Advertisement

குருபூர்ணிமா – 12

“கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்… இன்னும் கிளம்பிட்டு வரா…” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க,

“குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ…” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே..

இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா எங்காவது கிளம்பவேண்டும் என்று சொல்லி போவாள், பாலகுரு வீட்டினில் இருந்தால், இவள் தயாராகி வருகிறேன் என்று அறைக்குள் சென்றால், வெளி வருவதற்கு அடுத்த ஒருமணி நேரமாவது ஆகும்.. அது முத்துராணிக்கும் தெரியும்..

இருந்தாலும் சாமி பூஜை விசயங்களில் சரியாய் இருந்திடவேண்டும் அவருக்கு.. ஆகையால் முதல்நாள் இருந்தே சொல்லிக்கொண்டு இருந்தார்.. நேரத்திற்கு கிளம்பிடவேண்டும் என்று.. எங்கே பாலகுரு அவளை கிளம்பிட விட்டால்தான்..

“பாஸ்.. பாஸ்… கோவிலுக்கு போகணும் பாஸ்…” என்று சிணுங்கியவளை,

“கணவனே கண் கண்ட தெய்வம் பேபி.. சோ என்னை கவனி..” என்று விடாது அணைத்துக்கொண்டு இருந்தவனிடம் இருந்து எழுந்து வரவே போதும் போதும் என்றாகிப் போனது..

“போ டி… போய் எங்கம்மாவையே லவ் பண்ணு…” என்றபடி கட்டிலில் படுத்துக்கொண்டே ஒரு தலையணையை எடுத்து அவள் மீது வீச,

“சரி சரி பண்ணிக்கிறேன்…” என்றவள் திரும்ப குளித்துவிட்டு தயாராகி அறையை விட்டு வெளியே வர, மைதிலி சிரித்துக்கொண்டும், முத்துராணி கேள்வியாய் பார்த்துக்கொண்டும் இருந்தார்..

“இல்ல பெரியத்தை அது….” என்று பூர்ணி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அறையினில் இறந்து லுங்கியும் பனியனிலும் பாலகுரு வெளி வர,

தனபால் மேலிருந்து வந்தவர் “என்னடா நீ ஹார்பர் போலயா??” என்று கேள்வி கேட்டுக்கொண்டே அமர,

“நீங்களும் தான் போகலை…” என்றபடி அவனும் அமர, பூர்ணி கொஞ்சம் லஜ்ஜையாய் உணர்ந்தாள்..

முத்துராணி எதுவும் சொல்லாமல் “கிளம்பலாமா??” என்று கேட்க, “சரிங்க பெரியத்தை…” என்று சொல்லி அவளும் கிளம்ப,

பாலகுரு “நான் இன்னும் சாப்பிடவே இல்லை..” என்று குரலை எழுப்பினான்..

“நாங்களும் தான் சாப்பிடலை… பூஜை முடிச்சிட்டு வந்து சாப்பிடுவோம்.. உனக்கு மைதிலி போடுவா..” என்றவர் மருமகளை அழைத்துக்கொண்டு கிளம்பிட,

‘சாமி சாப்பிடாம வான்னு சொல்லிச்சா என்ன??’ என்று முனுமுனுத்தபடி எழுந்து போனான் பாலகுரு..

அங்கே பூர்ணியோ கப்சிப் என்று காரை ஓட்டிக்கொண்டு இருக்க, அவளின் அருகே இருந்த முத்துராணியோ, அவளைப் பார்ப்பதும் பின் சாலையை பார்ப்பதுமாய் இருக்க, கொஞ்ச நேரத்தில் பொறுக்க முடியாது கேட்டேவிட்டாள் “என்னங்க பெரியத்தை…” என்று…

“ஒண்ணுமில்ல…” என்றவர், பின் என்ன நினைத்தாரோ “நல்லா சாமி கும்பிட்டுக்கோ..” என, சரி என்று தலையை உருட்டினாள்…

இவர்கள் போனது பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலுக்குதான்.. எப்போதுமே முத்துராணி வெள்ளிக்கிழமை என்றால் அங்கேதான் செல்வார்.. வீட்டில் எப்போதுமே லட்சுமி வாசம் செய்யவேண்டும் என்பது அவரின் எண்ணம்..

பூர்ணிமா போய் காரினை இடம் பார்த்து நிறுத்த, இருவரும் இறங்கி உள்ளே போக, அங்கே இவர்களுக்கு முன்னே நிர்மலாவின் குடும்பத்தினர் இருந்தனர்.. முதலில் பூர்ணிமா அவர்களை கவனிக்கவில்லை.. ஆனால் நிர்மலாவின் அம்மா சுதா இவர்களை கவனித்துவிட்டு, நிர்மலாவை தொட்டு இவர்களை காட்ட, அப்போது பார்த்து பூர்ணிமா முத்துராணியோடு எதுவோ பேசி லேசாய் சிரித்துகொண்டு வந்துகொண்டு இருந்தாள்..

நிர்மலாவிற்கு என்ன தோன்றியதோ, ஆனால் மனது இறைவனிடம் செல்லவில்லை.. பார்வை முழுக்க, பூர்ணிமாவிடமே இருக்க, ராஜன் கூட இதனை பார்த்துவிட்டு,

“நிம்மி.. வேண்டாம் சொல்லி நம்ம விலகி வந்தாச்சு.. இப்போ உனக்கு ஒரு லைப் அமைய போகுது அதை மட்டும் பாரு…” என்றுசொல்ல,

“ம்ம்…” என்று தலையை அசைத்தவளுக்கு துளியும் கூட பூர்ணிமா மீதிருந்த பார்வையை அகற்றவே முடியவில்லை.. காரணம் பூர்ணிமாவின் முகத்தினில் இருந்த பொழிவு..

அவளின் அந்த பொழிவே அவள் வாழும் வாழ்வினை பற்றி கூற, நிர்மலாவின் இதழில் நக்கலாய் ஒரு புன்னகை..

“ஹ்ம்ம்.. இது நான் வேணாம்னு தூக்கிபோட்டது.. இவ அதை பிடிச்சிட்டு இவ்வளோ கெத்தா வர்றா…” என்ற எண்ணம் தோன்ற, மேலும் அவளின் அந்த நக்கல் சிரிப்பு விரிய அப்போதுதான் அவர்களை பூர்ணிமா பார்த்தாள்..

அவள் பார்த்த நேரம் நிர்மலாவின் அந்த முகத் தோற்றமே மனதில் பதிய, இத்தனை நாள் கழித்து இவர்களை பார்ப்பதால் மனதில் தோன்றும் ஒரு திடுக்கிடலோடு அவளின் அந்த பார்வையும் அவளின் அந்த சிரிப்பும் என்னவோ செய்தது..

“பெரியத்தை…” என்று முத்துராணியின் கரத்தினை இறுக பற்றிக்கொள்ள,

“என்னாச்சு…??!!” என்று அவரும் அவளைப் பார்க்க, பின் அவள் பார்வை சென்ற பக்கம் பார்க்க, அவர்கள் நிற்பதை கண்டதும் அவருக்கும் ஒரு அதிர்ச்சி..

நொடி பொழுது தான்.. பின் சுதாரித்தவர் “இங்க பாரு நம்ம வந்தது சாமி கும்பிட.. அதை மட்டும் தான் செய்யணும்.. அப்புறம் இதெல்லாம் போய் அவன்கிட்ட சொல்லிட்டு இருக்காத..” என்றவர், அவளை நகற்றிக்கொண்டு சென்றுவிட்டார்..

ஆனால் பூர்ணிமாவால் முத்துராணி போல அத்தனை எளிதாய் இதனை எடுத்துகொள்ள முடியவில்லை.. என்னவோ அந்த நிர்மலாவின் பார்வை அவளின் மனதினை போட்டு பிசைந்தது.. பாலகுருவை தவிர வேறெதையும் பெரிதாய் எடுத்துக்கொள்ளாத பூர்ணிமா, ஏனோ அந்த நிர்மலாவின் பார்வையை அசட்டை செய்ய முடியவில்லை..

‘ஏன் அப்படி பார்த்தா??!!!’ என்ற ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருந்தது..

அர்ச்சனை செய்து, பிரார்த்தித்துவிட்டு, பிரகாரம் சுற்றி என்று அனைத்தும் செய்தாலும் மனது ஒருநிலையில் இல்லை அவளுக்கு.. பார்வை எல்லாம் இன்னும் அவர்கள் இருக்கிறார்களா என்ற தேடலும் அலைபாய்தலுமே..  அவளின் முகத்தினை வைத்தே முத்துராணி கண்டுகொண்டாரோ என்னவோ.

“கோவிலுக்கு யார்வேணா வருவாங்க போவாங்க.. இதெல்லாம் பெருசா நினைக்க கூடாது.. நம்மலா எதுவும் செய்யலை.. நீ யார் வாழ்கையையும் தட்டி பறிக்கல புரிஞ்சதா…” என்றார் அதட்டலாய்..

அதற்கும் சரி என்றே சொன்னவளுக்கு மனது ஒரு தெளிவு கொடுக்க, அதன்பின் எந்த யோசனையும் இல்லை அவளுக்கு.. வீட்டிற்கு வந்தபிறகு எப்போதும் போல் இருக்க, பாலகுரு கிளம்பிவிட்டான் என்று மைதிலி சொல்லவும், சரி என்றே அவர்களுடனே இருந்துகொண்டாள்.

முத்துராணி மைதிலியிடம் என்ன சொன்னாரோ, மைதிலி வந்து “பூர்ணி நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடேன்..” என,

“எதுக்கு சின்னத்தை..?? நல்லாதானே இருக்கேன்..” என்றாள் புரியாமல்..

“அதுக்கில்ல.. நேரம் கிடைக்கிறப்போ ரெஸ்ட் எடுத்துக்கணும்.. சாயங்காலம் வீட்டுக்கு சாரு வீட்ல இருந்து எல்லாம் வர்றாங்க.. மதியத்துக்கு மேல வேலை சரியா இருக்கும். அதனாலதான் சொன்னேன்…”

“ஓ.. ஆமால்ல.. சாரு சொன்னா… நான் தான் மறந்துட்டேன்…” என்றவள் முத்துராணியை பார்வையால் தேட,

“அக்கா அப்போவே ப்ரெஷர் மாத்திரை போட்டு தூங்க போயாச்சு.. நீயும் போ.. நானும் போய் கொஞ்ச நேரம் படுக்கிறேன்..” என்றுவிட்டு மைதிலி அறைக்கு சென்றுவிட, பூர்ணிமாவிற்கு போர் அடித்தது..

வசதியானவர்கள் வீட்டினில் இது ஒன்று, செய்வதற்கு ஆயிரம் வேலை இருந்தாலும் அதற்கெல்லாம் ஆட்களை போட்டுவிட, பொழுதை எப்படி கழிப்பது என்று தெரியாமலே பலர் தங்கள் வாழ்வினை ஒட்டிவிடுகின்றனர்.. பூர்ணிமாவிற்கு பிறந்தவீட்டில் இருக்கும் போதெல்லாம் எப்படி பொழுது போனது என்று இப்போது புத்தியில் வரவேயில்லை..

ஏதாவது படிப்பாள்.. சந்தியாவை இழுத்துக்கொண்டு வம்படியாய் எங்காவது சென்று வருவாள்.. இப்போது இங்கே அப்படியெல்லாம் இல்லை.. முத்துராணி மைதிலி என்ன செய்கிறார்களோ அதுவே அவளும்.. பாலகுரு அப்படியொன்றும் தேவையில்லாது வெளியில் சுற்றும் ரகமும் இல்லை என்பதால் அவனோடு சும்மா ஷாப்பின் சினிமா என்றெல்லாம் நினைக்க கூட அவளால் முடியாது..

அவனுக்கு அதற்கு நேரமும் இல்லை அது வேறு விஷயம்.. ஆக இவளுக்கு போர் அடித்தது.. சும்மாவே கொஞ்ச நேரம் இருந்தவள், சந்தியாவிற்கு அழைத்து பேசினாள்..

வழக்கமான அம்மா பெண் பேச்சுதான்.. பேசி முடித்து இறுதியில் “ஏன்மா இந்த பக்கம் வர்றது” என்று அவளும்,

“பூர்ணி நீயும் பாலாவும் இங்க வரலாமே…” என்று சந்தியாவும் சொல்ல, இருவருமே சிரித்துக் கொண்டனர்..

“ம்மா சாரு வீட்ல இருந்து இன்னிக்கு எல்லாம் வர்றாங்க… சாயங்காலம் இங்க விருந்து..” என்று பூர்ணி சொன்னதும்,

“அப்படியா.. அப்போ அப்பாக்கிட்ட சொல்லி, அடுத்த வாரம் உங்க வீட்ல எல்லாரையும் கூப்பிட சொல்றேன்…” என்று சந்தியா சொன்னதும், “ஹா ஹா சரிதான்…” என்று சிரித்துக் கொண்டாள்..

இப்படியே கொஞ்ச நேரம் பேசிவிட்டு வைக்க, அடுத்து பாலகுரு அழைத்தான்..

“கோவில் போயிட்டு வந்தாச்சா???” என்று..

“எஸ் பாஸ்…” என்றவள் “போர் அடிக்குது..” என்று உதடு பிதுக்க,

“ஹா ஹா ஏதாவது செய்… இல்ல ஹார்பர் வா…” என்று சொல்ல,

“தோடா என்ன கிண்டலா.. அன்னிக்கு நான் ஹார்பர் வரவான்னு கேட்டதுக்கு நீ என்ன பாஸ் சொன்ன??” என்று எகிறினாள்..              

“ம்ம்ம்ம்…..!! என்ன சொன்னேன்??!!”

“அதெல்லாம் வேண்டாம் கண்டவனும் வருவான்.. அப்படின்னு நீ சொல்லல….”

“ஆமா சொன்னேன்.. அது நீ ஹார்பர் வந்து வேலை செய்றேன் சொன்னதுக்கு.. சும்மா வர்றதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேன்.. ஆனா வரணும்னா சொல்லு நான் வந்து கூட்டிட்டு போறேன்..” என்று பாலகுரு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிட,

“இதுக்கு நான் வீட்லயே இருந்துப்பேன்…” என்றாள் கடுப்பாய்..

“இருந்துக்கோ.. போர் அடிச்சா மகிலா, சாரு கூட பேசு… இல்லையா கொஞ்சம் ரெஸ்ட் எடு.. ஈவ்னிங் கெஸ்ட் வர்றாங்க இல்லையா…”

“ம்ம் ம்ம் சரி…” என்றவளுக்கு திடுமென நிர்மலாவின் நியாபகம் வர, அதை இவனிடம் சொல்வோமா என்று யோசித்தவள் பின் முத்துராணி சொன்னது நினைவு வந்தது வேண்டாம் வேண்டாம் என்று தலையை உலுக்கிக்கொண்டாள்..

“ஹலோ பூர்ணி…” என்று பாலா இரண்டுமுறை அழைத்துவிட,

“ஹா பாஸ்…” என்றாள்..

“என்ன தூங்கிட்டியா???”

“இல்ல இல்ல.. ஒண்ணுமில்ல சரி நான் வைக்கட்டுமா???”

“ம்ம்.. அம்மா எதுவும் சொன்னாங்களா???” என்றான் மொட்டையாய்..

அவளுக்கு என்ன கேட்கிறான் எதை கேட்கிறான் என்று புரியவைல்லை.. ஒருவேளை இதனை தான் கேட்கிறானோ என்றுகூட ஆனது..

“என்ன?? எது??? என்ன பாஸ்??!!” என்றிட,

“அதான் டி.. காலையில நீ லேட்டா வந்ததுக்கு அம்மா எதுவும் சொன்னாங்களா?? பார்த்த பார்வையே சரியில்ல..” என்றான் ஒருமாதிரி..

“ஹா ஹா அதுவா..!! ஒண்ணுமே சொல்லலை…” என்று பூர்ணிமா சிரிக்க,

“ஏன் நீ வேறென்ன நினைச்ச??” என்றான் பாலா சரியாய் பாயிண்டை பிடித்து..

“இல்லையே.. நான் எதுமே நினைக்கல..”

“இல்லையே என்னவோ உன் வாய்ஸ்ல ஒரு சேஞ்…” என்று அவன் சொல்லும் போதே பின்னே ஆட்கள் எதோ பேசும் சத்தம் கேட்கவும், “சரி அப்புறம் கால் பண்றேன்…” என்று வைத்துவிட,   பூர்ணிமாவிற்கு என்னவோ மனம் திடமானது போல் ஓர் உணர்வு..

உதட்டில் உறைந்த ஒரு சிறு புன்னகையோடு கட்டிலில் புரள, அவளது அலைபேசியில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தமைக்கான சமிக்கை எழ, அதனை எடுத்துப் பார்க்க, ஒரு புதிய எண்ணில் இருந்து வீடியோ ஒன்று வந்திருந்தது..

‘யாரது…’ என்று எண்ணிக்கொண்டே, அந்த விடியோவினை ஓப்பன் செய்வோமா வேண்டாமா என்ற தயக்கத்துடனே அவளின் அலைபேசி திரையை தொட, அடுத்த நொடி அந்த வீடியோ அவள் முன்னே காட்சிகளாய் விரிந்தது..

வேறொன்றும் இல்லை, எல்லாம் பாலகுரு நிர்மலா நிச்சயத்தில் நடந்தவை தான்.. பூர்ணிமா கத்தியால் குத்துவாங்கியதும், அவளை குத்தியவனும் அதே கத்தியால் குத்துவாங்கி சரிந்ததும் என்று காட்சியாய்  ஓடியது..

படுத்திருந்தவள், பூர்ணி அடுத்தநொடி வேகமாய் எழுந்து அமர்ந்துவிட்டாள்.. இத்தனை நாளில் பாலகுரு கூட இந்த வீடியோவினை அவளிடம் காட்டவில்லை.. அவளும் அதைப்பற்றி எதுவும் கேட்கவுமில்லை.. ஆனால் இன்று இது வெளி வந்திருக்கிறது என்றால்…??

அவளால் எதையும் யோசிக்கவே முடியவில்லை.. முகமெல்லாம் வியர்த்து உடல் எல்லாம் பதறியது அவளுக்கு.. ஒருமாதிரி அழுத்தம் வந்து அவள் நெஞ்சில் அமர்வதாய் இருக்க, திரும்ப திரும்ப அந்த வீடியோவை பார்த்தாள்.. அது வந்திருந்த எண்ணையும் பார்த்தாள்..

யார் அனுப்பியிருப்பார்கள் என்பதனை கொஞ்சமும் அவளால் யூகிக்க முடியவில்லை..

அந்த எண்ணிற்கு அழைத்துப் பார்த்தாள், ஆனால் அதுவோ சுவிட்ச் ஆப் என்று வந்தது.. எத்தனை முறை அழைத்தாலும் அதே பதில் தானே வரும்.. கண்களை இறுக மூடித் திறந்தவள் அடுத்து அப்படியே பாலகுருவிற்கு அழைக்க முதலில் அவன் அழைப்பை எடுக்கவில்லை.. அவனுக்கு அங்கே வேலை என்று  தெரியும்.. இருந்தும் திரும்ப திரும்ப அழைத்தாள்..

இரண்டு மூன்று ரிங் போனதுமே எடுத்தவன் “என்ன பூர்ணி நான்தான் அப்புறம் கால் பண்றேன் சொன்னேன்ல…” என்று கடிய,

“பா.. பாஸ்.. நீ.. நீ உடனே வா..” என்றாள் நடுங்கிய குரலில்..

“ஏன் எதுக்கு?? என்னாச்சு???” என்று அவளின் குரலின் மாற்றம் புரிந்து பாலகுருவும் கேட்க,

“நீ வா.. வா பாஸ்..” என்றவளுக்கு குரல் உடையத் தொடங்கியது.. என்னவோ அவளுக்கு அழுகை அப்படி வந்தது.. கண்களில் நீர் வழிய “நீ வா…” என்றாள் திரும்ப..

பாலகுருவிற்கு எதுவும் புரியவில்லை.. இரண்டு நிமிடம் முன்னே நன்றாய் சிரித்துகொண்டே பேசியவளுக்கு இப்போது என்ன ஆனது என்று..

“ஏய் என்னடி?? என்னாச்சுன்னு சொன்னாதானே தெரியும்…” என்று அவன் கத்த,

“நீ வா இப்போ…” என்று அவனுக்கு மேலாய் கத்தியவள், அவளின் அலைபேசியை கட்டில் வீசிவிட்டு குப்புற படுத்துக்கொண்டாள்..

உடல் குலுங்க, மனதிலும் உடலிலும் இருக்கும் நடுக்கம் அவளுக்கு போகவேயில்லை.. என்னவோ பெரிதாய் நடக்கப்போவதாய் அவளுக்குத் தோன்றியது..

பாலா ‘ஹலோ ஹலோ..’ என்று கத்தியவன் இவளிடம் பதில் இல்லை என்றதும் வீட்டிற்கு கிளம்பியிருந்தான். பாலச்சந்திரன் யோசனையாய் மகனைக் காண “என்னன்னு தெரியலைப்பா உடனே வான்னு சொல்றா.. வாய்ஸ் சரியில்லை…” என்று கிளம்பியிருந்தான்..

அவன் வீட்டிற்கு வருவதற்குள் பாலச்சந்திரன் முத்துராணிக்கு அழைத்து என்னவென்று கேட்க, அவரோ நிர்மலாவை பார்த்ததினால் இவள் இப்படி செய்கிறாளோ என்று நினைத்து அதனை சொல்ல,

“அப்படியா..?? பாலா அங்கதான் வந்திட்டு இருக்கான்.. என்னன்னு பாரு போய்..” என்றார் மனைவியிடம்..

முத்துராணியும் சரி பூர்ணிமாவை அழைக்க, அவளோ வெளியே வரவேயில்லை.. அவரின் சத்தம் கேட்டு மைதிலியும் வந்துவிட “என்னன்னு தெரியலை பாலாவ உடனே வர சொன்னாளாம்.. அவர் போன் பண்ணார்… கதவை திறக்க மாட்டேங்கிறா…” என்றதும்,

“பூர்ணி.. பூர்ணி…” என்று மைதிலியும் கதவினை தட்ட, இரண்டு நிமிடங்கள் கழித்தே பூர்ணிமா கதவு திறந்தாள்..

முகம், கண்கள் எல்லாம் சிவக்க வந்து நின்றவளை பார்த்தவர் “இப்போ.. இப்போ என்னாகி போச்சுன்னு அவனை உடனே வர சொல்ற…???” என்று முத்துராணி எகிற,

“அது… அது…” என்று திணறினாள்..

“என்ன பூர்ணி என்னாச்சு???” என்று மைதிலி கேட்க, “சின்னத்தை…” என்றவள், அதற்குமேல் பொறுக்கமுடியாது அவளின் அலைபேசியை எடுத்துவந்து காட்ட அதனை பார்த்த இரு பெண்களுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை..

அப்படியே உறைந்து நின்றுவிட்டனர்..

பாலகுருவிடம் மட்டும் தான் இந்த வீடியோ இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.. மற்றைய ஆதாரங்களை எல்லாம் அவன் அழித்துவிட்டான் என்பதும் அனைவருக்கும் தெரியும். அனைவரின் வாயினையும் அவன் அடைத்திருந்தான் என்பதும் தெரியும்..

ஆனால் இன்று.. இப்படி ஒரு புதிய எண்ணில் இருந்து அதுவும் பூர்ணிமாவிற்கு வந்திருக்கிறது என்றால் அது சும்மா யாரும் அனுப்பியதாக தெரியவில்லை.. வேண்டுமென்றே திட்டமிட்ட செய்திருக்கிறார்கள் என்றே தெரிந்தது..

அதற்குள் அடுத்தடுத்த போன் கால்கள் பூர்ணியின் எண்ணிற்கு வந்தது.. அவளின் கல்லூரி தோழிகள்… தெரிந்தவர்கள் என்று..

‘அந்த வீடியோல இருக்கிறது நீதானே…’ என்று அனைவருமே கேட்க, 

“ஐயோ…!!!!” என்றானது பூர்ணிமாவிற்கு..

மைதிலிக்குகூட அவரின் தோழிகள் வட்டத்தில் இருந்து அழைப்பு வர தொடங்கியது..

“அந்த வீடியோல இருக்கிறது பூர்ணிதானே…” என்று…

அன்று பாலகுருவின் நிச்சயத்திற்கு வந்தவர்களுக்குத் தெரியும் இந்த விஷயம்.. ஆனால் அதனை தாண்டி வெளியில் யாருக்கும் எதுவும் விஷயம் போகவில்லை.. அதுவும் இத்தனை நாள் கழிந்து இந்த வீடியோ இப்படி அனைவர்க்கும் செல்கிறது என்றால் ??

யாருக்கும் எதுவும் புரியவில்லை..

ஆம் அந்த வீடியோ அனைத்து சமுக வளைத்தளங்களிலும் வைரல் ஆகியது..      

பெண்கள் மூவரும் எதுவும் புரியாது, அலைபேசியில் அழைப்பு வந்தாலே அதனை எடுப்பதா வேண்டாமா என்று யோசனையில் தயங்கி நிற்க, பாலகுரு வந்துவிட்டான். அவன் வீட்டிற்கு வரும் நேரத்தில் அவனுக்கும் அந்த வீடியோ வந்திருந்தது..

பார்த்த நொடியில் இருந்து மண்டை குடைச்சல்தான்.. எவன் பார்த்த வேலை இது என்று..

“டேய் பாண்டியா.. என்னாடா இதெல்லாம்.. அந்த போட்டோகிராபர்… அந்த போஸ் எல்லாரையும் தூக்குடா… அன்னிக்கு எவன் எவன் வேலைக்கு வந்தானுங்களோ எல்லாரையும் தூக்குடா…” என்று கத்தினான்..

“ண்ணா… இன்னாச்சி???” என்றவனுக்கு

“சொன்னதை செய்டா…” என்றுவிட்டு தான் வீட்டினுள் நுழைந்தான்..

 

                                                                     

Advertisement