குருபூர்ணிமா – 7

“இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போற பூர்ணி… உன்னை பார்த்து பார்த்து நாங்க தினம் தினம் சாகவேண்டி இருக்கு.. இல்லை ஒரேதா எங்களை போயிட சொல்லு போய் சேர்ந்திடுறோம்…”

“அம்மா…!!!!!”

“அம்மாதான் டி… உன்னை பெத்து.. வளர்த்து… உனக்கு என்ன தோணுதோ எல்லாம் செய்னு செய்யவிட்டு.. அதெல்லாம் எதுக்கு.. இதோ.. இப்படி எதுக்கு வாழறோம்னு முகத்தை வச்சிட்டு இருக்கவா??”

“அம்மா… ப்ளீஸ்…”

“போதும் பூர்ணிம்மா… நாங்களும் நீ இப்போ சரி ஆகுவ.. அப்போ சரி ஆகுவன்னு பார்த்துட்டு தான் இருக்கோம்.. குரு கிளம்பி போனது, எல்லாருக்கும் வருத்தம் தான்.. ஆனா அது அவனோட முடிவு.. இதுல நீ என்ன பண்ண?? சரி அவனை விரும்பினது தான் விரும்பின, ஒருவார்த்தை எங்கக்கிட்ட சொல்லிருக்கலாமே.. ஏன் அவனோட நிச்சயம் வரைக்கும் போக விட்ட..

பண்றது எல்லாம் பண்ணிட்டு, இப்போ என்னவோ விரக்தியா இருந்தா, எங்களுக்கு எப்படி இருக்கும்.. எங்களையும் கொஞ்சம் நினைச்சு பாரு பூர்ணி..”

“அப்பா.. ஏன் ப்பா நீங்களும் இப்படி பேசுறீங்க.. ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்டட் மீ…” என்றவளுக்கு விழிகளில் நீர் துளிகள் பிறக்க,

“இதோ.. இதான்டி.. இதான் டி எங்களை பதற வைக்குது.. இதுநாள் வரைக்கும் எதுக்காவது அழுது இருக்கியா.. ஆனா இப்போ.. பாலாவை பிடிச்சு இருக்குன்னா எங்கக்கிட்ட சொல்லி இருக்கணும்.. அதைவிட்டு பெரிய இவ மாதிரி பேசிட்டு.. இப்போ அவனும் போயிட்டான்.. நீ இப்படி இருக்க..” என்று சந்தியா இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த மனக்குமுறல்களை எல்லாம் கொட்ட,

தன்னை பெற்றவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு முழித்தாள் பூர்ணிமா.. இத்தனை நாள் அமைதியாய் இருந்தவர்களுக்கு இன்றென்ன வந்தது என்ற எரிச்சல் அவளுள் மூண்டாலும், தனக்காகத்தானே பேசுகிறார்கள் என்று வாய் மூடி நின்றாள்..

“இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் பூர்ணி.. ரூம் ரூம் ரூம்.. ரூமே கதின்னு இருக்க.. இல்ல நான் தெரியாமதான் கேட்கிறேன், நாளைக்கு பாலா திரும்பி வந்து கல்யாணம் பண்றேன்னு சொல்ல போறானா?? இல்லையே.. திரும்பி வந்தும் அவன் வேலைதான் பார்த்துட்டு இருப்பான்.. உன்னை கல்யாணம் செய்யனும்னு நினைச்சா அவன் எப்போவோ பண்ணிருப்பான்..” என்று சந்தியா சொல்லவுமே,

“ம்மா போதும்.. என்னை பேசு.. நான் கேட்டுக்கிறேன்.. ஆனா அவனை பேசாத.. நான் பேசினேனா இப்போ வரைக்கும்.. இல்லையே.. பின்ன ஏன் நீ பேசுற.. என்னை திட்டு.. ஆனா பாஸை திட்டாத.. எனக்கு பிடிக்காது..” என்றவள்,

தன் முகத்தினை அழுந்த துடைத்து, “இப்போ என்ன உன்கூட நான் மகிலாவை பார்க்க வரணும் அதானே… வர்றேன்.. போதுமா..” என்றாள் ராமலிங்கத்தையும் ஒரு பார்வை பார்த்துகொண்டு..

“ஓஹோ..!!! நான் ஒண்ணுமே சொல்லக்கூடாதோ… ரொம்ப நல்லாருக்கு டி..” என்றவர், “பாத்தீங்கல்ல எங்க வந்து நிக்கிதுன்னு..” என்று தலையில் கை வைத்தே அமர்ந்துவிட்டார்…

எந்த பெற்றோருக்கு தான் பிள்ளைகளின் வாழ்வை எண்ணி கவலை இருக்காது.. அதுவும் இத்தனை சங்கதிகள் நடந்துவிடுகையில் யார் மனம் தான் கவலையுற்று கலங்காது இருக்கும்..

அதற்கு விதிவிலக்காய் தான் பூர்ணி, பாலகுருவின் பெற்றோர்கள் இருந்திட முடியுமா என்ன??

மகிலாவிற்கு குழந்தை பிறந்தும் கூட நான்கு மாதங்கள் ஆகிவிட்டது.. குழந்தை பிறந்த அன்று போய் பூர்ணிமா பார்த்துவிட்டு வந்தவள் தான்.. அதன் பின் செல்லவேயில்லை.. இன்றோ மகிலா அவளின் கணவன் வீடு செல்கிறாள்.. சரி வா போய் பார்த்துவிட்டு வருவோம் என்று சந்தியா அழைத்ததற்கு எங்கேயும் வரவில்லை என்று பூர்ணிமா சொல்லவும் தான் இருவரும் பிடித்துக்கொண்டார்..

மகிலா அவளின் உயிர் தோழி, அவளையே பார்க்க வரவில்லை என்றால், அப்படியென்ன இவளுக்கு பிடிவாதமும், விரக்தியும் என்ற கேள்வி.. கேள்வி என்பதனை விட கவலை..

அதான் பிடித்துக்கொண்டனர்..

“ம்மா.. நான் தான் வர்றேன் சொல்லிட்டேனே.. பின்ன என்ன… கிளம்பலாம்..” என்றவள், வாசல் நோக்கி போக,

சந்தியாவோ, “என்ன செய்வீங்களோ தெரியாது, ஒண்ணு பாலா வரணும்.. இல்லை இவ மனசு மாறனும்.. நீங்க போய் சந்திரன் அண்ணாக்கிட்ட பேசுங்க… நாங்க போய் மகிலாவை பார்த்துட்டு வர்றோம்…” என்று கிளம்ப, ராமலிங்கமும் பாலச்சந்திரனை காண சென்றார்..

அங்கே மகிலாவின் வீட்டிலோ, இவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே, சாருலதா முத்துராணி, மைதிலி மூவரும் வர, அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மைதிலி “எப்படியிருக்க..??” என்று பூர்ணிமாவை பார்த்து கேட்க,

“நல்லாருக்கேன் சின்னத்தை…” என்று அவளும் சொல்ல, முத்துராணி பூர்ணிமாவை ஒரு பார்வை அவ்வளவே.. எதுவுமே பேசவில்லை..

சாருலதாவோ “எங்களை எல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா டி.. அண்ணா தான் இப்படி போயிட்டான்.. நீயும் இப்படியா இருக்கிறது..” என்று கடிய,

சந்தியாவோ “நல்லா சொல்லு..” என்று எடுத்துக்கொடுக்க, எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“தங்ககுட்டி… என் செல்லம்…” என்று மகிலாவின் குழந்தையை கொஞ்சத் தொடங்கிவிட்டாள் பூர்ணி..

என்னவோ அனைவரிடமும் காட்டிய பாராமுகத்தை அந்த குட்டி குழந்தையிடம் காட்ட முடியவில்லை அவளால்.. இத்தனை நாள் பார்க்காமல் இன்று கிளம்புகையில் வந்திருக்கிறோமே என்றுகூட தோன்றிவிட்டது பூர்ணிக்கு..

“ஹ்ம்ம் இன்னிக்கு வந்துட்டு கொஞ்சு..” என்று மகிலாவும் கடிய,

“நீவேனா போ.. நான் பாப்பாவ வச்சிக்கிறேன்…” என்று பூர்ணியும் சொல்ல,

“ஆமாமா… குழந்தை பெத்துக்குற வயசுல, இவ பாப்பாவ வச்சு நீயென்ன செய்ய போற…” என்றார் மகிலாவின் பாட்டி..

அவர் எப்போதுமே இப்படிதான். ஆனால் இந்த நேரத்தில் அவரின் வார்த்தைகள் சுருக்கென்று விழுந்தது.. பூர்ணியின் முகம் கூட அவ்வளவு நேரமிருந்த  புன்னகையும் மென்மையையும் தொலைத்து கூம்பிவிட,

“மனசுல எதும் வச்சுக்கவேணாம்…” என்றார் மகிலாவின் அம்மா..

மகிலாவும் அவளின் கரத்தினை பற்ற, அவள் எதுவும் சொல்லவில்லை..  ஆனால் சந்தியாவோ அப்படியே அமைதியாகிவிட்டார் 

முத்துராணி வந்ததில் இருந்து ஒருவார்த்தை பேசவில்லை.. மனதிற்குள் மகனை பற்றிய எண்ணம் மட்டுமே.. பூர்ணிமா சொன்ன ஒருவார்த்தைக்காகவா, இத்தனை பேரையும் விட்டு ஒரு போன் கால் கூட இல்லாது இத்தனை நாள் இருக்கிறான் என்ற கவலை..

அவ்வளவு ஏன், பெற்ற அன்னை.. தன்னை கூட அவன் நினைக்கவில்லையே என்ற அதங்கம்..

வந்ததில் இருந்து யாரிடமும் பேசவில்லை என்றாலும், பார்வை எல்லாம் பூர்ணிமா மீது தான் இருந்தது.. முன்பு அவர் பார்த்தா பூர்ணிமா அவள் இல்லை.. அது மட்டும் நன்கு தெரிந்தது.. அவளின் ஒவ்வொரு மாற்றங்களும் அவருக்கு புரியாமல் இல்லை, ஆனாலும் எல்லாவற்றையும் மீறி, பாலகுரு கிளம்பிச் சென்றது இவளால்தான் என்ற எண்ணம் அவருக்கு திண்ணமாய் இருக்க, இறுகிப் போய் இருந்தார்..

அவளாவது ஒருவார்த்தை பேசியிருக்கலாம்.. ஆனால் அதுவும் அவள் செய்யவில்லை..

“சாருக்கு எதோ வரன் வந்ததுன்னு சொன்னீங்க.. என்னாச்சு…” என்று மகிலாவின் அம்மா கேட்க,

“ஹ்ம்ம் எல்லாம் தோதா தான் இருக்கு.. ஆனா பாலா இல்லாம எப்படி முடிக்க?? மாப்பிள்ளை.. மாப்பிள்ளையோட குடும்பம் எல்லாமே எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்ற மைதிலியின் வார்த்தையில் ஒரு அம்மாவாய் அவரின் கவலை தெரிய,

பூர்ணிமாவிற்கு மனதினுள் மேலும் மேலும் குற்றவுணர்வு கூடிப்போனது.. ஏற்கனவே தன்னால் தான் பாலகுரு, நிர்மலா திருமணம் நடக்காது போனது என்று இருக்க,  தான் ஒருத்தி சொன்ன வார்த்தையால் தான் கிளம்பிப் போனானோ என்றும் இருக்க.. இப்போது, பாலகுரு இல்லாததால் தான் சாருலதாவின் திருமணமும் தாமதமாகிறதோ என்று இப்போது அதுவும் சேர்ந்துகொண்டது..

யார் முகத்தினையும் ஏறிட்டு பார்க்காது, குழந்தையை பார்க்கும் சாக்கில் குனிந்துகொண்டாள் பூர்ணிமா.. சந்தியாவிற்கும் என்ன சொல்ல என்று தெரியவில்லை..

ஆனால் மகிலாவின் பாட்டியோ “இதென்ன.. என்னிக்கிருந்தாலும் பாலா வராமையா போயிட போறான்.. சட்டுபுட்டுன்னு கல்யாணம் பேசி வச்சு, தங்கச்சி கல்யாணத்தை சாக்கா வச்சு அவனை வர வைக்கிறது விட்டு இப்படி யோசனை பண்ணிட்டு இருந்தா நல்லாவா இருக்கு…” என,

‘அட இது தோன்றாமல் போனதே..’ என்றுதான் அனைவர்க்கும் தோன்றியது..

சில நேரங்களில் பெரியவர்களின் பேச்சு பாகற்காயை இருந்தாலும், அதன் அர்த்தம் உணர்கையில் அந்த கசப்பு கூட இனித்திடும்..

மைதிலி முத்துராணியை நோக்க, அவரோ “பேசி பார்க்கலாமா…??” என்றார் மெதுவாய்..

“ஆமாக்கா எனக்கும் இது சரின்னு படுது… இனிக்கே மாப்பிள்ளை வீட்ல பேசிடலாம்…” என்று சொல்ல, சாருலதாவின் முகத்தினில் ஒரு செம்மை படர , சந்தியாவிற்கு இது சந்தோசமாய் இருந்தாலும் தன் மகள் வாழ்வு மட்டும் இப்படி கேள்விக்குறியாய் இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை..

“எல்லாம் சரிதான்.. ஏ பூர்ணி.. நீயும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்ப, ஒருத்தி குழந்தை பெத்துட்டா.. இன்னொருத்திக்கு கல்யாணம் நடக்கப் போகுது.. நீயும் காலகாலத்துல கல்யாணம் பண்ணு..” என,

அத்தனை நேரம் மைதிலியோடு பேசிக்கொண்டு இருந்த முத்துராணி, பட்டென்று திரும்பி பூர்ணிமாவைத் தான் பார்த்தார்…

அவளோ அழுகையை விழுங்கிக்கொண்டு இருக்க, அவருக்கு ‘அழுகிறாளா…!!!!’ என்று ஆச்சர்யமாய் போனது..

ஏனெனில் இதுவரையிலும் பூர்ணிமா அழுது யாருமே பார்த்தது இல்லை.. சிறு வயதில் இருந்தே அவள் எதற்கும் அழுததில்லை.. ஆனால் இப்போது.. கண்களில் குளம்கட்டும் நீர், கன்னம் தொடாமல் இருக்க அவள் படும்பாடு முத்துராணி கண்களுக்கு தவறாமல் பட,

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, “பூர்ணிமா…” என்று அழைத்துவிட்டார்..

“ம்ம்ம்…” என்று தலையை நிமிர்த்தியவளுக்கு, ‘நீங்களா அழைத்தது…’ என்ற பார்வை மட்டுமே..

“இங்க வா…” என்று அழைத்த முத்துராணியை, ஆச்சர்யமாய் பார்த்தவள், குழந்தையை மகிலாவிடம் விட்டுவிட்டு, எழுந்து அவரருகே வந்து அமர

“நீ என்ன செய்வியோ தெரியாது.. ஆனா நீதான் அவனை வர வைக்கணும்..” என்றார் உறுதியாய்..

“நா… நானா??!!!!!!!”

“ம்ம் ஆமா… நீ சொன்னா மட்டும்தான் அவன் வருவான்…”

“இல்ல.. அது….பெ…”

“ம்ம்ச் நீ எதும் சொல்லாத.. எனக்குத் தெரியாது.. என் பையன் வரணும்.. அதுக்கப்புறம் கண்டிப்பா உங்க கல்யாணம் நடக்கும்… அதுக்கு நான் உறுதி… ஆனா வரணும்..”

முத்துராணியின் ஒவ்வொரு வார்த்தைகளும் சுற்றி இருந்த அத்தனை பெண்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தாலும், யாராலும் எதுவும் பேச  முடியவில்லை.. சந்தியாவிற்கு கடவுளே எப்படியாவது எல்லாம் சரியானால் சரி என்ற நிலை..

ஆனாலும் வேண்டுமென்றே “பொண்ண பெத்தவங்க நாங்களும் இருக்கோம்…” என்று சொல்ல,

“என் பையன் வந்துட்டா பூர்ணி உங்க வீட்ல இருக்க மாட்டா…” என்றார் முத்துராணியும்..

இருவரும் பேசிக்கொண்டதில் அனைவர்க்கும் சிரிப்பு வந்திட, பூர்ணிமாவோ அசந்து போய் பார்த்துகொண்டு இருந்தாள்.. அவளுக்குத் தெரியும் முத்துராணிக்குத் தன்னை அத்தனை பிடிக்காது என்று.. ஆனால் அவரே இப்போது இப்படி சொல்கிறார் என்றாள், பாலகுரு இல்லாதது அவருக்கு எத்தனை மனவருத்தம் கொடுத்திருக்கும் என்பது அவளுக்கு நன்கு புரிந்தது..

தனக்காக இல்லையென்றாலும், அவருக்காகவாது பாலகுரு வரவேண்டும் என்று எண்ணியவளுக்கு, அவனை எப்படி வர வைப்பது என்ற யோசனை..

முதலில் எங்கே இருக்கிறான் என்று தெரிந்தால் தானே..

“என்ன பூர்ணி யோசிக்கிற…” என்று மைதிலி கேட்க,

“இல்ல சின்னத்தை.. நான்… நான் எப்படி..??!!!” என்றாள் தயக்கமாய்..

“அதெல்லாம் எனக்குத் தெரியாது பூர்ணி.. சாருக்கு தட்டு மாத்துறதுகுள்ள அவன் வரணும்.. உனக்கு கண்டிப்பா எதாவது ஒரு வழி தெரியும்.. என் மகன் வரணும்.. அதுக்கப்புறம் அவனை என்னவோ நீ பண்ணிக்கோ…” என, பூர்ணிக்கு சிரிப்பு கூட வந்துவிட்டது..    

‘ஹா ஹா பாஸ்…. உன்னை ரூம்ல கட்டிபோட்டு…’ என்று நினைத்தவளுக்கு தன் எண்ணம் போகும் போக்கை பார்த்து இன்னமும் சிரிப்பு வந்திட, ‘ச்சி பூர்ணி ரொம்ப மோசம்…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள, கிளம்பி வருகையில் இருந்த இறுக்கம் நீங்கி இப்போது அனைவருக்குமே ஒரு சிறு இளக்கம்.

அங்கே ராமலிங்கமும், பாலச்சந்திரனும், தனபாலும் கூட ஏறக்குறைய இதனை தான் பேசியிருந்தனர்.. சாருலதாவின் திருமணத்தை முன்னிட்டாவது அவனை வரவைக்கவேண்டும் என்று..

பாலச்சந்திரன் சொல்லியே விட்டார் “அவன் வரவும், பூர்ணிக்கும் அவனுக்கும் பேசி முடிப்போம்..” என்று..

எல்லாம் சரி அவன் வரவேண்டுமே…!!!

‘பாஸ்… நீ எங்கதான் போன….’ என்று மனதினில் கடிந்துகொண்டு, யோசித்தவளுக்கு எந்த வழியும் தெரியவில்லை..

கடையில் “பாண்டியா….” என்று அவனுக்குத் தான் அழைத்தாள்..

“யக்கா… யக்கா.. நெசமாவே நீங்கதானா… எப்படிக்காகீற..???” என்று பாண்டியா தொடர்ந்து பேச,

“டேய் டேய் போதும்… பாஸ் எங்க???” என்றாள் நேராய் விசயத்திற்கு வந்து..

“பா… யாரு?? இன்னாக்கா சொல்ற…”

“டேய் நடிக்காதடா.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஹார்பருக்கு வருவேன்..  பாஸ் எங்க இருக்கார்னு நீ சொல்லற.. நான் இங்க இருந்து வர்ற நேரம் தான் உனக்கான டைம்.. அவன்கிட்ட சொல்லிட்டு சொல்வியோ, இல்ல நீயா சொல்வியோ எனக்கு தெரியாது.. நான் வர்றபோ நீ சொல்ற…” என்று வைத்தவளுக்கு மனதினுள் புதியாய் ஒரு உற்சாகம்..

சொன்னது போலவே பூர்ணிமா ஹார்பர் செல்ல, பாண்டியா மட்டுமல்ல அவனோடு இருந்த பாலகுருவின் அனைத்து கைத்தடிகளும் செய்வது அறியாது தான் நின்றனர்.

பாலச்சந்திரன் எதுவுமே சொல்லாது கிளம்பிவிட்டார்..

“பாண்டியா ஒரு போட் எடு.. கடலுக்கு போகணும்…” என்ற பூர்ணிமாவை அனைவரும் புரியாது பார்க்க,

“சொன்னதை செய்..” என்றவள் கடலுக்கு நடக்க, வேகமாய் அவளுக்கு ஒரு போட் தயாரானது..

சுமார் ஒருமணி நேரமிருக்கும் பூர்ணிமாவின் கடல் பயணம்.. அவளும் பாண்டியாவும்.. பின்னே போட்டை செலுத்துபவனும்.. பாண்டியாவிடம் என்ன பேசினாளோ தெரியாது..

வெகு நேரம் அமைதியாய் கடலைப் பார்த்தே அவள் இருக்க, அவள் மௌனமாய் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பாண்டியாவிற்கு அவஸ்தையாய் போனது..

“யக்கா….!!!” என்று நூறு முறையாவது அழைத்திருப்பான்..

“பாஸ் எங்க??!!!!”

நிறைய நேரம் கழித்து அவள் பேச, 

“அது.. அதுக்கா…” என்று அவன் முழிக்க,

“எனக்குத் தெரியும்.. உனக்குத் தெரியும்னு.. சொல்லு.. எங்கன்னு…” என்றாள் திடமாய்..

“இப்போ நீ சொல்லல நான் கடல்ல குதிச்சிடுவேன்…”

“ஐயோ யாக்கா..”

“அப்போ சொல்லு…”

“அது.. அது.. இன்னிக்கு வர சிலோன் கப்பல்ல வந்துட்டு நாளைக்கு துபாய் கப்பல்ல அண்ணே கிளம்புறாருக்கா..”  

“ஓ.. அப்போ வந்து வந்து போறானா??”

“ம்ம்ம்.. ஆமாக்கா…” என்றான் தலையை சொரிந்து..

“ஆனா யாருக்கும் தெரியாதுக்கா… நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்கக்கா…” என்றான் வேகமாய்..

“ம்ம்ம்.. ஸ்ரீலங்கா கப்பல் எப்போ வரும்???”

“அது இந்நேரம் ஹார்பர்ல இருக்கும் க்கா..”

“சரி அப்போ போட்ட திருப்பு..” என, என்ன நடக்கப்போகுதோ என்று தான் பாண்டியா போட்டை திருப்ப சொன்னான்..

பாலகுரு, கிட்டத்தட்ட முழுதாய் ஒருமாதம் கழித்து இங்கே ஹார்பர் வந்திருக்கிறான்.. அதற்குமுன் கொல்கட்டா கப்பலில் பயணம்.. அதன் பின் இங்கே வந்து அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீலங்கா பயணம்.. இப்போது இங்கே.. அவன் வருவதும் போவதும் யாருக்கும் தெரியாது..

எந்த கப்பலில் வருகிறான் எங்கே இருக்கிறான் என்ன செய்கிறான் இதெல்லாம் பாண்டியாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது.. அதேபோல் இங்கே நடக்கும் அனைத்தும் பாண்டியா அவ்வப்போது அவனிடம் சொல்லிவிடுவான்.. இப்போது பூர்ணியிடம் வகையாய் மாட்டிக்கொண்டது தவிர,

துபாய் செல்லும் கப்பலில் ஏறுவதற்கான நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான் பாலகுரு.. முன்னைவிட இப்போது கொஞ்சம் உடல் எடை போட்டிருந்தான்.. எத்தனை மாத தாடியோ, தலைமுடியும் வெட்டாமல் அப்படியே இருக்க, பார்க்கவே ஒரு முரட்டுத் தோற்றம்..

கையிலிருந்த பைனாகுலர் வழியாக, கப்பலைப் பார்க்க, தூரத்தில் ஒரு சிறு போட் வருவது தெரிந்தது.. அதுவும் இந்த கப்பலை நோக்கி வருவது புரிய சில நொடிகள் ஆக,

‘இங்க யாரு…’ என்று யோசிக்கும்போதே, கடலில் இருந்து வந்துகொண்டிருக்கும் பூர்ணிமாவின் உருவம் அவன் விழிகளில் பட்டு புத்திக்கு புரிய, அப்படியே நின்றுபோனான் அவன்…