Advertisement

அவன் வருவான் என்று தெரியும், ஆனாலும் கண்டுகொள்ளாது, அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருக்க, உள்ளே வந்தவனோ ஒன்றுமே சொல்லாது, பாத்ரூமினுள் சென்றுவிட, பூர்ணிமாவிற்கு எதோ ஏமாற்றமாய் இருப்பது போல் தோன்றியது..

வந்து போக கூடாது என்று சத்தம் போடுவான் என்றே எதிர்பார்த்தாள்.. ஆனால் அவனோ எதையுமே பிரதிபலிக்காது இருக்க, அவன் வரட்டும் என்று நின்றவளுக்கு நேரம் சென்றது தான் மிச்சம்..

பத்து நிமிடங்கள் அப்படியே கடக்க, மைதிலி வந்து வெளியே நின்றே அழைத்தார், “நேரமாச்சு பூர்ணி..” என்று..

“இதோ சின்னத்தை..” என்றவள் பாத்ரூம் கதவினை எட்டி உதைத்தே சென்றாள்..

இந்த சத்தங்கள் எல்லாம் அவனுக்கு கேட்காமல் இல்லை, தான் வரும்வரைக்கும் இருக்கிறாளா என்று பார்க்கவே அவன் உள்ளே போனது.. ஆனால் அது இல்லை என்றானதுமே இருந்த ஆத்திரம் எல்லாம் இன்னும் இன்னும் கூடியதே தவிர குறைந்த பாடில்லை..

‘போ..போ.. எப்போ இருந்தாலும் இங்க வந்துதானே ஆகணும்..’ என்று எண்ணியவன், அவர்கள் கிளம்பும் வரைக்கும் கூட வரவில்லை..

பூர்ணிமாவிற்கு இது மேலும் எரிச்சலை கொடுத்தது.. எனக்காக வரவேண்டாம் ஆனால் அவளின் பெற்றோருக்காக கீழே வரலாமே என்று பார்க்க, முத்துராணி “அவன்கிட்ட நான் சொல்லிக்கிறேன்.. இப்போவே ரொம்ப லேட்டாச்சு..” என்று சொல்லவும், மூவரும் கிளம்பினர்..  

இங்கே இப்படியென்றால், நிர்மலா வீட்டிற்கு போனவளுக்கே சிந்தை வேறெதிலுமே இல்லை..

அவளை பார்த்ததுமே சுதா,  “நிர்மலா.. நீ ஏன் இப்படி இருக்க??? உனக்கு என்னாச்சு??..” என்று சுதா கேட்டுகொண்டே இருக்க, அவளோ பதிலே சொன்னாள் இல்லை..

ரஞ்சித் சொன்னதும், அவள் தன்னையும் மீறி பாலகுருவிடம் கேட்டதும் எல்லாம் சேர்ந்ததுமாய் அவளை போட்டு ஒரு அலைக்கழிப்பு செய்திருந்தது.. வீட்டிற்கு கூட எப்படி காரை செலுத்தி வந்தால் என்று தெரியவில்லை.. ஆனாலும் மனதில் ஒரு பிசைவு.. ஒரு குழப்பம்…

‘அச்சோ.. தப்பா பேசிட்டோமோ.. நான் பண்ணது தப்புதானே..’ என்று அவளுக்குள்ளே ஒரு யோசனை..

அதையும் தாண்டி ரஞ்சித் சொன்னது…

‘நான் நிஜமாவே இந்த மேரேஜ்க்கு ரெடியா???’ என்ற யோசனை வேறு.. எல்லாம் சேர்ந்து அவளை ஒரு அமைதியில் அழுத்தத்தில் இருக்க வைக்க, சுதாவோ திண்டாடினர்..

அவளிடம் கேட்டு கேட்டு பதில் வராது போக, ரஞ்சித்திற்கே அழைத்துவிட்டார்.. என்னானது என்று கேட்க,

அவனோ “ஆன்ட்டி.. நத்திங் ப்ராப்ளம்..” என்றவனுக்கு தான் பேசியது எதுவும் அவளை காயப்படுத்திவிட்டதா என்ற யோசனை வர “நான் நாளைக்கு வந்து பாக்குறேன்.. இப்போ லேட் ஆகிடுச்சு..”என,

“சரிப்பா..” என்றவர், கணவரிடம் சென்று அனைத்தையும் சொல்ல, ராஜனும் வந்து பார்த்தார் நிர்மலாவை..

“நிம்மி.. நிம்மி.. என்னாச்சு…” என்று கேட்க, அவளோ மலங்க மலங்க  விழித்தவள், ஒருநிலையில் அழுத்தம் தாளாமல் ‘ஹோ..’ என்று அழத் தொடங்கிவிட்டாள்..

இன்னும் பத்தே நாளில் திருமணம் வைத்துக்கொண்டு, அதுவும் வருங்கால கணவனோடு வெளி சென்று வந்தவள், இப்படி அழவுமே என்னவோ எதோ என்று தான் ஆகிவிட்டது அவளை பெற்றவர்களுக்கு..  

“நிம்மி.. என்னடா???” என்று சுத்த கேட்கவும்,

“ம்மா…” என்றவள், கண்களை துடைத்து “ஏன்ம்மா என்னால மட்டும் ஹேப்பியா இருக்க முடியலை…” என்றாள்..

ஆனால் அவளின் இந்த கேள்வியே அவர்களுக்கு புரியவைல்லை.. இவளுக்கு சந்தோசமாக இருக்க முடியவில்லையா?? ஐயோ.. ஏன்?? என்ன குறை வந்தது இவளுக்கு.. எல்லாமே இருக்கிறது.. எல்லாமே கிடைக்கிறது.. இதோ வாழ்க்கையும் அமையப் போகிறது..

அதுவும் ரஞ்சித் நல்ல வரனே.. அனைத்து விதத்திலும் நிர்மலாவிற்கு பொருத்தமானவன் தான்.. அப்படியிருக்க இவளுக்கு சந்தோசமாய் இருக்க என்ன குறை வந்தது??

“நிம்மி.. ஏன் ஏன் இப்படி சொல்ற..??” என்று ராஜன் கேட்க,

“இல்லப்பா.. என்னால முடியலை.. என்.. எனக்கு.. எதுவுமே பிடிக்கலை.. எனக்கு எதுவுமே வேண்டாம்..” என, மற்ற இருவரும் அதிர்ந்து போயினர்..

“எ.. எதுவும் வேண்டாம்னா???!!!” என்ற ராஜன் மெதுவாய் கேட்க,

“எதுவும்… எதுவுமே..” என்றவள், “ஷ்..!!!! நான் ஒரு பூல் ப்பா…” என்றாள் தலையில் அடித்து..

அவளின் இந்த செயல்கள் எல்லாம் இருவருக்குமே ஒரு பயத்தை கொடுக்க, ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள,

“நான்.. நான் ஹேப்பியா இருக்கணும் டாடி.. நான் ஏன் இப்படி அழுமூஞ்சியா இருக்கணும்.. நோ நோ..” என்றவள், வேகமாய் அறைக்குள் செல்ல, பின்னோடு இவர்களும் எழுந்து சென்றனர்..

போனவள் முகம் கழுவி வர, “ப்பா… நான்.. நான் இனி எதுக்கும் பீல் பண்ண போறதில்ல.. அந்த பாலகுருவே அவன் பொண்டாட்டி கூட ஹேப்பியா இருக்கப்போ நான் இருக்க கூடாதா…” என, அப்போது தான் விஷயம் இவர்களுக்கு புரிந்தது..

“நிம்மி.. இப்போ ஏன் அவங்க பேச்சு…” என்று சுதா அதட்ட,

“நிம்மி.. ரஞ்சித் என்ன சொன்னார் ம்மா..” என்று ராஜன் பேச்சினை மாற்ற,

“நான்.. நான் ரஞ்சித் கூட சந்தோசமா வாழ்வேனா ப்பா…” என்றாள் கண்களில் மிரட்சியாய்..

‘ஐயோ.. என்ன இது.. இப்படி மாற்றி மாற்றி பேசுகிறாளே..’ என்று இருவருமே பயந்துவிட்டனர்..

“டி.. உனக்கு என்னதான் ஆச்சு..” என்று சுதா அவளை உலுக்க,

“எனக்கு ஒண்ணுமில்ல ம்மா.. டோன்ட் வொர்ரி.. எனக்கு எதுவும் ஆகாது.. கொஞ்சம் ஒருமாதிரி இருக்கு அவ்வளோதான்.. தூங்கினா சரியா போகும்..” என்றாள் அமைதியாய்..

ராஜனும் எதுவும் பேசாதே என்று சைகை செய்ய, சுதாவோ “சரி சரி தூங்கு..” என்றுவிட்டு, “நீங்க போங்க.. நான் கொஞ்சம் கூட இருக்கேன்..” என்று மகளோடு படுத்துக்கொண்டார்..

அங்கே சந்தியாவும் மகளோடு படுக்க, இருவருக்கும் பேச்சு நீண்டுகொண்டே போனது.. ஒரு நேரத்தில் சந்தியா உறங்கிட, பூர்ணிமா உறங்கவில்லை.. உறங்க முடியவில்லை.. பாலகுருவின் எண்ணமாகவே இருக்க, அவன் தூங்கியிருப்பானா?? எனக்கு தூக்கம் வரவில்லையே.. ஆனால் அவன் மட்டும் எப்படி தூங்கியிருப்பான்  என்று தோன்ற, வாட்ஸ் அப்பில் அவன் கடைசியாய் பார்த்த நேரத்தை பார்த்தாள்.

ஆனால் பாலகுருவோ மாலை ஹோட்டல் கிளம்பியதில் இருந்து நெட்டே ஆன் செய்யவில்லை போல.. மாலை நேரம் மட்டுமே காட்ட, எரிச்சலாய் இருந்தது பூர்ணிக்கு.. சும்மா சும்மா புரண்டு கொண்டு இருந்தாள்.

பாலகுருவின் நினைவுகளும், அவன் பேசியதும் மாறி மாறி மனதினில் வர, எப்போது உறங்கினளோ தெரியாது.. ஆனால் காலையில் சந்தியா எழுப்பிய பிறகே எழுந்தாள்.. பிறந்த வீட்டு சீராட்டு நடந்துகொண்டு இருக்க,

பாலகுருவோ மனதிற்குள் எரிமலையாய் பொங்கிக்கொண்டு இருந்தான். அவனுக்கு பூர்ணி போனது இன்னும் ஆங்காரம்..

‘என்னை தப்புன்னு சொல்லிட்டு.. இப்போ ஒண்ணுமே தெரியாதது போல கிளம்பி போறா..’ என்றவனும் இரவில் லேட்டாகவே உறங்கியிருக்க, காலையில் எப்போதும் போல் பழக்க தோஷத்தில், அருகே அவள் என்றெண்ணி

“பூர்ணி…” என்று சொல்லிக்கொண்டே கை போட, வெறும் மெத்தையில் அவன் கை விழ,  அவள் இல்லை என்பதை உணர்ந்து,

“ச்சே…” என்றே எழுந்து அமர்ந்தான்..

இருவருக்குமே காலை பொழுது இப்படி விடிய, ஆனால் அந்த தினேஷிற்கோ நன்றாய் விடியவில்லை போலும்.. ஆம் மாட்டிக்கொண்டான்.. போலீஸிடம்.. அவனாய் மாட்டவில்லை.. தேடி கண்டு பிடித்து இருந்தனர்..  இத்தனை நாள் காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவியணை அவர்கள் கவனிக்கும் விதத்தில் கவனிக்க,

“சார் சார்.. நான் எதுவும் பண்ணல சார்…”  என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் தினேஷ்…

“முதல்ல இந்த வீடியோ எப்படி கிடைச்சது அது சொல்லுடா…” என்று இன்ஸ்பெக்டர் கேட்க,

“சார்.. அது.. அது வந்து…” என்று பயத்தில் திணறினான் அந்த தினேஷ்..

“டேய் டேய்.. உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்போம்.. சும்மா அது இதுன்னு எல்லாம் எங்களுக்கு ஷோ காட்டாத.. விஷயம் இது தான்னு சொல்லிட்டா உனக்கு அடியாவது மிச்சம் ஆகும்..”

“சார் சார்.. இப்பவும் சொல்றேன் சார் நான் எதுவும் தப்பா பண்ணலை சார்..”

“ஓ… பின்ன எதுக்கு அந்த வீடியோவ நீ பரவ விட்ட??”

“அது.. அது.. நான் பண்ணல சார்..”

“பின்ன??? பின்ன யாரடா பண்ணா???”   

“சார் சார் ப்ளீஸ் சார்..” என்றவன் பதில் சொல்லாது நேரம் கடத்த, அவனுக்கு பல அடிகள் பரிசாய் கிடைத்தது..  ஒரு சில நொடிகளில் வலி பொறுக்காது,

“சார் சார் சொல்லிடுறேன் சார்..” என்று கதற,

“ஹ்ம்ம் அப்படி வா வழிக்கு..” என்ற இன்ஸ்பெக்டர், “உண்மையை சொல்லிட்டா உனக்குத்தான் நல்லது..” என,

“சார். நான் அந்த வீடியோ அனுப்பினது ஒருத்தருக்கு மட்டும்தான் சார்.. அதுவும் அந்த பூர்ணிமா பொண்ணுக்கு தான்.. மத்தபடி நெட்ல போட்டது நான் இல்லை..” என்றான் பேச முடியாது..

“நீயில்லைன்னா.. வேற யாருடா.. சொல்லு வேற யாரு?? உனக்கு எப்படி அந்த வீடியோ கிடைச்சது..”

“அ… அது…. அன்னிக்கு அவங்களுக்கு நிச்சயம் நடக்கும்போது, நானும் அங்கதான் சார் இருந்தேன்.. அந்த நிர்மலா மேடம் என் பிரன்ட் ஒருத்தனை தான் கேண்டிட் போட்டோஸ் எடுக்க அரேஞ் பண்ணிருந்தாங்க… அவன் போட்டோஸ் மட்டுமில்ல, வீடியோவும் எடுத்தான்..”

“டேய் போதும்.. அளவா அளந்துவிடு.. போட்டோ எடுக்க பாலகுரு வீட்ல தான் அரேஞ் பண்ணதா சொல்லிட்டாங்க..”

“இல்ல சார்.. நிர்மலா மேடமும் அரேஞ் பண்ணாங்க… இது சர்ப்ரைஸ் கொடுக்கன்னு.. அப்போதான் அந்த வீடியோ என் பிரன்ட் கேமரால ரிக்கார்ட் ஆச்சு..” என, இன்ஸ்பெக்டருக்கு ஓரளவு புரிந்தது..      

Advertisement