Advertisement

குருபூர்ணிமா – 18

“ஓ.. உனக்கு நிர்மலா பேசினது எல்லாம் சரி.. ஆனா நான் தான் தப்பு அப்படிதான.. உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல பூர்ணி.. இது என்னை எவ்வளோ ஹர்ட் பண்ணும்னு உனக்கு தோணலையா??” என்று கேட்டவனின் முகத்தினில் அப்படியொரு தீவிர பாவனை.

பூர்ணி ஒன்றுமே சொல்லாது அவன் முகத்தையே பார்த்துகொண்டு இருக்க, இருளில் அப்படியொன்றும் தெரியவில்லை என்றாலும் அவள் பார்ப்பது உணர முடிந்தது அவனால்..

“என்ன பாக்குற.. சொல்றதை சொல்லிட்ட.. கிளம்பியும் போயிட்ட.. ஒன் டைம் ஒன் டைம்மாது எனக்கு கால் பண்ணியா டி.. எதுவுமே இல்லை.. இப்போ வந்திட்ட பெரிய இவளாட்டம்…” என்று பாலகுரு மனதில் இத்தனை நாள் அமிழ்த்தி வைத்திருந்ததை எல்லாம் கொட்ட ஆரம்பிக்க, அவளோ அப்போதும் அவனை பார்த்துகொண்டு தான் இருந்தாள்.. 

‘பேசு.. பேசு..’ என்ற பாவனை மட்டுமே அவள் முகத்தில்.. எத்தனை தூரம் பேச முடியுமோ அத்தனை பேசு, என்று பூர்ணிமா அமைதியாகவே இருக்க, அவனுக்கோ அவளது அந்த அமைதியே இன்னும் கடுப்பை கிளம்பியது..

“ஏய் என்ன நான் பேசிட்டே இருக்கேன்.. நீ இப்படியே இருக்க.. இப்படி மேல மேல என்னை டென்சன் பண்ணத்தான் வந்தியா???” என, அதற்குமேல் அவளால் அமைதியாய் இருக்க முடியவில்லை..

“ஏன் பாஸ் இப்படியெல்லாம் பேசுற…???” என்று மெதுவாகவே கேட்டாள்..

“என்ன பேசிட்டேன்?? இல்ல என்ன பேசிட்டேன்… உனக்கு தான் நான் பண்றதெல்லாம் தப்பு.. அந்த போஸ் இப்படி பண்ணதுக்கு நான் தான் ரீசன்.. நிர்மலா சொன்னதும் சரி.. அப்போ நான் தப்பு அப்படித்தானே உனக்கு…” என, பூர்ணிமாவிற்கு ஒருமாதிரி அலுப்பாய் இருந்தது..

விஷயம் என்னவென்று புரிந்துகொள்ளாது என்னடா இது இவன் இப்படி பேசுகிறான் என்று தோன்றவும், “ம்ம்ச் நான் உன்னை தப்புன்னு எப்போ பாஸ் சொன்னேன்…” என்றாள் அவளின் அலுப்பினை குரலில் காட்டி..

“ஓ.. சரி…” என்றவன் அதற்குமேல் எதுவும் பேசாது புரண்டு படுத்துவிட, பூர்ணிமாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..

திருமணம் முடிந்து இத்தனை நாட்களில் அவர்களுக்குள் சண்டையே வந்ததில்லை என்று சொல்லிட முடியாது.. ஆனால் அது இதுபோல் எல்லாம் இல்லை. அவளுக்கு நிர்மலா சொன்னது சரியென பட்டது.. ஆகையால் அவள் அதை சரிதான் என்று சொன்னாள். அதேபோல் போஸ் விசயத்திலும் பாலகுரு கொஞ்சம் யோசித்து நடந்திருக்கலாமோ என்று தோன்றியது அதையும் அப்படியே சொன்னாள்.

இதில் பாலகுருவை பூர்ணிமா எங்கே தவறாய் நினைத்ததாய் அவன் நினைத்துக்கொண்டான் என்று அவளுக்கு விளங்கவேயில்லை.. இல்லை கொஞ்சம் பொறுமையாய் ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்டிருந்தால் கூட அவளே சொல்லியிருப்பாள்..  அதைவிட்டு அன்றிலிருந்து இப்படி ஜங்கு புங்கு என்று குதித்துக்கொண்டே இருந்தால் அவள் என்ன செய்ய முடியும்..

‘உனக்கு அவ்வளோ சீன் எல்லாம் இல்லை..’ என்று பேசாது படுத்துவிட்டாள்..

ஆனால் மறுநாளில் இருந்து பால்குருவின் சீன் தான் அதிகமாகியது.. மறுநாள் காலையிலேயே சாருலதா அவள் கணவன் சந்தீப் மற்றும் அவனின் அப்பா அம்மா என்று குடும்பம் சகிதம் வந்துவிட, பூர்ணிமாவிற்கு வேலைகள் இல்லையென்றாலும் அவர்களோடு இருப்பதாகவே நேரம் இருந்தது..

என்னதான் வேலைகள் செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும், சில விஷயங்கள் வீட்டினர் தானே கவனிக்க வேண்டும், முத்துராணி அனைத்துக்கும் மருமகளை முன்னிருத்த, பூர்ணிக்கு எல்லாமே அவள் பார்ப்பது போலவே இருந்தது..

சாருலதா கூட கேட்டுவிட்டாள், “என்ன டி இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிற..” என்று,

பூர்ணியோ அசராமல், “உனக்கு ஒரு மாமியார்.. எனக்கு ரெண்டு பேராச்சே..” என்று மைதிலியையும் சேர்த்து சொல்ல, பாலகுரு கூட பேச்சை பார் என்று தான் நினைத்தான்.. ஆனால் இதனை கேட்ட மைதிலியோ பூர்ணியை பார்த்து புன்னகைத்துவிட்டே செல்ல,

‘இதேதடா இவ என்ன பேசினாலும் எல்லாரும் சிரிக்கிறாங்க..’ என்று எண்ணும்போதே, பூர்ணி அனைவரையும் சாப்பிட அழைத்தவள், பாலகுருவையும் அழைக்க, அவனோ காது கேட்காதது போல் இருந்தான்..

தன்பால் பார்த்தவர் “பாலா, பூர்ணி கூப்பிட்டிட்டே இருக்கு…” என்றுசொல்ல,

“அ.. என்ன சித்தப்பா.. இதோ போறேன்..” என்றவன் எழுந்து செல்ல, அவளுக்கோ அப்படியே அவனை பின்னிருந்து தள்ளிவிட வேண்டும் போல் வந்தது.

சாப்பிடும் போதும்கூட மைதிலி இருந்த பக்கம் போய் அமர்ந்துகொண்டான்.. சந்தீப்போடு பேசியபடி உண்ணும் பாவனையில் பூர்ணிமா என்ற ஒருத்தி அங்கிருப்பதாகவே அவனுக்கு தெரிந்தார் போல் தெரியவில்லை.. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது வித்தியாசமாய் தெரியாமல் இருக்கலாம்..

ஆனால் பூர்ணிக்கு.. அவளுக்குத் தெரியாதா என்ன?? வேண்டுமென்றே செய்கிறான் என்று.. அதுவும் வீட்டில் ஆட்கள் இருக்கும்போது எதையும் கேட்கவும் முடியாது.. ஆக அவளும் சகஜமாய் இருப்பதுபோல் இருந்துகொண்டாள்.

சாருலதாவின் மாமனார் மாமியார் எல்லாம் சிறிது நேரத்தில் கிளம்பிட, அவளும் சந்திப்பும் தங்குவதாய் இருந்தது..

பாலகுரு கூட “நம்ம வெளிய எங்கயாவது ப்ளான் செய்யலாம்..” என, ‘ம்ம்ஹும் ப்ளான் பண்ணிட்டாலும்..’ என்று மனதிற்குள்ளே நொடித்துக்கொண்டாள்.      

சாரு இங்கே இருக்கவும், பூர்ணிக்கு அவளோடு சேர்ந்து வெளியே செல்வது, ஷாப்பிங் போவது அது இதென்று நேரம் போக, பாலகுருவை அவள் எதற்கும் கேட்டாள் இல்லை.. ‘நீயும் பேசலை நானும் பேசலை..’ என்று இருக்க, அவனோ ஒவ்வொன்றுக்கும் மனதினுள் கறுவிக்கொண்டே இருந்தான்.

பாலா ஒருநாள் அனைவரையும் ஹார்பர் அழைத்து சென்றவன், பின் ஒரு போட்டில் கடலுக்குள் அழைத்து செல்ல, என்னவோ இத்தனை நாள் இல்லாத ஒரு நிம்மதி பூர்ணியின் மனதில் தோன்றுவதாய் இருந்தது..

இந்த கடலும் கடல் பயணமும் அவளுக்கு எத்தனையோ இனிமையான அனுபவங்களை கொடுத்திருக்கிறது.. பாலகுருவோடு அவள் கடலுக்குள் வருகையில் எல்லாம் ஏதாவது ஒரு மாற்றம் அவர்களுக்குள் நிகழ்வது என்பது நிஜமே..

இன்றும் அப்படி எதுவும் நடக்குமா என்று அவள் பாலகுருவை பார்க்க, அவனோ சந்தீப்பையும், சாருவையும் வைத்து கடல் பின்னணியில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருக்க, என்னவோ இத்தனை நாளில் இல்லாத ஒரு வலி அவனின் ஒதுக்கத்தின் மீது இன்று வந்தது.. சண்டைகள் வந்தாலும் அது அவர்களின் அறைக்குள் மட்டுமே தான் இருக்கும்.. ஆனால் இன்று அனைவரின் முன்னிலும் அவன் இப்படி நடந்துகொள்வது எப்படியோ இருக்க,

‘இந்த பாஸுக்கு எதுவுமே தோணாதா???’ என்று நினைக்கும்போது தொண்டை அடைப்பது போல் இருந்தது.

கடல் காற்று முகத்தினில் மோத, கடல் அலைகளை போட் கிழித்து செல்லும்போது லேசாய் கடல் நீர் அவள் மேனி நினைக்க, கடலை வெறித்து போட்டின் விளிம்பினை பிடித்து நின்றிருந்தாள்..  

முத்துராணிகூட “பூர்ணி போ.. போய் நீயும் போட்டோ…” என்று சொல்ல,

“இல்லத்தை.. இருக்கட்டும்…” எனும்போதே “ஹேய் பூர்ணி வா.. நீதான் வித விதமா போஸ் கொடுப்பியே…” என்று சாரு அழைக்க,

“இல்ல சாரு.. நீயும் அண்ணனும் எடுங்க… நாங்க இதுபோல நிறைய எடுத்திருக்கோம்..” என்றவள் பாலகுருவைத்தான் பார்த்தாள்.

அவள் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பார்க்கவில்லை.. அவளையும் அறியாது அவளின் பார்வை அவனிடம் செல்ல, அவனோ அவளை கூர்மையாய் பார்க்க, மற்றவர்களும் இவர்களையே பார்க்க,

பாலகுரு என்ன நினைத்தானோ அவளின் அருகே வந்து “எப்பவும் நீ பண்றது மட்டும்தான் சரின்னு நினைக்காத..” என்று மெதுவாய் சொன்னவன், அவளின் கை பிடித்து அழைத்து செல்ல,

“ஓஹோ…!! அண்ணன் சொன்னாதான் வருவியா நீ…” என்று சாரு கிண்டல் செய்யவும், பூர்ணி சிரிக்க முடியாது சிரித்து வைத்தாள்..

சில பல புகைப்படங்கள், வரவழைக்கப் பட்ட சிரிப்போடு, அதன்பின் அவள் போதும் என்றுவிட, பாலகுருவும் அடுத்து எதுவும் சொல்லவில்லை.. ஆனாலும் அவளோடு கலகலப்பாக எல்லாம் எதுவும் பேசவில்லை.. பெரியவர்கள் அவர்களின் பேச்சில் இருக்க, சாருவும் சந்திப்பும் ஒருபுறம் நின்றிருக்க, அவர்களை விட்டு பாலாவும் பூர்ணியும் தனியே நிற்கும் நிலை வர, இருவரும் அருகருகே நின்றிருந்தாலும் எதுவும் பேசாது இருக்க, நேரம் செல்ல செல்ல பூர்ணிமாவிற்கு மனம் கனக்கத் தொடங்கியிருந்தது..

வேறு தருணமாய் இருந்திருந்தால் கூட சமாளித்திருப்பாளோ என்னவோ, ஆனால் எப்போதுமே கடல் பயணம் என்பது அவளுக்குத் தனி தான்.. அது அவனோடு தனியே வந்தாலும் சரி, இல்லை உடன் யார் இருந்தாலும் சரி.. இதோ அருகேதான் நிற்கிறான், அவன் தோள்களை கெட்டியாய் பிடித்து அப்படியே சாய்ந்துகொண்டு நிற்கவேண்டும் போல்தான் இருந்தது.. ஆனால்??

மனதில் அழுத்தம் கூட கூட, அது கண்கள் வழியாய் வெளி வருவது போல் இருக்க, எதற்கென்றே மெதுவாய் கண்களை துடைத்துக்கொண்டாள்..

பாலகுருவோ முதலில் அவளைக் கவனிக்காதவன், பின் ‘பக்கத்துல தானே நிக்கிறேன் ஏதாவது வாய் திறக்குறாளா?? இங்க வந்து கூட இவளுக்கு என்கிட்டே பேசணும் தோணலையா.. நான் பேசலைன்னா இவ பேச மாட்டாளோ..’ என்று தோன்ற,

லேசாய் அவளை ஓரக்கண்ணில் பார்க்க, அவள் கண்களை துடைத்துக்கொண்டு இருக்க, கடல் நீர் தெரித்ததாய் இருக்கும் என்றே நினைத்தான்.. ஆனால் அவள் திரும்ப திரும்ப செய்ய,

“ஏய் பூர்ணி.. என்ன??” என்று வேகமாய் அவளின் கைகளை பிடித்தான்..

“ஒண்ணுமில்ல விடு..” என்றவள் அவளின் கரங்களை விலக்கிக்கொள்ள, “ம்ம்ச் என்ன இது…” என்றவன், என்ன நினைத்தானோ அவளை தோளோடு சேர்த்து தன மீது சாயத்துகொள்ள,

“இங்க வந்துகூட என்கிட்ட பேசணும் தோணலைல..” என்று இருவருமே ஒரேநேரத்தில் சொல்ல, அப்படியே இருவரின் முகத்திலுமே ஒரு சிரிப்பும் வந்து ஒட்டிக்கொண்டது..

என்னதான் சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும், சில பல அழகான ரசனையான தருணங்கள் அமையும்போது, அதனை அப்படியே போகட்டும் என்று விட்டுவிட கூடாது.. அந்தந்த பொழுதில் அதை அதை செய்தால் போதும்.. சண்டை நேரத்தில் சண்டை, சந்தோஷ நேரத்தில் சந்தோசம் அவ்வளவே..

பூர்ணிமாவிற்கு அவ்வளவுதான் இதுவே போதும் என்றான நிலை.. ‘போ பாஸ்.. நீ என்னவேனா சண்டை போட்டுக்கோ…’ என்றவொரு எண்ணம்..

அவனுக்கோ வேறுமாதிரி, கோபம் விட்டு அவளோட எப்போதும் போல் இருந்திடவே ஆசை.. அதுவும் அவளின் கண்ணீர் கண்ட பிறகோ அவனையும் மறந்து தான் அவளை தன்மீது சாய்த்துக்கொண்டான்..

ஆனாலும் என் பூர்ணி என்னை அப்படி சொல்வதா?? யார் என்ன சொன்னாலும்… நான் தவறே செய்திருந்தாலும் பூர்ணிமா எனக்கு சார்ந்து தானே பேசவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாய் இருக்க, அதனை கொண்டே அவனுக்கு கோபம். தான் கோபமாய் இருப்பதுபோல் ஒரு பிடிவாதம் தான் அவனுக்கு இப்போது.. அது வீட்டிற்கு வந்தபின்னும் லேசாய் தொடர,

இவர்களை கவனித்த சாரு கூட கேட்டுவிட்டாள் “என்னடி உனக்கும் அண்ணனுக்கும் எதுவும் சண்டையா??” என்று..

பூர்ணி “அதெல்லாம் இல்லையே..” என்று மழுப்ப,

“ஏய்.. சும்மா உதார் விடாத… பார்த்தாலே தெரியுது… என்னவோன்னு..” என்றவள், மெதுவாய் பூர்ணியின் காதுகளில்,

“பேசாம அண்ணன் தள்ளிட்டு போயி சிறப்பா கவனிச்சிடு…” என்று சொல்ல,

பாலகுரு சற்று தள்ளியே இருந்தாலும், இவர்கள் என்னவோ தன்னைப் பற்றிதான் பேசுகிறார்கள் என்று உன்னிப்பாய் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டு இருக்க, சாரு இப்படி பூர்ணியின் காதில் முணுமுணுக்கவும், அதற்கு பூர்ணி அவனையும் பார்த்து ஒருமுறை சிரித்துவிட்டு,

பதிலுக்கு அதேபோல் சாருவின் செவியில் “அதுக்கேன் டி தள்ளிட்டு போய் கவனிக்கணும்.. நீ கொஞ்சம் தள்ளி போனா கூட போதும்…” என்றுசொல்லி கண்ணடிக்க,

‘அடிப்பாவி…’ என்று வாயில் கைவைத்து விட்டாள் சாருலதா..

அவளின் முக பாவனை பார்த்து பூர்ணிமா கொஞ்சம் சத்தமாகவே சிரிக்க, அவள் சிரிக்கவும் அப்படியே சாருவும் சிரிக்க, அவ்வளோதான் பாலகுருக்கு தன்னை தான் என்னவோ சொல்லி சிரிக்கிறார்கள் என்ற எண்ணம் வர, இருவரையும் முறைத்துவிட்டு சென்றுவிட்டான்.

‘ரொம்பத்தான் முறைக்கிற பாஸ்..’ என்றெண்ணியவள், கொஞ்ச நேரம் சாருவோடு பேசிவிட்டு அறைக்கு வர, வந்ததுமே கேட்டான் “எதுக்கு என்னைப் பார்த்து சிரிச்சீங்க ரெண்டுபேரும்..” என்று..

அவளோ அவனை மேலும் கீழுமாய் பார்த்து, “பாஸ் சத்தியமா சொல்றேன், நீ கோவமா இருக்கன்னு காமடி பண்ணிட்டு இருக்க…” என்றுவிட்டு நகர,

அவளை இழுத்து பிடித்து நிறுத்தியவன் “எதுக்கு என்னைப் பார்த்து சிரிச்சீங்க???” என்றான் திரும்பவும்..

‘இதென்னடா வம்பு.. சிரிச்சது குத்தமா??’ என்று தோன்ற, இவனை இப்படியே விட்டாலும் சரி வராது என்றும் தோன்ற “எங்க வாய் நாங்க சிரிச்சோம் உனக்கென்ன பாஸ்..” என்றாள் முகத்தை வேறுபுறம் திருப்பி..

“நான் பேசுறப்போ என்னை பார்த்து பேசு பூர்ணி…” என்று அவளின் முகத்தினை திருப்ப,

“நீ பேசாம இருக்கப்போ கூடத்தான் உன்னை பாக்குறேன்.. அப்போ மட்டும் பேசுறியா என்ன???” என்றாள் பதிலுக்கு..

அவளுக்கும் என்னவோ இன்று இப்படியே விடக்கூடாது, சும்மா இவன் ரொம்ப பண்றான்.. இல்லாத ஒன்றை நினைத்துக்கொண்டு அதற்கு ஒரு உருவம் கொடுத்து இப்படி எல்லாம் கோபித்துகொண்டு போனால் இனி வரும் காலங்களில் இவனோடு சேர்ந்து எப்படித்தான் வாழ்க்கையை ஓட்டுவது.. ஒவ்வொரு விசயத்திற்கும் இப்படி முகம் தூக்கினால் யாருக்கும் எரிச்சல் வரும்தானே..

“ஆமாமா அப்படியே நீ பார்த்துட்டாலும்…”

“ஹலோ பாஸ்.. நான் பார்க்க ஆரம்பிச்சு பல வருசம் ஆச்சு.. இதுல நீ எனக்கு ஜூனியர்…” என்றவள், திமிராகவே நின்றிருந்தாள் அவன்முன்..

பாலகுருவிற்கோ ‘நான் என்ன கேட்கிறேன் இவ என்ன சொல்ற ???’ என்று தோன்ற, “போ டி.. போ நீயே சிரிச்சுக்கோ..” என்றவன் நகர,

“ஹா ஹா அதெப்புடி.. கூப்பிட்டு வச்சு பேச்ச ஆரம்பிச்சிட்டு போன்னு சொன்னா போகனுமா என்ன??? முடியாது…” என்றவள் அவனையும் பிடித்து அப்படியே நிற்க,

‘ஆகா… பழைய பூர்ணி திரும்ப வர்றாளோ..’ என்று அவன் மனம் சொல்ல,

“எனக்கு வேலை இருக்கு..” என்றான் பிகு செய்வது போல்..

“பரவாயில்லை.. நாங்க ஏன் சிரிச்சோம்னு தெரியவேணாமா???” என,

“ஒன்னும் வேண்டாம்…” என்றான் இப்போது பார்வையை வேறெங்கோ திருப்பி..

“உன் தங்கச்சி உன்னை தள்ளிட்டு போய் கவனிக்க சொன்னா.. அதான் நீ தள்ளிப்போனாகூட போதும்னு சொன்னேன்.. போதுமா…” என, அவனின் கண்கள் அப்படியே இவள்பக்கம் திரும்ப,

வந்த சிரிப்பினை அடக்கி ‘எப்புடி????’ என்று புருவம் உயர்த்தி பூர்ணி பார்க்க,

Advertisement