Advertisement

                                                            குருபூர்ணிமா – 15

மனிதவாழ்வு எப்போதுமே ஒன்றுபோலே இருக்காது.. அது அனைவருக்குமே தெரியும்.. இருந்தாலும் நமக்கு ஏனடா இதெல்லாம் நடக்கிறது… நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று நினைக்காதவர்கள் யாருமில்லை.. எது எப்படியோ நடப்பது நல்லதாய் நடந்தால் போதும் என்றும், நடக்கும் அனைத்துமே ஒருவிதத்தில் நல்லதற்கே என்ற எண்ணத்தோடும் இருந்திட்டால் வாழ்வு கொஞ்சம் நிம்மதியாய் போகும்..

அதுபோலவேதான் இருந்தது பூர்ணிமாவிற்கும், பாலகுருவிற்கும்.. நடந்த இத்தனை களேபரங்களும் சேர்த்து அவர்களுக்குள் ஒரு பிணைப்பையும் ஒருவித புரிதலையும் கொடுத்து இருந்தது.. அவ்வப்போது இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரும்தான்.. ஆனாலும் யாரவது ஒருவர் விட்டுகொடுத்து போய்விட ஓரளவு சுமுகமாகவே இருந்தது..

அவளது மனநிலை அறிந்து அவனும், அவனது வேலைகள், நேரங்கள் அறிந்து அவளும் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து, புரிந்து நடந்துகொள்ள, கேஸ் ஒருப்பக்கம் நடந்துகொண்டு இருந்தது..

எத்தனை சீக்கிரம் முடிக்க முடியுமோ அத்தனை சீக்கிரம் முடிக்க நினைக்க, போஸும் அவனது கூட்டாளியும் சரண்டர் ஆனதுமே, முதல்படியாய் விசாரணைகள் முடிந்து, இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்த, போஸ் தனக்கும் பாலகுருவிற்கும் ஏற்பட்ட முன் பகை காரணமாகவே இதனை செய்ததாக ஒப்புக்கொண்டான்..

பூர்ணிமாவிடமும் சில பல கேள்விகள் கேட்கப்பட்டது..

இப்படித்தான் விஷயம் என்றதும் ஏன் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை, ஏன் சப்தமிடவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் கேட்க,

“உண்மையா சொல்ல போனா எனக்கு அப்போ எதுவுமே தோணலை.. இதை தடுக்கணும்னு தான் மனசு போச்சே தவிர.. கத்தி, அடுத்தவங்க உதவியை கேட்கனும்னு எனக்கு அப்போ தோணவேயில்லை.. என்னோட மனசுல இருந்தது எல்லாம்.. பாஸ்.. சாரி.. அவருக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு மட்டும் தான்..” என்று உறுதியாய் பதில் சொன்னால் பூர்ணிமா..

ஆகமொத்தம் ஒருவழியாய் இந்த வழக்கு முடிந்திட, போஸ்க்கும் அவனின் கூட்டளிக்கும், கொலை முயற்சி விதியின் கீழ் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளிக்க,  இதில் யாரும் எதிர்பார்க்காவிதமாய் போஸ் பாலகுருவையும் இழுத்துவிட்டான்..

“நான் எப்பவோ சரண்டர் ஆகிருப்பேன் சார்.. ஆனா இந்த பாலகுரு தான் எந்த எவிடென்சும் இருக்கக் கூடாதுன்னு, எல்லாத்தையும் அழிச்சிட்டு, என்னையும் கொஞ்ச நாள் மிரட்டி வச்சிருந்தான்… அடிக்கக்கூட செஞ்சான்..” என்றிட, அனைவர்க்கும் திக்கென்று ஆனது..

அதிலும் பூர்ணிமாவிற்கு ‘ஐயோ இவன் என்ன சொல்றான்…’ என்று திடுக்கிட்டுப் போனாள்..

இன்றோடு இது முடிந்திடும், என்று வந்திருந்தவர்களுக்கு போஸ் இப்படி இழுத்துவிட்டது அதிர்ச்சிதான்.. ஆனால் பாலகுரு இதனை எதிர்பார்த்தான் போல.. என்ன இருந்தாலும் இவன் கடைசி நேரத்தில் எதுவும் செய்வான் என்று தோன்றியதுவோ என்னவோ. அவனுக்கு அந்த அதிர்ச்சி நேரவேயில்லை..

“பாஸ்.. என்னதிது…” என்று பூர்ணிமா இறுக்கமாய் அவனின் கரங்களை பற்றிக்கொள்ள,

“ஷ் விடு பார்த்துக்கலாம்…” என்றான் அமர்த்தலாய்..

அடுத்து பாலகுருவை விசாரிக்க அழைக்க, பாலகுரு வேறெதுவும் சொல்லாது தான் செய்ததை ஒத்துக்கொண்டான்..

“ஒரு பொண்ணோட வாழ்க்கையை மனசுல வச்சுத்தான் இருந்த எல்லா ஆதாரங்களையும் அழிச்சேன்.. போலீஸ் கேஸ் கூட அப்போ நாங்க வேண்டாம்னு நினைச்சது இதனாலதான்.. மத்தபடி வேறெதுவும் இல்லை..” என்று சொல்ல,

“என்ன இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு தான்.. இப்படி ஒவ்வொருத்தருமே சட்டத்தை உங்க கையில எடுத்துக்கிட்டா  பின்ன நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்???” என்றார் ஜட்ஜ்..

“நான் பண்ணது தப்புதான்.. ஆனா அதை தப்பான விஷயத்துக்கு பண்ணலை… இதுக்குமேல நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் சரி…” என்றுவிட்டான்..

“சட்டத்தத்திற்கு புறம்பாக நடந்ததற்காகவும்.. ஆதாரங்களை அழித்தமைக்காகவும், இரண்டு மாத காவல் தண்டனை அல்லது ருபாய் ஐம்பது லட்சம்  அபராதம்..” என்று பாலகுருவிற்கு நீதிபதி தீர்ப்பு வழங்க, அதனை பாலகுருவும் ஒப்புக்கொண்டான்..

முதல்வேலையாக வந்து பாலச்சந்திரன் ஐம்பது லட்சம் ரூபாயை கட்டிட, அந்த வழக்கு அத்தோடு முடிந்தது.. 

ஆனால் இதெல்லாம் நடக்குமுன்னே பூர்ணிமா தான் கொஞ்சம் டென்சனாகிவிட்டாள்.. வீட்டிற்கு வந்தப்பின்னும் கூட ஒருவித டென்சன் அவளிடம் இருந்துகொண்டே இருந்தது..

முத்துராணி கூட “விடு பூர்ணி… அதான் எல்லாம் முடிஞ்சதே..” என்று சமாதானம் செய்ய,

“இல்ல பெரியத்தை.. அந்த போஸ் சொல்றபோ.. எனக்கு ஒருமாதிரி பயமாகிடுச்சு…” என்றாள் பாலகுருவை பார்த்துக்கொண்டே.. 

மைதிலி உணவு பரிமாறி கொண்டு இருக்க, பாலகுரு அவளைப் பார்த்தவன்,  “இப்படிதான் வரும்னு முன்னாடியே தெரியும் பூர்ணி. லாயர்க்கிட்ட எல்லாம் கேட்டுதான் வச்சிருந்தேன்.. எனக்கு இந்த போஸ் பத்தி நல்லாவே தெரியும்..” என,

“இருந்தாலும் பாஸ்…..”

“அதான் முடிஞ்சதே விடு…” என்றான் சமாதானமாய்..

“என்னவோ போ பாஸ்.. நீ பேசாம அந்த போஸ அவன் லவ் பண்ண பொண்ணுக்கே கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்போ இந்த பிரச்சனை எதுமே வந்திருக்காது…” என்றபடி அவளும் உண்ணத் தொடங்க,

அப்போது தான் ஓரளவு பாலகுருவிற்கு கொஞ்சம் நிம்மதியாய் இருக்க, பூர்ணிமா இப்படி பேசியது அவனின் நிம்மதியை கெடுப்பதாய் இருக்க,

“ம்ம்ச் இப்போ என்ன செய்ய சொல்ற???” என்றான் எரிச்சலாய் கையில் இருந்த உணவை தட்டில் போட்டு..

“சப்பிடுறப்போ என்ன பேச்சு இது…” என்று மைதிலி இருவரையும் அதட்ட,

“நானும் கோர்ட்ல இருந்து சொல்றேன் விடு விடுன்னு சும்மா அதையே சொல்றா சித்தி…” என்றான் சத்தம் கூட்டி..

பூர்ணிமா அமைதியாய் தட்டைப் பார்த்து குனிந்துகொள்ள, முத்துராணி “டேய் விடு டா.. சாப்பிடுங்க ரெண்டு பெரும் ..” என, அவனுக்கோ பூர்ணிமா பதில் சொல்லாது தட்டைப் பார்த்து அமர்ந்து இருந்தது இன்னும் எரிச்சல் தர, 

 “ஆமா இப்போ என்னால தான் எல்லாம்.. அப்படிதான..” என்றவன் சாப்பிடாமல் எழுந்துவிட,

“டேய்…” என்று மைதிலியும் முத்துராணியும், “பாஸ்…” என்று பூர்ணிமாவும் அவனை நிறுத்த,

“மனுசனை நிம்மதியா இருக்க விடுறது இல்லை..” என்று முனங்கியபடி திரும்ப அமர்ந்தான்..

அவ்வளவுதான் அதன்பின் யாரும் எதுவும் பேசவில்லை.. அவரவர் அவரவர் வேலையை பார்க்க, பாலகுரு உண்டுவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.. அவன் போனதும் தான் முத்துராணி,

“உனக்குத்தான் அவனை தெரியுமே.. சும்மா ஏன் அதை பேசுற…” என்று கடிய,

“இனிமே பேசலை பெரியத்தை..” என்றுவிட்டு அவளும் அறைக்கு சென்றுவிட்டாள்..

இரவு திரும்ப பாலகுரு வீடு வரும்போது இயல்பாகவே வர, மைதிலியோ பூர்ணியிடம் “நீ எதுவும் கேட்டுக்காத…” என்றிட,

“சரி சின்னத்தை…” என்றவளும் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்துகொண்டாள்..  

அவ்வளவுதான் இந்த சண்டை இதோடு முடிந்தது.. அடுத்து யாரும் இதனை தொடரவில்லை.. அவனும் சரி அவளும் சரி… அடுத்து வேறெதுவும் பேசாது இருக்க, ஆக பிரச்சனை தரும் விஷயங்கள் எதுவும் இருவருக்கும் பொதுவில் இருப்பதை தள்ளிவைத்து விட, அடுத்த சில நாட்கள் நன்றாகவே போனது.

பாலகுரு அந்த தினேஷ் என்பவன் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தான்..   அவன் யார் என்று தெரிந்துவிட்டது.. நிர்மலா வீட்டு டிரைவர் அவன்.. அதாவது சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன்னே வரை அங்கேதான் இருந்தான்.. இப்போது அங்கில்லை..

இப்போது எங்கிருக்கிறான், அவனுக்கு இந்த வீடியோ எப்படி கிடைத்தது, எதனால் இதனை வளைத்தளங்களில் பரவிட செய்தான் என்பது இப்போது வரைக்கும் ஒன்றும் புரியவில்லை.. விசாரிப்புகள் எத்தனை நடந்தாலும் அந்த தினேஷ் எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை..

“சார் ஒரு சின்ன கிளாரிபிக்கேஷன்.. வந்துட்டு போக முடியுமா??” என்று ஏரியா போலீ ஸ்டேசனில் இருந்து போன் வர,

பாலகுரு “சரி..” என்று கிளம்பினான்..

பூர்ணிமாவும் வரவேண்டும் என்று சொல்ல, அவளையும் அழைத்துக்கொண்டே கிளம்பினான்.. போஸ் வந்து சரண்டர் ஆகவுமே, மேற்படி விசாரணைகள் எல்லாம் இவர்களின் ஏரியா போலீஸ் ஸ்டேசனில் தான் நடந்தது..

“பாஸ்.. வர வர இந்த கேஸ் ரொம்ப போர் அடிக்குது..” என்றபடியே காரில் எறியவளை பார்த்தவன்,

“எல்லாம் சொல்லுவ டி சொல்லுவ.. பர்ஸ்ட் டே மேல சாஞ்சிட்டு அழுதது என்ன?? இப்போ போர் அடிக்குதா.. இரு உன் மேல நாலஞ்சி கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் நானே…” என்று காரை கிளப்பினான்..

“ஹா ஹா.. போ பாஸ்.. நானும் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்.. என்னை ரொம்ப லவ் டார்ச்சர் பண்றான்னு..”

“யம்மா நீ கொஞ்சம் சும்மா இருந்தாவே போதும்..” என்றுதான் அழைத்துக்கொண்டு போனான்..

ஆனால் அங்கே போனாலோ நிர்மலாவும் அவளின் அப்பாவும் ஏற்கனவே அங்கே வந்திருந்தனர்… இவர்களை பார்த்ததும் நிர்மலா திரும்பிக்கொண்டாள்.. இவர்களும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை அவர்களை..

இன்ஸ்பெக்டர் ராமலிங்கத்திடம் “ஏன் தினேஷை நீங்க வேலையை விட்டு தூக்குனீங்க..” என்று கேட்க,

“அவனை அப்பாயின்ட் பண்ணது மட்டும் தான் நான்.. பிடிக்கலை சரியா வேலை பார்க்கலைன்னு சொல்லி அவனை அனுப்பினது நிர்மலாதான்..” என்றார் அவர்..

இப்போது அனைவரின் பார்வையும் அவள்மீது திரும்ப, “சார்.. வொர்க்ல அவன் பண்ணது எதுவுமே சரியில்லை.. எட்டு மணிக்கு வர சொன்னா அவன் வர்றதே ஒன்பது மணிக்குத்தான்.. கேட்டா குழந்தைக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிட்டல் போயிட்டு வர்றேன் சொன்னான்..

நாங்க எங்க வசதிக்காக தான் வேலைக்கு வைக்கிறோம்.. அவங்க நேரத்துக்கு வந்தா எப்படி??” என்று நிர்மலா, பூர்ணிமா பாலகுரு மீதிருந்த கடுப்பில் கொஞ்சம் வேகமாகவே பேச,

“ஒருவேளை அவனுக்கு நிஜமாவே அப்படி ஒரு சூழ்நிலை அப்போ இருந்திருக்கலாமே..” என்றார் இன்ஸ்பெக்டர்..

“சார்.. அது ஒன் டே.. அவன் அடுத்தும் எதுவும் சரியா வேலை செய்யலை.. நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு செஞ்சான்.. அதனால தான் வேலைவிட்டு போ சொல்லிட்டேன்..

ஆனா போன்னு சொல்லவும் தான் அவன் ரொம்ப சின்சியரா இருக்க போல அவ்வளோ கெஞ்சினான்.. எனக்கு பிடிக்கலை அனுப்பிட்டேன்..” என்றாள் கடுப்பாய்..

“மே பீ, இதனால கூட, அவன் இந்த வீடியோவ ஸ்ப்ரெட் பண்ணிருக்கலாமே??”

“அது எப்படி சார்.. அதான் இவங்க எல்லா எவிடென்சும் அழிச்சுட்டாங்களே..” என்றார் ராஜன், பாலகுருவை காட்டி..

Advertisement