Advertisement

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 15

இளாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். சரோஜாவும் ரேணுவும் வீட்டிற்கு வந்தது. வானதிக்கு கொஞ்சம் சங்கடமும் கூட. தயக்கமும் கூட.

“வா… வாங்கத்தை… வாங்கக்கா…” என்றவளுக்கு அதை தாண்டி பேச்சு வரவில்லை.

பிருந்தா முன்னிலையில் இளம்பரிதியோடு பேசவே அவளுக்கு மனதில் ஓர் ஓரத்தில் உறுத்திக்கொண்டே இருந்ததுதான். என்ன இருந்தாலும் அருண் அவளின் தம்பி அல்லவா.. தம்பியை மணக்க இருந்தவள், திடீரென இன்னொருவனை மணந்து அவனோடு நன்கு பேசுகிறாளே என்று நினைத்துவிட்டால்??!

அப்படியிருக்கையில் இப்போது வீட்டிற்கே இவர்கள் வந்திருக்க, லேசாய் வியர்த்து கூட விட்டது வானதிக்கு.

‘ஓ..!! காட்.. இப்படியான சிச்சுவேசன்லாம் ஏன் எனக்கு கொடுக்குறீங்க…’ என்று நினைத்தவள், இளம்பரிதியை பார்க்க, அவனோ பின்னே கைகளை மடக்கி, சுவரில் சாய்ந்து நிற்க, மோகனாவும் தெய்வாவும் தான் வந்தவர்களை கவனிக்க,

“என்ன இளா அமைதியா இருக்க?? முறைப்படி நாங்கதானே வந்து ஆசிர்வாதம் செய்யணும்.. அவருக்கு அலையவே சரியா இருக்கு.. அதான் நாங்க வந்தோம்…” என்று சரோஜா சொல்ல,

“ப்ரீயா இரு வானதி…” என்று ரேணு சொல்ல, மோகனா மகன் மருமகள் முகத்தினை பார்த்தார்.

இருவரின் நிலையும் புரிந்தது. இதெல்லாம் கடந்து தானே வரவேண்டும். அவருக்கும் சற்றே திணறல்தான். வீட்டின் பெரிய மனுஷியாய் நின்று “வானதி… போயி டீ போடேன்…” என..

‘அப்பாடி…’ என்று வேகமாய் சென்றுவிட்டாள் சமையல் அறைக்குள்.

திருமணம் முடிந்து மறுநாள் முதன் முதலில் அங்கே பால் காய்ச்ச சொன்னார் மோகனா. இப்போது டீ போட சொல்ல, உள்ளே வந்துவிட்டாளே ஒழிய எது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

வானதிக்கு, வாத்து… கோழி.. நாய்… கிளி என்று பராமறிக்கத் தெரியுமே தவிர சமையல் எல்லாம் அத்துனை பரிச்சயம் இல்லை. அவளறிந்தது எல்லாம், சுடு நீரில் கிரீன் டீ போடுவதே. பிறந்த வீட்டில் வேண்டியது கேட்க வேண்டியது எல்லாம் இல்லை. எல்லாமே தானே நடந்துவிடும்.

உள்ளே வந்து, பாலை எடுத்து காய்ச்சவும் வைத்துவிட்டவள், சுற்றி சுற்றி பார்க்க, நேரம் தான் சென்றது. நொடிகள் நிமிடங்களாக, நிமிடங்களும் வளர, பால் கொதித்து விட்டது.. டீ தூள் தான் கண்டுபிடித்த பாடில்லை.

இடையில் டீயில் போடவென ஏலக்காய் இஞ்சி எல்லாம் கூட எடுத்துவிட்டாள். பிருந்தாவின் உபயம் இது ‘டீல இஞ்சி ஏலக்காய் போட்டா நல்லாருக்கும்…’ என்பாள் அடிக்கடி..

மோகனாவோ ‘இவ்வளோ நேரம் என்ன பண்ணுறா…’ என்றெண்ணி, மகனை ‘போய் பாரு…’ என்று ஜாடை காட்ட, அவனுக்கும் அப்பாடி என்ற உணர்வுதான்.  இளம்பரிதி சமையலறை சென்று பார்க்க, வானதி முகத்தினை தீவிரமாய் வைத்து வேக வேகமாய் அனைத்து டப்பாக்களையும் திறந்து பார்க்க,

‘என்ன இப்படி தேடிட்டு இருக்கா…’ என்று யோசனையோடு,

“டீ ஆச்சா…” என்றான்.

“அ.. ஆச்சு.. ஆச்சு…” என்று அவளும் பதில் சொல்லிக்கொண்டே அவள் வேலையை தொடர,

 ‘வேறேதோ தேடுறா போல..’ என்றெண்ணி அடுப்பின் அருகே செல்ல, அங்கே பால் வெள்ளையாகவே இருந்தது.

“என்ன இது பால் வெள்ளையா இருக்கு??” என்ற கேள்விக்கு பட்டென்று திரும்பியவள்,

“பால் வெள்ளையா தானே இருக்கும்…” என,

“ஆனா டீ வெள்ளையா இருக்காதே??” என்றான் பால் பாத்திரம் காட்டி.

“ம்ம்ச்.. டீ தூள் போட்டா கலராகிடும்…” என்று பாவமாய் வானதி முகம் வைத்துச் சொல்ல, இளம்பரிதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

எங்கே சத்தமாய் சிரித்துவிட்டால் வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெண்ணி சிரிப்பை விழுங்கி வைத்தான்.

“நீ போ நான் போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்றவன், அவளுக்கு அருகேயே இருந்த டீ தூள் டப்பாவினை எடுக்க,

“இல்லல்ல அத்தை என்னைத்தான் போட சொன்னாங்க…” என்று சொல்லி வேகமாய் டப்பாவினை வாங்கிக்கொண்டு, பாலில் அவள் எடுத்து வைத்த எல்லாம் போட்டு, ஸ்பூன் வைத்து வேற கலக்க,

“ஒரு டீ போட இவ்வளோவா..??!!!” என்றான் இளம்பரிதி.

அவனறிந்தது எல்லாம் பாலில் டீ தூள், சீனி போட்டு, கொதிக்கவும் வடிக்கட்டி குடிப்பது அவ்வளவே.

“இதெல்லாம் போட்டாதான் டீ நல்லாருக்கும்…” என்றவள் கலக்கிக்கொண்டு இருக்க,

“எங்கம்மா ஈசியா போடுவாங்க.. இதுல டீ வாசமே இன்னும் வரல…” என்றான் பக்கம் நின்று..

ஒருவேளை இளம்பரிதி கணவன் மோடுக்கு பட்டென்று குதித்துவிட்டானோ என்னவோ??!! அம்மாவின் சமையலையும் மனைவியின் சமையலையும் ஒப்பிட்டுப் பார்க்க.

“ம்ம்ச்… எனக்கு அதெல்லாம் தெரியாது.. டீக்கு இதெல்லாம் தான் போடணும்…” என்றவள், அடுத்து வடிகட்டி எங்கே என்று பார்வையை ஓட்ட,

“நீ தள்ளி நில்லு, நான் ஊத்தி தர்றேன்.. கொண்டு போய் குடு…”  என்றான் கிண்டலாகவே.

அவன் கிண்டல் புரிந்தாலும், எதுவும் சொல்லவில்லை வானதி. மனதிற்குள் லேசாய் ஓர் சுணக்கம். ‘ச்சே ஒரு டீ கூட ஈசியா போட வரலை..’ என்று.

இருவரும் தாங்களாவே இறுக்கமாய் இருக்க நினைத்தாலும், அதற்கு சூழல் ஒத்துழைப்பது இல்லை. அவர்களின் இறுக்கங்களை தளர்த்தி, தகர்க்கவே எல்லாம் நடந்தேறிக்கொண்டு இருந்தது.

சிறு சிறு ஆறுதல்கள் அவர்கள் கேட்காமலேயே நிகழவும் செய்தது..!!  

இளம்பரிதி டம்ப்ளரில் விட்டு ஒரு ஆற்று ஆற்றி குடுக்க, அதனை தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு செல்ல, பின்னேயே இளா வேறொரு தட்டில் சிறிது பலகாரம் வைத்து எடுத்துக்கொண்டு போனான்.

தெய்வாவிற்கு சிரிப்பு ஒரு டீ போட இத்தனை நேரமா என்று?!!

“உங்க ரெண்டு பேரையும் சமைக்க விட்டா அவ்வளோதான்…” என்று அண்ணனின் காதை கடித்தாள்.

“சும்மாரு…” என்று அவளை கடிந்தவன், சரோஜாவை நேருக்கு நேரே பார்க்க, அவரோ வானதியிடம் “உன்னோட ஜிங்கிள்ஸ் எப்படி வானதி.. அங்கேயே தானா இல்லை வேற எதுவும் ஐடியா இருக்கா??” என்றார் பேச்சினை வளர்க்கும் பொருட்டு.

அவளுக்கும் கடந்த இரு தினங்களாய் இதே யோசனை தான். என்ன செய்வது என்று.. முன்னே இங்கேயே மாற்றிடலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அதை செயல்படுத்த வேண்டுமெனில் இங்கிருப்பவர்களோடு கலந்தும் பேசிட வேண்டுமே..

அது பேச சற்றே தயக்கமாய் இருக்க, அங்கே வேலையில் இருப்பவர்களை வைத்தே பராமரித்துக்கொண்டு இருந்தாள். 

“என்ன வானதி அமைதியா இருக்க?” என்று ரேணு எடுத்துப் பேச,

“இல்லக்கா யோசிச்சேன்..” என்றாள் யோசனையோடே..

“இதுல யோசிக்க என்னருக்கு..?? நீயும் இவனும் கலந்து பேசிக்க வேண்டியது தானே..” என்று மோகனா சொல்ல,

“ம்ம் சரிங்கத்தை…” என்று முடித்துக்கொண்டாள்.

இளா கவனித்துக்கொண்டு தான் இருந்தான். எதுவோ ஓர் தயக்கம் அவளிடம் இருக்கிறது. சாதாரண பேச்சுக்களுக்குக் கூட. அவளையும் மீறி பேசும் நேரங்களில் தான் அவளால் இயல்பாய் பேசிட முடிகிறது என்று புரிந்தது. 

‘டிரைவர் வேலை பார்த்தது போயி இப்போ இவளை பேச வைக்கிற வேலையா.. என்னடா இதெல்லாம் இளா…’ என்று சலித்துக்கொண்டான்.

அந்த சலிப்பிலும் ஓர் இனிப்பு இருக்கத்தான் செய்தது.

பேச்சுக்கள் இப்படியே போக, பெரும்பாலும் வானதி அமைதியாகவே தான் இருந்தாள். சரோஜாதான் பேசிக்கொண்டே இருந்தார். இளாவிடம் இருந்து எதுவும் வார்த்தை வருகிறதா என்று பார்த்தால், அவனோ தனக்கெதுவுமே தெரியாது என்பது போல் இருந்தான்.

“அப்புறம் இளா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் நீ…” என,

“சொல்லுங்கம்மா…” என்றான் தன்மையாகவே..

“அபிராமி அம்மன் கோவில்ல அருண் பேருக்கு பூஜை பண்ணி, அன்னதானம் செய்யணும்.. நீதான் முன்ன நின்னு எல்லாம் பார்த்துக்கணும்..” என்று சொல்ல,

“நானா..??!!” என்றான் தயங்கி.

“ம்ம் நீயே தான்…”

“நான்…” என்று யோசித்தவன்,

“அய்யாவும்.. கோபியும் செய்யட்டுமே…” என்றான் திடமான குரலில்.

சட்டென்று சரோஜாவிற்கு கண்கள் கலங்கிப் போனது. அவருக்குத் தெரியும் இளம்பரிதி இப்படித்தான் சொல்வான் என்று. இருந்தும் அவனிடம் இருந்து வந்த இவ்வார்த்தைகள் அவரை கலங்கச் செய்தது நிஜம்.

“என்ன இளா நீ.. எப்படி பட்ட சூழ்நிலைல வந்து சொல்றாங்க.. நீ இப்படி பேசிட்டிருக்க…” என்று மோகனா அதட்டவும்,

இளம்பரிதி சரி என்றும் சொல்லவில்லை, மாட்டேன் என்றும் சொல்லவில்லை அமைதியாய் நின்றுகொண்டான்.

எல்லா மௌனங்களும் சம்மதத்திற்கு அறிகுறி அல்லவே..!!

வானதி இவர்களின் பேச்சினை பார்த்துக்கொண்டு இருக்க, அவளுக்குத் தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான் ‘அப்படி என்ன செய்து இவன் அங்கே இன்றியமையாதவன் ஆகிப்போனான்…??’ என்று.

அங்கே இவர்களிடம் வேலை செய்யும் ஒருவன்.. அப்படித்தான் அவள் இத்தனை நாள் எண்ணியிருந்தது. பிருந்தா இவனிடம் உரிமை எடுத்து பேசுகையில், இவன் அதட்டுகையில் எல்லாம் சற்று எரிச்சல் கூட வரும். ஆனால் இப்போதோ, வீடு தேடி வந்து இவர்கள் பேசுகையில் இளம்பரிதி பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் தலை தூக்கியது.

‘அப்படி என்னடா பண்ணிட்ட நீ…’ என்று கேட்கும் ஆர்வம்??!!

“யோசிச்சு சொல்லு இளா…” என்ற சரோஜா எழுந்துகொள்ள, ரேணுவும் எழுந்துகொள்ள, இருவரும் கிளம்பி வர, வீட்டினரும் வெளியே வர, இளம்பரிதி மட்டுமே கார் வரைக்கும் சென்றான்.

மற்றவர்கள் வாசலிலேயே நிற்க, வானதிக்கு ஒருபக்கம் குழப்பம் இப்போது அவனோடு செல்வதா வேண்டாமா என்று. என்ன இருந்தாலும் அவளுக்கு அண்ணியின் அம்மா இல்லையா..

ஓர் எட்டு எடுத்து வைக்க, மோகனா கை பிடித்து நிறுத்திவிட்டார். “இளா போறான்ல பார்த்துப்பான்…” என்று.

“ம்ம்…” என்றவள், பார்வை எல்லாம் அவர்கள் மீதே வைத்திருக்க, இளம்பரிதியின் விறைப்பான தோற்றமே மனதில் நின்றது.

‘ஈசி கோயிங்னா என்னன்னே தெரியாது போல…’ இப்படித்தான் அவள் நினைக்க,

“நீ எப்போன்னு சொல்லு இளா…” என்று சரோஜா கார் ஏறும் முன்னே கேட்க,

“நீங்க இதை உங்க மூ…” என்று சொல்ல வந்தவன் “கோபியை பண்ண சொல்லுங்கம்மா…” என்றான்.

“நான் உன்னை பண்ண சொல்றேனே இளா… அருண் உன்னோட பிரன்ட் தானே…”

“கண்டிப்பா.. அருணுக்காக ஒரு தனிப்பட்ட மனுசனா என்னவும் செய்வேன்.. ஆனா இது வேற..” என்று திடமாகவே மறுக்க,

“அவங்க செய்யக் கூடாதுன்னு தான் உன்னை சொல்றேன் இளா…” என்றார் சரோஜாவும் திடமாகவே.

நல்லவேளை ரேணுவிற்கு அப்போது அழைப்பு வந்திருக்க, அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாள். இல்லையோ நிச்சயம் இவர்கள் பேச்சுக்கேட்டு அவளுக்கும் தலை குழம்பு வைக்க ஆரம்பித்து இருக்கும்.

சரோஜாவின் இவ்வார்த்தைகள் இளம்பரிதிக்கு ஒரு அதிர்வு கொடுக்க, “எனக்கு எல்லாம் தெரியும் இளா.. தெரிஞ்சும் எதுவும் செய்ய முடியலை பாரேன்…” என்று விரக்தியாய் புன்னகைத்தவர்,

“நீ தப்பு பண்ணிட்டதா நினைக்காத.. உனக்காக ஒரு வாழ்க்கை இருக்கு.. சந்தோசமா இரு. அவங்க ரெண்டு பெரும் நல்லதை முன்ன நின்னு செஞ்சா கூட ஆண்டவன் அதை ஏத்துக்க மாட்டான். நான் என் மகன் உயிர்க்காக நல்லது செய்ய நினைச்சேன்.. முடிஞ்சா இதை பண்ணு இல்லைன்னா விட்ரு..” என்றவர் காரில் ஏறி அமர, ரேணுவும் வந்து அமர்ந்து கொள்ள, கார் கிளம்பி விட்டது.

அத்தனை நேரமிருந்த திடம், இளம்பரிதிக்கு கிளம்புகையில் சரோஜா சொன்ன வார்த்தையில் உடைந்து போனது.

ஒரு அம்மாவாய் அவரின் பேச்சு.. நிச்சயம் அவனை அசைக்கத்தான் செய்தது. அப்படியே நின்றுவிட்டான்.

மீண்டும் அங்கே செல்ல மனதே இல்லைதான். ஆனால் அருணின் நலனுக்காக என்று கேட்கையில், அதுவும் அனைத்தும் தெரிந்து வந்து கேட்கையில், இவனால் என்ன செய்திட முடியும்.

மீண்டும் மீண்டும் சூழ்நிலை கைதியாகிக்கொண்டு இருக்கிறான் இளம்பரிதி.

என்று அனைத்து சங்கிலியும் உடைபட்டு, அவன் அவனின் வாழ்வு என்ற நிலை மட்டும் வருமோ தெரியவில்லை..

கார் கிளம்பியதுமே மோகனாவும் தெய்வாவும் உள்ளே சென்றுவிட, இவன் வருவான் என்று வானதி நிற்க, அவனே வரவே இல்லை அப்படியே வெளி கேட்டின் அருகேயே நின்றிருக்க, வானதி தான் அங்கே சென்றாள்.

அவன் அப்படி நிற்பது ஏனோ சங்கடமாய் இருக்க, கால்கள் தன்னைப்போல் நடைபோட, “ஏன் இப்படி நிக்கிறீங்க??” என்று வாயும் தானாய் கேட்டது.

அவளை மீறிய பேச்சுக்களின் ஆரம்பம் போல இது..!!

“ம்ம்..” என்று வேகமாய் திரும்பியவன், “இல்ல சும்மாதான்…” என்றவன் “நீ உள்ள போகலையா??” என்றபடி நடக்க,

“நான் உங்களோட பேசணுமே…” என்ற சொற்கள் அவனை நிற்க வைக்க,

“என்னது??” என்றான்.

“சரோஜா அத்தை கேட்டதை மட்டும் செய்யுங்க.. ஆனா மறுபடியும் அங்க வேலைக்கு எல்லாம் போகவேணாம்…” என்றாள் ஏதோ யோசனையில்.

இவள் போ என்றாலும் கூட போகப் போவதில்லை. போகாதே என்கையிலா போகப் போகிறான். இருந்தும் அவளாய் வந்து இப்படிச் சொல்வதில் ஏதேனும் காரணம் இருக்கும் என்றெண்ணி

“எதுக்கு?? ஏன் போகக் கூடாது…” என்றான் தீவரமாய் அவள் முகம் பார்த்து.

“ம்ம்ச் போகக் கூடாது அவ்வளோ தான்..”

“அதான் காரணம் சொல்லு.. ரீசன் தெரியனும்ல…”

“அ.. அது.. அது.. நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை.. அப்படியெல்லாம் அங்க வேலைக்குப் போக வேணாம்.. உங்களுக்கு சொந்தமா கடை இருக்குதானே.. அங்க போங்க.. இல்லை வேற பாருங்க…” என்றாள், படபடவென..

அவள் சொல்வதின் உள்ளர்த்தம் புரிந்தது. ஆனால் யாரின் கௌரவத்திற்காக இவள் பேசுகிறாள். தன்னதா இல்லை அவள் பிறந்த வீட்டினதா?? மனதின் எங்கோ ஓர் மூலையில் லேசாய் கோபம் எட்டிப் பார்க்க,

“என்ன சொல்ற நீ??” என்றான்.

அவன் குரலின் மாற்றம் உணர்ந்தவள் “எஸ்.. அங்க போகக் கூடாது.. அது சரியில்லை..” என,

“சரிதான்.. ஆனா நீ சொன்ன காரணம்.. அதாவது நான் உங்க வீட்டு மாப்பிள்ளை இல்லைன்னா எங்கயும் வேலைல இருக்கலாம் அப்படியா??” என, இளம்பரிதியின் முகம் பேச பேச மாறிப்போனது.

பழைய இளம்பரிதியாகிப் போக, அவனின் பாவனைப் பார்த்து வானதியும் கூட அப்படியே மாறிப்போனாள்.

“நீங்க இப்படி என்கிட்ட பேசக் கூடாது…” என்று விரல் நீட்டிச் சொல்ல, நீட்டிய விரலினை பற்றியவன்,

“இப்படியும் பேசுவேன்.. இதுக்கு மேலயும் பேசுவேன்.. என்னை போ போகக் கூடாதுன்னு சொல்ல எனக்கான காரணம் இருக்கணும்.. அதைவிட்டு உங்க வீட்டுக்கு மாப்பிள்ளைன்னா அதுக்கான சங்கதிங்க எல்லாம் நான் பாலோ செய்யனும்னு இல்லை.. புரிஞ்சதா??!!” என்றவன் விரலை பிடித்து கீழே அமுக்க,

“ஷ்..!!” என்று வழியில் முனங்கியவள்,

“எப்பவுமே உங்களுக்கு எதுவும் புரியாதுன்னு மட்டும் நல்லாவே புரியுது.. உங்கக்கிட்ட பேச வந்தது என்னோட தப்பு..” என்றாள் சீற்றலாய்.

இந்தச் சண்டை இவர்களே இழுத்துக்கொள்ள, இவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றெண்ணும் விதி கூட கன்னத்தில் கை வைத்து வேடிக்கைப் பார்க்க மட்டுமே முடிந்தது.

“பேச வந்ததே தப்புன்னா பின்ன கல்யாணம் பண்ணது?? நீ சரின்னு சொல்லித்தானே கல்யாணம் பண்ண அப்போ அது தப்பா தெரியலையா??!!”

“வாட்??!! என்ன சொன்னீங்க?? கம் அகைன்…” என்றாள் வெகுண்டெழுந்து.

திருமணம் என்பது வானதி விசயத்தில் மிக மிக ‘சென்ஸ்டீவ்..’ ஆகிப்போனது..

இப்போது அதையே இளம்பரிதி பேச, அவளால் பொறுக்க முடியவில்லை. அவனோ கோபத்தில் அதை மறந்து “என்ன?? உண்மைதானே.. பேச வந்ததே உனக்கு தப்பா தெரியுதுன்னா அப்போ என்னோட வாழ்றது அது?? அது எந்த வகை உனக்கு??” என,

“மைன்ட் யுவர் வோர்ட்ஸ்…” என்றாள் அனல் தெறிக்க.

“முடியாது என்ன செய்வ…” என்று திமிராய் பார்க்க,

“சரிதான் போடன்னு போயிட்டே இருப்பேன்.. என்ன நினைச்ச நீ.. கொஞ்சம் டிஸ்டர்ப்பா இருந்தா என்னை எப்படியும் பேசலாம்னு நினைச்சியா நீ?? இப்பவும் சொல்றேன் நீ என்னோட இப்படி எல்லாம் பேசவே கூடாது…” என்று மீண்டும் விரல் நீட்டியே சொன்னவள், அவனிடம் இருந்த ஒரு கரத்தினை வெடுக்கென்று விடுவித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

‘ஓ..!! போடான்னு சொல்லிட்டு உள்ளத்தான் போவா போல…’ சம்பந்தமே இல்லாது இளம்பரிதியின் மனசாட்சி எட்டிப் பார்த்தது.                                                                                

Advertisement