Advertisement

குருபூர்ணிமா – 13

“சென்னையின் பிரபல தொழிலதிபரும்… துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக சொல்லப் படுகிறது..

ஆனால் இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்று இந்த விடியோ வெளியானதற்கு காரணம் யார்? இத்தனை நாள் இது எப்படி மூடி மறைக்கப் பட்டது?? அனைத்திற்கும் மேலாய் இந்த விழாவிற்கு சில பல காவல் துறையினருக்கும் அழைப்பு வைக்கப்பட்டாதாக சொல்லும் நிலையில், அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்???”

     என்று பாலகுருவின் வீட்டின் முன் ஒரு பெண் பத்திரிக்கையாளர் மைக் பிடித்து பேசிக்கொண்டு இருக்க, அவளின் முன்னே பல கேமராக்கால்.. அவளைப் போல இன்னும் பலர் சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டு இருந்தனர்..

ஆம் பாலகுருவின் வீட்டினை சுற்றி மீடியா ஆட்கள் தான்.. பல பல நியூஸ் சேனல் தங்களின் கேமரா பார்வையை அங்கே செலுத்தியது..

ஆனால் வீட்டினுள்ளேயோ மயான அமைதி… யாருக்கும் எதுவும் செய்ய தெரியவில்லை.. அதிர்ச்சிதான் அனைவருக்குமே முதலில்.. பூர்ணிமாவோ பாலாவின் கை வளையத்தினுள்ளே இருந்தாள்..

பூர்ணிமாவோ பாலகுருவை விட்டு நகரவேயில்லை.. அவன் வந்ததுமே அவளாகவே போய் “பாஸ்..” என்று அணைத்துக்கொண்டவள் தான் இப்போது வரைக்கும் நகரவேயில்லை..

 “ஷ்..!!!! பூர்ணி… நான் பார்த்துக்கிறேன்…” என்றவன் தான்..

அடுத்து யார் யாருக்கோ அலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தான்.. வீட்டினர் அனைவரின் அலைபேசிக்கும் அழைப்பு வந்துகொண்டே இருக்க, “கொஞ்சம் எல்லாம் போன் ஆப் பண்ணி வைங்க..” என்று கத்தினான்.

‘என்ன செய்றது…’ என்ற யோசனை அனைவருக்குள்ளும் ஓட,

“உன் போன் கொடு…” என்று கை நீட்ட, அவளும் கொடுக்க, அவளுக்கு அந்த விடியோ அனுப்பிய எண்ணை குறித்துக்கொண்டவன், அவளது அலைபேசியையும் ஆப் செய்துவிட்டு,

தனபாலுக்கு அழைத்து “சித்தப்பா இந்த நம்பர் ட்ரேஸ் பண்ணுங்க..” என்றுசொல்ல,

அவர் என்ன சொன்னாரோ “என்ன சித்தப்பா இது.. ஒவ்வொரு தடவையும் எவ்வளோ பணம் வாங்குறாங்க…. இப்போ நமக்கு ஒண்ணுன்னா செய்ய மாட்டாங்களா???!!” என்று கிட்டத்தட்ட அவ்வளவு ஆவேசம் அவனுள்..

“டேய் இல்ல குரு… மீடியா புல்லா பேசி பேசி போலீஸ்க்கு ப்ரெஸ்ஸர் கொடுக்கிறாங்க.. இப்போதான்  உங்கப்பா மினிஸ்டர்க்கிட்ட பேசினார்… ”

“அதெல்லாம் எனக்கு தெரியாது சித்தப்பா.. இங்க வீட்டுக்கு வெளிய மைக்கும் கேமராவுமா இருக்காங்க.. வெளிய கூட வர முடியலை.. என்ன செய்வீங்களோ தெரியாது.. இன்னும் பத்து நிமிசத்துல மீடியா எல்லாம் போகணும்.. போலீஸ்ல நீங்க என்ன கம்ப்ளைன்ட் கொடுப்பீங்களோ கொடுங்க.. சும்மா இல்லை.. இந்த கேஸ் வெளிய வராம இருக்க கோடி கோடிய கொடுத்திருக்கேன்..” என்றவனை இமைக்காது தான் பார்த்தாள் பூர்ணிமா..

பாலகுருவின் இந்த தோற்றம்.. இந்த குரல்… இந்த முக பாவனை எல்லாமே அவளுக்கு புதிது… அவள் மருத்துவமனையில் இருக்கையில் இப்படிதான் இருந்தான்.. இதே தீவிரத்தில்.. இந்த விஷயம் வெளியில் வரக்கூடாது என்று.. ஆனால் அப்போது அவள் பார்க்கவில்லை இல்லையா..

இப்போது வெளி வந்துவிட்டது.. அவளின் பார்வையோ இமைக்காது அவனையே காண, பேசிக்கொண்டு இருந்தவன் என்ன நினைத்தானோ அவளைக் காண, அவளும் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்..

என்ன நினைத்தானோ, அணைத்திருந்த வாக்கிலேயே அவளின் நெற்றியில் முத்தமிட்டு “ரிலாக்ஸ்…” என்று உதடு அசைத்து,

“சித்தப்பா… அப்பாவை பேச சொல்லுங்க..” என்று திரும்பவும் போன் பேசிட தொடங்க, அவனின் அந்த முத்தத்தில் பூர்ணிமாவிற்கு ஒரு தைரியம் வந்திருந்தது..

அவள் தைரியசாலிதான்.. ஆனால் கொஞ்சம் அவள் திடம் அசைந்து பார்த்துவிட்டது என்னவோ நிஜம்தான்.. ஆனால் இப்போது திரும்பவும் அவள் பேக் டு தி பார்ம் ஆகிட, மெதுவாய் அவளின் போனை எடுத்துக்கொண்டு அறைக்கு கிளம்பினாள்..

“எங்க போற???!!” என்று பாலகுரு கேட்க,

“நத்திங் பாஸ்…” என்றவள் ஒரு புன்னகை சிந்தியே போனாள்..

அவள் போனதும், “சித்தி சாரு வீட்ல சொல்லிட்டீங்களா??? ” என்று பாலா கேட்க,

“சொல்லணும் பாலா.. ஆனா.. எப்படி.. வர்றேன்னு சொன்னவங்களை வரவேண்டாம் சொல்றது…” என்று தயங்கினார்..

“இப்பவும் அவங்களுக்கு விஷயம் போகாமையா இருந்திருக்கும்.. சொல்லிடுங்க சித்தி…” என்று அழுத்தி சொல்ல

“ம்ம் பேசிட்டு வர்றேன்…” என்று மைதிலி உள்ளே செல்ல,

முத்துராணி அத்தனை நேரம் அமைதியாய் இருந்தவர் “இன்னிக்கு கோவில்ல நிர்மலா அவ அப்பா அம்மா எல்லாம் பார்த்தோம் டா..” என்றார் மெதுவாய்..      

பாலகுரு போனில் எதுவோ பார்த்துகொண்டு இருக்க முதலில் சரியாய் கவனிக்காதவன் “என்னம்மா யாரு..??!!” என்று திரும்ப கேட்க,

“ம்ம்ச் அதான் டா… அவ.. அந்த நிர்மலா.. அவ அப்பா அம்மா எல்லாரையும் பார்த்தோம்…” என்றார் கடுப்பாய்..

ஆனால் இவனோ “ அதுக்கென்ன…” என்று அசராமல் கேட்க,

“அதுக்கு என்னவா???!!! அவ நம்ம பூர்ணிய பார்த்த பார்வையே சரியில்ல.. இவளும் டென்சன் ஆகிட்டா.. நான் தான் இதெல்லாம் கண்டுக்காதன்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன்..” என்றவன், பின் கொஞ்சம் தயங்கி

“அவங்க ஏதாவது இப்படி….” என்று இழுக்க,

அவனுக்கு அப்போது தான் புரிந்தது, காலையில் பூர்ணியோடு பேசுகையில் அவளின் குரலில் இருந்த வேறுபாடு..

“இதெல்லாம் முன்னாடியே சொல்லிடாதீங்க…” என்று கடிந்தவன்,

“அவங்களே இதை பண்ணிருந்தா அவங்களுக்கும் தான் பேச்சு.. அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்.. இப்போ இப்படி ஒரு வீடியோ ஸ்ப்ரெட் ஆக விடுவாங்களோ.. யோசிக்கணும்..”   என்றபடியே பாண்டியாவிற்கு அழைக்க அவனின் லைன் பிசி என்றே வந்தது..

“டேய் போன் எடு டா…” என்று முனங்கியவனுக்கு என்ன தோன்றியதோ வேகமாய் அறைக்குள் சென்று பார்க்க, அங்கேயோ பூர்ணிமா மிக மிக தீவிரமாய் பேசிக்கொண்டு இருந்தாள்..

“இல்ல பாண்டியா.. பாஸுக்கு தெரியாது.. வேண்டவும் வேண்டாம்.. நீ நம்ம ஆளுங்கள, அனுப்பு.. யாருன்னு தெரியனும்.. இது கண்டிப்பா அவங்க பண்ணிருக்க மாட்டாங்க.. ஆனா ஒருவேளை.. பண்ணிருந்தா..??!!! அதுக்கு ஏத்த மாதிரி நம்ம என்ன செய்யணுமோ செய்யணும்…” என்று பேசிக்கொண்டு இருக்க,

“ம்ம் அப்புறம் மேடம்…” என்ற பாலாவின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்..

அவளை முறைத்துக்கொண்டே நெருங்கியவன், அவளின் போனை பிடுங்கி “டேய் நான் சொன்னதை மட்டும் செய்.. போஸ்.. அப்புறம் குத்தினானே அவன்..  ரெண்டுபேரையும் கொண்டுபோய் நம்ம பார்ம்ல வச்சிடு.. நான் சொல்ற வரைக்கும் அங்கேயே இருக்கட்டும்…

நிர்மலா வீட்ல என்ன நடக்குதுன்னு பார்க்க ஒரு ஆள் அனுப்பு.. இப்போதைக்கு நான் வெளிய வர முடியாது.. மீடியா ஆளுங்க எல்லாம் போனாதான் வரமுடியும்.. இதை மட்டும் பண்ணிட்டு நீ சைலண்ட்டா இருந்துக்கோ…” என்றுவிட்டு போனை அவளிடம் கொடுத்தவன்,

“உனக்கு ஏன் அவளை பார்த்து டென்சன்..” என்றான் கோபமாய்..

பாண்டியாவோடு நன்றாய் பேசியவன், இப்போது ஏன் கோபமாய் பேசுகிறான் என்று பூர்ணிமா பார்க்க,

“சொல்லு டி.. உனக்கு ஏன் அவளை பார்த்து டென்சன்…” என்று கத்த, முத்துராணி சொல்லியிருப்பார் என்று புரிந்தது பூர்ணிமாவிற்கு..

“இல்ல.. அது.. அவ பார்த்த பார்வை பாஸ்…”

“அதுக்கு..??!!!” என்றான் அவள் கன்னத்தை இறுக பற்றி..

“ம்ம்ம் பாஸ்…..” என்று உதடு மட்டுமே பூர்ணிமாவிற்கு அசைந்தது..

“நீ என் பொண்டாட்டி.. இந்த பாலகுருவோட பொண்டாட்டி.. எவளையும் பார்த்து டென்சன் ஆகணும்னு அவசியமே இல்லை… புரிஞ்சதா…” என்று பல்லை கடித்து அவன் சொல்ல,

“ம்ம்…” என்று தலை மட்டுமே அசைய, என்னவோ பூர்ணிக்கு அவன் சொன்ன வார்த்தைகள் கேட்டு கண்களில் மெல்லிய கண்ணீர் படலம்..

“இப்போ இன்னாத்துக்கு டி அழற… இதெல்லாம் துச்சா மேட்டரு.. நாளைக்கே இன்னொரு விஷயம் வைரலாகும்.. அது பின்னாடி போயிடுவாங்க.. அதுக்கு போய் அழலாமா??? எங்க போச்சு உன்னோட தைரியம் எல்லாம்…” என்று அப்போதும் பாலகுரு சீரலாகவே பேசினான்..

“நான் ஒன்னும் அதுக்கு அழல…” என்று அவன் கைகளை விளக்கவியவள், தானாகவே அவனை இறுக கட்டிக்கொள்ள,

“ஏய் என்னடி…??!!!” என்றான் எதற்கு அழுகிறாள்.. எதற்கு அணைக்கிறாள் என்று புரியாது..

“போ.. பாஸ்.. உனக்கு இதெல்லாம் புரியாது…” என்றபடி அவனின் மார்பில் முகம் புதைத்தவள்,

“பாஸ்….” என்றாள் மெதுவாக…..

அவளின் உதடுகள் அசைவது அவனுக்கு இம்சையாக இருந்ததுவோ என்னவோ, “என்ன பூர்ணி நீ நேரம் காலம் புரியாம.. பர்ஸ்ட் நான் வெளிய போகணும்.. அப்போதான் எதுவும் செய்ய முடியும்…” என்று அவன் நிலையை சொல்ல,

“இப்போ உன்ன என்ன பண்ணிட்டேன்…” என்று நிமிர்ந்தவள்,

“நம்ம ஸ்ட்ரைட்டா கமிசனர் ஆபிஸ் போலாமா…??” என்றாள்..

“போய்..??!!!!”

“போய்.. நடந்ததை எல்லாம் சொல்லிடலாம்.. கூடவே அந்த போஸ்.. அப்புறம் அவன் அனுப்பியவன் அவங்களை கூட்டிட்டு போயிடலாம்.. அவங்க சரண்டர் ஆகணும்னா ஆகட்டும்…”

“கூடவே நீயும் ஆகணும்…” என்றான் வேகமாய் பாலகுரு..

“நா..??? நானா…??? நான் எதுக்கு??” என்றாள் புரியாது..

“நீ எதுக்கா??? அவனை குத்தினது நீதானே…” என, வேகமாய் இல்லை என்று பூர்ணியின் தலை ஆடியது..

“என்னடி சொல்ற????”

“நீ… நீ அந்த வீடியோ நல்லா பாக்கலையா பாஸ்… அந்த கத்தி என் கைல இருந்து அவன் பிடுங்குறப்போ, அவன் இழுத்த வேகத்துக்கு தான் அந்த கத்தி அவன் மேல பட்டுச்சே தவிர நான் குத்தலை…” என்றாள் விளக்கி.. 

அவள் சொன்னது அவனுக்கும் தெரியும்தான்.. ஆனால் எது எப்படியாகினும் பூர்ணிமா சிறிது நேரமாவது காவல்துறையினரின் விசாரணைக்கு ஆளாகவேண்டும்.. கோர்ட்.. கேஸ்.. விசாரணை.. எல்லாம் சென்று தீர்ப்பு என்று ஒன்று வந்து பூர்ணிமா மீது தவறு எதுவும் இல்லை என்று நிரூபிக்க படும் வரைக்கும் அவள் விசாரணையில் தான் இருக்க வேண்டும்..

இதெல்லாம் நினைத்து பார்க்கக்கூட அவனுக்கு பிடிக்கவில்லை.. சாதாரணமாக கூட போலீஸ் அன்று விசாரணைக்கு வரக்கூடாது, பூர்ணிமா மருத்துவமனையில் இருந்து வெளி வருகையில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்திருக்க வேண்டும் என்றுதான் அவன் படாத பாடு பட்டது.. ஆனால் அது இன்று இத்தனை நாள் கழித்து வெளிவரும் என்று யாரும் நினைக்கவில்லை..

இப்போது அவன் அணைத்தவன், “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. மீடியா போயிட்டா நான் போய் செய்ய வேண்டியதை செய்ய முடியும்.. இப்போ போனா எதுவும் முடியாது பாலோ பண்ணி வருவாங்க…” என்று நிற்க,

“நீ போய் யாரையும் எதுவும் செய்ய கூடாது பாஸ்…” என்றாள் வேகமாய்..

எங்கே முன்னேபோல் அந்த போஸை அடித்து விடுவானோ என்று..

“ஹா ஹா நான் யாரை என்ன செய்ய போறேன்..??” என்றவனுக்கு அழைப்பு வர, எடுத்துப் பார்த்தவன் “அப்பா…” என்று சொல்லி,

“ஹலோ  அப்பா…” என்றான்…

“பாலா.. நீ இப்போ போய் உடனே கமிஷனர் ஆபிஸ்ல பேசு.. நான் மினிஸ்டர் பிஏ க்கிட்ட பேசிட்டேன்.. அவங்க போன் பண்ணி சொல்லிடுவாங்க… மீடியா எல்லாம் இப்போதைக்கு போறதுபோல தெரியலை… சோ நீ போய் கமிசனர் ஆபிஸ்ல பேசிட்டு வா..” என்றுசொல்ல,

“ப்பா என்னப்பா… மீடியா போகாதுன்னா?? எனக்கு அதெல்லாம் தெரியாது.. இங்க நானும் கிளம்பிட்டா வீட்ல அம்மா சித்தி பூர்ணி மட்டும் இருக்காங்க…” என்றான் எரிச்சலாய்..

“பாலா.. வெளியவும் இப்போ சூழ்நிலை சரியில்லடா…. இப்போதைக்கு நம்ம எதுவும் பண்ண முடியாது… போலீஸ்க்கு ப்ரெஷர் ஜாஸ்தி.. அவங்களுக்கு நம்ம கோ ஆப்ரேட் பண்ணித்தான் ஆகணும்..” என,

“அப்போ முன் ஜாமீன் எடுத்து வைங்க.. சீக்கிரம்…” என்றான்…

“அதுக்கெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிருக்கேன் டா.. நான் இப்போதைக்கு போலீஸ் விசாரணைன்னு வீட்டுக்கு வரமாட்டாங்க.. அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.. மீடியா பெர்சன்ஸ் இருந்தாலும் பரவாயில்லை.. நீ பூர்ணிய கூட்டிட்டு கமிஷனர் ஆபிஸ் போ.. எதுன்னாலும் அங்க வச்சு பேசிக்கலாம்..” என்றுவிட்டார் தீர்மானமாய்..

பாலகுருவிற்கு கோபம் கோபமாய் வந்தது.. எது எல்லாம் நடக்கக்கூடாது என்று எண்ணினானோ அதுவே நடந்தது.. இவர்கள் கமிஷனர் ஆபிஸ் சென்றால், அங்கே என்ன நடந்தது என்று விளக்கவேண்டும், பின் நிர்மலா வீட்டினரையும் வர சொல்லுவர், அவர்கள் முகத்திலும் முழிக்க வேண்டும்.. இதெல்லாம் எண்ணினாலே கசந்தது..  

முகத்தை உர்ரென்று வைத்து அப்படியே இறுகிப் போய் நின்றிருந்தான்..

“பாஸ் என்ன???” என்று அவள் உலுக்க,

“ம்ம்ச் அப்பா கமிஷனர் ஆபிஸ் வர சொல்றார்..” என்றான் சுரத்தே இல்லாது..

“ம்ம் போலாம்…”

“நான் போறது பத்தி எனக்கு எதுவும் இல்லை.. ஆனா நீ…” என்றவன் இன்னமும் முகத்தை சுருக்க,

“எதுவா இருந்தாலும் பேஸ் பண்ணித்தானே பாஸ் ஆகணும்.. மூடி மறைச்சது நம்ம தப்புதானே…” என்றாள் மெதுவாய்..

ஆம் தவறுதானே அது.. பணம் படைத்தவர்கள், தாங்கள் கொண்ட பணத்தினை கொண்டு எதுவும் செய்யலாம் என்ற செயல் தானே இது.. இதுவே ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் நடந்திருந்தால், கோர்ட்… கேஸ்.. போலீஸ்.. விசாரணை என்று எத்தனை அலைச்சல் இருந்திருக்கும்.. மன உளைச்சல் இருந்திருக்கும்..

ஆனால் இவர்கள்… அதிலும் பாலகுரு… அவன் நினைத்தது ஒன்றே ஒன்றுதான் பூர்ணிக்கு எவ்வித கஷ்டமும் நேர கூடாது என்றுதான் இதனை எல்லாம் செய்தான்.. தன்னிடம் இருந்த பணம் கொண்டு அனைத்தையும் மூடி மறைத்தான்.. அவன் எண்ணியது சரியாகினும், அதை செயல்படுத்த தேர்ந்தெடுத்த வழி தவறுதானே..

அதற்கான பலனை என்றாகினும் அனுபவித்து தானே ஆகவேண்டும்..

இதோ இதுவே அவனுக்கான அந்த தருணம் போல.. அவனுக்கு ஒன்றேன்றால் கூட அவன் பொருத்திருப்பான்.. ஆனால் பூர்ணிக்கு ஒன்றேன்றால் அவனால் அது முடியுமா என்றுதான் தெரியவில்லை..

“போலாம் பாஸ்..” என்று பூர்ணிமா திரும்ப சொல்ல, அவனுக்கு மனதே இல்லை..

ஆனாலும் இது ஒன்றுதான் வழி என்று இருக்கையில் அதனை தானே தொடரவேண்டும்.. அவளை தயாராக சொல்லிவிட்டு, ஹாலிற்கு வந்தவன், முத்துராணியிடம் சொல்ல, “அவரோ வேற எதுவும் செய்ய முடியாதா..” என்றார்..

“வேற வழி இல்லம்மா..” என்று சோர்வாய் அவன் சொல்கையிலேயே,

“பூர்ணி அப்பா அம்மாக்கிட்ட சொல்லிட்டு கூட்டிட்டு போ..” என்றவர் பூஜை அறை சென்று வேண்டிட, அதற்குள் பூர்ணிமாவும் அங்கேதான் வந்தாள் சாமி கும்பிட என்று..

“தைரியமா போயிட்டு வா…” என்று அவளுக்கு திருநீறு பூசிவிட, அவளும் சொல்லிக்கொண்டு கிளம்ப, மைதிலியும்  தைரியம் சொல்லி அனுப்ப, அதற்குள் பாலகுரு ராமலிங்கத்திற்கு அழைத்து பேசியிருந்தான்..

என்னவென்று பூர்ணிமா பார்க்கவும் “மாமாவும் அங்கதான் இருக்காராம்…” என்றவன் “நீங்க பார்த்து இருந்துக்கோங்க…” என்று சொல்லி கிளம்ப, இவர்களின் வீட்டு கேட் திறக்கவுமே அணைத்து கேமராக்களும் இவர்களை நோக்கி திரும்பியது..

ஆனால் பாலகுரு எதையும் சட்டை செய்யாமல், வேகமாய் காரினை செலுத்திட, பூர்ணிமா ஒருவித அமைதியில் அமர்ந்திருந்தாள்..

பாலா அவளின் முகத்தினை பார்த்தவன் எதுவும் பேசாமல், பாண்டியாவிற்கு அழைத்து “பாண்டியா நான் சொல்றப்போ அவனுங்களை கமிஷனர் ஆபிஸ் கூட்டிட்டு வா..” என,

பாண்டியாவோ “ண்ணா இன்னாண்ணா… வேற யாரையும் சரண்டர் ஆக சொல்லலாம்ண்ணா” என்றான்..

“ம்ம்ச் அதெல்லாம் வேணாம்.. நான் சொல்ற செய்..” என்றவன் வைத்துவிட, அடுத்து உடனே தனபால் அழைத்து “டேய் நம்பர் ட்ரெஸ் பண்ணிட்டேன்..”என,

“யாருன்னு பார்த்து என்ன செய்யணுமோ செய்ங்க சித்தப்பா.. நான் அப்புறம் பேசுறேன்…” என்று வைத்துவிட்டான்..

அவனுக்கு வேறெதுவுமே தோன்றவில்லை.. மனமெல்லாம் அடுத்து என்ன நடக்குமோ என்று இருந்தது.. இவர்களுக்கு இப்படியிருக்க அங்கே நிர்மாலாவின் வீட்டிலோ ராஜனும் சுதாவும் ஒருவித அழுத்தத்தில் இருந்தனர்..

“ப்பா… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை…” என்று கண்ணீர் விழிகளோடு நிர்மலா அமர்ந்திருக்க,

“யார் இப்படி பண்ணான்னு தெரியலையே…” என்றார் புலம்பினார் சுதா..

“மாப்பிள்ள வீட்ல இருந்து அத்தனை கேள்வி.. அவங்களுக்கு தெரியும்தான் அப்படின்னாலும் அடுத்த மாசம் கல்யாணம் இருக்கப்போ இப்போ இப்படி நடந்தா யாரும்தான் என்ன செய்ய முடியும்..”

“ப்பா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா???”

“யார்மேல கொடுக்க முடியும்???” என்றார் பட்டென்று ராஜன்..

“ச்சே.. என் நிம்மதியே போச்சுப்பா.. எல்லாம் அவனால வந்தது…” என்று அப்போதும் பாலகுருவை தான் கடிந்தாள் நிர்மலா..

அடுத்த நொடி “நிம்மி…” என்று சுதா அரட்ட,

“சும்மா இரும்மா.. இப்போகூட பாருங்க அவங்க சைட் கண்டிப்பா மூவ் பண்ணிருப்பாங்க.. ஆனா நம்மதாம் இப்போ பதில் சொல்லிட்டு இருக்கோம்..” என்றவளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்குமா என்ற சந்தேகமே வந்துவிட்டது..

“தேவையில்லாத பேச்சு வேணாம் நிம்மி.. அவங்களுக்கும் நம்மளுக்கும் எதுவுமே இல்லை இப்போ.. ஆனா இதை யாருமே எக்ஸ்பெக்ட் பண்ணலை.. என்ன செய்றதுன்னு யோசிப்போம்..” என்று இருக்கையில், பாலச்சந்திரன் ராஜனுக்கு அழைத்தார்..

போனை தயக்கமாய் பார்த்தவர் எடுத்து பேச “நீங்க கொஞ்சம் கமிஷனர் ஆபிஸ் வர முடியுமா??” என்றார் பாலச்சந்திரன்..

“ம்ம்ம் நாங்களுமே அதை தான் யோசிச்சிட்டு இருந்தோம்…”

“சரி. சீக்கிரம் வந்திட்டா நல்லது…” என்று பாலச்சந்திரன் வைத்துவிட, நிர்மலாவோ “ப்பா என்னால எல்லாம் வர முடியாது..” என்றாள்..

“வர வர உன் பீகேவியரே சரியில்ல நிம்மி.. முன்னாடி நீ இப்படி இல்லை.. எங்களை கேட்காம அப்போ நீ எடுத்த முடிவுதான் இத்தனைக்கும் காரணம்..” என்று சுதா திட்ட, என்னவோ நிர்மலாவிற்கு அழுகையே வந்தது….

அங்கே கமிஷனர் ஆபிஸ் போனால், நிச்சயமாய் பாலகுருவும் பூர்ணிமாவும் இருப்பார்கள்.. அவர்களை நேருக்கு நேராய் சந்திக்கவேண்டும் என்று நினைக்கவே அவளுக்கு காந்தியது.. கசந்தது..         

                  

     

        

 

Advertisement