Advertisement

குருபூர்ணிமா – 5

“குரு வேணா குரு… சாமி சத்தியமா நான் எதுவும் பண்ணல குரு… நம்பு குரு…” என்று கண்ணீர் விட்டு கதறி துடித்துக்கொண்டு இருந்தான் போஸ்..

அவனை சுற்றி பாலகுருவின் ஆட்கள்.. அவனுக்கே நேரே பாலகுரு.. அந்த போஸ் பார்க்கவே பரிதாபமாக இருந்தான்.. ஏற்கனவே முகம் வீங்கி, கடவாயில் ரத்தம் வழிய, கை கால் எல்லாம் ஆங்காங்கே காயங்களோடு நிற்க, மேற்கொண்டு அவனை எப்படி என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த பாலகுருவிடம் தான் போஸ் கெஞ்சியது..

ஆனால் இத்தனை கெஞ்சலுக்கும் அவனிடம் ஏதாவது ஒரு அசைவு இருக்கவேண்டுமே.. ம்ம்ஹும்.. துளிக்கூட இல்லை..

“குரு குரு.. ப்ளீஸ் குரு.. நீ யாராண்டவேனா கேளு குரு.. நான் உன்னை போட சொல்லலை குரு…”

…..

“குரு பேசு குரு…. அன்னிக்கே நீ விட்டப்போவே நான் முடிவே பண்ணிக்கின்னே குரு உன் பக்கமே வரகூடாதுன்னு…..”

….

“குரு ஒருதபா என் மச்சான கூட்டு கேளு குரு…..”

“ஏய்.. ச்சி.. முதல்ல அவன் வாயை அடைச்சி வையுங்கடா… கத்திட்டேக்கீரான்…” என்று குரு சத்தம் போடவும், போஸ் அப்படியே கப் சிப் என்றாகிவிட,

“இனி வாய் தொறந்த, பெட்ரோல வாய்க்குள்ள விட்டு வத்தி வச்சிடுவேன்…” என்றவனை மிரட்சியோடு பார்த்தவன், “சத்தியமா நான் எதுமே செய்யல குரு…” என்றான் மெதுவாய்..

“ஏய்.. இப்போ இன்னாடா சொன்னேன்.. வாய் தொறக்காத சொன்னேன்னா இல்லியா…” என்று போஸ் அருகே போனவன், அவனது கழுத்தை நெரித்து,

“பேசின… தொலைச்சிடுவேன்….!!!!” என்று அப்படியே பின்னே தள்ள, அந்த போஸ் வேகமாய் விழுந்தான்..

 “பாண்டியா… இவன வெளிய விடவேக்கூடாது… இவன் இங்கத்தான் இருக்கான்னும் யாருக்கும் தெரியக்கூடாது… போயி அந்த எஞ்சின் ரூம்ல கட்டிபோடுங்க… பூர்ணி கண்ணு முழிச்சதும் இருக்கு இவனுக்கு..

அன்னிக்கு அவளால தப்பிச்சான்.. இனிக்கு அவனால தான் இவனுக்கு சாவு…” என்று பாலாகுரு சொல்லிவிட்டு செல்ல, அவனின் ஆட்களோ அந்த போஸை நகர்த்திக்கொண்டு கப்பலின் அடித்தளத்தில் இருக்கும் இஞ்சின் அறைக்கு சென்றனர்..

போஸிடம் பேசியவன் அதே கடுப்போடு கப்பலின் மேல் தளம் வர, அங்கேயே ஹார்பரில் கூலி வேலை செய்யும் ஆட்கள் அவர்களின் வேலையை செய்துகொண்டு இருக்க, சுற்றிலும்  ஒருமுறை பார்வையை சுழல விட்டவன், கடலையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்..

“ண்ணா..!!!!” என்று குரல் கேட்க,

ஹார்பர் ஆபிஸில் எடுபிடி வேலை செய்யும் ஒருவன் நிற்க, “ம்ம்..” என்று தலையை மட்டும் ஆட்டி இவன் கேட்க,

“அண்ணியோட அப்பா வந்துக்கினார் ண்ணா..” என்றவனை புரியாமல் பார்த்தான்..

“அதாண்ணா நிர்மலா அண்ணியோட அப்பா.. அவர்..” என்று சொல்லும்போதே,

“வேற யார் வந்திருக்கா??!!!” என்றான் வேகமாய்..

“அவர் மட்டும்தான் ண்ணா… இங்க கூட்டின்னு வர சொன்னார்.. நான் தான் உங்களை இட்டுன்னு வர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்..”

“ம்ம் நானே போயிக்கிறேன்.. நீ போ..” என்றவன் “எதா ஜூஸ் வாங்கின்னு வா..” என்று சொல்லி அவனிடம் ரூபாய் கொடுக்க, “சரிண்ணா..” என்று அவன் சென்றதும்,

‘இவர் ஏன் வந்திருக்கார்…’ என்றெண்ணியபடி ஆபிஸ் சென்றான் பாலகுரு..

உள்ளே ராஜன் அமர்ந்திருக்க, அவரின் முகத்தில் அப்பட்டமாய் யோசனை ரேகை தெரிந்தது.. உள்ளே நுழையும் போதே அவரின் முகத்தை கண்டவன் எதையும் வெளிக்காட்டாது “வாங்க….” என்று சொல்லி அமர,

“ம்ம்… கப்பல்ல இருக்கீங்கன்னு சொன்னாங்க..” என்றார் அவரும்..

“ஆமா.. ஒருவேலை… அதான்..” என்றவன்  அப்போது தான் கேட்பதுபோல் “ஜூஸ் சொல்லவா.. இல்லை வேற…” என்று சொல்லி முடிக்கும்முன்னே இரண்டு பிரெஸ் ஜூஸ் வந்து சேர, “எடுத்துக்கோங்க..” என்றவனை குழப்பமாய் தான் பார்த்தார் அவர்..

சாய்ஸ் கொடுப்பது போல் கொடுத்து, இறுதியில் அவன் தெரிவு தான் நடக்கும் என்பது இந்த சின்ன விசயத்தில் அவருக்கு புரிந்து போனது.. பின்னே அவரும் தான் எத்தனை ஆண்டுகளாய் வெற்றிகரமாய் தொழில் செய்து வருகிறார்.. ஒருவரின் செயல் வைத்தே அவரின் குணம் காண முடியாதா என்ன..

ஒன்றும் சொல்லாது ஜூஸை எடுத்துக்கொண்டவர் “பேசலாமா ப்ரீயா இருக்கீங்களா???!!” என்று கேட்க,

“ஜூஸ் குடிங்க. பேசலாம்..” என்றான் குரலினில் எதுவும் காட்டாது..

அவரும் அவன் சொன்னதற்காக இரண்டு மடக்கு விழுங்க, அதற்குள் அவன் மொத்தத்தையும் குடித்திருந்தான்..

“சொல்லுங்க…” என்று அவன் சொல்லவும் “இல்ல.. அது.. அந்த பொண்ணு எப்படி இருக்கு இப்போ..” என்றார் நேரடியாய் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது..

“நல்லாகிடுவா..!!!! ஆகிடனும்..” என்றவனை இது என்ன மாதிரியான பதில் என்று புரியாமல் பார்த்தவர்,

“நான் நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்.. நீங்க.. நீங்க இதுல கொஞ்சம் பொறுமையா போனா நல்லதுன்னு தோணுது.. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுங்க.. அவங்க பார்த்துப்பாங்க… அதைவிட்டு நீங்க நேரடியா எதுலயும் தலையிட்டு நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னா…” என்று அவர் இழுத்து நிறுத்த,

“ம்ம்.. பிரச்சனைன்னா??!!!!” என்று சொல்லி அவனும் அவரை கேள்வியாய் பார்த்தான்..

“இல்ல மாப்ள அதுவந்து… நிர்மலா பயப்படுறா.. இதெல்லாம் அவளுக்கு புதுசு..” எனும்போதே,

“குத்து வாங்கி படுத்திருக்கவளுக்கு கூட கத்திகுத்து புதுசு தான்…” என்றான் எரிச்சலை அடக்கி..

“நானும் அதான் சொல்றேன் மாப்ள.. கல்யாணம் ஆகப்போகுது.. அதுல இதெல்லாம் வேற நீங்க இழுத்துக்கணுமா..” என்றதுமே, பாலகுரு எழுந்துவிட்டான்..

அவன் எழுந்த வேகத்தில் ராஜனும் எழுந்துவிட, “நான் நேத்தே உங்கக்கிட்ட என்ன சொன்னேன்.. இப்போதைக்கு எதுவும் பேசவேணாம்னு சொன்னேன் தானே.. எனக்கு இப்போ என் கல்யாணம் கூட முக்கியமில்லை.. பூர்ணி முன்னாடி வேற எதுவுமே எனக்கு முக்கியமில்லை.. புரிஞ்சதா உங்களுக்கு.. அவ கண்ணு முழிச்சு வரணும்.. வந்தே ஆகணும்.. அதுமட்டும் தான் இப்போ…” என்று கத்தியவனை விசித்திரமாய் பார்த்தார் அவர்..

“என்ன பாக்குறீங்க.. அவ இல்லைன்னா இப்போ நீங்க என் முன்னாடி இப்படி இழுத்துக்காதீங்கன்னு பேச முடியாது… புரிஞ்சிதா.. போய் சொல்லுங்க உங்க பொண்ணுக்கிட்ட, பாலகுருக்கு பொண்டடியா வரணும்னா அவனையே அடக்கிட்டு போற தைரியசாலியா இருக்கணும்…” எனும்போதே பூர்ணியின் ‘பாஸ்….’ என்றழைக்கும் முகம் அவன் கண்களில் தெரிய, வேகமாய் அவனது இமைகளை மூடிக்கொண்டான்..

“ப்ளீஸ் நீங்க கிளம்புங்க.. கொஞ்ச நாள் போகட்டும்…” என்றவனுக்கு அங்கே அதற்குமேல் நிற்கவே முடியவில்லை..

காரை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் வந்துவிட்டான்.. அங்கே முத்துராணியும், சந்தியாவும் இருக்க,

இவனைப் பார்த்தவர்கள் “ரெண்டு தடவ முழிச்சு பார்த்தா எதுவுமே பேசலை…” என,

நேற்று இதழ்களை கூட பிரிக்கமுடியாது சிரமப்பட்டு ‘பாஸ்…’ என்று அவள் சொல்லியது அவனது செவிகளில் இப்போதும் ஒலிக்க,

‘ஐயோ.. என்னை கொல்லுறாளே….’ என்று கத்த வேண்டும்போல் இருந்தது அவனுக்கு..

ஒன்றுமே பேசாது தொப்பென்று அங்கிருந்த இருக்கையில் அவன் அமர, அவ்விரு பெண்மணிகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர்.. அவர்களை பார்க்காமலே

“நீங்க வீட்டுக்கு போய் பிரெஷ் ஆகிட்டு வர்றதுன்னா வாங்க.. நான் இருக்கேன்..” என்று பாலகுரு சொல்ல,

“இல்ல பாலா.. மைதிலி சாரு இப்போ வந்திடுவாங்க.. வந்ததும் போறோம்..” என்ற முத்துராணியிடம்,

“ஏன் இந்த நிலைமைல கூட இங்க என்ன ஆகிடபோது…” என்றான் காட்டமாய்..

“அதில்லடா…!!!” என்று அவர் பேசும்போதே, பாலச்சந்திரன் அங்கே வேகமாய் வந்தவர்,

“என்னடா நீ.. நிர்மலா அப்பாக்கிட்ட கொஞ்சம் பொறுமையா பேசினா என்ன??? அவ்வளோ சங்கடப்பட்டுட்டு போறார்…” என,

“ஓ..!!! அப்போ இனிமே நீங்களே பேசிக்கோங்க.. அதுவும் அனாவசியமா பேசாம இருந்தா போதும்..” என்று இவனும் சொல்ல, சந்தியா தான் மிக மிக சங்கடப் பட்டு போனார்..

“பாலா.. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்கவேணாம்.. நேத்துதான் நிச்சயம் நடந்தது.. அதுக்குள்ள இப்படின்னா யாருமே பயப்படத்தான் செய்வாங்க…”

“அத்தை… யார் பயத்தை பத்தியும் எனக்கு இப்போ கவலை இல்லை.. பூர்ணி மட்டும் தான் இப்போ..” என்றவனிடம் மற்றவர்களால் என்ன சொல்ல முடியும்..

எதுவும் சொல்ல முடியாது அமைதி காத்த நேரத்தில், “சார் அவங்கக்கிட்ட லேசா அசைவு தெரியுது.. யாராவது வந்து பேசுறீங்களா???!!!” என்று நர்ஸ் வந்து சொல்லவும், அனைவருமே உள்ளே செல்ல,

“ஒருத்தர் மட்டும் பேசுங்க…” என்று நர்ஸ் சொல்லவும், முதலில் சந்தியா தான் பேசினார்..

“சீக்கிரம் கண்ணு முழிச்சு வந்துடு பூர்ணி.. எங்களை தவிக்கவிடாத…” என்று அவர் சொல்கையில், பூர்ணியின் கண்களில் மெதுவாய் அசைவு தெரிய,

“மேடம் நீங்க டென்சன் இல்லாம பேசினாதான் அவங்களும் டென்சன் ஆக மாட்டாங்க..” என்று நர்ஸ் சொல்ல, சந்தியாவிற்கோ அழுகையை அடக்கவே முடியவில்லை..

என்ன முயன்றும் அழுதுகொண்டே பேச பாலகுரு பொறுத்துப் பார்த்தவன் “ம்மா.. அத்தையை வெளிய கூட்டு போ..” என்றவன், பூர்ணிமாவின் அருகே தான் சென்றான்..

“பூர்ணி…” என்று மெதுவாய் அவன் கைகள் பற்றியவன், “இப்போ நீ மட்டும் கண்ணு முழிக்கல, அந்த போஸ் என்கிட்டே தான் இருக்கான் அவனை போட்ருவேன்…” என்று மெதுவாய் அவள் காதருகே சொல்ல, சட்டென்று அவள் விழிகளில் அசைவு அதிகமாய் தெரிந்தது..

இவன் என்ன பேசினானோ யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் பூர்ணியிடம் அசைவு தெரியவும்,

“சார் பேசுங்க சார்..” என்று நர்ஸ் ஊக்க,

“சொல்லு டி பூர்ணி.. அவனை போட்ரவா?? அப்புறம் நான் ஜெயிலுக்கு போயிடுவேன்… இதெல்லாம் நடக்கணும்னா நீ இப்படியே இரு…” என்று மெதுவாகவே பேசினாலும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து பேச, அவளின் விரல்கள் வேண்டாம் என்று அசைவது போல் அசைந்து, கண்கள் மெல்ல திறந்தாள்..

அவளுக்கு நேற்று போலவே மங்கலாய் தான் அனைவரும் தெரிய, பாலகுரு அருகே அமர்ந்ததினால் கொஞ்சம் அவன் முகம் தெளிவாய் தெரிவது போல் இருந்தது.. அனைவரும் அமைதியாய் இருக்க, சந்தியாவோ எங்கே தான் அழுதாள் இவன் வெளியே போக சொல்வான் என்று அழுகையை விழுங்கிக்கொண்டு நிற்க, அவரைப் பார்த்து மெதுவாய் புன்னகைக்க முயன்றாள் பூர்ணி..

முத்துராணியும், பாலச்சந்திரனும்  எங்கே நேற்றுபோல் திரும்ப கண்களை மூடிடுவாளோ என்று பயந்து போய் பார்க்க, அவர்களுக்கும் ஒரு புன்னகையே அவளின் பதில்..

பாலகுரு அவளின் முகத்தினில் இருந்து பார்வையை அகற்றவேயில்லை.. அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தவனிடம் இன்னும் அருகே வா என்று சொல்வது போல், இமைகளை மூடித் திறக்க, சுற்றி இருந்த அனைவரின் பார்வையும் கூர்மையானது..

“அவங்க என்னவோ பேச நினைக்கிறாங்க…” என்ற நர்ஸ், ஆகிச்ஜன் மாஸ்க்கை கழட்டி விட,

“அவனை என்ன பண்ண??!!!!” என்றாள் திக்கி திணறி..

“ஒண்ணுமே பண்ணல…” என்றவனுக்குமே பயம், எங்கே திரும்ப அன்கான்சியஸ் போய்விடுவாளோ என்று..

“இல்ல நீ பொய் சொல்ற…” என்றாள் வார்த்தைகளை சேகரித்து..

“இல்லை…” என்று பாலகுர் உறுதியாய் தலையை ஆட்ட,  “போ… போலீஸ்… கேஸ்….” என்று கேட்க, அவளின் கேள்வி புரிந்து,

“நான் இருக்கப்போ அதெல்லாம் நடக்குமா.. எந்த கேஸும் இல்லை.. போலீஸ் வராது.. ஏற்பாடு பண்ணியாச்சு…” என்றவன் “என்னப்பா அப்படித்தான..” என்றான்..

அவரும் “ஆமாடா..” என்றவர் “பூர்ணி நாங்க எல்லாம் இருக்கோமே.. இப்படியே விட்றுவோமா..” என, “ம்ம்….” என்று கொஞ்சம் ஆசுவாசமாய் மூச்சு விட,

“இது வேணாம்…” என்றாள் மெதுவாய் ஆக்சிஜன் மாஸ்க்கை காட்டி..

அவன் நர்ஸை பார்க்க, “இப்போ வேணாம்.. ஆனா திரும்ப கொஞ்ச நேரம் வைக்கனும்…” என்று சொல்லி முழுதாய் கழட்டிவிட, பூர்ணிமா பாலகுருவையே தான் பார்த்தாள் உனக்கு எதுவும் சொல்லவேண்டுமா என்று..

அவனுக்கு அவளிடம் கேட்க வேண்டிய ஒரே ஒரு கேள்வி இருந்தது.. ஆனால் இவர்களின் முன்னால் அதை கேட்கலாமா வேண்டாமா என்றும் தெரியவில்லை.. அப்படியிருக்க, அவளோ விடாது பார்க்க, அவனையும் மறந்து கேட்டே விட்டான் மெதுவாய் அவளருகே குனிந்து..

“நீ.. நீ என்னை இவ்வளோ லவ் பண்ணியா பூர்ணி…” என்று..

அவனது இந்த கேள்வியை கேட்டதும் அவளின் பார்வை அப்படியே மாறிவிட, கண்களை இறுக மூடித் திறந்தவள்,

“கெட் லாஸ்ட்..” என்று சொல்லியவளின் பிபி எகிறியது..

பல்ஸ் ரெட் மானிட்டரில் பார்த்த நர்ஸோ “சார் உங்களை பேசத்தானே சொன்னேன்.. அவங்களை ஏன் டென்சன் பண்றீங்க???” என்று  சொல்ல, பூர்ணிமா மறுபடியும் கண்களை மூடிக்கொள்ள, பாலகுரு பயந்து தான் போனான்..

“பூர்ணி பூர்ணி முழிச்சு பாரு.. ப்ளீஸ்.. நான் எதும் கேட்க மாட்டேன்.. ப்ளீஸ்…” என்று அவளின் கன்னம் தட்டியவனுக்கு உள்ளே அத்தனை பதற்றம், நன்றாய் பேசியவளுக்கு தன்னால் தான் எதும் ஆகிவிட்டதோ என்று..

ஆனால் அந்த நேரத்தில் அவனுக்கு தோன்றவில்லை போல, இவனால் தான் அவள் இப்படி வந்து படுத்திருக்கிறாள் என்று..

“பூர்ணி… முழிச்சு பாரு டி..” என்று சந்தியாவும் கூற, முத்துராணியோ “என்னடா சொன்ன அவக்கிட்ட.. நீ போ முதல்ல.. எப்போ பார் ஏதாவது வார்த்தையை விட்டுட்டு…” என்று மகனை கடிய, பாலகுருவிற்கு அவள் கண்கள் திறக்காமல் போனதும் அவனுக்கு கண்களே கலங்கிவிடும் போலிருந்தது..

“பூர்ணி.. இங்க பாரு.. சரி.. நான் யாரையும் எதுவும் செய்யல.. அந்த போஸ்.. அப்புறம் உன்னை குத்தினானே, அவனும் இதே ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கான்.. அவன்… அவனையும் நான் எதுவும் பண்ணலை… ஆனா ப்ளீஸ் நீ திரும்ப என்கிட்டே பேசு…” என்று அவளின் கன்னத்தை தட்டிக்கொண்டே இருக்க,

“எல்லாரையும் விட்டுடுவ..?? அப்போ நான்???” என்று கேட்டவளின் கேள்வியில் அதிர்ந்து தான் போனான் அவன்..

என்ன கேள்வி இது???

இதற்கு அவன் என்ன பதில் சொல்வான்.. இவளை என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாள்?? எதுவுமே அவனுக்கு விளங்கவில்லை.. சுற்றி இருந்தவர்களுக்கும் இவள் என்ன சொல்கிறாள் என்று தெரியவில்லை.. சந்தியாவோ அழுதுகொண்டே இருக்க,

முத்துராணி தான் என்னவென்றே தெரியாமல் “நீ சரியாகி வா பூர்ணி.. அதுவே எங்களுக்கு போதும்.. நீ வா.. உனக்கு என்ன வேணுமோ சொல்லு நான் கொடுப்பேன் அதை…” என்றுசொல்ல,

‘அப்படியா??!!!!!’ என்றாள் இதழ்களில் புன்னகை விரிய..

“ஆமா பூர்ணி.. நீ சரியாகி வந்தா போதும்..” என்று பாலச்சந்திரனும் சொல்ல,

‘பார்த்தியா??!!!’ என்று பாலகுருவை பார்த்தவள்,

“எனக்கு ஒன்னும் வேணாம்..!!!!” என்றாள் அழுத்தமாய்..

“ஆனா நீ எங்களுக்கு குணமாகி வரணும்..” என்று சந்தியா சொல்ல, “ம்ம்…” என்று தலையை அசைத்தவள், ‘நீ இன்னும் போகலையா..’ என்று அவனை பார்க்க, அவனோ நான் போகவே மாட்டேன் என்று அடம் பிடித்து அமர்ந்திருந்தான்..

“சார் போதும் ரொம்ப அவங்களை ஸ்ட்ரைன் பண்ண விடாதீங்க…” என்று நர்ஸ் அனைவரையும் வெளியே போக சொல்ல,

“நீங்க வாங்கன்னு சொன்னாதான் வரணுமா??” என்று கடிந்தபடி தான் அவன் எழுந்து வெளியே வந்தான்.. மற்றவர்களும்..

ஆனாலும் பூர்ணிமா கேட்ட கேள்வி அவனை வண்டாய் துளைக்க, மனம் ஒருநிலையில் இல்லை…

‘என்னை என்ன செய்வாய்???????’

‘நீதான்டி என்னை வச்சு செய்யற….’ என்று அவளிடமே போய் சொல்லவேண்டும் போல் தோன்றியது..

‘நான்தான் இதெல்லாம் சரிவராது சொல்லிட்டேனே… பின்ன ஏன் டி என்னை இவ்வளோ லவ் பண்ண?? அது கேட்டது ஒரு தப்பா??? கெட் லாஸ்ட் சொல்றா?? அதுவும் என்னை…’ என்று நினைக்கும் போதே,

‘அவ இல்லாட்டி இப்போ நீ இல்லடா மடையா…’ என்று அவனின் மனம் எடுத்துரைக்க, அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்..

ராமலிங்கம், அப்போது தான் வந்தவர், இவன் இப்படி அமர்ந்திருப்பது கண்டு என்னவோ ஏதோவென்று “என்னாச்சு பாலா..” என்று பதறி கேட்க,

“ஹா…!!!” என்று நிமிர்ந்தவன், “ஒண்ணுமில்ல.. ஒண்ணுமேயில்லை…” என்று கிளம்பியவன், காரை எடுத்துக்கொண்டே எங்கு செல்கிறோம் என்று தெரியாமலே சென்றுகொண்டு இருந்தான்..

நிர்மலா அவனுக்கு அழைப்பு விடுக்கும் வரைக்கும் கூட அவனுக்கு தெரியவில்லை, தான் எங்கு செல்கிறோம் என்று.. விடாது அவனின் அலைபேசி சிணுங்கியே தொலைக்க,

“ச்சே..” என்று பார்த்தவன், அழைப்பது நிர்மலா என்று தெரியவும், இதயத்தில் ஒரு திடுக்கிடல்..

எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போதே, திரும்ப அழைப்பு, அவளின் அமைதியான முகம் சிறியதாய் ஒரு புன்னகையோடு அவன் அலைபேசி திரையில் மிளிர, அதை பார்த்துக்கொண்டே இருந்தவன்,

அழைப்பை ஏற்று “ஹலோ..!!” என,

மிக மிக மென்மையாய் “ஹலோ…” என்றாள் அவள்.. 

                          

 

                                                                    

Advertisement