Advertisement

                                                என்னிதயம் கேட்ட ஆறுதல் – 8

இளாவிற்கு அன்றைய தினம் உறக்கம் என்பது கிஞ்சித்தும் வரவில்லை. மீண்டும் மீண்டும் வெற்றிவேலனோடு பேசியது தான் நினைவில் வந்து அவனை இம்சித்தது.

“நான் செய்றேன்…” என்று அவனின் திருமணத்தையும் அவர் முன் நின்று நடந்த முயல, அது அவனுக்கு கசக்கத்தான் செய்தது.

இருக்காதா பின்னே..!!

எத்துனை பெரிய பாவம் அவனை செய்ய வைத்திருக்கிறார்..

என்ன புரண்டு படுத்தாலும், அவனால் முடியவில்லை..!!

எழுந்து மொட்டை மாடி வந்து நின்றுவிட்டான். மனதில் ஏதேதோ எண்ணங்கள்..!! அலை அலையாய் வந்தபடி இருக்க, அதில் எதுவுமே  அவனுக்கு மனதில் அமைதி கொடுப்பதாய் காணோம்..!!

போதாத குறைக்கு, அருண் வானதி திருமண பேச்சுக்கள் வேறு, அவனை எதோ தொல்லை செய்தது.

இதெல்லாம் தாண்டி அவனுக்கு வேறு பெண் பார்க்கவா என்று வெற்றிவேலன் கேட்டது?!!

அவனின் திருமணம் என்பது ஒரு பாவத்தின் பிராயச்சித்தமா??!!

‘இதற்கா நீ இத்தனை தூரம் ஓடுகிறாய்??!!’ இளம்பரிதியின் மனம் அவனையே கேள்வி கேட்டது.

‘வேணாம் இளா… வேணாம்… இது எதுவும் உனக்கு வேணாம்.. உங்கப்பா கடை போதும்.. அதுல வர வருமானம் போதும்.. இப்போ இருக்கிற எளிமையான வாழ்க்கை போதும்.. இதுக்குள்ள வாழ்றபடி வர்ற ஒருத்தி போதும்.. உனக்கே உனக்குன்னு.. ஒருத்தி… போதும்…’ என்று மனம் உருப்போட, இளா வெகுநேரம் அங்கேயே தான் இருந்தான்.

மறுநாள் காலை பொழுது விடிந்து பல நேரம் கழிந்த பின்னே தான் அவன் எழுந்து வெளிவர,  “என்னடா இவ்வளோ தூக்கம்..??!!” என்றார் மோகனா.

“ம்ம்…” என்றவன், செய்தித்தாள் எடுத்து அமர,

“போ.. போய் குளி…” என்று அம்மா சொல்ல,

“ம்ம்ச்.. என்னம்மா…” என்றான் சலிப்பாய்.

“குளின்னு தானே சொன்னேன்…”

“எப்போ பாரு ஏதாவது சொல்லிட்டேவும்…” என்றபடி அவனும் எழுந்து சென்று குளித்து முடித்து வர,

“இங்க வா இளா…” என்று மோகனா சுவாமி படம் முன் நின்று அழைக்க, “ம்மா…!!” என்றான் கடுப்பாகவே.

என்னவோ யாரோடும் பேசாத ஓர் தனிமை அவனுக்கு வேண்டும் போலிருக்க, மோகனா அதற்கு வழிவிடவில்லை.

சீக்கிரம் உண்டுவிட்டு கடைக்கு சென்றுவிட வேண்டும் என்றெண்ணிக்கொண்டே, “என்னம்மா சொல்லு..” என்று முன் போய் நிற்க, அவன் வந்து நின்றதுமே மோகனா இறைவனை வேண்டி ஒரு வெள்ளை நிற கவர் எடுத்து அவனின் கையில் கொடுக்க,

“இதென்ன..??!!” என்றான்.

“பாருடா…”

அவனும் பிரித்துப் பார்க்க, உள்ளே ஒரு பெண்ணின் புகைப்படம் இருக்க, பார்த்தவன் அதை அப்படியே மீண்டும் கவரில் வைத்து அம்மாவின் கையில் திணித்துவிட்டான்.

“என்ன இளா??!”

“இப்போ எதுக்கு இதெல்லாம்..??!”

“இப்போ பண்ணாம..?”

“எனக்கு வேணாம்…”  

“ஏன் இளா.. இப்போ இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்??” என்று மோகனா கேட்க,

“எந்த குறையும் இல்ல.. ஆனா எனக்கு பிடிக்கல…” என்றான் இளம்பரிதியும்.

“பிடிக்கலையா???” என்று மோகனா மகனின் முகம் பார்க்க,

“ம்மா… எனக்கு இப்படி போட்டோ பார்த்து எல்லாம் சொல்ல சொல்லாத.. உனக்கு தோணும் தானே.. இந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா நல்லாருக்கும்னு.. அப்படிப்பட்ட பொண்ண பார்த்து பேசி முடி.. நான் எனக்கு பிடிக்க வச்சிக்கிறேன்…” என்று இளம்பரிதி சொன்ன தினுசில்,

“ஞே…” என்று பார்த்து வைத்தார் மோகனா.

“நிஜமா தான் சொல்றேன் ம்மா…” என்று அவன் சத்தியம் செய்யாத குறையாய் சொல்ல,

“எனக்கென்னவோ இந்த பொண்ணு…” என்று மோகனா இழுக்க,

“அதான் பிடிக்கல சொல்லிட்டேன்ல வேற பாரு…” என்று அவரை நன்கு குழப்பிவிட்டான்.

‘என்னை பாரு சொல்றான்.. பார்த்து சொன்னாலும் பிடிக்கல சொல்றான்.. என்னதான் சொல்ல வர்றான் இவன்..’ என்று மோகனா நினைக்க, அதன் பின்னே இளம்பருதி இந்த பேச்சினை எடுக்க விடவில்லை அம்மாவை.

அது இதென்று பேச்சை மாற்றி,  ஒருவழியாய் உண்டு முடித்துவிட்டு கடைக்கும் கிளம்பிவிட்டான்.

அங்கே பழனியில் பிருந்தாவும் கதிரும், கதிர் அப்பா வழி சொந்தங்களில் நெருங்கிய நபர்களை அழைக்கச் சென்றிருக்க, ராதா, அங்கே பழனியில் உள்ள சிலரை அழைக்கச் சென்றிருக்க, வானதி எப்போதும் போல் ஜிங்கிள்ஸில் இருக்க, சரோஜா அழைத்து,

“வானதி… உனக்கு புடிச்ச சேலையே எடுக்கலாம்.. கார் அனுப்புறேன்.. இங்க வந்திடுறியா??” என்று வானதிக்கு அழைத்து கேட்க, அவளால் முடியாது என்று சொல்லிட முடியவில்லை.

இருந்தும் தயக்கமாய் இருக்க “இல்லத்தை.. அது..” என்று அவள் தயங்க,

“அட.. நிச்சய புடவை உனக்கு புடிச்சதா இருந்தா தானே நல்லது.. நான் கார் அனுப்புறேன்..” என்று சரோஜா முடிவாய் சொல்ல,

இவளும் “சரி…” என்றுவிட்டாள்.

 ‘நிச்சய புடவை….’

முன்னேயும் கூட இப்படித்தான் இவளுக்கு பிடித்ததாய்  எடுக்கவேண்டும் என்று என்னதான் விட்டு விலகி ஒன்றுமில்லை என்று வெட்டி வந்தாலும் கூட, சில நினைவுகள் தன்னைப்போல் மனதில் வரத்தான் செய்கின்றன. வானதிக்கு முழு மனதாய் அவளுக்கு அங்கே செல்லவும் முடியவில்லை. பிருந்தா இருந்திருந்தால் கூட போயிருப்பாள். இப்போதோ போகாமல் இருந்தால் கூட தேவலாம் என்ற எண்ணத்திலேயே, அவளின் ஸ்கூட்டியில் வீடு வந்து தயாராகினாள்..

“போகனுமா??!!” என்ற கேள்வி அவளுள் வெகுவாய் வியாபிக்க, கைகள் தன்னைப்போல் அம்மாவிற்கும் அண்ணனுக்கும் அழைத்து பேச, அவர்கள் சொன்னதற்கு எல்லாம்

“ம்ம்… ம்ம்..” என்பது மட்டுமே வானதியின் பதில்.

அருணோடான இத்திருமணம்… எப்படி இருக்கும்??!!

நிச்சயம் அவன் தன்னை பிடித்து சரி எனவில்லை.. அவளும் அப்படி சரியெனவில்லை. ஆக ஏமாற்றமோ இல்லை இன்ன பிற உணர்வோ எதுவுமில்லை..

ஒருவேளை திருமணத்திற்கு பின்னே பிடிக்குமோ என்னவோ??!!  எதுவோ ஒன்று..!! சரி பார்ப்போம் என்று ஒரு திடம் வர, உடை மாற்றி கிளம்பியவள், ஒருமுறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துக்கொள்ள, மனதில் ஒரு திருப்தியும் கூட தோன்றியது.

சரோஜா மீண்டும் அழைத்து “கொஞ்ச நேரத்துல வண்டி வந்திடும் வானதி…” என,

“சரி அத்தை..” என்றவள் காத்திருக்க, மேலும் ஒரு இருபது நிமிடம் கடந்து போக, கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு, வாசல் வந்து பார்க்க, உள்ளே இளா இருப்பது நன்கு தெரிந்தது.

அவனைப் பார்த்த பின்னும் கூட, அவள் வாசல் தாண்டுவதாய் இல்லை. பொறுத்துப் பார்த்தவன், விடாது ஹார்ன் அடிக்க, வேகமாய் கதவு சாத்தி வானதி காரினுள் ஏறினாள்.   

காரில் அப்படியொரு நிசப்தம்.. ஓட்டுபவனும் உர்ரென்று வர, உட்கார்ந்து வருபவளும் உம்மென்று வர, பேரமைதி  தான் அங்கே. இருந்தும் இருவரின் மனதும் அமைதியாகவில்லை.

‘அனுப்புறதுக்கு வேற யாருமே இல்லையா??’ என்று அவளும்,

‘ச்சே எப்போ பாரு இவளுக்கு டிரைவர் வேல பாக்குறதே எனக்கு வேலையா போச்சு…’ என்று அவனும் நினைக்க, முறைக்கவேனும் இருவரின் பார்வை ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு தான் இருந்தது.

வானதி பின் சீட்டினில் இருக்க, இளா அவ்வப்போது கண்ணாடி வழியே பின்னே பார்க்க,  அவன் பார்க்கும் நேரம் அவளும் பார்க்க, சட்டென்று சுதாரிக்கும் முன்னம் சாலையில் இவர்களின் காரை ஒரு பைக் கடந்து போக, வேகமாய் இளம்பரிதி சடன் ப்ரேக் போட்டு நிறுத்திவிட்டான்.

‘நல்ல வேளை…’ இருவரும் ஒரே நேரத்தில் இதனை மெதுவாய் சொல்ல, மீண்டும் ஓர் பார்வை ஸ்பரிசம்..

முதலில் சுதாரித்தது வானதி தான்…!! ஜன்னல் பக்கமாய் எட்டிப் பார்க்க, நல்லவேளை பைக்கில் வந்தவன், கடந்து சென்றுவிட்டான்.

“தேங்க் காட்…” என்றபடி இளாவை பார்க்க அவனின் பார்வை இப்போது வரைக்கும் கூட அவளிடம் தான் இருந்தது.

“ம்ம்ச் என்ன இவன்…” என்றெண்ணி, “பார்த்து டிரைவ் பண்ண முடியாதா??” என்று கடிய, அவனிடம் பதில் இல்லை.

தலையை மட்டும் லேசாய் குலுக்கிவிட்டு, பின் மீண்டும் கார் எடுக்க “ஹலோ… கேட்கிறது காதுல விழல??!!” என்றாள் விடாது.

“ம்ம்ச் இப்போ என்ன??”

“இப்போ என்ன வா?? அந்த ஆளுக்கு ஏதாவது ஆகிருந்தா..??” என்று வம்படியாய் ஒரு சண்டைக்கு தயாரானாள் வானதி.

“அதான் எதுவும் ஆகலையே…”

“ஒருவேளை இங்க நமக்கு எதுவும் ஆகிருந்தா??!!”

“ஆகலை.. ஆகிருந்தா…??!!”

“இந்த பேச்சு வேண்டாம்…” என்றவன் சாலையில் கவனம் செலுத்த “எவ்வளோ திமிர் இவனுக்கு…” என்று அப்போதும் எண்ணியவள், அடுத்து பேசவேயில்லை.

நிச்சய புடவை எடுத்து முடிக்கும் வரைக்கும் வானதிக்கு போதும் போதும் என்றாகிப் போனது. சரோஜா பார்ப்பது எல்லாம் அவர் கட்டும் தினுசில் இருக்க, ரேணு இருந்திருந்தாலாவது ஏதேனும் சொல்வாள், அவளும் இல்லை பிருந்தாவும் இல்லை யாருமில்லை.

சரோஜா, வானதி, அருண் இவர்களுடன் வேண்டா வெறுப்பாய் இளம்பருதி.

அதுவும் அருணின் கட்டாயத்திற்காக..!

நிச்சயத்திற்கே சரோஜா அனைவர்க்கும் எடுக்க, நேரம் கடக்க, ஆண்கள் இருவருக்கும் கேட்கவா வேண்டும்??!!

அதிலும் இளாவிற்கு..??!!

“நான் கடையில நிம்மதியா இருந்தேன்..” என்று அருணை முறைக்க,

“இங்கயும் நிம்மதியா உக்காந்து வேடிக்கை பாரு..” என்று இளித்து வைத்தான் அருண்.

அப்போதும் அவன் முகத்தை கேள்வியாய் இளா காண, “ம்ம்ச் டேய் பரிதி.. கேள்வி எதுவும் கேட்டு என்னை கன்பியூஸ் பண்ணிடாத.. நான் எதையும் யோசிக்கிற ஐடியால எல்லாம் இல்லை..” என, இதற்கு மேல் இளம்பரிதி என்ன சொல்லிட முடியும்??

பார்வை தன்னைப்போல் வானதியிடம் செல்ல, அவளோ சரோஜா கையில் எடுக்கும் புடவைகள் எதுவும் தனக்கு பிடிக்கவில்லை என்ற பாவனையை வெளியே காட்டிடாதபடி இருப்பது போல் இருந்தது. பேச்சு மட்டுமே சிரித்தபடி.. ஆனால் கண்களில் அந்த பாவனை இல்லை.

‘பாவம்…’ என்றுதான் தோன்றியது.

“இது எதுவும் பிடிக்கலைன்னா, நீயே பாரேன்.. உனக்கு பிடிச்ச மாதிரி…” என்று சரோஜா சொல்லவும்,

‘அப்பாடி…!!’ என்று ஒரு மூச்சு விட்டு அவள் கண்கள் சேலைகள் பக்கம் செல்ல, அவள் எடுக்கச் சொன்ன புடவையில் ஒன்று கூட சரோஜாவிற்கு திருப்தியாய் இல்லை.

“இதுல ஜரிகையே தெரியலையே…”

“பொடி பூவா இருக்கு…”

“இந்த கலர் உனக்கு எடுப்பா இருக்காது..”

“இன்னும் வேற பாரேன்..”

இப்படியே சொல்லிக்கொண்டு இருக்க “அத்தை.. எனக்குத் தெரியலை.. நீங்களே பாருங்க…” என்றுவிட்டாள்.

அவளுக்குத் தெரிந்து போனது நாம் எது எடுத்தாலும் அது அவருக்கு பிடிக்கப் போவது இல்லை என்று.

“ஹ்ம்ம்.. எனக்கும் ஒன்னும் மனசுக்கு புரியலை…” என்றவர் “அருண்…” என்று அவனை அழைக்க,

இளாவிற்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.

“போ போ.. உன்னத்தான்…” என்று நக்கலாய் சொல்ல, “நீயும் வா…” என்று இழுத்துக்கொண்டு போனான்.

வானதி இருவரையும் பார்த்து அமைதியாகிட “எங்களுக்கு எதுவும் செலெக்ட் பண்ண வரலை.. நீ பாரு எது வானதிக்கு நல்லாருக்கும்னு…” என்று சரோஜா சொல்ல,

“எனக்கா??!! எனக்கென்ன தெரியும்…” என்றான் அருண்.

“அட சும்மா பார்த்து சொல்லுடா…”

“ம்மா.. உங்க ரெண்டு பேருக்கும் காமனா எது புடிக்குதோ அது பாருங்க…”

“அதுதான் எதுவும் பிடிக்கலல… நீ பாரு..” என்றவர் பிடிவாதமாகவே இருக்க, அருண் கண்கள் சேலைகள் மீதிருக்க, இளாவின் விழிகள் கூட சேலைகளைப் பார்க்க, ஒரு வாடாமல்லி கலர் பட்டுச் சேலை வானதிக்கு பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றியது.

வானதியின் பார்வை கூட அவ்வப்போது அந்த சேலையைத் தொட்டு மீள, அருணோ வேறொரு இளம் சிவப்பு நிற புடவையை எடுக்க, சரோஜா “பாரேன் இது இவ்வளோ நேரமா என் கண்ல படவேயில்ல…” என்று சந்தோசமாகவே சொல்ல, வானதி ஒப்புக்கு சிரித்து வைத்தாள்.

இவர்கள் என்னவோ செய்யட்டும் என்று இளம்பரிதி வெறுமெனே அந்த வாடாமல்லி நிற புடவையை எடுத்துப் பார்க்க, வானதியும் அதையே பார்க்க, விற்பனை பிரிவில் இருக்கும் பெண்மணி வந்து “சேலை மேல வச்சு பாக்குறீங்களா?” என்று அங்கிருந்த கண்ணாடி ஒன்றினை காட்ட, வானதிக்கு அதில் எல்லாம் இஷ்டம் இல்லை.

“இல்ல வேண்டாம்…” என்று அவளே பதில் சொல்லிவிட,

“அட வச்சு பார்க்கலாம்…” என்று சரோஜா சொல்ல, அந்த பெண்மணி, “மேடம் இந்த சேலைவிட இந்த கலர் உங்களுக்கு சூப்பரா இருக்கும்….” என்று இளாவின் கையில் இருக்கும் புடவையை சொல்ல, அனைவரின் கவனமும் அதில் பதிய,

இளம்பரிதி இப்போது என்ன செய்வது என்பதுபோல் பார்த்து நின்றான்.

இதுதான் சாக்கென்று எண்ணி “இந்த கலர் கூட நல்லாருக்கு…” என்று வானதியும் சொல்லிட,

“அது பிடிச்சா அதையே பாரேன்…” என்று சரோஜா சொல்ல, அருண் என்ன நினைப்பானோ என்று இளாவும், வானதியும் அவன் முகம் நோக்கினர்.

அவனுக்கு பெரிதாய் எதுவும் இல்லை. அனைவர்க்கும் பிடித்திருந்தால் சரி என்பதுபோல் இருந்தான்.

ஒருவழியாய் அந்த வாடாமல்லி நிற புடவை வானதிக்கு மேலே வைத்துப் பார்க்க, அப்படியே பாந்தமாய் பொருந்திப் போனது.

“மேல வச்சு பாக்குறப்போ நல்லாருக்கு…” என்று சரோஜாவும் சொல்லிட, ஏனோ வானதிக்கு இளாவின் பக்கம் கண்கள் செல்வதை தவிர்க்கவே முடியவில்லை.

‘இவனுக்கு புடிச்சதா இந்த சேலை.. இல்ல சும்மா எடுத்துப் பார்த்தானா?!! இல்ல எனக்கு பிடிச்சதுன்னு அவனுக்குத் தெரிஞ்சதா??!!’ என்று பல பல கேள்விகள் அவளுள்..

‘நோ வானதி..!! டோன்ட் திங் டூ மச்… இது ஜஸ்ட் ஒரு கோ இன்சிடன்ட் அவ்வளோதான்… இதுக்கெல்லாம் நீ ரொம்ப அவனை நினைக்கணும்னு இல்லை…’ என்று தனக்கு தானே உள்ளதை திருப்பிக்கொண்டாள்.

ஆனால் மனம் ஒரு குரங்கல்லவா??!!

‘நினையாதே மனமே…’ என்றாலும் அவனையே நினைக்கத் தொடங்கிய மனதினை என்ன செய்திட முடியும்??!!        

Advertisement