Advertisement

நீயும் தானே இவர்களோடு வந்தாய்.. அப்போ உனக்கு தெரியாது இருக்குமா என்று…

‘மீட் பண்ணதுக்கு இந்தக்கா இவ்வளோ அக்கப்போர் செய்யுது…’ என்று நினைத்தவன், அருணைக் காண, அவனோ சொல்லிவிடாதே என்று பார்வையில் பேச,

“அப்போ நான் சொன்னா நம்ப மாட்டீங்களா?? வெளியாளுங்களை வச்சுத்தான் இதெல்லாம் பேசணுமா??” என்றாள் வானதி.

அவ்வளோதான், இதற்குமேல் இளா பொறுப்பானா என்ன??    

“இங்க பாருக்கா… நீ இவங்களுக்கு  கல்யாணம் பண்ணு இல்லை என்ன கண்றாவியோ பண்ணு.. ஆனா தயவு செஞ்சு என்னை ஆள விடுங்க.. எனக்கு எங்க கடை போதும்.. அதுல வர்ற வருமானம் போதும்.. என்னை நிம்மதியா இருக்க விடுங்க…” என்று தயவு தாட்சண்யம் இல்லாது பேச,

வானதி இதனைக் கேட்டவள் ‘என்ன திமிர்…’ என்று பார்த்து “அண்ணி… இவன்கிட்ட எல்லாம் இப்படி நீங்க இறங்கி வந்து பேசணுமா?! நானும் பாக்கிறேன் அப்போ இருந்து.. நீங்க என்னவோ ரொம்ப இடம் கொடுக்கிறீங்க…” என்று வார்த்தை விட,

“ஏய்.. என்ன??!! நீங்க எல்லாம் நூறடி மேல இருக்கீங்க.. நான் அதல பாதாளத்துல இருக்கேனா??!! ” என்று இளம்பரிதியும் பதில் கொடுக்க, சட்டென்று அங்கே சூழல் மாறிப்போனது..

“அச்சோ என்ன இது…” என்று பிருந்தா இருவரையும் சமாதானம் செய்ய,

“க்கா இப்பவும் சொல்றேன்… என்னை பத்தி உங்க எல்லாருக்கும் தெரியும்.. சொல்லி வை.. மரியாதைக்கு தான் மரியாதை..” என்று விரல் நீட்டி பேச,

“ஹலோ.. என்ன  எங்க அண்ணிக்கிட்ட விரல் நீட்டி பேசுற நீ..” என்று வானதியும் விரல் நீட்ட,

இவர்களின் சத்தம் கேட்டு ராதாவும் வெளி வந்து “வானதி…” என்று அதட்ட, அருணோ “அக்கா நாங்க கிளம்புறோம்..” என்றுசொல்லி இலம்பரிதியிடம் “வாடா போவோம்..” என்றான்.

“எதுக்கு…??!! ஏன் போகணும் சொல்ற நீ.. என்னை மரியாதை இல்லாம பேசுறா.. அதை யாரும் கேட்க முடியாது.. நான் உங்க எல்லாருக்கும்னா வரணுமா??!!” என்று எகிறிய இளா,

“இனிமே கூப்பிட்டன்னா பார்த்துக்கோ…” என்று பிருந்தாவிடமும் முறைத்துவிட்டு, வாசல் நோக்கிப் போக,

பிருந்தா பின்னேயே “நான் சொல்றதை கேளுடா..” என்று போக,

யாரின் நல்ல நேரமோ கதிர்வேலன் வந்துவிட்டான். அவனோடு இரண்டு ஆட்களும். அதாவது அந்த சுற்றுவட்டாரத்தில் சற்று பெரிய தலைகள்.

வாசல் கடந்து வீட்டினுள் வந்துகொண்டு இருக்க, இளம்பரிதி, பிருந்தா எல்லாம் அப்படியே நிற்க வேண்டிய நிலை, கதிர்வேலன் அப்போதும் பிருந்தாவை கண்டுகொள்ளவில்லை “வா இளா…” என்றவன், பின் அருணும் இருப்பது கண்டு “வா அருண்..” என,

அவனோடு வந்தவரில் ஒருவர் “அட தம்பி எப்படி இருக்கீங்க??!!” என்று கேட்டது இளம்பரிதியிடம்.

ராதா மகளிடம் கண்டித்துக்கொண்டு இருக்க, அருணிடம் தான் கேட்கிறார்களோ என்று வானதி திரும்பிப் பார்க்க, அவர்  இளாவிடம் நின்று பேச, ‘இவனோடா??!!’ என்று லேசாய் கண்கள் சுருக்கிப் பார்க்க,

“நம்ம அய்யாக்கிட்ட ஒரு வேலையா போயிருந்தேன்.. மினிஸ்டர் கிட்ட ஒரு அப்ரூவல் வாங்க.. நம்ம தம்பிதான் அதை முடிச்சு கொடுத்துச்சு…” என்று அவர் பிருந்தாவிடம் பெருமையாய் இளாவை சொன்னவர்,

“திண்டுக்கல் அவுட்டர்ல கரூர் ரோட்ல லேண்ட் ஒன்னு பார்த்திருக்கேன் இளா…. பார்ட்டி ரெட் ரொம்ப சொல்றான்.. நீ பார்த்து செய்யேன்…” என்று வந்தவர் சற்று பதவிசாக பேச,  

“அதுக்கென்ன.. நாளைக்கு தீடேயில்ஸ் கொடுத்துவிடுங்க… நல்லபடியா முடிச்சுக்கலாம்…” என்றான் இளாவும் பெரிய மனது செய்து, அவருக்கு உதவுவது போல்.

இதில் அவனுக்கு எத்தனை லட்சங்கள் ஆதாயம் என்பது அவனுக்குத்தானே தெரியும்..

‘அவ்வளோ பெரிய அப்பாடக்கரா இவன்…’ என்று அப்போதும் வானதி நினைக்க, இளாவோ ‘பார்த்தாயா??!!’ என்றுதான் பார்த்தான்.

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் நின்றாலும், இருவரின் பார்வை சொன்ன செய்தியும் வெவ்வேறாகவே இருக்க, இவனோடு இறங்கி வந்து பேசவேண்டுமா என்று கேட்டவளோ, அவனோடு தான் சரிக்கு சமமாய் சண்டை போடுகிறோம் என்று துளியும் நினைக்கவில்லை.

அவனோ, பிருந்தாவின் திருமணத்தில், அவளின் வீட்டு பெண் என்று தன் ரசிப்பை கூட மாற்றியவன், இன்றும் அவள் அதே வீட்டுப் பெண் தான் என்பதை மறந்து முறைத்துக்கொண்டு இருந்தான். 

பின் சிறிது நேரம் வந்தவர்கள் எல்லாம் பேச, வீட்டுப் பெண்கள் அவரவர் அறைக்குச் சென்றுவிட, ஏற்கனவே பேசிக்கொண்டு இருந்த விஷயம் பாதியில் நிற்க, வெளியாட்கள் செல்லவும், பிருந்தா அனைவரையும் உண்ண அழைக்க, வானதி பிறகு என்றுவிட்டாள்.

கதிர் அப்போதும் பிருந்தாவோடு பேசாது இருக்க, அருண் இதனைக் கவனித்தவன் “மாமா… தப்பு என்னோடது.. அக்கா என்ன செய்வா??” என்று சமாதானம் பேச,

“ஓ..!! அப்போ தப்புன்னு தெரிஞ்சே எல்லாம் செய்வீங்க போல.. நான் எதுவும் சொல்லக் கூடாது..” என்று கதிர் பேச,

வானதி வேகமாய் அங்கே வந்தவள் “அண்ணா.. என்னை முன்னிட்டு உங்களுக்குள்ள எதுவும் சண்டை வேண்டாம்..” என்றாள் மெல்லமாய், அதே நேரம் அழுத்தமாகவும்.

இப்போது இளம்பரிதி அங்கே ஒரு பார்வையாளன் மட்டுமே…

கதிரோ “அதுக்கில்ல வானதி…” என்று எதுவோ சொல்ல வர,

“ண்ணா ப்ளீஸ்.. இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்னு ரியாக்ட் பண்றதுனால தான் நான் யாருக்கும் தெரியாம இவரைப் பார்த்து பேசணும்னு நினைச்சேன்..” என்று வானதி வெளிப்படையாகவே பேசிவிட்டாள்.

அருணோ ‘அய்யோ..!!’ என்று பார்க்க,

பிருந்தாவோ ‘அப்படி வாங்க வழிக்கு…’ என்று பார்க்க,

கதிரும், ராதாவும் ‘ஏன் இப்படி..?’ என்று பார்க்க,

சொன்னதையும் சொல்லிவிட்டு அனைவரின் முகத்தையும் பார்த்தவளுக்கு, இளம்பரிதியின் பார்வைக்கான பொருளை மட்டும் கண்டுகொள்ள முடியவில்லை.

மீண்டுமோர் பார்வை தேக்கம் அங்கே..!!  

‘ச்சே…’ என்று தலையை உலுக்கிக்கொண்டவள், “என்ன எல்லாம் சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்??!!” என,

“ஒண்ணுமில்ல வாணி…” என்ற ராதா, “சரி நீங்க பேசிட்டு சொல்லுங்க..” என்றுவிட்டார்.

கதிர் இப்போது அருண் முகத்தினை தான் பார்த்து நின்றான். நீ என்ன சொல்கிறாய் என்பதுபோல.

அவனும் “கொஞ்சம் டைம் கொடுங்க மாமா..” என, இப்போது பிருந்தாவை பார்த்தவன், உள்ளே சென்றுவிட,

பிருந்தாவோ “சொல்லிட்டு எதுவும் செய்ங்க.. இல்லன்னா இவ்வளோ பிரச்சனை தேவையா??” என்று கடிய,

ஒருவழியாய் அப்படி இப்படி என்று இளாவும், அருணும் கிளம்பிவிட்டனர். ஆக மொத்தம், எதை பேசவேண்டும் என்று வானதி அருணை சந்திக்க நினைத்தாளோ அதை தவிர மற்றது எல்லாம் சிறப்பாகவே நடந்துவிட்டது.

போகும் வழியில் இளா பாதியில் இறங்கிக்கொள்ள, அருண் அவன் வீடு போய் சேருவதற்குள் நடந்த அனைத்தையும் பிருந்தா தன் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட, அருண் வீட்டினுள் நுழையவுமே

“அருண் அப்பா உன்னோட பேசணுமாம்…” என்ற அம்மாவின் குரல் கேட்கவும், அவனுக்கு புரிந்து போனது.

“இதோ வர்றேன்..” என்றவன் உள்ளே அவரின் அறைக்கு செல்ல, அங்கே ரேணுகா தவிர மற்றவர்கள் இருந்தனர்.

அதிசயமாய் கோபி அந்நேரம் வீட்டில் இருக்க, வெற்றிவேலனோ “என்ன தம்பி.. அக்கா வீட்டுக்கு போயிட்டு வர்றியா??” என்று ஆரம்பித்தார்.

தெரிந்துகொண்டே கேட்பவரிடம் என்ன சொல்ல, அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் அமர,                       

 “டேய் சின்னவனே.. நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன்.. அப்பா சொல்றதை கேளு.. பேசாம வானதிய பேசி முடிச்சிடலாம்…” என்ற வெற்றிவேலனின் முகம் பார்த்து மறுப்பு சொல்ல முடியவில்லை அருணுக்கு.

மாறாக கோபியோ “ஏன்… ஏன் ப்பா நீங்க பிருந்தா சொல்றதையே கேட்கனும்னு இருக்கீங்க… இவனுக்கு வெளிய பொண்ணு பார்த்தா என்ன?? எங்களை எல்லாம் ஒருவார்த்தை கேட்க வேண்டாமா??!!” என,

அதியசமாய் அண்ணன் மறுத்து பேசுவதைக் கண்டு அருண் பார்க்க, வெற்றிவேலனோ அவனை கொலை செய்யும் பார்வை தான் பார்த்தார்.

‘எல்லாம் நீ இழுத்து வச்சதுதானேடா.. எப்போ என்ன நடக்கும்னு தெரியாம இருக்கோம்…’ என்று நினைத்தவர், 

“உன்னை நான் இங்க கூப்பிடவே இல்லையே..” என,

“ப்பா நடக்க போறது என் தம்பி கல்யாணம்..” என்று கோபி குரலை உயர்த்த,

“கோபி..!!!” என்று அதட்டியவர், “உன்னை எப்போ  கூப்பிட்டு பேசணும், எதுக்கு கூப்பிட்டு பேசணும்னு எனக்கு நல்லா தெரியும்… சரியா…” என்றவர், மனைவியிடம் “இளா வெளிய இருந்தா கூப்பிடு..” என,

“அவன் வீட்டுக்கு போயிட்டான் ப்பா…” என்றான் அருண்..

“ஓ..!!!” என்று யோசித்தவர்,    “அப்படியே, நம்ம சொந்தத்துலயே நல்ல பொண்ணா பார்த்து இளாக்கும் கல்யாணம் பண்ணிடனும்.. அவங்கப்பா அம்மாட்ட கூட பேசிட்டேன்.. அவங்களும் பார்த்துட்டு தான் இருக்காங்க.. நம்ம வகையாரா தானே.. தோதா வந்தா பேசிடலாம்…” என்று சொல்ல,

சரோஜாவோ “இதுவும் நல்ல யோசனை.. அவனுக்கும் கல்யாண வயசு தானே…” என்று சொல்ல,

அருண் கூட “அட ஆமால்ல.. இதுவும் நல்ல யோசனை தான் ப்பா…” என்று சந்தோசமாய் சொல்ல, இவர்கள் அனைவரின் இந்த சந்தோசம் துளி கூட கோபியின் முகத்தினில் இல்லை.

இளம்பரிதியிடம் கேட்காமலேயே அவனின் வாழ்விற்கான முடிவுகளை இவர்கள் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

இது எதுவும் அறியாத இளம்பரிதியோ விஜயனிடம் “ப்பா கடை பொறுப்பை என்கிட்டே விட்டுடுங்க… நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்லிக்கொண்டு இருக்க,

“என்னடா.. இப்போ என்ன திடீர்னு.. விஸ்தாரணம் பண்ண சரி.. இப்போ என்கிட்டவே கொடுன்னு சொன்னா??” என்று விஜயன் கேட்க,

“சும்மால்லாம் என்னால இருக்க முடியலைப்பா.. நீங்களும் சின்ன வயசுல இருந்து உழைச்சுட்டீங்க.. கொஞ்சம் ப்ரீ விடுங்க…” என்று இலகு போலவே கேட்டாலும், அவனின் தொனியில் நிஜமாகவே அப்பாவினைக் கொண்டு ஓர் வருத்தம் இருந்தது தான்.

அவன் பார்த்து அவர் அந்த லுங்கியும் கை பனியனோடு தான் கடையில் இருப்பார். உடன் ஆள் போட்டு பாருங்கள் என்று சொன்னாலும் இல்லைதான். வீட்டு வேலை முடித்து மோகனா கணவருக்கு உதவியாய் செல்வார். இப்போது  விஸ்தாரணம் செய்த பின்னே சொல்லி சொல்லி வெள்ளை வேட்டி சட்டையில், இளாவின் பிடிவாதத்தின் பேரில் கடையில் இருவர் வேலையில் இருந்தனர்.

பொருளாதார ரீதியாக எத்துனை ஏற்றங்கள் வந்தாலும், அப்பாவிடம் எவ்வித மாற்றமும் இல்லை என்பது இளா உணர்ந்தே இருந்தான். இப்போதும் அவன் கேட்டதற்கு பதில் சொல்லாதவர், கல்லாவில் பில் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருக்க,

“ப்பா..!!” என்றான்.

“ம்ம்…”

“ஒண்ணுமே சொல்லலைன்னா எப்படி??!!”

“பேரன் பேத்தி எல்லாம் வந்த பிறகு தான் ஓய்வு எல்லாம்.. அதுவும் கூட அதுங்களை வளர்க்கத்தான்.. புரிஞ்சதா…” என,

‘போச்சுடா.. இப்போ அடுத்த விஷயமா??!!!’ என்று எண்ணியவனுக்கு, தன்னைப்போல் சிரிப்பும் வந்துவிட்டது.

அவனுக்குத் திருமணமா??!!

யோசித்துப் பார்த்தான்.. செய்துகொண்டால் தான் என்ன என்று தோன்றியது??!! பெண்களை நினையா மாமுனியும் அல்ல அவன்.. பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா பரிசுத்த இளைஞனும் அல்ல அவன்..

இயல்பான… இறுக்கமான… சற்றே கொஞ்சம் அலட்சியம் கொண்ட, சாதாரண மனிதனே…!!

Advertisement