Advertisement

                என்னிதயம் கேட்ட ஆறுதல் – 13

திண்டுக்கல்..

இளம்பரிதியின் வீடு ஆட்கள் நிரம்பி இருந்தது. நடந்தது எப்படியான திருமணமோ, ஆனால் எப்படி நடந்தாலும் திருமணம் என்பது திருமணம் தானே. அதற்கான முறைகள் எல்லாம் செய்திட வேண்டும்தானே.

விஜயன் பக்கத்து நெருங்கிய உறவுகளும், மோகனா பக்கத்து நெருங்கிய உறவுகளுக்கும் அழைப்பு விடுத்திருக்க, அவர்களின் வீடு பக்கத்தில் இருக்கும் காலி இடத்தினில் பந்தல் போட்டு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ரிசப்சன் வைக்கவேண்டும் என்று விஜயன் இளாவிடம் கேட்டதற்கு “வேணாம்பா.. இதை பெருசா எல்லாம் நம்ம கொண்டாட வேணாம். அங்க ஒருத்தன் உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. எனக்கு மனசுல அதுதான் இருக்கு…” என்றுவிட்டான்.

அதுவும் சரிதான்.. பிருந்தாவின் தம்பியும் கூட அல்லவா அருண்..

இந்த நிலையில் அவளாலும் தான் எந்த விழாவிலும் முழு மனதாய் கலந்துகொள்ள முடியுமா என்ன??

“எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும்ங்க.. நம்ம நினைச்சோமா இளாக்கு கல்யாணம் நடக்கும்னு…” என்று மோகனாவும் சமாதானம் செய்திட,

“அப்போ நெருங்குன ஆளுங்கள மட்டும் கூப்பிட்டு கண்டிப்பா ஒரு சின்ன விருந்து மட்டுமாவது கொடுக்கணும்..” என்றுவிட்டார் விஜயன் உறுதியாய்.

இதாவது செய்துதானே ஆகிட வேண்டும்.. இளம்பரிதியும் சம்மதித்து விட, பின் என்ன இளம்பரிதியும், வானதியும் இங்க வந்த அடுத்த இரண்டு நாளில் இதோ விருந்தேற்பாடு.

தெய்வாவும் வந்திருக்க, என்னவோ அவளுக்கு வானதியை கண்டது முதல் பிடித்துவிட்டது. ஓரிருமுறை பார்த்திருக்கிறாள் தான். இருந்து பேசியது இல்லை.

இப்போது உரிமையாய் அனைவரையும் விட “என்ன அண்ணி…” என்று அவளே முன் நின்று பேச, வானதிக்குமே ‘அப்பாடி …’ என்ற ஆசுவாசம்.

இளாவிற்கும், வானதிக்கும் ஏற்கனவே பேச்சு வார்த்தை சரியில்லை. இப்போதோ இருவருக்கும் என்ன பேசுவது என்பது கூட விளக்கவில்லை. சொல்லப் போனால், எதுவும் பேசி அது இன்னமும் சண்டை அது இதென்று ஆகிப் போனால் என்ன செய்வது?

அதுதான் இருவரையுமே அமைதி காக்க வைக்க, மோகனாவோ  ‘பெரிய இடத்துப் பெண்…’ என்ற போர்வையில் தான் அவளைப் பார்த்தார்.

ஆக, தன்னைப் போல் ஓர் ஒதுக்கம் அவரிடம் வந்துவிட்டது. தெய்வா வந்து பேசிய பிறகுதான் ‘இவளாவது பேசுறாளே…’ என்ற இயல்பு சிறிது வர, அவளும் நன்றாகவே பேசினாள்.

வந்திருந்த முக்கால்வாசி பேர் கிராமத்து ஆட்கள் என்பதால், பேச்சு சிரிப்பு ரகளை என்பது இரட்டிப்பாகவே இருக்க, சிலர் என்ன பேசுகிறார்கள் என்பது கூட வானதிக்கு புரியவில்லை.

அவளிடமே யாரேனும் வந்து பேசினாலும் கூட பொத்தாம் பொதுவாய் சிரித்து வைத்தாள். இல்லையேல் தெய்வாவின் முகம் பார்த்தாள். ஆகா மொத்தம் அங்கே இளாவின் இருப்பு தேவையில்லை என்றாக,

“ஏய் நீ போ.. போய் வந்தவங்கள கவனி.. இங்க என்ன அரட்டை…” என்று தெய்வாவை விரட்டி விட,

“உனக்கென்ன.. நீ போ…” என்றாள் பட்டென்று.

“ம்ம்ச் தெய்வா.. போ…” என்ற இளாவின் குரலில் இருந்த மாற்றம் கண்டு, அப்படியே தெய்வா “சரி சரி போறேன் போ.. ரொம்பத்தான்…” என்று அலுத்துக்கொண்டே செல்ல, வானதியோ இருவரின் பேச்சையும் சற்றே சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவளும் கதிரும் இப்படியெல்லாம் பேசியதில்லை. என்னவோ இப்படியான இலகு சண்டைகள் சீண்டல்கள் எல்லாம் அவர்களுள் இருந்ததில்லை.

சுவராஸ்யமாய் பார்த்துக்கொண்டு இருந்தவள் தெய்வா செல்கிறாள் என்றதும் ‘ஐயோ..’ என்று பார்க்க,

“என்ன..?” என்று கேட்டு நின்றான் இளம்பரிதி.

“என்ன என்ன?”

“யார் வந்து பேசுனாலும் உனக்கு பதில் சொல்லத் தெரியாதா.. தெய்வாவ ஏன் பாக்குற..”

“வேற யாரைப் பார்க்கணும்?? சொல்லுங்க பாக்குறேன்…” என்ற வானதியின் பதில் கேள்விக்கு இளாவினால் அந்த நேரத்தில் பதில் சொல்ல முடியவில்லை.

‘என்னை பார்..’ என்பதா??

அதுவும் அவனாகவா??

சாத்தியமா என்ன??

சொல்லிடுவான் தான். தைரியம் அற்றவன் அல்ல.. ஆனால், இது அதற்கான நேரமில்லை என்பது அவனின் எண்ணம். அதையும் தாண்டி, ஏதாவது சொல்லப் போய் பதிலுக்கு அவள் அதை தவறாக ஏதேனும் எடுத்துக் கொண்டால்?!!

இளம்பரிதியின் பதிலுக்காக வானதி எதிர்பார்த்து அவன் முகம் பார்த்து நிற்க “ஒண்ணுமில்ல…” என்று சொல்லி நகர்ந்துவிட்டான்.

வானதியும் தோளை குலுக்கிவிட்டு, அவளின் அண்ணனுக்கு அழைத்து “கிளம்பியாச்சாண்ணா…” என,

“பத்து நிமிஷம் வானதி.. அங்க இருப்போம்..” என்று கதிர் சொல்லவும்,

“ம்ம் சரி…” என்றபடி, விருந்து நடக்கும் இடத்தினில் இருந்து வீட்டிற்குள்ளே செல்ல,

மோகனா வந்து “உனக்கு டயர்டா இருந்தா ரூம்ல கூட இரும்மா…” என்று பதவிசாய் சொல்லிப் பார்த்தார்.

“இ… இல்ல.. அதெல்லாம் இல்ல…” என்று வானதி தலையை உருட்ட,

“என்ன அண்ணி.. புது பொண்ணு எங்களோட எல்லாம் உக்காந்து பேசினா தானே உறவு முறை தெரியும்.. நீங்க பாட்டுக்கு ரூமுக்கு அனுப்பினா என்ன தெரியும்? இல்லை எங்களைத்தான் தெரியுமா??” என்று ஒரு பெண்மணி கேட்க, மோகனா தயக்கமாய் வானதி முகம் பார்த்தார்.

“நான்… இங்கயே இருக்கேன்.. அம்மா அண்ணா எல்லாரும் வந்திடுவாங்க கொஞ்ச நேரம்ல…”

“ஓ..!! அப்போ சரிம்மா…” என்றவர் “தெய்வா வந்து அண்ணியோட இரு…” என்று மகளை அழைக்க,

அவளோ “முடியாது போம்மா.. நீ இருன்னு சொல்வ.. உன் மகன் வந்து போ சொல்வான்..” என்றுவிட்டாள்.

இளம்பரிதி இதெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். இருந்தும் எதுவும் சொல்லவில்லை. இப்போதுதான் அவனும் பிருந்தாவிற்கு அழைத்து பேசினான். வந்துவிடுவார்கள் என்றே வீட்டிற்குள் அவன் வர, பெண்கள் இப்படி பேச எதுவும் கேட்காததுபோல் நகரப் பார்க்க,

“என்ன புது மாப்ள.. உங்கம்மா பொண்ணு பார்க்கணும் சொன்னதுக்கு வசதியான வீட்டு பொண்ணு வேணாம்.. ரொம்ப படிச்சா பொண்ணு வேணாம் சொன்னியாம்.. இப்போ நீ சொன்னதுக்கு மீறியே கல்யாணம் பண்ணிருக்க..” என்று உறவில் வேறொருவர் கிண்டல் பேச,

‘போச்சுடா..’ என்று பார்த்தான் இளம்பரிதி.

வானதியோ ‘இதுவேறயா…’ என்று பார்க்க, அவள் தன்னை தான் நோட்டம் விடுகிறாள் என்பதறிந்து “ம்மா நான் போய் வெளிய நிக்கிறேன்..” என்று சென்றுவிட,

“ஆனாலும் மாப்ள இவ்வளோ சங்கோஜப் படக் கூடாது…” என்று வேறொருவர் சொல்ல, வானதிக்கு ஏனோ இருக்கும் இறுக்கம் மீறி சிரிப்பு வந்துவிட்டது.

‘இவனை எல்லாம் கல்யாணம் பண்றதே பெரிய விசயம்.. இதுல கண்டிசன் வேற..’ இப்படித்தான் வானதியின் நினைப்பு இருக்க, சிறிது நாட்களுக்கு முன்னே, இவன் வேலை செய்பவன்தானே என்று நினைத்தது எல்லாம் மறந்தே போனது.

சொல்லப் போனால், அதெல்லாம் இப்போது யாரேனும் சொன்னால் மட்டுமே அவளுக்கு நினைவு வருமாக இருக்கும்.

அண்ணன் சென்றுவிட்டான் என்றதுமே, வானதி பக்கம் தெய்வா வந்துவிட, வந்தவளும் எதுவோ சொல்ல, அதற்கு வானதியும் சிரித்தபடியே பதில் சொல்ல, சரியாய் அதே நேரத்தில் தான் கதிர்வேலன், பிருந்தா, ராதாவெல்லாம் வீட்டினுள்ளே வர, அவர்களின் கண்ணில் பட்டது எல்லாம் வானதி புன்னகை பூத்து பேசிக்கொண்டு நிற்பதுதான்.

அவள் பொருந்திப் போனாளோ இல்லையோ, தான் இங்கே பொருந்திப் போவதாய் காட்டிக்கொண்டாள் இதுவரை..

அதுவே இனி பழகியும் போகும் என்பது அவளின் திண்ணம்..

இப்போது அவள் வீட்டினர் முகத்திலும் ஒரு மெச்சுதல் வர “வாங்க வாங்க…” என்ற மோகனாவின் குரலில் தான் திரும்பிப் பார்த்தவள்,

“ண்ணா… ம்மா.. அண்ணி…” என்று அவர்களின் அருகே செல்ல, அவர்களின் பின்னோடு வந்த இளாவின் முகத்தினில் சற்று நேரத்திற்கு முன்னம் இருந்த அந்த இலகுத் தன்மை துளியும் இல்லை.

மற்றவர்கள் கவனிக்கவில்லை எனினும், வானதி கண்டுகொள்ள, அவனிடம் வெளிப்படையாய் கேட்கவும் முடியாதி ‘என்னாச்சு…’ என்று.

இன்னும் அத்தனை தூரம் எல்லாம் அவர்கள் நெருங்கிப் பழகவே இல்லையே.. சொல்லப் போனால் பழகவே இல்லை…!!

“என்ன அண்ணி… இவ்வளோ நேரம் என்னோட இருந்துட்டு இப்போ உங்க வீட்ல இருந்து வரவும் ஓட்டிட்டீங்க…” என்று தெய்வா பேச,

“ஏய் தெய்வா எப்படி இருக்க நீ…” என்று பிருந்தா அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள,

“நாங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி.. உங்களுக்கு ரெண்டு நாத்துனா புரிஞ்சதா…” செல்லமாய் மிரட்டிக்கொண்டாள் தெய்வா வானதியிடம்.

ஆனால் இவர்கள் பேசுவது எல்லாம் எதுவுமே வானதியின் தலைக்கு ஏறவில்லை. இளம்பரிதியின் இந்த முக மாற்றமே என்னவோ ஏதோவென்று அவளை நினைக்க வைக்க,

“எதுவும் பிரச்சனை இல்லையே அண்ணி…” என்றாள் மெதுவாய்.

“இல்லையே.. ஏன் என்னாச்சு…”

“இல்ல.. சும்மாதான்…” என்றவள், அம்மாவினோடும், அண்ணனோடும் பேசச் செல்ல,

“தம்பிக்கு இப்போ எப்படி இருக்கு..?” என்றார் மோகனா பிருந்தாவிடம்.

“அப்படியேதான் இருக்கான். கான்சியஸ் நடுவில வந்துட்டு போனதுனால டாக்டர் தைரியமா இருக்கலாம் சொல்லிருக்காங்கம்மா.. சென்னைக்கு கொண்டு போலாம்னு இவர் சொல்றார்.. இனிதான் நாங்களும் பார்க்கணும்..” என,

“ம்ம்.. நாங்களும் வரணும்தான்.. ஆனா எப்படி என்னனு புரியலை…”

“நீங்க எதுவும் நினைச்சுக்காதீங்கம்மா.. நீங்க எப்பவும் போல அவங்களோட இருங்க.. நடந்தது யாருமே எதிர்பார்க்காதது. இந்த கல்யாணம் பத்தி யாரும் எதுவும் நினைச்சுக்க மாட்டாங்க..” என்ற பேச்சுக்கள் எல்லாம் இளம்பரிதியின் மனதினில் நெருஞ்சியாய் குத்தியது.

ஏனோ அங்கே இருந்திடவே பிடிக்கவில்லை. எதிர்பாராத விபத்து என்றுதான் நினைத்திருக்க, சற்று முன்னே  பிருந்தா கூறிய ‘யாரோ வண்டி ஏத்திருக்காங்க இளா…’ என்ற வார்த்தைகளில், இளம்பரிதிக்கு பகீரென்றது.

இன்னமும் சென்று அருணைப் பார்க்கவில்லை. பார்த்திட வேண்டும் என்ற வேகம் இருந்தாலும், அவன் சுய நினைவே இல்லை என்றாலும் கூட அவனைக் காண இளாவிற்கு ஓர் தயக்கம்.

‘என்னை இப்படி ஒரு சூழ்நிலைல நிக்க வச்சிட்டீங்கலே…’ என்று வெற்றிவேலன் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போலிருக்க, அதே வேகத்தினில் கிளம்பியும் விட்டான்.

“ம்மா பார்த்துக்கோ… வந்திடுறேன்…”

இது மட்டும்தான் அவன் வார்த்தைகளாய் இருக்க, பைக்கில் கிட்டத் தட்ட பறந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்..

அப்படியொரு வேகம்..!!

‘எங்க போறான்..?’

‘என்ன விஷயம்..?’

‘என்னவாம்…?’

இப்படி வீட்டினில் எழுந்த பல கேள்விகளுக்கு மோகனா ‘தெரியலையே.. வந்துடுறேன்னு போயிருக்கான்..’ என,

அதன்பின் அனைவரின் பார்வையும் வானதி பக்கம் போக ‘எனக்கும் எதுவும் தெரியாதே…’ என்றாள்.

இருந்தும் ஒரு யூகம் இருந்தது. நிச்சயம் அண்ணி ஏதேனும் சொல்லித்தான் அவன் செல்கிறான் என்பது வரைக்கும் புரிய, என்ன விஷயம் என்றுதான் புரியவில்லை.

இளம்பரிதி சற்று அலட்சியமானவனும் கூட என்று தெரியும்தான், இருந்தும் அவள் வீட்டினர் வந்திருக்க இப்போது கூடவா கிளம்பிட வேண்டும் என்ற நினைப்பும் வர, சற்றே கோபமும் வந்தது.

‘என்ன வேலையா இருந்தா என்ன??’ என்றுதான் நினைத்தாள்.

இப்படியாக வந்தவர்கள், பேசி, உறவாடி, உணவு முடித்து, கிளம்பவும் கூட செய்திட இளம்பரிதி என்பவன் வரவே இல்லை வீட்டிற்கு.

ஆளாளுக்கு மாற்றி மாற்றி அழைத்துப் பார்க்க, ம்ம்ம்ஹும் எவ்வித பலனும் இல்லை.  நேரம் செல்ல செல்ல, வந்த உறவுகளும் கூட கிளம்பிச் செல்ல, வீட்டினர் மட்டுமே இப்போதிருக்க, விஜயனும் மோகனாவும் வாசலில் அமர்ந்து இவன் வருகையைப் பார்க்க, வானதியும் தெய்வாவும் வீட்டிற்குள்ளே இருந்தனர்.

“அப்படி என்ன தலை போற காரியம்…” என்று விஜயன் கடிந்துகொண்டு இருக்க,

“அண்ணி நீங்க ஒன்ஸ் கால் பண்ணி பாருங்க…” என்று தெய்வா சொல்ல, வானதி முழி முழி என முழித்தாள்.

அவளிடம் அவனின் போன் நம்பர் இல்லையே..

இல்லை என்று சொல்லிட முடியுமா என்ன??

“என்ன அண்ணி… கால் பண்ணுங்க…” என,

“இ.. இல்ல.. அது.. என் போன்ல சார்ஜ் இல்ல.. அ.. ஆமா…” என்றாள் வானதி சமாளிப்பாய்.

ஆனால் அவளின் நேரம் அவளின் போன் அங்கிருந்த டேபிள் மீதே இருக்க, தெய்வா எடுத்துப் பார்த்தவள் “ஹ்ம்ம்.. புல் சார்ஜ் இருக்கண்ணி…” என்றவள் அவளிடம் அலைபேசியை நீட்ட,

‘விடமாட்டா போலவே…’ என்று ஒரு பார்வை பார்த்தபடி அலைபேசியை வாங்கிக் கொண்டு இருக்கும் போதே இளாவின் பைக் சத்தம் கேட்டுவிட்டது வாசலில்.

சட்டென்று ஓர் ஆறுதல் ‘அப்பாடி…’ என்று.

அத்தனை நேரம் அவன் மீதிருந்த கோபமெல்லாம் எங்கோ ஓடிப்போய் ‘நல்ல வேளை வந்துட்டான்… ஒன்னு இவன் டென்சன் பண்ணுவான்.. இல்ல இவனால யாராவது டென்சன் செய்வாங்க… ச்சே இதே வேலை எனக்கு…’ என்று அவளுள்ளம் சலிக்க,

இளம்பரிதி வீட்டினுள் வந்தவன் “தெய்வா தண்ணி குடு..” என்றபடி அமர,

“இளா.. என்ன எங்க போன நீ… போன் பண்ணியும் எடுக்கல… என்னதான்டா நினைச்சிட்டு இருக்க..” என்று விஜயன் பின்னேயே வர,

“அருண பாக்க போனேன் ப்பா…” என்றவனின் சொற்களில் அப்படியே நின்ற இடத்தினில் நின்றுவிட்டனர்.

அருண் பற்றிய பேச்சுக் கூட யாரும் வானதி முன்னம் பேசுவதில்லை. அப்படியிருக்க, இளம்பரிதி இதனைச் சொல்லவும், அனைவரின் பார்வையும் வானதி பக்கம் தான் வந்தது.

அவளுக்குமே இது சற்று சங்கடமான நிலைமை தான்.

வேறென்ன செய்ய சந்தித்துத் தானே ஆகிட வேண்டும். என்றேனும் ஒரு நாள் அருணை, அவன் வீட்டினரை நேரில் கண்டுதானே ஆகிட வேண்டும்..

இங்கே இவர்களையே சமாளிக்க முடியவில்லை எனில், பின் அவர்களை எப்படி சமாளிப்பாள்??

ஒருமுறை ஆழ மூச்சினை எடுத்து விட்டவள் “எப்படி இருக்காங்க…?” என்று நேரடியாய் இளாவிடமே கேட்க,

‘ஹா..!!’ என்றான் லேசாய் அதிர்ந்து.

வானதி பேசுவாள் என்றோ, அதுவும் அருண் பற்றி தன்னிடம் கேட்பாள் என்றோ நினைக்கவே இல்லையே.

அவள் முகத்தினையே திகைத்துப் பார்த்தவன் “இம்ப்ரூவ்மென்ட் இல்ல…” என்று மெல்லிய குரலில் சொல்ல,

“ஓ..!!” என்ற ஓர் உச்சரிப்பு மட்டுமே அவளிடம்.

இந்த ‘ஓ’விற்கு என்னவென்று அர்த்தம்கொள்ள என்று இளம்பரிதிக்கு இம்மியளவு கூட விளங்கவில்லை..      

Advertisement