குருபூர்ணிமா – 2

பாலகுருவிற்கு தன் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. கண்மண் தெரியாத கோபம்தான்.. யாரேனும் நடுவில் வந்தால் அவர்கள் உயிருக்கு யாரும் உத்தரவாதம் அல்ல.. அப்படியொரு கோபம்.. ஆக்ரோசம்.. தன்னை ஒருத்தி கட்டுப்படுத்துவதா என்று..

அவனின் அம்மா கூட இதுவரைக்கும் எதுவிலும் தலையிட்டது இல்லை.. அப்படியிருக்க இந்த பூர்ணிமா.. அவள்.. ச்சே.. ஒவ்வொரு விசயத்திலும் அவனை எப்படி ஆட்டுகிறாள்…. 

ஆனால் வெறும் கோபம் மட்டும் வைத்து அவன் என்ன செய்ய முடியும்…??

இந்த போஸ் என்பவனை தன் இடத்திற்கு வரவழைத்து சுற்றி வளைத்து பிடிக்க எத்தனை நாட்கள் ஆனது அவனுக்கு.. குருவின் கண்களில் சிக்காது போக்குக்காட்டிக் கொண்டு இருந்தவனை, வரவைக்க எத்தனை வழிகளை மேற்கொண்டான் இவன்..

பாலகுரு ஒன்றும் போஸை அப்படியே சுட்டிருக்கப் போவதில்லை ஆனால் அவனுக்கு மரண பயத்தை காட்ட எண்ணினான்.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவனை கெஞ்ச விட்டு, பின் மிரட்டலோடு விட்டுவிட வேண்டும் என்றுதான் நினைத்திருந்தான்.. ஆனால் அவை அனைத்தையும் ஒரே ஒரு போன் காலில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டாளே என்று பாலகுருவிற்கு பூர்ணிமா மீது அவ்வளவு கோபம் வந்தது..

‘பிசாசு… பிசாசு…’ என்று அவன் வாய் முணுமுணுக்க, ஸ்டியரிங் அவன் கைகளில் படாத பாடு பட்டுக்கொண்டு இருக்க, திரும்பவும் அவனின் அலைபேசி சத்தம் கொடுத்து தான் இருப்பதை காட்டியது..

காரை செலுத்தியபடியே பக்கவாட்டில் திரும்பி அதனை பார்க்க, அதில் மிளிர்ந்த பெயரை கண்டவனுக்கு மீண்டும் கோபம் தலைக்கு ஏற, வேகமாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்

“ஏய் என்ன வேணும் உனக்கு???” என்றான் எரிச்சலாய்..

“ஹா.. ஹா.. பாஸ்.. ரொம்ப ஹாட்டா இருக்கியோ???? இட்ஸ் ஓகே.. பட் நான் எங்க வீட்ல இல்லை.. உன் வீட்ல இருக்கேன்..” என்றாள் இன்னும் இன்னும் சிரித்தபடி..

அவளின் சிரிப்பே அவனை மேலும் மேலும் கொதிநிலை அடைய செய்ய, தன்னை இவள் கண்காணிக்கிறாளோ என்றும் தோன்றியது.. பின்னே எப்படி சரியாய் அவன் அவளது வீட்டிற்குதான் செல்கிறான் என்பதை உணர்ந்து அழைத்திருக்கிறாள்??

கடினப்பட்டே தன் உணர்வுகளை அடக்கியவன் “பூர்ணி.. இனிமேலும் என்னை பாலோ பண்ணாத.. அது உனக்குத்தான் கஷ்டம்…” என,

“ஏன் எனக்கென்ன கஷ்டம்???” என்றவள் “நான் உன்னை பாலோ பண்றேன்னா??? தோடா.. இதென்ன புது கதை.. நான் உன்னை பீல் பண்றேன்னு வேணும்னா சொல்லலாம்…” என்றாள் அவனைப் போலவே உணர்வுகளை அடக்கிய குரலில்..

“ம்ம்ச்…. எத்தனை தடவ சொன்னாலும் நீ திருந்தவே மாட்டியா???”

“ஹா ஹா பாஸ்.. நான் ஒரே ஒருதடவை தான் ப்ரொபோஸ் பண்ணேன்.. பட் நீ தான்… திரும்ப திரும்ப அதையே பேசுற.. வேணாம் சொல்லிட்ட… இப்போ நாளைக்கு இன்னொரு பொண்ணு கூட என்கேஜ்மென்ட்.. அதை பத்தி யோசி.. என்னை பத்தி இல்லை…” என்று கொஞ்சம் இடைவெளி விட்டவள்,

“அண்ட் தென், நான் எது யோசிக்கணும்.. எது யோசிக்கக் கூடாதுன்னு சொல்ற ரைட்ஸ் உனக்கில்ல புரியுதா.. பிகாஸ்  நான்தான் உன்னை லவ் பண்றேன்.. நீயில்ல…” என்றுவிட்டு வைத்துவிட்டாள்..

‘சரியான பிசாசு…’ என்று பல்லைக் கடித்தவனுக்கு, அவள் சொன்ன ‘ஒருதடவை ப்ரொபோஸ் பண்ணேன்…’ காட்சிகள் வந்துபோயின..

பூர்ணிமா.. அப்போது பதினேழு வயது மங்கை… பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எல்லாம் முடித்து கல்லூரி செல்லும் கனவுகளில் இருந்தாள்.. போர் அடிக்கிறது என்று அவளின் தோழிகளோடு பீச் வந்திருக்க, அங்கே கல்லூரி முடித்து பாலகுருவும் அவனின் நண்பர்களோடு பீச் வந்திருந்தான்..

பீச்சில் அவனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.. சுண்டல் விற்கும் பையன் முதற்கொண்டு தெரியும்..

“ண்ணா… புது பைக்கா ண்ணா…” என்று அவனது நியு மாடல் புதிய பைக்கினை ஒருவன் தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்க,

“சோக்காகீதா டா…” என்று தலையை ஆட்டி பேசிய பாலகுரு தான் பூர்ணியின் கண்ணில் பட்டான்..

அவளோடு அவளின் தோழிகளாய் வந்தவர்கள் யாருமில்லை, ஒருத்தி பாலகுருவின் சித்தப்பா மகள் சாருலதா.. இன்னொருத்தி பூர்ணிமாவின் அத்தை மகள் மகிலா..

“அட பாலாண்ணா…!!!!!”  என்று இவர்கள் அவனைப் பார்த்ததும் அவனை நோக்கி வேகமாய் செல்ல, பூர்ணியோ மெதுவாகவே நடை போட்டாள்..

“ஹேய்.. நீங்க எப்போ வந்தீங்க…!!!!!” என்று அவர்களைப் பார்த்தவன், தன் நண்பர்களிடம் இருந்து சற்று விலகி வந்தே பேச, மெதுவாய் ஆடி அசைந்து நடந்து வந்த பூர்ணிமா தான் கவனத்தை ஈர்த்தாள்..

காரணம் அவளை கண்டு முழுதாய் ஓராண்டு…

அவள் வீட்டிலிருந்து பள்ளி செல்லவில்லை.. ஹாஸ்டலில் படித்தாள்.. அதிலும் பன்னிரெண்டாம் வகுப்பு, விடுமுறை நாளுக்கு கூட வீட்டிற்கு விடவில்லை.. அப்படியே அவள் வந்தாலும் இவனை பார்க்கும் வாய்ப்பு எல்லாம் இருந்ததா தெரியவில்லை..

“ஓய் பூர்ணி…!!!! நீயா???!!! குண்டு பேபி….. என்ன இப்படி ஸ்லிம் பியூட்டி ஆகிட்ட…” என்று அவளை இத்தனை நாள் கழித்து பார்க்கும் மகிழ்வில் பாலகுரு என்ன வார்த்தைகளை சொல்கிறோம் என்று உணராது சொல்லிவிட, பூர்ணிமாவின் இதழ்கள் சிரிப்பில் விரிந்ததுவோ என்னவோ, ஆனால் கண்கள் அவனைக் கண்டு அழகாய் விரிந்தது..

“எப்படி இருக்க பாஸ்??!!!!” என்று சிநேகமாய் வந்து அருகே நின்றவளை பார்க்க இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை..

காரணம் பூர்ணிமா ஒருவயதிற்கு மேலே நன்றாய் புசுபுசுவென்று ஆகிவிட்டிருந்தாள்.. இவன் கூட பலமுறை சொல்லியிருக்கிறான் ‘தர்பூஸ்…’ என்று.. ஆனால் இப்போ அழாகாய்.. வடிவாய்.. ஒயிலாய் பார்க்க, அவனாய் நிஜமாய் நம்பவே முடியவில்லை..

‘நீதானா இது…’ என்று பாலகுரு திரும்ப திரும்ப அவளை அப்படியே பார்க்க,

“அச்சோ போதும் பாஸ்……” என்று வேகமாய் அவனின் கரங்களை கிள்ளியவள், தன் தோழிகளை பார்த்து, “அவ்வளோ ஒல்லியாகிட்டேனா???” என்றாள் நம்பாது..

“அவ்வளோ இல்ல.. பட் முன்ன இருந்ததுக்கு கொஞ்சம் மெலிஞ்சு ஷேப் ஆகிட்ட… ” என்று மகிலா சொல்ல,

“ஓஹோ…!!!” என்றவள் திரும்பி பாலகுருவை பார்க்க, அவனோ இவர்களின் சம்பாசனையை கவனிக்காது, சற்று தள்ளி நின்றிருந்த அவனின் நண்பர்களிடம் எதுவோ சைகை மொழி பேசிக்கொண்டு இருந்தான்..

அவன் பேசி திரும்பியதும் “ஓகே பாஸ் நீ போய் உன் பிரண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணு..” என்று பூர்ணி சொல்லவும்,

“ண்ணா.. பீச்சுக்கு வந்தேன்னு அம்மாக்கிட்ட சொல்லிடாத… ப்ளீஸ்…” என்று சாருலதா கெஞ்ச,

“வீட்டுக்கு தெரியாம வந்திருக்கீங்களா??” என்று கேட்டவனின் கண்களில் சின்னதாய் முறைப்பு எட்டி பார்க்க,,

“நான் சொல்லிட்டுதான் வந்தேன்…” என்றாள் பூர்ணிமா..

“ஆமாண்ணா.. போகாத போகாதன்னு அத்தை சொல்ல சொல்ல, நான் பீச் போறேன்னு.. சொல்லிட்டுதான் வந்தா…” என்று மகிலா சொல்ல

“ஆள் தான் மாறியிருக்க பட் உன் பீகேவியர் மாறலை…” என்றவன், “ஓகே வீட்டுக்கு கிளம்புறப்போ சொல்லுங்க.. நானே கூட்டிட்டு போறேன்…” என்று நகர்ந்துவிட்டான்..

அவன் போவதையே சிறிது நேரம் பூர்ணிமா பார்த்துகொண்டு இருக்க, “ஓய் ஓய்.. போதும் டி.. நாங்க இருக்கப்போவே எங்க அண்ணனை சைட் அடிக்கிறியா??” என்று தோழிகள் இருவரும் கிண்டல் செய்ய,

“உங்க அண்ணன் இருக்கப்போவே சைட் அடிப்பேன்.. நீங்க இருந்தா என்ன??” என்று கேட்டவள் அவர்களின் பார்வையில் சத்தமாய் சிரிக்க, கொஞ்ச தூரம் தள்ளி போனவன் திரும்பி இவர்களை பார்த்துவிட்டு புன்னகைத்துவிட்டு சென்றான்…

சொன்னதுபோலவே பாலகுரு தான் திரும்ப இவர்களை அழைத்துப் போனான் வீட்டிற்கு… முதலில் சாருலதாவை அவனின் வீட்டில் இறக்கிவிட்டு, பின் மகிலாவை அவளின் வீட்டில் விட்டு, கடைசியில் இதோ பூர்ணிமாவும் அவனுமாய் சென்றுகொண்டு இருந்தனர்..

பூர்ணிமா அமைதியாய் வர, “என்ன இவ்வளோ சைலென்ட்.. ஹாஸ்டல்ல சைலென்ட்டா இருப்பது எப்படின்னு முப்பது நாள் கிளாஸ் எதுவும் எடுத்தாங்களா???” என்று பாலகுரு சிரித்தபடி கேட்க, அவனை லேசாய் திரும்பிப் பார்த்தவள்,

“ம்ம்ஹும் ஜஸ்ட் தின்க் பண்ணிட்டு இருக்கேன்…” என்றாள்..

“எதைபத்தி…??!!!!!”

“ம்ம்… அதான் தெரியலை… நிறைய யோசனை… அது சரியா தப்பா… எதுவும் புரியலை…” என்றவளின் குரல் அப்படியே சீரியசாக மாறியிருக்க, சாலையில் இருந்த பார்வையை ஒருமுறை அவளை நோக்கி திருப்பியவன்,

“ஏன் என்னாச்சு?? யாரும் பிரச்சனை பண்றாங்களா???!!!” என்றான் வேகமாய்..

“ஹா ஹா  நோ நோ.. என்கிட்டே பண்ண முடியுமா???”

“அதானே..!!! உண்டு இல்லைன்னு ஆக்கிட்டுதானே வருவ நீ..” என்றவனுக்கு இன்னும் சிரிப்பு அப்படியே இருக்க,

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற பாஸ்…” என,

“ஓ..!!! ஓகே ஓகே.. சீரியஸ்…” என்று தனக்குதானே சொல்லிக்கொண்டவன், “நீ பாஸ் சொல்றப்போ என்னவோ கொள்ளை கூட்டத் தலைவன் போல பீல் ஆகுது.. வேணாமே…” என்றான்..

“ஹா ஹா.. இஸ் இட்.. பட் அதுவே பழகிடுச்சு.. மாத்த முடியாது…” என்றவள் சிரித்தே பதில் சொன்னாலும் அவள் வார்த்தைகளில் தெரிந்த உறுதி பாலகுருவிற்கு ஆச்சர்யமாய் தான் இருந்தது..

அவனைவிட  ஆறு வயதேனும் சின்ன பெண்.. அவள் பிறந்ததில் இருந்து பார்க்கிறான் ஒன்றோடு ஒன்றாய் விளையாடி வளர்ந்தவர்கள் என்று தான் அவன் நினைத்திருக்க, பூர்ணிமாவின் பேச்சினில் தெரிந்த மெச்சுரிட்டி அவனை கொஞ்சம் பிரம்மிக்கதான் வைத்தது..        

“ஓ…!!!!!” என்றவன் “ஓகே…” என்று தோள்களை குலுக்குவிட்டு காரை செழுத்த, திரும்ப கொஞ்ச நேரம் அமைதி..

“என்னை டிராப் பண்ணிட்டு சாருவ தான் லாஸ்ட்ட டிராப் பண்ணிருக்கணும்…” என்றாள் திடுமென,

“ம்ம் என்ன சொன்ன??!!!” என்று பாலகுரு அவள் பேசியதை கவனிக்காது திரும்ப கேட்க,

“இல்ல பர்ஸ்ட் என்னை டிராப் பண்ணிட்டு தென் லாஸ்ட்டா சாருவ டிராப் பண்ணிருக்கணும்.. திரும்ப உங்க வீட்டுக்கு போகணும் நீ…”  என்றவளைப் பார்த்தவன், ‘இவளின் பேச்சில் என்ன பொருள் இருக்கிறது…’ என்றுதான் யோசித்தான்..  

“லாஜிக் அதானே…!!!!!”

“உன்னை டிராப் பண்ணிட்டு ராம் மாமாக்கிட்ட ஒரு பைல் இருக்கு.. அப்பா வாங்கிட்டு வர சொன்னார்.. அதான்…”

“ம்ம் அதுவும் நல்லதுதான்..”

“எது??!!!!!!”

“எதுவோ…..” என்றவள் பார்வையை ஜன்னல் புறமாய் திருப்பிவிட்டாள்..

பாலகுருவிற்கு இவள் தான் முதலில் பார்த்த பூர்ணிமா அல்ல என்று ஒவ்வொரு நொடியும் தோன்றிக்கொண்டே இருக்க, “என்ன யோசிக்கிறேன்னு திரும்ப கேட்க மாட்டியா??” என்றாள் அவளாக…

“நீதான் சொல்லணும்…” என்றவன் சொல்லி வார்த்தைகளை முடிக்கவில்லை,

“சொல்லட்டுமா??!!!” என்று முழுதாய் அவன்புரம் திரும்பி அமர்ந்திருந்தாள் பூர்ணிமா..

அவளது செயலை சற்று வித்தியாசமாய் பார்த்தவன் “ம்ம் சொல்லு…” என்றபடி சாலையைப் பார்க்க,

“நான் பீச்ல உன்ன பார்த்தேன்.. அந்த சின்ன பையன்கிட்ட தலையை ஆட்டி எதுவோ பேசிட்டு இருந்த….”

“புது பைக்கான்னு கேட்டான்…”

“ஹ்ம்ம் சோக்கா இருந்துச்சு….!!!!!!” என்று பூர்ணிமா சொல்ல,

“ஹா ஹா நானும் இதேதான் சொன்னேன்…” என்றவனைப் பார்த்தவள், “நீ சொன்னதை நான் கவனிச்சேன்…” என்றாள்..

“ஓஹோ..!!!”

“நீ சொன்ன விதம் அழகா இருந்தது… ம்ம் இல்ல அழகான்னு சொல்ல முடியாது.. பட் எனக்கு பிடிச்சது… ஒருவிசயம் அழகா இருக்கு இல்லைங்கிறது இல்லை.. பட் நமக்கு பிடிக்கணும் அதானே விஷயம்…” என, அவள் எதைப்பற்றி பேசுகிறாள் என்று ஆழ யோசிக்காமல் தலையை ஆமாம் என்று ஆட்ட,

“சோ எனக்கு உன்னை பிடிச்சிருக்கு பாஸ்…” என்று பூர்ணிமா அவனையே பார்த்து சொல்ல, பாலகுருவிற்கு பேச்சு எதிலோ தொட்டு எங்கேயோ செல்வதாய் இருந்தது..

“ம்ம்…” என்றவன் காரை வேகமாய் செலுத்த ஆரம்பித்தான்.

அவனின் வேகம் உணர்ந்தவள் “ஹா ஹா பாஸ்.. பயந்துட்டியா..” என்று பலமாய் சிரித்தவள் “இதான் என் யோசனை.. உன்னை பிடிச்சிருக்கு.. ஏன் எதுக்கு அதெல்லாம் தெரியாது.. இது சரியா தப்பா தெரியாது.. பட் ரொம்பபப பிடிச்சிருக்கு.. சொல்லிட்டேன்…  இப்போ ஐம் ப்ரீ..” என்று மலையை புரட்டி போட்டதுபோல் தன் இரண்டு கரங்களையும் தட்டியவள், நேரே திரும்பி சாலையை பார்த்து அமர்ந்துகொண்டாள்..

பாலகுருவிற்கு வார்த்தைகளே வரவில்லை.. இதற்கு அவனுக்கு என்ன சொல்லவென்றும் தெரியவில்லை.. ஆனால் நிச்சயமாய் அவன் மனதில் அப்படியான எந்தவித உணர்வுகளும் இல்லை.. அது நிஜம்..

‘என்ன இப்படி சொல்லிட்டா…!!!!!!!!!!’ என்ற யோசனையோடு காரை செலுத்த, திடீரென்று சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்..

அவன் வீடு வந்திருந்தது…

“ஓ..!!! காட்.. இவளைப் பத்தி யோசிச்சாலே….” என்று லேசாய் ஸ்டியரிங்கில் குத்தியவன், வாட்ச்மேன் வந்து வாசல் கேட்டினை திறக்க ஹாரன் அடித்தான்..

அடுத்த இரண்டு நொடிகளில் கேட் திறக்கப்பட, வேகமாய் உள்ளே சென்று காரை நிறுத்தியவன் அதனினும் வேகமாய் வீட்டினுள் நுழைய, அங்கே ஹாலினுள் பக்கவாட்டில் இருந்த ஒரு சோபாவில், பூர்ணிமா சாருலதா மகிலா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, பாலகுருவின் பார்வை மொத்தமும் பூர்ணிமாவை முறைத்தபடி இருந்தது..

அவன் வந்ததுமே அவனைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்தவள், அதன்பின் கண்டுகொள்ளாமல் இருக்க, அவளை முறைத்துகொண்டே பாலகுரு அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்..                     

மகன் வந்ததை கவனித்த முத்துராணியோ “அவ வந்திருக்கா மைதிலி.. எதுக்கும் ஒரு பார்வை அவமேல இருக்கட்டும். இருந்திருந்து அவனுக்கு ஒருத்திய பிடிச்சி நாளைக்கு நிச்சயம்னு பண்ண போறோம்.. எந்த விதமான பேச்சும் வந்திட கூடாது..” என்று பூர்ணிமா மீது பார்வையை வைத்தபடியே, மைதிலியிடம் காதை கடித்த முத்துராணி பாலகுருவை பார்க்கவென்று அவனின் அறைக்கு சென்றார்..

அவர் செல்வதற்காகவே காத்திருந்த பூர்ணிமாவோ, மைதிலியை நோக்கி புன்னகையோடு வர ‘ஐயோ வர்றாளே…’ என்றுதான் பார்த்தார் மைதிலி..

“என்ன சின்னத்தை.. அப்படி பாக்குறீங்க…??” என்று அதே சிரிப்போடு கேட்டவள்,

“பெரியத்தை என்னை பார்த்ததுமே டென்சன் ஆகுற அளவுக்கு நான் எதுவும் பண்ணலையே…” என்று அங்கிருந்த தட்டில் அடுக்கி வைத்திருந்த ஆப்பிளை தூக்கி போட்டு பிடிக்க,

“ஷ்…. பூர்ணி.. என்ன பேச்சு இது…” என்று வேகமாய் அவளின் கரங்களில் இருந்து ஆப்பிளை பறித்தவர், அவளைத் தான் பார்த்தாள், எதுவும் சொல்வாளோ என்று..

ஆனால் பூரணியோ இன்னும் அதே சிரிப்போடு இருக்க, மைதிலி இத்தனை நாள் மனதில் அழுத்திய கேள்வியை கேட்டே விட்டார் “எப்படி உன்னால சிரிக்க முடியுது..??” என்று..

“ஏன்?? ஏன் நான் சிரிக்க கூடாதா????!!!!”

“இல்ல.. அது.. நீ… வந்து…” என்றவர் சுற்றி முற்றி பார்த்து யாருமில்லை என்று தெரிந்து, “நீ குருவ லவ் பண்ணின தானே…” என்று மெதுவாய் கேட்க,

அவளும் அதுபோலவே சுற்றி முற்றி பார்த்து “அவனுக்கு கல்யாணமாகி குழந்தையே பிறந்தாலும் நான் அவனை லவ் பண்ணுவேன்…” என்று சொல்லி பூர்ணி கலகலவென்று சிரிக்க, அவளது சிரிப்பில் மைதிலிக்கு வயிறு கலங்கியது தான் மிச்சம்..

‘என்ன செய்ய காத்திருக்கிறாளோ….’ என்று அவளை அரண்டு போய் பார்க்க,

“டோன்ட் வொர்ரி சின்னத்தை.. நான் எதுவும் செய்ய மாட்டேன்..” என்றவள் அவள் தூக்கிப் போட்டு பிடித்த அப்பிளை திரும்பவும் எடுத்து தூக்கி போட்டு கையில் பிடித்தபடி நகர,

‘கடவுளே இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கோ…’ என்று நினைத்துகொண்டார் மைதிலி..

மைதிலியும், முத்துராணியும் ஒன்றுவிட்ட அக்கா தங்கைகள்.. பாலச்சந்திரனுக்கு முத்துராணியை திருமணம் பேசி முடிக்கவுமே, அவரின் தம்பி தனபாலுக்கு மைதிலியை அடுத்து பேசிவிட்டனர்..

பூர்ணிமா வேறு யாருமில்லை,  முத்துராணி, மைதிலி இருவருக்குமே சற்று தூரத்து உறவு தான்.. ஆனால் பூர்ணிமாவின் அப்பா, ராமலிங்கமும் பாலச்சந்திரனும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதால் உறவு இன்னும் நெருங்கி பலப்பட்டு விட்டது..

என்னவோ முத்துராணிக்கு ஆரம்பத்தில் இருந்தே பூர்ணிமாவை பிடிக்காது.. காரணம் அவருக்கே தெரியாது.. ஆனால் பிடிக்காது.. பூர்ணிமா கொஞ்சம் துடுக்கென்று பேசுவாள்.. அவளைப் பொருத்தமட்டில் இவர்கள் எல்லாம் என் உறவினர்கள் என்ற எண்ணத்தில் உரிமையாய் பேசுவாள் ஆனால் அது முத்துராணிக்கு பிடிக்கவே பிடிக்காது..

அதையும் தாண்டி அவள் பாலகுருவோடு பழகுவது.. அடி வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு அலையும் நிலைதான் முத்துராணிக்கு.. பாலகுருவின் திருமண பேச்சு எடுத்து, பாலகுரு பார்க்கும் எந்த பெண்ணையும் வேண்டாம் வேண்டாம் பிடிக்கவில்லை என்று சொல்லவும் முத்துராணி வெகுவாய் கலங்கித்தான் போனார்.

பாலச்சந்திரன் கூட “பேசாம நம்ம பூர்ணியை இவனுக்கு பேசினா என்ன???” என்று ஒருநாள் கேட்டுவிட, அன்றெல்லாம் தலைவலி வந்து படுத்துக்கிடந்தார்..

மைதிலிக்கு தெரியும் பூர்ணிமா பாலகுருவை விரும்புவது.. ஆக அவரும் கேட்டார், “ஏன் க்கா வேணாம் நினைக்கிறீங்க.. நம்ம பார்த்து வளர்ந்த பொண்ணு தானே…” என்று..

முத்துராணியோ “இல்ல மைதிலி.. அவளுக்கும் நல்லவன் அமையட்டும்.. என் மகனுக்கும் நல்ல பொண்ணு அமையட்டும்.. ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் வேணாம்…” என்று திடமாய் மறுத்தவருக்கு,  பாலகுரு நிர்மலாவின் போட்டோ பார்த்து சரி என்று சொன்ன பிறகுதான் நிம்மதியே ஆனது…

ஆனாலும் ஒவ்வொரு முறையும் பூர்ணிமாவை பார்க்கும்போதெல்லாம் மனதில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு நெருடல் முத்துராணிக்கு இருந்துகொண்டே இருக்கும்.. காரணம் தெரிந்தால் கூட அவர் சும்மா இருப்பார்.. காரணத்தை தேடி தேடியே அவளைப் பற்றிய சிந்தனைகள் அவருக்கு ஜாஸ்தி..

நாளைதான் நிச்சயம், ஆனாலும் வீட்டினில் இன்றே உறவினர்கள் எல்லாம் வந்திருக்க, பாலகுருவும் இந்நேரம் வீட்டிற்கு வந்திருக்க, எங்கே அனைவரின் முன்னும் பூர்ணிமா பாலகுருவை தேடி வந்து அறைக்கே பேசுவாளோ என்று நினைத்துதான் அவர் மகனை தேடி வந்தது.. ஆனால் பூர்ணிமாவோ இருந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.. 

மாறாக பாலகுருதான் “ம்மா.. போய் பூர்ணிக்கிட்ட அவ போன் வாங்கிட்டு வா…” என்றான்..

“என்னடா?? எதுக்கு அவ போன்??” என்று முத்துராணி பதற்றமாய் கேட்க,

“வேணும்.. வாங்கிட்டு வா.. நானே எடுத்துப்பேன் போய்.. ஆனா வேண்டாத சீன் ஆகும்.. நீ வாங்கி தா.. ஆனா நான் கேட்டேன்னு சொல்லாத…” என, அவருக்கு புரியவேயில்லை..

அவளின் அலைபேசி எதற்கு இப்போது அதுவும் இவனுக்கு அதில் என்ன இருக்கு?? என்ற கேள்வி..

“அதெல்லாம் முடியாது. சும்மா இதென்னா சின்ன பசங்க மாதிரி விளையாடிட்டு..” என்று கடிந்தார்..

“சரி நானே போய் எடுக்கிறேன்…” என்று பாலகுரு வெளியே வர, பூர்ணிமா அங்கில்லை..