் தான உனக்கு…” என்று வாஞ்சையாய் சொல்ல,

“என்னது???!! என்னம்மா சொல்ற…???” என்று அதிர்ச்சியாய் கேட்டவளுக்கு உள்ளமும் உடலும் ஆடித்தான் போனது..

“ஏன் டி.. எதுக்கு இவ்வளோ அதிர்ச்சி ஆகுற.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை அமைய போகுது…”

“ம்மா.. யாரைக்கேட்டு இதுக்கு ஏற்பாடு பண்றீங்க..” எனும்போதே, “பூர்ணி என்ன பேச்சு.. அன்னிக்கு உன் முன்னாடி தானே பாலா அம்மா சொன்னாங்க.. அப்போ அமைதியா இருந்த..” என்று சந்தியாவும் குரலை உயர்த்தினார்..

“அமைதியா தானே இருந்தேன்.. சரின்னு சொன்னேனா.. எனக்கு தேவை பாஸ் இங்க வரணும்… எனக்கு பிடிச்சிருந்தா போதுமா?? அவனுக்கு என்னை பிடிக்கவேனாமா..?? ப்ளீஸ் ம்மா கட்டாயபடுத்தி அவனை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேணாம்.. அது போல அசிங்கம் எதுவுமே இல்லை..” என, சந்தியா நொந்துபோனார்..           

                       

 

                              

         

Advertisement