Advertisement

                                                  என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2

“என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா…’ என்றுதான் பார்த்தான் அருண்.

இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை. கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு இவ்விசயமே தெரியாது, இவனுக்கோ உடன் பாடு இருப்பதாய் தெரியவில்லை.

இதில் வீட்டினர் சொல்லி கேட்காதவன் தான் சொல்லி கேட்பானா?!! அப்படி என்ன இந்தத் திருமணம் பெரிது? இவனுக்கு வேறு பெண் இல்லையா.. இல்லை கிடைக்கமாட்டாளா?

இல்லை அந்த வானதிக்கு தான் வேறு மாப்பிள்ளை அமைய மாட்டானா என்ன??!

இரண்டாவது திருமணம் என்பது இப்போது பழக்கத்தில் இருக்கிறது தானே. ஆண் என்றாலும் பெண்என்றாலும். பின் எதற்கு இந்த கட்டாயம் என்பதே இவனின் எண்ணம்..

அதையும் தாண்டி இத்திருமணம் நடந்திட வேண்டும் என்று பிருந்தா நினைப்பதற்கான காரணம் எல்லாம் இளாவிற்கு அப்படியொரு கோபத்தினைத் தான் கொடுத்தது. வானதியோ ஏற்கனவே அடிபட்டு இருக்கிறாள் மனதளவில். அருணோ, அவனுக்கும் மனதில் கனவுகள் இருக்கும்தானே இப்படித்தான் தன் எதிர்காலம் இருந்திட வேண்டும் என்று.

இதெல்லாம் பொருட்படுத்தாது இப்போது இவர்கள் எடுத்திருக்கும் முடிவு என்பது… நினைத்தாலே இளாவிற்கு அப்படியொரு எரிச்சல் கொடுத்தது. இதில் தன்னை பேச வேறு அழைத்து வந்தாகிவிட்டது. 

அருணோ அமைதியாகவே இருக்க “என்ன அருண்…?” என்று கேட்டவனுக்கு, ‘எதையாவது சொல்லித் தொலைடா…’ என்ற பாவனை.

“ஏன் இப்படி போட்டு எல்லாரும் என்னை டார்ச்சர் பண்றீங்க..” என்று அருண் கத்த,

“சட்டுன்னு உன்னோட முடிவ வந்து சொல்லு எல்லார்கிட்டயும்.. எனக்குமே இது டார்ச்சரா தான் இருக்கு..” என்று இளாவும் சொல்ல,  

‘ஹா…!!!’ என்று பார்த்தான் அருண்.

“பின்ன என்ன??!!! எதுவும் வேணாம்னு தானே கிளம்பிப் போனேன்.. இப்போ வந்துட்டு சும்மா உன்னோட பேசு பேசுன்னு சொன்னா.. ஏன் உனக்கு வீட்ல பேசத் தெரியாதா… என்னை ஏன்டா எல்லாரும் இப்படி இம்சை பண்றீங்க..” என்று அப்பொறம் இளா கடுப்படிக்க,

“இப்போ நான் என்னதான் செய்ய??” என்றான் அருண்.

“டேய்… அதையேன் என்கிட்டே கேட்கிற நீ?? இது உன்னோட வாழ்க்கை.. உனக்கு சரின்னா சரின்னு சொல்லு. இல்லன்னா இல்லன்னு சொல்லு..” என்று இளாவும் சொல்ல,

“ம்ம்ச் போடா…” என்ற அருண் சலிப்பாய் அமர,

“சரி நான் கிளம்புறேன்..” என்று இளா கிளம்ப

 “டேய் டேய் இரு..” என்று அவனைப் பிடித்து அமர வைத்தான் அருண்.

இளம்பரிதி வெற்றிவேலனிடம் வேலைக்கு என்று சேர்ந்த புதிதில் அவனுக்கும் அருணிற்கும் ஆகவே ஆகாது… எதிர்ப்பும் புதிருமாய் தான் நிற்பார். இவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்து செய்யவே வெற்றிவேலனுக்கு நேரம் போதாது. அப்படி இருந்தவர்களுக்கு இடையில் எப்படி இப்படியொரு நட்பு வந்தது என்று இப்போது வரைக்கும் இருவருமே அறிந்திருக்கவில்லை.

என்னவோ திடீரென்று இருவருக்கும் இடையில் சிலகாலம் அமைதி இருக்க, பின் என்னடா என்று வழக்கமாய் பேச ஆரம்பிக்க, இளா எப்போதுமே தான் இங்கு வேலைக்கு இருக்கிறேன் என்ற பாவனையில் இருந்திடவே மாட்டான். ஆக அவனும் அருணோடு இயல்பாய் பழக, இதோ இப்படி பேசும் உரிமையும் தன்னப்போல் வந்தமைந்தது.

அதன்பொருட்டே பிருந்தா வந்து இளம்பரிதியை பேசச் சொல்ல, இதோ இருவரும் சலிப்பாய் அமர்ந்தது தான் மிச்சம்.

“என்ன அருண்…” என்று மீண்டும் இளா கேட்க,

“எனக்கு எந்த ஒரு முடிவுக்கும் வர முடியலை… எனக்கும் வானதிக்கும் இன்ட்ரெஸ்ட் இருந்து இந்த பேச்சு வந்திருந்தா கூட ஓகே. பட் இது முழுக்க முழுக்க அக்காவோட  விருப்பத்துக்காக நடக்குது.. உனக்கு தெரியாது பரிதி… போன வாரம் அக்கா வந்து அம்மாக்கிட்டயும் அப்பாக்கிட்டயும் அப்படி ஒரு டிராமா…” என,

“டேய் என்ன இது??!!” என்றான் இளம்பரிதி.

“எஸ்.. டிராமா தான்…. அவளுக்கு எப்படியாவது வானதியை எனக்கு கட்டி வைக்கணும்.. முன்னாடியும் ட்ரை பண்ணா.. அப்போ அப்பா சம்மதிக்கல.. இப்போ வானதியோட வாழ்க்கை அது இதுன்னு இமோசனலா பேசி எல்லாரையும் சரி சொல்ல வச்சிட்டா..” என,

“சரி உனக்கு நிஜமாவே அந்த பொண்ணுமேல இன்ட்ரெஸ்ட் இல்லன்னா பிரான்க்கா மாமாக்கிட்ட சொல்ல வேண்டியதுதானே.. அவர் பேசிப்பார்தானே அக்காட்ட…” என்று இளம்பரிதியும் சொல்ல,

“அவங்க ஏற்கனவே ரொம்ப கவலையா இருக்காங்களே பரிதி.. இப்போ நானும் முடியாதுன்னு சொன்னா?? அதான் யோசனை..” என்று அருண் தயங்க,

“சரி அப்போ நீ யோசிச்சிட்டே இரு…” என்று எழுந்துவிட்டான்.

“பரிதி ப்ளீஸ்…”

“டேய் என்னை என்னத்தான்டா செய்ய சொல்ற நீ…??!!”

“நீயும் பேசமாட்ட, அக்கா வந்து என்னை பேசு பேசுன்னு சொல்றாங்க…” என்றவன், பின் மெதுவாய் “எதுவும் முடிவுக்கு வர முடியலன்னா ஒன் டைம் வானதியோட பேசிப் பாக்குறியா??!!” என்றான்.

இதுதான் இளம்பரிதி.

எது எப்படி இருந்தாலும், யார் எப்படி பேசினாலும் காரியத்தில் தான் அவன் கண் இருக்கும்..

அருண் அதற்கும் எதுவும் சொல்லாது இருக்க “டேய்…!!!” என்று இளா பல்லைக் கடிக்க,

“ம்ம்ம் முதல்ல அந்த பொண்ணுக்கு என்ன மைன்ட் செட்ன்னு பார்ப்போம்.. அடுத்து பேசலாமா வேணாமான்னு பாப்போம்…” என,

“இதை முன்னவே சொல்ல வேண்டியதுதானே..” என்றவன், அருனின் அறை விட்டு வெளியே வர,  வீட்டினர் அனைவரும் இவன் முகம் பார்க்க,

“அந்த பொண்ணுக்கு என்ன மைன்ட் செட்னு தெரியணுமாம்.. அடுத்து பேசி பாக்கிறேன்னு சொல்றான்..” என்று இளா சொல்லி முடிக்கவில்லை,

சரோஜா தன் மகளிடம் “நீ வானதிக்கிட்ட பேசு..” என்றார்.

“ஹ்ம்ம்…” என்றவள் “இளா என்னை கொண்டு வந்து விடுறியா??” என்று அடுத்து அவனிடம் ஒன்றைக் கேட்க,

“வர்றப்போ எப்படி வந்த நீ..??” என்றான் இளம்பரிதி.

“மாமா வந்து விட்டு போனார் டா… ஆனா பாரேன்..” என்று பிருந்தா எதையோ சொல்ல வர “ம்ம்ஹும்… எனக்கு வேலை இருக்கு…” என்று கிளம்பியவனுக்கு என்ன தோன்றியதோ,

அதுவரைக்கும் இவனிடம் எதுவுமே பேசாது அமைதியாய் இருந்த வெற்றிவேலனை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, “ப்பா அவனை நிக்க சொல்லுங்கப்பா…” என்று பிருந்தா சொல்ல,

“மாமா…” என்றபடி தேஜூ அவன் பின்னேயே போக, இளம்பரிதி நின்று சிறுமியை தூக்கியவன் “இன்னொரு நாள் மாமா உன்னோட நிறைய நேரம் இருக்கேன் ஓகே வா..” என்று சொல்லி கொஞ்சிவிட்டு, இறக்கிவிட்டு சென்றும் விட்டான்.

அதுவரைக்கும் கூட வெற்றிவேலன் எதையும் பேசிடவில்லை.

“ப்பா… இப்படி நீங்க அமைதியா இருக்கிறது நல்லதில்லப்பா…” என்று பிருந்தா சொல்ல,

“என்னங்க நீங்க.. ஏன் அவன்கிட்ட பேசாம இருக்கீங்க??” என்று சரோஜாவும் கேட்க, “கோபியும் மருமகளும் எங்க??” என்றார் இதெல்லாம் விடுத்தது.

“நிகில கூட்டிட்டு வெளிய போயிருக்காங்க…” என்ற சரோஜா, அப்பாவிடம் பேசு என்பது போல் சைகை செய்ய,

பிருந்தாவோ “ப்பா நீங்க ஒன்ஸ் இளா வீட்ல போய் பேசினா அவன் கண்டிப்பா திரும்ப வருவான் ப்பா..” என,

“என்னது??!!!” என்று உறுத்துப் பார்த்தார்.

அவரின் பார்வையில் ‘நானா??!!!’ என்ற கேள்வி தொக்கி நிற்க,

“இத்தனை வருஷம் அவன் இங்கதானே எல்லாம் பார்த்தான்.. எவ்வளோ லாபம் நமக்கு காட்டினான்.. அதையும் விட குடும்பத்துல ஒருத்தனா தானே நம்ம எல்லாம் இப்போ வரைக்கும் அவனை நினைக்கிறோம். அருண் வேற அவன் வேறயா எனக்கு தோணலப்பா..

நீங்க சும்மா கோபி பேச்சை கேட்டுட்டு, இவனும் போறேன்னு சொன்னதும் போக விட்டாச்சு. இவனோ ஒவ்வொன்னுக்கும் நம்ம போய் கெஞ்சினா தான் வர்றான். நீங்க யார வேணா அடுத்து இங்க இளா இடத்துல வைக்கலாம். ஆனாலும் எல்லாரும் இளாவா ஆகிட முடியாது. நாங்களும் ஏத்துக்க முடியாது…” என்ற பிருந்தா, மகளைக் கூட்டிக்கொண்டு கிளம்பியும் விட்டாள்.

அருணும் சிறிது நேரத்தில் வெளிக் கிளம்பிட, சரோஜா மீண்டும் கணவரிடம் வந்தவர் “என்னங்க..” என்று ஆரம்பிக்கவில்லை,

“அவனை எப்போ திரும்ப கூப்பிடனும், எப்படி கூப்பிடனும்னு தெரியும் சரோ.. இப்போ விட்ரு…” என்றுவிட்டார் வெற்றிவேலன்.

பிருந்தாவின் வீட்டினில்,

       “என்ன பிருந்தா…??” என்று அவளின் மாமியார் ராதா கேட்டமைக்கு,

“வானதி வரவும் அவளோட பேசுங்க அத்தை…” என்றுமட்டுமே சொன்னாள் பிருந்தா.

கணவன் கதிர்வேலன் கேட்டதற்கும் “வானதி மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குவோம்.. அப்புறம் அருணும் அவளும் பேசிக்கட்டும்.. ஒரு முடிவுக்கு வரட்டும்..” என்றுவிட்டாள்.

அங்கே நடந்த வேறெதையும் அவள் சொல்லிடவில்லை. நிச்சயம் ராதாவும் கதிர்வேலனும் பேசினால் வானதி கேட்பாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருந்தும் பிருந்தாவிற்கு தன் மனதில் ஒரு பயம் இருந்துகொண்டே தான் இருந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் வானதி பழனி வருவதாய் இருந்தது. அவளின் தோழி ஒருத்தியின் திருமணம் கொல்கட்டாவில் நடக்க, அங்கே சென்றிருந்தாள். இப்படியெல்லாம் அனுப்பும் பழக்கம் இன்னம் அவர்கள் வீட்டினில் இல்லைதான்.

ஆனால் சென்றுவந்தால், அவளுக்கும் ஒரு மாற்றம் மனதினில் கிடைக்கும் என்று அனுப்பி இருந்தார்கள்.

அனுப்புவது என்பதைவிட, ‘செல்கிறேன்…’ என்ற தகவல் தான் வானதியிடம் இருந்து வர, ‘செல்…’ என்றுமட்டுமே சொல்லிட முடிந்தது வீட்டினருக்கு.

எட்டு மாதங்கள் முன்னம் தான் அவளின் திருமணம். கோடி கணக்கில் செலவு செய்து தான் மணம் முடித்துக் கொடுத்தார்கள். வானதியும் சந்தோசமாய் தான் திருமணம் செய்தாள். ஆனால் அந்த சந்தோசம் ஒருவாரம் கூட இல்லை.

அப்படியே கிளம்பி பிறந்த வீடு வந்துவிட்டாள்.

எதை பற்றியும் நினைக்கவில்லை. யாரைப் பற்றியும் நினைக்கவில்லை. இதற்குமேல் முடியாது என்று தோன்ற, கிளம்பி வந்துவிட்டாள்.

‘விவாகரத்து…’ இதுமட்டுமே அவளின் மனதினில்.

கேள்வி கேட்டவரிடம் எல்லாம் நேர்கொண்டு பார்த்தே பதில் சொன்னாள். என்ன நடந்தது என்றும் சொல்லிவிட்டாள். அவளின் காரணங்கள் சரியாய் இருக்க, வீட்டினருக்கு அவளின் சொல்லை மறுக்க முடியவில்லை.

அதன் பின் என்ன இரண்டு தரப்பிலும் மாற்றி மாற்றி பேச்சு வார்த்தை நடந்தேற, ஒருவழியாய் இவர்களின் விவாகம் ரத்து என்று எழுத்து வழியாய் முடிவிற்கு வந்தது.

இது நடந்து முடிந்தும் இரண்டு மாதங்கள் ஆகிட, நாட்கள் செல்லவும்  ராதா மனம் கேளாது மருமகளிடம் “கொஞ்ச நாள் போகவும் நல்ல இடமா பார்த்து முடிச்சு கொடுத்துடணும்…” என,

கதிர்வேலனோ “ம்மா முன்னதான் அவசரப்பட்டோம்… இப்போ நிதானமாவே போவோம். முதல்ல இதுல இருந்து எல்லாம் வானதி மனசளவுல வெளிய வரட்டும்..” என்று சொல்ல,

வானதியோ வெளியே கிளம்பிச் செல்லும்படி அவளின் அறையில் இருந்து வெளி வந்தாள்.

அனைத்தும் முடிந்த பின்னே, வானதி அச்சம்பவங்கள் பற்றி ஒருவார்த்தை பேசினாள் இல்லை. ராதா மனது கேளாது ஏதாவது பேசுகையில் கூட “ம்மா ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்… சும்மா அதையே பேசி பேசி…” என்று எழுந்து சென்றுவிடுவாள்.

அவளைப் பொருத்தமட்டில், அவளுக்கு நடந்த திருமணம், அம்மனிதர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே அவள் எண்ணிடவில்லை.. இதற்கு பின் என்ன என்பதையும் அவள் யாரிடமும் பகிரவில்லை.

அமைதியாக இருக்கிறாள். அவளுக்கு பிடித்த வகையில் பொழுதினைக் கழிக்கிறார்.

‘பெட் கேர்…’ வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கான பிரத்யேக கவனிப்பு நிலையம். வகை வகையான நாய்கள், பூனைகள் தொடங்கி, வித விதமான பறவைகள் என்று எல்லாமே அவளின் ‘ஜிங்கிள்ஸ்.. ’ல் வந்து செல்லும்.

இவளின் கீழ் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் வேலை செய்ய, அவளின் பொழுதுகள் எல்லாம் கீச் கீச் என்றோ, மியாவ் மியாவ் என்றோ இல்லை லொல் லொல் என்றோ இன்னும் பிற சப்தங்களோடு நகரும்.

காலையில் ஒன்பது மணிபோல் அங்கே கிளம்பி சென்றால், இரவு எட்டு மணிபோல் தான் வீட்டிற்கு. மதிய உணவு வீட்டிலிருந்து சென்றுவிடும். அதைத்தாண்டி அவளிடம் யாரும் எதுவும் பேசிடவும் முடியவில்லை.

கதிர்வேலன் எதுவும் கேட்டால் மட்டும் “இப்போ என்னண்ணா.. இந்த நாலு மாசத்துல எனக்கு நாப்பது வயசு ஆகிடுச்சா ??” என்று கேட்டு அவனின் வாய் அடைத்துவிடுவாள்.

அப்பா இல்லை என்பதால், அப்பாவின் பொறுப்பும் அண்ணனுக்கு. எப்படியேனும் தங்கைக்கு ஒரு நல்வாழ்வு அமைத்துக் கொடுத்திட வேண்டும் என்பதால் தான் கதிர்வேலன், அருணுக்கே வானதியை பேசிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறான்.

பிருந்தாவிற்கோ வானதியின் வாழ்வு ஒருபுறம் என்றாலும், பிறந்தவீட்டில் நடக்கும் களேபரங்கள் வெளியே தெரிந்திடாது, கௌரவம் கேட்டுப் போய்விடாது இருக்க இந்த முடிவு.

வெற்றிவேலன், கோபி, இளாவிற்கு மட்டுமே தெரிந்த பிரச்சனை, பிருந்தாவிற்கும் தெரியும் என்பது இந்த திருமண பேச்சில் பிருந்தா தீவிரம் காட்டவும் தான் வெற்றிவேலனுக்குத் தெரிய, அதன் பொருட்டு தான் அவரும் இதற்கு சம்மதித்தார்.

இதற்குமேலும் காலம் தாழ்த்தாது, வானதியிடம் பேசலாம் என்று ராதாவும் கதிர்வேலனும் காத்திருக்க, எதிர்பார்த்தது போல் வானதியும் வந்திறங்கினாள். மதுரை விமான நிலையம் சென்றுதான் அழைத்து வந்தான் கதிர்வேலன்.

வரும் வழியிலேயே “ண்ணா ஜிங்கிள்ஸ் போறேன்… கார் அங்க விடு..” என,

“என்ன வானதி நீ.. வீட்டுக்கு வந்துட்டு போயேன்.. ஒருவாரம் கழிச்சு வர்ற, வீட்டுக்கு வராம என்ன??” என்று கதிர் கேட்க,

“வராம எங்க போயிட போறேன்.. நீ சொன்னாதானே ஒன் வீக் ஆச்சுன்னு.. அதான் ஜிங்கிள்ஸ் போகணும்..” என்றவள் இதற்குமேல் எதுவுமில்லை என்று வாய் மூடிட, கார் அங்கேதான் சென்று நின்றது.

இறங்கியவள் “ நீ கிளம்பு…” என,

“நீ வா வெய்ட் பண்றேன்…” என்றான்.

“உள்ள வந்தா யாரையும் நீ டச் பண்ண கூடாது.. இல்லைன்னா பெட் சேனிடைசர் கைல போட்டுக்கோ.. வந்து கீ கீன்னு எல்லாம் பேர்ட்ஸ் கிட்ட சொல்லக் கூடாது…” என,

“ம்மா தாயே.. நான் வரவேயில்ல.. இப்படியே கார்ல இருக்கேன்..” என்றுவிட்டான்.

அவன் அப்படித்தான் சொல்வான் என்று தெரியும் தானே, ஒரு புன்னகையோடு உள்ளே போனவள், போகும் போதே, விரித்து விடப்பட்டிருந்த கேசத்தை மேல் தூக்கி கட்டியபடியே செல்ல,

“ஆண்டவா பழனி முருகா..!!!” என்று வேண்டிக்கொண்டான் கதிர்வேலன்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் வானதி திரும்ப வெளியே வர, அதற்குள் வெளியே முடிக்கவேண்டிய வேலைகளை முடித்து வந்து நின்றிருந்தான் கதிர்.

       காரில் ஏறியவளோ “ம்ம் சொல்லுண்ணா…” என,

“என்னடா??!!” என்றான்.

“என்னவோ பேசணும்னு தானே டிரைவர் அனுப்பாம நீயே வந்த.. சொல்லு என்ன விஷயம்??” என்றவள்,

பின் “கல்யாணம் அது இதுன்னா எல்லாம் கார் என்கிட்டே கொடுத்துட்டு நீ இறங்கிக்கோ..” என்றுவிட்டாள்.

போச்சு… இதற்குமேல் அவன் என்ன பேச.. பாவமாய் தங்கையின் முகம் பார்த்தான்.

Advertisement