Advertisement

                     என்னிதயம் கேட்ட ஆறுதல் – 3

“வானதிம்மா…” என்றபடி ராதா வாசலுக்கே வந்துவிட, பிருந்தாவோ கணவனை கேள்வியாய் பார்த்தவள் பின் “வா வானதி…” என,

“அடடா என்ன வரவேற்பு எல்லாம் பலமா இருக்கே.. விட்டா மாலை மரியாதை எல்லாம் செய்வீங்க போல…” என்று சொல்லி சிரிக்க, மற்றவர்கள் தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்ன இப்போ.. நான் இப்படி வாசல்லயே நிக்கனுமா இல்லை…” என்று வானதி இரு கைகள் விரித்துக் கேட்க,

“வா.. வா உள்ள வா…” என்று ராதா வழிவிட,

“அப்புறம் அண்ணி… தேஜு எங்க..??” என்றபடி தான் உள்ளே நுழைந்தாள் வானதி.

“தேஜு…” என்று பிருந்தா இழுக்க,

“என்ன அண்ணி, பாப்பா எங்கன்னு தெரியாதா உங்களுக்கு.. காணோமா??!!” என்றாள் வானதி லேசாய் சாடும் குரலில்.

“அ.. அதில்ல வானதி… அது.. நேத்து எங்க வீட்ல இருந்து வந்தாங்களா.. அதான் பாப்பா அவங்களோட அங்க போயிருக்கா…” என்றவள், பேச்சினை மாற்றும் விதமாய்,

“பிளைட் அப்போவே வந்திடுச்சுன்னு சொன்னாங்க.. நீங்க வர இவ்வளோ நேரமாச்சு…” என்று கேட்க,

“நான் நேரா ஜிங்கில்ஸ் போயிட்டேன்…” என்றாள் வானதி.

இப்போது ராதா மகனைப் பார்க்க “ம்மா இப்போதானே வந்திருக்கா.. கொஞ்சம் ப்ரீயா விடுங்க..” என,

“சரிங்கத்தை.. வானதி ரெஸ்ட் எடுக்கட்டும்.. நம்ம ஊருக்கு போக எல்லாம் எடுத்து வைப்போம்…” என்றபடி பிருந்தா வானதியை கண்டும் காணதது போல ஒரு பார்வை பார்த்து சொல்ல,

‘எந்த ஊருக்கு…???’ என்று அவள் கேட்பாள் என்று பார்த்தால், அவள் அப்படியொன்றை கேட்கவே இல்லை.

கையில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு, அவள் பாட்டில் குளியலறை சென்றுவிட, இப்போது மாமியார் மருமகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, கதிர்வேலன் தான் இருவரையும்  அழைத்துச் சென்றான்.

வானதி எதையும் மனதில் ஏற்றுவதாய் இல்லை..

நடப்பது நடக்கட்டும் என்றும் இல்லை.

இப்போதைக்கு அவளின் மன அமைதி அவளுக்கு மிக மிக முக்கியம்.

புதியதாய் ஓர் வாழ்வு அதனைப் பற்றியும் அவள் இதுவரைக்கும் சிந்திக்கவில்லை. இருந்தும், தன் மீது எவ்வித தவறும் இல்லை என்பதில் மட்டும் அவள் மிக மிக கர்வமாகவே கூட இருந்தாள்.

குளித்து உடை மாற்றி, லேசான ஒப்பனையோடு அறை விட்டு வெளி வர, ராதா “சாப்பிட வா வானதி…” என,

“ம்ம் வர்றேன் ம்மா…” என்றவள், கதிர்வேலனைப் பார்த்து “நீ சாப்பிட்டியா?” என,

“அ… அப்போவே.. இ.. இல்ல வானதி..” என்றான் திக்கி திணறி.

அதிலேயே அவளுக்குப் புரிந்து போனது, இத்தனை நேரம் இங்கு எதோ கார சாரமான விவாதம் நடந்து இருக்கிறது என்று. கதிர்வேலன் எப்போதுமே இப்படித்தானே. அதிலும் வானதியின் திருமண விசயத்தில் இப்படியொரு விரும்பத் தகாத நிகழ்வு நடந்த பிறகு, அவன் மிகவும் திணறித்தான் போனான்.

தான் எதுவும் சரியாய் நடந்துகொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவனுள் வேர்விட்டு வளர்ந்து நின்று, இதோ இப்படி வீட்டுப் பெண்களின் பேச்சுக்கு இடையில் சிக்கிக்கொண்டு விழிக்கும் நிலைக்கு ஆளாகிப் போனான்.

“ண்ணா… நீ எப்பவும் போல இரு…” என்று எத்தனையோ முறை வானதியும் சொல்லிவிட்டாள்.

தங்கைக்கு ஒரு நல்வாழ்வு அமைத்துக் கொடுக்காது, அவனால் இதில் இருந்து மீள முடியாது என்பது அனைவரும் நன்கு அறிந்ததே.

இப்போதும் வானதி கேட்ட சிறு கேள்விக்குக் கூட அவன் திணற “என்னங்க…” என்று அவனின் தோளை இடித்தாள் பிருந்தா.

இருவரையும் ஒரு பார்வை பார்த்தபடி டைனிங் டேபிளில் வானதி அமர, வேகமாய் கதிர்வேலனும் அமர,

“அத்தை நீங்களும் உக்காருங்க… சாப்பிட்டிட்டு ஊருக்கு போக எல்லாம் எடுத்து வைப்போம்…” என்று மீண்டும் பிருந்தா ஆரம்பித்தாள்.

ராதாவும் அப்போது மகளின் முகம் பார்க்க “என்ன எல்லாம் என்னை பாக்குறீங்க?” என்று வானதி ஒருவழியாய் வாய் திறக்க,

“அது.. வானதி.. நம்ம எல்லாம் சாயங்காலம் திண்டுக்கல் போறோம்..” என்று பிருந்தா சொல்ல,

“நம்மலா?!” என்று வானதி கேட்ட கேள்வியிலேயே புரிந்தது அவளுக்கு இதில் விருப்பமில்லை என்று.

இன்று என்றில்லை என்றுமே அவளுக்கு பிருந்தாவின் பிறந்த வீட்டில் சென்று தங்குவது எல்லாம் ஒட்டவே ஒட்டாது.

பிருந்தா திருமணமான புதிதில், அங்கே கோவில் திருவிழா என்று இவர்கள் அனைவரும் அங்கே சென்றிருக்க, என்னவோ வானதிக்கு அப்போதிருந்தே அங்கே எதுவும் மனதில் லயிக்கவில்லை.

‘எப்போ பார் ஏன் இவ்வளோ சவுண்டா இருக்கு இந்த வீடு… ஒரு அமைதி இல்லை.. ஒரு ரசிப்பு இல்லை யார்கிட்டயும்…’

இதுதான் அவளுக்கு எப்போதும் தோன்றும்..

அத்துனை ஏன் இங்க அமைதியாய் பாந்தமாய் இருக்கும் பிருந்தா கூட அங்கே போனால் அப்படியே மாறிவிடுவாள்.

வீட்டினில் யாரேனும் ஆட்கள் இருந்துகொண்டே இருப்பர். வெளியாட்கள் வரவு அங்கே எப்போதுமே ஜாஸ்தி இருக்கும். வீட்டினில் அடிக்கடி விருந்து என்று என்னவோ அவளுக்கு அங்கே செல்வது பற்றி நினைத்தாலே ‘ம்ம்ஹும்…’ என்றுதான் தலையை ஆட்டத் தோன்றும்

இப்போதோ எல்லாரும் செல்லவேண்டும் என்று சொல்ல, அவளுக்கு அதில் சம்மதம் இல்லை என்றாலும், அண்ணன் முகம் பார்த்தாள்.

“அங்க பிருந்தா அப்பா வீடு, பங்காளிங்க வீடு எல்லாம் குலசாமி கோவில்ல சிறப்பு கொடுக்குறாங்க வானதி.. பொறந்த வீட்டுப் பொண்ணு இல்லையா.. அதான் எல்லாருமே தனி தனியா வந்து அழைப்பு வச்சிருக்காங்க.. நம்ம கண்டிப்பா போய்த்தான் ஆகணும்…” என,

“ம்ம்…” என்று தலையை ஆட்டியபடி இப்போது அம்மாவினைப் பார்த்தாள்.

வானதி திருமணத்தில் பிரச்சனைகள் ஆன பிறகு, ராதா வெகுவாய் இதுபோன்ற விழாக்களுக்கு எல்லாம் செல்வதை குறைத்திருந்தார். அவளறிந்து எப்போதுமே வீட்டினில் தான். நல்லது கெட்டது அனைத்திற்கும் பிருந்தா தான் சென்று வந்தாள்.

இப்போது அம்மாவும் கிளம்பி இருக்க, இவளுக்கு ஆச்சர்யம் தான்.

“எங்கயும் போகல தானே… நீயும் வந்தா எனக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கும்…” என்று ராதா மெல்லிய குரலில் சொல்ல,

“ஹ்ம்ம்… எத்தனை நாள்..?” என்று அவள் கேட்ட பிறகு தான் மற்றவர்களுக்கு நிம்மதியானது.

“மூணு நாள் வானதி.. நாளைக்கு பெரிய தாத்தா வீடு.. நாளன்னைக்கு அப்பா வீடு.. அடுத்த நாள் சின்ன தாத்தா வீடு…” என்று பிருந்தா அடுக்க,

“ஓ..!! அப்போ நாளன்னைக்கு நான் வர்றேனே…” என்று வானதியும் சொல்ல,

‘கெட்டது கதை… ’ என்றானது அனைவர்க்கும்.

அருணையும், வானதியையும் சந்திக்க வைத்து, பேச வைக்க இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வேறில்லை என்று இவர்கள் எண்ணியிருக்க, அவளோ நாளன்னைக்கு வருகிறேன் என, பிருந்தா இப்போது வேறு வழியே இல்லாது கதிர்வேலின் காலை லேசாய் மிதிக்க,

“அ..!!!” என்று மனைவியைப் பார்த்தவன்,

“நீ மட்டுமா இங்க இருப்ப.. அதெல்லாம் வேணாம்.. ஈவ்னிங் எல்லாம் கிளம்புறோம் வானதி… நீ வந்து கொஞ்சம் இதெல்லாம் என்ஜாய் பண்ணு…” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

அண்ணன் இத்தனை சொல்லிய பிறகு அவளால் மறுத்திட முடியுமா என்ன??!!

“சரி…” என்று தலையை ஆட்டி வைக்க, வேறென்ன அன்றைய தின மாலையே இவர்கள் அனைவரும் அங்கே செல்ல, தடபுடல் வரவேற்பு தான்.

ஏற்கனவே ரேணுகாவின் பிறந்த வீட்டு ஆட்கள் வேறு வந்திருந்தார்கள். இதுபோக சரோஜாவின் பக்கம் சொந்தங்கள் வேறு.. வீடே ஆட்களால் நிரம்பி வழிந்தது.  வானதிக்கு சொல்ல வேண்டியதே இல்லை. எப்போதடா தனிமை கிட்டும் என்று அவள் பார்த்திருக்க,

வீட்டினர் யாரும் அவளிடம் விகல்பம் காட்டிடவில்லை, மாறாக சரோஜா வந்து முன்னைவிட கரிசனமாய் பேசிவிட்டு போக, ரேணுகா எப்போதும் போலவே பேச, மற்றவர்கள் சிலர் இவளைப் பார்த்து பேசினர், சிலரோ தள்ளி நின்று இவளுக்குக் கேட்காத வன்னம் பேசினார்.

எல்லாம் கண்டும் காணாதது போல் வானதி இருக்க, பிருந்தா வந்து “மாடில அருண் ரூம்க்கு பக்கத்து ரூம் உனக்கு.. அத்தை என்னோட கீழ இருக்கட்டும்…” என்றவள்,

“அருண்…” என்று சத்தமாய் அழைக்க,

“அண்ணி.. எனக்கே தெரியுமே.. நான் போயிக்கிறேன்…” என்றாள் வானதி.

“அட இரு..” என்றவள், அருண் இன்னமும் இவளின் அழைப்புக்கு வராதது கண்டு,

“ம்மா அருண் எங்க??” என்று சரோஜாவைக் கேட்க,

“இங்கதானே இருந்தான்..” என்று அவரும் சுற்றி முற்றிப் பார்க்க, அதற்குள் அவனே வந்துவிட்டான்.

“அருண்.. மாடில உன்னோட ரூம் பக்கத்து ரூம் தான் வானதிக்கு சொல்லிருக்கேன்.. தலை வழியா இருக்காம் அவளுக்கு.. தூங்கனும் தானே.. போய் விட்டுவா…” என்று பிருந்தா சொல்ல,

‘நான் எப்போ தலைவலின்னு சொன்னேன்…’ என்று பார்த்தாள் வானதி.

‘இதென்ன கொடுமை…’ என்று அருணும் பார்த்தான்.

இருவருமே பிருந்தாவை காண “அவன் கூட்டிட்டுப் போவான் நீயும் போ…” என்றுவிட்டு அவள் இடத்தை காலி செய்திட, அருணோ தயக்கமாகவே வானதியைப் பார்த்தான்.

“நீங்க போய் வொர்க் இருந்தா பாருங்க… நான் போயிக்கிறேன்…” என்றவள், அவன் பதில் சொல்லும் முன்னமே மாடிக்கு ஏறிவிட,

‘அப்பாடி..!!’ என்றதொரு உணர்வு அருணுக்கு.

இருந்தும் அடுத்து வரும் நாட்கள் எல்லாம் இப்படி ஏதாவது ஒன்று நடந்தேரிக்கொண்டே இருக்கும் என்று நினைக்கையிலேயே அவனின் விரல்கள் தன்னப்போல் இளாவின் எண்ணிற்கு அழைத்துவிட்டது.

இளம்பரிதியோ அவர்களின் கடையினில் இருக்க, அருணின் எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் அவன் முதலில் எடுக்கவில்லை. நிச்சயம் பிருந்தா வந்து ஏதேனும் நாடகம் செய்திருப்பாள் என்று தெரியும். அதில் இருந்து தப்பிக்கவே இவன் அழைக்கிறான் என்பதும் விளங்க, அவன் எடுத்திடவே இல்லை.

விதி யாரை விட்டது. அலைபேசி அழைப்பு காதினில் கேட்காதது போல் இளா இருக்க, அவனின் அப்பா எடுத்துவிட்டார்.

“ஹலோ அருண்.. இதோ கொடுக்கிறேன்…” என்றவர், இவனிடம் வந்து கொடுக்க, அவரையும் ஒரு முறை முறைத்தபடி தான் வாங்கினான் இளம்பரிதி.

“ம்ம் சொல்லு அருண்…” என,

“டேய்.. தயவு செஞ்சு இங்க வா.. வந்து என்னோட இரு…” என்ற அருணின் குரலில் இளாவிற்கு பயங்கரமாய் சிரிப்பு வந்துவிட்டது.

சிரித்தும் விட, “டேய்…!!!!” என்று பல்லைக் கடித்தவன், “ஒழுங்கா வந்து சேறு…” என்று சொல்ல,

“எனக்கு வேலை இருக்குடா…” என்றான் இளம்பரிதி யோசிக்கவே இல்லாது.

‘இவனுக்கு என்ன வேலை.. காலையில இருந்து வந்து சும்மா தானே இருக்கான்…’ என்று விஜயன் பார்க்க,

‘போங்க…’ என்று கை காட்டிய பரிதி “சரிடா வைக்கட்டுமா??” என,

“டேய் நீ இப்போ வர்ற அவ்வளோதான்.. இல்லை நான் வருவேன்…” என்று அருண் மிரட்ட,

“ம்ம்ச் உனக்கு கல்யாணம் முடியுறக்குள்ள என்னை ஒரு வழி பண்றீங்கடா எல்லாம்..” என்று முனங்கியவன் அங்கே தான் கிளம்பினான்.

இரவு உணவு விருந்து நடந்துகொண்டு இருந்தது வெற்றிவேலனின் வீட்டில். முதலில் விருந்தாட்கள் எல்லாம் உண்டுகொண்டு இருக்க, பிருந்தா அறைக்கு வந்தவள் வானதியிடம் “கீழ வர்றியா இல்லை இங்க கொடுத்து விடவா??” என,

“ஒரு பத்து நிமிஷம் கழிச்சு கீழயே வர்றேன் அண்ணி..” என்று அவளும் சொல்ல,

“நல்லது வானதி…” என்றவள், அவளின் முன்னமே இளம்பரிதிக்கு அழைத்து “நீயும் வா டா…” என்று அழைக்க,

அவன் என்ன சொன்னானோ “சரி சரி…” என்று வைத்துவிட்டாள்.

வானதி யாரையோ பிருந்தா அழைக்கிறாள் என்று தான் நினைத்திருந்தாள். சொன்னதுபோல் பத்து நிமிடங்கள் கீழே செல்ல, வயதில் பெரியவர்கள் எல்லாம் முதலிலேயே உண்டு இருக்க,

ரேணுகா வந்தவள் “இப்போ சாப்பிடுறியா இல்லை என்னோட அண்ணியோட சாப்பிடுறியா??” என,

“உங்களோடவே சாப்பிடுறேன்…” என்றவள், அங்கே ராதாவோடு அமர்ந்துகொண்டாள்.

நடப்பதை எல்லாம் வேடிக்கை தான் பார்த்துக்கொண்டு இருக்க, அருண் சற்று தள்ளி நின்று, யாருடனோ பேசிக்கொண்டு இருந்தவன், வாசலில் இளம்பரிதியின் பைக் சத்தம் கேட்டதும் வேகமாய் வாசலுக்கு விரைந்தான்.

பிருந்தாவும், அருணை தொடர்ந்து செல்ல, சற்றே கடுகடுப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு தான் இளம்பரிதி உள்ளே வந்தான்.

“டேய் என்ன அப்படியே வந்திருக்க, ட்ரெஸ் எடுத்துட்டு வரலியா.. உன்னை போக எல்லாம் விடமாட்டேன்…” என்று அருண் சொல்ல,

“இம்சை பண்ணாதீங்கடா…” என்றவன், சரோஜாவிடம் வந்து “என்னம்மா..?” என,

“வாடா.. சாப்டியா நீ??” என்றார்.

“இல்லம்மா இனிதான்..” என்றவன், ராதாவை வரவேற்பாய் ஒரு புன்னகையோடு பார்க்க “எப்படிப்பா இருக்க..??” என்றார் அவரும் சம்பிரதாயமாய்.

“நல்லாருக்கேன்..” என்றவனோ பெயருக்குக் கூட ‘நீங்க எப்படி இருக்கீங்க..?’ என்று கேட்டிடவில்லை.

ராதாவிற்கு அருகே இருந்த வானதியோ, இந்த சில நொடிகளில் நடந்த சங்கதிகளைத் தான் நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தாள்.      

 “யார் இவன்…” என்ற பார்வை தான் வானதியிடம்.

இளாவை அவளுக்கு பெயரளவில் மட்டுமே தெரியும். அதுவும் பிருந்தாவின் பேச்சுக்களில் எப்போதும் ‘இளாகிட்ட சொன்னா போதும்.. இளா செய்வான்.. இளா பார்த்துப்பான்…’ என்று இப்படி.

அப்போதே தோன்றும் அவ்வளோ பெரிய அப்பாடக்கர் யார் அவன் என்று..

இப்போதோ நேரில் காண்கையில், ஒரு எடை போடும் பார்வை பார்த்து இருந்தாள்.

“ஹப்பாடி நீ வந்துட்டியா…” என்று பிருந்தா போய் அவன் கையை பிடிக்க,

“என்னை நிம்மதியாவே இருக்க விடமாட்டியா நீ…” என்று இளா சற்றே கடிய,

“டேய் ரொம்ப பண்ணாம போடா.. வந்துட்டான்…” என்றவள் புன்னகையோடு பேச, இவை அனைத்தையும் வானதி பார்த்துகொண்டு தான் இருந்தாள்.

அருண் முகத்தினில் அப்படியொரு ஆசுவாசம் என்றால், பிருந்தா முகத்தினில் ஒரு புது தைரியம் வந்தது போல் இருந்தது.

‘இவன் இங்க வேலைதானே செய்றான்.. இவனுக்கா இவ்வளோ பில்டப்…??’ என்று நினைத்தவள், அதன்பின்

‘என்னவோ…’ என்று தோள்களை குலுக்கி தன் பார்வையை திருப்பிவிட்டாள்.

இருந்தும் மனதில் எங்கோ ஒரு மூலையில் ‘அப்படி என்ன இவனிடம் எல்லாரும் இப்படி பின்னேயே சுற்றுகின்றனர்..?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

கவனிக்கக் கூடாது என்று இருந்தாலும், இந்த பிருந்தாவும், அருணும் பரிதியை சுற்றுவதைக் கண்டு, அவளால் கவனிக்காதும் இருந்திட முடியவில்லை.

‘சரி டைம் பாஸ் ஆவது ஆகும்…’ என்றெண்ணியவள் வேடிக்கைப் பார்க்க, தேஜு நிகில் எல்லாம் கூட இவனைப் பார்த்து

“மாமா… சித்தப்பா….” என்று சொல்லிக்கொண்டு ஓட,

‘தோடா.. குட்டீஸ கூட கரக்ட் பண்ணி வச்சிருக்கான்.. பெரிய வேலைக் காரன் தான் போல…’ என்று கிண்டலாய் மெச்சிக்கொள்ள, சரியாய் அப்போது பார்த்து கோபியும் வந்து இவர்களோடு இணைந்து கொண்டான்.

வந்தவன், பரிதியைப் பார்த்து “எப்போடா வந்த…” என,

“ம்ம் இப்போதான் கொஞ்ச நேரம் முன்ன…” என்றவன் “சரிடா நான் நாளைக்கு கோவில்ல வந்து பாக்குறேன்…” என்று அருணிடம் சொல்லிவிட்டு எழ, அருண் பார்த்த பார்வையில்,   

“டேய்… கொஞ்சம் சிரிச்சுத்தான் வை…” என்று இளா சொல்ல,

“ம்ம்ச் கடுப்பு கிளப்பாம நீ இரு டா..” என்றான் அருண்.

“வேணாம்.. காலையில வர்றேன். அதுக்குள்ள உன்னை கை கால் எல்லாம் கட்டி வச்சு யாரும் கல்யாணம் பண்ணிட மாட்டாங்க..” என,

கோபியோ “அவனுக்கு பிடிக்கலைன்னா ஏன் எல்லாம் இப்படி பண்றீங்க..” என, இளம்பரிதி பெயருக்குக் கூட கோபியை பார்த்தான் இல்லை.

இருந்தும் கோபி அவனோடு மேலும் மேலும் பேசிக்கொண்டு இருக்க, “வேணாம்… பேசி பேசி என்னை சரிகட்ட நினைக்கவேணாம்..” என்றுவிட்டான் தயவு தாட்சண்யம் இன்றி.

இவர்கள் இருவரும் பேசுவதை அருண் பார்த்தவன் “என்ன..?” என்று கேட்டுக்கொண்டு இருக்க,

“இப்படி ஆளாளுக்கு பண்ணா நான் கிளம்பிடுவேன்..” என்றான் இளம்பரிதி.

இவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், வானதிக்கு இவர்களின் முக பாவனை நன்கு தெரிந்தது.

‘என்னடா இது.. எல்லாம் இவனை இப்படி தாங்குறாங்க.. இவன் ரொம்ப ஓவரா பண்றானே…’ என்று பார்க்க,

எரிச்சலாகவே பார்வை திருப்பிய இளம்பரிதியும் வானதியைக் காண, அவனோ ‘என்னடா இது.. இந்த பொண்ணு நம்மள இப்படி பாக்குது…’ என்று நினைக்க,

‘கிளம்பிடு டா இளா…’ என்று அவனின் உள்ளிருந்து ஒரு குரல் சப்தமாய் ஒலிக்க,

“ம்மா காலைல வர்றேன்…” என்று சரோஜாவிடம் சொல்லிவிட்டு வேகமாய் கிளம்பியும் விட்டான்.

அருணோ “எல்லாம் உன்னால தான். அவன்பாட்டுக்கு இருந்திருப்பான்.. நீ ஏன் அவனோட பேசுறண்ணா…” என்று கடிந்தவன், அவனும் மாடிக்கு சென்றுவிட, 

உள்ளே யாரோட பேசிக்கொண்டு இருந்த பிருந்தா வந்து “எங்க அருணும் இளாவும்…” என்று வானதியிடம் கேட்க,

“தெரியலை…” என்றாள்.

“தெரியலையா… இங்கதானே இருந்தாங்க…” என்றவள் அம்மாவிடம் கேட்க, “இளா கிளம்பினான்.. அருண் மேல ரூம் போயிட்டான்..” என, வேகமாய் பிருந்தாவின் பார்வை ஒரு குற்றம் சாட்டும் பார்வையை கோபியைப் பார்த்து வீச, அவனோ வேகமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். 

Advertisement