Advertisement

                  என்னிதயம் கேட்ட ஆறுதல் – 12

இளம்பரிதியின் கரத்தினை வானதி இறுகப் பற்றியிருக்க, அது அவள் தெரிந்து செய்தாளோ, இல்லை அவளையும் அறியாது நடந்த ஒன்றோ தெரியாது. ஆனால் இது தெரிந்த இளம்பரிதிக்கோ சற்றே திக்கென்று தான் இருந்தது.

முதலில் வானதி திருமணத்திற்கு, அதாவது இளம்பரிதியை திருமணம் செய்ய சரி என்பாள் என்றே அவன் நினைக்கவில்லை. எப்படியும் அவள் மாட்டேன் என்பாள் என்றுதான் நினைத்திருந்தான்.

அவள் சம்மதித்தது முதல் அதிர்ச்சி எனில், இப்போது இந்த கரம் பற்றல் இரண்டாவதாய் இருந்தது.

அறையில் மிதமான வெளிச்சம் இருந்தது. ஆக, அருகில் உறங்கும் அவள் முகம் தெளிவாகவே அவனின் விழிகளில் விழ, இமைக்காது தான் பார்த்து அமர்ந்திருந்தான்.

‘எதுக்கு பிடிச்சிருக்கான்னு தெரியலையே…’ என்று அவளையே பார்க்க,

அவளோ மெல்ல விழிகள் திறந்து “எங்க போறீங்க…?” என,

‘போறீங்களாவா… இவ்வளோ மரியாதையா பேசுறா??’ என்றுதான் இளாவிற்கு தோன்றியது.

“உங்களைத்தான் எங்க போறீங்க..” என்ற வானதியின் தொனி மாறியது.

“ம்ம்ச்.. எங்க போக முடியும்…?” என்றவனுக்கும் அவளின் விசாரணை பிடிக்கவில்லை.  

“பின்ன ஏன் எழுந்தீங்க..?”

“தூக்கம் வரல… எழுந்தேன்.. இதொரு விசயமா…”  

“ஓ..!! தூக்கம் வர அப்போ என்ன செய்வீங்க?? எதுவும் யூஸ் பண்ணுவீங்களா??” என்று கேட்டவளின் முகத்தினில் பல பல பாவனை.

எழுந்தும் கூட அமர்ந்து விட்டாள் அவளும். என்ன சொல்லப் போகிறானோ என்ற ஒரு தவிப்பும் கூட அவளிடம். இன்னும் வாழ்வில் என்னென்ன சந்திக்க நேரிடுமோ என்ற பயம் அவளுக்கு காலையில் இருந்து வந்துவிட்டது.

இந்த திருமணம் மறுத்தால், எப்படியும் மீண்டும் வீட்டினில் வேறாருக்கேனும் திருமணம் செய்ய என்று பேசுவார்கள், திரும்ப திரும்ப வானதிக்கு இந்த பேச்சுக்கள் வருவதில் உடன்பாடில்லை.

ஆக இதை இன்றோடு முடித்திடுவோம் என்ற நினைப்பும் வரவும் தான் இதற்கு சம்மதித்தாள். 

ஆனால் இப்போதோ, சொல்ல முடியாத ஓர் பயம் வந்துவிட,   

“என்ன சொல்ற நீ…” என்று வேகமாய் ஆரம்பித்தவன், அவள் முகத்தை பார்த்து, சற்றே தணிந்து,  “எனக்கு இந்த பெட் ஒத்து வரல.. தரையில படுத்தா தான் தூக்கம் வரும்..” என்று விளக்கம் சொல்ல,

“ஓ…!!” என்றாள் சற்றே ஆசுவாசமாய்.

“நீ என்ன நினைச்ச??” என்று இளம்பரிதி பதில் கேள்வி கேட்பான் என்றவள் நினைக்கவில்லை போலும்.

‘ஹா..!!’ என்று கண்கள் விரிய,

“என்ன நினைச்சு கேள்வி கேட்ட?” என்றான் அடுத்து.

அவள் கண்டிப்பாய் தன்னை தவறாய் தான் நினைத்திருக்கிறாள் என்று புரிந்து, இளாவிற்கு சற்றே சங்கடமாய் இருந்தாலும், அவளின் நிலையும், அவளின் முகத்தில் தெரிந்த பாவனையும் இளாவை கொஞ்சம் தனிவாகவே பேச வைத்தது.

இருந்தும் ‘இவள் தன்னை தவறாய் நினைக்கலாமா??’ என்ற ஒரு அங்கலாய்ப்பும் கூடவே வர,     

“நான் எதுவும் நினைக்கல…”  என்றவளின் குரல் தன்னைப்போல் இறங்க,

இளம்பரிதிக்கு என்ன தோன்றியதோ “நீ எப்பவும் போலவே இரு…” என்று சொல்லிவிட்டு, கட்டிலில் இருந்து இறங்கி, தரையில் தலையணைப் போட்டுப் படுத்துக்கொண்டான்.

இவள் தான் அப்படியே அமர்ந்திருந்தாள்.     

வானதி நல்ல உறக்கத்தில் எல்லாம் இல்லை. இவனோடு என்ன பேசுவது என்று தெரியாது உறங்கும் பாவனையில் இருக்க, அவன் மெல்ல கட்டில் விட்டு இறங்க முயற்சிப்பது கண்டு, பழைய நியாபகம் வந்து தான் அவளையும் மீறி அவன் கை பிடித்தது.

ஒரு நொடியில் வானதி என்னென்னவோ நினைத்துவிட, பேச்சும் கூட அவளை மீறித்தான் வந்தது. இப்போது அவனிறங்கி படுத்துவிட, வானதிக்கு உறக்கம் வருவேனா என்று அடம் பிடிக்க, ‘ஏன் இப்படி தனக்கு ஆகிறது…’ என்ற யோசனையோடு படுத்திருந்தாள்.

அருணோடான திருமண வாழ்வு பிடித்தம் என்று சொல்ல முடியாது, இருந்தும் சம்மதம் சொன்னாள். பின் திடீரென இளம்பரிதியினால் மனதில் ஓர் சஞ்சலம்.. பின் இருவரின் சிறு இதழ் ஸ்பரிசம்.. அதுவோ அடங்கவே மாட்டேன் என்று எண்ண அலைகளை தட்டி எழுப்ப, திருமணத்திற்கு என்று எப்படியோ ஒரு வழியில் மனதை சற்றே சமாதானம் செய்துவைத்திருக்க, இப்போது எல்லாம் தலைகீழாய் மாறி இளம்பரிதியோடே திருமணம் நடக்க, மனதளவில் தவித்துத் தான் போனாள் வானதி.

எத்தனை சங்கதிகளுக்குத் தான் ‘சரி பார்ப்போம்.. பார்ப்போம்…’ என்று கடந்து வருவது.

கடந்து வந்துவிட்டோம் என்று நினைத்தாலும், அது நம் வாழ்வில் கசப்பாய் தானே ஒரு பக்கத்தில் நிற்கிறது.  இன்னும் சில அல்லது பல நாள் ஆகும், அவள் இயல்பாய் சுற்றித் திரிய. அதுவும் கூட முழுக்க முழுக்க அவள் கையில் இல்லை.

முதல் முறையாய் எதிர்காலம் பற்றி நெஞ்சுக்குள்ளே சிறிய பயமும் குழப்பமும் அவளுக்கு வேர் விட்டது..!!

இனி என்னாகுமோ என்று..!!

பார்வை அவளையும் அறியாது இளம்பரிதியின் மீது பாய்ந்தது. இவன் தன் கணவனாய் வருவான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் நடந்தேறிப்போனது. கணவனாய் வந்துவிட்டான். ஆனால் அப்படி நினைத்துவிட சட்டென்று முடியவில்லை.

இவனோடு சேர்ந்து வாழும் வாழ்வு எப்படி இருக்கும்…??!!

விஸ்வரூபமாய் இக்கேள்வி அவளுள்ளே..!!

இவர்களின் இவ்விரவு இப்படியே அமைதியில் கழிய, கொடைக்கானலின் ஒரு மலைக் கிராமத்தில், அழகிய சிறு வீட்டின் வாசலில், அடிக்கும் குளிரையும் பொருட்படுத்தாது,  தியாகு என்பவன் ஒரு வெற்றிச் சிரிப்போடு அமர்ந்திருந்தான்.

வீட்டினுள்ளேயோ ஷாலினியின் அழுகுரல்..!!

ஷாலினி, தியாகுவின் பாசமிகுத் தங்கை.. கோபியின் முன்னாள் காதலி.. தான் பாவம் செய்துவிட்டோம் என்ற இளம்பரிதியின் மனக் குமுறலுக்கு காரணமானவள். தன் குடும்ப கௌரவம் கெட்டுவிடக் கூடாது, அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்  என்று வெற்றிவேலனை பிடிவாதம் கொள்ள செய்தவள்..

“ம்மா.. தப்பு என் பேர்லயும் தான் இருக்கு.. அண்ணன் இப்படி செஞ்சிருக்கக் கூடாது…” என்று ஷாலினியின் குரல் அழுதபடி கேட்க, அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை தியாகு.

அவன் தங்கையின் இந்த நிலைக்கு காரணமான வெற்றிவேலனை சும்மா விடக் கூடாது.

இதுதான் அவனுக்கு.. இது மட்டுமே அவனுக்கு.

‘என் தங்கச்சி வாழ்கைய பாழடிச்சிட்டு.. நீ உன் பையனுக்கு கல்யாணம் பண்றியா.. விடுவேனா நான்… விட்டுடுவேனா நான்… இருடா… இன்னும் நீ சந்திக்க வேண்டியது நிறைய இருக்கு…’ என்று இப்போதும் கறுவிக்கொண்டு இருக்க,

“தியாகு…” என்று அவனின் அம்மாவின் குரல் கேட்கவும், உள்ளே சென்றான்.

“அழுதுட்டே இருக்கா…” என்று மெதுவாய் சொல்ல,

“எத்தன நாளைக்கு அழுவா.. விடும்மா… கொஞ்சம் கொஞ்சமா சொல்லி வை.. ஒரு மாசம் கழிச்சு மாப்பிள்ளை பார்க்கணும்.. எதார்த்தம் புரிஞ்சு நடந்துக்க சொல்லு..” என்று ஷாலினியின் காதில் விழும்படியே அம்மாவிடம் பேச,

“நான் கல்யாணம்லாம் பண்ண மாட்டேன்…” என்று ஆங்காரமாய் சொல்லிக்கொண்டு ஷாலினி வெளிவர, அம்மாவும், அண்ணனும் ஒரே மாதிரி பார்வை பதித்தனர் அவளின் மீது.

“ண்ணா ப்ளீஸ்.. தப்பு என்மேலயும் தானே.. கோபிக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் அவரோட மறுபடி பழக ஆரம்பிச்சது என்னோட தப்பும் கூடத் தானே.. முன்ன லவ் பண்ணோம் தான்.. ஆனா நடுவில ஏற்பட்ட பிரிவு, அது அப்படியே போயிடும்னு தான் நானும் நினைச்சேன்.. ஆனா மறுபடியும் அவர பார்த்தப்போ இதெல்லாம் நடக்கும்னு நானும் நினைக்கல.. ஆனா எது எப்படினாலும் தப்பு என்மேலயும் தான்.. அதுக்காக நீ இப்படி அவர் தம்பி கார் மேல லாரி எத்திருக்கக் கூடாது…” என்று கேவிக்கொண்டே பேச,

தியாகுவின் முகத்தினில் கோபம் கொப்பளித்தாலும், அதனை அடக்கி “நீ தப்பு செய்யலன்னு நான் சொல்லவே இல்லையே.. உன்னை மன்னிச்சுட்டேன்னும் நான் சொல்லலை..” என்ற தியாகு அவளை நேர் பார்வை பார்க்க,

“ண்ணா ப்ளீஸ்…” என்றாள் இறைஞ்சலாய் ஷாலினி.

“நீ இப்படி எங்க முன்னாடி கண்ணீர் விட்டு கெஞ்சி நிக்கவா உன்னை பார்த்து பார்த்து வளர்ந்தோம்… நீ இப்படி நிக்கிறது எங்களுக்கு எவ்வளோ கஷ்டமா இருக்குத் தெரியுமா??” என்ற தியாகுவின் வார்த்தைகள், அவன் அம்மாவையும் அழ வைத்துவிட, ஷாலினி அப்படியே வாயடைத்துப் போனாள்.

இதுநாள் வரைக்கும் ஒருவார்த்தை அம்மாவோ அண்ணனோ கடிந்து பேசியோ, கோபமாய் திட்டியோ ஒன்றுமே பேசவில்லை. நடந்த விஷயம் தெரிந்து இருவருக்கும் அதிர்ச்சி எனிலும், அவளைத் தேற்றத் தான் முயன்றனர்.

ஆனால் தியாகு இப்படி செய்வான் என்று ஷாலினி நினைக்கவில்லை.

பெரிய பிரச்சனை ஆகிவிட்டால் ??!!

அதையும் தாண்டி கோபியை எதுவும் செய்துவிட்டால்??!! இப்படியான பயங்கள்.

“இங்க பார் ஷாலினி… உனக்கு நாங்க இருக்கோம்.. எங்களுக்கு நீ நல்லாருக்கணும்.. நீ பண்ணது இன்னும் எங்கனால ஜீரணிக்க முடியலதான். ஆனா.. உன்னை விடவும் முடியாது. அதே நேரம் அவனுங்கள சும்மா விடவும் முடியாது.

விஷயம் இப்படின்னு தெரியவும், பெரிய மனுஷன் அவன் என்ன செஞ்சிருக்கணும், எங்களை கூப்பிட்டு பேசி, உன்னை அனுப்பிருக்கணும், அதைவிட்டு உன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு, வயித்துல இருக்க கருவ கலைச்சு, ஊருக்கு அனுப்பிருக்கான்.. சும்மா விட முடியுமா?? அந்த கோபி அவன் என்ன செஞ்சான்?? இப்போ பொண்டாட்டி புள்ளைன்னு குடும்பமா தானே இருக்கான்.. அவனுக்கு எது குறைஞ்சது.. எதுவுமே இல்லைதானே….”

“அதுக்காக.. நீ இப்படி ஆள் விட்டு லாரி ஏத்தி… ஏன் ண்ணா… வேணாம்.. நானும்தானே இதுக்கு பொறுப்பு…”

“இந்த விஷயம் ஆயுசுக்கும் உன் மனசுல கிடந்தது உறுத்தும் பாரு.. அதான் உனக்கு தண்டனை. புதுசா நாங்க ஒன்னும் உனக்கு சொல்ல வேண்டியது இல்லை..” என்றவன்

“ம்மா ரெண்டு பெரும் சாப்பிட்டு தூங்குங்க…” என்று சென்றுவிட்டான்.

வாழ்வை பற்றிய கண்ணோட்டங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். இளம்பரிதி ஒருவிதம் எனில்… இந்த தியாகு ஒருவிதம்..

கோபி விதைத்த வினை.. எங்கோ விளைந்து, வானதி இளம்பரிதி ஆகியோரின் திருமணத்தில் முடிய, முடிந்ததாய் நினைத்த எதுவும் முடியவே இல்லை என்று தெரியும் போது யார் தான் என்ன செய்திட முடியும்.??!!

“இளா… ரெண்டு பெரும் கோவிலுக்கு போயிட்டு வந்திடுங்க.. மதியம் சாப்பிட்டு அப்படியே திண்டுக்கல் கிளம்ப சரியா இருக்கும்…” என்று பிருந்தா பேசிக்கொண்டு இருக்க,

கதிரோ “மாப்ள…” என்றழைக்க, ராதாவோ மரியாதையாய் பார்க்க, இலம்பரிதிக்கு அங்கே பொருந்திப் போகவே முடியவில்லை.

“மாமா… எப்பவும் போலவே இருங்க…” என,

“அவர் அப்படித்தான்.. நீ கண்டுக்காத…” என்று அவனின் கையை தட்டுத் தட்டி, “சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க…” என்று பிருந்தா சொல்ல,

“க்கா…” என்றான் ஒருவித அழுத்த பார்வையில்.

இத்தனைக்கும் அவனருகே இருக்கும் வானதி பார்வையைக் கூட திருப்பவில்லை யார் பக்கமும். தட்டில் இருப்பதை உண்பது மட்டுமே தன் வேலை என்று அமர்ந்திருக்க, இளம்பரிதியின் இந்த குரலில் தான் நிமிர்ந்துப் பார்த்தாள்.

இளாவின் பார்வை சொன்ன அர்த்தம் பிருந்தாவிற்கு புரிந்தது போல “வானதி.. கல்யாணம் ஆகி முதல் தடவ கோவில் போறீங்க, பட்டுச் சேலைதான் கட்டனும்.. வந்து கூட சுடிதார் போட்டுக்கோ..” என்று பேச்சினை அவள் பக்கம் திருப்ப,

“ம்ம் சரி..” என்றவள் மீண்டும் உண்ணத் தொடங்க, இளம்பரிதி இப்போது பிருந்தாவை பகிரங்கமாகவே முறைக்க,

‘என்னை என்னடா பண்ணச் சொல்ற…’ என்றுதான் பார்த்தாள்.

அடுத்து அப்படியே கதிர் பக்கம் இளாவின் பார்வை திரும்ப, அவனுக்கு என்ன புரிந்ததோ “பிருந்தா நீயே பாரு… நான் வந்திடுறேன்.. கொஞ்சம் கணக்கெல்லாம் செட்டில் பண்ணனும்…” என்று நகர்ந்துவிட்டான்.

அண்ணன் எழுந்து செல்லவுமே, அடுத்த நொடி வானதியும் உண்டு முடித்த பாவனையில் எழுந்து சென்றுவிட, ராதாவும் கூட வீட்டில் இருக்கும் ஒரு சில உறவுகளை கவனிக்கவென்று சென்றுவிட,

“க்கா வீட்ல பேசினியா…?” என்றான் இளா மெல்லிய குரலில்.

இக்கேள்வி வந்ததுமே பிருந்தாவிற்கு முகமே மாறிப்போனது. சட்டென்று கண்கள் கலங்கிவிட, இளம்பரிதியின் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்தவள் “அம்மா ஒரே அழுக டா.. இன்னும் கான்சியஸ் வரல.. நைட்குள்ள கான்சியஸ் வந்துட்டா நல்லதுன்னு சொல்லிருக்காங்க.. என்னால இப்போ போய் கூட அங்க நிக்க முடியல பாரேன்…”

“ம்ம்ம்… நாங்க கிளம்புறப்போ நீங்க எல்லாரும் கிளம்பி வாங்க.. நீயும் மாமாவும் போய் பார்த்துட்டு வாங்க…” என்று இளா சொல்ல,

“ம்ம்ஹும்.. அப்பா வேணாம் சொல்லிட்டார்.. இப்போதைக்கு யாரும் வரவேணாம்னு..” என, வெற்றிவேலன் பற்றிய பேச்சு வரவும் இளம்பரிதியின் முகமும் மாறிப்போனது.

ஏனோ அருணுக்கு விபத்து என்றதும், கோபி மீதும் வெற்றிவேலன் மீதும் தான் அப்படியொரு கோபம் வந்தது. இவர்கள் செய்த பாவம், ஒரு நல்லவனை வீழ்த்திவிட்டது என்று.

இப்போதும் அதையே தான் சொன்னான் “உங்கப்பா பணம் சேர்த்தது, புகழ்,  கௌரவம் சேர்த்தது எல்லாம் போதும். கொஞ்சம் புண்ணியம் சேர்க்கச் சொல்லு.. இனியாவது ஏதாவது நல்லது நடக்கட்டும்.. அவன் பொழைச்சு வரணும்… இல்லைன்னா நானே சும்மா விடமாட்டேன்..” என்றவனுக்கு அப்படியொரு கோபம்.

தனி ஒருவரின் சுயநலம், மற்றவர் வாழ்வில் எப்படியெல்லாம் ஆட்டம் காட்டுகிறது..

“இளா ப்ளீஸ்டா இதெல்லாம் இங்க யாருக்கும் தெரியாது.. நீ எதுவும் பேசிக்காத…” என்றவள், “நீங்க கிளம்புங்க.. நல்ல நேரம் முடியப் போகுது…” என்று சட்டென்று இயல்பு நிலைக்கு திரும்பி பேச, மெதுவாய் திரும்பிப் பார்த்தான் இளம்பரிதி.

வானதி தான் ஒரு இளம் நீல நிற மென்பட்டு கட்டி, அவளின் அலைபேசியில் எதையோ பார்த்தபடி நடந்துவந்துகொண்டு இருந்தாள்.

அவள் அலைபேசி பிடித்திருப்பதிலேயே அப்படியொரு அலட்சியம் கலந்த பாவனை தெரிய, அதை அப்படியும் சொல்லலாம், இல்லை ‘ஸ்டைல்…’ என்றும்  சொல்லலாம்.

‘ரொம்ப ஸ்டைல்காரி போல..’ என்று இளா இப்படித்தான் நினைத்தான்.

Advertisement