Advertisement

மறுநாள் காலை உணவு வேலை முடிந்து,  அனைவரும் கோவில் கிளம்பிட, திண்டுக்கல்லில் இருந்து, பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம் என்பதால் அவரவர் காரிலேயே எல்லாம் கிளம்ப, சரோஜா அருணிற்கு சில வேலை சொல்லிக்கொண்டு இருந்தார். 

அவனோ “ம்மா இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு என்ன.. இப்போ கிளம்பிட்டு சொன்னா எப்படிம்மா??!!” என்று சொல்ல,

“இப்போதான்டா நியாபகம் வந்துச்சு..” என்று சரோஜா சொல்ல,

வெற்றிவேலனோ “சொல்றதை செய்யேன்டா.. எப்போ பார் கேள்வி கேட்டுட்டே…” என்றவர்,

“இளா எப்போ வருவானாம்??” என்று மகனிடம் கேட்க,

“ம்ம் போறவனை பிடிச்சு வைக்காம என்கிட்ட கேட்டா…” என்று சளித்தவன், “என் கார் இங்கவே இருக்கட்டும். யாரும் அதுல போயிட வேண்டாம்…” என்றவன், சரோஜா சொன்ன வேலையை செய்யச் செல்ல,

பிருந்தாவோ “நீ இப்போ வர்றியா இல்லை மதியம் போல வர்றியா வானதி…” என்று தன் நாத்தனாரிடம் கேட்டுக்கொண்டு இருந்தாள்.

“ஏன் அண்ணி எல்லாம் இப்போதானே கிளம்புறீங்க.. பின்ன என்ன??” என,

“இல்ல.. இப்போன்னா அங்க போயி சும்மாதான் இருக்கனும்.. நாங்கன்னா எல்லாம் கூட்டமா உக்காந்து பேசுவோம்.. உனக்கு அதெல்லாம் புடிக்காது தானே.. அதான் மதியம் போல பூஜை நேரத்துக்கு வர்றியா ..??” என்று கேட்க,

“நான் மட்டும் எப்படி?? அம்மா இருக்காங்களா இங்க..” என்றாள் வானதியும்.

“அத்தை வராமையா?? தேஜு நிகில் எல்லாம் இங்கதான் விட்டுப் போகணும்.. இப்போவே கூட்டிட்டு போனா ஆட்டம் ஜாஸ்தி ஆகிடும். சமாளிக்க முடியாது. அருண் எதோ வேலைன்னு வெளிய போயிருக்கான். அவன் வந்து உங்களை கூட்டிப்பான்…” என,

“வரலன்னு சொன்னேன்.. கேட்காம கூட்டிட்டு வந்தீங்க. இப்போ இப்படி சொன்னா எப்படி அண்ணி??!!” என்ற வானதிக்கு அப்பட்டமாய் எரிச்சல் வெளிப்பட,

“அ… அதில்ல வானதி.. அது வந்து…” என்றவள் “நைட்டெல்லாம் தேஜு அனத்திட்டே படுத்திருந்தா… இப்போ கூட்டிட்டு போனா அங்க போய் ரொம்ப ஆட்டம் போடுவா.. அதான்.. நீ இருக்கன்னு சொன்னா அவளை உன்னோட விட்டுப் போவேன்…” என்று தேஜுவை முன்னிறுத்தி காரணம் சொல்ல,

“என்னவோ பண்ணுங்க…” என்றாள் வேண்டா வெறுப்பாய் வானதி.

இப்படியாக அனைவரும் கிளம்பிட, வீட்டினில் ஒருசில வேலை ஆட்கள் மட்டும் இருக்க, நிகில் தேஜு இருவரும் அமைதியாகவே விளையாடிக்கொண்டு இருக்க, மதிய வேலையும் நெருங்கிக்கொண்டு இருந்தது.

வானதிக்கு சுத்தமாக பொழுது போகவில்லை. ஜிங்கிள்ஸில் அவளுக்கு வேலைகள் இருந்தது. அங்கிருப்பவர்கள் என்னதான் பொறுப்பாய் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், அவள் சென்றும் பார்க்கவேண்டும் தானே.   இப்படி இன்னொருவரின் வீட்டினில் வந்து அதுவும் தனியே அமர்ந்திருப்பது அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

அழைத்து வந்துவிட்டு இப்படி விட்டுப் போவது அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

“அத்தை நம்ம எப்போ போவோம்…” என்று தேஜு இரண்டு முறை கேட்டுவிட,

“இந்தா நீயே உங்கம்மாக்கு கேளு…” என்று பிருந்தாவிற்கு அழைத்துக் கொடுக்க, அழைப்பை எடுத்தது கதிர்வேலன்.

“ப்பா…” என்ற மகளின் அழைப்பிலேயே,

“அருண் மாமா வந்து கூட்டிப்பான்டா..” என்று கதிர் சொல்ல, வானதி போனை வாங்கி “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்கெல்லாம்…” என்றாள் அண்ணனிடம் ஏக கடுப்பில்.

“என்ன வானதி??!” என்று புரியாது கதிர்வேலன் கேட்க,

“இதுக்கு நான் பசங்களை கூட்டிட்டு ஜிங்கிள்ஸ் போயிருப்பேன்.. எரிச்சல் ஆகுது.. இதுக்கு ஏன் கூட்டிட்டு வரணும்.. ஏன் விட்டுட்டு போகணும்.. ஆக மொத்தம் எல்லாம் என்னவோ செய்றீங்க… என்னன்னா நான் அங்க வந்தா யாரும் எதுவும் கேட்பாங்க, பதில் சொல்லனும்னு யோசிக்கிறீங்களா??” என,

‘ஐயோ..!!!’ என்று ஒரு அண்ணனாய் அவனின் உள்ளம் பதற,

“அட அதெல்லாம் இல்லை வானதிம்மா. இங்க செம கூட்டம்.. இவங்க அங்காளி பங்காளின்னு… மதியம் மேல பாதி பேர் கிளம்பிடுவாங்க…” என்று கதிர் சொல்லும்போதே,

“நான் வரலை…” என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

‘அச்சோடா போச்சு…’ என்றெண்ணிய கதிர்வேலனுக்கு இப்போது தங்கையின் வார்த்தைகள் முன்னிட்டு மனைவியின் மீது கொபம்வ் அர,  

பிருந்தாவை அழைத்து சொல்ல, அவள் அப்படியே போய் சரோஜாவிடம் “ம்மா அருண் எங்கம்மா…” என,

“அப்போ இருந்து அவனுக்கு போன் பண்றேன்… எடுக்கவே இல்லை…” என்றார் சரோஜா.

“என்னது எடுக்கலையா???!!!” என்றவள் அடுத்து நேரே அப்பாவிடம் செல்ல “வேற கார் கூட அனுப்பி கூட்டிட்டு வர சொல்லு…” என்றார் வெற்றிவேலன். 

“ப்பா என்னப்பா..??” என்று அனைவரின் முன்னமும் பேசவும் முடியாது பிருந்தா தயங்கி நிற்க, “சொன்னதை செய் பிருந்தா…” என்றார் அவர்.

‘வேற யாரை அனுப்புறது…’ என்று யோசித்தபடி பிருந்தா கதிர்வேலிடம் வந்து சொல்ல “ஏன்?? உன் தம்பி எங்க??” என்றவனின் முகம் மாறி இருந்தது.

“அவன் போன் எடுக்கல…”

“எடுக்கலையா?? என்ன இது?? நீ என்ன சொல்லி வானதியை இங்க வர வச்ச.. இப்போ அவளை வீட்ல உக்கார வச்சிட்டு உன் தம்பி போன் எடுக்கலைன்னா என்ன அர்த்தம்… என்ன பிருந்தா என் தங்கச்சிய கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா??” என்று கதிர்வேலன் ஆரம்பிக்க,

“ஏங்க.. உங்களுக்கு வானதி தங்கச்சின்னா எனக்கு அவ என்ன யாரோவா??!  நான் என்ன கனவா கண்டேன் இப்படியாகும்னு. நீங்க ஒரு தடவ அவனுக்கு கூப்பிட்டு பாருங்க…” என,

“முடியாது…” என்று திண்ணமாய் மறுத்தான் கதிர்வேலன்.

“அசிங்கமா இருக்குடி.. என் தங்கச்சிக்கு என்ன வேற மாப்பிள்ளயே கிடைக்காதா என்ன?? உன் தம்பியா கெஞ்சி கூத்தாடி எல்லாம் வழிக்கு கொண்டு வரணும்னு அவசியம் இல்லை… இதெல்லாம் வானதிக்கு தெரிஞ்சா என்னையும் சேர்த்து தலை முழுகிடுவா…” என்றவன்,

“அம்மாவும் நீயும் இருந்து விசேசம் எல்லாம் முடிச்சிட்டு வாங்க.. நான் வானதியையும் தேஜுவையும் கூட்டிட்டு ஊருக்கு போறேன்..” என்று கிளம்பிவிட்டான்.

‘அச்சோ…!!’ என்று பிருந்தா விழிக்க,

கதிர்வேலன் நடையை கட்ட, வேறு வழியே இல்லாது “என்னங்க ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று பிருந்தா பின்னே போகும் நிலை.

“இல்ல பிருந்தா நானும் நேத்து வந்ததுல இருந்து பாக்குறேன். அருண் பண்றது சரியே இல்லை. முடியாதுன்னா முடியாதுன்னுட்டு போகவேண்டியது தானே. சும்மா இருந்தவளை கூட்டிட்டு வந்துட்டு, இப்போ  என்னால என் தங்கச்சி கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது..” என்று சொல்லி முடித்துவிட்டான்.

அவன் சொல்வது எல்லாம் சரிதானே..!!

பிருந்தாவிற்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை. இப்படி பாதியில் கதிர்வேலன் கிளம்பினால், நிச்சயம் அனைவருமே கேட்பர் என்ன ஏது என்று. அது மேலும் பல சிக்கல்களை விளைவிக்கும். கோபமே வராதவனுக்கு கோபம் வந்தால் இப்படித்தான் ஆகும்..

“நான் சொல்றதை கேளுங்களேன்…” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இளம்பரிதி வந்து அவனின் பைக்கினில் இறங்க, ‘அப்பாடி..!!!’ என்ற ஒரு நிம்மதி அவளுள் வந்தது.

“இளா…!!” என்று சத்தமாய் இவர்கள் இருவரும் நிற்கும் பக்கம் அழைக்க,

அவனோ “போச்சுடா… உள்ள வரும்போதேவா…” என்றெண்ணியபடி, “என்னக்கா…” என்று வந்தான்.

“முடியாதுன்னு சொல்லாம எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா…” என்று பிருந்தா சொல்ல, அப்போதே புரிந்து போனது என்ன விஷயம் என்று.

கதிரின் முகம் பார்க்க, அவனோ முறுக்கிக்கொண்டு நிற்பது நன்கு புரிய “என்னாச்சு??” என்றான் அவனிடமே.

“நான் ஊருக்கு கிளம்புறேன்டா…” என,

“என்னது??!!” என்றவன் இப்போது பிருந்தாவைக் காண

“டேய் ப்ளீஸ்.. நீ போய் வீட்ல வானதியையும் பிள்ளைங்களையும்  கூட்டிட்டு வா.. இந்த அருண் போனே எடுக்கலைடா…” என்று பிருந்தா கையை பிசைய,

“போன் எடுக்கலையா??!!” என்றபடி அவனும் அழைத்துப் பார்க்க, நல்லவேளை அருண் எடுத்துவிட்டான்.

“எங்க இருக்க நீ??!!”

“எங்கயோ இருக்கேன்.. என்னை ஆள விடுங்கடா சாமிகளா.. எனக்கு பேசணும்னு தோணும் போது பேசிப்பேன் அந்த பொண்ணோட.. சும்மா சும்மா போர்ஸ் பண்ணவேணாம்…” என்று அருணும் சொல்ல, இதனை கதிர் முன்னே சொல்ல முடியாதே.

பேசியபடியே சற்று தள்ளி இளம்பரிதி வர, பின்னோடு பிருந்தாவும் வந்தாள். எப்படியாவது இவன் அருணை வரவைத்துவிட மாட்டானா என்று இருக்க,  

“சரி நீங்க எங்க இருக்க சொல்லு.. நான் வர்றேன்..” என்றான் இளா,

“வேணாம்.. நீ உன் வேலை பாரு..” என்று அருண் சொல்ல,

“வேலையே வேணாம்னு போய் நாளாச்சுடா.. நீங்க எல்லாம் தான் சேர்ந்து என் உயிரை வாங்குறீங்க.. இம்சைங்க..” என்று இப்போது இளாவும் வார்த்தையை விட, பிருந்தாவோ யாரிடம் இருந்து தப்பிப்பது என்று தெரியாது நின்றாள்.

அருணுக்கு இவர்கள் அனைவரும் அவனை கட்டாயம் செய்வதுனாலேயே வானதியின் மீது எண்ணம் செல்லவில்லை. அவன் போங்கினில் விட்டாலாவது அவனுக்கு அவள் மீது கவனம் செல்லுமோ என்னவோ. இப்போது மறுக்கவே விருப்பமாய் இருந்தது.

இவர்களுக்கு இடையில் இளம்பரிதி தான் சிக்கிக்கொண்டு தவித்தான்.!!

அருண் போனை வைத்திட, “அவன் வரமாட்டான் போலக்கா.. நீ மாமாவ பாரு… நானும் கிளம்புறேன்…” என்று பிருந்தாவிடம் இளம்பரிதி சொல்ல,

“டேய்…. நீ மட்டும் நான் சொல்றதை கேட்காம கிளம்பின, இப்படியே போய் பின்னால இருக்க கிணத்துல குதிச்சிடுவேன்…” என்றாள் பிருந்தா பட்டென்று.

“ஏய்.. ச்சே.. என்ன பேச்சு…” என்று இளா கடிய,

“நான் செய்வேன்டா..” என்று ஆங்காரமாய் சொன்னவள்,

“என்னை வேற என்னதான் செய்ய சொல்ற.. அங்க அவர் கிளம்பி நிக்கிறார் இவன் இப்படி பண்றான்.. உன்ன விட்டா எனக்கு யார்டா ஹெல்ப் செய்வா…” என்றவளின் கண்களில் கண்ணீர்.

“ச்சோ..!!!” என்று நெற்றியை தேய்த்தவன், “இதுக்கு நீ கிணத்துலயே குதிச்சிருக்கலாம்…” என,

“இளா…!!!” என்றவளுக்கு குரல் உடையத் தொடங்க, முகத்தை சுறுக்கியவன் “சொல்லித் தொலை…” என,

“நீ போய் வானதியையும், பிள்ளைங்களையும் கூட்டிட்டு வாடா..” என்று பிருந்தா சொல்லவும்

‘டேய் அருண் நல்லவனே…!!’ அவனைத்தான் மனது கடிந்தது.

“டிரைவர அனுப்பு… என்னால முடியாது.. இல்ல இதோ மாமாதான் ஊருக்கு போறேன் சொல்றாரே.. அனுப்பிவிடு.. நீ இங்க ப்ரீயா இருந்துட்டு போ..” என்று அவன் பாட்டில் சொல்ல,

“ம்ம்ச் புரியாம பேசாத இளா..” எனும்போதே சரோஜா வந்துவிட்டார்.

“இங்க என்ன செய்றீங்க… அங்க எல்லாம் இருக்கப்போ, இங்க என்ன தனியா பேச்சு…” என்று கேட்க,

“ம்மா இவனை போய் வானதியையும் பிள்ளைங்களையும் கூட்டிட்டு வர சொல்லு..” என்று பிருந்தா சொல்ல,

“சொல்ற பேச்சைத்தான் கேளேன்டா.. எப்போ பார் ஏன் இப்படி பிகு பண்ற நீ..” என்று சரோஜா கேட்க,

“ஏன் இதையே நீங்க கோபிட்ட சொல்ல வேண்டியது தானே.. சொல்ற பேச்சைக் கேளுன்னு..” என்றான் பட்டென்று.

அவனையும் மீறி வார்த்தை வந்துவிட, என்ன விஷயம் என்றே தெரியாத சரோஜாவோ ‘என்னடா??!!’ என்று அதிர்ந்து பார்க்க, பிருந்தாவோ சூழல் மாறுவது உணர்ந்து

“ம்மா அவன் எதோ சும்மா சொல்றான்..” என்றவன், கார் சாவியை கையினில் திணித்து “போ டா…” என்றுசொல்லி அனுப்பி வைத்தாள்.

அதன் பின்னே தான் இளம்பரிதிக்கும் தான் ஒரு வேகத்தில் என்ன செய்ய இருந்தோம் என்பது விளங்க, இங்கிருந்தால் அடுத்து சரோஜா கேள்வி கேட்டே ஒருவழி செய்திடுவார் என்றெண்ணி கிளம்பிவிட்டான்.

வானதி பொறுமை பொறுமை என்று இழுத்துப் பிடித்து அமர்ந்திருக்க, நேரம் செல்ல செல்ல தேஜூவும், நிகிலும் அங்கே செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்க, தான் இங்கே வந்தே இருக்கக் கூடாதோ என்று நினைக்கத் தொடங்கிவிட்டாள்.

பிருந்தாவிற்கு அழைக்க, அவள் எடுக்கவில்லை. கதிருக்கு அழைத்துப் பார்க்க, அவனோ வேறொரு அழைப்பில் இருப்பதாக வர,

‘ஓ…!! காட்…!!!’ என்று அவள் தன் கோபத்தினை கட்டுப்படுத்தி இருக்க, சரியாய் வாசலில் காரும் வந்து நின்றது.

பிருந்தா சொன்னது போல் அருண் தான் வருகிறானோ என்று பார்க்க, வந்தது அருண் அல்ல,  இளம்பரிதி.

‘இவனா…??!!!’ என்று வானதி பார்த்து நிற்க, இளாவை பார்த்ததும் குழந்தைகள் அவன் பக்கம் ஓடி வர,  இருவரையும் இரு கைகளில் தூக்கியவன், “கிளம்பலாமா..” என, வானதி அசையவே இல்லை. 

‘யாரை சொல்றான்…’ என்று அவள் நினைக்க,

‘தனியா வேற சொல்லணுமோ…’ என்று அவன் பார்க்க, அடுத்த ஐந்து நிமிடம் இப்படித்தான் கழிந்தது.

“அருண் மாமா எங்க…” எங்க என்று தேஜு கேட்க,

“சித்தப்பா நம்ம பைக்ல போறோமா??” என்று நிகில் கேட்க,   ஏனோ வானதிக்கு அவன் தன்னிடம் நேரில் சொல்லட்டும் பின்னே கிளம்புவோம் என்ற பிடிவாதம்.

அவனோ ‘இவ என்ன இப்படி புடிச்சு வச்ச மாதிரி உக்காந்து இருக்கா…’ என்று எண்ணியவன்,

பிருந்தாவிற்கு அழைத்து “க்கா வீட்டுக்கு வந்துட்டேன்…” என,

“அப்படியா.. அப்போ வானதிக்கிட்ட  போன் கொடேன்…” என்றதும் பரிதி ஒன்றுமே சொல்லாது போனை ஆப் செய்தவன், அப்படியே சுவிட்ச் ஆப் செய்துவிட, இது தெரியாத பிருந்தாவோ அவனுக்கு அழைத்துப் பார்த்து சுவிட்ச் ஆப் என்று வரவும் பின் வானதிக்கு அழைக்க,

இவை அனைத்தையும் கண்கள் இடுக்கி ஒருவித கசப்புணர்வில் பார்த்துகொண்டு இருந்த வானதி, பிருந்தாவின் அழைப்பு வரவுமே எடுத்து “உங்களுக்கு எத்தன டைம் கூப்பிடுறது அண்ணி…” என்றாள், பார்வை முழுவதையும் அவனின் மீது வைத்து.

அதற்கு பிருந்தா என்ன சொல்லிருப்பாளோ, தெரியவில்லை, வானதியின் முகம் மேலும் கடுகடுவென மாற “என்கிட்டே நீங்க உங்க தம்பி வந்து கூட்டிட்டு போவார்னு தானே சொன்னீங்க.. ஏன் மாத்தி மாத்தி பேசுறீங்க…” என்று கேட்க,

இளாவிற்கோ ‘ஏன் நான் கூப்பிட வந்தா வரமாட்டாளாமா…??!!’ என்று தோன்ற, அப்படியே எழுந்துவிட்டான்.

‘போனா போ…’ என்கிற விதத்தில் தான் வானதி இப்போதும் அமர்ந்திருக்க, இவனின் சத்தம் கேட்டு, வீட்டில் சமையல் செய்யும் பெண் எட்டிப் பார்க்க,

“பசங்களுக்கு தேவையான திங்க்ஸ் எடுத்து கார்ல வச்சு இவங்களை உக்கார வைங்க…” என்று அவரோடு பிள்ளைகளை காருக்கு அனுப்பியவன்,

“வர முடியுமா முடியாதா??!!” என்றான் வானதியிடம்.

அவளோ அப்போதும் அசையாது இருக்க “ஹெலோ.. உங்களைத்தான்…” என்று அவள் முன்னே அவன் சொடுக்கிட,

“என்கிட்டே இப்படி பேசக் கூடாது..” என்றாள், ஆள்காட்டி விரலை மட்டும் லேசாய் ஆட்டி, நேராய் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்து.

‘யப்பா..!!! என்ன பார்வை இது….’ என்று இளாவின் உள்ளம் அவனையும் மீறி நினைக்க, அவன் பேச்சற்று நின்றது சில கண்ணிமைக்கும் நேரம் தான்.

சட்டென்று தன் பார்வையை மாற்றியவன், “என் முன்னாடியும் இப்படி சட்டமா உக்காந்து இருக்கக் கூடாது… கார் எடுக்கிறேன்..” என்றவன் சென்றுவிட,

‘திமிரோடவே பிறந்திருப்பான் போல…’ என்று முணுமுணுத்தபடி, வானதி எழுந்து நிற்க, அதற்குள் கதிர் அழைத்து, இளாவோடு வரும்படி சொல்ல,

“ம்ம் ஓகே…” என்று வைத்துவிட்டாள்.

இது காரில் இருந்தவனுக்கு தெரியாதே, தான் பேசி வரவும் வந்துவிட்டாள் என்று ஒரு மிதப்பு பார்வை பார்த்தவன், தன் அலைபேசியை உயிர்பிக்க, 

“தேஜு.. அப்பா இப்போதான் போன் பண்ணார்.. நம்மள இந்த கார்ல வர சொல்லி..” என்று சம்பந்தமே இல்லாது அவளிடம் சொல்ல, சரியாய் அப்போது கதிரும் இளாவிற்கு அழைத்து “பார்த்து கூட்டிட்டு வாடா…” என,

“நான் கூட்டிட்டு வரல மாமா.. கார்தான் கூட்டிட்டு வருது…” என்றான் இடக்காய்..

“என்ன இளா சொல்ற..?” என்று கதிர்வேலன் கேட்கும்போதே, இளா அழைப்பினை துண்டித்துவிட்டான்.

‘ஹப்பாடி… இங்க வேலை செய்றவனுக்கு இவ்வளோ ஆட்டிடூட்டா…??!!’ என்றுதான் வானதிக்கு நினைக்கத் தோன்ற, தானாய் தலையை உலுக்கிக்கொண்டு, ஜிங்கிள்ஸ்க்கு அழைத்து பேசத் தொடங்கிவிட்டாள்.

குழந்தைகள் உறங்கியும் கூட போயினர்.

இவர்கள் கோவில் செல்லும் வரைக்கும் கூட, காரினில் வானதியின் பேச்சு மட்டுமே. பேச்சினிலேயே அங்கிருக்கும் அனைத்து பிராணிகளோடும் பேசி முடிக்க, இளம்பரிதிக்கு தான் எப்போதடா இவள் பேசி முடிப்பாள் என்றாகிப் போனது.

காரை முடிந்தளவு வேகமாகவே ஓட்டிச் செல்ல, கோவிலில் சென்று காரை நிறுத்தியபின் தான் அவளின் பேச்சும் முடிய, தேஜுவை தூக்கிக்கொண்டு அவள் இறங்க, நிகிலை தூக்கிக்கொண்டு இளாவும் இறங்க, இருவரும் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு, நால்வராய் கோவிலினுள் நுழைய, ஒரு சிலரின் பார்வை இவர்கள் மீது ஆர்வமாகவே படிந்தது.

ஓரளவு கூட்டம் இல்லை என்றாலும், ஆட்கள் இருக்கத்தான் செய்தனர். நிகிலை வந்து ரேணுகா வாங்கிக்கொள்ள, இளா சென்று கதிரோடு நிற்க, வானதி தேஜுவை கொண்டு போய் ராதாவிடம் தான் கொடுத்தாள்.

மறந்தும் கூட, பிருந்தாவோடோ, கதிரோடோ பேசவில்லை.

அமைதியாய் சென்று அமர்ந்துகொண்டாள். ராதா எதோ கேட்க, ஆம் இல்லை அது மட்டுமே பதிலாய் வந்தது அவளிடம். 

வானதி வரவுமே வேகமாய் பிருந்தா வந்து அவளின் அருகே அமர, வானதி எதுவும் பேசாது இருக்க, “அருண் போன வேலை இன்னும் முடியலை வானதி அதான் அவனால் வந்து கூட்டிக்க முடியலை…” என,

“ஓ…!!” என்று தலையை ஆட்டியவள்,

“உங்க தம்பியே வேலைன்னு போயாச்சு.. என்னை ஏன் இவ்வளோ பிடிவாதம் பண்ணி இங்க வர வச்சீங்க…” என, இதற்கு பிருந்தா என்ன பதில் சொல்ல முடியும்?!

ராதாவை பார்க்க அவரோ “வாணி…!! வந்த இடத்துல என்ன இது…” என்று வானதியிடம் சொல்ல,

“என்னவோ எனக்கு எதுவும் பிடிக்கலை…” என்றவள், சுற்றிலும் பார்வையை ஓட்ட, ஒருசிலர் இவளைப் பார்த்து பேசுவது நன்கு தெரிந்தது.

‘நீ என்னவோ பேசிக்கோ…’ என்றொரு அலட்சிய பாவனை சிந்தி, மற்றொருபக்கம் பார்வை திருப்ப, அங்கோ இளா வேண்டா வெறுப்பாய் நிற்பது போல இருக்க, கதிர் எதுவோ அவனோ பேசிக்கொண்டு இருக்க,

‘ஏன் இவனை இவ்வளோ தாங்குறாங்க எல்லாம்…’ என்று மறுபடியும் யோசனை எல்லாம் இளம்பரிதி மீது செல்ல,  ‘நோ வானதி இதெல்லாம் உனக்கு தேவையில்லை…’ என்று பார்வையையும், மனதையும் சேர்த்தே திருப்ப,

ராதா சரோஜாவிடம் “இவளுக்கு ஒரு நல்லது நடந்தா போதும்..” என்று சொல்லிக்கொண்டு இருப்பது காதினில் விழுந்தது.

இது ஒன்று போதாதா, வானதியின் மொத்த அமைதியையும் சுவடு தெரியாது அழிக்க, “ம்மா…” என்று சற்றே அழுத்தமாய் அவரின் கரம் பற்ற,

ராதா என்ன நினைத்தாரோ மகளிடம் “உனக்கு நாங்க மாப்பிள்ளை பார்த்துட்டோம் வானதி..” என்றுவிட்டார்.

“என்னது??!!!!!” என்று அதிர்ந்தவளுக்கு, அம்மா சொன்னதை நம்பிடவே முடியவில்லை.

“என்ன அண்ணி நீங்க…” என்று சரோஜா கூட ராதாவை சொல்ல,

“இல்ல அண்ணி… இப்படி விஷேசங்கள்ல என் பொண்ணும் குடும்பமா வந்து கலந்துக்கனும் தானே.. இதோ அப்போ குழந்தைய தூக்கிட்டு நடந்து வந்தா, எனக்கு பார்க்க எப்படி இருந்தது தெரியுமா…” என்று இளாவோடு இவள் வந்ததை பார்த்து ராதா சொல்ல,

வானதிக்கு அவளையும் மீறி கண்கள் இளம்பரிதி பக்கம் போக, அவனோ எதேர்ச்சையாக இந்தப்பக்கம் அப்போது பார்க்க, ‘இதென்ன இந்த பொண்ணு சும்மா சும்மா நம்மள பாக்குது…’ என்று நினைத்துக்கொண்டான்.

“ம்மா என்ன இது..??” என்று அடுத்த நொடியே வானதி ராதாவிடம் கேட்டாலும்,

“இதுதான் என்னோட முடிவு.. நாங்க மாப்பிள்ள பார்த்தாச்சு.. பேசியாச்சு.. ஒருதடவ நீயும் மாப்பிள்ளையும் பார்த்து பேசிக்கிட்டா அடுத்து கல்யாண தேதி குறிச்சுடுவோம்…” என்று அவரும் அழுத்தம் திருத்தமாகவே சொல்ல,

வானதிக்கு இங்கு வைத்து இவர்களிடம் பேசி பயனில்லை என்பது விளங்க, கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாகி விட்டாள். அப்போதும் கூட அந்த மாப்பிள்ளை அருணாக இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. இந்த கூட்டத்தில் யாரோ எவரோ.. ஒருவேளை இதற்குத்தான் தன்னை இங்கே அழைத்து வந்தனரோ என்று புத்தி அப்படி யோசிக்க, அது அருண் என்றோ, அவன் தன்னை முன்னிட்டு ஓடி ஒளிகிறான் என்றெல்லாம் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

பிருந்தாவோ ‘அப்பாடி… இனி அத்தை பார்த்துப்பாங்க…’ என்ற நிம்மதியில் இருக்க, நல்லவேளை சாமிக்கு படையல் போட்டு பூஜைக்கு அனைவரையும் அழைத்துவிட்டனர். அன்றைய தின கட்டளைதாரர் குடும்பம் முன்னிற்க,                          

அவர்களுக்கு அடுத்து வெற்றிவேலன் முன்னிற்க, அவருக்கு பின் வரிசையாக குடும்பத்தினர் அனைவரும் நிற்க, இறுதியாய் இளம்பரிதி நின்றிருந்தான்.

வானதிக்கோ, மனது ஒரு நிலையில் இல்லை. தன்னை சுற்றி என்னவோ ஒன்று, அனைவரும் தனக்குத் தெரியாது ஏதோ செய்வதாய் உணர, அந்த நொடி முதல் அங்கிருக்க அவளுக்கு இஷ்டமில்லாது போக, நிதானமாய் கடவுளை வேண்டும் மனநிலையில் எல்லாம் அவளில்லை.

“நல்லா வேண்டிக்கோ…” என்று ராதா சொல்ல,

கண்களை மூடி அவள் வேண்டிக்கொள்ள எல்லாம் முடியாது என்றே தோன்றியது.

அங்கே நிற்க முடியாது என்பது திண்ணமாய் உணர்ந்த பிறகு,   அருகினில் இருந்த ராதாவிடம் “ம்மா எனக்கு எப்படியோ இருக்கு. நான் கிளம்புறேன் ..” என்றாள்

“எது கிளம்புறியா.. பூஜை நடந்துட்டு இருக்கு.. இப்போ போய்…” என்று அவர் சொல்லும்போதே,

“இவ்வளோ நேரம் இருந்தேனே…” என்றவள், நேரே இளம்பரிதியிடம் தான் சென்றாள்.

எதையுமே பிருந்தா அவனிடம் சொல்லித்தானே இவ்வளவு நேரம் கண்டிருந்தாள், போதாத குறைக்கு இங்கே அழைத்து வந்ததும் அவன் தானே, அதன் விளைவு நேரே அவனிடம் சென்று “கார் எடுக்க முடியுமா??” என,

அவனோ ‘நானா??!!’ என்றுதான் பார்த்தான்.

“உங்களைத்தான்… கார் எடுங்க…” என்று வானதி சொல்ல, பிருந்தா “என்ன வானதி சாப்பிட்டு போ..” என்று மெதுவாய் சொல்ல,

“முடியாது.. போற வழியில பார்த்துப்பேன்..” என்றவள், “வர்றீங்களா??” என்றாள் இளாவிடம்.

அவனோ என்ன செய்வது என்று பிருந்தாவைக் காண, அவளோ கதிர்வேலனைக் காண, அவனோ ராதாவைக் காண, மகளை மேலும் இங்கே நிறுத்தி வைக்க முடியாது என்றெண்ணிய ராதா,

“கூட்டிட்டுப் போ…” என்பது போல் தலையை அசைக்க, வானதி நொடியும் தாமதிக்காது, முன்னே நடக்க, இளம்பரிதி அவளின் பின்னே சென்றான்.                                 

Advertisement