Advertisement

                    என்னிதயம் கேட்ட ஆறுதல் – 4

அருண் மட்டும் இப்போது இளாவின் முன் இருந்திருந்தால், அவனை என்ன செய்திருப்பான் என்றே தெரியாது இளம்பரிதிக்கு. அப்படியொரு கோபம் அவன் மீது வந்தது. இப்படி இவனால் தான், தற்போது தனகிந்த தர்மசங்கடம் என்று இளா எண்ண, அவன் கையில் கார் படாத பாடு பட்டுக்கொண்டு இருந்தது.

வானதியைக் கொண்டு போய் வெற்றிவேலன்  வீட்டில் விட்டுவிட எண்ணித்தான் கிளம்பினான்.

அவளோ பழனிக்கு அல்லவா கொண்டு போய் விட சொல்லிவிட்டாள்.

வானதி சொல்கிறாள் என்று அவளை அங்கே கொண்டு போய் விட முடியுமா இல்லை, கதிரிடம் அல்லது பிருந்தாவிடம் கேட்டிட வேண்டுமா ??!!

கேட்க நினைத்து போன் எடுக்க, “அவங்களை கேட்க வேண்டாம்.. நீங்க கார் விடுங்க… யாரும் ஏதாவது சொன்னா நான் பார்த்துக்கிறேன்..” என்றவளின் குரலில் என்ன இருந்ததோ, எது இருந்தாலும் அதை அவனால் மறுத்திட முடியவில்லை அதுதான் நிஜம்.

அவள் சொல்வதை தான் மறுக்க முடியவில்லை என்பதே இளம்பரிதிக்கு பிடித்தமாய் இல்லை.

பின் எப்படி அந்த சூழல் பிடிக்கும்…?!!

ஒருமணி நேரத்தில் செல்லவேண்டியது… அவன் ஓட்டும் வேகம் பார்த்தால், அரைமணி நேரமே அதிகம் தானோ என்னவோ.

வானதி அவனைப் பார்த்தவள் “ஏன் இவ்வளோ வேகம்??” என,

“எனக்கு வேலை இருக்கு..?” என்றான் பட்டென்று.

அவள் அமைதியாய் வந்தாலாவது அவன் சும்மா இருப்பான். அவள் பேச்சுக் கொடுக்க, அவனுக்கு பட் பட்டென்று வந்து விழுந்தது வார்த்தைகள்.

யாரின் மீதோ இருக்கும் கோபத்தினை எல்லாம் இவளின் மீது கொட்டிக்கொண்டு இருந்தான்.

இளம்பரிதி இப்படி சொல்லவும், வானதிக்கும் சுள்ளென்று வர “ஹலோ… வேணும்னா சார்ஜ் வாங்கிக்கோங்க…” என,

“என்னது??!!” என்று கத்தியவன், காரை ஓரமாய் நிறுத்தியும்விட்டான்.

நிறுத்திய வேகத்தில் இறங்கியவன், “ஏய் இறங்கு…” என்று அப்போது கத்த,

“இங்க பாருங்க… இப்படி என்கிட்டே சத்தமா எல்லாம் பேசக் கூடாது…” என்றபடி அவளும் இறங்க,

“உனக்கு காது கேட்கும்னு எனக்கும் தெரியும்…” என்றவன், மரியாதையை கை விட்டு இருந்தான்.

அதை அவளும் கவனிக்கும் நிலையில் இல்லை. பிருந்தாவிடம் உரிமையாய் பேசலாம். ஆனால் பிருந்தாவின் நாத்தனாரிடம் என்ன உரிமை??!

‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்..’ என்கிற பார்வையில் தான் வானதியும் இறங்கியவள் “என்ன இது??!” என்று கடிய,

“என்ன சொன்ன நீ??!!” என்றான் ஏக வசனத்தில்.

“ஹலோ..!! என்ன??!!” என்று வானதியும் குரலை உயர்த்த, சாலையில் போவோர் வருவோர் எல்லாம் இவர்களைப் பார்க்க, இளா முதலில் சுதாரித்தவன்,

“இங்க பாரு.. நீ சொன்ன அப்டிங்கிறதுக்காக எல்லாம் நான் கார் எடுக்கல.. அக்காக்காக தான் எல்லாம்…” என்றான், அவளின் முகத்தினைக் கூட காணாது.

“ஓ..!! நீ உங்க அக்கா என்ன சொன்னாலும் செய்வியா??!!” என்று வானதி நக்கலாய் கேட்ட விதத்தில், இளாவின் தன்மானம் சீண்டப்பட,

“ஏய்… கதிர் மாமாக்காக இப்போ உன்னை நிறுத்தி வச்சு பேசிட்டு இருக்கேன்.. என்ன சொன்ன நீ.. சார்ஜ் வாங்கிக்கோவா?!! என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு…” என்றவன்,

“நீயாச்சு உங்க வீட்டு காராச்சு.. என்னவோ பண்ணு போ…” என்றவன் நடந்திட தொடங்கிவிட்டான்.

நின்றெல்லாம் இவளோடு பேசக் கூடாது… ‘சார்ஜ் வாங்கிக்கோவாம்.. சார்ஜ்… சார்ஜா நான் என்ன கேட்டாலும் கொடுப்பாளாமா??!!’ உள்ளம் குமுறியது இளம்பரிதிக்கு.

நடந்து போகும் அவனை பார்த்தவளுக்கு ‘நான் போய் இவனை கூப்பிடனுமா??!!’ என்று கேள்வி வர,

“நானா போக சொன்னேன்.. போனா போகட்டும்…” என்று பிடிவாதமாகவே நினைத்தவள், பின் சற்றும் தாமதிக்காது காரினைக் கிளம்பிக்கொண்டு சென்றுவிட்டாள்.

போகும் வழியெல்லாம் “என் தப்பு.. கார் எடுத்துட்டு நானே வந்திருக்கனும்.. இவனைக் கேட்டேனே அது என்னோட பெரிய தப்பு…” என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள, அவளுக்கெங்கே தெரியப்போகிறது வெற்றிவேலனே இளம்பரிதியோடு நயந்து தான் பேசுவார் என்று.

கார் எடுத்துக்கொண்டு இவள் வந்திட, நடந்து வந்தவன், அடுத்து வந்த வண்டியில் ஏறிக்கொண்டு வந்துவிட்டான்.

ஆனால் ஒன்று இருவருமே இதனை யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பிறர் சொல்லியிருக்கக் கூடும் என்று நினைத்திருக்கவும் இல்லை.

வீட்டிற்கு வந்தபின்னும் கூட இருவருக்கும் ‘என்மீதென்ன தவறு??’ இது தான் அவர்களின் மனதினில் இருக்க, மற்றவரை பற்றிய சிந்தனையோ “நீ என்னவோ செய்..” என்பதாகவே இருந்தது.

அன்று மாலையே கதிர், பிருந்தா, ராதா, தேஜுவென அனைவரும் வந்துவிட, வானதி அவளின் ‘ஜிங்கிள்ஸ்’ சென்றுவிட்டாள்.

அங்கிருந்து இவர்கள் கிளம்பும் வரைக்கும் கூட அருண் அங்கே வந்திருக்கவில்லை. இதுவே கதிருக்கு அத்தனை கோபம் கொடுக்க, வந்ததில் இருந்து முகத்தினை உர்ரென்று வைத்துக்கொண்டு இருந்தான்.

மறுநாளும் கூட வீட்டினில் இதுவே இறுக்கமான சூழல் தான். அன்றைய தினம் வெற்றிவேலன் வீட்டு பூஜை வேறு.. பிருந்தா அங்கிருந்திருக்க வேண்டும். ஆனால் கதிர் கிளம்பவும், சரோஜா மகளை அனுப்பிவிட்டார்.

“நீ இப்போ அவங்களோட தான் இருக்கணும்.. இங்க எதுன்னாலும் நாங்க பார்த்துக்கிறோம்..” என்று அனுப்ப,

வெற்றிவேலனுக்கு சொல்லவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. இருந்தும் மகளை மருமகனோடு அனுப்பிட, அவரின் ஒட்டுமொத்த கோபமும் தன் பிள்ளைகளிடம் தான் திரும்பியது.

கோபி எனக்கென்ன என்று இருக்க, அருண் தான் அங்கே வரவேயில்லையே.. பிருந்தா வேறு வழியே இல்லாது கிளம்பி வந்துவிட்டாள்.

மறுநாளோ காலை நேரத்திலேயே அருண் இளம்பரிதியின் வீட்டினில் இருந்தான். இளா அவர்களின் கடைக்கு சென்றிருக்க, இடையினில் வீட்டிற்கு வந்தவன், அருணைக் கண்டதும்,

“நீ என்ன இங்க பண்ற??!!” என்று கேட்டவனுக்கு பார்வை அப்படியே மாறி இருந்தது.

அங்கே அவனின் வீட்டினில் விசேசம் இருக்க, அருண் வந்து தன் வீட்டினில் அமர்ந்திருப்பது இளம்பரிதிக்கு வித்தியாசமாய் இருந்தது.

“ஏன்டா நான் வரக் கூடாதா…”

“வரலாம்தான்.. ஆனா..?” என்று இழுத்தவன் “இன்னிக்கு உங்க வீட்டு பூஜை தானே.. போகலையா நீ…” என,

“போலாம்  போலாம்… நீயும் வந்தா போலாம்…” என்றான் அருண்.

“நானா??!! எனக்கு வேலை இருக்கு…” என்றான் இளா பட்டென்று.

“அப்படி என்ன வேலை??” என்று அருண் கேட்கும்போதே,

“தெய்வா வர்றா அருண்.. அவளைப் போய் ரயில்வே ஸ்டேசன்ல கூட்டிட்டு வரனும்…” என்று மோகனா சொல்ல,

“ஓ..!!” என்று யோசனைக்குப் போன அருண் “அப்போ நாங்க ரெண்டு பேருமே கூட்டிட்டு வர்றோம்..” என்றான்.

இளாவோ பகிரங்கமாகவே முறைக்க “ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காத.. இன்னிக்கு ஒருநாள் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ இளா.. எனக்கு நிறைய யோசிக்கணும்… எங்க வீட்ல அதுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டாங்க.. சோ ப்ளீஸ்…” என,

“அப்போ எங்கம்மா சாப்பாடு வைக்கும் சாப்பிட்டு இதோ என் ரூம்ல போய் படுத்து தூங்கு.. என்னோடவே வராத…” என்று இளம்பரிதியும் சொல்ல,

“இளா என்ன பேச்சுடா இது…” என்று கடிந்தார் மோகனா.

“ம்மா நான் இவங்கட்ட வேலை விட்டு பல நாளாச்சு.. இப்பவும் என்னை சும்மா இருக்க விடுறது இல்லை யாரும்.. நான் என் வழியில போகணும்னு நினைக்கிறேன்.. இப்போ பாருங்க அங்க இவனை எல்லாம் தேடுவாங்க.. இவன் நேத்தும் போகலை.. இன்னிக்கு இப்படி…” என,

அருணோ “நான் போறப்போ போவேன் டா.. எனக்குத் தெரியும் எப்போ போகணும்னு.. என்னை கொஞ்சம் ப்ரீயா விடுங்க எல்லாம்..” என்று அவனும் அதே தொனியில் பேச,

“நீ என்னவோ பண்ணித் தொலை போ.. ஆனா யாரும் எனக்கு போன் போட்டு அவனை கூட்டிட்டு வா.. எங்க இருக்கான் பாருன்னு சொல்ல கூடாது..” என்றவன் கிளம்பியும் சென்றுவிட்டான் அவனின் தங்கையை அழைக்க.

வெற்றிவேலன் அங்கே கேட்பவருக்கு பதில் சொல்ல முடியாது இருந்தார். கோபியோ நல்ல பிள்ளை போல அனைத்தையும் பொறுப்பாய் செய்துகொண்டு இருக்க,

“மக எங்க?? சின்னவன் எங்க??” என்ற கேள்விகளுக்கு அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

“மில்லுல இன்னிக்கு புது மிசின் வருது.. சின்னவன் அங்க இருக்கான்… பிருந்தா மாப்பிள்ளை வீட்டு பக்கம் நெருங்கிய வீட்டு விசேசம் அங்க போயிருக்காங்க… நேத்து வந்தாளே.. ” என்று அவ்வப்போது வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி மழுப்ப, அன்றைய  தினம் பூஜை முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்து சேரும் முன்னம் போதும் போதும் என்றாகிப் போக,

கோபியை அழைத்தவர் “இங்க பார் என்ன செய்வியோ தெரியாது.. இளா பழையபடி இங்க வரணும்.. அருண் அந்த பொண்ணு வானதியை கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லணும்.. புரிஞ்சதா…” என,

“ப்பா… நானா இளாவை போகச் சொன்னேன்.. இல்லை நானா அருண் கல்யாணத்துக்கு குறுக்க நிக்கிறேன்..” என்று கோபியும் பதில் சொல்ல,

“டேய் வேணாம்.. உனக்காக நான் சும்மா இருக்கல, குடும்ப பேரு நீ பண்ண கூத்துல வெளிய போயிடக் கூடாதுன்னு சும்மா இருக்கேன்… சொன்னதை செய்யப் பாரு…” என்றுவிட்டு சென்றார் வெற்றிவேலன்.

அப்போதும் கோபிக்கு ‘ச்ச்சே யாரும் பண்ணாததையா நான் பண்ணேன்…’ என்கிற எண்ணமே.     

அங்கே பழனியில் ராதா மட்டுமே பிருந்தாவோடு முகம் கொடுத்து பேசினார்.       வானதி இப்போது முன்னைவிட அமைதியாகிப் போனாள்.  வீட்டினில் யாரோடும் பேசுவது எல்லாம் இல்லவே இல்லை. கதிருக்கு இப்போது அனைத்துக் கோபமும் பிருந்தாவின் மீது திரும்பிவிட்டது.

“உன்னால தான் நல்லா இருந்தவ கூட இப்படியாகிட்டா.. நாங்க கேட்டோமா உன் தம்பிக்கு பேசலாம்னு…” என்று ஒரே சண்டை அவளோடு.

இரண்டு நாட்களாய் அவன் வீட்டிற்கும் வரவில்லை. அவர்களின் ஹோட்டலிலேயே தங்கிக்கொண்டான்.

கதிர் இப்படி நடப்பான் என்று நினைக்காத பிருந்தாவோ, ராதாவிடம் “நான் நல்லதுதானே அத்தை நினைச்சேன்…” என்று  சொல்லி அழ,

இத்தனை ஆண்டுகள் இல்லாது பிருந்தாவின் அழுகை அவ்வீட்டினில் கேட்க, அப்போதுதான் வானதி என்னவென்று கவனிக்கத் தொடங்கினாள். பொதுவாய் அவள் வீட்டில் இருக்கும் நேரம் யாரும் இப்பேச்சு பேசுவதில்லை.

ராதா மகளோடு திருமணம் பற்றி பேச்சினை எடுத்துப் பார்க்க, அவள் கண்டுகொள்ளாமல் தான் சென்றாள். இன்றோ வானதி அதிசயித்திலும் அதிசயமாய் சீக்கிரமே வீடு வந்திருக்க, அங்கேயோ ராதாவின் அறையில் பிருந்தா அழுதுகொண்டு இருக்க, அப்போதுதான் வானதிக்கு இவர்கள் பார்த்தது அருணை என்று தெரிய வர சற்றே ஆடித்தான் போனாள்.

‘அருணா??!!!’ என்ற திகைப்பு அவளுள் எழ, முன்னைவிட அமைதி இன்னமும் அவளுள்.

எதோ ஒரு சிந்தனை… உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்க, எந்த விடையும் கிடைப்பதாய் இல்லை. அவளும் நன்றாக இல்லை. வீடும் நன்றாக இல்லை. அண்ணன் வராது அண்ணியும் நன்றாக இல்லை.

ஒருவித குற்ற உணர்வும் கூட வானதிக்கு..

தன்னால் தான் இப்படியோ.. தனக்காகத்தான் இப்படியோ என்றெல்லாம் மனது ஓடியது.

தனக்கு இது தெரிந்தது என்று அவள் காட்டிக்கொள்ளவும் இல்லை. என்ன கேட்க முடியும்??! யாரிடம் கேட்பாள்?!

இருந்தும் ஒரு அதிர்ச்சி அவளுக்குள் இருந்தது நிஜம்..!

‘அருண்…..’

மனதில் ஒருமுறை அவனை நிறுத்தி யோசித்துப் பார்த்தாள். அவனின் முகம் கூட சரியாய் மனதில் பதியவில்லை என்றுதான் தோன்றியது.

‘சோ இதுக்குத்தான் அண்ணி எப்போ பாரு அருண் அருண்னு சொல்லிட்டு இருந்தாங்களா…’ என்று யோசித்தவளுக்கு, அவன் தன்னோடு  அப்படியொன்றும் நெருங்கி பழக முயன்றதாய் தோன்றவில்லை.

மாறாக விலகிப் போனதாகவே தோன்ற, மேலும் மேலும் அவளுக்கு ஒரு அழுத்தம் தரும் உணர்வே.

என்ன யோசித்தும் என்ன செய்வது என்று தெரியவில்லை… கதிருக்கு அழைத்துப் பாருக்க, அவன் எடுக்கவே இல்லை. தங்கை கேட்டால் என்ன பதில் சொல்ல என்று எடுக்கவேயில்லை.

யோசித்து யோசித்துப் பார்த்தாள்.. சாட்சிக் காரனை பிடிப்பதற்கு பதில் சண்டைக்காரனை பிடித்தால் சீக்கிரம் அனைத்தும் முடியுமே..

ஆக சட்டென்று மனதினில் ஓர் எண்ணம் அருணோடு பேசினால் என்ன என்று??!!

தோன்றிய அடுத்த நொடி அவனுக்கு அழைப்புவிடுக்க நினைக்க, அவளிடம் அவனின் எண் இருக்கவேண்டுமே.. தாங்கள் பேசி இதற்கொரு முடிவு எடுக்காது வீட்டினருக்கும் இதனைப் பற்றி சொல்லிட இஷ்டமில்லை.

அவனின் அலைபேசி எண் யாருக்கும் தெரியாது யாரிடம் இருந்து எடுப்பது என்று பார்க்க, கண்ணெதிரே பிருந்தாவின் கை பேசி கிடைக்க, அதுவும் தேஜுவின் கரத்தினில் இருக்க, நன்றாய் ஆனது என்று வாங்கி எண்ணையும் எடுத்துவிட்டாள்.

“அத்தை போன் கொடு…” என்று தேஜு குரலை உயர்த்த,

“ஷ்… பாப்பா… நானே கொடுப்பேனே…” என்றவள் வேகமாய் கொடுத்தும் விட்டாள்.

அங்கிருந்து நகர்வதற்குள் பிருந்தா வந்து “என்னாச்சு…” என,

“அ.. அது.. உங்க போன் வச்சு விளையாடினா அண்ணி.. அதான் பார்த்தேன்…” என்றுவிட்டு போக, இத்தனை நாள் கழித்து வானதி தன்னோடு பேசியதே பிருந்தாவிற்கு போதுமாய் இருக்க,

“வானதி…” என்று எதையோ சொல்ல வர,

“அண்ணி எனக்கு வேலை இருக்கு வந்து பேசுறேன்…” என்று வானதி கிளம்பிவிட்டாள்.

வீட்டினில் இருந்து ஜிங்கிள்ஸ் வந்து சில நொடிகளே.. அவனோடு என்ன பேசுவது என்று மனதினில் ஓட்டிப் பார்த்து அவனுக்கு அழைக்கவும் செய்து “ஹலோ…” எனும்வரைக்கும் ஒருவித படபடப்பு இருக்கவே செய்தது.

புதிய எண் என்பதால் அருணும் “ஹலோ…” என்றிட,

“நான் வானதி…” என்ற அவளின் குரலில், அருணுக்கு ரத்தம் அழுத்தம் கூடியது என்றுதான் சொல்ல வேண்டும்.      

Advertisement