Advertisement

குருபூர்ணிமா – 20

“என்ன என்ன இப்போ புதுசா சிணுங்கற???” என்றவனைப் பார்த்தவள்,

“நீ கூடத்தான் பாஸ்.. இப்போ வந்து புதுசா பேசுற…” என்றாள் பூர்ணிமாவும்..

அவள் எதை முன்னிட்டும் சொல்லவில்லை.. அவனுக்கு இப்படியெல்லாம் தன்மையாக பேசி பழக்கமில்லை.. அதனாலே தான் சொன்னாள். ஆனால் அவனோ, இத்தனை நாள் பேசாது இப்போது குழந்தை என்றதும் வந்து பேசுகிறான் என்று சொல்வதாய் புரிந்துகொண்டு,

“அப்போ அப்போ நீ என்ன சொல்ல வர???” என்றவனின் பார்வை மாறியது..

“உனக்கு இப்படி வந்து அமைதியா பேசி பழக்கமில்லையே அதான் சொன்னேன் பாஸ்…” என்றவள் எழத் தொடங்க,

“ம்ம்ச் எங்க போற பூர்ணி.. நான் இப்போதானே வந்தேன்… உடனே போற…” என்று அவளை பிடித்து அமர்த்தினான்.

அவனுக்கு அவனது அன்பை இப்படித்தான் காட்டத் தெரியும்.. கொஞ்சம் முரட்டு சுபாவம்தான்.. எதையும் தன்மையாக சொல்லிட தெரியாது என்றில்லை சட்டென்று வராது.. அதுவும் பூர்ணியிடத்தில் அவன் எதையும் இதுவரை மறைத்து நடந்துகொண்டதும் இல்லை..

அவளுக்கும் அது நன்றாகவே தெரியும்.. ஆனால் திருமணத்திற்கு முன்னும் எப்படியோ, இப்போதெல்லாம் பாலகுருவின் இந்த அடாதடி குணம் கொஞ்சம் அவளை அச்சமுற செய்தது தான்.. அதுவும் இந்த போஸ் அவனை போட்டுத்தள்ளவே ஆள் அனுப்பிய பின்னே, ரொம்ப ரொம்ப பயமாகி போனது..

பின் இந்த நிர்மலா பிரச்சனை வேறு.. அனைத்தும் ஒன்று சேர்ந்து பூர்ணியினுள் கலவையான உணர்வுகள்.. இவனை யாரும் சொல்லிடுவாரோ என்று.. இவனால் தான் எல்லாம் என்று வேறு யாரும் சொல்லியிருந்தாலோ, இல்லை அந்த நிர்மலா கடைசி நேரத்தில் எதுவும் கிறுக்குத் தனமாய் செய்திருந்தாலோ நிச்சயம் அந்த பாதிப்பு இவர்களின் வாழ்வில் இருக்கும் தானே.. அதன்பொருட்டே அவள் கொஞ்சம் வார்த்தைகளை விட்டிருந்தாள்.

அவன் என்ன செய்கிறான் என்பது அவனுக்கு தெரியவேண்டும் தானே.. நிச்சயம் வீட்டினருக்கு சிலது தெரியாது.. அப்படியே எதுவென்றாலும் அவனை யாரும் எதுவும் கேட்கப்போவதும் இல்லை.. ஆனால் பூர்ணிமாவால் அப்படி இருக்க முடியுமா??

அதுவும் தான் சரி என்றாகுமா?? கணவன் செய்வதில் சரி தவறு என்று சுட்டிக் காட்டுவதும் மனைவியின் வேலைதானே… அதையே அவள் செய்தாள்.. என்ன இருவருமே கலந்து பேசாது அது மற்றொரு பிரச்சனையின் பிள்ளையார் சுழியாகி போனது தான் மிச்சம்..

ஆனால் இப்போது பாலகுருவிற்கு பூர்ணி பேசியது எல்லாம் நியாபகத்தில் கூட இல்லை.. அவளோடு பேசிடவேண்டும் என்றுமட்டும் தான் எண்ணமிருக்க,   

“என்ன அப்படி பாக்குற.. உன்ன பாக்கத்தானே வந்தேன்… இரேன்…” என்றவன் அவளை எழுப்பி வந்து கட்டிலில் அமர வைக்க,

“ஹ்ம்ம் அங்க உட்கார சொல்லிட்டு இங்க உட்கார வைக்கிற பாஸ்..” என்றவள் கால் நீட்டி அமர்ந்துகொள்ள,

“ஏன் என்ன பண்ணுது???” என்றான் வேகமாய்..

“ஒண்ணுமில்ல…” என்றவள், சும்மாவே இருக்க, “பேசத்தானே உட்கார சொன்னேன்… பேசவே மாட்டேங்கிற??” என்றவனை பாவமாய் பார்த்து வைத்தாள் பூர்ணிமா..

“என்ன டி..??!!”

“ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து ட்ரெஸ் கூட செஞ் பண்ணல.. எதுவும் சாப்பிடல இன்னும்.. நீயும் சாப்பிடலைத்தானே..” என,

“என்ன சாப்பிடலையா???” என்று அதிர்ந்தவன் “இந்த அம்மாவும் சித்தியும் என்ன செய்றாங்க.. என்ன கவனிக்கிறாங்க???” என்று சத்தம் போட்டுக்கொண்டே எழ,

“பாஸ் பாஸ்.. ஏன் கத்துற… நான்தான் நீ எதுவும் பேசாம, கேட்காம போனான்னு ரூமுக்கு வந்திட்டேன்..” என்றதும், “சாரி பூர்ணி….” என்றான் உணர்ந்து..

“ம்ம்ச் விடு பாஸ்.. நீ வேணும்னு பண்ணல தானே…” என,

“எதுவா இருந்தாலும் அந்த டைம்ல என்னை பார்த்ததும் உனக்கு எவ்வளோ சந்தோசமா இருந்திருக்கும்.. என்கிட்டே சொல்லனும்னு தானே வந்த.. அதை நானே ஸ்பாயில் பண்ணிட்டேன்…” என்றான் வருத்தமாய்..

உண்மைதானே பூர்ணி வந்து பாலகுருவிடம் நீ அப்பாவாக போகிறாய் என்று சொல்லும் தருணம் எத்தனை அழகானது என்று இருவருக்குமே தெரியும்.. அதுவும் அவனாகவே அங்கே சென்றிருக்க, அவளும் அவனை பார்த்து பேச வந்தபோது என்ன ஏதென்று கேளாது அவன் பாட்டில் சென்றது, இப்போது நிரம்பவே உறுத்தியது அவனுக்கு..  

‘டேய் நீ அப்பா ஆகப் போறடா…’ என்று அவனின் அப்பாவும் சித்தப்பாவும் சொன்னது சிறப்புதான்.. இருந்தாலும் பூர்ணி சொல்கையில் அது வேறு உணர்வல்லவா??

முகத்தை டல்லாக்கி இருந்தவன் “சரி வா சாப்பிட போலாம்..” என்றழைக்க, அவனின் குரலில் இருந்த உணர்வு புரிந்து,

“இன்னமும் கூட நான் உன்கிட்ட சொல்லலை…” என்றாள் வெறுமனே..

“என்ன?? என்ன சொல்லலை???!!”

“அதான்…. இன்னும் நான் சொல்லலை தானே… நீ அப்பா ஆகப்போறன்னு…” என்று அவனை பார்த்து சிரிக்க,

“ஏய்..ஏய்… பூர்ணி..!!!!” என்றவனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை..

அது ஒரு சந்தோஷ சிரிப்பு…. அவனே இதை யோசிக்கவில்லை.. இல்லையெனில் நீயும் திரும்ப சொல்லு என்றுகூட பிடிவாதம் செய்திருப்பான்.. அப்படி செய்பவனும் கூடத்தானே.. ஆனால் இப்போது பூர்ணி சொன்னதும், அவனின் வருத்தம் மறந்து “ஆமால்ல.. சரி சரி சொல்லு…” என்றவன் அவளின் முன் ஆவலாய் அமர,

“ஹா..!!!! அதான் தெரிஞ்சு போச்சே இனி என்ன???” என்றாள் வேண்டுமென்றே..

“ஓய்… என்ன டி… நீதானே சொன்ன.. அப்போ சொல்லு…” என்றான் இப்போது பிடிவாதமாய்..

“ம்ம்…” என்று அவனின் முகம் பார்த்தவளுக்கும் ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொள்ள, “சீக்கிரம் சொல்லு டி… உனக்கு பசிக்குது…” என்றவனை பார்த்து இன்னமும் சத்தமாய் சிரிக்க,

“ஹா ஹா.. பாஸ்… நீ பெரிய பாஸ் ஆகப்போற…” என்று சொல்ல, அடுத்து அவனும் சத்தமாய் சிரித்தான்..

இவர்களின் சிரிப்பு வெளியே கூட கேட்டது.. மைதிலியும் முத்துராணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவர்கள் முகத்திலும் அந்த சிரிப்பு பரவியது..

“பாஸ்… இப்போ பசிக்குது…” என்று பூர்ணி திரும்ப சொல்ல,

“வா வா…” என்று வெளியே அழைத்துப் போனான்.

அவர்கள் போவதற்கும், சந்தியாவும் ராமலிங்கமும் வந்து சேர்வதற்கும் சரியாய் இருக்க, “ம்மா… ப்பா….” என்று வேகமாய் பூர்ணி அவர்களை நோக்கிச் செல்ல,

“மெதுவா போ…” என்று ஒரு கண்டிப்புக் குரல்.. வேறு யார் எல்லாம் அவளின் பெரியத்தை தான்…

சாப்பிட வேண்டும் என்று வந்தவர்கள், வீட்டிற்கு வந்தவள், பேச்சில் இறங்கிட, பூர்ணிக்கு அவளின் அப்பா அம்மா பார்த்து பசி மறந்து போனது..

பூ, பழம்… ஸ்வீட்.. ட்ரெஸ்.. நகை என்று அத்தனை வாங்கி வந்திருந்தனர் சந்தியாவும் ராமலிங்களும்…

பாலகுரு இதனை பார்த்தவன், ‘அடடா…’ என்று எண்ணிக்கொண்டான்… இதுவரை, அதாவது திருமணம் முடிந்து இத்தனை நாளில் அவளுக்கென்று ஏதாவது வாங்கியிருக்கிறானா என்றால் தெரியாது தான்.. பூர்ணி பண விசயத்தில் அவனை எதிர்பார்த்தது இல்லை.. அவனோடு ஷாப்பிங் என்று போனால் அவனே பில் பணம் கட்டுவான்.. அதுபோல பிரத்தேயகமாக அவளுக்கென்று ஏதாவது வாங்கியிருக்கிறானா என்றால் இல்லைதான்..

ஆனால் அவள் செய்வாள்.. அடிக்கடி..

‘பாஸ்.. இந்த வாட்ச்… உனக்கு நல்லாருக்கும்னு வாங்கினேன்…’

‘பாஸ்.. இது பாரேன்.. இந்த டீ ஷர்ட் பார்த்தேனா உன்னோட நியாபகம் பச்சக்குன்னு  வந்திடுச்சு…’ என்று அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தே அதனை கொடுப்பாள்..

இதெல்லாம் தோன்ற, ‘நிறைய சொதப்பிருக்க பாலா…’ என்று நினைத்துக்கொண்டான்… ஏதாவது வாங்கிக்கொடுக்கணும் என்று நினைத்தவனுக்கு சட்டென்று எதுவும் தோன்றவில்லைதான்..

எதுவென்றாலும் வாங்கும் வசதி இருந்தது.. ஆனால் யோசிக்கையில் என்ன வாங்குவது என்று ஒன்றுமே புரியவில்லை.. யோசனையாய் அவளையே பார்த்துகொண்டு இருக்க, பூர்ணி அருகில் இருந்த டம்பளர் நீரை பருக்கிக்கொண்டு இருந்தாள்..

‘அச்சோ பசிக்குது சொன்னால்ல..’ என்றெண்ணியவன்,

“ம்மா அவ பசிக்குதுன்னு வந்தா…” என்று சொல்ல, அனைவருமே அவளைத்தான் பார்த்தனர்..

“சொல்லவேணாமா பூர்ணி..” என்று முத்துராணி சொல்லுமுன்னே மைதிலி, “நான் போய் என்ன இருக்குனு பாக்குறேன்.. வந்தும் சாப்பிடலை…” என்று செல்ல,

சந்தியாவும் “இனிமே ஒழுங்கா சாப்பிடனும்…” என்றார் கண்டிப்பாய்..

‘இப்படி மாட்டி விட்டுட்டியே பாஸ்…’ என்று அவனைப் பார்க்க,

“அவனை என்ன பாக்குற??? பசிச்சா யார் இருக்கா இல்லைன்னு எல்லாம் இனிமே பார்க்க கூடாது.. சாப்பிடனும்.. நீயும் போடா.. போய் சாப்பிடு…” என்று முத்துராணி கொஞ்சம் அதட்டலாகவே அனுப்பி வைத்தார்..       

வாழ்வு யாருக்கு எப்போது என்ன வைத்திருக்கும் என்று சொல்லிடவே முடியாது.. எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம்.. அதில் தான் ஒரு திரில்லும் கூட.. பூர்ணி இதைதான் வாழ்வில் உணர்ந்தாள்..

பாலகுரு, அவளின் காதலை ஏற்காதபோது, இனி அவ்வளவுதான் என்று நினைத்தாள்.. திரும்ப அவன் அவளின் வாழ்வில் வந்தபோது, அவனை அவனுக்காகவே அப்படியே ஏற்றுகொண்டாள்.. இப்போது அவனோடான வாழ்வில் சந்தோசமாகவே வாழ்கிறாள்..

இனி வாழ்வில் என்ன இருக்கிறது என்று தெரியாது.. ஆனால் எது இருந்தாலும்.. எது வந்தாலும் அதனை அவளின் ‘பாஸ்..’ உடன் சேர்ந்து கடந்திடுவாள் என்பது அவளுக்குத் திண்ணமே..

அவளுக்கு மட்டுமில்லை.. அவனுக்குமே அதே எண்ணம் தான். மனது ஒருவித நிறைவில் இருக்க, இருவருக்குமே உறக்கம் என்பது இல்லை. வயிறு நிறைய உண்டும் கூட இருவருக்கும் உறக்கம் வரவில்லை..

உறக்கம் வராது அப்படியே எத்தனை நேரம் படுத்திருக்க என்று பூர்ணி “பாஸ்…” என்று சொல்லிக்கொண்டே எழுந்து அமர,

“என்னாச்சு?? என்னாச்சு.. வாமிட் வருதா…??” என்று அவனோ படு வேகமாய் எழுந்துவிட்டான்..

அவனை விசித்திரமாய் தான் பார்த்து வைத்தாள் பூர்ணிமா..

“என்ன பூர்ணி.. வா…” என்று அவள் கை பிடிக்க,

“இல்ல பாஸ்…” என்றவள் தலையை ஆட்ட,

பின்ன என்ன செய்யுது தலை எதுவும் சுத்தின மாதிரி இருக்கா??” என்றதும் பூர்ணி தலையில் தான் கை வைத்துக்கொண்டாள்.

“ஏய் என்னடி?? என்ன பண்ணுது…” இம்முறை பேச்சு அதட்டலாகவே வர,

“நீ பண்றது உனக்கே ஓவரா இல்லையா பாஸ்???” என்றாள் சிரித்தபடி..

“ஏன் ஏன் நான் என்ன பண்ணேன்???”

“நான் கன்சீவா இருக்கேன்னு இன்னிக்குதான் எனக்கே தெரியும்.. அதுக்குள்ள வாமிட் எப்படி வரும்.. இல்லை தலை சுத்தல் எப்படி வரும்…” என்று பூர்ணி சிரித்துக்கொண்டே சொன்னதுமே,

“அப்போ வராதா??!!!!” என்றான் பாவமாய் முகம் வைத்து..

அவன் கேட்ட விதத்திலும், அவன் முகத்தில் தெரிந்த பாவனையிலும் பூர்ணி வயிற்றைப் பிடித்துகொண்டு சிரிக்க,

“ஏய் என்ன டி இப்படி அழுந்த பிடிக்காத…” என்று அவளின் கைகளை தட்டிவிட, அதற்கும் சிரித்து வைத்தாள்..

“பாத்தியா நீ கிண்டல் செய்ற…” என்றவன் “எதுக்கு எழுப்பின.??” என்று கேட்க,

“தூக்கம் வரலை அதான்…” என்றவள்,  “பாஸ்…!!!!” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க,     

“ம்ம் என்ன பூர்ணி…” என்றான் அவனும்..

“நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்…” என்றவள் அவனின் மடியில் படுத்துக்கொள்ள, அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..

அவளுக்கும் அதற்குமேல் பேசத் தெரியவில்லை.. இத்தனை நாளில் இதை அவனிடம் சொல்லியிருக்கிறாளா என்று தெரியாது.. இன்று அவளையும் அறியாது அவள் சொல்லிவிட்டாள்.. அது அவனுக்கும் தெரியும்.. ஆனால் இதற்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை..

தன் மடியில் படுத்திருந்தவளின் ஒரு கரத்தை பிடித்தவன் கொஞ்ச நேரம் அவன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொள்ள, பின் இதழோடு வைத்து அழுத்திக்கொள்ள,  

அவனை மேல் வாக்கில் நிமிர்ந்து பார்த்தவள், மற்றொரு கரத்தால் அவளின் இதழ் தொட்டு அவனுக்கு ஒரு பறக்கும் முத்தம் கொடுக்க,

“நேர்ல தானே இருக்கேன்…” என்றவன் மெதுவாய் அவளைத் தூக்கி தன்மீது சாய்துக்கொண்டான்..

சாய்ந்ததுமே அவனின் கன்னங்களில் பூர்ணி அழுந்த முத்தமிட, “ம்ம் திஸ் சைட்” என்றவன் மற்றொரு புறம் கன்னம் காட்ட, அவளோ அதில் முத்தமிடாமல் லேசாய் கடிக்க,

“ஹா ஹா இப்படிதான் செய்வன்னு தெரியும்..” என்று சிரித்தவன், “நானும் ரொம்ப ரொம்ப ஹேப்பி பூர்ணி…” என்றபடி அவளை அப்படியே அணைத்துக்கொள்ள,     

“ம்ம் ம்ம் பாஸ்…” என்றவள் மேலும் முத்தமிட, அடுத்து அவர்களின் பொழுது எப்படி கடந்ததுவோ ஆனால் பொழுது விடிகையில் இருவருக்கும் முதல் நாள் இருந்த மகிழ்ச்சி சிறிதும் குறையாது இருந்தது..

வழக்கம் போலவே  அன்றைய நாள் தொடங்கினாலும், முத்துராணி “நல்ல சேதி சொல்லிருக்கா.. ஒருதடவ கோவிலுக்கு போயிட்டு வந்துடட்டும்..” என,

பாலச்சந்திரன் “கூட நீங்களும் யாராவது போங்க..” என்றுவிட்டு போனார்..

மைதிலி தான் போகிறேன் என்று சொல்ல, பூர்ணியும் பாலகுருவும் மைதிலியோடு கோவில் செல்ல,

“தேங்கா உடைக்க வேண்டாம்.. பேர் சொல்லி அர்ச்சனை மட்டும் பண்ணிக்கோங்க…” என்று முத்துராணியும் அனுப்பி வைக்க, சரி என்று சொல்லியே வழக்கமாய் செல்லும் அஷ்டலஷ்மி கோவில் வந்தனர்.

அன்று வெள்ளிக் கிழமையாகவும் போக, கோவிலில் கூட்டம் நிறையவே இருந்தது..

“கோவில் ஆபிஸ்ல ஆள் பார்த்துட்டு வர்றேன்.. முன்ன உள்ள போயிடலாம்..” என்று பாலகுரு சொல்ல,  

மைதிலி  “நாங்க அப்படி உட்கார்ந்து இருக்கோம் பாலா..” என்றவர், பூர்ணியை அழைத்துக்கொண்டு கொஞ்சம் நகர்ந்து செல்ல, பாலகுருவும் சரியென்று ஆள் பார்க்கச் செல்ல,

மைதிலியும் பூர்ணிமாவும் அமர்ந்த இடத்திற்கு சற்று தள்ளி நிர்மலா, ரஞ்சித், இவர்கள் இருவரின் அப்பா அம்மா என்று குடும்பம் சகிதமாய் அமர்ந்திருந்தனர்.. அவர்கள் இவர்களை கவனிக்கவில்லை என்றாலும், பூர்ணி பார்த்துவிட, கொஞ்ச நேரம் நிர்மலாவின் முகத்தை தான் பார்த்தாள்..

நிர்மலாவின் முகத்தில் புது பெண்ணிற்கான மகிழ்ச்சி அப்படியே தெரிய, ‘அப்பாடி…’ என்ற ஒரு நிம்மதி பிறந்தது அவளுள்..

ரஞ்சித்தோடு எதுவோ பேசி சிரித்துகொண்டிருந்தவள், தற்செயலாய் இவர்களின் பக்கம் திரும்ப, பூர்ணி வேகமாய் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்..

நிர்மலா மீது பெரிதாய் எந்த அபிப்பிராயமும் பூர்ணிக்கு என்றுமே இருந்ததில்லை.. அதுவும் அவள் பாலகுருவை வேண்டாம் என்றபோது முட்டாளா இவள் என்று எண்ணியவள், இப்போது கொஞ்சநாள் முன் பாலகுருவிடம் நீ ஏன் வரவில்லை என்று கேட்டபோது முட்டாளே தான் இவள் என்று முடிவிற்கு வந்திருந்தாள்..

சிலர் இருப்பார்கள் தான் போட்ட கோலத்தை தானே சரியில்லை  என்று அழித்து விட்டு பின் முன் போல் இல்லை என்று புலம்பி தவிக்கும் ரகம்.. நிர்மலா அப்படியானவளாகவே பூர்ணிக்கு பட்டது..

எது எப்படியோ அவளின் வாழ்வை அவள் வாழட்டும் அவ்வளவே… இப்போது அதில் எவ்வித பிரச்சனையும் இல்லையென்று தெரியவும் கொஞ்சம் நிம்மதி..

நிர்மலாவும் இவர்களை பார்த்தவள், அடுத்து பார்க்காத மாதிரி இருந்துகொண்டாள். கோவில் என்றால் ஆயிரம் பேர் வருவர் போவர்.. அப்படியானதொரு எண்ணம் அவளுக்கு இப்போது..

பாலகுருவும் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்துவிட, அவனும் வரும்போதே நிர்மலா குடும்பத்தினரை கவனித்துவிட்டான் என்பதை பூர்ணி கவனித்திருந்தாள்..

மைதிலி “மெதுவா எழணும்…” என்று சொல்ல, பாலகுரு கை நீட்ட பூர்ணி அவனின் கை பிடித்தே எழுந்தாள் “நானே எழுந்துப்பேன்…” என்று சொல்லிக்கொண்டு..

“ஆனாலும் இப்போ இருந்தே ரொம்ப பண்றீங்க எல்லாம்…” என்று மைதிலியை  பார்த்து சிரிக்க,

“ஆமாமா அப்படித்தான் வா..” என்று அவரும் சொல்ல, பூர்ணிமாவும் பாலகுருவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துகொள்ள அவர்களின் சிரிப்பின் அர்த்தம் அவர்களுக்கு மட்டுமே புரிந்ததாய் இருந்தது..

கோவில் போய்விட்டு, பின் வீடு வந்து இவர்களை விட்டுவிட்டு பாலகுரு ஹார்பர் செல்ல, எங்கேயோ பாண்டியா அனைவரிடமும் தண்டோரா போடாத குறையாக சொல்லியிருந்தான்.. ஆக இவனின் கார் வரவுமே அங்கே வேலை செய்துகொண்டு இருந்தவர்களில் முக்கால்வாசி பேர்

“ண்ணா கலக்கிட்டண்ணா…”

“தலிவா குட்டி தல வர போதா???”

“ட்ரீட்டு இல்லியா ண்ணா..” என்று மாறி மாறி கேட்க, அனைவரையும் சந்தோசமாகவே பார்த்து சிரித்தவன்,

‘என்னடா இதெல்லாம்…’ என்றுதான் பாண்டியவை பார்த்தான்..

‘ஹி… ஹி…’ என்று அவன் தலையை சொரிய, பாண்டியாவை உள்ளே வா என்று சைகை செய்துவிட்டு பாலகுரு அவனின் ஆபிஸ் அறைக்கு செல்ல,

“ண்ணா செம சந்தோசம்ண்ணா…” என்றபடி அவனும் பின்னேயே வர,

“இந்தாடா எல்லாருக்கும் லஞ்ச் வாங்கி கொடுத்திடு..” என்று பணத்தினை கொடுக்க, பாண்டியாவிற்கு அது இன்னமும் சந்தோசம்..

பாலச்சந்திரன், தனபால் எல்லாம் அங்கேதான் இருந்தனர்.. புதிதாய் இரண்டு கப்பல்கள் வாங்க ஏற்பாடு செய்திருந்ததால், அதன் வேலைகள் கொஞ்சம் பார்த்துகொண்டு இருக்க,

பாலகுரு செய்வதற்கு நிறைய வேலை இருந்தாலும், என்ன செய்வது.. எதை செய்வது என்பதுபோல் ஹாயாக அமர்ந்திருக்க,

“என்ன பாலா???” என்றார் தனபால் வேறெதுவும் கேட்காது..

“என்ன சித்தப்பா???”

“இல்லா ஹாயா இருக்கையே அதான் கேட்டேன்..” என்றவர் சிரிக்க,

“சும்மாதான் சித்தப்பா..” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது..

“வேலையை பாருடா…” என்று பாலச்சந்திரனும் லேசாய் புன்னகைத்து சொல்ல, “சரி சரி நீங்க ரெண்டுபேரும் என்னை பார்க்காதீங்க..” என்றவன் அடுத்து தன் வேலைகளை தொடர, நேரம் போனதே தெரியவில்லை.. அடுத்து பூர்ணி அழைக்கும் வரைக்கும்..

அவள் அழைக்கவும் தான் மணி பார்த்தவன் “சொல்லு பூர்ணி…” என்றுசொல்ல,

“மதியம் சாப்பிட கூட வீட்டுக்கு வரலை..” என்றாள் தாங்களாய்..

“ஷ்..!!!! வரணும் நினைச்சேன்.. இங்க எல்லாருக்கும் லஞ்ச் வாங்க சொல்லிருந்தேன்.. எல்லாரோடவும் அப்படியே சாப்பிட்டேன்..” என்றவன் “நீ சாப்பிட்டயா??” என்று கேட்க,

“ஆச்சு ஆச்சு..” என்றவள், “வீட்டுக்கு எப்போ வருவ??” என்றாள் அடுத்து..

“வந்திடுவேன்.. கிளம்பிட்டு இருக்கேன்..”  என்றவன் கிளம்புகையில் தினேஷின் குழந்தை நினைவில் வர,

“ஷ்… மறந்திட்டேன்..” என்று எண்ணிக்கொண்டே அங்கே ஹாஸ்பிட்டல் சென்று பார்த்துவிட்டே வீட்டிற்கு போனான்..

என்னவோ அவனுக்கு அந்த குழந்தையின் உடல் நலனுக்கு உதவுவதில் அப்படியொரு நிம்மதி கிடைத்தது.. அது எதனால் என்று தெரியவில்லை.. ஆனாலும் கிடைத்தது.. அதிலும் இப்போது பூர்ணிமா உண்டாகி இருப்பது தெரியவும், மனதில் ஒரு எண்ணம், இதுபோல் நிறைய செய்ய வேண்டும் என்று..

வீடு போகவே நேரமாகிவிட, “அப்போவே கிளம்பிட்டேன் சொன்ன பாஸ்…” என்று பின்னோடு வந்தாள் பூர்ணிமா..

“இரு பூர்ணி குளிச்சுட்டு வர்றேன்..” என்றவன் குளித்துவிட்டு வர,

“நீ வரவும் சாப்பிடுவேன்னு சொல்லிட்டா.. இனி நீயாச்சு அவளாச்சு..” என்று முத்துராணி சொல்ல, அவனோ முறைத்தான் அவளைப் பார்த்து..

“நீ சீக்கிரம் வருவன்னு நினைச்சேன்..” என,

“முதல்ல சாப்பிடுவோம்…” என்றவன் அமர, அடுத்து அவளும் அமர, எதுவோ பேச வந்தவளை “பேசாம சாப்பிடு..” என்று அதட்டவும் அவளும் அப்படியே உண்டாள்..

உண்டுமுடித்து அறைக்கு வரவும், திரும்பவும் அதே கேள்வி தான் பூர்ணிமாவிடம் “அப்போவே கிளம்பிட்டேன் சொன்ன பாஸ்??” என்று.

கொஞ்சம் ரிலாக்ஸ்டாக அமர்ந்தவன், “இப்படி வா…” என்று அவளையும் அழைத்துக்கொண்டு அமர வைக்க,

அவன் என்னவோ சொல்லப் போகிறான் என்று உணர்ந்து அவனின் முகம் பார்த்து அமர்ந்தாள் பூர்ணிமா.

பாலகுரு ஏற்கனவே தினேஷ் விஷயம் சொல்லவேண்டும் என்றுதானே நினைத்திருந்தான்.. ஆனால் நேரம் தான் அமையவில்லை.. ஆனால் இன்று அதுவே அமைந்திருக்க, முழுதாய் சொல்லிவிட்டான்.. அவன் சொன்னதை எல்லாம் கேட்டதுமே, ‘அவ்வளோ நல்லவனா நீ…’ என்றுதான் பார்த்தாள்..

அது அப்படியே அவனுக்கும் புரிந்ததுவோ என்னவோ, “என்ன என்ன?? நானும் கொஞ்சம் நல்லவன் தான்..” என்று வெறுமனே காலர் தூக்குவது போல் செய்ய,

“நான் என்னிக்குமே உன்னை ஜட்ஜ் பண்ணது இல்லை பாஸ்…” என்றாள் வேகமாய்..

இருவருக்கும் இடையில் இருந்தது ஒரு சாதாரண பேச்சுத்தான், வேறெதையும் பற்றி நினைக்காது இருவரும் பேசிக்கொண்டு இருக்க, பூர்ணி இப்படி சொன்னதுமே அவனின் முகம் அப்படியே மாறிவிட்டது. அவள் சொன்னதற்கு பதிலே சொல்லாது பார்க்க,

“என்ன என்ன???” என்று அவனை போலவே சொன்னவள் “எஸ்.. நான் எப்பவும் உன்னை ஜட்ஜ் பண்ணது இல்லை.. அப்பவும் சரி நீ அப்பா ஆகப்போற இப்பவும் சரி… நீ எப்பிடியோ எப்பவுமே அப்படித்தான் எனக்கு..” இப்போது அவனின் பார்வை அப்படியே வேறுவிதமாய் தான் மாறிப்போனது..

பூர்ணியின் இந்த வார்த்தைகள் கேட்டு அவனின் மனம் உருகித்தான் போனது என்றுதான் சொல்லவேண்டும்..

‘என்னடா சொல்றா இவ??’ என்று பார்த்தவனுக்கு அப்படியே மனமும் பார்வையும் மாறிட,

“என்ன பாஸ்… ட்ரூ..” என்றாள் அவள் இன்னமும் அழுத்தமாய்..

ஆனால் பாலகுரு  வெளியே எதுவும் காட்டாது “நான் இப்போ கேட்டேனா??” என,

“நீ கேட்கலைன்னாலும் நான் சொல்வேன்..” என்றாள் வேகமாய்..  

 

 

 

 

   

Advertisement