Advertisement

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 11

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை…”

தூரத்தில் எங்கோ இந்த பாடல் வரிகள் கேட்க, இளம்பரிதிக்கு இவ்வரிகள் செவியில் விழுந்த நொடி மனதில் தோன்றியது ஒன்றே ஒன்றுதான் ‘எத்தனை நிதர்சனம் இது…’ என்று

பின்னே நடந்தவைகள் அனைத்தும் யாரும் நினைத்திராதவை அல்லவா…!

தன் புறங்கையை நெற்றி மீது வைத்து கொட்ட கொட்ட முழித்து படுத்திருந்தான். அவனுக்கு அருகே வானதி.

இத்தனை நாள் இல்லாது இன்றுதான் ஏதோ அயர்ந்து உறங்குவது போல், நன்கு உறக்கத்தில் இருக்க, இளம்பரிதிக்கு சுத்தம், உறக்கம் என்பது பெயருக்குக் கூட வருவதாய் காணோம்.

அக்கட்டிலில் அமர்ந்ததுமே அது அரையடி உள்ளே போக, ‘இதுல உக்காரவே முடியல.. எங்க தூங்க??’ என்பதாய் இருந்தது அவனின் நினைப்பு.

வெறும் தரையில் ஒரு தலையணை போட்டு படுத்துறங்குபவனுக்கு, ஃபோம் பெட்டில் எப்படி உறக்கம் வரும்.. சும்மாவே வராது.. அதுவும் இனி??! 

இது ஒன்றிலேயே அவனுக்கு இவ்வாழ்வு எப்படி இருக்கும் என்பது புரிந்துபோனது. எழுந்து கீழே படுத்துவிடலாம் என்று நினைத்தாலும், இதில் இருந்து எழுந்து அவன் கீழே படுக்கும் முன்னம் அவள் விழித்து என்னவென்று கேட்டால்? என்ன சொல்வான்?

ஆடாது அசையாது படுத்திருந்தான். சிறு பிள்ளைகள் பேய் படம் பார்த்துவிட்டு, புரண்டு படுத்தால் கூட பேய் வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஒரே நிலையில் படுத்திருப்பது போல்.

திருமணம் கூட ஒருவகையில் பேய் பிடிப்பது போல்தானோ??!! பேய் வந்து பிடிப்பது போய், அந்த பேயையே பிடித்துவிடுவது தான் அதிசயம்..

இப்படியெல்லாம் அவனுக்கு எண்ணம் போக, ‘டேய் இளா…!!!’ என்று பல்லைக் கடித்துக்கொண்டான்.    

பின்னே.. திருமணத்திற்கு விருந்தினனாய் சென்றவன். மாப்பிள்ளை ஆகினால்?!

இன்னும் அவனுக்கு நடந்தவைகளை ஜீரணிக்க முடியவில்லை.

வானதி மீது எதோ ஒருவகையில் ஒரு சலனம் இருந்தது நிஜம். ஏதேனும் ஒரு விதத்தில் அவளின் எண்ணங்கள் அவனை இம்சித்தது நிஜம். ஆனால் அவன் திருமணம் என்பதனை பற்றியெல்லாம் அவளோடு சிந்திக்கவே இல்லை. சிறு பிசகு ஏற்பட்ட நொடி, வேறு பெண்ணை அல்லவா பார்க்கச் சொன்னான்.

அது நிஜமோ நிஜம்.!

அந்த நிஜம் இன்று பொய்யாகிட, இதோ திரு. வானதி ஆகிவிட்டானே..!!

“இளா… ப்ளீஸ்டா… சரின்னு சொல்லிடு இளா…” என்று கதிர்வேலன் பட்டென்று அவனின் காலில் விழ,

“மாமா…!!!” என்று அவன் அதரி பதறி விலகப் பார்க்க,

“இளா உன்னையும் என்னோட பிறந்தவன்னு தான் நினைக்கிறேன்டா.. தயவு செஞ்சு சரின்னு சொல்லிடு இளா…” என்று பிருந்தா அவனின் கை பற்றி கேட்க, மனது வேகமாய் கலங்கிப் போனது இளம்பரிதிக்கு.

நான்கு சுவருக்குள் நடந்த இவ்விசயம் வேறாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உள்ளே அவனோடு இளாவின் பெற்றோர்களும் இருக்க,  இவர்கள் இருவரும் செய்தது கண்டு, இளா முடிவெடுக்கும் முன்னர் விஜயன் சொல்லிவிட்டார் “பிருந்தா வானதிய கூட்டிட்டு வந்து மணவரையில உக்காரச் சொல்லு…” என்று.

இந்த வார்த்தைகள் வெளி வந்த பின்னரே தான் கதிர்வேலன் முகத்தில் ஒரு திடம் வர “ரொம்ப ரொம்ப.. ரொம்ப தேங்க்ஸ் மாமா…” என்றவனுக்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது.

மோகனாவும் “நீங்க போய் ஆகவேண்டிய வேலையை பாருங்க..” என, இளம்பரிதி இன்னமும் திகைத்துத் தான் நின்றிருந்தான்.

‘என்னடா நடக்குது இங்க…’ என்பதுதான் அவனின் உள் குரல்.

ஒருபக்கம் நண்பனுக்கு ஏற்பட்ட விபத்து. மனது அருணைக் காண அடித்துக்கொண்டது. மற்றவர்கள் யார் எப்படி இருந்தாலும், அருணும் அவனும் உற்ற நண்பர்கள் தானே.

‘அருண்….’ என்று எண்ணும்போதே, மனதோடு சேர்த்து கண்களும் கலங்க, பிருந்தாவிற்கும் இப்போது அதே நிலைதான்.

இருந்தும் அவள் இங்கிருக்க வேண்டிய சூழல். வானதிக்கும் வேறு யார் இருக்கிறார்கள். இன்னமும் சங்கதி ராதாவிற்குத் தெரியாது. வானதிக்கும் கூட.

தெரிந்தால் என்னாகுமோ யாரும் நினைக்கக் கூட முடியவில்லை…!!

‘வானதி…’ அவளை நினைக்க நினைக்க பிருந்தாவிற்கு மேலும் கலக்கமாய் இருக்க “ஏங்க… நீங்க போய் அத்தைக்கிட்ட மெதுவா விஷயம் சொல்லுங்க, அப்படியே வானதி ரெடியா பாருங்க.. நான் வந்திடுறேன்… அப்படியே டெக்கரேட்டார்கிட்ட சொல்லி முன்னாடி பேரு மாத்த சொல்லிடுங்க…” என்று கண்களை துடைத்து, நெஞ்சை திடம் கொள்ள செய்து கதிரை அனுப்பிவைத்தவள்,

“ம்மா… ப்பா… இன்னும் அரைமணி நேரமிருக்கு முகூர்த்தம்கு.. நீங்க நெருங்கின சொந்தம் யாரையும் வர வைக்க முடியுமா பாருங்க…” என்று அவர்களையும் அறை விட்டு வெளியே அனுப்பியவள்,

“இளா…!!” என்று மெதுவாய் அவன் கரம் பிடித்தாள்.

அதுவரை மௌனமாய் கட்டுண்டு நின்றவன், அவளின் தொடுகையில் “ஹா…!! க்கா…” என்று திடுக்கிட்டு பார்த்து “அருண்….” என,

“அ.. அவன் நல்லாகிடுவான் டா… அவன் நல்லாகிடனும்.. நீ.. நீ இப்போ அதெல்லாம் நினைக்காத. ப்ளீஸ்… எனக்குத் தெரியும் உன் மனசுல என்ன இருக்குன்னு..” என்றவள், சுற்றி ஒருமுறை பார்வையை ஓடவிட்டு,  பின் மெதுவாய்

“நீ பாவம் செஞ்சிட்டதா நினைக்கிற.. அதுக்கான ஒரு பிராயசித்தமா இதை நினைக்கக் கூடாதா இளா…” என்று கேட்க, அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“க்கா…” என்று அவன் அதிர்ந்து விளிக்க,

“என்னடா எனக்கு எதுவும் தெரியாது நினைச்சியா?!! எல்லாம் தெரியும்..”

“க்கா இப்போ அதெல்லாம் பேசுற நேரமில்ல..”

“இப்போவிட்டா உன்னை பிடிக்க முடியாதே இளா..” என்றவள் அவனின் பார்வை கண்டு,

“என்னடா சுயநலமா பேசுறாளேன்னு பாக்குறியா..? ஆமா இது ஒருவகையல சுயநலனம் தான். பொம்பளைங்க சுயநலம்.. நம்ம குடும்பம் நல்லாருக்கணும்னு நினைக்கிற அந்த புத்தி. பொறந்த வீட்டு கௌரவம் கெடக் கூடாது.. புருசனோட கூட பிறந்தவ வாழ்க்கையும் நல்லாருக்கணும்னு தான் அருணுக்கு எப்படியாவது வானதிய முடிச்சிடனும்னு இவ்வளோ தூரம் கொண்டு வந்தேன்..

ஆனா பாரு விதி.. அருணையே படுக்க வச்சிடுச்சு.. நீ அப்பா மேல இருக்க கோபத்துல எங்க எல்லாரையும் விட்டும் தூர போன.. ஆனா பாரு இப்போ உன்னை எங்களுக்கு நிஜமாவே சொந்தமா மாத்திடுச்சு..” என்று பேச,

“மாத்திடுச்சு இல்ல.. நீங்க மாற வச்சிட்டீங்க…” என்றான் கசப்பான குரலில்.

“அதான் சொல்றேன்டா… வானதிய கொஞ்சம் நினைச்சுப் பாரேன்.. ஏற்கனவே கல்யாணம் பண்ணிக் கொடுத்து பிரச்சனையாகி, இப்போ மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா, இனி அவ மனசு தான் என்னாகும்.. அவ வாழ்க்கைதான் என்னாகும்.. கொஞ்சம் நினைச்சு பாருடா..

ஒரு பொண்ணுக்கு பாவம் பண்ணிட்டோம்னு நீ நினைக்கிற.. ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து அதை சரி பண்ணிடுன்னு நான் சொல்றேன்…” என்று பிருந்தா வசனம் பேச,

‘எது வானதிய கல்யாணம் பண்றது ஒரு பாவத்துக்கான பிராயச்சித்தமா?? கடவுளே…!! அதுக்கு கொடுத்துத் தானே வச்சிருக்கணும்…’ என்று உள்ளம் குமுறியது.  

அவன் அமைதியாய் இருப்பது கண்டு “இளா நீ மனசார சரின்னு சொன்னாதான் எனக்கு நிம்மதியா இருக்கும்…” என்று பிருந்தா கெஞ்சாத குறையாய் பேச,

“முதல்ல வானதிக்கு இதுல சரியான்னு கேளுக்கா.. அருண் நல்லாகி வந்து கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்?? ரெண்டு பேர் மனசுலயும் எதுவும் அபிப்ராயம் இருந்திருந்தா என்ன செய்வ நீ..?” என்று இளா கேட்ட கேள்விக்கு பிருந்தாவால் பதில் சொல்லிட முடியவில்லை.

அவள் திகைத்து நிற்க, “பதில் சொல்லுக்கா… என்னை சம்மதிக்க வச்சிட்ட சரி, ஆனா இந்த கேள்விக்கு எல்லாம் என்ன பதில்…?”

“இளா…” என்று அவள் திணரும் போதே, அறையின் கதவு தட்டப்பட “இங்க பாரு இளா… எதையும் யோசிக்கிற நிலைமைல இப்போ நம்ம யாருமே இல்லை.. இதுதான் நடக்கனும்னு இருக்கு.. அதனால நடக்குது… இந்த டிரஸ் போட்டு சீக்கிரம் ரெடியாகிடு.. மத்தது எல்லாம் நானும் மாமாவும் பார்த்துக்கிறோம்…” என்று சொல்லிவிட்டு பிருந்தா கதவினைத் திறக்க, ராதா தான் நின்றிருந்தார்.

“அத்தை…!!”

அவரின் பார்வை பிருந்தாவை தாண்டி, இளாவை தான் பார்த்தது. அந்த பார்வையில் அப்படியொரு பரிதவிப்பு.

எந்த ஒரு அம்மாவின் கண்களிலும் அப்படியான பார்வை, அதுவும் தங்களின் பிள்ளைகளின் வாழ்வை குறித்த பயத்தோடு கூடிய பார்வை, கண்டிடவே கூடாது.

இளா மனதளவில் நொறுங்கித்தான் போனான்…!

‘சரின்னு சொல்லித் தொலையேன்டா…’ என்று அவனின் நெஞ்சமே அவனை கடிய, அதற்குள் ராதா உள்ளே வந்து “தம்பி…” என்று அவனின் கைகளை பிடித்திருந்தார்.

அவ்வளோதான்..!!

“ஏற்பாடு செய்ங்க…” என்று சொல்லிவிட்டான்.

‘நிஜம்மா…!!’ என்று பெண்கள் இருவரும் பார்க்க “க்கா.. போ.. போய் நடக்கவேண்டியதை பாருங்க… நேரம் போயிட்டு இருக்கு..” என்றுவிட்டான்.

இளம்பரிதியின் வாயில் இருந்து இச்சொற்கள் வெளிவந்த பின்னர்தான் பிருந்தாவிற்கு ‘அப்பாடி…’ என்ற உணர்வு.

அவனின் பிடிவாதம் தான் அவள் அறிந்த ஒன்றுதானே..

யார் சொன்னாலும் முடியாது என்றுவிட்டால் பின்னே என்ன செய்வது?!

அடுத்தடுத்த வேலைகள் துரிதமாய் நடக்க, வானதியின் கழுத்தில் தாலியும் கட்டிவிட்டான் இளம்பரிதி.

அருணுக்கு கோர விபத்து என்று அறியவும் வானதிக்கு திக்கென்று ஆனதுதான்.

‘திருமணம்…’ பற்றிய சிந்தனை சட்டென்று வரவில்லை.

‘அச்சோ…’ என்ற உணர்வு மட்டுமே..

அடுத்தது என்ன என்று சிந்திப்பதற்குள் கதிர்வேலன் “வானதி… இளா தான் மாப்பிள்ளை…” என்று சொல்லவும், முன்னதை விட இச்செய்திக்கு வெகுவாய் மேலும் அதிர்ந்து தான் போனாள்.

‘என்னது??!! இளாவா… இளம்பரிதியா.. மாப்பிள்ளையா…??!!! அவன் சரி என்றானா??’

இப்படி நிறைய நிறைய கேள்விகள் படையெடுக்க அவளின் அதிர்ந்த பாவனை கண்டு “சாரிடா.. எங்களுக்கு வேற வழித் தெரியலை…” என்று அவளிடமும் கதிர் கண் கலங்க,

“ண்ணா…” என்று அவன் கரம் பிடித்தவள், பிடித்தபடியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து போனாள்.

ஏதோ ஒரு தொய்வு… உடலில் வந்து ஒட்டிவிட்டது. முயன்று அவனின் எண்ணங்களை விரட்டிவிட்டு, ‘அது முத்த வகையில் எல்லாம் சேராது…’ என்று தனக்குத் தானே சொல்லி சொல்லி, திருமண மேடை வரைக்கும் வந்தவளுக்கு, இப்போது மாப்பிள்ளையே அவன்தான் என்றதும் எப்படித்தான் இருக்கும்.

ஒரு வித அயர்வு…!

ஒரு வித அமைதி…!

ஒரு வித நிம்மதி…!

ஒரு வித ஆறுதல்…! என்றும் கூட சொல்லலாம்..

எல்லாம் சேர்த்து அவளை அப்படியே அமர்த்திவிட, அவளால் பேசக்கூட முடியவில்லை.

“வானதி…” என்று கதிர் அழைக்க, அவளின் மௌனங்கள் மட்டுமே பதிலாய் இருந்தது.

அருணுக்கு இப்படியானது எண்ணி வருத்தம் இருந்ததுதான். ஆனால் அதை தாண்டி வேறெந்த உணர்வும் அவளுக்குத் தோன்றவில்லை. அதுவே அவளுக்கு பெருத்த அதிர்ச்சி.

‘இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு கணவனாய் வரவேண்டியவன் விபத்துக்குள்ளாகி இருக்க, அதனை முன்னிட்டு, தன் வாழ்வை முன்னிட்டு பெருத்த கேள்வி எழவில்லை. மாறாக இளம்பரிதி தான் மாப்பிள்ளை என்றதும்.. அதுதான் அவளுக்கு பெரும் மாற்றம் கொடுத்தது…’

சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தாள்.

என்ன சொல்லப் போகிறாளோ என்று கதிர்வேலன் பார்க்க, பிருந்தா ராதா என எல்லாம் கூட வந்துவிட்டனர்.

‘என்ன சொன்னா??’ என்று பிருந்தா பார்வையால் கணவனைக் கேட்க, அவனோ இன்னுமில்லை என்று தலையசைக்க,

ராதா “வானதி…” என்றழைக்க, அம்மாவின் குரலில் உடைந்துதான் போனாள் வானதி.

‘தனக்கு மட்டும் ஏன் இப்படி??!!!’ இக்கேள்வி அவளை வெகுவாய் ஆட்டுவிக்க,

“நான் கல்யாணம் கேட்டேனா?? ஏன்ணா?? ஏன்?? ஏன்மா..?? எனக்கு மட்டும் ஏன் மா இப்படி…” என்றவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

இத்தனை அழுதிருக்காதவளின் கண்களில் கண்ணீர்…!!

அருணை எண்ணி அழுகிறாள் என்று இவர்கள் நினைக்க, அவள் தனக்கு நேரும் சூழல்களை எண்ணி அழுகிறாள் என்று அவள் சொன்னால் அன்றி எப்படித் தெரியும்.

“வானதி… ப்ளீஸ் அழாத… நல்லது நடக்கும்… நடக்கணும்… சில நேரம் நம்ம எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும்…” என்று பிருந்தா அவளுக்கு எடுத்துச் சொல்கிறேன் என்று பேச,

“அண்ணி…!!!” என்றவளுக்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை.

மூவரும் மாறி மாறி அவளுக்கு புத்தி சொல்வதாய் பேச, ‘எப்படியும் இதுதான் நடக்கும்…’ என்பது உறுதி என்று புரியவும்,

“அவங்கள கம்ப்பல் பண்ணீங்களா??” என்றாள்.

முதலில் இவள் என்ன கேட்கிறாள் என்பது புரியவில்லை. பின் புரியவும் கதிர் வேகமாய் “ச்சே ச்சே இல்லவே இல்லை…” என, வானதி நம்பாத பார்வை பார்க்க,

“நிஜமா இல்லை.. கலந்து பேசித்தான் முடிவு பண்ணோம்…” என்று பிருந்தா சொல்ல,

“யார் முடிவு பண்ணாங்க??” என்றாள் பதிலுக்கு வானதி.

“எ… எல்லாரும்…”

“அவங்களுமா..?!!”

“அ.. அது வானதி…” என்று பிருந்தா திணற, அதற்குள் “என்ன இங்க நின்னு எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.. அங்க மேடையில அய்யர் மட்டும் வந்து உக்காந்திருக்கார்.. மாப்பிளை வீட்ல யாரையும் காணோம்… என்னதான் நடக்குது…” என்று கதிர்வேலின் சித்தப்பா வந்து கேட்க,

“ஹா..!! சித்தப்பா இதோ வந்திடுறோம்..” என்றவன், பிருந்தாவிடம் ஜாடை காட்டிவிட்டு, அவரை அழைத்துக்கொண்டு தனியே போய் நடந்தவைகளை சொல்ல, அப்படியே மண்டபம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாய் ஹோம புகையோடு பரவ,

இளம்பரிதியும் வானதியின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் செய்துகொண்டான்.

இதுதான் என்று யோசிக்கும் முன்னமே, அடுத்தடுத்த சாங்கியங்கள் எல்லாம் நடந்தேற, பெண் வீட்டில் தான் அன்றைய இரவு என்பது அவர்கள் பழக்கமாய் இருக்க, இதோ இங்கே வானதியின் வீட்டினில் தான் இளா இருந்தான்.

பல முறைகள் வந்து சென்ற இடம்தான். அப்போது இருந்த உணர்வு கூட இப்போதில்லை. இப்போது முற்றிலும் அந்நியமாய் தோன்ற, அவனால் கண்களை கூட மூட முடியவில்லை.

‘ம்ம்ஹூம்… இது சரிபடாது… கொஞ்சமாவது தூங்கினாத்தான் மனசும் தெளிவாகும்…’ என்று நினைத்தவன், மெதுவாய் எழ முயற்சி செய்து, எழுந்தும் விட்டான்,

ஆனால் கட்டிலில் இருந்து எழுந்து நிற்க முடியவில்லை.. வானதியின் கரம் அவனின் கரத்தினை இறுகப் பற்றியிருந்தது.          

Advertisement