Advertisement

                         என்னிதயம் கேட்ட ஆறுதல் – 5

‘வானதியா??!!!’ என்று அருணின் உள்ளம் திடுக்கிட, “அ..!! அ… சொல்லுங்க…” என்றான் தன் பதற்றம் மறைக்க பெரும்பாடு பட்டு.

இருந்தும் அது வானதிக்கு நன்கு தெரிந்து விட “கூல்…” என்றாள் மெதுவாக.

அருணோ இதற்கு தான் என்ன பதில் சொல்ல என்பதுபோல் விழித்து நிற்க “ஆக்சுவலி… உங்களோட நான் கொஞ்சம் பேசணும்…” என்று அடுத்து வானதி சொல்ல,

‘பேசணுமா??!!’ என்று மேலும் திடுக்கிட்டான்.

பதிலேதும் சொல்லாது அருண் அமைதியாகவே இருக்க “ஹெலோ…. லைன்ல இருக்கீங்களா??!!” என்று வானதி திரும்பக் கேட்க,

“ஹா..!! இருக்கேன்…” என்றான் வேகமாய்.

என்ன முயன்றும் அவளைப் போல இலகுவாய் பேச அவனுக்கு வரவில்லை. இதற்கும் பெண்களிடம் பேசாதவனே இல்லை. பெண்களோடு பழகாதவனும் இல்லை. ஒன்றுக்கு இரண்டு காதல் கொண்டு. அதில் தோல்வியும் கண்டவன்..

சரி எப்படியும் வீட்டினில் பார்க்கும் பெண் தான் தனக்கு என்று எண்ணியிருந்த வேலையில், அப்பெண் வானதி என்றதும் தான் சற்று ஜீரணிக்க முடியவில்லை. இதற்கும் அவளுக்கு நடந்த அத்துனையும் அவனுக்குத் தெரியும்.

இதற்கும், பிருந்தாவின் திருமணத்தின் போது ‘செம பிகர்…’ என்று இவளை சைட் அடித்தவனும் கூட.

இவன் மட்டுமல்ல, உடன் இளம்பரிதியும் கூட..

பின்னே நண்பர்கள் ஆயிற்றே… இளாவிற்கு வானதி, கதிரின் தங்கை என்று அப்போது தெரியாது.

“யார்றா இந்த பொண்ணு.. செமையா இருக்கா…” என்று இளம்பரிதி தான் முதலில் அருணிடம் கேட்டான்.

“செமையா இருக்காள்ல…” என்ற அருணும், “கதிர் மாமா தங்கச்சிடா..” என, அப்படியே இளாவின் பார்வை மாறிவிட்டது.

பின்னே.. பிருந்தாவின் நாத்துனார் என்கையில் இப்படியெல்லாம் பார்க்கக் கூடாது தானே.

“ஓ..!! சரி சரி…” என்றவன் பின் அவளைப் பற்றி எதுவும் பேசாது இருக்க, இதனைக் கவனித்த அருண் “டேய்.. நீ என்ன திடீர்னு நல்லவன் ஆகிட்ட.. சைட் அடிக்கிறதுல தப்பே இல்லை.. அழக ரசிக்கணும்டா பரிதி..” என்று ஊக்க,

“நீ சும்மா இரு.. வேலை இருக்கு…” என்று நழுவி விட்டான் இளம்பரிதி.

முதல் ஒருமுறை ஆவலாய் அவள்புறம் பார்வை பதிந்தது நிஜமே. இருந்தாலும் வானதி யார் என்று தெரிந்ததும் ரசிக்கப் பார்ப்பது கூட தவறு என்று அத்தோடு அதனை அப்படியே விட்டும் விட்டான்.

பின் அவளின் திருமணம், அதில் நடந்த களேபரங்கள் எல்லாம் தெரியும் ஆதலால், மனதில் பெரிதாய் எவ்வித பாதிப்பும் இல்லை. இந்த காலத்தில் எத்தனையோ பார்க்கிறோம்.. கேட்கிறோம்.. படிக்கிறோம்.. அதுபோல் இதுவும் ஒன்று என்று இருக்க, கடைசியில் அருண், வானதி திருமணத்திற்கு தன்னையே பிருந்தா தூது செல்ல அனுப்பவும் தான் இளம்பரிதி கடுப்பாகிப் போனான்.

இவனுக்கு இப்படியெனில், அருணின் மனதிலோ ‘ஏன் முதல்லயே எனக்கு கொடுக்கணும்னு தெரியலையா?? இப்போ என்ன நான் செக்கன்ட் சாய்ஸ்…’ என்கிற நினைப்பு.

முதலில் பிருந்தா, வெற்றிவேலனிடம் பேசியது வீட்டில் யாருக்கும் தெரியாதே. வேண்டாம் என்றவர் “வீட்ல யாருக்கும் தெரியவேணாம். தேவையில்லாத மன கசப்பு வரும்…” என,

“புரியுதுப்பா.. நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டாள்.

இப்போது வானதியின் திருமண வாழ்வு சறுக்கல் என்றதும் மட்டும் தனக்கு திருமணம் செய்துவைக்கப் பார்க்கிறார்கள் என்று அருணுக்கு மனதில் ஒரு சோகை.

அதையும் தாண்டி, என்ன இருந்தாலும் என்னை இரண்டாவது கணவன் என்றுதானே சொல்வார்கள் என்ற எண்ணம் அவனுள் ஆழமாய் பதிந்தும் போயிருந்தது. இதற்கு எப்படி வீட்டினில் சம்மதம் சொன்னார்கள் என்ற வினாவும் கூட.

இதெல்லாம் சேர்ந்து ஒரு எரிச்சல் கொடுக்க, அதனைக் கொண்டே அவன் தப்பித்துக்கொண்டு இருக்க, இப்போது அவளே அழைத்து பேசவேண்டும் என்று சொல்ல, அவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை.

அதற்குள் வானதி இரண்டுமுறை “ஹெலோ…” என்ருவிட்டாள்..

“எஸ்… சொல்லுங்க…” என,

“நீங்க பிசியா.. நான் வேணா அப்புறம் கால் பண்ணவா??!” என்று வானதி யோசித்துக் கேட்க,

“இல்ல பரவாயில்ல சொல்லுங்க…” என்கையில் ஒரு நிதானத்திற்கு வந்திருந்தான் அருண்.

“ஒன்ஸ் நம்ம பேசினா நல்லதுன்னு நினைக்கிறேன்..” என்றவள் பின் சிறு இடைவெளி விட்டு “உங்களுக்கு விஷயம் தெரியுமா??!!” என்றாள் வேகமாய்.

‘அப்போ இவளுக்கு இப்போ விஷயம் தெரிஞ்சிடுச்சு போல…’ என்றெண்ணியவன், “ம்ம் சொல்லுங்க..” என,

“நான் உங்களோட பேசணும்…” என்றாள் மறுபடியும்.

“ஓ!!! ஓகே.. நான் வீட்ல கேட்டுட்டு சொல்றேன்…” என்று அருண் சொல்ல, “ஓ..!! நோ நோ… நோ.. இப்போதைக்கு வீட்ல பெரியவங்க யாருக்கும் தெரியவேண்டாம்…” என்று முன்னை விட வேகமாய் சொல்ல,

“ஏன்??!!” என்றான் குழப்பமாய்.

“இல்ல இப்போ நம்ம மீட் பண்றோம் அப்படின்னா அவங்களா எதுவும் நினைச்சுப்பாங்க.. வேணாம்.. தேவையில்லாத ஹோப்ஸ் கொடுக்க வேண்டாம்…” என, அவள் சொல்வது சரியாய் இருக்க,

“யா ஓகே…” என்று அருண் சொன்னதும், எங்கே எப்போது என்று வானதி கடகடவென்று சொல்லி, பேசி முடித்து போனை வைத்தும் விட்டாள்.

ஆனால் அவள் வைத்தபிறகும் கூட அருணுக்கு அந்த அதிர்ச்சி விலகவில்லை. என்ன பேச போகிறாள் என்ற யோசனை வேறு ஒருபுறம் இருக்க யோசிக்காது அவன் அழைத்தது இளம்பரிதிக்கு தான். 

அருணது அழைப்பு என்றதும் முதலில் எடுக்காதவன், இவன் விடாது அழைக்கவும் எடுத்து சுவாதீனமாய் ஹலோ என, “இளா எங்கடா இருக்க??” என்று கேட்ட அருணின் குரலிலேயே என்னவோ என்று புரிய,

“என்ன விஷயம் சொல்லு…” என்றான் இளம்பரிதியும் தன்மையாகவே.

“வானதி கால் பண்ணாடா…”

“வா..” என்று அவள் பெயர் சொல்வதற்கு முன்னமே ஒரு யோசனை வந்தோட, “என்னவாம்??!” என்றான் இலகுவாய் கேட்பது போல்.

“என்னோட பேசணுமாம்…”

“ஹா…!!!” என்று ஒரு அதிர்வு இளாவினுள் இருந்தாலும், “சரி பேசுங்க.. அதுக்கென்ன..” என,

“டேய்.. டேய்… யாருக்கும் தெரியாம பேசணும் சொல்றா…” என்று அருண் சொல்ல சிரித்துவிட்டான் இளம்பரிதி.

“கெட்ட வார்த்தைல திட்டிடுவேன் சிரிச்சு வைக்காத…”

“நீ எப்படி திட்டினாலும் இப்போ நீ கொடுத்த ரியாக்சன்க்கு எனக்கு சிரிப்புதான் வரும்.. பொம்பள புள்ள அதுவே கூப்பிட்டு பேசணும்னு சொல்லுது.. தைரியமா போவியா… அதைவிட்டு எனக்கு கூப்பிட்டு கூவிட்டு இருக்க…” என,

“டேய்.. என்ன கிண்டலா.. வேணாம் பரிதி..” என்று அருண் முறுக்க,

“போடா டேய் போடா.. வந்துட்டான்..” என்று இளாவும் நக்கலடிக்க,

“இப்போ சொல்றேன்டா.. உனக்கும் ஒருநாள் இப்படி என் நிலைமை வரும்.. என்ன செய்றதுன்னு தெரியாம, நீயும் இப்படி ஒருத்திக்கிட்ட சிக்கி முழிப்ப.. அப்போ இருக்கு உனக்கு.. அப்போ நான் சிரிப்பேன்.. இதைவிட சத்தமா…” என்று அருண் கொடுத்த சாபம் கண்டு இளம்பரிதிக்கு மேலும் மேலும் சிரிப்புப் பொங்கியது.

பின்னே வானதி போல் ஒருத்தியா??!!

அதுவும் இளம்பரிதியின் வாழ்விலா??!!

நினைத்தாலே சிரிப்பு முட்டியது…

எப்படியும் அவனது அம்மா திண்டுக்கல் சுற்றிலும் இருக்கும் கிராமத்தில் தான் பெண் பார்ப்பார். அவரின் சொந்தபந்தங்கள் எல்லாம் அங்கே தான்.. எப்படியேனும் பிறந்த வீட்டு பக்கம் இருந்து மருமகள் கொண்டு வந்திட வேண்டும் என்று மோகனாவின் விருப்பம் என்று இளாவிற்கு நன்கு தெரியும்.

அப்படி இருக்க வானதி போலொருத்தியா??!!

ஏனோ லேசாய் இதயம் ஸ்தம்பிப்பது போலிருந்தது..!!

“டேய் இருக்கியா…” என்று அருண் லைனில் கத்த,

“சொல்லித் தொலை…” என்றான் இளம்பரிதி.

“மீட் பண்ணனும்னு சொல்றாடா.. என்ன செய்ய..??!!”

“ஏதாவது செய்.. என்னை ஏன் கேட்கிற??!!” என்றான் விட்டேத்தியாய்.

“வீட்ல தெரியாம பேசுறது எல்லாம் சரி.. ஆனா தனியா போக எப்படியோ இருக்குடா.. என்ன இருந்தாலும் மாமாவோட தங்கச்சி…” என, அவன் சொல்ல வருவது நன்கு புரிந்தது இளம்பரிதிக்கு.  

“சரி அதுக்கு..?!!!” என்றான் எங்கே தன்னையும் வா என்றிடுவானோ என்று..

அவன் எண்ணியது போலவே அருண் “அதனால நீயும் என்னோட வா…” என,

“டேய்… ***” என்று திட்டியவன், “உனக்கு வந்து விளக்கு புடிக்கனுமா நான்..” என்று  எகிற,

“அதெல்லாம் தெரியாது நீ வர்ற..” என்று ஒற்றைக்காலில் நிற்காத குறையாய் நின்று.. பிடிவாதம் செய்து ஒருவழியாய் இளாவை அழைத்தும் கொண்டு சென்றுவிட்டான் அருண். 

அங்கே சென்றாளோ, அருண் கார் விட்டிறங்க, இளா காரிலேயே இருக்க “டேய் வா டா…” என்று அருண் சொல்லும் போதே, வானதியும் அவளின் காரில் வந்துவிட, முதலில் இளம்பரிதியைத்தான் பார்த்தாள்.

அதுவும்   ‘இவன் ஏன் வந்தான்??’ என்பது போல் பார்க்க, அது வெகுவாய் இளம்பரிதியை சீண்டிவிட்டது.

“நான் கிளம்புறேன்…” என்று அருணிடம் சொல்ல, சரியாய் அதே நேரம் பிருந்தா இளம்பரிதிக்கு அழைக்க “அக்காடா…!!!” என்றான் இளா, அருணிடம்.

ஒருவேளை தெரிந்தே அழைக்கிறாளோ என்று.

அருணோ “டேய் நீ தெரியாம கூட அக்காட்ட சொல்லிடாத…” என்று பதறி சொல்ல, அப்போதும் வானதி திடமாகவே தான் நின்றிருந்தாள்.

அழைப்பினை எடுக்காதவன், “உங்க எல்லாரோடவும் பெரிய ரோதனைடா எனக்கு.. விட்டு வந்தாலும் விடமாட்டேங்கிறீங்க…” என்றவனை,

‘தோடா..!! நீ அவ்வளோ பெரிய அப்பாடக்கரா…’ என்று பார்த்தாள் வானதி.

அருண் அக்காவிடம் சொல்லிவிடாதே என்று சொன்ன  சொற்களை விட, வானதியின் பார்வை தான் இளம்பரிதியை ஏதோ செய்ய, அலட்சியமாய் அவனின் போனை பாக்கெட்டில் போட்டவன்,

அருணிடம் “நீ என்னவோ செய்…” என்றுசொல்லி கிளம்ப, அதற்குள் வானதி நீங்க என்னவோ செய்யுங்கள் என்பதுபோல் அந்த ஹோட்டளினுள்ளே சென்றிருந்தாள்.

“என்னடா இந்த பொண்ணு இப்படி போகுது…”

“அந்த பொண்ணு போறது இருக்கட்டும்.. நான் போறேன் இப்போ…” என்று இளா கிளம்ப,

“டேய் டேய்… ப்ளீஸ்.. நீ வந்து அங்க வேற டேபிள்ள கூட இருடா…” என,

“ச்சே…. பெரிய தொல்லைடா.. வந்து தொலை.. ஆனா அந்த பொண்ணு ஏதாவது சொல்லுச்சு.. அவ்வளோதான்… என்ன செய்வேன் எனக்கு தெரியாது..” என்று இளா அவனிடம் சொல்லியே உள்ளே வர,     

“உங்களோட தான் பேசணும்னு வர சொன்னதா நியாபகம்…” என்றாள் வானதி.

அருணுக்கே ‘என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுது…’ என்று தோன்ற, வெளியிடத்தில் வேறெதுவும் பேசி பிரச்சனை வைத்துக்கொள்ள கூடாது என்று பொறுமை பொறுமை என்று இழுத்துப் பிடித்த பரிதி,  

“நான் கார்ல வெய்ட் பண்றேன்…” என்று விலகிப் போக,

“வேணாம்… நீ அங்க டேபிள்ல வெய்ட் பண்ணு…” என்று அருண் தடுக்க,

ஏனோ அந்த நொடி வானதிக்கு ஒரு நக்கல் சிரிப்பு மட்டுமே வெளிவந்தது. அது இளாவின் கண்ணிலும் பட,  “நீ என்னவோ பண்ணு… அந்த கண்றாவிய எல்லாம் என்னால பார்க்க முடியாது…” என்று வானதியைப் பார்த்துக்கொண்டே சொல்ல,

அருண் என்ன சொல்ல வந்தானோ, அதற்குள் வானதி “ஹெலோ.. என்ன??!!” என்று கேட்டுவிட்டாள்.

கொஞ்சம் திமிராகவேனும்..!!

அவ்வளோதான்..!! இளாவிற்கும் பொறுமை போய்விட, “ஏய் என்ன??!!” என்று அவனும் திமிறிக்கொண்டு வர, அருணின் நிலையை கேட்கவும் வேண்டுமா..

‘ஐயோ..!! என்ன இது…’ என்ற பார்வையே அவனிடம்.

இருந்தும் இருவரையும் சமாதானம் செய்ய முயல “நான் உங்களைத் தானே வர சொன்னேன்…” என்று வானதி கேட்க,

“போதும்டா நீ சொன்னதுக்காக வந்தேன் பாரு என்னை சொல்லணும்…” என்று கடிந்த இளா கிளம்பியே விட்டிருந்தான்.

இதற்கு இடையில், பிருந்தாவின் சற்றே நெருங்கிய தோழி ஒருத்தி அதே ஹோட்டலில் இவர்களைப் பார்த்துவிட்டு, பிருந்தாவிற்கு அழைத்து “என்ன பிருந்தா.. உன் தம்பியும் நாத்துனாவும் ஒண்ணா ஹோட்டல் வந்திருக்காங்க.. எதுவும் விசேசமா??!!” என்று கேட்டு வைக்க, பிருந்தாவிற்கு இது புது செய்தி அல்லவா..

தோழியிடம் பேசி மழுப்பியவள்,  ராதாவிடம் வந்து “வானதி எங்க அத்தை…” என,

“அவ எங்க வீட்ல இருக்கா.. நாய் பூனைன்னு கொஞ்ச போயிருப்பா…” என,

“இல்லத்தை அவ ஜிங்கிள்ஸ் போகலை…” என்றாள் பிருந்தா.

“அப்படியா..??!! அப்போ வேறெங்க போனா..” என்று ராதா சொல்லியபடி யோசிக்க,

“அருணை பார்க்க…” என்ற பிருந்தாவின் சொற்களில், ராதாவிற்கு நெற்றி சுருங்கினாலும்,

“என்ன சொல்ற நீ..??!!” என்றார்.

“ஆமா அத்தை…”

“இருக்காது பிருந்தா.. அவளுக்கு எதுவும் தெரியாது.. அப்படியிருக்கப்போ எப்படி??” என்று ராதாவும் மறுக்க,           

“அத்தை… வானதி அருண பார்க்கத்தான் போயிருக்கா…” என்று பிருந்தா சொல்ல,

“இல்ல பிருந்தா… அப்படி ஏதாவதுன்னா கண்டிப்பா வானதி என்கிட்டே சொல்லிருப்பா…” என்றார் ராதாவும் உறுதியாக.

“அத்தை.. என் பிரண்ட் நேர்ல பார்த்துட்டு எனக்கு சொல்றா.. அவங்க இருக்க இடத்துல தான் அவளும் இருக்காலாம்…” என்ற பிருந்தாவிற்குள் ‘எப்படியாவது நல்லது ஒன்று நடந்திட வேண்டும்…’ என்ற ஆசை.

“அப்படியா??!!” என்று யோசித்த ராதா, அடுத்து மகளுக்கு அழைத்துக் கேட்டேவிட்டார் “எங்க இருக்க நீ?? உன்னோட யார் இருக்கா??!” என்று.

“ஏன் ம்மா…” என்று வானதி சாதாரணம் போலவே கேட்க,

“நீ.. பிருந்தா தம்பிய பார்க்க போயிருக்கியா என்ன??” என்ற ராதாவின் கேள்விக்கு வானதிக்கு லேசாய் ஒரு திடுக்கிடல் இருந்தாலும், ‘யார் சொல்லியிருப்பார்கள்..’ என்று யோசித்தபடி, சுற்றி பார்வையை விட, சுற்றிலும் தங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை அவளுக்கு.

ஒருவேளை ‘அவனோ..!!’ என்று தோன்ற, ‘இவன் சொல்லிருப்பான்…’ என்று அவளுள் உறுதியாக,

“ம்மா நான் வீட்டுக்கு வந்துட்டு பேசுறேன்…” என்று மேற்கொண்டு அவர் பேச இடம் கொடாது பேசியவள், போனை வைத்துவிட்டு,

“உங்க பிரண்டுக்கு கால் பண்ணி கொடுங்க…” என்று அருணிடம் சொல்ல, அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.

“என்னாச்சு??!!” என,

“ஹ்ம்ம் நம்ம மீட் பண்ணதை அப்படியே அண்ணிக்கிட்ட சொல்லிருக்கான்.. அண்ணி, அம்மாக்கிட்ட சொல்லி இப்போ என்கிட்டே கேட்கிறாங்க.. ஜஸ்ட் கால் ஹிம் அண்ட் கிவ் இட் டூ மீ…” என்று அடக்கப்பட்ட கோபத்தில் வானதி பேச,

“நோ..!! அவன் அப்படி செய்ய மாட்டான்..” என்றான் அருண் அழுத்தம் திருத்தமாய்.

“அப்போ… எங்கம்மா எப்படி கேட்பாங்க??!! அவங்களுக்கு எப்படி தெரியும்…” என,

“ப்ளீஸ்.. கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க.. நா.. நான் அக்காட்ட பேசிக்கிறேன்..” என்பதற்குள் பிருந்தா அருணுக்கு அழைத்துவிட்டாள்.

“க்கா.. என்ன இது..” என்று அருண் எடுத்ததுமே கேட்க,

“என்னடா.. எனக்கு தெரியாம என்ன பண்றீங்க ரெண்டு பேரும்…” என்று கேட்டவளின் தொனியில் சந்தோசமே தெரிய,

 “க்கா.. க்கா… நீயா எதுவும் நினைக்காத.. நானும் இளாவும் ஜஸ்ட் இங்க வந்தோம்.. வந்த இடத்துல வானதி இருந்தாங்க.. அவ்வளோதான்…” என,

“அப்படியா??!!” என்று கேட்ட பிருந்தாவின் முகம் சோம்பல் காட்ட,

“ஆமா..!!” என்றான் அருண் அழுத்தம் திருத்தமாய்.

“சரி இளா எங்க.. அவன்கிட்ட போன் கொடு..”

“அவன் காருக்கு டீசல் அடிக்க போயிருக்கான்..” என்று அருண் அடுத்து அடுத்து பொய்களை அடுக்கிக்கொண்டே போக,

“சரிடா நான் இளாவுக்கே பேசிக்கிறேன்…” என்று பிருந்தா வைத்துவிட, அடுத்து அருணும் அழைப்பை துண்டித்துவிட்டு

“இளா சொல்லலை… வேற யாரோ..” என,

“இல்ல.. அவன்தான் சொல்லிருப்பான்.. அண்ணி க்ராஸ் செக் பண்றாங்க….” என்றாள் வானதியும் உறுதியாக.

Advertisement