Advertisement

                   என்னிதயம் கேட்ட ஆறுதல் – 9

ஒருபக்கம் நிச்சய வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது.

வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு சரோஜா வேறு “அருண் வேற இளா வேறன்னு நாங்க நினைக்கல.. என்னவோ.. இளாக்கு அங்க வேலை செய்ய பிடிக்கல.. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா என்ன??!!”

“நீங்க பொண்ணு பாருங்க.. எல்லாம் அமைஞ்சு வந்தா ரெண்டு கல்யாணமும் சேர்த்து செய்யலாம்…” என்றிட,

விஜயன் தயங்க, மோகனாவோ எப்படியேனும் மகனுக்கு நல்ல இடத்தில் பெண் எடுத்தால், அதை வைத்து மகளையும் மேல்தட்டில் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்றெண்ணி தங்களின் வசதிக்கு மேலே தான் பெண் பார்த்தார்.

பேச்சு வாக்கில் அண்ணனோடு பேசுகையில் தெய்வா இதனை சொல்லிட, “ம்மா என்ன பண்ணிட்டு இருக்க நீ??” என்று ஆங்காரமாய் தான் கேட்டான் இளம்பரிதி.

“நா என்னடா செஞ்சிட்டேன்….??”

“வசதியான வீட்டு பொண்ணு. உனக்கு மருமகளாவும் இருக்கமாட்டா.. நீ மாமியாராவும் இருக்க முடியாது. எதார்த்தம் புரிஞ்சுக்கப் பாரு..” என்றவன் அப்பாவைப் பார்க்க,

அவரோ “இது உங்கள் பேச்சு…” என்கிற பாவனையில் இருந்தார்.

“ப்பா…”

“என்ன இளா…?!”

“அமைதியா இருந்தா எப்படி??”

“என்ன சொல்ல சொல்ற? எது எப்படியா இருந்தாலும் உனக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு நினைக்கிறா உங்கம்மா…”

“எனக்கு அமையுற வாழ்க்கை நம்ம குடும்பத்துக்கும் நல்லதா இருக்கணும்.. அதான் சொல்றேன். நம்ம தகுதிக்கு மீறி ஏன் பாக்கணும்?? இதெல்லாம் யார் ஏற்பாடு…?” என்று இளா பேச பேச, மோகனாவின் முகம் மாறிவிட்டது.

“ஏன்… ஏன் நமக்கென்ன தகுதிக்கு குறைச்சல்?!! நம்ம வீட்ல ஒன்னுமில்லையா என்ன?? என்ன பேசுற இளா…” என, சடுதியாய் அங்கே சூழல் மாறிப்போனது.

மோகனாவின் குரல் உயர, இளம்பரிதியின் பொறுமையும் பறந்துவிட “ம்மா… நான் தகுதின்னு சொன்னது நம்மல கம்மியா காட்டி சொல்லலை. எப்பவும் யார்கிட்டயும் நம்ம கம்மியாகிட கூடாதுன்னு சொல்றேன். நம்ம குடும்பத்துக்கு செட்டாகுற பொண்ணா பார்க்கிறதுன்னா பாரு.. இல்லையா பொண்ணே பார்க்காத விட்ரு…” என்று இரு கரம் கூப்பி இளா கும்பிட,

“இளா..!!” என்று விஜயன் கூட அதிர்ந்துதான் போனார்.

இளம்பரிதிக்கு எக்காரணம் கொண்டும், வெற்றிவேலன் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதில்உடன்பாடில்லை. அதற்காக என்ன நடந்தது என்பதையும் யாரிடமும் சொல்லவும் முடியாதல்லவா??!

“தயவு செஞ்சுப்பா…” என்றவனின் பார்வை என்ன சொல்லியதோ, பெற்றவர்கள் இருவரும் அப்படியே அமைதியாகிட, இளம்பரிதியின் மனதிற்குள் வேறு சிந்தனை வேறு.

வேறு யாரின் சிந்தனையாய் இருந்திட முடியும்.. வானதி…!!

அவள் தான்.. அவளே தான்.

பேயாட்டம் போட்டுக்கொண்டு இருந்தாள்..!! அவனின் மனதிற்குள்..

‘ச்சே… என்னாச்சு எனக்கு….’ என்று தன்னை தானே கடிந்தவன், வேகமாய் வீட்டினில் இருந்து கிளம்ப, அவனை யாரும் தடுப்பாரில்லை.

மனது வேறெங்கோ இருக்க, பார்வையின் முன்னம் தெரியும் காட்சிகள் எல்லாம் அவனின் கருத்தினில் பதியவேயில்லை. விளைவு… விபத்துத்தான்..

இளம்பரிதியின் உள்ளத்திற்கு ஏற்பட்ட விபத்து இப்போது அவனின்  உடலிற்கும்..

சாலையில் இருந்த டிவைடரை தாண்டி செல்கிறேன் என்று செல்லப்பார்க்க, அதே நேரம் பக்கவாட்டு சாலையில் இருந்து வேறொரு வாகனம் வர, இளாவின் கவனமும் இங்கில்லாது போக, சுதாரிக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில் எல்லாம் கடந்திருந்தது.

அடி என பார்த்தால்  வலக்கையில் நல்ல அடி… தலையிலும் கட்டு போடும் அளவு காயம். மருத்துவமனையில் இருந்திட வேண்டிய நிலை.

செய்தி கேட்டு வீட்டினர் அடித்துப் பிடித்து ஓடிவர, வெற்றிவேலனும் சரோஜாவும்  அன்றென பார்த்து பழனியில் இருக்க, அருண் தான் அவர்களுக்கு அழைத்துச் சொல்ல, அவர்களும் செய்தி கேட்டு வேகமேடுத்தனர்.

விஷயம் அறிந்து வானதிக்கு பக்கென்று இருந்தது..!

அவனை பிடிக்கவில்லைதான்.. அவனால் மனதில் பெரும் சலனம் எழுந்தது தான்..!  இருந்தும்…!!

நெஞ்சில் எழும் படபடப்பை அவளால் வெளிக்காட்டவும் முடியவில்லை. காட்டாமலும் இருக்க முடியவில்லை.

“என்னங்க நம்மளும் போயி பார்த்துட்டு வந்துடலாம்.. இல்லன்னா எனக்கு தூக்கமே வராது…” என்று பிருந்தா சொல்ல,

கதிர்வேலனும் “சரி…” என்று கிளம்ப,

ராதாவோ “நானும் வர்றேன்.. அந்த தம்பி எவ்வளோ உதவி செய்யுது…” என, எஞ்சி இருப்பது வானதி மட்டுமே.

“நானும் வருகிறேன்…” என்று சொல்லிட வார்த்தைகள் வந்துவிட்ட போதிலும், அவளால் அதை சொல்ல முடியவில்லை.

அனைவரையும் பார்த்து நிற்க, சரோஜாதான் “வானதி நீயும் வாயேன்.. தனியா தானே இருக்க..?” என,

எப்போதும் இப்படியான விசயங்களுக்கு அம்மா அல்லது அண்ணன் முகம் பார்ப்பவள் இப்போது யாரையும் காணாது “சரி…” என்று விட்டாள்.

திண்டுக்கல் சென்று, நேரே மருத்துவமனை செல்ல, “நீ எப்படி வானதி வீட்ல கொண்டு போய் விடவா…??!!” என்று பிருந்தா கேட்க,

“இல்லண்ணி… திரும்ப அங்க வந்து நீங்க மறுபடியும் இந்தபக்கம் தான் வரணும்.. நேரா ஹாஸ்பிட்டல் போயிடலாம்…” என்றுவிட்டாள்.

அவனைக் காண்பதைத் தவிர, அவளுக்கு அப்போதைய தலை போகும் காரியம் வேறெதுவும் இல்லை.

மோகனா ஒருபுறம் அழுது ஓய்ந்திருக்க, விஜயன் அதனை வெளிக்காட்டவில்லை. செய்தி அறிந்து தெய்வா வருவதாய் சொல்ல, மோகனா தான் இப்போதைக்கு வேண்டாம் என்று விட்டார். ஆனாலும் அவள் கிளம்பி இருந்தாள். அதுவேறு விஷயம்.

அருண் தான் இங்கே இவர்களோடு இருக்க, அவனிடம் மட்டுமே தெய்வா சொல்லியிருந்தாள் வருகிறேன் என்று.

அவனும் சொன்னான் தான் “வேணாம் தெய்வா.. வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் வந்து பாரு…” என,

“இல்ல என்னால இருக்க முடியாது. எங்கண்ணா எவ்வளோ கவனமா வண்டி ஓட்டுவான்னு எனக்குத் தெரியும். ஆனா…” என்றவளுக்கு குரல் நடுங்க,

“சரி…” என்றுவிட்டான் அருண்.

தெய்வா பேருந்தில் தான் கிளம்பியிருப்பதால் “ஸ்டாப் வந்துட்டு சொல்லு.. மிட் நைட் ஆகிடும்.. தனியா வராத.. நான் வந்து கூட்டிட்டு போறேன்…” என்று அருண் சொல்ல,

“வீட்ல இப்போதைக்கு சொல்லவேணாம் ப்ளீஸ்..” என்று தெய்வா சொல்ல, அதற்கும் சரி சொல்லவேண்டிய நிலை அவனுக்கு.

வெற்றிவேலனும், சரோஜாவும் இளம்பரிதியின் பெற்றோருக்கு ஆறுதல் பேச, பிருந்தாவும் கூட “நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்கம்மா.. அவன் தங்கம்.. அவன் குணத்துக்கே எதுவும் ஆகாது.. யார் கண்ணு பட்டுச்சோ.. திருஷ்டி போச்சுன்னு நினைச்சுக்கோங்க..” என்று பேச,

‘யார் கண்ணு பட்டுச்சோ…’வில் வானதிக்கு இருமல் வந்துவிட்டது.

“பேசண்ட் நல்ல தூக்கத்துல இருக்கார்.. யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க…” என்று மருத்துவர் சொல்லிவிட்டு போக,  அவன் அடுத்து கண் விழிக்கும் வரைக்கும் கூட யாரும் அங்கிருந்து அசையவில்லை.

கதிர்வேலனும், அருணும் தான், அங்கிருப்பவர்களுக்கு வேண்டியது வாங்கிக்கொண்டு வர, மேலும் ஒரு மணி நேரம் கடந்தது இளம்பரிதி கண் விழிக்க.

உடலில் செலுத்தப்பட்ட மருந்தின் உதவியால் அதிக வலி தெரியவில்லை என்றாலும், விபத்து நேர்ந்தது அவனுக்கு மனதில் ஒருவித திடுக்கிடலை கொடுக்கத்தான் செய்தது.

‘செய்த பாவத்தின் பலனோ??!!’ என்று அந்த நிலையில் கூட மனம் நினைக்க, அன்று அவன் மருத்துவமனை அழைத்துச் சென்ற பெண்ணின் முகம் இப்போதும் மனக்கண்ணில்..!!

‘மறந்துவிடு.. நீ அம்பு மட்டுமே.. எய்தது வேறொருவர்.. உன்னை நீயே நோகடிக்காதே.. எதற்கும் உன்னை நீயே காரணம் என்று ஒப்புக்கொள்ளாதே.. இது ஒரு விபத்து.. அவ்வளவே..!! வேறெதுவும் இல்லை…’ என்று அவனின் புத்தி எடுத்துச் சொன்னாலும் கூட,

அவனால் அந்த குற்றவுணர்வில் இருந்து வெளிவர முடியவில்லை.!

‘மறந்துடு இளா… மறந்துடு… நீ எதுக்கும் காரணமில்லை.. உன்னோட வாழ்க்கை.. உன்னோட குடும்பம் இதுமட்டும் தான் முக்கியம்.. எந்த பாவத்துக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை.. சம்பந்தப் பட்டவங்கக் கிட்ட இருந்தும் தூர விலகிடு.. அது போதும்…’ என்று மனம் தீர்க்கமாய் முடிவெடுத்த பின்னே தான் அவன் விழிகள் திறந்ததே..

கண்கள் திறந்து பார்த்தாலோ, வரிசையாய் அனைவரும் இருந்தனர். அவன் முக்கியம் என்று நினைத்த அவனின் குடும்பத்தினரும், விட்டு விலகிட வேண்டும் நினைத்த ஆட்களும் கூட,

பார்வை மெது மெதுவாய் அனைவரையும் தொட்டு வர, கதிர்வேலன் ராதா இவர்களை காணவும், ‘அவளும் வந்திருப்பாளோ??!!’ என்று கேள்வி எழுப்பிய இதயத்தை எதை கொண்டு கட்டுப் போட?!

கண்கள் தன்னைப்போல் வானதியைத் தேட, அவளும் அங்கேதான் இருந்தாள். அவனை மட்டுமே பார்த்து.. அவன் தன்னையும் பார்ப்பானா என பார்த்து.. அவன் விழிகள் அவளிடம் வந்து நிற்கவுமே, திடீரென ஓர் படபடப்பு வந்து ஒட்டிக்கொண்டு அவளை ஒருநிலையில் இருக்க விடாது செய்ய,

“ம்மா நான் வெளிய இருக்கேன்…” என்று சொல்லி, அறை விட்டு வெளியேவும் வந்துவிட்டாள்.

அதற்குமேல் அவனை அப்படி அங்கே கண்டிட முடியவில்லை. எப்போதும் மிடுக்குடன் இருக்கும் இளம்பரிதி தான் அவள் நெஞ்சத்தில் ஆழப் பதிந்துப் போனான்.

அவள் போவதையே இளா பார்க்க “என்னடா நீ..??!!” என்று மோகனா அங்கலாய்க்க,

“ஏன்டா பார்த்து வர கூடாதா??” என்று அருணும் நண்பனாய் கடிய,

“ம்ம்ச் எதோ ஒரு யோசனை…” என்றான் ஒருவித சலிப்பில்..

இவர்கள் உள்ளே பேசியது வெளியவும் வானதிக்கு கேட்டது. கதவு லேசாய் திறந்தே இருக்க, அவளுக்கு காதெல்லாம் உள்ளே தானே இருந்தது. அவன் பேசுவானா இவர்களிடம் என்று கவனித்திருக்க, அவன் ‘எதோ ஒரு யோசனை…’ என்று சொன்னதும், வானதிக்கு தூக்கி வாரிப்போட்டது.

ஒருவேளை இவனும் தன்னைப் போல் அதனையே நினைத்துக்கொண்டு இருக்கிறானோ??!!! என்று.

இவ்வெண்ணம் வரவுமே, அவளுக்கு குப்பென்று வேர்த்துவிட்டது.

பின்னே முதல் முத்தம்மல்லவா..?!!

யாருக்கேனும் மறந்திடத்தான் முடியுமா??!

இத்தனை நாள் அவளை இம்சித்த அந்த நினைப்பு, இப்போது அவனும் அதனைத் தான் எண்ணுகிறானோ என்று எண்ணுகையில் பேரிம்சையாய் போனது.

அன்று நடந்தவைகளும் அவளுக்கு மீண்டும் காட்சிகளாய் நினைவு வந்தது..!

அருண் – வானதி இவர்களின் நிச்சய புடவை எடுத்த தினம், புடவை எடுத்து பில் போட்டு முடிக்கும் நேரம், சரோஜாவிற்கு வீட்டில் இருந்து வேலையால் அழைத்து ‘ரேணுவின் பெற்றோர்..’ வந்திருப்பதாய் சொல்ல

“ஓ..!! அப்படியா… இதோ கொஞ்ச நேரத்துல வந்திடுறோம்…” என்ற சரோஜா, அடுத்து சம்பந்தியம்மாளுக்கும் அழைத்து பேசிவிட்டு,

“வானதி ரேணுவோட அப்பா அம்மா வந்திருக்காங்களாம்.. இதுக்கு முன்னாடின்னா நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிருப்பேன்.. இப்போ கல்யாணம் பேசி முடிச்சாச்சு.. முறைப்படி தான் வரணும்…” என்று சொல்லி தயங்க,

“பரவாயில்லத்தை… நீங்க கிளம்புங்க… எனக்கு இங்க கொஞ்சம் ஷாப்பிங் செய்யனும்.. முடிச்சிட்டு நான் போயிக்கிறேன்…” என்றவளின் எண்ணத்தில், எப்படியும் அருணைத் தான் விட்டுச் செல்வர், ஆக பிரச்சனை இல்லை என்றெண்ண,

“இளா பத்திரமா வீட்ல விட்டுடு டா..” என்ற சரோஜா, அருணையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

“டேய்…!! நீ கட்டிக்க போற பொண்ணுக்கு நீ டிரைவர் வேலை பாரு.. நான் ஏன் டா…” என்றான் இளம்பரிதி.

நண்பர்கள் இருவரும் மெதுவாகவே பேசினாலும், அது வானதியின் காதில் நன்கு விழுந்தும் வைக்க, அவளுக்குக் கூட ‘அதானே..!!’ என்று தோன்றியது.

திருமணம் பற்றிய கனவுகள் இல்லை, இருந்தும் கூட, எப்படியும் இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்த பின்னே, இப்படியான தருணங்கள் நேர்கையில் பேசிப் பழகுவது இயல்புதானே..

ஆனால் அருணோ “இல்லடா.. வீட்ல யாரும் இல்லை.. அண்ணன் அண்ணி எல்லாம் சிறுமலை.. அப்பாவும் மதுரை போயிருக்கார்.. சோ அம்மாவோட போகணும்…” என,

‘ஹ்ம்ம் இவனொரு மடையன்.. அருமையான சான்ஸ் எல்லாம் இப்படி மிஸ் பண்றான்…’ என்றெண்ணிய இளாவிற்கு, ‘அருமையான சான்ஸா?!!’ என்று அவனின் மனதே கேள்வி எழுப்பியது.

“சரி சரி பேசிட்டே நிக்கவேணாம்…” என்ற சரோஜா முன்னே நடக்க, அருணும் கிளம்பிட, இளம்பரிதியும், வானதியும் மட்டுமே மீண்டும்.

அவனோ வேண்டுமென்றே மொபைலில் நேரம் பார்க்க, அவளோ வேறெங்கோ பார்வை பதித்து “எனக்கு ஷாப்பிங் பண்ணனும்…” என்றாள்.

‘ஹா..!!’ என்று நிமிர்ந்து பார்க்க,

“ஹலோ…. நான் ஷாப்பிங் செய்யணும்…” என்றாள் அழுத்தம் திருத்தமாய்..

“செய்..!!”  என்றான் அவனும் அவளைப் போலவே தொனியில்.

அவனை உறுத்துப் பார்த்தவள், அப்படியே திரும்பி நடக்க, “நான் வெளிய கார்ல வெய்ட் பண்றேன்.. முடிச்சிட்டு வா…” என்ற இளம்பரிதியின் குரலில், நின்று திரும்பிப் பார்த்து மீண்டும் திரும்பி சென்றாள்.

‘இவ ஒருத்தி.. ஏன் பாக்குறா.. எதுக்கு பாக்குறான்னு ஒரு மண்ணும் விளங்காது…’ என்று முணுமுணுத்தபடி இளம்பரிதி வெளியே நடக்க,

‘டேய் நீயும் தான்டா பாக்குற…!!’ என்று அவனுள்ளிருந்து ஓர் குரல் சத்தமாய் தான் கேட்டது.

கார் வந்து அமர்ந்து, அரை மணி நேரம் செல்ல,  அவனுக்கு தனியாய் இப்படி அமர்ந்திருப்பது போர் அடிக்க, “ம்ம்ச் எல்லாம் என் நேரம்…” என்று சுற்றி முற்றி பார்க்க, வானதி வேக வேகமாய் நடந்து வருவது தெரிந்தது.

‘அதிசயம் அதுக்குள்ள முடிச்சிட்டா..’ என்றுதான் பார்த்திருந்தான்.

ஆனால் அவளின் கையில் எதுவுமே இல்லை.. அவளின் ஹேண்ட்பேக் தவிர..

‘அரைமணி நேரமா எதுவும் வாங்கலையா….’ என்று பார்வை மாற, இவனருகே வந்தவள் “சீ.. சீக்கிரம் கார் எடுங்க…” என்று படபடக்க, அவளின் முகமே எதுவோ சரியில்லை என்று காட்ட,

“என்னாச்சு??!!” என்றான் இளா வேகமாய்.

“இ.. இல்ல.. நீங்க சீக்கிரம் கார் எடுங்க ப்ளீஸ்…” என்றவள், முன்னிருக்கையில் வேகமாய் அமர்ந்து கார் கதவையும் சாத்தி, ஜன்னலையும் மூடிவிட, வேறு வழியில்லாது வந்து இளா காரினைக் கிளப்ப, வெயில் வேறு அதிகம் என்பதால், ஏசி போட்டுவிட்டான்.

வானதிக்கு காரில் ஜன்னல் சாத்தி, ஏசி போட்டால் சேரவே சேராது. சிறிது நிமிடத்திலேயே மூச்செல்லாம் அடைத்து ஒருமாதிரி ஆகிடுவாள். அது அவனுக்கு தெரியாதே.. அவளும் அப்போதைய இருந்த மன நிலையில் அதனை கவனிக்கும் நிலையில் இல்லை.. எப்படியும் இங்கிருந்து சீக்கிரம் சென்றுவிட்டாள் போதும் என்று இருக்க,

அவனோ நொடிக்கொரு முறை அவளைத்தான் பார்த்துக்கொண்டு வந்தான். முகத்தில் ஏதோ ஒரு பதற்றம். இதுநாள் வரைக்கும் அவளை அப்படி பார்த்தது இல்லை இளா.

என்னவோ மனது கேளாமல் “என்னாச்சு வானதி..?!” என்று கேட்டுவிட,

“அ.. அங்க.. அ.. அவனைப் பார்த்தேன்.. அ.. அர்விந்த்.. அவனைப் பார்த்தேன்…” என்று கை விரல் நீட்டி, சொன்னவளுக்கு அப்போதும் குரல் நடுங்க,

“ஓ..!!” என்று சொல்வதை தவிர இளாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை.

வானதியோ ஆறுதல் தேடும் சிறுமியாய் “அவனைப் பார்த்து பயமெல்லாம் இல்லை.. ஆனா.. ஆனா திடீர்னு பார்க்கவும் ஒருமாதிரி ஆகிடுச்சு.. என்னைப் பார்த்து என்கிட்டே பேச வேற வந்தான்.. அதான்.. டெ.. டென்சன் ஆகிடுச்சு..” என்றவள் முகத்தினைத் துடைக்க, வியர்க்கத் தொடங்கியிருந்தது.

‘என்ன இப்படி டென்சன் ஆகுறா..??!!’ என்று பார்த்தவன் ‘டேய்.. அடுத்து உன்னை நான் பார்த்தா நீ காலிடா…’ என்றுஅரவிந்தை மனதளவில் எதிரியாக்கிவிட்டான் இளம்பரிதி.

“வேறெதுவும் பிரச்சனை பண்ணானா??!!”

“இல்ல.. ஆ.. ஆனா இந்த கல்யாணம்.. அது தெரிஞ்சிருக்கு.. என்ன கல்யாணம் பண்ண போறியான்னு கேட்டானா… அது…” என்றவளுக்கு அதற்குமேல் பேசவே முடியவில்லை.

சுவாசிக்கவும் முடியவில்லை.. மொத்தத்தில் அவளால் இயல்பாய் இருக்க முடியாது போக, அவனுக்கு ஏசி போட்டதும், ஜன்னல் சாத்தி இருப்பதாலும் தான் இப்படி என்று புரியாது, டென்சன் மட்டுமே காரணம் என்றெண்ணி “சரி.. சரி.. ஒண்ணுமில்ல.. இந்த தண்ணி குடி…” என்று சொல்லி, தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொடுக்க,

“வேண்டாம்…” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.

அவள் முகம் பார்த்து இளா பயந்தே போனான். என்னவோ ஆகிவிட்டது இவளுக்கு என்று. நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருக்க, இங்கே மருத்துவமனை எல்லாம் எங்கே சென்று தேடுவான்.

கண்களை துரிதமாய் திருப்பியவன், நிழல் வரும் இடம் பார்த்து வேகமாய் காரினை ஓரமாய் நிறுத்தி, “என்னாச்சு.. என்னாச்சு வானதி…” என்று அவள் கரம் பிடித்துக்கொள்ள, எல்லாமே அவனை மீறியே நடந்தது.

“எ… மூச்சு…” என்றவள், முடியலை என்று கைகளை மட்டும் அசைக்க,

“அச்சோ.. ஒண்ணுமில்லை.. யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டாங்க…” என்றவன், அவளுக்கு தைரியம் ஊட்டுவதாய் எண்ணி, கைகளை தட்டிக்கொடுக்க, அவளால் சுத்தமாய் சுவாசிக்க முடியவில்லை.

வாய் வழியே வேக வேகமாய் சுவாசம் செய்ய, கண்கள் வேறு அவளுக்கு திறக்க முடியாது போக, அவனுக்கு இந்த சினிமாவில் காட்சிகள் தான் அந்த நேரத்தில் நினைவு வந்தது.

‘இவளுக்கு ஏதாவதுன்னா…!!!’ என்றெண்ணியவன், ‘ஆபத்துக்கு பாவமில்லை…’ என்று நினைத்து,

“வானதி என்னை தப்பா நினைச்சுக்காத ப்ளீஸ்…” என்று சொல்லி, அவள் இதழோடு இதழ் பொருத்த அது மட்டுமே அவனின் கவனத்தில் இருந்தது.

அத்துனை மென்மையாய் ஒரு பெண்ணில் இதழ் இருக்குமா என்ன??!!

இளாவின் எண்ணத்தில் நேரம் காலம் பார்க்காது இப்படியொரு கேள்வி பிறக்க, தன் சந்தேகம் தீர்க்கவென மீண்டும் மீண்டும் அங்கே இதழ் தீண்ட, வானதிக்கோ, மனதிலும் உடலிலும் இருந்த படபடப்பு எல்லாம் தீர்வது போலிருக்க, தனக்கு கிடைத்த ஆதரவு இதுவென்று எண்ணி, இன்னும் அவனோடு ஒன்ற, அது இருவரையுமே மீறிய நிலை தான்.

முத்தமிட்டவன் மனதில் என்ன தோன்றியதோ, ஒரு கை அவள் கன்னம் பற்றியிருக்க, மறு கை லேசாய் கார் ஜன்னலை சிறிதே இறக்கி விட, வேகமாய் வெளிக்காற்று உள்ளே வர, இவனின் இதழ் ஸ்பரிசமும் சேர்ந்து மெல்ல மெல்ல வானதிக்கு சுவாசம் சீராக ஆரம்பித்தது.

விளைவு.. இன்னமும் முத்தத்தின் ஆழம் நீளம் தான் சென்றது..

அதை மீறிட எண்ணமில்லை.. அதைவிட்டு விலகிடவும் உசிதமில்லை..!!

அவளைக் காப்பாற்ற என்று அவனும், கிடைத்த ஆறுதல் என்று அவளும் ஆரம்பித்த முத்தம், இளம்பரிதியின் மொபைல் சத்தத்தில் தான் நிறுத்தம் கண்டது.

அடுத்த நொடி..!! இருவரும் ஒருவரை ஒருவர் திகைத்துப் பார்த்துக்கொள்ள, வானதி அவன் முகம் பார்க்க முடியாது பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பி, வேகமாய் கதவினை நன்கு இறக்கிவிட்டாள். அப்போதும் அவனுக்கு விளங்கவில்லை, அவளுக்கு ஜன்னல் சாத்தியது தான் பிரச்சனை என்று.

பயத்தில் இறக்குகிறாள் என்று நினைத்தவன், கார் ஸ்டியரிங்கை ஓங்கி ஒரு குத்து குத்தி கார் எடுக்க, கார் மின்னல் வேகத்தில் பறந்தது.

இதெல்லாம் வானதிக்கு நினைவில் வந்துத் தொலைக்க, அப்படியே இருக்கையில் சாய்ந்து கண்கள் மூடி அமர்ந்து போனாள்.

Advertisement