Advertisement

குருபூர்ணிமா – 14

பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது..

ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ அவ்வளோ முடிக்கணும்.. நம்ம கல்யாண வேலை பார்ப்போமா இல்லை இதுக்கு அலைவோமா??” என்று..

ராஜனும் அவர் பக்கத்து காய்களை நகர்த்த, ராமலிங்கமும் பூர்ணிமாவிற்காக அவர் பக்கத்து முயற்சிகளை செய்ய, பாலகுரு வீட்டினரை கேட்கவே வேண்டாம்.. அனைத்திலும் பணம் புரண்டது அது உண்மையான உண்மை.. ஆனால் இம்முறை எதையும் மூடி மறைக்க அல்ல.. விசயத்தினை சீக்கிரமே முடிக்க.. அதுவும் கொஞ்சம் லீகலாக.. கோர்ட் கேஸ் அது இதென்று அதிகம் நாட்களை இழுக்காது எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் முடித்திட…

அனைவரும் கமிஷனர் ஆபிஸ் செல்ல, அங்கேயோ “கண்டிப்பா இது கேஸ் பைல் பண்ணியே ஆகணும். எங்களுக்கு மேல மேல ப்ரெஷர்.. உங்க சைட் தப்பில்லைங்கிறப்போ நீங்க ஏன் டென்சன் ஆகணும்…” என்றனர்..

“சார் அதெல்லாம் ஓகே.. இந்த வீடியோ காப்பி என்கிட்டே மட்டும் தான் இருக்கு.. நான் அதை வீட்ல கூட யார்கிட்டயும் காட்ல.. அப்படியிருக்கப்போ இப்படி ஸ்ப்ரெட் ஆகிருக்கு…” என்று பாலகுரு சொல்ல,

“நீங்களும் ஒரு கேஸ் கொடுங்க.. நம்பர் ட்ரேஸ் பண்ணலாம்.. சைபர் க்ரைம்ல சொல்லி லாக் பண்ணிடலாம்… பட் இந்த கேஸ் கண்டிப்பா கோர்ட்டுக்கு போயித்தான் அகனும் மிஸ்டர்.. பாலா.. வேற வழி இல்லை இப்போ..” என்று கையை விரித்தார் கமிஷனர்..

பாலகுரு என்ன செய்வது என்று பாலச்சந்திரன் முகத்தினை பார்க்க, அவரோ “நீயும் பூர்ணிமாவும் வெளிய போயி இருங்க…” என, ஒன்றும் செல்லாமல் இருவரும் எழுந்து வந்துவிட்டனர்..

பூர்ணிமாவிற்கு உள்ளே பேச்சே வரவில்லை.. என்னவோபோல் இருந்தது.. இப்போது வெளியே வரவும் தான் கொஞ்சம் சுவாசம் சீரானது போல் தோன்றியது.. ஒருநொடி மனம் சுணங்கினாலும், அடுத்த நொடி தன்னை தானே திடமாய் வைத்துக்கொண்டாள்..

‘ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாகும்…’ என்று தனக்குதானே சொல்லிக்கொள்ள,        பாலகுருவோ பூர்ணிமா முகம் பார்க்க, அவளோ எதுவானாலும் சரி பார்த்துகொள்வோம் என்பதுபோல அமர்ந்திருந்தாள்..

“என்ன பூர்ணி… சைலேன்ட்டா இருக்க???”  

“என்ன சொல்ல பாஸ்.. விடு பார்த்துக்கலாம்…” என்றவள், “என்னை அர்ரெஸ்ட் பண்ணுவாங்களா???” என்றாள் திடுமென..

“ச்சி ச்சி… என்ன பேச்சு இது..”

“ம்ம்ச் எப்படியும் என்கொயரி போகும்தானே…”

“ம்ம்ம்ம்…”

பாலகுருவிற்கு இன்றே ஏதாவது செய்து இதனை எல்லாம் ஒன்றுமில்லாது ஆக்கிட மாட்டோமா என்றிருந்தது.. மனது ஒருமாதிரி சுமையாய் உணர, தன்னால் தானே அனைத்தும் என்ற எண்ணமும் தலைத்தோங்க, பூர்ணியின் கரத்தினை இறுக பற்றிகொண்டான்..

“விடு பாஸ் பார்த்துக்கலாம்.. ஐம் ரெடி பார் எவ்ரிதிங்…” என்றவள் அவனுக்கு தைரியம் சொல்ல,

“போ டி…. எனக்கு அந்த தைரியம் இல்ல…” என்றவன் அவள் விரல்கள் ஒடிந்துவிடும் அளவிற்கு இறுக்கமாய் கரத்தினை பற்ற,

“ஷ் பாஸ்…” என்றவள் மற்றொரு கரத்தால் அவனின் கை மீது வைத்து அழுத்தினாள்..

சரியாய் அதே நேரம் நிர்மலாவும் அவளின் குடும்பமும் வந்து சேர, அவர்களுக்கு முதலில் கிடைத்த காட்சியே இவர்கள் இருவரும் இப்படி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததுதான்.. நிர்மலா ஏற்கனவே கடுப்பில் தான் வந்தால்.. இதில் இப்படியொரு காட்சியென்றால் அவளுக்கு எப்படி இருக்கும்..

இவர்கள் இருவரும் வந்தவர்களை கவனிக்கவில்லை.. ஆனால் அவர்கள் இவர்களைப் பார்க்க, நிர்மலாவை சுதா “நீ அமைதியா மட்டும் இரு…” என்று அடக்கி வைத்தார்..

அதற்குள் ராஜன், உள்ளே செல்ல அனுமதிகேட்க, வெளியே இருந்த காவல் அதிகாரி ஒருவர், உள் சென்று மீண்டும் வெளிவந்து உள்ளே போகுமாறு சொல்ல, அவர் வந்து போனதில் தான் பாலகுருவும் பூர்ணிமாவும் இவர்களின் பக்கம் திரும்பினர்..

பூர்ணிமா இம்முறை எதுவும் தயங்கவில்லை.. அவர்களை பார்த்தால் அவ்வளவே.. என்ன?? ஏது??   எதற்கு என்றெல்லாம் எந்த விசாரிப்பும் முகத்தில் கூட காட்டிக்கொள்ளவில்லை.. வெறுமெனே ஒரு பார்வை.. அதுவும் ஒருசில நொடிகள் தான் அதற்குமேல் பார்வையை திருப்பிக்கொண்டாள்..

இவர்களிடம் பேச எனக்கு என்ன இருக்கிறது என்ற பாவனை.. இதழில் வேண்டுமென்றே ஒரு புன்னகையை வரவழைத்து பாலகுருவை பார்த்து சிநேகமாய் சிரிக்க, அவனும் அதுபோலவே அவளைப் பார்த்து சிரித்தவன்,

“ஒண்ணுமில்ல பார்த்துக்கலாம் விடு…” என்று திரும்ப அவனின் ஆறுதல் படலம் தொடங்க, நிர்மலா இவர்கள் இருவரையும் ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டே அவளின் பெற்றோர்களோடு உள்ளே சென்றாள்..

“இவ இப்படி பார்த்ததுக்கு தான் நீ டென்சன் ஆனியா??” என்றான் எள்ளலாய் பாலகுரு..

“இப்போ இதானா முக்கியம்???”

“முக்கியமில்லைன்னு உனக்கு தெரிஞ்சா சரிதான்…” என்றவனுக்கு பாண்டியாவிடம் இருந்து அழைப்பு வந்தது..

‘பாண்டியா..’ என்று மெதுவாய் அவளிடம் சொன்னவன், எழுந்து சென்று கொஞ்சம் மெதுவாகவே பேசினான்..

“என்னடா… நான் கமிஷனர் ஆபிஸ்ல இருக்கேன்…” என்றவனின் பார்வை சுற்றிலும் யாரும் தன்னை கவனிக்கிறார்களா என்று இருந்தது..

“ண்ணா… இங்க போஸ் ரொம்ப துள்ளுறான்… போட்டுடவா???”

பாண்டியாவின் குரலே அத்தனை எரிச்சலாய் ஒலித்தது என்றால், இந்த போஸ் என்னவோ செய்திருக்கிறான் என்றே தோன்றியது.. மற்ற நேரமாய் இருந்திருந்தால் நடப்பதே வேறு..

ஆனால் இப்போது.. இருப்பதை சமாளிப்பானா?? இல்லை அந்த போஸை பார்ப்பானா… ரத்தம் சூடேறி தலைக்கு ஏறுவதாய் இருந்தது..

“டேய் டேய் டேய் பாண்டியா…. பேசாத.. ஒன்னும் பேசாத… அவனுங்க ரெண்டு பேருக்கும் எதுன்னா வாங்கி குடு… தின்னுட்டு தூங்கட்டும்…”

“ண்ணா இல்லண்ணா.. ஓவரா…” என்று அவன் சொல்லும்போதே,

“பாஸ் கூப்பிடுறாங்க..” என்றுவந்தாள் பூர்ணி..

அவளைப் பார்த்து தலையை ஆட்டியவன், “பாண்டியா இப்பவும் சொல்றேன்.. ஒரு ரெண்டு நாள் அவனுங்களை பார்த்துக்கோ..” என்று கண்டிப்பாய் சொன்னவன், பூர்ணிமாவோடு மீண்டும் உள்ளே சென்றான்..

கமிஷனர் திரும்பவும் அந்த வீடியோவினை ஓட்டிப் பார்க்க, பாலகுரு பூர்ணிமாவின் கரங்களை இறுக பற்றிக்கொண்டான்.. நிர்மலாவோ, எரிச்சலாய் நின்றிருந்தாள்.. அவளுக்கு அந்த வீடியோ பார்க்கவும் பிடிக்கவில்லை, ஜோடியாய் நின்றிருக்கும் இவர்களையும் பார்க்க பிடிக்கவில்லை..

வீடிய முடிந்ததுமே “சார்.. வீடியோ பார்த்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.. பூர்ணி மேல எதுவும் தப்பில்லைன்னு…” என்றான் பாலா..

“எங்களுக்கு பார்த்ததுமே புரியுது பாலா.. ஆனா கோர்ட்ல ப்ராபர் எவிடென்ஸ் எல்லாம் ப்ரோடியுஸ் பண்ணனும்.. விசாரணை நடத்தனும்.. அதெல்லாம் மேல. இதை பண்ணவனும்.. பண்ண சொன்னவனும் வந்து சரண்டர் ஆனா இன்னும் பெட்டெர்…

நான் இப்போவே ஒரு டீம் அனுப்பிட்டேன்.. செர்ச் பண்ண.. உங்கப்பா சொன்னார்.. போஸ் அப்படின்னு.. இதை முன்னாடியே நீங்க கேஸ் முடிச்சிருக்கலாம்.. இப்போ எங்களுக்கும் பிரச்சனை இழுத்து வச்சிட்டீங்க.. இப்பவும்கூட மினிஸ்டர் சைட் இருந்து கால் வந்ததுனால தான் முடிஞ்சளவு சுமுகமா போக நினைக்கிறோம்.. எங்க நிலைமையும் புரிஞ்சுக்கோங்க…” என,

அவர் சொல்வது முழுக்க முழுக்க சரி என்றே அனைவர்க்கும் தோன்றியது.. ஆனால் பாலா தான் போஸையும் அவன் அனுப்பிய ஆளையும் தூக்கி வைத்திருக்கிறானே.. அது இப்போது வரைக்கும் பூர்ணிக்கும் பாலாவிற்கும் மட்டும் தான் தெரியும்.. வீட்டினர் யாருக்கும் தெரியவும் தெரியாது..

இப்போது அதை சொல்வதும் உசிதமாய் படவில்லை.. பூர்ணிமா பாலகுருவின் முகம் பார்க்க, அவனோ மௌனமாய் நின்றிருந்தான்..

பாலச்சந்திரன் “எப்போ இருந்து விசாரணை???” என,

“எப். ஐ. ஆர்  போட்டாச்சு.. ஒரு டீம் போட்டிருக்கேன்.. இந்த கேஸ் டீல் பண்ண.. சோ இன்னிக்கு இப்போ இருந்தே ஸ்டார்ட் பண்ணிடுவாங்க…..” என்று கமிஷனர் சொல்ல,

“அதுக்கு முன்ன எங்க லாயர் வந்திடட்டுமே…” என்றான் பாலகுரு..

அவன் சொன்னதுபோலவே, சிறிது நேரத்தில் இவர்களின் குடும்ப வக்கீல் வந்து பூர்ணிமாவிற்கான முன் ஜாமீனை கொடுக்க, விசாரணை என்பது அவர்களை பொருத்தமட்டில் ஒரு பார்மாலிட்டி என்றே ஆனது..

ஆனாலும் காவல் துறை சும்மாயில்லை, அவர்களது வேலையை என்ன செய்ய வேண்டுமோ எப்படி செய்ய வேண்டுமோ அதை சரியாகவே செய்தனர்..   நிர்மலா குடும்பத்தினரின் தரப்பில் அவர்களுக்கு தெரிந்ததை சொல்ல, ஏன் இந்த திருமணம் நின்றது?? என்ன ஏது என்று கேள்வி மேல் கேள்விகள்..

ஒருவழியாய் அனைத்தும் முடிந்து அனைவரும் வீடு வந்து சேர நள்ளிரவு ஆகிட, முதல் வேலையாய் பாலகுரு பாண்டியாவிற்கு அழைத்து “டேய் அவனுங்களை விட்டுடு..” என்றான்..

“ண்ணா???!!!”

“டேய் சொல்றத செய்…”

“போலீஸ் தேடுது அவங்களை.. கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணியாச்சு.. நீ விட்டுடு.. இப்போ நம்ம தூக்கிருக்கோம் தெரிஞ்சா ரொம்ப ரொம்ப பிரச்சனையாகும்.. அவனுங்களை போக விட்டுடு…” என்று பாலா அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

“ண்ணா.. அவனுங்களை நம்மலே போலீஸ்ல சொல்லிடலாம்ண்ணா” என்றான் பாண்டியா அவர்களை விட மனதில்லாது..

“ம்ம்ச் அதெல்லாம் எனக்கு தெரியாதா.. சொன்னதை செய் டா பாண்டியா…” என்று கத்தினான் பாலகுரு..

என்னவோ அவனுக்கு அத்தனை டென்சனாய் இருந்தது.. மேலும் மேலும் எதுவோ சிக்கலை தானே உருவாக்குவதாய் தோன்ற, எது எப்படியானாலும் சரி, பூர்ணிமா இதிலிருந்து வெளி வந்தால் போதும் என்று மட்டுமே அவன் மனத்தில்..

பாலகுரு காட்டுகத்தலாய் கத்த, பூர்ணிமா முகம் கழுவி வந்தவள், அவனிடம் வந்து அவனின் அலைபேசியை வாங்கி,

“ பாண்டியா.. யாருமே எதுவுமே செய்யவேணாம்.. போலீஸ் பார்த்துப்பாங்க.. அவங்களை விட்டுடு…” என,

“ம்ம் சரிக்கா…” என்றான் வேறெதுவும் சொல்லாது போனை வைத்திட்டான்…

“அக்கான்னு சொல்றான் பாஸ்….” என்று பூர்ணிமா பாலகுருவிடம் முறையிட,  “ம்ம் ம்ம்..” என்றவன் போய் நேராய் கட்டிலில் விழுந்தான்..

Advertisement