Advertisement

“ஷ்..!! சத்தம் போடாதே…” என்று ஹஸ்கி வாய்சில் சொன்னவன், “கொஞ்ச நேரத்துல உனக்கு அப்படியா பறக்குற மாதிரி இருக்கும்.. செமையா இருக்கும்..” என்று கண்களை சொருகவிட்டு சொல்ல,

பயமாகிப் போனது வானதிக்கு.

இவன் சீரழிந்தது போதாது என்று, என்னையும் இதற்கு பழக்கம் செய்யப் பார்க்கிறானா??!!

நானா..??!!

நோ….

அவன் சொன்ன அந்த ‘கொஞ்ச நேரம்…’ அது வருவதற்குள், இவனிடம் இருந்து வெளி செல்ல வேண்டும் என்று துரிதமாய் நினைத்தவள், வேகமாய் பார்வையை ஓட்ட, கட்டிலுக்கு சற்றே தள்ளி அவன் நிற்க, வேகமாய் அவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டாள்.

ஏற்கனவே அவன் போதை மருந்து எடுத்திருப்பான் போல, சட்டென்று இவள் தள்ளவும், சுதாரிப்பு இல்லாது அவன் விழ, கட்டிலின் கோடியில் வேறு இடித்து விழ “ஏய்…” என்று அவன் குழறியபடி எழும் முன்னே, வானதி கதவை திறந்து வெளி வந்துவிட்டாள்.

கால்கள் அவளுக்கு தள்ளாடுவது போல் இருக்க, ஒருவித பயம் பதற்றம் எல்லாம் வந்து அவளை என்னென்னவோ செய்தது..

வெளிவந்தவள், சத்தம் போட்டு வீட்டிலிருப்பவர்களை அழைக்க, அதற்குள் சுதிரும் வெளிவந்து “வேணாம்.. வா…” என்று அவள் கை பிடித்து இழுக்க, வீட்டிலிருந்த ஆட்களும் வந்து என்னவென்று கேட்க, வானதி சொல்லிவிட்டாள்.

அவளுக்கு நிற்கவும் முடியவில்லை..!!

“நான்.. எங்க வீட்டுக்கு போகணும்..” என்று அந்த நிலையிலும் கிளம்ப, சுதிரின் அப்பாவும் அம்மாவும் செய்வது அறியாது தான் திகைத்தனர்.

அவள் எப்படியேனும் இங்கிருந்து கிளம்பிடவேண்டும் என்று பார்க்க, அவர்களோ சட்டென்று “ம்மா நாங்க சொல்றது கேளு.. பொழுது விடியட்டும்.. பேசிக்கலாம்…” என்று இவளை சமாதானம் செய்ய, இவளுக்கு அந்த நேரம் எதுவுமே செய்ய முடியவில்லை.

உடலில் இருக்கும் பலமெல்லாம் எங்கோ ஓடியது போலிருக்க, மனதும் தன் கட்டுப்பாட்டினை இழக்கத் தொடங்கியது.

“டேய்…!!!” என்று சுதிரைப் பார்த்து ஆங்காரமாய் கத்திட தோன்றினாலும், அவளால் அது முடியவில்லை.

சுதிரின் அம்மாவோ “வானதி.. வானதி…” என்று அவளை கைத் தாங்கலாய் பிடித்து அமர வைக்க, சுதிரின் அப்பா அவனை ஒருவழி செய்துவிட்டார்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ஆனது வானதிக்கு தெளிவு வர, கண்கள் திறந்து பார்க்க, எதுவும் விளங்கவில்லை. தலை வலி பலமாய் இருக்க, எழுந்து மெதுவாய் அமர்ந்தவள், கண்களை மூடி சற்றே தன்னை திடப்படுத்தி ஆசுவாசப் படுத்தினாள்.

அவளின் புத்தி சிறிது வேகமாய் செயல்பட்டது…!!

‘போதும்….’ என்ற முடிவிற்கு வர அவளுக்கு வெகுநேரம் ஆகவில்லை.

இருந்தும் இங்கிருந்து எப்படி செல்ல, அத்தனை சீக்கிரம் இவர்கள் விடுவார்கள் என்று தெரியவில்லை. எப்படியும் மூடி மறைக்கப் பார்ப்பார்.. யோசித்தாள்.. சமயோசிதமாய் தான் செயல்படவேண்டும்…

என்ன செய்யலாம்..??!! என்று யோசிக்க,

சுதிரின் அம்மா வந்து “எங்களுக்கு இன்னமும் இப்படின்னு தெரியாதும்மா… எப்படியும் சரி பண்ணிடலாம்.. நீ வேற முடிவுக்கு எல்லாம் போயிடாத.. தயவு செஞ்சு.. இதுல உன்னோட வாழ்கையும் தான் இருக்கு…” என்று இவளை சமாதானம் செய்ய, 

“என்ன பண்ணலாம்னு இருக்கீங்க..??!” என்றாள் ஒரு வெற்று குரலில்.

“இல்ல அவனுக்கு ட்ரீட் மென்ட் பண்ணலாம்… கல்யாணம் ஆகிடுச்சு தானே.. சரியாகிடுவான். நீயும் கொஞ்சம்..” என்று அவர் முடிக்காமல் இழுக்க,

“நானும் கொஞ்சம்??!!” என்று கேட்டு அவரை நேருக்கு நேர் அவள் பார்க்க

“இல்ல… நீயும் அவனை கொஞ்சம் அனுசரிச்சு…” என்று அவர் சொல்லும் போதே, எழுந்துவிட்டாள் வானதி.

“உங்க பையனுக்கு விழுந்த அறை உங்களுக்கு விழ ஒரு செக்கன்ட் ஆகாது..” என்று விரல் நீட்டி சொன்னவள்,

“குடும்பத்தோட தூக்கி உள்ள வச்சிடுவேன்.. எனக்கும் ஊசி போட வர்றான்.. நான் அனுசரிக்கனுமா.. அவன் எக்கேடு கெட்டோ போகட்டும்.. ஆனா நானும் கெடணும்னு என்ன இருக்கு.. இவனை சீர் திருத்தம் பண்ணி, நல்லவனாக்கி நான் இவனோட வாழணும்னு எந்த அவசியமும் இல்லை.. புரிஞ்சதா…” என, அவள் பேசிய பேச்சில் அந்த பெண்மணி சற்றே ஆடித்தான் போனார்.

அழுவாள் வருந்துவாள் புலம்புவாள் என்று நினைத்து வர, அவளோ இப்படி பேச, அவருக்கு என்ன பதில் பேச என்று தெரியாது இருக்கும் போதே, சுதிரின் அப்பா வந்து என்னவென்று கேட்டு

“என்னம்மா நீ இப்படி பேசுற??!!” என்றார் குரலை உயர்த்தி.

“ஷ்…!!! என்கிட்டே இப்படி எல்லாம் நீங்க பேசவே கூடாது… போய் உங்க மகனை பாருங்க..” என்றவள், அங்கேயே அப்படியே சிறிது நேரம் அமர்ந்துவிட, எப்படியும் இன்று பிருந்தாவும், கதிரும் வருவர் என்று தெரியும்.

அவர்கள் வரும் நேரமும் தெரியும்..

அவர்களின் வருகைக்கு காத்திருக்க, அவர்களும் வந்துவிட்டனர்.

சுதிர் இவளின் கண்ணிலேயே படவில்லை. சுதிரின் அம்மாவோ ‘எதுவும் சொல்லிடாதே…’ என்று இவளிடம் கெஞ்சிக்கொண்டே இருக்க, வானதி சட்டையே செய்யவில்லை..

அண்ணன் அண்ணி வரவும், முதல் வேலையாய் அனைத்தையும் சொன்னவள் “அண்ணா நான் உங்களோட வர்றேன்…” என்றுவிட்டாள் முடிவாய்..

அவ்வளோதான்…!!

முடிந்தது.. அந்த திருமண வாழ்வும்..!!

விவாகரத்து அத்தனை எளிதாகவும் இல்லைதான். ஆள் மேல் ஆள் வந்து தூது பேசினர்.. சரி செய்துவிடலாம் என்று ஆயிரம் பேசினர். எதற்கும் வானதி அசைவதாய் இல்லை.

இறுதியில் சுதிரின் அம்மாவே கேட்டார் “பணக்கார வீட்டு புள்ளன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. உனக்கு தெரியாததா??!! பொறுத்துப் போகக் கூடாதா.. குடும்ப மானம் என்னாகுறது.. அடுத்து உனக்குன்னு வாழ்க்கை வேணாமா??!!” என்று என்னெனவோ..

ராதாவோ அழுதே தீர்த்தார்..

இதனை எல்லாம் கேட்டவள் “அப்படியா??!! பொறுத்துப் போகனுமா??!! ம்ம்ம் பணக்கார வீட்டு புள்ள.. நானும் கூட அப்படிதானே.. சரி.. அப்போ பேருக்கு உங்க பையன் எனக்கு புருசனா இருக்கட்டும்.. என் பக்கம் கூட ஆனா வரக்கூடாது.. நானும் எனக்கு பிடிச்ச மாதிரி அப்படி இப்படி இருக்கேன்.. சரியா…” என்று வானதி நிறுத்தி நிதானமாய் கேட்க,

‘அம்மாடி..!!!’ என்று அனைவரும் வாயில் கை வைத்துவிட்டனர்.

“என்ன நான் சொல்றது??!! நியாயம்னா அது எல்லாருக்கும் தானே…” என்றாள் இலகுவாய்..

ராதாவோ “வானதி..!!” என்று அதிர, கதிரின் கண்கள் கலங்கிப்போனது..

பிருந்தா ஆறுதலாய் வானதி கை பற்றிக்கொள்ள “கல்யாணம் பண்றது நல்லபடியா வாழறதுக்குத்தான்.. அது அவனோட முடியும்னு எனக்கு தோணலை..” என்று முடித்துவிட, அனைத்தும் அடுத்த சில நாட்களில் முடிந்தும் போனது…

அவை எல்லாம் இப்போதும் நினைவில் வந்து படுத்த, அவளைகளை கலைக்கும் விதமாய் கதிரின் சத்தம் கேட்க,  கடினப்பட்டு முயன்று தன் நினைவுகளை ஒதுக்கியவள், அடுத்தது என்ன என்று சிறிது யோசித்தாள்.

எப்படியும் ஒரு முடிவிற்கு வந்துதானே ஆகிட வேண்டும்..??!!

அருணோடு திருமணம்….

முயன்று தன் மனதில் பதித்துப் பார்த்தாள்.

சற்று சிரமம் தான்.. இருந்தும் வாழ்ந்து பார்ப்போம் என்று ஒரு எண்ணம் வந்தது.

தன்னால், நன்றாய் இருக்கும் அண்ணன் அண்ணிக்கு இடையில் கூட ஏன் சண்டைகள் சச்சரவுகள் வரவேண்டும்??!!

அனைவரின் விருப்பமும் இதுவாக இருப்பின், இதுவே நடக்கட்டும் என்ற முடிவில் வெளி வந்தவள், நேராய் பிருந்தாவிடம் தான் சென்றாள்.

எங்கே தாங்கள் சண்டையிட்டது வானதிக்கு தெரிந்துவிடுமோ என்று கதிர் பார்க்க “அண்ணி… உங்களுக்கு எது விருப்பமோ அது செய்ங்க.. எனக்கு சம்மதம்…” என்று வானதி சொல்ல,

“வாணி…!!” என்றான் கதிர் லேசாய் அதிர்ந்து.

சட்டென்று தங்கை இப்படியொரு முடிவிற்கு வருவாள் என்று அவன் நினைக்கவில்லை.     

“அண்ணா.. எனக்காக.. என்னால உனக்கும் அண்ணிக்கும் எந்த பிரச்னையும் வேண்டாம்… எனக்கு நீங்க நல்லது தான் செய்வீங்க.. சோ எது செய்யணுமோ செய்ங்க…” என்று வானதி நிறுத்தி நிதானமாய் சொல்ல,

கதிர் பதில் சொல்லும் முன்னம் வேகமாய் அவளின் கைகளை பற்றிக்கொண்ட பிருந்தா “நிஜமா சொல்றியா நீ???!!” என,

கதிரோ “வானதி இது உன்னோட வாழ்க்கை.. உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் எதுவும்…” என்று சொல்ல,

“அண்ணா.. ஒருவேளை அருண் கூட பழகிப் பார்த்து எனக்கு பிடிக்கலைன்னா.. அடுத்து நீங்க வேற மாப்பிள்ளை பார்த்து அதுவும் எனக்கு பிடிக்கலைன்னா..?? ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகணும்.. அப்படியே போனா நான் எத்தனை பேர்கூட பழக முடியும்?!!!” என்று கேட்க, மற்றவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

வாழ்வில் எதாவது ஒன்றில் திருப்தியுற்று நிற்கத்தானே வேண்டும்.. !!

கதிர் பேச்சற்று நிற்க, பிருந்தாவோ “வானதி எங்களுக்காக சொல்லாத…” என,

“இல்லண்ணி… நிஜமா தான் சொல்றேன்.. எனக்கு சம்மதம்…” என்று சொல்ல, பிருந்தாவிற்கு சந்தோசமாக இருந்தாலும் கூட, இந்த அருணை எண்ணி சங்கடமாகவும் இருந்தது.

இவள் சரி சொல்லி, அவன் மறுத்துவிட்டால், அவ்வளோதான் கதிர் மேலும் ஆடி தீர்த்துவிடுவான்..

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ள “அட.. நிஜமா தான் சொல்றேன்…” என்றாள் வானதி புன்னகை சிந்தி.

இதற்குமேல் என்ன அங்கே??!!

கதிருக்கு ஒருபக்கம் சின்னதாய் உறுத்தல் இருந்தாலும், தங்கையின் வாழ்வு அல்லவா, அவளே சம்மதம் சொன்ன பிறகு அவன் தாமதிப்பானா என்ன??!!

“உங்க வீட்ல பேசு…” என்று பிருந்தாவிடம் சொல்ல, அடுத்து அவள் அப்பா அம்மா என்று அனைவரிடமும் பேச,

வெற்றிவேலன் அருணிடம் முடிவாய் கேட்க, ‘வானதி சம்மதம் சொல்லிவிட்டாள்…’ என்பதை அவனால் நம்பிட கூட முடியவில்லை.

அவள் அன்று நிச்சயம் சம்மதம் என்று சொல்ல தன்னை அழைத்துப் பேச வரச் சொல்லவில்லை என்பது அவனுக்கு திண்ணமாய் தெரியும்..

அதற்கான உடல்மொழி அவளிடம் அன்று இல்லவே இல்லை.

பின் இன்றெப்படி??!! என்று யோசிக்க,

“இங்கபார் இதுக்கு மேலயும் நீ யோசிச்சா அது சரியே இல்லை…” என்று வெற்றிவேலன் சொல்ல,

“சரிப்பா.. நீங்க பார்த்து எது பண்ணாலும் சரி…” என்றுவிட்டான்..

அவனுக்குமே இது சரியா தவறா தெரியவில்லை.. ஆனாலும் வீட்டினர் தாங்கள் கெட்டுப்போக சொல்லவில்லை..

அது மட்டும் நிஜம்..!!

வருவது வரட்டும் வாழ்ந்து பார்ப்போம்.. எல்லாருமே பிடித்தா திருமணம் செய்கிறார்கள்??!!

செய்துகொண்டு பிடித்தம் வரவழைத்துக் கொள்வது இல்லையா?? அதுபோல இதுவும் என்று எண்ணிக்கொண்டான் அருண்..

அருணும் சம்மதம் என்று சொல்லியாகிவிட்ட பிறகு என்ன தாமதம்??!!

தட்டு மாற்ற நாள் குறிக்க ஏற்பாடுகள் ஆக, வெற்றிவேலன் அவரின் மில் சென்றவர், அங்கிருந்தபடியே தான் இளம்பரிதிக்கு அழைத்தார். முதலில் வேலை இருக்கிறது என்று மறுக்க,

“நீ வர்றியா இல்லை நான் வரவா??!!” என்று வெற்றிவேலன் கேட்கவும், சிறிது நேரத்தில்

“எதுக்கு வர சொன்னீங்க??” என்று கேட்டபடி வந்தவனை அப்போது புன்னகை மாறாது தான் பார்த்தார் வெற்றிவேலன்.

வேலைக்கு இங்கே வருகையில் இவனுக்கு எப்படியானதொரு மிடுக்கு இருந்ததுவோ அது இம்மியளவு கூட குறைந்திடவில்லை.

மாறாக கூடித்தான் இருந்தது.

அதுதானே இளம்பரிதியிடம் வெற்றிவேலனை ஈர்க்கிறது.

“அட வா இளா… எப்போ பாரு.. உர்ருன்னு…” என்று சொன்னாலும் அவர் முகத்தில் மேலும் புன்னகை விரிய,

“ம்ம் சொல்லுங்க…” என்றான் குரலில் எதுவும் காட்டிக்கொள்ளாது.

“அப்புறம்.. அய்யாக்கு என்ன பண்ணலாம்னு இருக்கீங்க.. கல்யாணம் அது இதுன்னு எதுவும் செய்றதா எண்ணம் இருக்கா இல்ல இப்படியே வீராப்பா சுத்திட்டு இருக்க போறீங்களா??” என்று வேண்டுமென்றே வெற்றிவேலன் அவனை சீண்ட,

‘இவருக்கு எப்படி தெரியும்…’ என்பது போல் பார்த்தவன் “வீட்ல பார்த்துட்டு இருக்காங்க…” என்றான்.

“அதுதான் தெரியுமே… சொல்லு உனக்கு எப்படியாப்பட்ட பொண்ணு வேணும்…” என்றவரை புரியாது பார்த்தான் இளா..

“அட சொல்லுடா.. அருணுக்கும் உனக்கும் சேர்த்தே பண்ணிடலாம்…” என்றவர் “இந்த அருண் பைய இன்னிக்கு தான் சரின்னு சொன்னான்.. அந்த பொண்ணு வானதியும் சம்மதம் சொல்லிடுச்சு….” என, ஏனோ ஒரு சொல்ல முடியாத உணர்வு சட்டென்று இளாவிற்கு.

ஒருவேளை வானதிக்கும் அவனுக்கும் முட்டுவதால் கூட அப்படி இருக்காலம் என்று அவனே எண்ணிக்கொள்ள, அமைதியாக இருந்தான் .

“என்னடா சொல்லு.. உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு பார்க்க.. ஒரே மேடையில் சிறப்பா செய்வோம்..” என,  இளம்பரிதியின் கண்கள் விரிய,

“எதுக்கு??!!” என்றான்.

“டேய் கல்யாணம் எதுக்கு செய்வாங்க??!!”

“அது எதுக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும்… அடுத்து சொன்னீங்களே அது எதுக்கு…??”

“ஏன் நான் செய்ய கூடாதா??!!” என்ற வெற்றிவேலனின் குரலில் ஆதங்கமே..

“வேணாம்.. ஒரு பெரிய பாவத்த என்னை செய்ய வச்சிருக்கீங்க.. அதுக்கே நான் இன்னும் என்ன என்ன அனுபவிக்க போறேன் தெரியலை.. அதுக்கு சன்மானமா என்னோட கல்யாணத்துக்கு நீங்க விலை கொடுக்க வேண்டாம்…” என்ற இளம்பரிதியின் ஒவ்வொரு வார்த்தைகளும் வெற்றிவேலனை கொல்லாமல் கொன்றது.

“இளா…!!!” என்று அவர் அதிர,

“வேண்டாம்.. அருணுக்கு என்ன செய்யணுமோ அதை செய்ங்க.. அவனுக்காக நான் வந்து எல்லாம் பண்றேன்.. ஆனா எனக்குன்னு நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.. எனக்கு எப்போ கல்யாணம் நடக்குமோ அப்போ நடக்கும்.. அப்போ வந்து நீங்க ஆசிர்வாதம் செஞ்சா போதும்.. வேறெதுவும் வேண்டாம்…” என்றவன், கிளம்பப் போக,

“இளா நில்லுடா…” என்றார் அவன் கை பற்றி.

பற்றியிருந்த அவரின் கை பார்த்து “அன்னிக்கு எனக்கு நிஜமா தெரியாது அந்த பொண்ணு வயித்துல குழந்தை இருக்கும்னு.. நானும் கோபி, அண்ணிக்கு துரோகம் பண்ணிட்டான்னு நீங்க சொன்னதை செஞ்சேன்..

எது எப்படி இருந்தாலும் அந்த குழந்தைய கலைச்சது ரொம்ப தப்பு.. பெரிய தப்பு.. அதையும் என்னை வச்சு, எனக்கே தெரியாம பண்ணது.. பெரிய பாவம்… ஹாஸ்பிட்டல் போனப்போ கூட அந்த பொண்ணு என்னை அண்ணான்னு சொல்லுச்சு… அந்த பொண்ணுக்கு உடம்பு சரியில்லைன்னு தானே கூட்டிட்டு போக சொன்னீங்க.. சொல்லுங்க.. ஏன் அப்படி என்கிட்டேயே மறைச்சீங்க…

ஒண்ணுமில்லம்மா எல்லாம் சரியாகிடும்னு தான் டாக்டர் ரூம்க்கு நான் அனுப்பினேன்.. அப்புறம் தானே எனக்கு தெரிஞ்சது.. உங்கக்கிட்ட கேட்டதுக்கு  அன்னிக்கும் இப்படித்தான் என் கை புடிச்சு கேட்டீங்க.. குடும்ப கௌரவம் போயிடும்னு சொன்னீங்க..

ஆனாலும் அது பாவம் தானே..!! என்னை பாவம் செய்ய வச்சீங்க தானே.. இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு அந்த பாவத்துக்கு விலை பேசுறீங்களா??!!” என்று கேட்டவனுக்கு முகம் வேதனையில் சுருங்கியது.  

Advertisement