Advertisement

   குருபூர்ணிமா – 4

பாலகுரு எத்தனை முறை அந்த வீடியோவை பார்த்தானோ தெரியாது, ஆனால் திரும்ப திரும்ப அதனையே தான் பார்த்துகொண்டு இருந்தான். அவனுக்கு மனம் அடங்க மறுத்தது.. பூர்ணி சரிந்து விழுந்த காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு முறை காணும்போதும் அவனுக்கு இதயம் வலிப்பது நன்கு உணர முடிந்தது..

மேடையில் பலகுருவிற்கு அருகே நிர்மலா நிற்க, அவனுக்கு இந்தபக்கம் சந்தியாவும், பூர்ணிமாவும் நின்றிருந்தனர். மேடைக்கு ஹார்பர் ஆட்கள் மொத்தமாய் வர, கூட்டம் சரியாய் இருந்தது..

சந்தியாவிற்கும் பூர்ணிக்கும் கீழே இறங்குவதற்கு கூட முடியாத நிலை. சரியென்று கொஞ்சம் பின்னே தள்ளி நிற்கலாம் என்று பூர்ணிமா பார்த்துகொண்டு இருக்க, கூட்டத்தில் வந்த ஒருவன், வரிசையில் வராது, சற்றே கொஞ்சம் தள்ளி மேடையில் நிற்பவர்களுக்கு வெகு அருகே வருவது போல் மெதுவாகவே வந்துகொண்டு இருந்தான்..

சாதரணமாய் வருவது போல் இருந்தாலும், அவனது நடையும் உடல்மொழியும் அப்படியில்லை என்று சொல்ல, பூர்ணிமா தள்ளி நிற்க நினைத்து அங்கே இங்கே திரும்பியவள், லேசாய் கால் இடறி, அந்த அவனின் மீது இடிப்பதுபோல் போய் பின் சுதாரித்து நிற்கையில் தான் அவனின் புல் ஹேன்ட் ஷர்ட் கையினில் கத்தியை மறைத்து வைத்திருப்பது தெரிய, பூர்ணிமா அப்படியே திகைத்துத் தான் போனாள்..

வாழ்த்த வரும் பொழுது ஆயுதம் எதற்கு, என்று யோசிக்கும் போதே, அவன் பாலகுருவை நோட்டம் விடுவது போல் தோன்றவும், சந்தியாவை நகட்டிவிட்டு அவள் சென்று பாலகுருவின் அருகில் நிற்க, சரியாய் அவனும் அவர்களை நெருங்கிவிட்டான்..

‘கடவுளே…’ என்று இறைவனை துணைக்கு அழைத்தவள், அவன் கத்தியை உருவிய நேரம் இருக்கமாய் அவனின் கரத்தினை பற்றவும், அதற்குள் மேடைக்கு இந்த பக்கம் இருந்து, வேறு சில முக்கியஸ்தர்கள் மேடையேறவும் சரியாய் இருக்க, பாலகுருவை சுற்றி ஆட்கள் நின்றிட, பூர்ணிமாவோ பிடித்த அவனின் கரங்களை விடவேயில்லை..

பூர்ணி முகத்தில் யாரிடம் சொல்வது என்ற பதற்றம் ஒருபுறம் இருக்க, அவனின் கரங்களை பற்றிக்கொண்டே பாலகுருவை பார்த்தாள்.. ஆனால் அவனோ வந்திருந்தவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கும் அதே நேரம், அவளின் வயிற்றில் கத்தி பாய, கண்களை இன்னும் அகல விரித்து திகைத்தவள் தன் பிடியை தளர விட, அவளால் கத்தவும் கூட முடியவில்லை.. வலி என்பதனை தாண்டி அதிர்ச்சிதான் நிறைய..

‘ஐயோ…!!!’ என்று நினைக்கும் போதே, அவன் மெதுவாய் பாலகுருவை நோக்கி பார்வை திருப்பும் நேரம், ஒரு கையால் தன் வயிற்றினை இறுக பற்றியவள், மற்றொரு கரத்தால் அவன் கையினை மீண்டும் மிக மிக இறுக்கமாய் பற்ற, இம்முறை அவனால் அவளிடம் இருந்து தப்ப முடியவில்லை..

அவன் கையை விடுவிக்க முயலும்போதே, அவனின் கையோடு சேர்த்து கத்தியையும் பூர்ணிமா பற்றிட, அந்த அவனோ தன் மற்றொரு கரம் கொண்டு அவளின் கரத்தினை பற்றி இழுக்க, அந்த இழுப்பில் தானாகவே கத்தி அவன் வயிற்றில் பாய்ந்தது..

இதெல்லாம் ஒருசில விநாடிகளில் நடந்துவிட, முதலில் குத்த வந்தவன் விழ, அவன் விழுவதை கண்ட பின்னர் தான் பூர்ணி  சரிந்தாள்..

இந்த காட்சிகளை எத்தனை முறை கண்டாலும், பாலகுருவாள் தன் மனதில் எழும் எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. கண்களை இறுக மூடித்திறந்தவன் “பாண்டியா!!!!!” என்று கத்த,

“ண்ணா….” என்று வந்து நின்றான் அவன்..

“யாருன்னு தெரிஞ்சிதாடா???”

“இல்லண்ணா அது…!!!!!!” என்று பாண்டியன் முழிக்க,

“ச்சே… இன்னாடா செஞ்சிண்டுருந்தீங்க….. தடிமாடு மாதிரி அத்தினி பேரு இருந்து இன்னாடா பிரயோஜனம்…” என்று கத்தியவன்,

“இங்க பார் யார் யார் என்ன செய்வீங்க எனக்குத் தெரியாது அவனை அனுப்பியது  யாருன்னு ராவாண்டக்குள்ள நியூஸ் வரணும்.. இல்ல…” என்று விரல் நீட்டி மிரட்டும் போதே, பாலகுருவிற்கு போன் வந்தது..

எடுத்துப் பார்க்க, அழைப்பது அவனின் அப்பா என்று தெரியவும் “வந்துடுவேன்…” என்றுசொல்லி வைத்தவன்,      

“அந்த போட்டோக்ராபர் கிட்ட கேமரா எல்லாம் வாங்கினியா???” என்றான் திடீரென்று யோசனை வந்ததுவாய்..

“அப்போவே வாங்கியாசுன்னா.. எல்லாம் பத்திரமா இருக்கு.. இந்த ஒரு விடியோ மட்டும் தான் தனியா எடுத்தோம்..”

“போட்டோகிராபர் நம்ம கஸ்டடி விட்டு போகவே கூடாது.. எல்லாம் முடியிற வரைக்கம்,, புரிஞ்சிதா… அதுவும் இந்த வீடியோ வெளிய எங்கவும் ஷேர் ஆகக்கூடாது… மண்டபத்துல இருந்த எல்லா கேமராவும் எடுத்து கடல்ல தூக்கி போடு…” என்றவன் அடுத்த இருபது நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தான்..

ராமலிங்கமும் சந்தியாவும் ஒருபக்கம் இடிந்து போய் அமர்ந்திருக்க, பாலகுருவின் குடும்பம் மொத்தமும் அங்கேதான் இருந்தது.. கூடவே நிர்மலாவின் குடும்பமும்.. நிர்மலா ஒருபுறம் சோர்வாய் அமர்ந்திருக்க, அவளின் அருகே அவளைப் பெற்றவர்கள்..

பாலகுரு வந்ததுமே ராமலிங்கம் அருகே சென்றவன் “டாக்டர் எதுவும் சொன்னாங்களா மாமா??” என, அவரோ எதுவும் இல்லை என்று தலையை மட்டும் அசைத்தார்..

சந்தியா அத்தனை நேரம் மௌனமாய் கண்ணீர் உகுத்தவர், இவனைக் கண்டதும் கேவ “அத்தை… உங்கனால முடியுது நீங்க அழறீங்க.. நான் அதை பண்ணலை.. அவ்வளோதான் வித்தியாசம்.. பூர்ணி சரியாகி வருவா… ” எனும்போதே

பாலச்சந்திரன் “குரு… போலீஸ் வந்தாங்கடா…” என்றதும், அப்படியே அவன் முகம் மாறிவிட்டது..

“வந்தா சமாளிக்கத் தெரியாதா?? யார் வந்தா?? ஏன் மினிஸ்டர்ட பேசலையா நீங்க????” என்று கோபத்தில் பாலகுரு கத்த,

“இல்ல குரு, பார்மாலிட்டின்னு ஒண்ணு இருக்கே…” என்று அவர் சொல்ல,

“என்ன பார்மாலிட்டியா இருந்தாலும் பரவாயில்லை.. பூர்ணி போலீஸ் அது இதுன்னு எல்லாம் எதுக்கும் பதில் சொல்ற நிலைமை வர கூடாது.. அவ கண்ணு முழிக்கிறதுகுள்ள எல்லாம்.. எல்லாமே சரியாகி இருக்கணும்.. நீங்க யார்க்கிட்ட பேசுவீங்களோ.. இல்லை யாரைப் பார்ப்பீங்களோ எனக்கு தெரியாதுப்பா..” என்றவன்,

“சித்தப்பா… அப்பாவும் நீங்களும் கிளம்புங்க.. போலீஸ் மீடியா எதுவும் எதுவும் இங்க வர கூடாது… இப்படி ஒரு சம்பவம் நடந்த அறிகுறியே இருக்க கூடாது..” என, அவன் சொல்வது புரிந்து இருவரும் கிளம்பிச் சென்றனர்.. 

நிர்மலாவின் குடும்பத்தினர் இவை அனைத்தையும் ஒருவித மிரட்சியோடு பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை.. ஆனாலும் வரவேண்டிய சூழல்.. பாலகுரு அப்படியே பூர்ணிமாவை தூக்கிக்கொண்டு மேடையில் இருந்து இறங்குகையில் இவர்களும் பின்னே வரும் நிலை..

அதிலும் நிர்மலா…

பணக்காரி தான்.. அழகி தான்.. ஆனால் சாது.. அவளது விருப்பங்கள் இன்னதென்று அவளுக்கு விளங்காத பொழுதே அவளுக்கான அனைத்தும் தேவைக்கு அதிகமாகவே கிடைத்துவிட, அவளுக்கு வாழ்வில் அதனை தவிர வேறேதெவும் எதிர்பார்ப்புகளோ எதுவும் இல்லை..

பாலகுருவை பேசுகிறோம் என்று சொல்லும்போது, அவனின் படிப்பு வேலை புகைப்படம் எல்லாம் பார்த்தாள்.. அவளின் குடும்பமும் பிசினஸ்தான் என்பதால் பெரிதாய் வேறெதுவும் அவள் மறுக்கவில்லை.. ஆனால் பாலகுருவை ஓரிரு முறை நேரில் பார்த்தபொழுது அவனை பிடித்திருந்தது…

இவனோடுதான் என் வாழ்வு என்று சந்தோசமாய் அவள் மனதில் ஒரு எண்ணம் தோன்ற வைத்துவிட்டான் பாலகுரு.. அவன் எதுவுமே செய்யவில்லை ஆனால் அவளுக்காகவே அவனை பிடித்திருந்தது.. அவனுக்கு நிர்மலாவை பிடித்தது போல்..

ஆனால் பாலகுருவோ நிர்மலா என்ற ஒருத்தியும் அவளின் பெற்றோர்களும் அங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாதது போல் நடந்துகொண்டு இருந்தான்.. மனதிற்குள் சொல்ல முடியாத ஓர் உணர்வு..

அந்த வீடியோ பார்க்கும்போது ஒருவிசயம் அவனால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது.. பூர்ணிமா இல்லை என்றால் இன்று தான் தான் இந்த மருத்துவமனையில் உயிருக்கு போராடியிருக்க வேண்டும் என்று..

இந்த எண்ணம் எந்த மாதிரியான உணர்வுகளை கொடுக்கும் என்பது அவரவர் அங்கிருந்தால் தான் புரிந்திருக்கும்…

முத்துராணியோ தான் என்ன உணர்கிறோம் என்றுகூட தெரியவில்லை.. அவருக்கு முதலில் இதெல்லாம் என்னவென்றே எதுவும் விளங்கவில்லை.. ஏனெனில், பாலகுருவை தவிர யாரும் அந்த வீடியோ இப்போது வரைக்கும் பார்க்கவில்லை…

“என்ன மைதிலி இப்படியாகிடுச்சு…” என்று வருந்தவும் செய்தார்..

பாலகுரு அவர்களைப் பார்த்தவன் “ம்மா நீயும் சித்தியும் வீட்டுக்கு கிளம்புங்க.. சாறு நீ கூட்டிட்டு போ…” என்று சொல்ல,

“இல்லடா என்னால போக முடியாது.. டாக்டர் வந்து சொல்லட்டும்..” என்றார் ஒரேடியாய் மறுத்து..

மைதிலியோ “பாலா.. நிர்மலா வீட்ல இருக்காங்க… அவங்க ஏன் பாவம் இங்க இருக்கணும்.. அவங்களை கிளம்ப சொல்லேன்.” என்றதும், அப்போது தான் அவர்கள் இங்கே இருப்பதே அவனுக்கு தெரிந்தது..

அவர்களை கவனிக்கும் எண்ணத்தில் எல்லாம் வந்ததில் இருந்து அவன் இல்லை..

‘ஓ…!!!!’ என்று நெற்றியை தடவியவன், “நானே எப்படி சொல்ல போகன்னு.. நீங்க சொல்லி அனுப்பிடுங்க.. கொஞ்ச நாள் போகட்டும் எதுவும்…” என்றவன் “நான் டாக்டர் பாக்க போறேன்.. அவங்களை அனுப்பிடுங்க…” என்றுசொல்லி சென்றுவிட்டான்..

பூர்ணிமா ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்… நிறைய ரத்தம் போய்விட்டதாய் சொன்னார்கள்.. ஆப்ரேசன் செய்ய வேண்டும் என்றார்கள்.. ஆழமான கத்தி குத்து…. இது மட்டுமே இங்கே அனுமதிக்கவும் சொன்னது.. அதற்குமேல் எதுவும் தெரியாது..

பாலகுரு டாக்டரை பார்க்க போக, அவரோ “இன்னிக்கு நைட் போகட்டுமே.. மார்னிங் கான்சியஸ் வந்துட்டா நாட் டூ வொர்ரி…” என்றதும்,

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. நீங்க என்னவேனா பண்ணுங்க ஆனா காலைல பூர்ணி கண்ணு முழிக்கணும்.. என்னை பார்க்கணும்..” என்றவனை கண்டு டாக்டரே அரண்டு தான் போனார்…

“இல்லை மிஸ்டர். பாலகுரு, இந்த கேஸ்க்கு என்ன ட்ரீட்மென்ட் கொடுக்கணுமோ நாங்க கொடுத்துட்டோம்.. ரிசல்ட் வரணும் இல்லையா…???”எனும்போதே வேகமாய்,

“இந்த ஹாஸ்பிட்டல் இருக்கனுமா இல்லையா??!!!” என்றான் கோபத்தில்..

அவனின் பேச்சை கேட்டவர், திகைக்க, “மிஸ்டர். பாலகுரு, ப்ளீஸ் கூல் டவுன்…” என,

“கூல் டவுனும் இல்லை.. கூல் அப்பும் இல்லை.. பூர்ணி நாளைக்கு காலைல கண்ணு முழிக்கணும்.. அப்புறம் அவன்…… அவனும் முழிக்கணும்… முழிச்சே ஆகணும்…” என்றான் அழுத்தம் திருத்தமாய்..

“அவன் இன்னும் ஒருமணி நேரத்துல முழிச்சிடுவான்.. அவனுக்கு லேசான இஞ்சுரிதான்…”

“ஓ…!!!! அப்போ பாத்துக்கிறேன்..” என்று முனுமுனுத்தவன், “பூர்ணி முழிக்கணும்…” என்று திரும்ப சொல்லிவிட்டு வெளியே வர, அங்கேயோ அனைவரும் அவன் முகத்தினை தான் பார்த்தனர்.

“ஒன்னும் பிரச்சனையில்லை…” எனும்போதே, அவனின் அலைபேசி சிணுங்க, பாண்டியன் தான் அழைத்திருந்தான்..

“இன்னாடா…”

“ண்ணா.. போஸ் ஆளு அவன்…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,

“தூக்குடா அவன… பூர்ணி மட்டும் கண்ணு முழிக்கட்டும்.. அந்த நிமிஷம் அந்த போஸுக்கு சங்கு ஊதலை நான் பாலகுரு இல்லை.. அன்னிக்கு இவளால தான் தப்பிச்சான்.. ஆனா இனி நான்தான்டா அவனுக்கு எமன்…..” என்று பாலகுரு சுற்றி யார் இருக்கிறார்கள் இல்லையென்று பாராது பேச, சுற்றி இருந்த அனைவரும் ஒருவித பயத்தோடு தான் பார்த்தனர்..

முத்துராணி மைதிலியை கண் காட்ட, அவரோ “பாலா…” என்று அவன் தோள் தொட, வெடுக்கென்று திரும்பியவன்,

“சொன்னதை செய் பாண்டியா…” என்றுவிட்டு, “என்ன சித்தி…” என்றதும் நிர்மலா வீட்டினர் இருப்பதை ஜாடையாய் சொல்ல, “இன்னும் இவங்க போகலையா??!!!” என்றான்…

“ம்ம்ச் மெல்ல பேசு பாலா.. சொல்லியாச்சு.. நீ வரவும் சொல்லிட்டு போகலாம்னு இருக்காங்க…”

“சொல்ல என்ன இருக்கு…” என்றபடியே அவர்களிடம் சென்றவன் எதுவுமே பேசாது நின்றான்..

நிர்மலாவோ இவனது பேச்சிலும், செயலிலும் கொஞ்சம் பயந்து போய் இருப்பதாகவே பட, அவனை மெல்ல கலங்கிய விழிகளோடு சந்திக்க, இவனோ அவளை கண்டானில்லை..

“அங்கிள்… சாரி.. நீங்க வீட்டுக்கு போங்க.. எதுன்னாலும் கொஞ்ச நாள் அப்புறம் பேசிக்கலாம்…” என்றவனிடம்,

“ம்ம் ஓகே.. பட்.. கொஞ்சம் பொறுமையா போறது நல்லதுன்னு தோணுது…” என்றார் நிர்மலாவின் அப்பா ராஜன்..

“சில விசயங்கள்ல பொறுமையா போறதுல எந்த யூசும் இருக்காது அங்கிள்..” என்றவன் “நீங்க கிளம்புங்க…” என்று திரும்பவும் சொல்ல,

“ம்ம்ம்ம்…” என்று தலையை ஆட்டியவர், மகளிடம் “உனக்கு எதுவும் பேசணுமா நிம்மி..” என்று நிர்மலாவிடம் கேட்கும்போதே,

திரும்ப அழைப்பு வர, “சொல்லுடா தூக்கியாச்சா??!!!!” என்றபடி பாலகுரு நகர்ந்துவிட்டான்..

நிர்மலாவோ போகும் அவனையே பார்த்தவள் “போலாம் ப்பா.. கொஞ்ச நாள் போகட்டும்…” என, “கிளம்பலாம்ங்க…” என்று அவளின் அம்மா சுதாவும் சொல்ல, அவர்கள் மூவரும் முத்துராணியிடமும் மைதிலியிடமும் சொல்லிக்கொண்டு, கிளம்பினர்..

அவர்கள் போனதும்தான் வந்தான் பாலகுரு.. முதுராணியோ “நிர்மலாக்கிட்ட ஒருவார்த்தை பேசிருக்கலாம்…”

“என்ன பேசணும்…”

“இல்லடா.. யாருக்கு இருந்தாலும் ஒரு கவலை இருக்கும்தான.. பாவம் அந்த பொண்ணு…”

“அப்போ உள்ள படுத்திருக்கவ…??” என்று பட்டென்று கேட்டவனின் பார்வையில் ஆடித்தான் போனார் முத்துராணி..

“இல்ல பாலா…” என்றவரின் பேச்சை மறித்து, “இப்போ நான் உசுரோட இருக்கேன்னா அதுக்கு காரணம் பூர்ணி மட்டும்தான்.. போட வந்தது அவளை இல்லை என்னை..” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் பாலா பல்லை கடித்து உச்சரிக்க,

“பாலா!!!!!” என்று அதிர்ந்து தான் விளித்தனர் அனைவரும்..

ராமலிங்கம் சந்தியாவிற்கு கூட இது அதிர்ச்சிதான்.. அதைக்காட்டிலும் முத்துராணிக்கு.. மைதிலியோ ‘இந்த பொண்ணுக்கு இவ்வளோ பாசமா இவன்மேல..’ என்றுதான் எண்ணத் தோன்றியது..

“ஆமா… என்னைக் காப்பாத்த போய் இப்படி பண்ணிட்டா…” எனும்போதே,

“சார் அவங்களுக்கு கான்சியஸ் வந்து வந்து போகுது…” என்று நர்ஸ் வந்து சொல்ல, அனைவரும் வேகமாய் உள்ளே செல்ல,  டாக்டரும் அதற்குள் வந்திருந்தார்..

“யாராவது ஒருத்தர் மட்டும் பேசுங்க…. ஒன்ஸ் கான்சியஸ் வந்திட்டா கூட போதும்.. சரியாகிடும்…” என, சந்தியாவோ “பூர்ணி…” என்று அழவே  தொடங்கிவிட்டார்..

“அத்தை ப்ளீஸ்..” என்றவன் ராமலிங்கத்தைப் பார்க்க, அவரோ ஏறி ஏறி இறங்கும் சுவாசத்தோடு படுத்திருக்கும் மகளை கண்டு கலங்கிப் போய்த்தான் நின்றிருந்தார்..

பாலகுரு சொன்னதை கேட்டதில் இருந்தே, முத்துராணி ஆடிப்போய் இருக்க, அதிலும் இந்நிலையில் பூர்ணிமாவை கண்டதும் அவர் மனம் வெகுவாய் வருந்தவும் தொடங்கிவிட்டது..

“கடவுளே எங்க கண் முன்னாடி வளந்த பொண்ணு.. சீக்கிரம் சரியாகிடனும்..” என்று வேண்ட,

பாலகுருதான் “பூர்ணி… பூர்ணி… கண்ண தொறந்து பாரு…” என்று அவளின் அருகே சென்று பேச, அவளிடம் எந்த மாற்றமும் இல்லை..

டாக்டரோ “நீங்க பேசிட்டே இருங்க…” என்று சொல்ல,

“பூர்ணி ப்ளீஸ் நீ.. நீ திரும்பி வந்து சண்டை போடு.. நீ வந்து பாஸ்னு சொல்லணும்.. நீ.. நீ அந்த போட்டோ கூட நீயே வச்சிக்கோ.. நான் எதுவும் சொல்லமாட்டேன்.. ப்ளீஸ் சரியாகி மட்டும் வா…” என, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் இவன் என்ன சொல்கிறான் என்று பார்க்க, அவனோ விடாது பேசிக்கொண்டே இருந்தான்..

“பூர்ணி… பூர்ணி… எழுந்திரு… கண்ணு முழிச்சு பாரு…” என்று அவளின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அங்கேயே அவளுக்கு அருகேயே பாலகுரு அமர்ந்துவிட,

டாக்டரோ “பேசிட்டே இருங்க.. அவங்க ஹார்ட் பீட்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது..” என,

“பூர்ணி… பூர்ணி எழுந்து வா… நான் உன்னை திட்டமாட்டேன்.. சண்டை போட மாட்டேன்…” என்று இவனும் சொல்லிக்கொண்டே இருந்தான்..

சுற்றியிருந்தவர்களின் பிரார்த்தனையும், பாலகுருவின் ஓயாத பேச்சும், இறைவனுக்கு எட்டியதா, பூர்ணிமாவின் ஆள் மனதிற்கு எட்டியதா தெரியவில்லை, ஆனால் அவளின் விழிகளில் லேசானதொரு அசைவு தெரிய

“பூர்ணி…” என்று அனைவரும் அவளின் அருகே வர, இப்போது பாலகுரு மௌனமாகிவிட்டான்..

விழிகள் திறப்பாளா என்று அவளையே பார்த்துகொண்டு இருக்க, அவளோ மேலும் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டே மெதுவாய் சிரமம்பட்டே கண் திறந்தாள்..

கண் திறந்தவளுக்கோ மங்கலாய் பாலகுருவின் முகமே தெரிய, “பாஸ்….” என்று உலர்ந்துபோன இதழ்களை பிரிக்க முடியாது பிரித்து சொல்லியவளுக்கு திரும்ப மூச்சு வாங்கவும், கண்கள் தானாய் மூடிக்கொண்டது..

                                       

 

 

  

  

Advertisement