Advertisement

“ஓ..!!!” என்றவன் வேகமாய் முத்துராணியை தேடிப் போக, பூர்ணிக்கு சட்டென்று அப்படியே உற்சாகம் வடிந்து போனது..

மிக மிக மெதுவாகவே அவன் பின்னே செல்ல, பால்குருவோ “என்னம்மா டெஸ்ட் எல்லாம் முடிஞ்சதா டாக்டர் என்ன சொன்னாங்க??” என்று வினவிக்கொண்டே போக,  முத்துராணி அவனையும் அவனின் பின்னே சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு வந்த பூர்ணியையும் பார்த்தவர்,

என்ன நினைத்தாரோ “எல்லாம் நல்லாத்தான்டா இருக்கு…” என்றவர் திரும்ப மருமகளின் முகம் பார்க்க,  அவளோ “கிளம்பலாமா பெரியத்தை??” என்றாள்..

“இல்ல பூர்ணி…” என்று அவர் இழுக்கும் போதே, “வீட்டுக்கு போலாம் பெரியத்தை..” என்று திரும்ப சொல்ல,

“ம்ம் சரிம்மா நீங்களும் அப்படியே கிளம்புங்க.. நான் ஹார்பர் போறேன்..” என்று பாலகுரு சொல்ல,

“டேய் என்னடா?? பின்ன எதுக்கு இங்க வந்த??” என்றார் மகனிடம் சற்று எரிச்சலாய்..

“தெரிஞ்சவங்க பேபி இங்க அட்மிட் பண்ணிருக்காங்க.. பார்க்க வந்தேன்..” என்றவன், கிளம்பும் நோக்கில் இருக்க,

“யார் குழந்தை.?? என்னாச்சு??” என்றவரின் பார்வை மகன், மருமகள் இருவரையும் மாறி மாறி பார்த்தது..

“ம்மா.. எல்லாத்தையும் இங்கயே சொல்லணுமா?? வீட்டுக்குத் தான் கிளம்பினேன்.. போன் வந்தது அப்படியே இங்க வந்துட்டேன்.. சரி உங்கள பார்த்தாச்சுள்ள.. திரும்ப ஹார்பர் போறேன்…” என்றவன் பூர்ணியின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே கிளம்பிட,  

முத்துராணி கூட ‘என்ன இப்படி??’ என்று பார்த்துகொண்டு தான் இருந்தார்..

அவருக்கு அவனை பிடித்து நிறுத்த வேண்டும், இப்படி விஷயமென்று சொல்லவேண்டும் என்பதெல்லாம் தாண்டி, பூர்ணி ஒருமாதிரி நிற்க, அவருக்குமே வீட்டிற்கு சென்றுவிடுவோம் என்றுதான் தோன்றியது..

“நீ ஒன்னும் நினைக்காத பூர்ணி.. அவன் வீட்டுக்கு வரட்டும்.. எப்படியும் ஹார்பர் போனா அங்க விரட்டி விட்டுடுவாங்க…” என்றுசொல்லி அவளையும் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார்..

காரில் பூர்ணி எதுவும் பேசவில்லை.. கண்களை மூடி சாய்ந்துகொண்டவளுக்கு அழுகை வருவது போலிருந்தது. எப்பேர்பட்ட விஷயம்.. மருத்துவமனையில் அவனைப் பார்த்ததும், அவளுக்கு எத்தனை பூரிப்பாய் இருந்தது.. ஒரு வார்த்தை.. ஒரே ஒருவார்த்தை நின்று என்ன என்று கேட்டிருந்தால் போதுமே..

அதற்கு கூடவா அவனுக்கு நேரமில்லாது போனது.. இல்லை இல்லை மனமில்லாது போனது என்று தோன்றியதும், மனம் மேலும் வருந்த,

“ம்ம்ச் பூர்ணி.. இது சந்தோசமா இருக்கவேண்டிய நேரம்…” என்று அதட்டினார் முத்துராணி..

பாலகுருவிற்கு திரும்ப ஹார்பர் செல்கையில் “என்னாச்சு இவளுக்கு.. திடீர்னு அப்படியே டல்லாகிட்டா.??” என்ற யோசனையே…

ஹார்பர் போய் கார் நிறுத்தியதுமே, பாண்டியா ஓடி வந்தவன் “ண்ணா…. செம செம செமண்ணா…” என்று சொல்லி கை குலுக்க,

“என்னடா???” என்றான் ஒன்றும் புரியாது..

“போ ண்ணா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி தான்…” என்று சொல்லும் போதே, தனபால் வந்தவர் “டேய் மகனே…” என்று அவனை அணைத்துக்கொள்ள,

“என்ன சித்தப்பா???!!” என்றான அப்போதும் புரியாது..

இவர்களின் சத்தம் கேட்டு பாலச்சந்திரன் வெளியே வந்தவரோ “டேய் இன்னும் நீ ஸ்வீட் வாங்கிட்டு வரலையா??” என்று பாண்டியவை விரட்டியவர்,

“ரொம்ப சந்தோசமா இருக்கு பாலா…” என்றுசொல்ல,

“அப்பா நீங்களாவது என்னன்னு சொல்லுங்கப்பா…” என்றான் எரிச்சலாய்..

இன்ன விஷயம் என்று சொல்லாது, இப்படி ஆளாளுக்கு ஒன்று சொன்னால் எப்படி அவனுக்கு… மற்ற இருவருமே அவனை விசித்திரமாய் பார்த்து “உனக்கு ஒண்ணுமே தெரியாதா???” என்று ஒன்றுபோலவே கேட்க,

“என்னன்னு சொன்னாதானே தெரியும்…” என்றான் அப்போதும் அதே எரிச்சலோடு..

“டேய் இப்போ நீங்க எங்க போயிட்டு வர்ற?? வீட்டுக்குத்தானே…” என்று தனபால் கேட்க,

“இல்ல சித்தப்பா…” என்றவன், தினேஷின் குழந்தை என்றுசொல்லாது, முத்துராணியிடம் சொன்னதுபோல் சொல்ல,

“ஓ..!! அங்க வேற யாரையும் பார்க்கலையா நீ..” என்றார் பாலகுரு..

“அம்மாவும் பூர்ணியும் செக்கப் வந்தாங்கப்பா…”  என, திரும்பவும் அண்ணன் தம்பி இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொள்ள,

“அவங்க எதுவும் சொல்லலையா???” என்றனர்..

“சோ..!!! என்னதான் நடந்துச்சு???” என்று பாலகுரு சத்தம் கூட்டவும் தான் பாலச்சந்திரன் விசயத்தை சொல்ல,

“என்னது???!!!!!!” என்று அதிர்ந்தே போனான் இவன்..

அவனுக்கு சுத்தமாய், கொஞ்சம் கூட, இதை பற்றிய ஐடியாவே இல்லை.. இதை கேட்டதும் அப்படியே பூர்ணியின் முகமே மனதினில் வந்துபோக, அப்படியே நின்றுவிட்டான்..

“டேய் அப்போ உனக்கு நிஜமாவே தெரியாதா???” என்று தனபால் கேட்க,

“சித்தப்பா….” என்றான் சத்தமாய்..

அவனுக்கு இன்னமுமே தான் என்ன உணர்கிறோம் என்றே விளங்கவில்லை.. உடனே பூர்ணியை  பார்க்கவேண்டும் என்பதுமட்டுமே தோன்ற “நா… நான் வீட்டுக்கு போறேன்…” என்றவன் வேகமாய் காரில் ஏற,

“டேய் இரு.. நீ இப்படி டிரைவ் பண்ண வேணாம்.. நானும் வர்றேன்..” என்று பாலச்சந்திரன்கிளம்ப,

“நீங்க தனியா வாங்கப்பா…” என்றவன் கிளம்பியேவிட்டான்..

அவனுக்கு இருப்புகொள்ளவில்லை.. கார் பறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.. ‘பூர்ணி….. பூர்ணி…’ என்று உதடுகள் முணுமுணுக்க, அவள் அவனைப் பார்த்து அருகே வந்து நின்றது, பின் கிளம்புகையில் எப்படியோ சோர்வாய் பார்த்தது எல்லாம் கண் முன்னே தோன்ற,

“ச்சே… சொதப்பிட்ட டா பாலா…” என்று அவனே அவனை திட்டிக்கொண்டான்..

எத்தனை வேகத்தில் வீட்டிற்கு போனானோ, வீட்டினுள்ளே நுழையவுமே “ஏன்டா இப்படி பண்ற??? நீ தெரிஞ்சுதான் வந்திருக்கன்னு நினைச்சா இப்படிதான் செய்றதா…” என்று முத்துராணி கடிய,

அவனுக்கு  சப்பென்று ஆகிப்போனது.. உள்ளே வந்ததுமே இப்படியா என்று.. ஆனாலும் கண்கள் பூர்ணியைத் தேட,

“என்ன பாக்குற?? எவ்வளோ சந்தோசமா வந்திருப்பா உன்னை பார்த்ததும்.. நின்னு என்னனு கேட்க முடியாதா உனக்கு???” என்று திரும்ப முத்துராணி அவனை திட்ட,   

“ம்ம்ச் ம்மா நான் வேற ஒரு வேலையா தான் வந்தேன்…” என்று பாலகுரு சொல்லிட, அவனுக்குமே நிஜமாய் அவனை எண்ணியே ‘ச்சே இப்படி பண்ணிட்டோமே…’ என்றுதான் இருந்தது.

முத்துராணி பேசுகையில் அவரைக் கடந்து பூர்ணியை தேடி செல்லவும் முடியவில்லை.. அதற்குமேல் நின்று அவருக்கு பதில் சொல்லவும் முடியவில்லை.. ஒருவித தவிப்போடு அவன் நிற்க, அதனை கவனித மைதிலி,   

“சரிக்கா விடுங்க…” என்றவர், “போ பாலா.. போய் பூர்ணிய பாரு.” என்று சொல்ல, அப்படியே ஓடாத குறையாய் அறைக்குச் சென்றுவிட்டான்..

அங்கேயோ பூர்ணி ஜன்னல் பக்கமாய் இருந்த திவானில் படுத்திருக்க, “பூர்ணி…” அவளின் அருகே வேகமாய் பாலகுரு போக,  அவனின் கார் சத்ததிலேயே கண்டிருந்தால் வந்துவிட்டான் என்று..

இப்போது உள்ளே வந்ததும், அதுவும் அவளின் அருகே வந்ததும், ஒன்றுமே சொல்லாது அவனையே பார்க்க,

“ஹே ஹே சாரி சாரி.. நான் பிராமிஸா இப்படின்னு நினைக்கலை..” என்றவனுக்கு அப்பட்டமாய் சந்தோஷ உணர்வு முகத்தினில்..

பூர்ணிக்கும்மே அப்போது அவனிடம் சண்டையிட மனமில்லை.. வருத்தம் இருந்தது ஆனால் கோவமில்லை… ஆனாலும் பேசாது அவனையே பார்க்க,

“பேசு டி…” என்றவன் இன்னமும் அவளை நெருங்கி அமர,

“இடிக்காத போ…” என்றாள் கொஞ்சம் சத்தமாய்..

“அச்சோ சாரி..” என்று வேகமாய் அவன் எழுந்திட, அவனை அப்போதும் பார்த்தவள், “இடிக்காதன்னு தானே சொன்னேன்..” என, திரும்ப அவளின் அருகே அமர்ந்து கொண்டவனுக்கு என்ன கேட்க என்றும் புரியவில்லை..

கொஞ்ச நேரம் அப்படியே அவளின் கை பிடித்து அமர்ந்திருக்க, பின் கொஞ்ச நேரம் அவளின் வயிற்றினில் கை வைத்துகொள்ள, பூர்ணி அப்போதும் அவனையே பார்த்துகொண்டு இருக்க,

“ஏதாவது பேசு டி…” என்றவனின் குரலில் அப்படியொரு குழைவு..

“என்ன பேச??”

“ஏதாவது….” என்றவன் “நீ என்னை பிடிச்சு நிறுத்திருக்கலாம்ல…” என்று குறைபட,

“நீதான் நிக்காம போனியே…” என்றவள், “இத்தனை நாள் பேசலை…” என்றாள்..

“அது… அது.. அதெல்லாம் தான் விடேன்…” என்றவனும் திவானில் சாய்ந்துகொள்ள,

“அதெல்லாம் விட முடியாது…” என்றவள் “இப்போ மட்டும் வந்திருக்க…” என,

“நீதான் என்னை தப்பு தப்பா பேசுற..” என்றான் சிறுவன் போலவே..

“என்னது நானா??!!!!!” என்று அதிர்ந்தவள், “ஏன் பாஸ்… நான் உன்னை தப்பா நினைக்கிறேன் நினைக்கிறேன்னு சொல்லி சொல்லி இப்.. இப்போ நீ என்னை தப்பா நினைச்சிட்டல்ல…” என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் துளிகள்..

ஆனால் அதனை அவன் முன் காட்ட விரும்பாமல், முகத்தினை திருப்பிக்கொள்ள “ஹேய்… பூர்ணி.. சத்தியமா சொல்றேன்… எனக்கு அப்படியெல்லாம் இல்லை..” என்றவனின் குரலில் ஒரு யாசிப்பு இருக்க,

“பின்ன எனக்கு மட்டும் அப்படியா???” என்றவளின் குரல் இன்னும் கரகரப்பாய் இருக்க,

“நீ முதல்ல இப்படி அழறத நிறுத்து…” என்றவன், மெதுவாய் அவளின் நெற்றியில் முத்தமிட “ஒன்னும் வேணாம் போ…” என்று சிணுங்கினாள்.

Advertisement