Advertisement

குருபூர்ணிமா – 16

ஹோட்டலில் இருந்து வீடு வருமுன்னே அப்படியொரு சண்டை இருவருக்கும்.. கிளம்புகையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தால், பூர்ணிமாவும் சரி, பால்குருவும் சரி கிளம்பியே இருந்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இப்போதோ… பேசி பேசி.. அப்படியொரு சண்டை..

“அப்போ நான் பண்ணது தான் தப்பா…” என்று அவனும்…

“இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..” என்று அவளும்..

ஹப்பப்பா.. இதற்கு பாலகுருவும் அவளிடம் கேட்டிருக்கவேண்டாம் நிர்மலா என்ன பேசினால் என்றது கேட்கமாட்டாயா என்று.. அவன் சும்மா இருந்திருந்தால் அவளும் சும்மாதான் இருந்திருப்பாள்.. நிச்சயம் கேட்டிருக்கவும் மாட்டாள்.. ஆனால் அவனாகவே கேட்டு, அவனாகவே சொல்லி இப்போதோ என்னை எப்படி அப்படி நீ சொல்லலாம் என்று சண்டையும் வந்தானது..

பூர்ணிமா நிர்மலா சொன்னதை மறுத்து பேசுவாள் என்று பாலகுருவின் மனம் எதிர்பார்ததுவோ என்னவோ ஆனால் அவள் இல்லை இல்லை அவள் சொன்னது சரியே என்று சொன்னதும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது..

“என்ன சொன்ன?? என்ன சொன்ன?? அப்போ.. அப்போ.. அவ சொன்னது எல்லாம் சரியா???” என்றான் நம்பாது திரும்பி..

“ம்ம்ச் பாஸ்.. வீட்ல போய் எதுவும் பேசிக்கலாம்.. நேரா பார்த்து டிரைவ் பண்ணு..” என்று அவள் இப்போதைக்கு இதை நிறுத்த என்ன, அவனோ காரை நிறுத்தியிருந்தான் சாலையின் ஓரத்தில்..

“பாஸ்…!!!!!”

“நீ ஏன் அப்படி சொன்ன???” என்றவனின் முகத்தினில் அப்படியொரு இறுக்கம்..

“நான் இப்போ என்ன பாஸ் தப்பா சொல்லிட்டேன்.. அதுக்கேன் கார் நிறுத்தின.. டைம் ஆச்சு..” என்று பூர்ணி இயல்பாகவே பேச முயன்றாலும்,

“ம்ம்ச் பூர்ணிமா…….” என்றான் அதட்டலாய்..

அவன் முகத்திலும் சரி குரலிலும் சரி என்ன இருந்தது என்று அவளுக்கு புரிபடவேயில்லை.. ஆனால் அப்படியொரு இறுக்கம்.. நீ எப்படி என்னை இப்படி சொல்லலாம் என்று அப்படி ஒரு அழுத்தம் அவன் பார்வையில் தெரிய,  அவன் கைகளை பற்றி

“பாஸ்…” என்றாள் மெதுவாய்..

“ஒன்னும் வேணாம்..” என்று பாலகுரு கைகளை உதற, அவன் செய்ததில் தன்னையும் மீறி பூர்ணிமா சிரித்துவிட, அது இன்னமும் அவனுக்கு அனலை கூட்டியது.

“என்ன டி.. என்னை பார்த்தா சிரிப்பா இருக்கா?? அன்னிக்கு அப்படித்தான் என்னாலதான் அந்த போஸ் இதெல்லாம் பண்ணான் அப்படின்னு சொல்ற.. இப்போ இவ.. இந்த நிர்மலா வந்து என்னவோ என்னை சொல்றா.. அதையும் நீ சரின்னு சொல்ற…” என்று எரிந்து விழ, அவன் பேசுவதையே பார்த்துகொண்டு இருந்தாள் பூர்ணிமா..

“என்ன பாக்குற பூர்ணி.. அப்போ எல்லாருக்கும் நான்தான் தப்பா தெரியுறேன் அப்படிதானே…”

“ஷ்..!!!! பாஸ்.. உன்னை நான் எப்போ தப்புன்னு சொன்னேன்…” என்றாள் ஓரளவு அவனை சமாதானம் செய்யும் விதத்தில்..

“பின்ன.. அது நிர்மலா சொன்னது சரின்னு சொன்ன…”

“ஆமா.. இப்பவும் சொல்றேன்.. நிர்மலா சொன்னது சரிதான்.. அதுக்காக நான் உன்னை தப்புன்னு சொன்னதா அர்த்தமில்லை..”

“நிர்மலா என்னைத்தானே சொன்னா…”

“ஆமா சொன்னா…” என்ற பூர்ணிமாவின் குரலிலும் ஒரு கடுப்பு எட்டிப்பார்க்க, பாலகுரு முகத்தினை உர்றேன்றே வைத்திருந்தான்..

“அந்த போஸ், அந்த பொண்ணு பின்னாடி சுத்தி எவ்வளோ டார்ச்சர் பண்ணான் தெரியுமா?? அவளுக்கு அவனை பிடிக்கவேயில்லை.. அதனால தான் வேற ஆள் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சோம்.. அது என் தப்பா?? சொல்லு டி..

இந்த நிர்மலா எந்த நேரத்துல என்ன செய்றோம்னு இல்லாம, அவ இஷ்டத்துக்கு பண்ணா?? இங்க பாரு என்கிட்ட அவ வந்து நீ எனக்கு வேண்டாம்னு சொல்லிருந்தா, நான் கண்டிப்பா அவக்கிட்ட ரீசன் கேட்டிருப்பேன்.. ஆனா வீட்டுக்கு போன பெரியவங்கக்கிட்ட அப்படி பேசி அனுப்பிருக்கா.. அப்ப்டியிருக்கபோ நான் போய் திரும்ப அவக்கிட்ட பேசி நம்ம வீட்டு பெரியவங்களை அசிங்கப் படுத்த விரும்பல… சொல்லு இதுவும் என் தப்பா??” என்று எரிந்து விழ, பூர்ணிமாவிற்கும் பொறுமை பறந்தது..

“போதும் பாஸ்.. இப்பவும் நீ ஒரு சைட் மட்டும் தான் பாக்குற.. அந்த போஸ்.. என்னவோ எனக்கு தப்பான ஆளா தெரியலை.. அவன் லவ்வ எப்படியாது ஓகே பண்ண கூட அந்த பொண்ணு பின்னாடி சுத்தியிருக்கலாம்.. இதேது அவன் வந்து உங்கள்ள யார்க்கிட்டயாவது பேசி, அந்த பொண்ணை கட்டிருந்தா, அந்த பொண்ணுக்கு கண்டிப்பா ஒரு சந்தோசமான லைப் தான் அமைஞ்சிருக்கும்..

சரி அதை விடு, நிர்மலா.. இந்த ப்ளேஸ்ல நிர்மலான்னு மட்டுமில்லை நானா இருந்தாலும் ஒருவேளை அப்படித்தான் சொல்லிருப்பேன்…. இது பொண்ணுங்களோட நேச்சர்…” எனும்போதே,

“ஆமா பொல்லாத நேச்சர்.. போ டி.. நீ லவ் பண்ணி கிழிச்ச லச்சணம் எனக்கு தெரியாதா.. பேச வந்திட்டா தப்பு சரின்னு..” என்று பதிலுக்கு அவனும் வார்த்தைகளை விட,

“என்னது??!! என்ன சொன்ன???” என்று பூர்ணியும் எகிறிவிட்டாள்..

“ஆமா சொல்வேன்.. எனக்கு இன்னொருத்தி கூட நிச்சயம் ஆகறவரைக்கும் கூட நீ சும்மா தானே  இருந்த நீ.. உன் லவ்க்காக என்ன பண்ணிட்ட நீ.. சொல்லு.. என்ன டி பண்ண.. எனக்குதான் புரியலை.. அப்படியே வச்சிக்கோ.. நீ என்ன பண்ணிருக்கணும்..” என்று அப்படியே பிளேட்டை பாலகுரு பூர்ணிமா மீது திருப்பிட,

‘அடப்பாவி…!!!!’ என்று அதிர்ந்தவளுக்கு,  எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ, அதுவும் அவள் பொக்கிசமாய் நினைத்து அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று மனதினுள்ளே போட்டு வைத்திருந்த காதலை சொல்லவும், அடக்கமாட்டாத கோபம் வந்துவிட்டது..

“போதும் நிறுத்து பாஸ்.. உன் மேல இருக்க தப்ப மறைக்க என்னை சொல்லாத..” என்று கத்திவிட, பாலகுரு பேசவேயில்லை..

அப்படியே கொஞ்ச நேரம் அமர்ந்து இருந்தவன், அடுத்து வேகமாய் காரினை செலுத்த, பூர்ணிமாவும் எதுவும் பேசாது அமர்ந்திருந்தாள்.. கோபத்தை அடக்க அடக்க, இருவருக்குமே சூடாக மூச்சுக்கள் வந்து கொண்டு இருக்க, அவனோ அவ்வப்போது ஸ்டியரிங்கை குத்திக்கொண்டு இருந்தான்..

பூர்ணிமாவிற்கோ, ‘செய்றது எல்லாம் இவன்.. லாஸ்ட்ல நீ என்ன பண்ணன்னு என்னை சொல்லிட்டானே..’ ஆங்காரமாய் வந்தது..

இருவரின் மனதிலுமே அப்படியொரு கோபம்.. வீட்டிற்கு போய் மேலும் சண்டை தொடரவே இருவரும் நினைத்திருக்க, வீட்டிற்கு சென்றாலோ அங்கே சந்தியாவும் ராமலிங்கமும் இருந்தனர். காரை நிறுத்தும் போதே பூர்ணிமாவும், பாலகுருவும் அவர்களின் கார் பார்த்து வேகமாய் உள்ளே செல்ல, இருவரின் முகத்திலும் உஷ்ணம் உள்ளே சென்று ஒரு சிரிப்பை வரவழைத்துகொண்டனர்.

மறந்தும் கூட ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொள்ளவில்லை, பொதுவான வரவேற்பு, பொதுவான பேச்சு என்றிருக்க, பூர்ணிமா போய் சந்தியாவிடம் அமர்ந்து கொண்டாள்..

“ம்மா வர்றேன்னு சொல்லவேயில்லை…” என,

“இங்க வர்றதுக்கு அவங்க சொல்லணுமா என்ன…” என்ற முத்துராணி, “உள்ள கூட்டிட்டு போ பூர்ணி..” என்று அம்மாவும் மகளும் பேசிக்கொள்ளட்டும் என்று சொல்ல,

“ம்ம் சரிங்க பெரியத்தை..” என்று பூர்ணிமாவும் சந்தியாவை அழைத்துக்கொண்டு உள்ளே அவர்களின் அறைக்குப் போனாள்..

“ம்மா ஒரு போன் பண்ணிருக்கலாம்ல..” என்று திரும்ப பூர்ணிமா சொல்ல,

“வரணும்னு தோணிச்சு வந்துட்டோம்.. நீயும் இத்தனை நாளா அது இதுன்னு அலைஞ்சிட்டு இருந்த.. எவ்வளோ டென்சன்.. வந்தாலும் ரிலாக்ஸா பேசிக்கவும் முடியலை.. இப்போதான் எல்லாம் கொஞ்சம் முடிஞ்சதே பூர்ணி அதான் வந்தோம்..” என்ற சந்தியா, மகளின் முகத்தையே பார்த்துகொண்டு இருந்தார்..

 

“ம்மா என்னம்மா.??” என்ற பூர்ணி அவரின் கைகளை பிடித்துக்கொள்ள,

“ரொம்ப பயந்துட்டேன் டி.. இருந்து இருந்து ஒரு வாழ்க்கை உனக்கு அமைஞ்சிருக்கு.. அது நல்லபடியா இருக்கணும் இல்லையா…” என,

“ம்மா நான் நல்லா இருக்கேன்..” என்றாள் சந்தியாவின் மடியில் படுத்துக்கொண்டே..

“ஹ்ம்ம் நல்லாத்தான் இருக்கணும்.. நீயும் எல்லார்கிட்டயும் நல்லபடியா நடந்துக்கணும் பூர்ணி.. இங்க உன்னை பார்த்தா இன்னும் அப்படியே தான் இருக்க..”

“ம்மா.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்.. கல்யாணத்துக்கு அப்புறமும் உன் பொண்ணு முன்ன மாதிரியே இருக்கன்னு சந்தோஷ படு..” என்றவள் எழுந்து அமர்ந்துவிட்டாள்..             

“உடம்பு எதும் சரியில்லையா பூர்ணி..”

“இல்லையே.. அதெல்லாம் இல்லம்மா..”

“பின்ன ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு..” என்று சந்தியா கேட்டதும், சட்டென்று பூர்ணி இன்னும் கவனமாய் இருந்துகொள்ள,

“என்னடி.. வந்ததுமே பார்த்தேன்.. சிரிச்சிட்டே வந்த, ஆனா அவ்வளோ ஒன்னும் பிரகாசம் இல்லையே…” என்றார் மகளின் முகத்தினையே பார்த்து..

“அடடா அதெல்லாம் இல்லைம்மா.. லைட்டா தலைவலி.. அவ்வளோதான்.. வெளிய சாப்பிட்டோமா அது ஒருமாதிரி இருக்கு..” என்றவள் வேண்டுமென்றே லேசாய் ஏப்பம் விட,

“ம்ம் ம்ம்..” என்றவர் அப்போதும் சமாதானம் ஆகாமல்,  “பூர்ணி.. ஒரு ரெண்டு நாள் அங்க வந்து இருக்கியா டா.. பேஸ் டல்லா இருக்கே.. உனக்கும் இத்தனை நாள் டென்சன்லயே போயிருக்கும்..” என்று ஆசையாகவே அழைத்தார் மகளை.

சந்தியா இப்படி கேட்டதுமே, அவளுக்குமே என்னவோ திடீரென்று அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம்.. அதுவும் இப்போது பாலகுருவோடு சண்டை போட்ட பிறகு, என்னவோ நிஜமாகவே அங்கே அம்மா வீட்டில் சென்று இரண்டு நாலாவது இருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது அவளுள்..

திருமணம் முடிந்து மறுவீடு என்று சென்று வந்தது, பின் நடுவில் ஒருமுறையோ இரண்டு முறையோ போய் போய் வந்தது அவ்வளவே, அதன் பின் ம்ம்ஹும் போகவில்லை.. இத்தனை நாள் தோன்றவும் இல்லைதான்.. ஆனால் இப்போது போயே ஆகவேண்டும் போல் இருக்க,

சந்தியாவும் அவளின் முகத்தையே பார்த்துகொண்டு இருக்க “பெரியத்தைக்கிட்ட கேட்டிட்டு வர்றேன் ம்மா..” என்றவள் முத்துராணியை பார்க்கச் சென்றாள்..

அவரிடம் போனாளோ பாலகுருவும் அங்கே இருக்க, இருவரின் அப்பாக்களும் என்னவோ பேசிக்கொண்டு இருக்க, அவனும் சித்தப்பாவும் போனில் எதுவோ பார்த்துகொண்டு இருந்தனர்..

அவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு   “பெரியத்தை, நான் ஒரு ரெண்டு நாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வரவா??” என்று கேட்க,

அவருக்கு தான் நடந்தவை தெரியாதே, “போயிட்டு வா பூர்ணி.. நீயும் தான் எங்கயும் போகலை.. அது இதுன்னு வேற நடந்து போச்சு.. போயிட்டு வா.. ரிலாக்ஸ்டா இருக்கும்…” என்று சொல்லிட, அடுத்து பாலகுரு முகம் பார்த்தாள்..

அவனோ ‘நீ என்கிட்டேயா கேட்ட..’ என்பதுபோல் போன் பார்த்துகொண்டு இருக்க, அதனை கவனித்த மைதிலி

“பாலா, பூர்ணி உன்னைத்தான் பாக்குறா.. போய் இருந்துட்டு வர சொல்லு… அவளும் ஒரே டென்சன்லயே இருந்துட்டா…”  என்றிட ,

“ஆ.. என்ன சித்தி…” என்றவன், அப்போது தான் பூர்ணிமாவை கவனிப்பது போல்.. அவள் வரும்போதே கவனித்துவிட்டான்.. வந்ததுமே பெரியத்தை என்று ஆரம்பிக்கவும் ‘போ டி..’ என்ற கோபம் அவனுள்.. இப்போதோ மைதிலி சொல்லவும்,  “என்ன பூர்ணி…??” என்றான் ஒன்றும் தெரியாது..

“பூர்ணி போய் அவங்க அம்மா வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டுமான்னு கேட்டா டா.. நானும் சரின்னு சொல்லிட்டேன்…” என்று முத்துராணி சொல்ல,

‘யாரைக்கேட்டு சொன்னீங்க..’ என்று கத்த வேண்டும் போல் வந்தது அவனுக்கு.. ஆனால் கேட்கவேண்டியவள் நேராய் தன்னிடம் முதலில் கேட்காமல் அம்மாவிடம் கேட்டுவிட்டு, பின் என்ன ஒப்புக்காக என்னிடம் பார்த்து நிற்பது என்று தோன்ற, “ஓ.. சரி சரி..” என்றான் பொத்தாம் பொதுவாய்..

பாலகுரு, பூர்ணிமா அங்கே செல்வதற்கு சரி என்று சொன்னானா?? இல்லை முத்துராணி சொன்னதற்கு சரி என்று சொன்னானா யாருக்கும் விளங்கவில்லை.. பூர்ணிமாவிற்கு ‘என்னை நீ அப்படி சொன்னாதானே.. உங்கிட்ட நான் கேட்கமாட்டேன்..’ என்ற பிடிவாதம்,

அவனுக்கோ ‘என்னெல்லாம் பேசிட்டு இப்போ இவ ரிலாக்ஸ் பண்ண போறாளா?? ஏன் எனக்கு டென்சன் இல்லையாமா..’   என்றெண்ணியவன், அவளை வெளிப்படையாகவே முறைத்தான்..

பூர்ணிமாவும் அவனை பார்த்தவள், “ப்பா.. கார் எடுத்து முன்னாடி நிறுத்துங்க.. நான் ட்ரெஸ் பேக் பண்ணிட்டு வர்றேன்..” என்று சொல்ல,

ராமலிங்கமும் “நீ வாடா.. நிறுத்திக்கலாம்..” என்றவர், “குரு நீயும் வாயேன்..” என்றார் மருமகனை அழைக்கும் விதமாய்..

“ஹா… மாமா…” என்றவன், இப்போதும் பூர்ணி முகம் பார்க்க, “டேய் நீயும் போயிட்டு வா..” என்று தனபால் சொல்லவும்,

“இல்ல சித்தப்பா..” என்றவன், “இல்ல மாமா.. இப்போ பூர்ணி வந்து கொஞ்சம் ரிலாஸ் பண்ணட்டும்.. கார் எடுத்த பத்து நிமிஷம் வீடு.. நான் வரமா போகபோறேனா என்ன..” என்று நல்லவிதமாகவே மறுத்துவிட்டான்..

பூர்ணிமா வரவும் சந்தியாவும் எழுந்து வந்தவர், முத்துராணியிடம் “ரெண்டு நாள் பூர்ணி அங்க இருக்கட்டுமே அண்ணி…” என்று சொல்ல,

“அட நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்.. தாரளாம வரட்டும்..” என்றவாறு அடுத்து அடுத்து பேச்சு தொடர, பூர்ணிமா இரண்டு நொடிகள் நின்றவள், பின் அறைக்கு செல்ல, பாலகுருவும் அப்படியே எழுந்து உள்ளே போனான்..

Advertisement