Advertisement

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 7

அருணுக்கு துணிந்து எந்தவொரு முடிவிற்கும் வர முடியவில்லை. சரி என்று முழுமனதாகவும் சொல்லிட முடியவில்லை. அவனின் மனது வேண்டாம் என்ற பக்கமே வேகமாய் சென்றுகொண்டு இருக்க, வீட்டிலோ இவனின் மௌனம் கண்டு நல்லமுடிவாய் சொல்லப் போகிறான் என்றெண்ணி

சரோஜா, ரேனுவிடம் “ஆள் விட்டு வீடெல்லாம் கொஞ்சம் சுத்தம் செய்யணும்… தட்டு மாத்துறது அவங்க வீட்லயேனாலும், நம்ம சனம் எல்லாம் கூப்பிடனும்.. எல்லாம் இங்க வந்து போவாங்க தானே…” என்று சொல்லிக்கொண்டு இருக்க,

கோபியோ “ம்மா முதல்ல அருண் சம்மதம் சொல்லட்டும்.. அப்புறம் பேசுங்க இதெல்லாம்..” என்று மறுப்பு சொல்ல,

“டேய் நீயேன்டா அவனே சரி சொன்னாலும் நீ விடமாட்ட போல..” என்ற சரோஜா, மருமகளிடம் “இவன் ஏன்ம்மா இப்படி இருக்கான்?” என்று கேட்க, அப்போது தான் கவனித்தார் ரேணுகாவின் முகத்தில் முன்னிருந்த ஒரு செழிப்பு இப்போதில்லை என்று.

“என்ன ரேணு எதுவும் உடம்பு சரியில்லையா?” என்று சரோஜா கேட்டதுமே, திடுக்கிட்டு பார்த்தவள், வேகமாய் கோபியை பார்க்க,

“ஏன் அவளுக்கென்ன நல்லாதானே இருக்கா??” என்று அவன் பதில் சொல்ல,

“இல்ல முகமே எப்படியோ இருக்கே…” என்று சரோஜா யோசனையாய் மீண்டும் மருமகளின் முகம் பார்க்க, “அதெல்லாம் இல்ல அத்தை.. நிகில் நைட்லாம் ஒரே அழுகை.. அதான் சரியா தூங்களை..” என்றாள் ரேணுகா சமாளிப்பாய்

“இவன் நல்லாத்தானே இருக்கான்.. ஏன்டா புள்ள அடம் பண்ண நீயும் சேர்ந்து கவனிக்க மாட்டியோ??!!” என்று சரோஜா கேட்க,

“அவர் நைட் வரலை…” என்றாள் பட்டென்று ரேணுகா.

“என்னது வரலையா??!! எங்க போன நீ.. எனக்குத் தெரியலையே.. அப்பா எதுவும் வேலையா அனுப்பினாரா??!”

அம்மா எப்போதும் போலவே கேள்விகள் கேட்க, குற்றமுள்ள நெஞ்சம் வேகமாய் குறுகுறுத்துவிட “ம்மா இவ சொல்றான்னு.. நீ வேற.. நைட் வந்தேன்.. அப்புறம் ஒரு வேலைன்னு கிளம்பிட்டேன்..” என,

“அதான்டா அப்படி என்ன வேலை.. அப்பாவும் என்கிட்டே எதுவும் சொல்லலையே??” என்று சரோஜா கேட்கும் போதே கோபி ரேணுவை முறைக்க,

“என்ன கோபி??!!” என்றபடி வந்தார் வெற்றிவேலன்.

அவ்வளவு தான் கோபி அமைதியாகிவிட, ரேனுவிடம் “என்னம்மா என்ன சொல்றான்??” என்று விசாரிக்க,

“ஒன்னுமில்லைங்க மாமா..” என்றாள் சத்தம் கூட வெளிவராது.

“ம்ம்ம்…” என்று மருமகளின் முகத்தினை ஆழப் பார்த்தவர் “பேசாம நீ ரேணு.. நிகில் எல்லாம் நம்ம சிறுமலை தோட்டத்துக்கு போயிடுங்க.. அருண் விஷயம் என்னன்னு முடிவானப்புறம் சொல்றோம்.. அப்போ வாங்க…. இங்க உனக்கான வேலை எல்லாம் எதுவுமில்லை..” என்ற வெற்றிவேலன் குரலிலும் முகத்திலும் என்ன இருந்ததுவோ,

ரேணு அப்போதும் திடுக்கிட்டு, கணவனின் முகம் பார்க்க “அங்க போலாம் ப்பா.. ஆனா இவளையும் பையனையும் வச்சிட்டு எல்லாம் இருக்கிறது கஷ்டம்…” என்றான் சாதாரணம் போலவே.

“ஏன் கஷ்டம்.. நம்ம பங்களால எல்லா வசதியும் இருக்கு.. வேலைக்கு ஆள் இருக்கு.. நான் சொல்லிடறேன்… நீங்க கிளம்புங்க…” என்று முடிவாய் சொன்னவர், ரேணுகாவிடம் “போறதுக்கு எல்லாம் எடுத்து வை மா…” என்றார் நீங்கள் சென்றுதான் ஆகிட வேண்டும் என்பது போல.

“சரிங்க மாமா…” என்றவள் உள்ளே சென்றுவிட,

சரோஜா “ஏங்க..?” என்று எதையோ கேட்டு ஆரம்பிக்க, “நீ எதுவும் சொல்லவேண்டாம் சரோ.. இவங்க போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும்…” என்று பேச்சினை முடித்துக்கொண்டார்.

கோபிக்கு அப்பாவினை வெளிப்படையாய் மறுத்து எதிர்த்து பேசவும் முடியவில்லை. அதே நேரம் அவர் சொல்வதை ஏற்று சிறுமலை செல்லவும் விருப்பம் இல்லை. தன்னை அனுப்பிவிட்டு இங்கென்ன செய்ய போகிறார்கள்??!!

அருணுக்கு எப்படியும் வானதியை பேசி முடித்துவிடுவார்கள் என்பது தெரிந்துபோனது..!!

இல்லையென்றாலும் விடப்போவது இல்லை..!!

இப்படித்தானே தன்னையும் தன் திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்றே தெரிந்துகொள்ளாது பேசி முடித்தார்கள்.. திருமணமாகி.. வாழ்த்து தொடங்கி.. பிள்ளை வந்த பின்னும் கூட அவனின் வாழ்வு நேர்கோடாய் சென்றதா??!!

இல்லையே..!!

தவறு அவன் மீதும் இருந்தாலும், எதையும் சரி செய்யவும் அவன் அப்பா விடவில்லை..

கசப்பாய் ஒரு முறுவல் பூத்தது அவனுக்கு…!!

அதைக் கண்ட வெற்றிவேலனோ “என்ன கோபி?? என்ன யோசனை…” என,

“ஒண்ணுமில்லப்பா…” என்றவன், “அருண் வாழ்க்கையாவது அவனுக்கு பிடிச்ச மாதிரி அமைச்சுக் கொடுங்க…” என்று சொல்ல, வெற்றிவேலன் முகத்தினில் ஒரு திடுக்கிடல்.    

அதுவும் சரோஜா முன்னில் இப்படி சொல்லிட, “கோபி…” என்று வெற்றிவேலன் லேசாய் அதிர்ச்சி கொடுக்க, சரோஜாவோ “இவன் ஏன் இப்படி என்னென்னவோ பேசுறான்…??” என,

“இல்லம்மா பொதுவா சொன்னேன்…” என்றுவிட்டு அவனும் சென்றுவிட, வெற்றிவேலனுக்கு அப்போதும் கூட அனைத்தையும் விடுத்தது ‘என் குடும்பம்.. அதனின் கௌரவம்…’ என்ற நினைப்பு மட்டுமே மனதினில் வேரோடியது.

மறுநாள் கோபியும் அவனின் மனைவி பிள்ளைகள் என்று சிறுமலை கிளம்பிட, அருணோ ஒருவித அமைதியில் இருக்க, இவன் எப்போதடா வாய் திறப்பான் என்று அனைவரும் காத்திருக்க, எதுவும் அவன் பேசக் காணோம்.

‘அப்படி கட்டாயமா ஏன் இந்த கல்யாணம் நடக்கனும்னு எல்லாம் நினைக்கிறாங்க.. முக்கியமா அப்பாவும் அக்காவும்??!!’

இதே கேள்வி அவனுள் ஓடிக்கொண்டே இருந்தது. யோசித்துப் பார்த்தவனுக்கு, பிருந்தாவின் பக்கம், வானதியின் வாழ்வை எண்ணிக் கூட இம்முடிவிற்கு வந்திருக்கலாம் என்று தோன்ற, அப்பாவின் பிடிவாதம் தான் புரியவில்லை.

அங்கே பழனியிலோ, மீண்டும் கதிருக்கும் பிருந்தாவிற்கும் சண்டையாகி போனது.

“என்ன அவ்வளோ பெரிய ஆளா உன் தம்பி.. சரி இல்லை.. இது ரெண்டுல ஒன்னு சொல்ல அவ்வளோ கஷ்டமா அவனுக்கு…. இது சரியே இல்லை பிருந்தா.. நானும் உறவுக்குள்ள சட்டுன்னு பேசிட கூடாதுன்னு பார்த்தா, என் பொறுமைய ரொம்ப சோதிக்கிறீங்க….” என,

“ஏங்க… இப்போதானே ரெண்டு பேரும் பாக்க ஆரம்பிச்சிருக்காங்க.. போக போக.. சரியாகிடும்.. அவங்களே பேசிப்பாங்க.. பழகிப்பாங்க.. அவங்க சரின்னு சொல்றப்போ நம்ம மத்த ஏற்பாடு எல்லாம் செய்வோமே…” என்று பிருந்தா தன்மையாகவே பேச,

“இதெல்லாம் கேட்க கூட நல்லா இல்லை…” என்றுவிட்டான்  பட்டென்று.

பிருந்தா பதில் சொல்லாது பார்க்க “என்ன பாக்குற.. எல்லாரையும் போல அமையுற சாதாரண கல்யாணம்னா நானும் சும்மா இருப்பேன்.. ஆனா வானதிக்கு அப்படியா?? கேடுகெட்டவன் கையில் பொண்ண கொடுத்து அவ தப்பிச்சு வந்ததே பெருசு..

இதுல அடுத்தது நல்லாதா கொடுக்கணும்னு தான் அருணுக்கு நான் சரின்னு சொன்னேன். ஆனா அவன் என்னவோ தாங்கணும்னு நினைக்கிறான் போல..” என்று கதிர்வேலன் பேச பேச, இவை எல்லாம் ஜிங்கிள்ஸ் கிளம்பிக்கொண்டு இருந்த வானதியின் காதிலும் வந்து விழுந்துகொண்டு தான் இருந்தது.

அண்ணன் பேச பேச ‘ஐயோ… இதென்ன…’ என்று மனம் பதற, சடுதியில் அவளின் கடந்த காலம் வேறு கண் முன்னே வந்து போக, நொடிப் பொழுதேனும் அவளுக்குள் ஒரு தடுமாற்றம் நிகழத்தான் செய்தது.

‘ஹப்பா..!!!’

நினைக்கவே அவளுக்கு முடியவில்லை..

திருமணம் என்றதுமே சந்தோசமாய் தான் இருந்தாள். மாப்பிள்ளையின் படிப்பு வேலை குடும்பம் தோற்றம் எல்லாமே அமைந்து வர, வேண்டாம் சொல்ல அவளுக்கு காரணமே இல்லை.

சந்தோசமாகவே சரி என்று சொன்னாள்..

இதற்கும் கதிர்வேலன் நன்கு விசாரித்துதான் எல்லாம் செய்தான். அப்பா இல்லை. அவரின் இடத்தில் தான் என்கிற பொறுப்பு நிறையவே அவனுக்கு இருக்க, எல்லாமே பார்த்து பார்த்து தான் செய்தான்.

திருமணத்திற்கு முன்னே இரண்டு முறை, வானதியும், சுதிரும் சந்திக்க வேறு செய்தனர். அவனுக்கும் இத்திருமனதில் விருப்பம் இருப்பதாகவே பட, மறுமாதமே திருமண தேதி குறித்து திருமணமும் நடந்தது.

இடையிடையில் அவ்வப்போது இருவரும் பேசியும் கொண்டனர். திருமணத்திற்கு சந்தோசமாய் சரி என்றவளுக்கு, சுதிரோடு பேசுகையில் புதிதாய் ஓர் ஈர்ப்பு தோன்றுகிறதா என்று பார்த்தால், அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..

என்னவோ ஒரு ஒட்டுதல் மனதளவில் கூட அவளுக்கு அப்போது வரவில்லை..

‘ஒருவேளை கல்யாணம் ஆகிட்டா எல்லாம் சரியாகிடும் போல..’ என்று அவளே நினைத்தும் கொண்டாள்.

கல்யாணமும் ஆனது… அன்றைய இரவும் வந்தது.  வானதியின் வீட்டினில் தான் அன்றைய தின சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்க சுதிரும் இருந்தான் அவளின் அறையில். சற்றே அவளுக்கு படபடப்பாய் இருக்க, சுதிரோ ஒரு வித பதற்றத்தில் இருப்பது போலிருந்தது அவளுக்கு.

‘என்ன நம்மள விட டென்சனா இருக்காங்க…’ என்று யோசிக்க, அவனோ இவளைப் பார்த்து சிறிது அசட்டு புன்னகை சிந்த, பதிலுக்கு ஒரு சிரமப் புன்னகையே அவளிடம்..

போனில் பேசிய அளவில் துளிகூட நேரில் இல்லை இப்போது.

“நீ தூங்கனும்னா தூங்கு..” என்று சுதிர் சொல்ல, அந்த நேரம் அவளுக்கு ‘அப்பாடி…’ என்ற உணர்வு மட்டுமே.

இருந்தும் “நீங்க…?” என்று கேட்க,

“நானும் தான்…” என்றவன், அவளுக்கு முன்னே படுத்துவிட,   

“ம்ம் ஓகே..” என்றவள், விளக்கணைத்து படுக்க, ஏதாவது பேசுவானோ என்று இமைகளை மூடி காத்திருந்தவளுக்கு காத்திருப்பு மட்டுமே சொந்தமாய் இருந்தது. நேரம் செல்ல செல்ல, உறக்கம் வர, அப்படியே உறங்கியும் கூட போனாள் வானதி.

ஒருமணி நேரம் கடந்திருக்கும், மெல்லிசாய் எதோ ஒரு சத்தம் கேட்க, சிறு சத்தம் கேட்டால் கூட சட்டென்று விழித்துவிடும் பழக்கம் கொண்ட வானதி அப்போதும் விழித்துவிட, அருகே சுதிர் இல்லை.

அறையின் ஒரு ஓரத்தில் அவனின் மொபைல் வெளிச்சம் தெரிய, “என்னாச்சு??!!” என்றபடி வானதி எழுந்து அமர, அவ்வளோதான் கையில் இருந்த அலைபேசியை பட்டென்று சுதிர் கீழே தவறவிட,

“அச்சோ…” என்று இவள் பதறி, பக்கவாட்டில் இருந்த சுவிட்சை  தட்ட, அறையில் ஒளி வெள்ளம் சூழ, சுதிரோ வானதியை பார்த்து விதிர் விதிர்த்து நின்றான்..

அவன் முகம் பார்த்தவளுக்கு “என்னாச்சு.. எதுவும் வேணுமா?? என்னை கேட்டிருக்கலாமே…” என்றபடி வந்தவளுக்கு அப்போதுதான் விளங்கியது, அவனிடம் எதுவோ சரியில்லை என்று.

முகம் வியர்த்து, கை நடுங்கிக்கொண்டு இருக்க, கீழே விழுந்த அலைபேசியை கூட அவன் எடுக்காமல், ஒருவித பயப் பார்வை அவளைப் பார்த்து நிற்க, அவனின் ஒரு பக்க கையில் கருப்பு ஸ்ட்ரிப் ஒட்டியிருக்க, மற்றொரு கையினில் விரல்களோ சிறு ஸ்ரிஞ்சை பிடித்துக்கொண்டு இருந்தது..

அதனைப் பார்த்ததுமே அவளுக்கு விளங்கிப்போனது என்னது அது என்று..

போதை வஸ்து…

“சுதிர்…” என்று அதிர்ந்து பார்த்தவளுக்கு, அடுத்து என்ன சொல்ல, என்ன யோசிக்க என்று கூட தெரியவில்லை.

இது எத்தனை பெரிய அதிர்ச்சி..!!

ஒருவகையில் ஏமாற்றம் கூட அல்லவா…!!

அவள் அப்படியே திகைத்துப் பார்க்க,  அவனோ வேகமாய் கையில் இருப்பதை மறைக்க முயல “அதான் பார்த்துட்டேனே…” என்றாள் ஒருவித உணர்வு கலந்த குரலில்..

“இல்ல.. அது…” என்று சுதிர் சமாளிக்க, “ச்சே…” என்று சலித்தவள், வேகமாய் அறைக்கு வெளியே செல்ல முயல, வேகமாய் விரைந்தவன் “ப்ளீஸ் ப்ளீஸ்.. வானதி.. ப்ளீஸ்.. வேண்டாம்.. வெளிய போகாத…” என்று வழியை மறைக்க, அவனை முறைத்தாள் வானதி..

“ப்ளீஸ் நான் சொல்றதை கேளு வானதி ப்ளீஸ்..” என்றவன், கையில் இருந்ததை தூக்கி போட்டுவிட்டு, அவளின் கரம் பற்ற,

“ம்ம்ச் ச்சே…” என்று கைகளை உதறியவள், எரிச்சலாய் நிற்க,

“சொன்னா கேளு.. இது.. இதெல்லாம் நான் விட்டுடுறேன்… ப்ளீஸ்…” என்று அவன் காலில் விழாத குறையாக கெஞ்ச, அவளுக்கு நம்பிட எல்லாம் மனதே வரவில்லை.

“கண்டிப்பா.. கண்டிப்பா நான் விட்டுடுவேன் வானதி.. யார்கிட்டயும் சொல்லிடாத.. ப்ளீஸ்.. இது.. இது..” என்று அவன் வார்த்தைகளை தேட,

“உங்க வீட்ல இது தெரியுமா??” என்றாள் அடிக்குரலில்..

“அ..!!!”

“பதில் சொல்லுங்க… தெரியுமா??!!”

“அது.. முன்ன தெரியும்.. இப்போ விட்டுட்டேன்னு…” என்று சொல்லி முடிக்கவில்லை, சப்பென்று அறைந்திருந்தாள் அவனை.

“பிராடு.. ச்சே.. உன்னோட எல்லாம் நான் பேசுறதாவே  இல்ல..” என்றவள், அவனைத் தாண்டி வெளி போக பார்க்க,

“வானதி…” என்று அவளைப் பிடித்து நிறுத்தியவன், “உன் கால்ல கூட விழுறேன்…”  என்று விழப் போக,

எங்கோ எதிலோ படித்தது நினைவு வந்தது “போதைக்கு பழக்கமானவர்கள் எதையும் செய்ய துணிவார்கள்…” என்று

வேகத்தை விட இப்போது விவேகம் தான் முக்கியம் என்று நினைத்தவள் “ம்ம்ச்.. என்னவோ செய்ங்க…” என்று போய் படுத்துவிட, இப்போதைக்கு அவள் அமைதியாய் போனது அவனால் நம்பிட முடியவில்லை என்றாலும், தற்சமயம் அவள் அமைதியாய் இருப்பது போதும் என்றெண்ணி அவனும் படுக்க, இருவருக்கும் உறக்கம் இல்லை.

அவனுக்கு அந்த போதை மருந்து இல்லாது உறங்க முடியாது..

அவளுக்கு இவனால் உறக்கம் போனது..

மறுநாள் சுதிரின் வீட்டிற்கு செல்ல, வீடு சென்ற சிறிது நேரத்திலேயே சுதிர் வெளியே சென்றுவிட, யார் என்ன அவனைப் பற்றி கேட்டதற்கும் ‘எனக்கு தெரியாது..’ என்றேதான் சொன்னாள்.

உண்மையும் அதுதானே..!!

அவனின் வீட்டினரோ இவளை தாங்கு தாங்கு என தாங்க, அவளுக்கு எதுவும் மனதிலும் ஒட்டவில்லை.. அன்றைய தினம் இரவில் அவன் எப்போது வந்தானோ தெரியாது… மறுநாள் காலையில் இருந்தான். இவளும் கேட்கவில்லை.

கோவில், விருந்து அது இது என பொழுது சென்றிட, அவளாக அவனிடம் பேச கூட இல்லை.. இரவில் அவனுக்கு முன்னே வானதி படுத்துவிட, அவனும் வந்து படுப்பது தெரிந்தது.

நேரம் சென்றுகொண்டே இருக்க, வானதி உறங்கிவிட்டாள் என்றெண்ணி, சுதிர் அவளின் கரத்தினில் எதையோ வைத்து மெதுவாய் அழுத்த முயல, வானதி பட்டென்று எழுந்து விட்டாள்.

“என்ன இது??!!” என்றாள் வேகமாய் அவளின் கையை ஆராய்ந்தபடி,

“ஓ.. ஒண்ணுமில்ல…” என்று அவன் திணற,

“ஏய்.. உண்மைய சொல்லு.. என்னவோ நீ பண்ண??!!” என்றவள் “இப்போ நீ சொல்லலை.. எல்லாரையும் கூப்பிடிடுவேன்..” என்று மிரட்ட,

“இல்ல இல்ல ஒண்ணுமில்ல நிஜமா..” என்றவன், சில நொடிகள் அவளின் முகம் பார்த்து நிற்க

“என்ன??!!” என்றாள், இவன் என்னவோ செய்யப் போகிறான் என்ற உள்ளுணர்வில்.

“அது…” என்று இழுத்தவன் அவன் சட்டை பக்கெட்டில் வைத்திருக்க இரு பட்டன் போற ஒரு பொருளை எடுத்து,

“இதை இப்படி ஓப்பன் பண்ணி, இதுல இருக்க சின்ன நீடில் வச்சு கைல இப்படி அழுத்தினா.. கொஞ்ச நேரத்துல செமையா இருக்கும்…” என்று ஒரு கோணல் சிரிப்போடு சொன்னான்.

‘அய்யோ..!!’ என்று அதிர்ந்தாலும் “ஏய் என்ன பண்ணிருக்க நீ.. இதை.. இதை எனக்கு போட்டியா??!!” என்று வானதி கத்தினாள் என்றுதான் சொல்ல வேண்டும்..

Advertisement