Advertisement

குருபூர்ணிமா – 17

“சார் எனக்கு வேலையும் இல்ல ஒன்னுமில்ல.. ரொம்ப கஷ்டம்.. என் குழந்தைக்கு அப்பப்போ உடமும் சரியில்ல.. ட்ரீட்மென்ட் பண்ணக்கூட கைல காசில்லை..  அப்போதான் ஒருநாள் என் பிரண்ட தினாவ பார்த்தேன் சார்.. அவன்தான் அன்னிக்கு வீடியோ எடுத்தான் நிர்மலா மேடம் சொல்லி.. ஆனா அங்க நடந்த பிரச்சனைக்கு பின்னாடி அவனையும் பார்க்க முடியலை..

நாலு மாசத்துக்கு பிறகு இப்போதான் கொஞ்சநாள் முன்னாடி பார்த்தேன் சார்.. என்கூட சண்டை போட்டான், அன்னிக்கு வீடியோ எடுத்ததுக்கு போய் பணம் கேட்டதுக்கு ரொம்ப பேசிட்டாங்க.. கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம வாய்க்கு வந்தது எல்லாம் பேசி, போனா போகுதுன்னு பணம் கொடுக்கிறது போல நிர்மலா மேடம் கொடுத்தாங்கன்னு என்கூட அப்படியொரு சண்டை..

நானும் அப்போதான் சொன்னேன் என்னையும் வேலைல இருந்து அனுப்பிட்டாங்கன்னு.. ரெண்டுபேருமே பேசிட்டிருக்கும் போது, சும்மாதான் எனக்கு அந்த வீடியோ காமிச்சான்.. அப்போ அங்க வந்த இன்னொரு பிரண்ட், ஹார்பர்ல வேலை செய்றவன்..

அவன்தான் சொன்னான், பாலகுரு எல்லா ஆதாரத்தையும் அழிச்சிட்டதா.. ஆனா அப்போ எங்க கைல வீடியோ இருந்தது.. எனக்கும் என் பிரண்டுக்கும் பணத்துக்கு ரொம்ப கஷ்டம்.. என்ன பண்றதுன்னு யோசிச்சப்போதான் சரி பூர்ணிமாக்கு மட்டும்  இதை அனுப்புவோம்னு முடிவு பண்ணோம்..” என்று நீளமாய் பேசியவனுக்கு அடிவாங்கியதில் மூச்சு வாங்க,

இன்ஸ்பெக்டரோ “சோ எல்லாமே ப்ளான் பண்ணித்தான் பண்ணிருக்கீங்க…” என்றார் கோபமாய்..

“சார் இப்பவும் சொல்றேன்.. நான் அனுப்பினது அந்த பூர்ணிமாக்கு மட்டும் தான்..” என,

“அது ஏன் அவங்களுக்கு மட்டும் அனுப்பின???” என்று இன்ஸ்பெக்டர் கேட்கவும்,

“அது… அது.. பாலகுருக்கு அனுப்பினா, எப்படியும் அவர் அதை வேறமாதிரி ஹேண்டில் பண்ணிடுவார்.. ஆனா அவரோட வொய்புக்கு அனுப்பினா கண்டிப்பா அவர் யோசிப்பார்னு தான்…” என்று இழுத்தான் தினேஷ்.

“டேய் டேய்… சும்மா நடிக்கம மிச்சத்தையும் சொன்னா அடி மிச்சம்.. இல்லையா திரும்ப எங்க கவனிப்பு ஆரம்பிக்கும்..” என்று இன்ஸ்பெக்டர் லட்டியை தூக்க,

“சார் உண்மையா சார்.. நெட்ல போட்டது என் பிரண்டு.. நான் வேணாம் வேணாம் சொல்ல சொல்ல போட்டுட்டான்.. நானுமே ஒரு வேகத்துல பூர்ணிமாக்கு அனுப்பிச்சிட்டேன்.. ஆனா அதுக்கப்புறம், டிவி, நியூஸ், போலீஸ்னு ஆகவும் எங்களுக்கு பயமாகிடுச்சு..” என்று அஞ்சி.

“ஓ!! ஒரு தப்பை பண்றப்போ பயமில்ல, ஆனா அது வெளிய வரவுமே பயம் வந்திடுச்சா??? பணத்துக்காக அப்போ என்ன வேணா செய்வீங்க இல்லையா..” என்றவர் அவனின் கன்னத்தில் இரண்டு வைக்க,

“ஐயோ அதெல்லாம் நிச்சயமா இல்லை சார்.. இது நான் பணத்துக்காக பண்ணேன்தான்.. கண்டிப்பா நிர்மலா மேடம்கிட்ட போயிருந்தா எங்களுக்கு எதுவும் பண்ணிருக்க மாட்டாங்க..பாலகுரு ஏற்கனவே எல்லா ஆதாரத்தையும் அழிச்சது தெரிஞ்சதுனால இது அவங்களுக்கு அனுப்பின கண்டிப்பா எங்களுக்கு ஏதாவது பணம் கிடைக்கும்னு நினைச்சோம்..

ஆனா என் பிரண்டு என்ன நினைச்சு நெட்ல போட்டானோ தெரியலை.. இப்போ அதுவே எங்களுக்கு ஆப்பாகிடுச்சு…” என்றான் உண்மையை முழுதாய் சொல்லிவிடும் நோக்கில்..

“ஓஹோ… சரி உன் பிரண்டு எங்க???”

“அது…. இந்த விஷயம் வெளிய தெரியவும், அவனோட இன்னொரு பிரண்டோட சேர்ந்து நார்த்துக்கு போறேன்னு போயிட்டான் சார்..” என்றவனுக்கு தான் கூறுவதை நம்ப வேண்டுமே என்றிருந்தது..

இன்ஸ்பெக்டரோ இதை நான் நம்பனுமா என்று பார்க்க, “சார் சத்தியமா சொல்றேன் தான் இதான் உண்மை.. எங்க போறேன்னு கூட சொல்லலை.. கிளம்பி போயிட்டான்..” என, மேற்கொண்டு மேலும் சிறிதுநேரம் விசாரித்து, மற்றவனின் விபரங்கள் வாங்கிய இன்ஸ்பெக்டர்,

பாலகுருவிற்கும், ராஜனுக்கும்  அழைத்து விஷயத்தை  சொல்ல, அடுத்த கொஞ்ச நேரத்தில் அவன் காவல்நிலையத்தில் இருந்தான்.. அதே போல ராஜனும் வந்துவிட,  இன்ஸ்பெக்டர் நடந்தவைகளை திரும்பவும் ஒருமுறை சொல்ல, பாலகுருவோ அமைதியாய் இருந்தான்.. ராஜன் பேசட்டும் என்று..

ஏனெனில் இது யார் செய்தார்கள், எப்போது செய்தார்கள் என்பதனை எல்லாம் தாண்டி, எதற்கு செய்தார்கள் என்ற ஒன்று இருக்கிறதே. பாலகுருவிற்கு தினேஷை பார்க்க தவறாக எதுவும் தெரியவில்லை.. முழுதாய் விஷயம் அறிந்தபின்னே, அவனுக்கு என்னவோ அவனைப் பார்க்க பாவமாய்த்தான் இருந்தது..

ராஜனோ “சார், நீங்க என்ன பார்மாலிட்டி செய்யணுமோ செய்ங்க.. எங்க வீடு இப்போ கல்யாண வீடு.. ஆனா இந்த விஷயங்கள்னால அந்த சந்தோசம் கொஞ்சம்கூட எங்க வீட்ல இல்லை..  இதுக்குமேல என்ன செய்யனுமோ நீங்க செஞ்சிக்கோங்க..” என்று முடித்துவிட, இன்ஸ்பெக்டர் பால்குருவின் முகம் பார்த்தார்..

அவனோ சிறிது நேர அமைதிக்கு பின்னே “இந்த கேஸ் புல்லா எப்போ முடியும்???” என்றான்..

“சார்.. நாங்களும் சீக்கிரம் முடிக்கத்தான் பாக்குறோம்.. அந்த தினா இங்க இருந்தா பரவாயில்லை.. நார்த் போயிட்டதா சொல்றான்.. சோ கொஞ்சம் டைம் இழுக்கும்…”

“ஹ்ம்ம் ஓகே இன்ஸ்பெக்டர்.. இதுதான் விசயம்னு தெரிஞ்சதுக்கு பின்னே, கொஞ்சம் நிம்மதியா இருக்கு. சோ இதுக்குமேல நீங்க என்ன செய்யணுமோ செஞ்சிக்கோங்க..” என்றவன் “நான் அந்த தினேஷ்க்கிட்ட பேசலாமா???” என்றான்..

இன்ஸ்பெக்டரோ ஒருநொடி யோசித்தே, பின் அனுமதியளிக்க, தினேஷிடம் சென்ற பாலகுருவோ, “உன்னோட பேமிலி எங்க??” என்று கேட்க, அவனின் முகம் அப்படியே பயத்தில் வெளிறி விட்டது..

“சார்.. சார்.. அவங்களுக்கு எதும் தெரியாது சார்.. ப்ளீஸ் அவங்களை எதுவும் செஞ்சிட வேண்டாம்…” என்றுசொல்ல,

“ஹேய்..!! எதுவும் செய்றதுன்னா இப்படி போலீஸ் முன்னாடி வச்சு கேட்கமாட்டேன்.. எனக்கா கண்டுபிடிக்க ரொம்ப நேரம் ஆகாது.. சோ சொல்லு..” என்றவனின் குரலில் இருந்த அழுத்தத்திலும், பார்வையில் லேசாய் எட்டிப் பார்த்த கனிவிலும், தினேஷ் அவனது குடும்ப விபரம் சொல்ல,

“ம்ம்ம்…” என்றவன், “உனக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியாது.. எதுன்னாலும், ஜெயில்ல இருந்து வந்ததும் என்னை பாரு.” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பி வெளியே வர, ராஜன் இவனுக்காக காத்திருப்பது போல் தெரிந்தது…

அவனும் அவரைப் பார்த்து தயங்கி நிற்க, “கொஞ்ச பேசணும்…” என்றார்.

“சொல்லுங்க அங்கிள்…” என்றவனுக்கு நிர்மலாவை பற்றியோ என்று இருந்தது.

ஆம் நிர்மலா சொல்லியிருந்தாள், தன்னிடம் ரஞ்சித் பேசியதையும், அதன்பின் அவள் பாலகுருவிடம் பேசியதையும்.. மனதின் பாரமும் குழப்பமும் அவளை போட்டு படுத்த, சுதா பேசும் விதத்தில் பேசி, மகளிடம் விஷயத்தை வாங்கிருந்தார்.. நிர்மலாவிற்குமே கூட இதனை சுதாவிடம் சொன்னபிறகு தான் கொஞ்சம் மனது சமன் பட்டது போலிருந்தது.

ராஜன் இதை அறிந்தவரோ, பாலகுருவை காணும் வரைக்கும் அவனிடம் இதை பற்றி பேசும் எண்ணமில்லை.. ஆனாலும் மகள் பேசியது அவனுக்கு ஏதாவது மனக் கசப்பை கொடுத்திருந்தால்?? நிர்மலாவின் வாழ்வு தொடங்கும்போது எவ்வித கசப்பும் யார் மனதிலும் இருக்ககூடாது என்று எண்ணியே இப்போது அவனிடம் பேச வந்தது..       

ஆனால் பேசவேண்டும் என்று எண்ணியவருக்கோ மேற்கொண்டு எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் நிற்க, “கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது அங்கிள்..” என்றான் அவனே ஆரம்பித்து..

அவன் கேட்டதில் திகைத்தவர், “ஹா… நல்லா போகுது பாலகுரு.. நிம்மி.. நிம்மிதான் கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருக்கா..” என்றார் வருத்தமாய்..

“அங்கிள் நான் சொல்றேன்னு தப்பா நினைக்கவேணாம்.. நடந்துபோனதை யார்னாலும் மாத்திட முடியாது.. ஆனா இனி நடக்க போறதை நம்ம கொஞ்சம் சரி பண்ணலாம்.. நிர்மலாக்கு கண்டிப்பா ஒரு ரிலாக்ஸ் தேவை… சோ பார்த்து பண்ணுங்க எதுவும்..”

“ஹ்ம்ம் அவ பேசினதை எதுவும் மனசில வச்சுக்கவேண்டாம்.. ” என்று அவரும் சொல்ல,

“எனக்கு என் லைப் பத்தி மட்டும் தான் அங்கிள் எண்ணமெல்லாம்.. வேறெதுவும் இல்லை..” என்றுசொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

பாலகுருவிற்கு அதற்குமேல் அவரிடம் நின்று பேச நேரமுமில்லை, எண்ணமும் இல்லை.. இது முழுக்க முழுக்க நிர்மலா இழுத்துக்கொண்டது தான்.. ஆனால் அவள் பேசியதற்கும் சேர்த்து இப்போது பூர்ணிமா இவனை குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.. ஆக, ராஜன் பேசியதற்கு மரியாதை நிமித்தமாய் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் அவ்வளவே..  

நிர்மலா என்ன நினைத்து எதை நடத்திட நினைத்து பாலகுருவை வேண்டாம் என்றாளோ, ஆனால் அவன் அதிலிருந்து வெளிவந்து இதோ இப்போது அவனுக்கான வாழ்வில் அவன் முழு மனதாய் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்..

ஆனால் இதற்கு பிள்ளையார் சுழி போட்ட நிர்மலாவோ கண்ணெதிரே இருக்கும் வாழ்வினை ஏற்றுகொண்டாலும், அதிலும் மனம் ஒட்டாது இருக்க, யாரால் தான் எதுவும் செய்ய முடியும்.. அனைத்திற்கும் நம் மனமே காரணமாகி விடுகிறது.. வேண்டும் என்பதற்கும்.. வேண்டாம் என்பதற்கும்..

ரஞ்சித் வந்து பார்த்தவனோ, நிர்மலாவை பார்த்து தானும் அப்படி பேசியிருக்க கூடாது என்றெண்ணினானோ என்னவோ, ஆனால் எதுவும் வெளிக்காட்டாமல் “என்ன நிம்மி இது.. இவ்வளோ ஏன் ஸ்ட்ரெஸ் ஆகணும்..” என்று ஆறுதலாகவே பேசினான்..

அவன் இருக்கும் வரைக்கும், அவன் பேசும் வரைக்கும் நிர்மலாவிற்கு ஒரு தெம்பும் திடமும் வர, அவன் கிளம்பிய பின், மீண்டும் அதே குழப்ப நிலை..

‘என்ன இருந்தாலும் நான் போய் அந்த பாலகுருக்கிட்ட அப்படி பேசிருக்க கூடாது.. ச்சே.. அவனை என்கிட்டே வரவைக்கனும் நினைச்ச எனக்கு, இப்.. இப்போ.. அவன்முன்னாடி அழுதுட்டு வர நிலையா…???’ என்று கூனிக் குறுகிப் போனாள்..

என்னவோ அவமானமாய் இருந்தது, இது ஒருபுறம் இருக்க, அந்த தினேஷ் கைதானதும், அவன் சொன்ன காரணங்கள் கேட்டு இன்னமும் உடைந்துபோனாள்..

அந்த தினா பணம் கேட்டு வந்தபோது, நிர்மலா வேறு டென்சனில் இருந்தாள். பாலகுரு தன்னை தேடி வராத டென்சன்.. அதனால் தான் அவனிடம் கண்டபடி பேசி பணம் கொடுத்தது.. அதேபோலவே தினேஷ் மீது கடுப்பானதும் இதனால்தான்.. ஆக எல்லாதிற்கும் காரணம் தான் தான் என்று மேலும் மேலும் அவளுக்கு அழுத்தம் கூடியது தான் மிச்சம்..

ஆனால் சுதா அவளை அப்படியே இருக்க விடவில்லை.. ‘பார்லர் போ.. ஷாப்பிங் பண்ணனும்..’ அது இதென்று சொல்லி சொல்லி அவளை கொஞ்சம் அவளது யோசனைகளின் பிடியில் இருந்து வெளிவர செய்ய, திருமணத்திற்கு ஒருவாரமே இருந்ததால், அவளின் தோழிகள் புடைசூழலும், வீட்டில் நெருங்கிய உறவுகளின் வருகையும் என்று கொஞ்சம் அவளால் ரிலாக்ஸ் செய்ய முடிய, அதற்கு ரஞ்சித்தும் பெரும் உதவி செய்தான்..

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேச, அடுத்து நிர்மலாவாள் சும்மா இருக்க முடியவில்லை.. ஏதாவது ஒரு வேலைகள் இருந்துகொண்டே இருந்தது.. ஆக கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் எண்ணங்கள் அவளிடம் இருந்து ஓடியிருக்க, திருமண பெண்ணிற்கான ஒரு பொலிவு அவளிடம் வந்தது.. 

சில விசயங்களை வாழ்வின் போக்கில் விட்டுவிட வேண்டும்.. கசப்போ இனிப்போ எதுவுமே நிரந்தரமல்ல.. மாறிக்கொண்டே தான் இருக்கும்.. நிர்மலாவிற்கும் லேசாய் மனதில் ஒரு தெளிவு.. ஒரு மாற்றம் உண்டாகியிருந்தது..

பூர்ணிமாவிற்கு பிறந்தவீட்டு சீராட்டு சிறப்பாகவே நடக்க, இரண்டு நாட்கள் என்று சென்றவள், அதற்குமேலும் அங்கேதான் இருந்தாள்.. பாலகுரு ஒருமுறை கூட அழைக்கவில்லை.. அவன் அழைக்கமாட்டான் என்று தெரியும்.. அது அவனின் இயல்புதான்..  ஆனால், ஏனோ அவளுக்கு மனம் எதிர்பார்த்தது..

தன்னை போலவே அவனும் நினைப்பான் என்று யோசிக்க மறந்து, அவனின் கோபமும், அதற்கான உப்பு பெறாத காரணமும் மட்டுமே அவள் மனதில் இருக்க, வேண்டுமென்றே அவன் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து, முத்துராணிக்கோ இல்லை மைதிலிக்கோ அழைத்து பேசுவாள்.

இதனை எல்லாம் பார்ப்பவனுக்கு எப்படியிருக்கும்.. மேலும் மேலும் தானே பிடிவாதம் அதிகரிக்கும்.. ஆக தினேஷ் பற்றிய விபரம் கூட அவன் ராமலிங்கத்திடம் தான் சொன்னான்.. பூர்ணியிடம் சொல்லவில்லை.. விபரங்கள் எல்லாம் அறிந்தபின்னோ பூர்ணிமா பாண்டியாவிற்கு தான் போன் போட்டாள்..

“பாஸ் எங்கடா..???” என்று ஆரம்பத்திலேயே எகிற, “யக்கா…..” என்ற அவன் அழைப்பே நாரசமாய் இருந்தது..

“டேய்… இன்னொரு தடவ நீ அக்கான்னு சொன்ன பார்த்துக்கோ.. நீ அக்கான்னு சொல்றதுனால தான் எங்களுக்குள்ள சண்டையே வருது.. உறவு முறையே மாத்திடுற.. பின்ன எப்படிடா நாங்க நல்லா வாழ்றது…” என்று பாலகுரு மீதிருக்கும் கோபத்தை எல்லாம் இவன்மீது காட்ட, அவனோ திருதிருவென்று முழித்தான்..

“பாண்டியா….”

“யக்கா…!!!!” என்றான் பரிதாபமாய்..

“பாஸ் எங்க???”

“அண்ணே… கப்பலாண்ட இருக்காருக்கா… எதும் அர்ஜண்டா..”

“ஏன் இல்லைன்னா சொல்லமாட்டீங்களோ…” என்றவள், “ஒண்ணுமில்ல சும்மாதான் கேட்டேன் வைக்கிறேன்..” என்று வைத்துவிட, ‘இப்போ இன்னாத்துக்கு போனு போட்டங்கோ…’ என்று முழித்தான் பாண்டியா..

அவனது கிரகம் இவர்களுக்கு நடுவில் வந்து மாட்டிகொன்டது.. ஒருத்தி பேசி முடித்திருக்க, “பாண்டியா….” என்றழைத்தபடி பாலகுரு வந்து சேர,

“ண்ணா…” என்று வேகமாய் அவனிடம் சென்றான்.

“அங்க போய் பார்த்தியா…”

Advertisement