Advertisement

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 6

வானதிக்கு வேண்டுமானால் இளம்பரிதி பற்றி தெரியாது போகலாம். ஆனால் அருணுக்கு நன்கு தெரியுமே. அவன் சொல்லியிருப்பானா என்ன?!! எப்படியும் பிருந்தா அடுத்து இளாவிற்கு தான் அழைப்பாள் என்று தெரியும் ஆக, அவள் பேசும் முன்னம் தான் பேசிவிட வேண்டும் என்று அருண் நினைக்க, 

இளம்பரிதிக்கு விடாது பிருந்தாவும், அருணும் அழைப்பு விடுக்க, ‘அட என்னங்கடா இது…’ என்றாகிப்போனது அவனுக்கு..

அருணும் வானதியும் இருக்கும் ஹோட்டல் தாண்டி சற்று தொலைவில் தான் வந்து நின்றிருந்தான். என்ன இருந்தாலும் அருண் மீண்டும் அழைப்பான் என்று தெரியும். ஆனால் இப்படி விடாது அழைக்க, கூடவே இடையில் பிருந்தா வேறு அழைக்க,

‘இதென்ன இப்படி…’ என்று பார்த்தவன் அருணின் அழைப்பை ஏற்று “பேசி முடிச்சிட்டன்னா வந்து சேறு…” என்று தான் இருக்கும் இடம் சொல்ல,

“டேய் பரிதி.. அதில்ல டா… ஒரு பிரச்னையாகி போச்சு..” என்று அருண் சொல்லவும்,

“என்னது??!!” என்றான் அசராது..

“வானதி வீட்டுக்கு நாம்ம எல்லாம்  மீட் பண்ணது தெரிஞ்சு போச்சுடா….” என,

“நாம்ம இல்ல.. நீங்க…” என்றான் இளம்பரிதி அவன் சொன்னதை திருத்தி.

“ம்ம்ச்.. ஆமா நாங்க தான்… இப்போ அக்கா போன் பண்ணிட்டா…” என,

“அக்கா உனக்கு மட்டும் பண்ணல.. எனக்கும் தான்…” என்று இளாவும் சொல்ல,

“இப்போ என்னடா பண்றது??” என்ற அருணை, வானதி எரித்துவிடுவது போல் பார்த்தாள்.

சொன்னவனிடமே என்ன செய்வது என்று கேட்டால்??!!! அப்படித்தான் அவள் நினைக்க, அருணோ அப்போதும் அவன் இல்லை என்று மறுப்பாய் தலையை ஆட்டினான்.

இளாவோ “என்னைக் கேட்டா.. நானா ரெண்டு பேரையும் மீட் பண்ணுங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்… யார் வர சொன்னாங்களோ அவங்கக்கிட்ட கேளு…” என்ற இளா வைத்துவிட்டான்.

அவனுக்குப் புரிந்து போனது, இந்த ஒற்றை புள்ளியை வைத்தே பிருந்தா பல வர்ணம் தீட்டி பெரும் கோலம் ஒன்றை போட்டுவிடுவாள் என்று.

என்னவோ செய்துகொள்ளுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு புரியாது போல என்று நினைத்து முடிக்கவில்லை மீண்டும் அருண் அழைத்து “வச்சிடாதடா…” என,

“ம்ம் என்ன பொய் சொல்லனுமா அக்காட்ட..” என்றான் இளாவும்.

“இல்ல.. அது…” என்று இழுத்தவன் “நீயும் நானும் வந்த இடத்துல வானதிய மீட் பண்ணோம்னு சொல்லிருக்கேன்…” என,

“அதுக்கு…??!!”

“நீயும் அப்படியே சொல்லுடா…”

“என் நேரம்… சீக்கிரம் வந்து சேரு…” என்று இளம்பரிதி சொன்னவனுக்கு,     

எக்காரணம் கொண்டும் தான் இதில் தலையிடக்கூடாது என்று எண்ணியவனை விதி விட்டால் தானே. அதுவும் பிருந்தாவின் ரூபத்தில் அழைப்பு விடுக்க, “சொல்லுக்கா…” என்றான் எடுத்ததுமே.

“அப்போ இருந்து கூப்பிட்டேன்…”

“வண்டிக்கு டீசலடிக்க வந்தேன்…”

“ம்ம் என்னடா நடக்குது அங்க.. அருணும் வானதியும் மீட் பண்ணாங்களா??!!” என்று ஒன்றும் அறியாதவள் போலக் கேட்க,

“அருண்கிட்ட இதை கேட்க வேண்டியதுதானே…” என்றான்.

“டேய் டேய்.. அவன்கிட்ட கேட்காமலா… அவன்கிட்ட கேட்டதுக்கு நானும் இளாவும் வந்தோம் அப்படிங்கிறான்.. அப்படியா…”

“அதான் சொல்லிட்டானே…”

“அப்போ நீ ஏன் அங்க இல்ல.. அவங்களை தனியா ஏன் விட்டு வந்த.. அவங்க பேசணும்னு தானே…”

“ம்ம்ச்… இப்போ உனக்கு என்ன தெரியனும்.. அவங்க பேசினாங்களா இல்லையான்னா?? ஏக்கா அதை அவங்கட்ட கேட்டாலே சொல்லிட்டு போறாங்க.. இதுக்கேன் நீ இவ்வளோ சீன் கொடுக்கிற.. இங்க பார் ஜஸ்ட் வந்த இடத்துல பார்த்தோம்.. அவ்வளோதான்..” என்று இளம்பரிதி, பிருந்தாவிடம் அருணை விட்டுக் கொடுக்காது தான் பேசினான்.

பிருந்தாவோ இவனிடம் இப்படியெல்லாம் கேட்டால் விஷயம் வராது என்றெண்ணி “அப்போ ரெண்டு பேரும் இவ்வளோ தூரம் வந்துட்டு ஏன் வீட்டுக்கு வரலை…” என்று அடுத்து பேச,

‘அடுத்த பால் போடுதே இந்தக்கா…’ என்று யோசித்தவன், அங்கே போகாமல் இதனை இவள் முடிக்கமாட்டாள் என்று நினைத்தவன்,

“வர்றோம்…” என்று வைத்துவிட்டான்.

இதற்கிடையில் அருண் பலமுறை அவனை அழைத்துவிட, “அங்க தான் வர்றேன்.. அக்கா வீட்டுக்கு போகணும்..” என்ற இளா, மீண்டும் அங்கே ஹோட்டல் செல்ல, வானதி முகத்தினில் கடுகு போட்டால் தெரித்து விடும் அளவு கடுகடுப்பில் நின்றிருக்க,

“போலாமா…” என்றான் இளம்பரிதி அருணிடம்.

“ம்ம்..” என்று தலையை ஆட்டியவன், வானதியைக் காண, “நீங்க முன்ன போங்க.. நான் அடுத்து வர்றேன்.. எல்லாம் ஒண்ணா போக வேணாம்..” என்று அவள் சொல்லும் போதே, இளம்பரிதி காரினைக் கிளப்பிவிட்டான்.

ஏனோ தன்னை சுற்றி தேவையில்லாத விஷயங்கள் நடப்பதாய் அவனுக்கு இருக்க, முதலில் இவர்களிடம் எல்லாம் இருந்து எத்துனை தூரம் விலகி செல்லவேண்டுமோ அத்துனை தூரம் செல்ல வேண்டும் என்று முடிவு அவனுக்குள் அந்நொடி மிக ஆழமாய் பதிந்தது.

அருணோ காரில் புலம்பியபடி வர, “அவ சொன்னான்னு வந்த தானே.. இப்போ சமாளிச்சு தான் ஆகணும்.. ஏன் தனியா பேசணும்னா முதல்ல போன்ல என்ன விசயம்னு பேசிட்டு பின்ன எல்லாம் ஓகேன்னா அடுத்து நேர்ல மீட் பண்ண வேண்டியது தானே.. ஏன் வீட்லயே ரெண்டு பேரும் நேர்ல பேசிட்டு சொல்றோம்னு சொன்னா என்ன சொல்லிட போறாங்க.. இப்போ பார் எவன் பார்த்து சொன்னான்னு தெரியலை..

இந்த பேச்சு இதோட நின்னா பாரவாயில்லை… இதெல்லாம் யோசிக்க மாட்டியா நீ…” என்று பிருந்தாவின் வீடு போய் சேரும் வரைக்கும் கூட இளா அருணை அர்ச்சித்துக்கொண்டு தான் வந்தான்.

நல்லவேளை அங்கே கதிர்வேலன் இல்லை. இருந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பானோ? கேட்டிருப்பானோ?

தம்பிக்கள் இருவரும் மட்டும் வர வாசலில் நின்றவளோ “என்னடா ரெண்டு பேரும் வர்றீங்க.. வானதி எங்க??” என்று பிருந்தா கேட்க,

“அவங்க அப்போவே கிளம்பிட்டாங்க..” என்றான் அருண் சகஜம் போல..

‘அவங்க… ளா… வா…’ என்று பிருந்தா முகம் சுறுக்கி பார்க்க, இளா அங்கே கார் அருகேயே நின்றுகொள்ள,

“டேய் உள்ள வா…” என,

“நான் வரல.. நான் இப்படியே பஸ்ல கூட போறேன்…” என்று அவனும் சொல்ல,

“வாடா நீ…” என்று பிருந்தா அவனை இழுத்துக்கொண்டு தான் சென்றாள்.

அருணுக்கு இந்த அக்கா என்ன செய்யப் போகிறாளோ என்று இருக்க “சொல்லுடா என்ன விசயமா மீட் பண்ணீங்க…” என்று திரும்ப ஆரம்பிக்க, சரியாய் ராதாவும் வந்து சேர்ந்தார்.

“வாங்கப்பா…” என்று இருவரும் பொதுவாய் வரவேற்ப்பை வைத்துவிட்டு “நீங்க பேசுங்க…” என்று சொல்லி, போகும்போது மருமகளை ஒரு பார்வை வேறு பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.

ராதா அந்தப்பக்கம் நகரவும் “அக்கா நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லை…” என்று அருண் சொல்ல,

அவளோ “நான் என்ன நினைச்சேன்னு உனக்கு தெரியுமா??” என, இப்படியே இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, சரியாய் வானதியும் வந்துவிட்டாள்.

அவள் வரவும் சட்டென்று அங்கே ஓர் மௌனம். இளா பக்கம் அவளின் பார்வை கூட பதியவில்லை.

“வாங்க…” என்ற வரவேற்பு அருணை பார்த்து மட்டும். அதுவும் ஓர் தலையசைப்பில்.

‘சரிதான் போ டி..’ என்ற மிதப்பில் தான் நின்றான் இளம்பரிதி.

“என்ன வானதி இவங்க வந்துட்டாங்க.. நீ எங்க போன..??” என,

“வேலை விசயமா தான் வெளிய போனேன்.. போன வேலை முடிக்கணும் தானே அண்ணி…” என்று திணறாமல் வானதி பேச,

‘இந்த பொண்ணு எப்படி பேசுது.. இவனும் இருக்கானே…’ என்று இளம்பரிதியின் மனது அருணை கடிந்தது.

“ஓ..!! என்ன வேலை…??”

“என் காலேஜ் மேட் அப்பாவோட ஹோட்டல் தான் அது… நிறைய பேர்ட்ஸ் அங்க ஹோட்டல்ல வச்சிருக்காங்க.. சோ என்னமாதிரி கேர் டிப்ஸ் பாலோ பண்ணனும் கேட்டாங்க… போதுமா அதுக்குதான் போனேன்..” என,

‘அம்மாடி… இவ என்ன பூசணிக்கா தோட்டத்தையே ஒருவாய் சோறுல மறைப்பா போல…’ என்று எண்ணியது யாராக இருக்க முடியும்..

இளம்பரிதியே..!!

அருணோ திகைத்துப் போய் தான் பார்த்துக்கொண்டு இருக்க, பிருந்தா மட்டும் என்ன லேசுபட்டவளா, எதையும் நம்புவதாய் இல்லை.

அவளுக்கு அவள் நினைத்தது நடந்திட வேண்டும். அதற்கு இவர்கள் வாயில் இருந்து ஏதேனும் ஒன்றை தனக்கு சாதகமாய் வரவைக்க வேண்டும். 

அடுத்து என்ன கேட்பது என்று யோசித்துக்கொண்டு இருக்க, “சரி கிளம்புவோமா..” என்று இளம்பரிதி அருணிடம் கேட்க,

அவனும் “போலாம்…” என்று எழுந்துவிட்டான்.

“அட இருங்கடா… சாப்பிட்டு போகலாம்..” என்றவளுக்கு இந்நேரம் இங்கே கதிர் இருந்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்ற,

“வானதி நீ உங்கண்ணாக்கு கால் பண்ணு.. வர்றப்போ கடைல மட்டன் பிரியாணி சிக்கன் எல்லாம் வாங்கிட்டு வர சொல்லு..” என்று அடுத்து பேச்சினை மாற்ற,

“க்கா என்னால முடியாது… எனக்கு வேலை இருக்கு.. தெய்வா ஊருக்கு போறா சாயங்காலம்.. நான் கிளம்பனும்..” என்று உறுதியாய் நின்றான் இளம்பரிதி.

ஏனோ அவனுக்கு அங்கே இப்போது இருக்க பிடிக்கவில்லை. பிருந்தாவோடு பேசுவது வேறு.. அதிலும் இப்போது வானதி என்ற ஒருத்தி வேறு.. அதிலும் அவர்களின் திருமண விஷயம் வேறு..

சங்கடமாய் இருந்தது..!!

“அதெல்லாம் முடியாது.. மாமா வரவும்.. இருந்து சாப்பிட்டு தான் போகணும்..” என்று பிருந்தா சொல்லிவிட,

‘இவனை இவ்வளோ தாங்கணுமா??!!’ என்று அப்போதும் வானதிக்கு தோன்ற, ‘பெரிய இவன்…’ என்று அவள் முனுமுனுப்பு செய்தது, அருண் மற்றும் இளம்பரிதி இருவருக்குமே நன்று கேட்டது.

இப்போதும் கூட வானதிக்கு, இளம்பரிதி தான் பிருந்தாவிடம் எதையோ சொல்லி இப்போ நல்லவன் போல இப்படி பேசுகிறான் என்ற நினைப்பு. வேறு யார் சொல்லியிருக்கப் போகிறார்கள் என்ற யோசனையே அவளுக்கு வரவில்லை. 

இருந்தும், இது தங்கள் குடும்ப விஷயம்.. அதுவும் தன் திருமண விஷயம்.. அதை மூன்றாமவன் முன்னம் பேசிட அவளுக்கு இஷ்டமில்லை.

அன்று கார் எடுக்கச் சொன்னாள் அதான்.. அது அவன் அங்கே வேலையில் இருப்பவன் என்ற நினைப்பில்.. இப்போதும் அப்படியே.. இவன் எல்லாம் என் திருமண விஷயம் பேசிட வேண்டுமா??!!

இது தோன்றவுமே “அண்ணி இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்?? நாங்க சொல்லி வச்சு மீட் பண்ணோமா இல்லை எதேர்சையா மீட் பண்ணோமானு தானே??” என்று காட்டமாகவே கேட்க,

வேலையாள்  போட்டு வாய்த்த ஜூசை எடுத்துக்கொண்டு வந்த பிருந்தா, இவர்களிடம் நீட்டியபடி “அட நீங்க மீட் பண்ணது சந்தோசம் தான் எனக்கு…” என்று அப்படியே சொல்ல,

“அண்ணி…” என்று வானதி எதுவோ சொல்ல வரும்போதே, “நீ சொல்லுடா இளா…” என்று பிருந்தா இளம்பரிதியிடம் கேட்டுவிட்டாள்.

Advertisement