Advertisement

குருபூர்ணிமா – 10

“டேய் அந்த இஞ்சினியர் எங்க போனான்… நான் கொஞ்ச நாள் இல்லைன்னா இப்படிதான் எல்லாம் அசால்ட்டா இருப்பீங்களா…?? இன்னிக்கு அந்த கப்பல்ல என்ன பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணித்தான் ஆகணும்.. வேற ஆள் வர சொல்லு…” என்று அறையினில் போன் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான்..

தனபால் வந்து அவனின் அறை கதவை தட்ட, பேசியபடி கதவை திறந்தவன், “என்ன சித்தப்பா…” என்றுசொல்ல,

“ஹார்பர் தான் போறேன்.. நீ கிளம்பிட்டியா???” என, அவரைப் பார்த்து தலையை அசைத்தவன், பின் போனில் “நானே வர்றேன்…” என்று வைத்துவிட்டு, தனபாலோடு கிளம்பிச் சென்றான்..  

பாலகுரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டான் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.. பூர்ணியிடம் பேசியபிறகு மனம் லேசாகியிருந்தது.. அப்போது இருந்த அந்த கோபம் வேகம் எல்லாம் இல்லாது எப்போதும் போல் இருந்தான்.. வீட்டினருக்கு கூட ஆச்சர்யம் தான்..

குதிப்பான் என்று பார்த்தால் குளிர்ந்துபோய் இருக்கிறான் என்று.. அதுவும் பூர்ணிமா  இப்போது திருமணம் வேண்டாம் என்று சொன்ன பிறகும் கூட.. ஆம் அவள் திருமணம் இப்போதைக்கு  வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தாள்…

‘வேண்டாம்னா…??!!!!!’ என்று பாலகுரு நெற்றி சுருக்கி இமைகள் இடுக்கி கேட்க,

“அ… அது… இப்போதைக்கு வேணாம் பாஸ்…” என்று சொல்ல,

“அதான் ஏன்னு கேட்கிறேன்…” என்று பாலகுருவின் ஸ்ருதி ஏற,

அவன் ‘சாரி..’ கேட்டான் என்று அழுதுகொண்டு இருந்தவள், இப்போது திரும்ப அவனின் அரட்டலில் திடுக்கிட்டு விழித்தாள்..

“சொல்லு பூர்ணி… வேண்டாம்.. வேணும் சரி.. ஆனா இப்போதைக்கு வேணாம்னா என்ன அர்த்தம்…” என்று பாலகுரு கேட்டதற்கு கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தவள் 

“நான் உன்ன லவ் பண்றேன்தான்.. உனக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம்னு சொல்றப்போ மனசு வலிச்சதுதான்.. எல்லாத்தையும் தாண்டி நீ போயிட்ட.. இப்போ திரும்ப வந்து உடனே கல்யாணம்னு சொன்னா அதை என் மனசும் உடனே ஏத்துக்கும்னு நீங்க எல்லாம் எப்படி நினைக்கலாம் பாஸ்.. ஒருத்தரை பிடிச்சிருக்குங்கிறதுனால எல்லாம் உடனே அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது இல்லையா…??” என்று தெளிவாய் பேசியவளை யோசனையோடு தான் பார்த்தான்..

அவனுக்கு புரியவேயில்லை. இதென்ன இப்படி ஒரு கான்சப்ட்.. ‘லவ் பண்றேன் ஆனா கல்யாணம் பண்ண முடியாது…’ என்று..

அவனது பார்வையை கண்டே அவனின் எண்ணத்தை புரிந்தவள், “உனக்கு கல்யாணம் அப்படிங்கிறப்போ, அதுக்கு என்னை நானே மைன்ட் செட் பண்ணிக்கிட்டேன் பீல் பண்ண கூடாதுன்னு.. நீ கிளம்பி போனப்போ, திரும்ப வரணும்னு மட்டும்தான் நினைச்சேன்.. அதுக்காக நீ திரும்பி வந்துடனும்.. வர்றபோ என்னை உனக்கு பிடிச்சிருக்கனும்.. அப்படியே வந்ததும் கல்யாணம் பண்ணிக்கணும் இதெல்லாம் நான் நினைக்கல பாஸ்..

எனக்கு கொஞ்ச நாள் டைம் வேணும்.. முதல்ல என்னை உனக்கு பிடிச்சிருக்கு.. நீ என்னோட சேர்ந்து வாழ நினைக்கிறன்னு என் மனசு உணரனும்.. அதுவரைக்கும் நீ வெய்ட் பண்ணித்தான் ஆகணும் பாஸ் வேற வழியில்ல.. இல்லை உங்க வீட்ல சாரு மேரேஜ் அப்போவே உனக்கும் பண்ண நினைச்சா.. ஐம் வெரி சாரி பாஸ் அத்தனை சீக்கிரம் என் மனசு மாறுமா தெரியலை…” என்றாள் நிறுத்தி நிதானமாய்..

ஒவ்வொரு வார்த்தைகளை பிரயோக்கிக்கும் போதும் அத்தனை நிதானம் இருந்தது பூர்ணிக்கு.. இத்தனை வருடங்கள் அவனுக்காக, அவனின் பதிலுக்காக அவள் காத்திருந்தாள்.. இன்று அவளுக்காக அவளின் பதிலுக்காக பாலகுரு காத்திருக்கும் நிலை.. ஆனாலும் பூர்ணியின் இந்த பேச்சினை கேட்டு  பாலகுருவிற்கு புன்னகை ஒருப்பக்கம் ஆச்சர்யம் ஒருப்பக்கம் முளைத்தது..

அப்படியே ஒருசில விசயங்களில் அவள் தன்னைப் போலவே யோசிப்பதாய் இருந்தது.. ஒருவேளை பூர்ணியின் இடத்தில் பாலகுரு இருந்திருந்தாலும் அவனும் இதையேதான் சொல்லியிருப்பான். இதெல்லாம் ஏன் முன்னமே அவனுக்குத் தோன்றவில்லை.. ஒருவேளை பூர்ணிமாவை அத்தனை கூர்ந்து கவனிக்கவில்லையோ அவன்..

சிறுவயதில் இருந்து பார்க்கும் பழகும் ஒருத்தி என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்ததால் அவள் தன் விருப்பத்தை சொன்னபோது கூட அவனாக எதையும் பெரிதாய் நினைக்கவில்லையோ என்னவோ..

ஆனால் இப்போது..

எல்லாமே அவளாகி போனதே.. அவன் உயிர் வாழ்வதே அவளால்தான் என்றிருக்கையில் பூர்ணிமாயில்லாத வாழ்வு மட்டும் என்னாகுமாம்..??

‘இவதான் டா உனக்கு…’ என்று மனம் சொல்லிக்கொள்ள, கடந்து போன ஆறுமாதங்களில் நடந்தவைகள் எல்லாம் அவன் மனதில் வந்து போனது..

கொஞ்ச நேரம் அவனும் அமைதியாய் இருந்தவன், கால்களை தரையில் ஊண்டி நின்று போயிருந்த ஊஞ்சலை திரும்ப ஆட்ட முயல, அவளும் அவன் செயலை புரிந்து அதற்கு ஏற்ப லேசாய் ஊஞ்சலை ஆட்ட, அவனுக்கு என்ன தோன்றியதோ, பூர்ணியை ஊஞ்சலின் நடுவே அமர சொன்னவன், எழுந்து அவளின் பின்னே நின்று, ஊஞ்சலின் இருபக்க கம்பிகளையும் பிடித்து மெதுவாய் ஆட்ட பூர்ணிமா அதிசயமாய் அவனைத் திரும்பிப் பார்க்க முயன்றாள்..

“நேரா உட்கார் பூர்ணி.. இப்படி ஆடுனா எப்படி…” என்று ஒரு அதட்டலை போட்டவன், மெதுவாய் ஊஞ்சலை ஆட்ட,

“என்ன பாஸ் இதெல்லாம்…” என்று கேட்டவளுக்கு குரலே எழும்பவில்லை..

“கொஞ்சநேரம்தான்… சிலது உன்னை பார்த்து பேச முடியாது…” என்றவனின் வார்த்தைகளை கேட்ட அடுத்த நொடி பூர்ணி திரும்ப திரும்பிப் பார்க்க முயல,

“ஏய் இப்போ நீ திரும்புரியா இல்லையா டி..” என்று இவன் கடிய,

“ஹா ஹா பாஸ்.. உனக்கு என்னை பார்த்து பேச முடியாதா இது நல்லாருக்கே…” என்று பூர்ணிமா நம்பாத பாவனை காட்ட,

“நம்பலைன்னா போ.. நான் கிளம்புறேன்..” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,

“பாஸ் பாஸ்…” என்று சொல்லி நிறுத்தினாள்..

“அப்போ ஒழுங்கா நேரா உட்கார்…”

“ம்ம் சொல்லு பாஸ் சொல்லு..” என்று பூர்ணி கிண்டலடிக்க,

“என் நேரம் டி…” என்று சொல்லிக்கொண்டவன் பார்க்காதவாறு புன்னகைத்துக் கொண்டாள் பூர்ணி..

அதன்பின்னுமே கூட பாலகுரு அமைதியாய் இருக்க, இவளும் பேசுவான் பேசுவான் என்று நினைக்க, அவனோ ஊஞ்சல் மட்டுமே ஆட்ட, “பாஸ் இப்போ நீ பேசுறியா இல்லை நான் திரும்பிடவா???” என்று மிரட்டலாய் பூர்ணி கேட்டதும்,

“ம்ம்ம்… யோசிச்சிட்டு இருந்தேன்…” என்றவன் ஆழமாய் மூச்செடுத்து விட,

“அவ்வளோ பெரிய விசயமா???” என்றாள் இவளும்..

“பெரியது சின்னது எல்லாம் எதுலயும் இல்லை.. நம்ம எடுத்துக்கிறதுல தான் இருக்கு பூர்ணி…”

“ஓ…”

“அந்த போஸ் சொன்ன வார்த்தை தான் இப்பவும் எனக்கு மனசுல ஓடுது…”

“அப்படி என்ன சொன்னான்???”

“ஒருநாள் உனக்கு ஒரு நிலைமை வரும்.. பிடிச்சதும் கிடைக்காம, கிடைச்சதையும் கைல தக்க வச்சிக்க முடியாம என்ன பண்றதுன்னே தெரியாம ஒருநிலை வரும் சொன்னான்… இப்போ அதுதான் நடந்திருக்கு…” என்றதுமே,

“அப்போ இப்போகூட என்னை பிடிக்கலை.. ஜஸ்ட் ஹோல்ட் பண்ணிவச்சுக்கணும்னு நினைக்கிற அவ்வளோதானே பாஸ்…” என்று பூர்ணி படபடவென்று பொரிய,

அவளை பின்னிருந்தே முறைத்தவன், “நான் கிளம்புறேன் பூர்ணி.. சிலது நான் பேசணும் நினைச்சேன்.. ஆனா இப்போ வேணாம் தோணுது…. கொஞ்ச நாள் போகட்டும்.. நீயும் ப்ரீயா இரு…” என்றவன்,

அவள் “பாஸ் பாஸ் நில்லு.. நான் சும்மா சொன்னேன்..” என்றபடி பின்னேயே ஓட, அவனோ நிற்கவேயில்லை… கிளம்பிவிட்டான்..

சந்தியா பூர்ணியின் சத்தம் கேட்டே அவரின் அறையில் இருந்து வர, அவளோ வாசல் அருகே நின்றிருந்தாள்.. பாலகுருவின் கார் வெளி கேட்டை தாண்டி செல்ல, உதட்டை பிதுக்கி, போகும் காரையே வெறித்துப் பார்க்க நிற்க,

“என்ன பூர்ணி என்னாச்சு.. பாலா சொல்லாம கூட கிளம்பிட்டான்.. எதுவும் சண்டை போட்டியா நீ…” என்று மகளை முறைத்தார் சந்தியா..

“நான் ஒன்னும் சண்டை போடல.. அவனே கோவிச்சிட்டு போயிட்டான்…” என்று இன்னமும் முகம் சுளிக்க,

‘இவளா கல்யாணம் வேணாம்ங்றா…’ என்றுதான் தோன்றியது அவருக்கு..

மகளின் முகத்தையே சில நேரம் பார்த்தவர், என்ன நினைத்தாரோ “உனக்கு பாலாகூட கல்யாணம் வேணாம்னா அப்பாவை வேற மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா.. பாரு மகிலா குழந்தையோட இருக்கா.. சாருக்கும் பேசி முடிக்கப் போறாங்க… எங்களுக்கும் ஆசை இருக்குமே டி..” என, இப்போது ஏகத்தும் முறைத்தது பூர்ணிமாதான்..

“ம்மா உங்க ஆசைக்கு எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது.. எப்போ இருந்தாலும் கல்யாணம் எனக்கும் பாஸுக்கும் தான்..” என்றவளும் உள்ளே சென்றுவிட்டாள்..

அன்றிலிருந்து பாலகுரு வீட்டினரும் சரி, பூர்ணிமாவின் வீட்டினரும் சரி இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலைதான்..

‘எப்போ இருந்தாலும் எங்களுக்குத்தான் கல்யாணம்னா அந்த கன்றாவிய இப்போவே பண்ணா என்ன???’ என்று கேட்கும் நிலைக்கு வந்துவிட்டனர்..

காரணம் சாருவிற்கு பேசி முடித்தாகிவிட்டது.. திருமணம் கூட நெருங்கிவிட்டது.. ஒவ்வொரு விஷேசத்திற்கு பாலகுருவும் சரி பூர்ணிமாவும் சரி அத்தனை மகிழ்வோடு பங்குகொள்ள, அதில் தோள் மாப்பிள்ளை, தோள் பெண்ணாக வேறு அமர்ந்துவிட, சாருவின் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் கேட்ட ஒரே கேள்வி,

‘இவங்களுக்கும் ஒரேதா கல்யாணம் பண்ணிருக்கலாமே…’ என்பது தான்..

அதிலும் முத்துராணி எல்லாம் சொல்லவே வேண்டாம்.. உச்சபட்ச கடுப்பில் இருந்தார்.. பூர்ணியோடு சாதாரணா பேச்சு வார்த்தைகூட இல்லை..

மைதிலியோ “உனக்கு ரொம்ப பிடிவாதம் பூர்ணி…” என்று சொல்ல,

“நான் என்ன சின்னத்தை பண்ணேன்…” என்றாள் பாவமாய்..

இரண்டொரு முறை அவளாகே சென்று முத்துராணியிடம் பேச, அவரோ ‘நீ எப்போ கல்யாணத்துக்கு சரி சொல்றியோ அப்போதான் பேசுவேன்..’ என்றுவிட்டார்..

“பாஸ் நீ என்னை லவ் பன்றியோ இல்லையோ உன் மம்மி என்னை ரொம்ப லவ் பண்றாங்க போல.. பாரேன் எவ்வளோ கோபம்னு.. சொல்லி வச்சிக்கோ அப்புறம் உன்னை கடத்திட்டு போனாலும் போயிடுவேன்…” என்று பாலாவிடம் வம்பளக்க,

“நீ.. என்னை.. கடத்திட்டு.. போ டி போ… ஆனாலும் உனக்கு எல்லாம் எங்கம்மாதான் லாயக்கு..” என்பான் அவனும் பதிலுக்கு..

இப்படிதான் ஒவ்வொரு நாளும் கடந்தது.. பாலகுருவும் சரி பூர்ணிமாவும் சரி ஒருவரை ஒருவர் சங்கடப்படுத்தும் சங்கதிகள் எதையும் பேசுவதில்லை.. பொதுவான விஷயங்கள்.. அவர்களுக்கு பிடித்தவை.. இப்படியான பேச்சுக்களோடு அவ்வப்போது வெளியே போவது இல்லை போனில் பேசுவது என்பதில் மட்டுமே இருக்க, வீட்டினருக்கு இதெல்லாம் பொறுக்கவே முடியவில்லை..

பூர்ணிமாவிற்கு எப்படியோ பாலாவிற்கு மனம் ஒருவித நிம்மதியை உணர்ந்தது நிஜம்.. நிர்மலாவை நிச்சயிக்க போகிறோம் என்ற நிலையில் கூட அவன் மனதில் வேறெந்த உணர்வுகளும் இல்லை. போட்டோ பார்த்தான்.. பார்க்க அழகாய் இருந்தாள்.. பிடித்திருப்பதாய் தோன்றியது.. குடும்பம் எல்லாம் விசாரித்த வரையில் நல்லதாகவே இருந்தது.. ஆக சரி என்றுவிட்டான்..  

ஒரு விஷயம் நமக்கு பிடிப்பது வேறு.. நமக்கு பொருந்திப் போவது வேறு.. நமக்கு பிடிக்கும் எல்லாமே நமக்கு பொருந்தும் என்று அர்த்தமில்லை… நிர்மலாவை ஒருநாளில் பாலகுருவிற்கு பிடித்து இருந்தாலும் எப்போதுமே அவனுக்கும் அவனோடும் பொருந்திப் போவது பூர்ணிமா தான்..

அதுவே அவனுக்கு இப்போது தான் புரிந்தது..  அதுவும் ஆறுமாத காலமாய் அவன் வெளியில் இருந்தபோதுதான்.. அதுவும் இப்போது இன்னும் இன்னும் பூர்ணிமாவோடு தன்னுணர்வுகள் பொருந்திப் போவதாகவும் பூர்ணிமாவை முன்னைவிட மேலும் மேலும் பிடிதுப்போவதாகவும் தோன்றியது..

ஒருவேளை பூர்ணிமாவும் இந்த திருமணத்திற்கு சரியென்று உடனே சொல்லியிருந்தால், இதெல்லாம் நடந்தே இருக்காதோ என்றுகூட அவன் நினைத்துவிட்டான்.. அந்தளவிற்கு பூர்ணிமா அவனோடும்.. அவன் மனதோடும் ஒன்றிப்போனாள்..

“ம்மா அப்பா இந்த பைலை மாமாக்கிட்ட கொடுத்துட்டு வர சொன்னார் நான் ஹார்பர் வரைக்கும் போயிட்டு வர்றேன்..” என்று கிளம்பியவளை சந்தியா பார்த்தவர் தன் கணவரைத்தான் முறைத்தார்..

“நான் என்ன பண்ணேன்..???” என்று அவரும் கேட்க,

“அவக்கிட்ட தான் பைல் கொடுக்கனுமா??? அந்த வழியாத்தானே போறீங்க..” என்று சந்தியா கடிய,

“இந்த பைல் அங்க கொடுக்கணும்னு தான் சொன்னேன்.. பூர்ணியை போய் கொடுக்க சொல்லலை.. அவளாதான் போறா..” என்றார் அவரும்..

“ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிக்கோ சொன்னா பண்ணமாட்டாளாம்.. ஆனா இதெல்லாம் செய்வாளாம்.. இப்போ எதுக்கு போறா எல்லாம் பாலாவை பார்க்கத்தான்..”

“அதான் தெரியுதுலம்மா அப்புறம் என்ன???” என்றவள் “பை ப்பா…” என்று விட்டு கிளம்பிட,

“இவ பண்றதுக்கு எல்லாம் அவனும் ஆடுறான்.. கடைசில பாலா அம்மா பார்க்கிறப்போ எல்லாம் என்னைத்தான் கேட்கிறாங்க.. நீ சொல்ல முடியாதான்னு..” என்று சந்தியாவால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது..

பூர்ணிமாவோ வழக்கமான உற்சாகத்தோடு தான் ஹார்பர் சென்றாள்.. வழக்கமாய் காரில் செல்பவள் இன்று ஸ்கூட்டியில் செல்ல, அவளைப் பார்பவர்கள் அனைவருக்கும் பார்வை ஒருவித மரியாதை காட்டியது.. முன்னெல்லாம் இது இல்லை..  ஆனால் இப்போது இதெல்லாம் பாலாகுருவினால் வந்தது என்று அவளுக்கும் தெரியும்..

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு நடந்தவளை பார்த்தவன் ஒருவன், “அண்ணி, அண்ணா அந்த கப்பல்ல…” என்று இவள் கேளாமலே ஒரு கப்பலை காட்ட, அவளும் ஒரு தலையசைப்போடு அந்த கப்பலை நோக்கிப் போனாள்..

அவள் கப்பலிடம் போகும் முன்னமே பாண்டியா அங்கே வந்தவன் “யக்கா இன்னாக்கா இந்தப்பக்கம்..” என்று வந்து விசாரிக்க,

“ஏன் நான் வரக்கூடாதா…” என்றாள் இவளும்..

“இல்லக்கா.. அது.. கப்பல்ல ஒரு பேஜாரு… நீங்க ஆபிஸ்ல இருங்கக்கா.. அண்ணன கூட்டின்னு வர்றேன்..” என்று சொன்னவனை நேருக்கு நேராய் பார்த்தவள்,

“நான் அக்கா.. பாஸ் உனக்கு அண்ணனா??? அப்போ நாங்க ரெண்டுபேரு எங்க ரெண்டுபேருக்கு என்ன.. இரு சொல்றேன்.. இவன்னால தான் நமக்கு இன்னும் கல்யாணம் நடக்காம இருக்குன்னு..” என்று பொய்யாய் மிரட்ட, அதை அவன் உண்மை என்றே நம்பிப்போனான்..

“யக்கா யக்கா.. வேணாக்கா.. சொம்மாவே அண்ணனுக்கு கோவமாக்கீது.. இதுல இதுவும்னா வேணாம்க்கா…” என்று அவன் கெஞ்சிக்கொண்டு நிற்கும் போதே, பாலகுரு அங்கே வந்துவிட்டான்..

“என்ன ரெண்டுபேரும் சேர்ந்து மறுபடி என்ன ப்ளான் பண்றீங்க??” என்றவனின் குரலில் திரும்பிய பாண்டியா,

“ண்ணா நான் எதுமே பண்ணலண்ணா.. நம்புண்ணா…” என்று சொல்ல, பூர்ணிமா கலகலவென்று சிரித்துவிட்டாள்..

“யக்கா இன்னாக்கா…”

“ஹா ஹா ஒண்ணுமில்ல நீ போ..” என்று அவனை அனுப்பியவள், “பாஸ் என்னை கடலுக்குள்ள கூட்டிட்டு போ…” என்றுசொல்ல,

“இப்போவா..??” என்றான் வானத்தை பார்த்து..

“ஏன் இப்போ என்ன??”

“மழை வர்றது போல இருக்கு பூர்ணி.. இருட்டிடும் சீக்கிரம்..”

“ம்ம்ச் உன்கிட்ட கேட்டதுக்கு பாண்டியாக்கிட்ட போட் எடு சொன்னா கூட கூட்டிட்டு போவான்…” என்று வேண்டுமென்று பூர்ணிமா சீண்ட,

“ஓஹோ… போயேன்.. போ.. என்னை மீறி அவன் போட் எடுக்கிறானா பார்ப்போம்…” என்று பாலகுரு முறுக்கிக்கொண்டான்..

அவனுக்கும் தெரியும்.. அவள் சும்மா சொல்கிறாள் என்று.. ஆனாலும் அதனை அப்படியே ஏற்றுகொள்ள முடியுமா என்ன??

“சரி சரி உடனே முகத்தை தூக்காத பாஸ்.. கூட்டிட்டு போ.. மழை எல்லாம் வராது…” என்று பூர்ணி பிடிவாதம் பிடிக்க, “ஹ்ம்ம் போட் எடுக்க சொல்றேன்..” என்றவன் சொல்லப்போக,

அவளும் பாலச்சந்திரனிடம் சென்று அந்த பைலை கொடுத்துவிட்டு நல்ல பிள்ளையாய் அவரிடமும் “மாமா நானும் அவரும் கடலுக்கு போறோம்..” என்றும் சொல்லிவிட்டு வர, அவருக்கு மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் சரி என்றுதான் சொல்ல முடிந்தது..

ஒரு அளவான போட் அது.. மிஞ்சி போனால் ஐவர் அமரலாம்.. அவ்வளவே.. பூர்ணிமா  ஏறி அமர்ந்திட, பாலகுருவும் ஏறி அமர்ந்தவன் எஞ்சினில் அமர்ந்து போட் செலுத்த ஆரம்பிக்க,

“பாஸ்…!!!!” என்று கண்ணை விரித்தாள்..

“என்ன என்ன???!!”

“நீயா ஓட்ட போற…???!!!”

“அதுக்கேன் இவ்வளோ ஷாக்.. எத்தனை வருசமா இங்க இருக்கோம்.. இதுகூட தெரியாதா எனக்கு…”

“அதில்ல பாஸ்.. ஆனாலும்…” என்றவள் சுற்றி முற்றி பார்க்க, கரையில் இருந்து நன்றாகவே உள்ளே வந்துவிட்டு இருந்தனர் இருவரும்..

சுற்றிலும் ஆங்காங்கே சில கப்பல்கள் சிறு சிறு  போட்கள் தூரமாய் தெரிய, அப்போதுதான் அவளுக்கு புரிந்தது ஆட்டோமேட்டிக் எஞ்சின் பொருத்தப்பட்ட போட் என்று..

“அதானே பார்த்தேன்…” என்று முணுமுணுத்து அவளும் அவனோடு சென்று அமர, “இன்னும் உள்ள போவோமா ??” என்றான்..

“போவோமே….” என்றவள் மெதுவாய் அவன் தோள்களில் சாய்ந்துகொள்ள, சுற்றிலும் கடலும்… கடல் அலைகளும்.. ஜில்லென்று வீசும் கடல் காற்றும்.. பாலகுரு என்ஜினை நிறுத்தியதால் ஒரே இடத்திலேயே மிதந்துகொண்டு இருந்த படகும், அதில் இருந்த இவர்கள் இருவரும்..

பார்க்கவே பூர்ணிமாவிற்கு அத்தனை ரம்யமாய் இருந்தது இந்த பொழுது.. மனம் மிக மிக இலகுவாய் உணர, “பாஸ்…” என்று இன்னமும் அவன் கரத்தோடு தன் கரத்தினை பிணைத்தவள்

“ம்ம் இப்போ சொல்லு.. அன்னிக்கு பாதி பேசிட்டு இருக்கபோவே நீ கிளம்பிட்ட…” என,

“அதை இங்க வந்து தான் கேட்கணுமா…” என்றவனோ இன்னும் அவளை தன்னோடு நெருக்கிக்கொண்டன்..

“வந்ததே கேட்கத்தான்.. என்னைப் பார்த்து பேச முடியாது சொன்ன.. இப்போ என்னைமட்டும் தான் பார்த்து பேசணும் நீ…”

“ஹா ஹா… நீ சொல்லலைன்னாலும் உன்னை மட்டும் தான் பார்ப்பேன்… பேசுவேன்… அப்போ புரியாதது நிறைய இப்போ புரிஞ்சது…”

“ஓஹோ…!!!!!! அப்படி என்ன புரிஞ்சதாம்..” என்றாள் சலுகையாய்..  

“ம்ம் புரிஞ்சது சொல்லவா.. இல்லை நான் ஏன் கிளம்பிப் போனேன்னு சொல்லவா…???”

“ரெண்டுமே சொல்லு பாஸ்…”

“ஹா ஹா கிளம்பி போனதுனால தான் என்னை எனக்கு புரிஞ்சது.. வந்து இப்போ உன் கூட இப்படி சுத்துறதுனால தான் உன்னை எனக்கு புரிஞ்சது… போதுமா…” என்றவனை,

‘அடப்பாவி….’ என்றுதான் பார்த்தாள் பூர்ணிமா..                                          

           

                       

 

Advertisement