Advertisement

                    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 10

சுற்றி இருக்கும் ஆட்கள் பிடிக்கவில்லை எனில், அவர்களிடம் இருந்து விலகிப் போகலாம். சூழல் பிடிக்கவில்லை எனில், வேறெங்கிலும் செல்லலாம். ஆனால், நமக்குள்ளே தோன்றும் எண்ணங்களே நமக்கு பிடிக்கவில்லை எனில்?

என்ன செய்திட முடியும்??!! 

எங்கு சென்று ஓடி ஒழிய முடியும்??!!

வானதி ‘ஜிங்கிள்ஸ்…’லும், இளம்பரிதி ‘மருந்துக்கள்’ ன் பின்னேயும் சென்று தங்களை புகுத்திக்கொண்டனர்..

நேரம் காலம் பாராது, வானதி ஜிங்கிள்ஸில் இருக்க, இளம்பரிதி மருத்துவமனை விட்டு வரவே மனதில்லை அவனுக்கு.

‘ச்சே நானா இப்படி…??!!’ என்ற நினைப்பு இருவருக்கும் இருக்க, சொல்லாமல் ஒரு குற்றவுணர்வு வேறு..

‘அவள் என்னை என்ன நினைத்திருப்பாள்…?’

‘அவன் என்னை என்ன நினைத்திருப்பான்…?’

இப்படியே மனதிற்குள் ஓட, இருவரும் வீட்டினரோடு பேசிடக் கூட தயங்கினர்.

“வானதி இன்னும் மூணு நாள்ல நிச்சயம்.. பார்லர் போறதுன்னா போ.. இல்ல வீட்ல இருக்கிறதுன்னா இரு.. இப்படியே அர்த்த ராத்திரி வர.. என்ன நினைச்சிட்டு இருக்க…?” என்று ராதா கேட்க,

பிருந்தாவோ “நாளைக்கு அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணிருக்கேன் வானதி… காலைல டிபன் முடிச்சிட்டு போயிட்டு வந்திடலாம்…” என,

கதிர்வேலனோ பெண்களின் முகத்தினை மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தான். என்னவோ வானதி இந்த சில நாட்களாய் சரியில்லை என்பது அவனுக்கு புரிந்தே இருக்க, ஒருவேளை இந்த திருமணத்தின் பொருட்டு என்றாக கூட இருக்கலாம் என்றெண்ணி ‘எல்லாம் கல்யாணம் நடந்துட்டா சரியா போகும்…’ என்று அவனுக்கு அவனே சொல்லி அமைதியாகிப் போனான்.

மற்ற அனைத்தையும் விட, இப்போது தங்கைக்கு ஒரு வாழ்வு அமைத்துக் கொடுக்கவேண்டும்.. அவ்வளவே..!!

அதிலும் அருண் என்கையில் ஒரு நம்பிக்கையும் நிம்மதியும் சேர்ந்தே இருந்தது.

இவள் என்ன பதில் சொல்வாள் என்று பார்க்க, வானதியோ “நாளைக்கா…” என்று யோசிப்பது போல் ஒரு பாவனை காட்டி, “ம்ம் சரி…” என்றுவிட்டு போக,

“இவ என்ன இப்படி இருக்கா??!!” என்றார் ராதா..

சொல்லிக்கொண்டே அப்படியே சோர்ந்து அமர்ந்துவிட, “அத்தை.. அவ மனசுல என்னென்ன ஓடுதோ.. விடுங்க.. எல்லாம் கல்யாணம் முடிஞ்சா சரியாகிடும்…” என்று பிருந்தா ஆறுதல் சொல்ல,

“சரி மட்டும் தான் ஆகணும்.. இதுக்குமேல எதையும் தாங்குற சக்தியெல்லாம் இல்லை எங்கிட்ட…” என்று ராதா பேச, கதிர்வேல் “ம்மா.. கண்டிப்பா எல்லாம் நல்லதே நடக்கும்…” என, வானதியோ ஒரு பெருமூச்சு விட்டு கட்டிலில் சாய்ந்தாள்.

அங்கே மருத்துவமனையிலோ “ண்ணா… டாக்டர் நேத்தே உன்னை டிஸ்சார்ஜ் ஆக சொன்னார்.. நீ கிளம்புற ஐடியாலயே இல்ல போல…” என்ற தெய்வாவிடம், பேசாதே என்பதொரு பார்வை இளா பதிக்க,

“லீவ் சொல்லிட்டு வந்திருக்கேன்.. நீ டிஸ்சார்ஜ் ஆகவும், நானும் ஒருநாளாவது இருந்துட்டு கிளம்பனும்…” என,

“உன்னை யார் இங்க வர சொன்னா??” என்றான் பட்டென்று.

‘என்னது…?!?!!!’ என்று அதிர்ந்து பார்த்த தெய்வா “ஏன் ணா இப்படி பேசுற நீ..??” என்று இறங்கி வர,

“நிஜமாதான் கேக்குறேன்… உன்னை யார் வர சொன்னா.. அப்பா அம்மா சொன்னாங்களா? இல்லை நான் சொன்னேனா?? ஏன் வந்த நீ..?” என்றவனின் பார்வை கண்டு தெய்வா பயந்தே போனாள்.

“ண்ணா…!!!”

“அப்படியே ஊருக்கு வந்துட்டன்னாலும் அப்பா இருக்கார்தானே.. அவருக்கு கூப்பிட்டு வந்திருக்கணும். அருணுக்கு ஏன் கூப்பிட்ட…”

“அப்பா அம்மாவ அந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ண…” என்று சொல்லி முடிக்கவில்லை,

“அப்பா அம்மாவ விட வேற யாருக்கும் நமக்கு ரொம்ப நெருக்கம் இல்லை.. புரிஞ்சு நடந்துக்க பாரு தெய்வா…” என்றவன் கண்கள் மூடி மீண்டும் படுத்துக்கொள்ள,

தெய்வாவிற்கு ‘இந்த அண்ணனை புரிஞ்சுக்கவே முடியல…’ என்றுதான் நினைக்கத் தோன்றியது.

மருத்துவர் நேற்றே சொல்லிவிட்டார், வீடு செல்லலாம் என்று. ஆனால் இளா தான் போகாது இங்கே இருக்கிறான்.

நர்ஸ் வந்து காலையில் சொன்னதற்குக் கூட “இல்ல சிஸ்டர்.. முதுகுல பெய்ன் இருக்கு.. டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணனும்…” என்று சொல்ல,

“சார், படுத்துட்டே இருந்தா அப்படிதான் இருக்கும்.. அடியெல்லாம் முதுகுல இல்ல… உடம்பு வலிக்கு அப்படி இருக்கும்…” என்று நர்ஸ் சொல்ல,

“இல்ல நான் டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டே போறேன்…” என்று பிடிவாதமாய் சொன்னவனை நர்ஸ் வித்தியாசமாய் பார்த்துவிட்டு செல்லவும், தெய்வா கேள்வி கேட்க, அண்ணன்காரன் அவளையே வாய் மூட செய்து படுத்துவிட, சரியாய் விஜயனும் வந்து சேர்ந்தார்.

அப்பா வரவும் தைரியம் பெற்றவளாக “ப்பா… டிஸ்சார்ஜ் ஆக சொன்னாங்க…” என,

“அப்படியா… நல்லது… நல்ல நேரம் பார்த்து கிளம்பலாம்.. அருண் கார் கொண்டு வர்றேன் சொன்னான்…” என்று அவரும் சொல்ல,

“அதெல்லாம் வேணாம்…” என்றான் இளா பட்டென்று.

“ஏன்டா..??!!”

“நாளைக்கு போகலாம்…”

“ஏன்? உடம்புக்கு எதுவும் செய்யுதா இளா…” என்று விஜயன் நிஜமாகவே வருந்திக் கேட்க,

“ம்ம்ச் ப்பா.. அதெல்லாம் இல்லை.. நாளைக்கு போகலாம்.. இன்னிக்கு இங்க சீப் டாக்டர் விசிட் இருக்காம்.. அவர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு நாளைக்கு போலாம்.. நாளைக்கு புதன் நல்ல நாள்தான்…” என,

‘இவன் எப்போ நல்ல நாள் எல்லாம் பார்க்க ஆரம்பிச்சான்…’ என்று பார்த்தார் விஜயன்.

அப்பா தங்கை இருவரும் அமைதியாய் பார்க்க, இளம்பரிதி “கொண்டு வந்த இட்லி ஆறிடும்…” என, விஜயன் தான் கொண்டு வந்த காலை உணவு பையை மகளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட, தெய்வா அவனுக்கு இட்லி எடுத்து வைத்துக் கொண்டே

“ஒருதடவ என்கிட்ட வாங்கினா என்னவாம்..” என்று அங்கலாய்ப்புடனே தட்டை நீட்ட,

“இந்த கை நல்லாத்தானே இருக்கு…” என்றவனை என்ன செய்தால் தகும் என்பதுபோல் பார்த்து நின்றாள் தெய்வா.

இளம்பரிதி சொன்னதுபோல் மறுநாள் தான் வீட்டிற்கு சென்றான். மருத்துவர் கூட சற்று வித்தியாசமாய் தான் பார்த்தார். வீட்டிற்கு வந்ததும் அவன் செய்த முத்த வேலை

“ம்மா… சீக்கிரம் பொண்ணு பாரு…” என்றதுதான்.

மோகனா ஆச்சர்யமாய் பார்க்க “என்னம்மா.. எந்த பொண்ணுன்னாலும் சரி.. ஆனா ரொம்ப எல்லாம் மேல பார்க்காத… நீ முன்ன சொல்வியே.. பக்கத்து கிராமத்துல ஒரு பொண்ணு இருக்குன்னு.. அதை பாரு…” என்று முகத்தை சீரியசாய் வைத்து சொல்ல,

“ம்ம் அதுக்கு அந்த பொண்ணோட புருஷன் சரின்னு சொல்லணும்…” என்று மோகனா சொன்ன தினுசில், தெய்வா பக்கென்று சிரித்துவிட, அவளை முறைத்தவன்,

“சரி வேற பாரு…” என்று முடிவாய் சொல்லிவிட்டான்.

பின்னே வானதியின் நினைப்பை அவன் மறந்திட வேண்டும் எனில், அவனுக்கு வேறொருத்தியின் நினைவு தேவைப்படுவதாய் இருந்தது.

வேலையில் கவனம் செலுத்தினால் மனது சற்று மட்டுப்படும்.. இப்போதிருக்கும் நிலையில் கடையில் சென்றும் அமர முடியாது. தலையில் கையில் கட்டுப் போட்டு, அனைவர்க்கும் காட்சி பொருளாய் தான் இருந்திட வேண்டும்.  வருவோர் போவோர் எல்லாம் அவனை குசலம் வேறு விசாரிப்பர்.

சும்மாவே இளம்பரிதிக்கு அவனிடம் யாரேனும் பரிவாய் பேசினால் கடுப்பாய் இருக்கும். இதில் இப்போது இப்படியெனில்..??!

மோகனாவுக்கு மகன் இவ்வளவு இறங்கி வந்ததே பெரிதாய் இருக்க “சரி டா.. நீ எப்படி சொல்றியோ அப்படி பண்ணலாம்..” என்று தலையை ஆட்ட,

“அப்புறம் பொண்ணு பார்க்கிறோம்.. பார்த்துட்டோம்.. முடிச்சிட்டோம்னு யாருக்கும்… யாருக்கும் தெரிய கூடாது. அருண் உட்பட.. கல்யாண நாள் எல்லாம் குறிச்சிட்டு பத்திரிக்கை வைக்கிறப்போ சொன்னா போதும்.. கல்யாணம் நம்ம செலவு… என் வார்த்தை மீறி ஏதாவது நடந்தது.. அவ்வளோதான்…” என்று இப்போது இளா மிரட்டல் தொனியில் பேச,

‘இவன் என்னடா இப்படி பேசுறான்…’ என்று அம்மாவும் தங்கையும் பார்க்க,

“இதெல்லாம் சரின்னா கல்யாணம் பண்றேன்…” என்றவனின் முகத்தில் பெற்றவர் என்ன கண்டாரோ,

“சரிடா… நீ சொல்றது என்னவோ அது அப்படியே பண்ணலாம்..” என்றார் அமைதியாய்.

மோகனா உள் எழுந்து சென்றுவிட, அண்ணன் முகத்தினையே பார்த்தபடி இருந்த தெய்வா “சம்திங் ராங்…” என,

“என்ன?? என்ன ராங் கண்டுட்ட நீ..??” என்று இளம்பரிதி பேச,

“இல்ல என்னவோ நீ சரியில்ல.. உடம்பு மட்டும் சரியில்லைங்கற போல தெரியலை உன்னைப் பார்த்தா…” என்று சரியாய் கண்டுகொண்டாள்.

தங்கையின் பேச்சில் இளாவிற்கு சுருக்கென்று இருந்தாலும் “இங்க பார் தெய்வா.. உன் புத்திசாலித்தனத்த நீ படிப்புல காட்டு. என்கிட்டே வேணாம்.. நாளைக்கு ஊருக்கு போற வழிய பாரு…” என்று அவளுக்கும் ஒரு பதில் கொடுக்க,

“நீ என்ன சொன்னாலும் சரி.. நீ சரியில்லை…” என, கையில் கிடைத்த டிவி ரிமோட்டை இளா தெய்வா மீது வீசி ஏறிய, “ம்மா உன் பையன் சரியில்லை…” என்று சத்தமிட்டுக் கொண்டே உள்ளே ஓடிவிட்டாள்.

அதுதானே நிஜம்..!!

மூன்று நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் நகர, அருண், பிருந்தா, வெற்றிவேலன், சரோஜா என்று மாறி மாறி இளம்பரிதிக்கு அழைக்க, அவன் யாரினோடும் பேசிடவில்லை.

தெய்வா ஊருக்கு சென்றிருக்க, வீட்டினில் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டான் “நான் நிச்சயத்துக்கு போகலை.. இப்படி போக முடியாது.. போன் எடுத்தா ஏதாவது பேச்சு வரும்.. கேட்டா நான் தூங்குறேன் அப்படின்னு ஏதாவது சொல்லிடுங்க.. நீங்களும் பழனி போகவேண்டாம்…” என்று.

“இல்ல இளா… நீ போறதுபோல இருந்தா கூட சரி.. நீயும் போக முடியாத நிலை.. அப்போ நாங்க போகனும்தானே..” என்று விஜயன் சொல்லவும்,

“வேணாம் ப்பா…” என்றான் தீர்க்கமாய். 

“ஏன் டா..?”

“வேணாம்… கல்யாணத்துக்கு போயிக்கலாம்.. இப்போ அவங்க வீட்டளவுல தான் செய்றாங்க…”

“கூப்பிட்டு இருக்காங்க இளா…” என்று மோகனா சொல்ல,

“வர்றோம் வர்றோம் சொல்லிட்டு போகாதீங்க.. சொல்றதை சொல்லிட்டேன்..” என்று பேச்சினை முடித்துக்கொள்ள, ஒரு அளவிற்கு மேல் அவர்களால் மகனின் பேச்சினை மீற முடியவில்லை.

இப்படியாக மூன்று நாட்கள் நகர, இதோ அருண் – வானதி நிச்சயம் நடந்துகொண்டு இருந்தது.

வானதிக்கு ஒவ்வொரு நொடியும் இளம்பரிதியின் நியாபகம் தான்..

‘வருவானோ…’ என்றும்

‘வந்துவிடுவானோ…’ என்றும்,

‘வரவில்லை… அப்பாடி…’ என்றும்,

இப்படி அவளுள்ளே பலவேறு கோணங்களில் அவனின் எண்ண அலைகள் ஓட,

அருண், இளாவிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போக, இதனை கவனித கோபியோ “என்னடா??” என்று விசாரிக்க,

“இளா இன்னும் வரலை…” என,

“அவனுக்கே முடியலைதானே.. இது உன்னோட விசேசம்.. என்ஜாய் பண்ணு.. அதைவிட்டு…” என்று அண்ணனாய் கடிந்தான் கோபி.

இளம்பரிதி வரவில்லை என்பது கோபிக்கு ஒருவித சந்தோசமாய் இருந்தது. பின்னே அவனின் குற்றம் சாட்டும் பார்வையும் ‘நீ இவ்வளோ தானா…?’ என்கிற பேச்சினையும் எத்தனை நாளைக்குத்தான் அவன் தாங்குவது.

இன்று அவனின் உடன் பிறந்த தம்பியின் நிச்சயம். அண்ணனாய் அவன் முன் நிற்க வேண்டும். அதனை விட்டு அனைவரும் இளா இளா என்றால் அவனுக்கு எரிச்சலாய் இறாதா என்ன?

அவன் வரமாட்டன் என்பது சற்றே புரிந்து, எப்போதும் போல் வாய் சவடால் விட்டு நடமாட, வெற்றிவேலன் எதோ யோசனையாய் இருப்பது கண்டு

“ப்பா என்ன இது..?” என்று கேட்க,

“இல்லடா ஒண்ணும் இல்ல… எல்லாம் நல்லபடியா நடந்துட்டா சரி அவ்வளோதான்…”என்று அவரும் சொல்ல,

“அருண் கல்யாண வேலை எல்லாம் என்னோட பொறுப்பு.. நீக ரிலாக்ஸா இருங்க…” என்று கோபி சொல்லவும், பெரிய மகனை வியந்து தான் பார்த்தார் வெற்றிவேலன்.

எப்போதும் பொறுப்புகளை தனதாக்கிக் கொள்ள மாட்டான் கோபி.. சொல்வதை செய்வான் அவ்வளவே. தானாக எதிலும் தலை கொடுக்காதவன், இப்போது தேடி வந்து இப்படி சொல்ல,

“ம்ம்.. என்னவோ செய்.. ஆனா சரியா செய்…” என்றுவிட்டு வந்திருந்தவர்களோடு பேசச் செல்ல,

‘இப்படியே கொஞ்சம் கொஞ்சமா இளாவ ஒதுக்கிடனும்…’ என்று எண்ணிக்கொண்டான் கோபி.

யார் இருந்தாலும், இல்லை என்றாலும் நடக்கும் சங்கதிகள் நடந்தே தானே தீரும், அதன்படியே வானதி அருண் நிச்சயமும் நடந்தேற, நெருங்கிய உறவுகளும் நட்புக்களும் மட்டுமே அழைக்கப்பட்டிருக்க, வானதிக்கோ அந்த நிச்சய புடவையை கட்டுகையில், இதயம் வேகமாய் அடித்துக்கொண்டது.

அன்றைய நிகழ்வுகள் எல்லாம் மீண்டும் படையெடுக்க ‘நோ.. நோ வானதி.. நடந்தது எல்லாம் எதிர்பாராத ஒன்னு. அதுக்கேன் நீ இவ்வளோ இம்பர்டன்ஸ் கொடுக்கிற… லீவ் இட்.. திஸ் இஸ் யுவர் டே…. லைப்ல எவ்வளோ பார்த்துட்ட நீ.. இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளோ ரெஸ்ட்லெஸ் ஆகலாமா??’ என்று தனக்கு தானே அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தாள்.

இளம்பரிதி வரவில்லை என்பது உணர்ந்து சற்றே திடமாய் இருந்தது. அவன் வந்து, அவனை நேரில் கண்டு, பின் இன்னொருவனை மணம் புரிய சம்மதம் சொல்லி,  சபையில் வந்து நிற்பது எல்லாம் அவளால் மடியும் என்று தோன்றவே இல்லை..

‘ரிலாக்ஸ் வானதி.. ரிலாக்ஸ்…’ என்று உறுப்போட்டுக் கொண்டே இருந்தாள்..

சுற்றிலும் அனைவரும் சந்தோசமாய் இருக்க, அருண் கூட மகிழ்வாய் இருப்பதாய் தான் பட்டது.

மோதிரம் அணிவிக்கையில் கூட, அவளைப் பார்த்து புன்னகைப் பூத்தான். வானதிக்கு சட்டென்று அப்படி புன்னகை செய்ய முடியாது போக, ‘வானதி…’ என்று பின்னிருந்து தோளில் அழுத்தம் கொடுத்து பிடித்த பிருந்தாவின் அழைப்பில் தான், சுற்றம் பார்த்து, பின் லேசாய் முகத்தினை சிரித்த மாதிரி வைத்துக்கொண்டாள்.

ஒருவழியாய் குடும்பத்தினர் அனைவருக்கும் நிம்மதி சந்தோசம் எல்லாம். நிச்சயம் முடிந்து, திருமண நாள் பார்த்து, பத்திரிக்கை எழுத, இதோ இன்னும் சரியாய் ஒரே ஒரு மாதம் தான் இவர்களின் திருமணத்திற்கு..

Advertisement