Advertisement

குருபூர்ணிமா – 19

பாலச்சந்திரன் அப்படி சொல்லவுமே பாலகுருவிற்கு எரிச்சல் மூண்டது தான்.. அவள்தான் புரிந்துகொள்ளாது பேசுகிறாள் என்றாள், இவருமா இப்படி என்று.. ஆனால் அதனை அப்படியே அவரிடம் காட்ட முடியாதே,

“இப்போ என்னதான்ப்பா செய்ய சொல்றீங்க???” என்றவனை நெற்றி சுருக்கி பார்த்தவர்,

“கல்யாண வாழ்க்கை அவ்வளோ லேசில்ல பாலா.. அது தெரிஞ்ச பொண்ண பண்ணாலும் சரி.. தெரியாத பொண்ண பண்ணாலும் சரி.. உனக்கு சொல்ல வேண்டியதில்லைன்னு நினைச்சேன்..” என்றவர், “வீட்டுக்கு போ..” என்று சொல்ல,    

“ம்ம் ம்ம்…” என்றுவிட்டு கிளம்பினான்..

வீட்டிற்கு போயும் கூட அவன் அப்படியொன்று பூர்ணியோடு பேசிவிட போவதில்லை.. ஆனாலும் அவர் சொல்வதற்காக கிளம்பினான்.. இல்லையெனில் அடுத்து தனபால் வந்தும் ஏதாவது சொல்வார்.. அவர் இவருக்கெல்லாம் மேலே..

‘ரொம்ப பண்ணாதடா.. பூர்ணி உன்னை கல்யாணம் பண்ணதே பெருசு…’ என்றுதான் ஆரம்பிப்பார். பாலச்சந்திரன் ஒரு ரகம் என்றால் தனபால் இன்னொரு ரகம்.  அதற்கு சும்மாவாது வீடு போய் வருவோம் என்றுதான் கிளம்பினான்.

ஆனால் அவன் கிளம்பும் முன்னமே தனபால் அங்கே வந்திட, பாலகுருவோ லேசாய் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு கிளம்ப,

“குரு வீட்டுக்கா போற??” என்று வினவ,

“ஆமா சித்தப்பா??” என்றவனை மேலும் கீழுமாய் பார்த்தவர்,

“ம்ம் நல்லது கிளம்பு…” என்றுவிட்டு உள்ளே போகவும் ‘எல்ல்லாம் என் நேரம்..’ என்று தன்னை தானே நொந்துகொண்டு காரினை நோக்கி போனான்..      காரில் அமரும்போதே அவனின் அலைபேசி சிணுங்க, எடுத்துப் பார்த்தவன் ஒரு யோசனையோடு தான் “ஹலோ…” என்றான்..

தினேஷின் மனைவி, வனிதா தான் அழைத்தது.. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் கேள் என்று அவனின் எண்ணை கொடுத்திருந்தான்..

அன்று இவனும் பாண்டியாவும் தானே அவர்களின் வீடு சென்றனர் தானே.. அவர்களின் தெருவில்  பாலகுருவின் கார் செல்லும் போதே, அனைவரின் பார்வையும் அதன்மீதே இருக்க, ஒருநிலைக்கு மேலே கார் போக முடியாத அளவு இருந்தது அந்த தெரு..

“ண்ணா இதுக்குத்தான் சொன்னேன் வேணாமின்னு…”

“ம்ம்ச் அதில்லடா..” என்றவன் காரை நிறுத்தி இறங்க,

“ண்ணா நான் போய் இட்டுன்னு வர்றேன்..” என்று பாண்டியா கிளம்பினான்..

“டேய் டேய் அதெல்லாம் வேணாம்.. சரியா வராது…” என்றவன் அவனோடு சேர்ந்து வேகமாய் நடக்கத் தொடங்கினான்..

‘இப்படியான இடத்தினில் எப்படித்தான் வாழ்கிறார்கள்..’ என்று தோன்றியது அவனுக்கு..

ஆனாலும் அங்குள்ளவர்களும் மனிதர்கள் தானே.. எங்களுகுக்கான சொர்க்க பூமி இது தான் என்பதுபோல் அவர்கள் பாட்டில் அவர்களுண்டு அவர்கள் வேலையுண்டு என்றுதான் இருந்தார்கள்.. ஆனால் பாலாவிற்கு தான் என்னவோபோல் இருந்தது..

அந்த இடத்தினில் அவனால் நிச்சயமாய் ஒட்டவே முடியாது.. ஆனாலும் ஒருவருக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் வந்தாகிவிட்டது. அதனை முழுதாய் செய்திடவேண்டும் என்ற உறுதியினால் மட்டுமே அவன் இங்கு வந்தது.. தினேஷின் வீடு போனாலோ,   இன்னும் மனது ஒருமாதிரி இருந்தது.. தினேஷின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என்றும் புரிந்தது.. வனிதாவோ இவர்களை பார்த்ததும் பயந்து போய் பார்க்க,

“இல்லல்ல நீங்க பயப்பட வேண்டாம்..” என்றவன் பாண்டியாவை பார்க்க,

“யம்மா… நாங்க உதவி செய்யலாம்னு தான் வந்திருக்கோம்…” என,

“இல்லங்க வேண்டாம்.. ஏற்கனவே அவர் செஞ்ச வேலைக்கு, ரொம்ப பார்த்துட்டோம்..” என்று வனிதா தயக்கவும் கட்டவும், உள்ளிருந்து தினேஷின் அம்மா வந்தார், கையில் வனிதா தினேஷின் குழந்தை.. எப்படியும் இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும்.. ஆனால் மிகவும் மெலிந்துபோய் பார்த்தாலே தெரிந்தது அதற்கு உடல் நலமில்லை என்று..

“குழந்தைக்கு என்ன???” என்றவனின் பார்வை அந்த குழந்தையின் மீதே இருக்க, அதுவோ புதிதாய் ஒருவரை பார்க்கும் பாவனை காட்ட,

திரும்பவும் கேட்டான் “என்னாச்சு???” என்று..

“என்னாத்த சொல்றது சாரு… கொழந்தைக்கு சத்தா கொடுக்கணுமாம். ஆசுபத்திரில பத்து நாலாவது இருக்கனுமாம்.. அதுக்கு நாங்க எங்க போறது.. தினேஷ் இருந்தான்னா இன்னாமாது வாங்கின்னு வருவான்.. இப்போ அதுக்கும் ஆப்பாகி போச்சு…” என்று தினேஷின் அம்மா சொல்ல,

“ம்ம்ச் இப்போ இன்னாத்துக்கு நீ வெளில வந்த.. போ உள்ள…” என்று கடிந்தாள் வனிதா..

பாலகுருவிற்கு என்ன சொல்வது, அவர்களிடம் எப்படி பேசுவது என்றெல்லாம் தெரியவில்லை. கையில் பணம் கொண்டு வந்திருந்தான் தான்.. ஆனாலும் அவன் நினைத்ததை விட இங்கே நிலைமை மோசமாய் இருந்தது..

“தப்பா எடுதுக்கவேண்டாம்.. இப்போதைக்கு இந்த பணத்தை வச்சு ட்ரீட்மென்ட் பாருங்க..” என்று பணத்தினை நீட்ட, வனிதா வாங்கவே மறுத்தாள்..

“இன்னாமே சொம்மா.. கொழந்தைக்காக வாங்கு…” என்று தினேஷின் அம்மா சொல்ல, அவளுக்கு அப்போதும் மனம் வரவில்லை..

“எப்போ எந்த ஹெல்ப் வேணாலும், இந்த நம்பர்க்கு கூப்பிடுங்க.. அப்புறம் இது எங்க பேமிலி டாக்டர் ஹாஸ்பிட்டல்.. நான் சொல்லிடுறேன்.. போய் குழந்தையை காட்டுங்க..” என்றவன் அவனின் கார்ட்டையும், மருத்துவமனையின் கார்ட்டையும்  சேர்த்து பணத்தோடு அங்கே இருந்த ஸ்டூலில் வைத்தவன், அப்படியே கிளம்பியும்விட்டான்..

இதெல்லாம் பூர்ணியிடம் சொல்லவேண்டும் என்றுதான் வந்தான்.. ஆனால் அதற்குள் அவளும் வார்த்தைகளை நிறைய விட, இருவருக்கும் இடையில் மறுபடியும் பேச்சு வார்த்தை நின்றுபோனது.. இதோ இன்றேனும் வீடு செல்ல கிளம்ப, இடையில் இப்படியொரு அழைப்பு..

வனிதா சொன்னதை கேட்டதும்,   அடுத்த நிமிஷம் “ஓகே வர்றேன்…” என்றுவிட்டு வேகமாய் காரை செலுத்த, அந்த மருத்துவமனை சென்று சேர்வதற்குள் அவனுக்கு மனது கொஞ்சம் அடித்துக்கொண்டது தான்.. கொஞ்சம் டென்சனாகவும் இருந்தது..

பாண்டியாவை கூட அனுப்பியிருக்கலாம் தான்.. ஆனால் என்னவோ தானே செல்வது தான் சரி என்று பட, வருகிறேன் என்றும் சொல்லிவிட்டான்.. அவர்களுக்கு தெரிந்த மருத்துவமனைதான்.. ஆனாலும் உள்ளே சென்று தினேஷின் குடும்பத்தை பார்க்கும்வரைக்கும் மனது அதிர்விலேயே இருந்தது..

அத்தனை பெரிய மருத்துவமனை என்பதால், அதுவே ஒரு பயம் கொடுக்க, போதாத குறைக்கு அவளின் குழந்தைக்கு வேறு ரொம்பவும் முடியாதிருக்க, தன் மாமியாரோடு பயந்து போயே அமர்ந்திருந்தாள் வனிதா..

பாலகுருவை பார்த்ததும் அவர்கள் இருவரும் எழுந்து நிற்க, “என்னாச்சு?? டாக்டர் என்ன சொன்னாங்க??” என,

“காலில இருந்தே ஒரே வாந்தி சாரு. சோர்ந்து சோர்ந்து விழவும் தான் இங்க இட்டுனு வந்தோம்…” என்று தினேஷின் அம்மா சொல்ல, வனிதாவோ அழவே தொடங்கிவிட்டாள்..

“ஓ..!!!” என்றவன், “நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வர்றேன்…” என்று டாக்டரை பார்க்க போக, அவரோ “பேபி கண்டிப்பா ஒரு ட்வென்ட்டி டேஸ் அப்சர்வேஷன்ல இருக்கணும்.. ரொம்ப வீக்கா இருக்கு..” என்றுவிட்டார்..

அதன்பின் விஷயத்தை மெதுவாய் வனிதாவிடம் சொல்லி, தைரியமாய் இருக்கபடியும் சொல்லி, செலவிற்கு பணம் கொடுத்துவிட்டு கவுண்ட்டரில் வந்து பில்லினை அவனின் அட்ரஸுக்கு அனுப்ப சொல்லிவிட்டு திரும்ப, பாலகுருவின் கல்லூரி நண்பன் ஒருவனின் அப்பா அவனை பேச பிடித்துக்கொண்டார்..

அதே நேரம் பூர்ணியும் முத்துராணியும் இதே மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருந்தனர்… இருவரின் முகத்திலும் அப்படியொரு மகிழ்வு.. அதிலும் முத்துராணியோ பாட்டியாகப் போகும் சந்தோஷத்தில் இருந்தார்..    

எப்போதும் செய்யும் செக்கப் தான்.. மாதம் ஒருமுறையோ இல்லை இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ முத்துராணி செய்வார். வழக்கமாய் மைதிலியும் தான் உடன்வருவார்.. இன்று அவருக்கு வேறு வேலை இருக்க, முத்துராணியோடு பூர்ணிமாதான் வந்தாள்..

வந்ததுமே “நீயும் பண்ணிக்கோ  பூர்ணி..” என்று சொல்ல,

“அட அதெல்லாம் வேணாம் பெரியத்தை.. நல்லாதானே இருக்கேன்…” என்றவளுக்கு மனதினுள் திடீரென்று ஒரு எண்ணம் செக்கப் செய்துகொள்வோம் என்று..

வாய் வேண்டாம் என்று மறுத்தாலும், முகம் யோசனையை காட்ட, “என்ன பூர்ணி??” என்றார் முத்துராணி அவளின் முகத்தினையே பார்த்து..

“இல்ல பெரியத்தை.. அது… நான் நான் செக்கப் பண்ணிக்கிறேன்…” என்றதும் அவருக்கு புரிந்ததுவோ என்னவோ,

“அப்.. அப்போ.. உனக்கு முதல்ல பண்ணிடலாம்…” என்றார் ஆவலாய்..

சட்டென்று பூர்ணிக்கு மனதில் ஒரு டென்சன் வந்து உட்கார்ந்து கொண்டது.. எதையும் யோசியாமல் சாதாரணமாய் செய்திருந்தாள் கூட அவளுக்கு இந்த டென்சன் இருந்திருக்காதோ என்னவோ, ஆனால் முத்துராணிக்கு என்று வந்த இடத்தில் அவளுக்கும் பார்க்கவேண்டும் என்றதும், அதுவும் இந்த விஷயம் மனதில் தோன்றவும் அவளையும் அறியாது ஒரு பதற்றம்..

“சும்மா பயமெல்லாம் வேணாம்…” என்றவர், அங்கே இருந்த மகப்பேறு மருத்துவரிடம் அழைத்து செல்ல, டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு பூர்ணியின் கர்பத்தினை  உறுதி செய்தார் அவர்..    

மாமியாருக்கும் மருமகளுக்கும் அப்படியொரு சந்தோசம்.. கொஞ்ச நேரம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.. பின் முத்துராணி தான் “அவனுக்கு போன் போடு…” என்று சொல்ல, பூர்ணிமாவும் எதுவும் நினைக்காது அழைத்துவிட அவனுக்கு லைன்னே கிடைக்கவில்லை..

‘சிக்னல் இல்லையோ…’ என்றெண்ணியவள், அப்படியே முத்துராணியிடமும் சொல்ல, அவரோ அதற்குள் வீட்டிலிருக்கும் அனைவர்க்கும் சொல்லிவிட்டார்..

“என்ன பாக்குற.. இதெல்லாம் எவ்வளோ சந்தோசம் எங்களுக்கு தெரியுமா…” என்றவர்,

“அவனுக்கு லைன் போகலைன்னா விடு, உங்கம்மாக்கு போன் போடு..” என்றுசொல்ல,

‘அம்மா…!!!!’ என்று பூர்ணியின் மனது துள்ளிக்கொண்டு சந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது.. சந்தியாவிற்கு விசயம் கேள்விப்பட்டதும் அப்படியொரு சந்தோசம்.. இருக்காதா பின்னே…

“நீ நீ வீட்டுக்கு வரவும் சொல்லு பூர்ணி நானும் அப்பாவும் வர்றோம்..” என்றவருக்கு சந்தோசமாகவே சரி சொன்னவள், திரும்ப பாலகுருவிற்கு அழைத்து பார்க்க அவனுக்கு அப்போதும் லைன் கிடைத்த பாடில்லை..

“ச்சே…” என்றெண்ணியவளுக்கு அவனிடம் நேரில் சொல்லும் ஆசை விழைய “பாஸ்கிட்ட நேர்ல சொல்லிக்கவா???” என்றாள் முத்துராணியை பார்த்து..

அவளைப் பார்த்து சிரித்தவர் “அதுக்கென்ன சொல்லிக்கலாம்…” என, அடுத்து அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அவருக்கு எப்போதும் செய்யும் செக்கப் எல்லாம் முடித்து வெளியே வர,

“மேடம் உங்க ரிப்போர்ட் பைல்  எல்லாம் கீழ கவுண்ட்டர்ல வாங்கிக்கோங்க..” என்றுவந்து நர்ஸ் சொல்ல, இருவரும் கீழே வந்தனர்..

முத்துராணியிடம் “பெரியத்தை நீங்க இங்க இருங்க, நான் போய் ரிப்போர்ட் பைல் வாங்கிட்டு, பில் பே பண்ணிட்டு வர்றேன்..”  என்றவள், நேராய் கவுண்ட்டர் நோக்கி வர, அங்கே பாலகுருவை பார்த்ததும், ‘அட பாஸ்…!!!!!!’ என்று பூர்ணியின் உள்ளம் துள்ளியது தான்..

‘எப்போ வந்தான்…’ என்றவளின் கால்கள் அவனை நோக்கி வேகமாய் செல்ல, 

‘ஒருவேளை மாமா சின்ன மாமா யாரும் சொல்லிருப்பாங்களோ… அதான் வந்துட்டானோ…’ என்று எண்ண,

‘ஆனாலும் அதுக்குள்ளே எப்படி வர முடியும்??’ என்ற யோசனையோடு அவனிடம் போய் நிற்க,   அவனோ அங்கே இருந்தவரோடு பேசிக்கொண்டு இருக்க, சரி பேசி முடிக்கட்டும் என்றே நின்றாள்..

தன் அருகே யாரோ நிற்பது போலிருக்கவும், யாரது என்று பார்த்தவன், நிற்பது இவளென்று தெரியவும், கண்களில் சின்னதாய் ஒரு கேள்வி, அவனுக்கும் தெரியும் இன்று முத்துராணி இங்கே வருவார் என்று, ஆக இவளும் வந்திருப்பாள் என்றெண்ணியவன்,  திரும்ப அருகிலிருந்தவரோடு பேசத் தொடங்கிவிட்டான்..

அந்த மனிதரும் இவளை பார்த்து “எப்படிம்மா இருக்க??” என்று கேட்க, அவளுக்கு யாரென்று தெரியாவிடினும் “நல்லாருக்கேன் அங்கிள்…” என்று சந்தோசமாய் சொன்னவள், பாலகுருவையும் பார்த்து சிரித்தாள்.

அவளுக்கோ மனதில் எப்போதடா இவர் கிளம்புவார் என்றிருக்க,  இரண்டு பக்க கவுண்ட்டரில் ஒன்று காலியாகிவிட, பூர்ணி நின்று நின்று பார்த்தவள் சரி பேசிவிட்டு வரட்டும் என்றெண்ணி காலியான கவுண்ட்டரில் சென்று, அவர்களின் ரெகுலர் விசிட்டர்ஸ் கார்டினை காட்ட,

“உங்க ரிப்போர்ட்ஸ்..” என்றுசொல்லி கவுண்ட்டரில் இருந்த பெண் இரண்டு பைல்களை கொடுத்தாள்..

ஒன்று அவளது.. இன்னொன்று முத்துராணியினது.. அவளின் ரிப்போர்ட் வாங்குகையில், அதுவும் அந்த கவுண்ட்டர் பெண் “கங்க்ராட்ஸ்…” என்று சொல்லி கொடுக்கவும், வேகமாய் அவளின் கண்கள் பாலகுருவை தான் நோட்டமிட்டது..

‘இன்னுமா பேசுற பாஸ்….’ என்றெண்ணியவளுக்கு இருவருக்கும் இடையில் இருக்கும் பிணக்குகள் எல்லாம் மறந்து அவனிடம் தன் உணர்வுகளை அப்படியே கொட்டிட வேண்டும் என்ற வேகமும் ஆசையும் ஆவலும் மட்டுமே இப்போது..

ஒருவழியாய் பாலகுரு அந்த மனிதரோடு பேசி முடிக்கவும், திரும்பவும் பூர்ணிமா சந்தோசமாய் “பாஸ்…!!!” என்று அவனின் அருகே வர,

என்ன என்று பார்த்தவன், பின் முத்துராணி எங்கே என்று தேட, “பெரியத்தை அந்த சைட் இருக்காங்க.. நான்தான் உட்கார சொல்லிட்டு வந்தேன்..” என்று அவள் சொன்னதுமே,

Advertisement