Advertisement

குருபூர்ணிமா – 1

“ஓம் பாலாம்பிகா போற்றி.. ஓம் பாலசௌந்தரி போற்றி..” என்று, ஆளுயுரத்தில் இருந்த பாலாம்பிகை அம்மன் படத்திற்கு முன்னே நின்று, பிரார்த்தித்துக்கொண்டு இருந்தார் பாலசந்திரன்… அவரின் அருகே பாலகுருவும் கண்களை மூடி நின்றிருந்தான்..

தூரத்தில் பல பல ஓசைகள்… கப்பல்கள் கிளம்புவதற்கும், வந்து நிற்பதற்குமான சமிக்கை ஒலிகள்… கூலி ஆட்களின் சத்தம்… அத்தனையும் தாண்டி கடல் அலைகளின் இரைச்சல்கள்… துறைமுகத்தில் வந்து நிற்கும் சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை ஏற்றவும் இறக்கவும் ஆட்கள் செய்யும் ரகளைகள் இப்படி இத்தனை இருக்க,  அதை எல்லாம் தாண்டி அங்கே அவனின் ‘ஹார்பர் ஆபிஸ்…’க்கு வெளிய அவனுக்காக காத்துக்கொண்டு இருக்கும் ஆட்களின் பேச்சு சத்தம்..

பாலகுருவும் அவனின் அப்பாவும் அவர்களின் குல தெய்வமான பாலாம்பிகாவை வேண்டி முடிக்க, அவனின் அலைபேசி அடித்தது..

“இன்னாடா…..” என்றவன் நெற்றியை சுருக்க,

“ஹா சரி சரி.. ஹார்பர் ஆபிஸ்ல… கூட்டின்னு வா பேசிக்கலாம்..” என்று போனை வைத்தவன், அவனின் அப்பாவை பார்த்து,

“ப்பா… அந்த மைனர் ஆளுங்க… பேச வர்றாங்களாம்.. நம்ம சோமு கூட வர்றான்.. சுமுகமா முடிஞ்சா சோமுக்கு அஞ்சு லட்சம் கொடுத்து விட்ருங்க…” என,

“சரி குரு நான் பேசிக்கிறேன்.. நீ வீட்டுக்கு போ…” என்றார்..

“ஏன்?? அதெல்லாம் முடியாது.. வரட்டும்.. அந்த மைனர் மச்சினன் அன்னிக்கு இன்னா துள்ளு துள்ளுனான்.. இன்னிக்கு அள்ளு கழண்டு போயித்தான் பேச வர்றானுங்க.. ஆனப்பா சும்மா விடக்கூடாது அவனுங்களை.. அத்தனை சீக்கிரம் நம்ம பேசி முடிச்சிடக்கூடாது…” என்று குரு போன மாதம் நடந்த தகராறை இன்னமும் மனதில் வைத்து பேச,

“டேய் டேய் குரு… நான் பேசிக்கிறேன் சொல்றேன்ல.. போ.. போய் மாப்பிள்ளையா லட்சணமா இரு.. நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம்… மாப்பிள்ளையா லட்சணமா இரு.. வீட்டுக்கு போ..” என,

பாலகுருவோ, நெற்றியை சுருக்கியபடியே, அவனின் அப்பாவை பார்த்தபடியே, சப்தமாய் “பாண்டியா..!!!!” என்றழைக்க, வேகமாய் வெளியில் இருந்து ஓடி வந்தான் ஒருவன்..

“சொல்லுண்ணா…” என்று..

பாலசந்திரனுக்கு தெரியும் மகன் கிளம்பிட மாட்டான் என்று.. சும்மா நாளிலே ஹார்பர் ஆபிஸ் தான் கதி என்று இருப்பான்.. அதிலும் இன்று.. கேட்கவே வேண்டாம்.. இரண்டில் ஒன்று தெரியாது போக மாட்டான் என்றிருக்க, அதிலும் நாளை அவனின் நிச்சயதார்த்தம் என்றும் வேறு இருக்க,

இந்த நேரத்தில் பாலகுரு இங்கிருந்து ஏதாவது பிரச்சனை, அடிதடி பஞ்சயாது என்று ஆகாமல் இருக்கவேண்டும் என்றுதான் பார்த்தார்..

“அப்பாக்கு.. கூலா குடிக்க எதுனா வாங்கிட்டு வா.. அப்படியே மைனர் ஆளுங்க வர்றப்போ… நம்ம பசங்கள வெளியே தள்ளி நிக்க சொல்லு….” என,

“சரிண்ணா…” என்றவனும் வெளியே செல்ல,

“குரு நான் என்ன சொல்றேன் நீ என்ன பண்ற.. நான் பேசாத டீலிங்கா???” என்றவருக்கு,

“ப்பா… அந்த மைனர்க்கிட்ட நீங்க டீலிங் பேசுங்க.. ஆனா அவன் மச்சினன்கிட்ட வேற ஒரு கணக்கு இருக்கு..” என்றவன் வெளியே செல்ல,

“ண்ணா…” என்றும்… “குரு…” என்றும்.. “தலிவா…” என்றும்… ஆட்கள் அவனை சூழ்ந்துகொள்ள,

“இன்னாடா இன்னும் இங்கன நின்னா எப்படி.. தள்ளிப் போங்க… அந்த போஸ்.. அதான் மைனரோட அல்லக்கை அவன் வந்தா, தனியா கூட்டினு போய் அந்த கொச்சி கப்பலாண்ட நின்னு பேச்சு குடுங்க.. மொத்தமா போகவேணா.. எவனா ரெண்டு பேர் மட்டும்.. அப்புறம் நான் பேசிக்கிறேன்…” என்றவன்,

“சொதப்பாம செய்யணும்…” என்று என்று ஆள்காட்டி விரல் நீட்டி மிரட்ட,

“ண்ணா இன்னா ண்ணா இதெல்லாம் நீ சொல்லணுமா.. போன் போட்டு இதான்டா மேட்டருன்னு சொன்னா முடிக்க போறோம்.. அதைவிட்டு.. நீ ஏன் ண்ணா இன்னிக்கு வரனும்.. அந்த போஸ் எல்லாம் கழிசடை பைய…” என்று ஒருவன் சொல்ல,

“ஹா ஹா.. ஏன்டா எல்லாம் இப்படி விரட்டுனா எப்படி.. நானே கிளம்பிடுவேன்…” ஒருமுறை நின்று சுற்றியும் தன் பார்வையை செலுத்தி மனதளவில் ஒருசில கணக்குகள் போட்டு முடித்தே மீண்டும் உள்ளே சென்றான்..

பாலகுரு… அவனுக்குத் தெரிந்தது எல்லாம் இந்த ஹார்பர் ஹார்பர் ஹார்பர் மட்டுமே.. சொந்தமாய் இவர்களுக்கு நான்கு சரக்குக் கப்பல்கள் இருந்தன.. இதுபோக… கட்டப் பஞ்சாயத்து… ஹார்பரில் நடக்கும் ஏலங்களில் முக்கால்வாசி பாலாகுருவிடம் தான் வந்து சேரும் இறுதியில்..

நேரடியாய் ஏலம் எடுக்க முடியாதவையை எல்லாம் யாரை வைத்தேனும் செய்து முடித்திடுவான்.. இங்கே வந்திட்டால் அவன்தான் இங்கே ராஜா.. இங்கேமட்டுமில்லை.. அவன் எங்கிருந்தாலும் அவனே அங்கே ராஜா.. அத்தனை சீக்கிரம் யாருக்கும்.. யாரிடமும் மசிந்திடமாட்டான்..

திடம்… திமிர்… தைரியம்.. என்று அனைத்தும் அளவுக்கு அதிகமாகவே கலந்த கலவை அவன்.. அப்படிப்பட்ட அவனுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்..      

உற்றார் உறவினர்கள்… சுற்றம்.. நட்பு.. வேலையாட்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு பாலகுருவின் திருமணமே.. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை, பாலாகுருவிற்கு நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுக்க வந்தனர்..

ஆனால் அவனுக்கு யாரேனும் பிடிக்கவேண்டுமே..???

“ஏன் குரு கிட்டத்தட்ட எத்தனை வரன்.. ஒரு பொண்ணு கூட பிடிக்கலையா???” என்று அவன் வீட்டினர் அலுக்காத நாளில்லை.

அவனோ “உங்களுக்கு முடிஞ்சா பொண்ணு பாருங்க.. இல்லையா என்னிக்கு எனக்கு யாரை பிடிக்குதோ சொல்றேன். கல்யாணம் பண்ணி வைங்க…” என்பான் சர்வசாதாரணமாய்..

“தலிவா…. நம்ம சோமு தம்பி அவனுக்குள்ளாம் கண்ணாலம் நடக்குது.. நீயும் சீக்கிரம் கண்ணாலம் பண்ணு தலிவா..” என்று ஹார்பரில் வேலை செய்பவர்கள் யாரேனும் கேட்டால்,

“இந்த கடலாண்ட இருந்து அழகா ஒரு பொண்ணு வரும். அதுக்குதான் வெய்டிங்…” என்பான் அவர்களின் பாசையிலேயே..

“ண்ணா என்னண்ணா…” என்று கொஞ்சம் உரிமையோடும்.. நட்புணர்வோடும் கேட்பார்கள் அவனிடம் வேலையில் இருப்பவர்கள்..

“டேய் டேய் மனசுக்கு பிடிக்கனுமா இல்லையாடா??” என்பான் எப்போதும் போல்.. அவனிடம் யார் எப்படி பேசுகிறார்களோ அந்த பாஷையே அவனுக்கு.. ஹார்பர் வந்துவிட்டால் பெரும்பாலும் அங்கிருப்பவர்கள் பேசும் விதத்தில் தான் பேசுவான்.. வீட்டிலும் அவன் நண்பர்களிடமும் அவர்கள் எப்படியோ அப்படி..

சிலருக்கு பாஸ்.. சிலருக்கு அண்ணா.. சிலருக்கு மச்சான்.. வீட்டினருக்கு குரு… அவளுக்கு????……

முதலில் யாரவள்???

யாரைத்தான் அவனுக்குப் பிடிக்கும்… அப்படியொருத்தி இருக்கிறாளா??? அவனுக்குத்தான் தெரியும்..

ஆனாலும் வீட்டினரின் தேடல் நிற்கவில்லை.. அவன் தேடுகிறானோ இல்லையோ வீட்டினர் சல்லடை போட்டனர்.. அந்த அவனுக்கான அவளைத்தான், ஒருவழியாய் தேடி… அதுவும் அவளை பாலகுருவிற்கு பிடித்து இதோ இன்று மாலை நிச்சயம் செய்யப் போகிறார்கள்.

அதிலும் பெண் வீட்டில் உறுதி சொல்லும் முன்னே, பாலகுருவின் அப்பாவும் அம்மாவும் நூறு முறை இவனிடம் கேட்டிருப்பர், “குரு கன்பார்ம் தானே.. உறுதியா சொல்லிடு.. இல்லையா இன்னும் ரெண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ..” என்று..

“அடடா.. எத்தனை தடவை சொல்றது.. எனக்கு பிடிச்சிருக்கு.. போதுமா.. இதுக்கு மேல என்ன சொல்ல..” என்று தீர்மானமாய் சொன்ன பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி..

முத்துராணி, அவனின் அம்மா… இன்னும் கூட மகனுக்கு தாங்கள் பார்த்த பெண்ணை பிடித்ததில் ஆச்சர்யம் தான்..

“எங்க அந்த திமிர் பிடிச்சவளை பிடிச்சிருக்குன்னு சொல்லிடுவானோன்னு பயந்துட்டே இருந்தேன், மைதிலி..” என்று தன் ஓரகத்தியிடம் ஓயாது சொல்லிக்கொண்டு இருந்தார்.

“அக்கா.. அதெல்லாம் நம்ம குரு அப்படி சொல்வானா.. அவ எங்க?? நம்ம பார்த்திருக்க பொண்ணு எங்க.. பாருங்க.. எவ்வளோ அழகுன்னு… நிர்மலான்னு பேருக்கு பொருத்துமா இருக்கா.. எவ்வளவு வசதி ஆனா அந்த பந்தா கொஞ்சம் கூட இல்லையேக்கா.. எத்தனை அடக்கமா பேசினா..” என்று வரப்போகும் மருமகளை சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தனர் பெண்கள்.

பாலகுரு வழக்கம் போல் சாவகாசமாய்தான் நிர்மலாவின் புகைப்படத்தை பார்த்தான்.. ஆனால் பார்த்ததுமே பிடித்துவிட்டது.. இரண்டு நிமிடம் நிர்மலாவின் புகைப்படத்தில் பார்வையை பதித்திருந்தான்.. அவ்வளவே.. அதற்குமேல் யோசிப்பதற்கு எதுவுமில்லை என்பதாய் அவன் மனதிற்கு நிர்மலாவை பிடித்திருந்தது..

வீட்டில் சரி சொல்லிவிட்டான்.. அதன் பின்னே ஒரே வாரத்தில் இதோ நிச்சயதார்த்தம் என்று முடிவு செய்திருந்தனர்.. நாளை நிச்சயம்.. ஆனால் இன்று..?????

“குரு… குரு.. வேணாம் குரு….” என்று மரண பீதியில் அலறிக்கொண்டு இருந்தான் போஸ்..

காரணம்… அவனின் கழுத்து சங்கில் துப்பாக்கி வைத்து அழுத்திக்கொண்டு இருந்தான் பாலகுரு.. அவனின் கண்களில் எதிரில் இருப்பவனை இப்போதே சுட்டுத்தள்ளி கடலில் உள்ள மீன்களுக்கு இறையாய் போட்டுவிட வேண்டும் என்ற வேகம்தான்..

அதையும் தாண்டி கோபமும்… இவனை அத்தனை எளிதில் சாக விடுவதா…???

‘நோ நோ… குரு…. அலற விடு…’ என்று அவன் மனம் சொல்ல… கொஞ்சம் கொஞ்சமாய் துப்பாக்கி இறங்கி அந்த போஸின் இருதய பகுதியில் வந்து நின்றது…

“ண்ணா போட்ருண்ணா… மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்…” என்று அந்த போஸின் கரங்களை பின்னே மடக்கி பிடித்திருந்தவனில் ஒருவன் சொல்ல,

“தலிவா.. நீ போட முன்னால நான் ஒருதபா அவன இந்த கத்தியால குத்திடவா???” என்றான் பாலகுரு பின்னே நின்ற ஒருவன்..

இவர்களுக்கு நடுவில் சிக்கி, எவன் என்ன செய்யபோகிறானோ என்ற பீதியில், போஸ் திமிறிக்கொண்டு திணறிக்கொண்டும் நிற்க,

“என்ன சொன்ன என்ன சொன்ன… நீ என்னை போட்ருவியா.. ஹா ஹா கனவுல கூட நீ அதை நினைக்கமுடியாது.. எவ்வளோ தைரியம் இருந்தா பெரிய இவனாட்டம் என்மேல கை வைப்ப..” என்றபடி பாலகுரு அவன் கையில் இருக்கும் பிஸ்டலை போஸின் மார்பில் அழுந்த பதிய வைக்க,

“குரு.. குரு.. நான் சொல்றத கேளு.. டீலிங் பேசன்னு சொல்லிட்டு.. இப்படி பண்றது நியாயம் இல்லை.. நியாயமா பஞ்சாயத்து பேசுறவங்கன்னு பேர் இருக்கு.. அதை கெடுத்துக்காத…” என்று போஸ் தந்திரமாய் தப்பிக்க முயல முயல,

“ஏய் ஏய் நிறுத்துடா… எங்களுக்கு இருக்க பேர் எப்பவும் இருக்கும்.. அதை எப்படி இருக்கவைக்கனும்னு எனக்குத் தெரியும்….” எனும்போதே பாலகுருவின் அலைபேசி சப்தமிட,

“ம்ம்ச்…” என்ற ஒரு சலிப்போடு அவன் அதை எடுத்துப் பார்க்க, அதில் ஒளிர்ந்த பெயரைக் கண்டு, ‘இவ எதுக்கு இப்போ கூப்பிடுறா..’ என்றெண்ணியபடியே அழைப்பை துண்டிக்க, அதுவோ திரும்ப திரும்ப சப்தம் எழுப்பியது..

போஸின் மார்பில் துப்பாக்கி வைத்தபடியே, மற்றொரு, கரத்தால் அழைப்பை ஏற்றவன் “ஏய் இப்போ என்னாத்துக்கு சும்மா கால் போடுற.. என்னடி வேணும்…” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்..

அவனுக்கு அழைத்தவளோ, “முதல்ல அந்த போஸ் நெஞ்சுல இருந்து கன் எடு…” என்று அதிகாரமாய் சொல்ல,

“ஏய் ஏய்.. என்ன..” என்று சுற்றி முற்றி பார்த்தவன், அவளுக்கு அழைத்தவள் அங்கில்லை என்று தெரியவும்,

“என்னடி பூச்சாண்டி காட்டுறியா???” என்றான் இன்னமும் அழுத்தமாய் பிஸ்டலை அழுத்தி..

“ம்ம்ச் பாஸ்… இப்போ நீ கன் எடுக்குறீங்களா இல்ல.. அன்னிக்கு பீச்ல நடந்த வாலிபால் மேட்ச்ல நீ  கப் அடிச்சப்போ, உன் ஆபிஸ்ல வச்சு நான் உனக்கு கிஸ் அடிச்சேனே.. அந்த போட்டோ.. அந்த போட்டோ… என்கிட்டே அப்படியே இருக்கு… அதை அப்படியே உங்கம்மா… உங்கப்பா.. அப்புறம்… நீ……………….. நாளைக்கு நிச்சயம் பண்ண போறியே அந்த நிர்மலா.. அவளுக்கும் சேர்த்து அனுப்பிடுவேன்.. வேணும்னா சொல்லு.. உனக்கும் அனுப்புறேன்…” என்றவளின் குரலில் இருந்ததெல்லாம் நீ, நான் சொன்னதை செய்யாவிட்டால்,  நான்.. நான் சொல்லிக்கொண்டு இருப்பதை செய்வேன் என்பதுமட்டும் தான்..

எதற்கும் அசராத பாலகுரு, அவள் சொன்ன இந்த விசயத்தில் கொஞ்சம் அசந்துபோய் தான் நின்றுவிட்டான்.. காரணம் அவள் சொல்லும் விசயம் நடந்த உண்மைதான்..

‘எப்படி எப்படி பூர்ணி… கப் பார்த்தியா.. தொடர்ந்து நாலாவது வருஷம்…’ என்று அவளிடம் பெருமையாய் அவன் ஜெயித்த கோப்பையை காட்ட,

அவளோ ‘ஹ்ம்ம் உன்னை யார் ஜெயிக்க முடியும்…’ என்றபடி வந்து அவனின் கன்னத்தில் இதழ்பதிக்க,

‘ஏய் என்னடி பண்ற..??’ என்று வேகமாய் அவனின் கன்னத்தை துடைத்தவன், ‘வெக்கமேயில்லையா உனக்கு..’ என்று கர்ஜித்தான்..

அதே கர்ஜனைதான் இப்போதும்.. அதே கேள்விதான் இப்போதும்..

“வெக்கமேயில்லையா டி உனக்கு.. அசிங்கமா இல்லை.. இப்படி சொல்ல…” என்று பேச, போஸோ எங்கேயாவது தப்பிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டு இருந்தான்..

“அட என்ன பாஸ்..  இதுக்கு ஏன் வெக்கம் அசிங்கம்னு எல்லாம் பெரிய வார்த்தை சொல்லணும்.. நான் யாரை லவ் பண்றேனோ.. யாரை லவ் பண்ணிட்டே இருப்பேனோ அந்த உன்னைத்தானே கிஸ் பண்ணேன்… இதுல நீ சொன்ன கேட்டகரி எல்லாம் எங்க வந்தது.. நான் ஒன்னும் யாருக்கோ அனுப்ப போறதில்ல.. எல்லாம் நம்மளுக்கு வேண்டப்பட்டவங்கதான்..” என்றாள் எகத்தாளமாய்..

பூர்ணி.. பூர்ணிமா.. அவள் பேச பேச, பாலகுருவிற்கு ரத்தம் சூடேறியது தான் மிச்சம்.. அவளைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.. எதிர்வினை எதையும் சிறிதும் யோசிக்காது, மனதில் நினைத்ததை செய்துவிடுவாள்.. அவனுக்கு அவளிடம் பிடித்த விசயமும் அதுதான் பிடிக்காத ஒன்றும் அதுதான்..

அதுவும் அவள் இப்போது சொல்வது.. அவள் அவனை முத்தமிட்டது நிஜம்.. அந்த நொடியில் அவன் அறியாது கண்கள் மூடியது நிஜம்.. ஆனால் அதை அவள் போட்டோ எடுத்தாளா  எப்படி?? ஒரு நொடி கூட இருக்காதே?? என்று யோசிக்கையில்,

“இங்க பார் பூர்ணி.. இது வேற டீலிங்.. இதுல நீ வராத..” என,

“நீ எங்க இருக்கியோ.. அங்க நானும் இருப்பேன்.. வருவேன்..” என்றாள் திண்ணமாய்..

“ஏய் அதுக்கெல்லாம் உனக்கு எந்த ரைட்ஸும் இல்லடி…” என,

“ஹா ஹா ரைட்ஸ் எல்லாம் உன்கிட்ட யார் கேட்டா.. முதல்ல நான் சொன்னதை செய்.. அவன் நெஞ்சுல இருந்து கன் எடு.. அவனை போக விடு.. ஒழுங்கா மாப்பிள்ளையா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.. என்ஜாய் பண்ணு….” என்று கட்டளையாய் அவளின் குரல் ஒலிக்க,

“இல்லைன்னா????!!!!” என்றான் புருவத்தை உயர்த்தி கேள்வியாய்…

“கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்…” என்று அவள் சொல்லிமுடிக்க,

“ச்சேய்….!!!…” என்றபடி போஸின் நெஞ்சில் இருந்து பிஸ்டலை பாலகுரு எடுக்க, அப்போதுதான் அந்த போஸிற்கு நிம்மதியாய் மூச்சு விடவே முடிந்தது..

‘ஹப்பாடி….’ என்று ஒரு மூச்சு விட்டவனை அப்போதும் ஆக்ரோசமாய் பார்த்த பாலகுரு,

“பிசாசு…!!!!” என்று போனில் சொல்ல, “ஹா ஹா ஹா…” என்று சிரித்தபடி போனை வைத்துவிட்டாள் பூர்ணிமா…

அவளின் சிரிப்பு பாலகுருவிற்கு இன்னமும் எரிச்சலை… நினைத்ததை செய்ய முடியாத ஒரு ஏமாற்றத்தை.. அதனையும் தாண்டி அந்த போஸின் மீதிருந்த கோபத்தை எல்லாம் கலந்து ஒருவித உணர்வை கொடுக்க,

“டேய்.. எவன்டா அது.. என்கிட்டே இருந்துட்டே அவளுக்கு வேலை பார்க்கிறது…” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்து கத்த, அனைவருமே மௌனித்து நின்றிருந்தனர்..

அவனை சுற்றி இருக்கும் அனைவருமே அவனோடு பல வருடங்களாய் இருப்பவர்கள்.. யாரையும் சட்டென்று கை நீட்டி சொல்லிட முடியாது.. அனைவரும் மௌனமாய் நிற்பது கண்டு,

“இன்னாடா சீனா..??? சிக்குறப்போ இருக்கு???” என்று அந்த பிஸ்டல் நீட்டியே மிரட்டியவன், போஸிடம் திரும்பி, “உனக்கு திரும்ப திரும்ப நல்ல நேரம்டா.. ஆனா மாட்டுவ.. கண்டிப்பா மாட்டுவ…” என்றுசொல்ல,

“குரு.. எதுன்னாலும் மனசுல வச்சுக்காத குரு…” என்று சொல்லியபடி ‘நான் கிளம்பவா???!!’ என்று பார்த்தான் அவன்..

“போய் தொலை… ஆனா… ஒருநாள் உனக்கு இருக்கு…” என்று பாலகுரு சொல்லும்போதே, போஸ் ஓடிவிட்டான்..

பாலகுரு.. அவனிடம் யார் எதுசொன்னாலும் முடிஞ்சா பார்த்துக்கோ.. என்று சொல்லும் ஆள்தான்.. ஆனால் ஒருவிசயம் அவன் மிக மிக கவனமாய் இருப்பான்.. அது இந்த ஹார்பர் தொழிலில் அவர்களுக்கு இருக்கும் பெயர்.. கட்டப்பஞ்சயத்து என்றாலும் இவர்களிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்ற பெயர் அனைவர்க்கும் உண்டு..

இந்த பெயர் தான் இன்று அவனை சுற்றி இருக்கும் உண்மையான ஆட்களை அவனுக்கு சம்பாரித்து கொடுத்தது. அவனின் அப்பா காலம்தொட்டே.. பணம் கொழிக்கும் தொழில்தான்.. ஆனால் அதைத்தாண்டி மது.. மாது என்று எவ்வித விசயத்திலும் அவனை யாரும் ஒன்றும் சொல்லிட முடியாது.. அவனது வீட்டினரையும்தான்..

அதுதான் பூர்ணி அப்படி சொன்னதும் அப்படியே உள்ளே லேசாய் கொஞ்சமே கொஞ்சம் ஆடிப்போனான்.. அப்படியொரு போட்டோவை அவனின் வீட்டினர் பார்த்தால் அதுவும் அவனுக்கு நாளை வேறொரு பெண்ணோடு நிச்சயம் என்று இருக்கையில் அதனை பார்த்தால் அவனைப் பற்றி என்ன நினைப்பார்..

‘ச்சே… எங்கிருந்து தான் வந்தாளோ.. சரியான….’ என்று பூர்ணிமாவை திட்ட வார்த்தைகள் தேடியவன் அது கிடைக்காமல் போக, கப்பலில் சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த ஒரு டின்னை கோபத்தில் ஒரு எத்து எத்திவிட்டு போக, அதுவோ கடல் நீரில் சென்று பொத்தென்று விழுந்தது..               

      

                         

 

 

        

 

Advertisement