Advertisement

என்னிதயம் கேட்ட ஆறுதல் – 1

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில்…

       அன்றைய தினம் வெள்ளிக்கிழமை, வழக்கத்திற்கு அதிகமாகவே கூட்டம் நிரம்பி இருக்க, கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் இடத்தினில் நின்றிருந்தான் இளம்பரிதி.

வீட்டினருக்கு இளா… நண்பர்களுக்கு பரிதி… 

பிரசாதம் வாங்கவும் நிற்கவில்லை. கொடுக்கவும் நிற்கவில்லை. கொடுக்கும் இடத்தினில் நின்றிருந்தான். அதாவது கொடுப்பவர்களை மேற்பார்வை பார்த்து. முகத்தினில் ஒருவித எரிச்சல் இருந்ததுவோ என்னவோ. நமக்கு பிடிக்காத ஒன்றை நம்மிடம் திணித்தால் எப்படியான ஒரு எரிச்சல் இருக்கும் அதுபோல.

“என்னை ஏன்டா பாக்குற… சொன்னதை செய்…” என்று சற்றே தள்ளி நின்று அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தவனை கடிய,

“இல்லைண்ணா அது…..” என்று அவன் இழுக்க,

“அது.. இதுன்னு இழுத்த பல்ல பேத்துடுவேன்…” என்றவன் வரிசையில் எத்தனை பேர் இன்னம் இருக்கிறார்கள் என்றும், பிரசாத பாத்திரத்தில் அவர்களுக்கு கொடுக்கும் அளவில் பொங்கல் இருக்கிறதா என்றும் பார்த்தவன்,

“இருக்கிறத அளவா வச்சு கொடுத்துட்டு காருக்கு வா…” என்று சொல்லி நகர்ந்துவிட்டான்.

பொதுவாய் கோவிலுக்கு எல்லாம் அவன் வரமாட்டான். அப்படியே வந்தாலும் வெளியே காரினில் தான். அவனோடு வந்தவர்கள் சாமி கும்பிட்டு வரும் வரைக்கும், எத்தனை நேரமானாலும் சரி என்று வெளியே காரினில் தான் இருப்பன்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றில்லை. என் வேலையை நான் செய்தால், அதையும் சரியாகவே செய்தால் அனைத்தும் நல்லவிதமாகவே நடக்கும் என்ற எண்ணமுடையவன்.

வேலையும் சரியாய் செய்திட வேண்டும்.. செய்யும் வேலையும் சரியானதாய் இருந்திட வேண்டும்…!!

அப்படி சரியில்லை என்று மனதிற்கு பட்டதினால் தான், இத்தனை வருடங்களாய் மேற்பார்வை செய்துகொண்டு இருந்ததை அப்படியே உதறிவிட்டு வந்துவிட்டான். இதற்கும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாய் ஆண்டுகளாய் அங்கே தான். வெற்றிவேலனிடம்..

படிப்பு டிகிரி தான். பெரிதாய் வேலை எல்லாம் கிடைக்கவில்லை. பரிதியின் அப்பாவிற்கு சொந்தமாய் ஒரு சிறு மளிகைக் கடை. கடையில் வந்து சில மாதம் இருந்தான்.     

“ப்பா… கடைய பெருசு பண்ணலாம்… இப்படியேவா இருக்க??” என்று கேட்க,

“அதெல்லாம் வேணாம்..  தெய்வா கல்யாணம் முடியட்டும்..” என்றார் விஜயன்.

“தெய்வா இப்போதான் ப்பா ஸ்கூல் போறா…” என்றவன் “விடுங்க நான் லோன் கூட போட்டுக்கிறேன்…” என,

“ஆமாமா உனக்கு லோன் கொடுக்கத்தான் எல்லா பேங்க்கும் காத்துட்டு இருக்காங்க…” என்று அம்மா மோகனா சொல்ல இவனுக்கு சுள்ளென்று வந்துவிட்டது.

கடையினில் இருந்து அப்படியே கிளம்பிவிட்டான். கால் போன போக்கில். கண் போன திசையில்.. நடந்துகொண்டே இருக்க,

 “தம்பி…” என்ற குரல் நிற்க வைத்தது.

திரும்பிப் பார்க்க நாற்பது வயதில் ஒருவர். ‘என்ன வேணும்..’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்து நிற்க,

“கொஞ்சம் கார் தள்ளிவிட முடியுமா??” என்று அவர் கேட்க, சுற்றிலும் பார்த்தான். சற்றே தள்ளி ஒரு விலை உயர்ந்த கார். அதனுள் மூவர் இருப்பது தெரிந்தது. முன் சீட்டில் ஒருவர் பின்னே இருவர். 

அவரைப் பார்த்தவன் “அதான் உள்ள அத்தன பேர் இருக்காங்களே…” என,

“ஐயோ..!! மெதுவாப்பா… முடிஞ்சா தள்ளு.. இல்லன்னா ஆள விடு.. வேலைக்கு வேட்டு வச்சிடாத…” என்று டிரைவர் பதற,

அதற்குள் “இன்னும் எவ்வளோ நேரம்…” என்ற குரலுக்கு பதறிப் போய் ஓடினார் என்றுதான் சொல்லவேண்டும்.

இளம்பரிதி நின்றுதான் பார்த்தான். நடந்து செல்லவும் இல்லை, கடந்து செல்லவும் இல்லை. என்ன நடக்கிறது என்று பார்த்தான். உதவிதானே என்று உள்ளம் நினைத்தாலும், காரினுள் இருப்பவர் அழைக்கட்டும் என்று நினைத்தானோ என்னவோ, அதற்குள் முன் சீட்டினில் இருந்தவர் கதவு திறந்து வெளி வந்து

“என்னாச்சு??? எவ்வளோ நேரம் இப்படி இருக்க.. வீட்டுக்கு போன் போட்டு இன்னொரு கார் அனுப்ப சொல்லு…” என்று டிரைவரை கடிய, அவர் கத்திய கத்தல் இவனுக்கும் நன்கு கேட்டது.

‘ஏன் போன் இவர் போடமாட்டாரா??!!’ என்றுதான் பார்த்தான்.

‘இந்த பணக்காரங்களே இப்படிதான்…’ என்ற எண்ணம் வர “அய்யா..!! லேசா பின்ன தள்ளினா போதும்..” என்று டிரைவர் சொல்ல, அந்த மனிதரின் பார்வை இவன்புறம் வர,

கடந்து செல்ல கால்களை எட்டெடுத்து வைத்துவிட்டான்.  மீண்டும் “தம்பி…” என்ற குரல் அவனை நிற்க வைத்தது.

இம்முறை அழைத்தது அம்மனிதர்.. வெற்றிவேலன்..

அப்போதும் அவன் திரும்பி என்னவென்று பார்க்க, “வந்து தள்ளி விடு கொஞ்சம்….” என, கண்களை இடுக்கிப் பார்த்தவன்,

“யாரைத் தள்ளனும்?” என, சொன்னவரின் முக பாவனை மாறிப்போனது.

“காரை ப்பா…”

“எங்க தள்ளனும்.. எதுக்கு தள்ளனும்..??” என்றவன் இன்னமும் அவன் நின்ற இடத்தினில் தான்.

‘இதென்னடா சோதனை..!!!’ என்று நெற்றியை தெய்த்தவர், “கார் நின்னுபோச்சு.. லேசா தள்ளினா சரியாகிடும்னு இவன் சொல்றான்… கொஞ்சம் உதவி பண்ணேன்..” என்று அவர் கேட்க,

அவர் வாயில் உதவி என்ற வார்த்தை வந்தபின்னர் தான் இளம்பரிதியின் கால்கள் முன்னேறி சென்றது.

உயரத்தில் இருந்தாலும் உதவி என்ற ஒன்றை எப்படி கேட்க வேண்டுமோ அப்படித்தான் கேட்கவேண்டும்.

பெரியவர் பேசுகையில் தான் பேசிடக் கூடாது என்று டிரைவர் அமைதியாய் நிற்க “கொஞ்சம் சீக்கிரம்…” என்றவர் தள்ளி நிற்க,

“கார் ஸ்டார்ட் பண்றேன்..” என்று டிரைவர் சொல்ல,

“ஒரு நிமிஷம்..” என்றவன் “உள்ள இருக்கவங்களை இறங்க சொல்லுங்க..” என்றான்.

“என்னது??!!” என்று மற்ற இருவரும் பார்க்க, “கார் தானே தள்ளனும்.. உள்ள இருக்கவங்களையும் சேர்த்து இல்லையே…” என்றவனின் பேசும் பார்வையும் பாவனையும் ஏனோ வெற்றிவேலனை வசீகரித்தது.

‘மிஞ்சிப் போனா இருபத்திரண்டு வயசு இருக்குமா??!!’ என்று கண்கள் கூர்மையுற அவனைப் பார்க்க, அவனின் திடகாத்திரம் அவரை கொஞ்சம் வியப்படைய தான் வைத்தது.

நல்ல உயரம். அதற்கேற்ப உடல்வாகு. உழைக்க அஞ்சாதவன் என்ற தோற்றம். இயல்பாகவே அவன் உடல்மொழியில் இருக்கும் ஒரு மிடுக்கு. நொடியில் அவனை இவன் எப்படியானவன் என்று எடை போட்டுவிட்டார்.

ஆனால் அதெல்லாம் அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

“இறங்க சொல்றீங்களா??” என்றான்.

வெற்றிவேலன் தன் இரு மகன்களையும் இறங்கச் சொல்ல, அவர்களும் இறங்க, ஒருவனுக்கு இவன் வயது இருக்கும். இன்னொருவனுக்கு இவனைவிட இரண்டோ மூன்றோ கூடுதலாய் இருக்கும்.

இறங்கியவர்கள் “என்னப்பா இது.. இப்படியா ஆகனும்…” என்று சலிக்க,

“சரி வந்து கூட தள்ளுங்க..” என்றான் பரிதி இப்போது.

‘என்னது??!!!’ என்று அனைவருமே அதிர்ந்து பார்க்க, அந்த டிரைவரோ ‘நான் இவனை கூப்பிட்டே  இருக்கக் கூடாது…’ என்று பயந்து போய் நிற்க,

“என்ன சொன்ன..?” என்றார் வெற்றிவேலன்.

தன்னை இவனுக்கு யார் என்று தெரியவில்லையா??!! இல்லை??!!!! என்று யோசிக்க,

“சார்… உங்களுக்கும் வேலை இருக்கு.. எனக்கு வேலையே இல்லைன்னாலும் இப்படி நிக்க எல்லாம் முடியாது.. சீக்கிரம் கிளம்பி போகணும்னா உங்கள்ள யாராவது இன்னொருத்தர் என்னோட வந்து தள்ளுங்க.. இல்லைன்னா இப்படியே நில்லுங்க…” என, வெற்றிவேலன் தன் மகன்களின் முகம் பார்க்க,

பெரியவன் கோபி “ப்பா…” என,

சிரியவனோ அருண் “அப்பா…” என்றான் அழுத்தமாய்.

“அப்போ நான் போய் தல்லவா??” என்று வெற்றிவேலன் கேட்க,

“அய்யயோ அய்யா… நீங்க இருங்க, நான் தள்ரேன்… தம்பி நீங்க கார் ஸ்டார்ட் பண்ணுங்க…” என்று டிரைவர் சொல்ல,  அனைத்தையும் இளம்பரிதி பார்த்துத்தான் நின்றான்.

வெற்றிவேலனோ அப்போதும் தங்கள் மகன்களை முறைக்க, வேறு வழியில்லாது, கோபி தான் இளாவோடு வர, அடுத்த இரண்டு நிமிடத்தில் கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது..

கோபியோ, அருணோ இவனோடு பேசவேயில்லை. வெற்றிவேலன் தான் பேசினார். அதிலும் நன்றி எல்லாம் சொல்லவில்லை, டிரைவரிடம் சொல்லி ‘எவ்வளோ வேணும் கேளு..’ என, டிரைவர் வந்து கேட்க,

“இவருக்கு எவ்வளோ குடுப்பீங்க??” என்றான் கோபியை கை காட்டி.

இது அடுத்த அதிர்ச்சி.

‘எவன்டா இவன்.. எல்லாத்துக்கும் இப்படி பேசுறான்…’ என்று வெற்றிவேலன் பார்க்க,

கோபியோ ‘நானும் இவனும் ஒண்ணா…’ என்று பார்த்தான். அப்பாவின் முன்னம் பேசிப் பழக்கம் இல்லையே… ஆக அவன் பார்வை மட்டுமே அப்படி இருக்க, அருண் தான் “எங்க அண்ணன் அவன்…” என்று நெஞ்சை நிமிர்த்தி முன்னே வர,

“அருண்…” என்று என்ற வெற்றிவேலன், 

“உன் பேரென்ன??” என்று கேட்க, அவரை நேர்கொண்டு பார்த்தவன் “இளா… பரிதி… இளம்பரிதி…” என்றான்.

அவன் பெயர் சொன்ன விதமே அவருக்கு அவனைப் பிடித்துப் போனது. இந்த ஒரு நிமிர்வு தன் மகனிடம் இல்லையே என்ற எண்ணம் தன்னைப்போல் வர, இவனைப் போல் ஒருவன் கோபியோடு இருந்தால், நல்லதோ என்று தோன்ற,

“என்ன படிச்சிருக்க…?” என, 

இதென்ன அப்பா கிளம்பாது இவனோடு பேச்சு வார்த்தை நடத்துகிறார் என்று பார்த்து நின்றனர் பிள்ளைகள். இளம்பரிதியும் சொல்ல,

“என்ன வேலை??” என்றார் அடுத்து.

“வேலை…” என்று இழுத்தவன், “இப்போதைக்கு உங்களோட நின்னு பேசிட்டு இருக்கேன் அவ்வளோதான் என் வேலை..” என,

“ம்ம்ம்…” என்றவர் “இவனை வந்து சாயங்காலம் கூப்பிட்டு வர சொன்னா வருவியா நீ??” என கேட்க, அவருக்கு தெரிந்தே இருந்தது, டிரைவரிடம் மட்டும் சொல்லி அழைத்து வா என்றால், நிச்சயம் இவன் வரமாட்டான் என்று.

கண்களை இடுக்கிப் பார்த்தவன் “ம்ம்ம்..” என்று தலையை ஆமோதிப்பாய் ஆட்ட, அடுத்து அவர்களும் கிளம்பிவிட்டனர். இவனும் கிளம்பி வந்துவிட்டான்.

அப்படி அவரிடம் சேர்ந்தது தான். அதாவது கோபிக்காக என்று இவனை சேர்த்து, பின் அனைத்துமே அங்கே அவன்தான் என்றாகிப் போனான்.

இலம்பரிதியைக் கேட்காது அங்கே யாரும் எதுவும் முடிவுகள் எடுத்திட முடியாத நிலை என்பதனை உருவாக்கி வைத்திருந்தான். செய்யவேண்டும் என்று செய்யவில்லை. இவனின் செயல்களில் எல்லாம் அதுவாகவே தன்னைப்போலவே எல்லாம் நடந்தேறியது.

வெற்றிவேலனின் மனைவி சரோஜா ஆகட்டும், கோபியின் மனைவி ரேணுகா ஆகட்டும்,  அவனின் பிள்ளை நிகில் ஆகட்டும், வெற்றிவேலனின் மகள் பிருந்தா ஆகட்டும், அவளின் மகள் தேஜஸ்வினி ஆகட்டும், இவர்கள் எல்லாருக்குமே இளம்பரிதி இல்லையெனில் எதுவும் இல்லை.

பிருந்தாவை பழனியில் தான் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் கட்டிக் கொடுத்திருக்க, பிருந்தாவிற்கு எப்போதுமே திண்டுக்கல்லும், பழனியும் பக்கத்து வீடு போலதான்.

இதுவரை வெற்றிவேலனையோ, கோபியையோ, அருணையோ எந்த முறை கொண்டு அழைத்துப் பேசியது இல்லை அய்யா, அண்ணா, சர் இப்படி எதுவுமில்லை. வீட்டுப் பெண்களை மட்டும் அம்மா, அண்ணி மற்றும் அக்கா என்பான். அதைகொண்டு பிள்ளைகளும் சித்தப்பா, மாமா என, அங்கே இளம்பரிதி தான் எல்லாம் என்றாகிப் போக, அப்படி இருந்த அனைத்தையும் வேண்டாம் என்று விட்டு வந்துவிட்டான் இளா.

ஆனாலும் விடுவேனா என்று சரோஜா முதல் நாள் அழைத்து “டேய் பரிதி… எனக்காக டா… வேண்டுதல் வச்சது மறந்தே போச்சு.. இன்னிக்குதான் உங்கண்ணி சொல்றா… கொஞ்சம் முடிச்சு கொடு டா..” என்றிருக்க, சொல்லிவிட்டு காரையும் அனுப்பிவிட, அவர்கள் வைத்த வேண்டுதலுக்கு, இவன் பிரசாதம் வழங்க வந்திருந்தான்.

‘வேணாம் சொன்னாலும் விடாம…’ என்ற எரிச்சல் அவனுள், உள்ளே இருந்தவன் பிரசாதம் கொடுத்துவிட்டு வெளிவர, “நீ போ..” என்று காரில் அவனை அனுப்பியவன், அவனின் வீடு வர, அங்கே வாசலில் நின்றிருந்த கார் கண்டு இன்னும் எரிச்சல் கூடியது.

பிருந்தா வந்திருந்தாள்.

உள்ளே வந்தவனை “மாமா..” என்று தேஜஸ்வினி அழைக்க, “தேஜு பாப்பா எப்போ வந்தீங்க…” என்று அவளை தூக்கியபடி “வா க்கா…” என,

“எப்போ வந்தீங்கன்னு கேட்கிறியா இல்லை ஏன் வந்தன்னு கேட்கிறியா??” என்றாள் பிருந்தா.

அதற்கும் அவன் பதில் சொல்லவில்லை. உண்மையில் அவன் அப்படி நினைத்தது நிஜம் தான். எதுவும் சொல்லாது மோகனாவிடம் “எதுவும் வாங்கனுமா??” என, 

அவர் பதில் சொல்லும் முன்னமே “டேய் ரொம்ப தான் கவனிப்பு..” என்ற பிருந்தா,

“சரி கிளம்பு என்னோட.. வா..” என,

“க்கா… என்ன விஷயம்..” என்றான் அடப்பட்ட குரலில்.

“பாருங்கம்மா… எப்படி செய்றான்னு… இவனுக்கு கொஞ்சம் கூட என்மேல பாசமில்லை தானே…” என்று பிருந்த வழக்கமான வசனத்தை மோகனாவிடம் முன் வைக்க,

“என்ன இளா இது…??” என்றார் மோகனா கடியும் குரலில்.

அவனோ அசையவே இல்லை… பதில் சொல்லாது தேஜுவோடு எதையோ பேசி சிரிக்க “இளா…” என்றாள் பிருந்தா இறங்கிய குரலில்.

“என்னக்கா…??!!!”

“அருணோட கொஞ்சம் பேசுடா வந்து.. அவன் சரின்னு சொன்னாதான் நான் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும்..” என,

“இதுல நான் பேச என்ன இருக்கு…?” என்று இவனும் சொல்ல,

“நீ சொன்னா அவன் கேட்பான் டா… உங்க மாமாட்ட வேற நான் உன்னை பேசச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..” என்றாள் வேறு வழியே இல்லாது.

“என்னைக் கேட்காம நீ ஏன் க்கா அப்படி சொன்ன.. சோ அது உன்னோட தப்பு.. நான் ஒன்னும் பண்ண முடியாது. அப்புறம் கல்யாணம் எல்லாம் அவங்கவங்க மனசு சம்பந்தப்பட்ட விஷயம்… இதுல மத்தவங்க சொல்லி எல்லாம் முடிவு செய்யக் கூடாது. அருண் கண்டிப்பா யோசிப்பான். டைம் கொடுங்க அவனுக்கு..” என,

“ரெண்டு மாசம் ஆச்சுடா இந்த விசயம் பேச ஆரம்பிச்சு. நல்லவேளை வானதி இங்க இல்லை.. அடுத்த வாரம் வந்திடுவா.. அவ வர்றதுக்குள்ள நம்ம எல்லாம் ஒரு முடிவு செய்யணும் தானே..” என்று பிருந்தா சொல்ல,

“முதல்ல அந்த பொண்ணுட்ட கேட்டீங்களா??” என்றான் இப்போது அப்பட்டமாய் முறைத்து.

அவ்வளோதான் அப்படியே பிருந்தாவின் முகம் வாடிட, “கேட்கலை தானே.. முதல்ல அந்த பொண்ணுட்ட கேளுங்க.. இதுல எல்லாரோட விருப்பத்தை விட அந்த பொண்ணோட விருப்பமும் சம்மதமும் தான் முக்கியம்..” என்று இவன் விடாது பேச,

“அது… மாமாவும் எங்க அத்தையும் பேசிப்பாங்கடா.. நான் முன்னவே அப்பாட்ட சொன்னேன் அருணுக்கே முடிக்கலாம்னு. பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கிறது எல்லாம் வேண்டான்னு சொல்லிட்டார். இப்போ பாரு.. அவளுக்கு பார்த்து பார்த்து எங்க வீட்ல செஞ்சு வச்சாங்க.. ஒரே வாரம் திரும்ப வந்துட்டா…” என்று பேச,

“தெரியுதுல்ல.. அப்போ அந்த பொண்ணுட்ட கேளு..” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

“ப்ளீஸ் இளா.. எனக்காக… அருண்கிட்ட பேசு.. வானதிக்கிட்ட எப்படியும் எங்க அத்தை பேசிப்பாங்க.. அவளோட கேஸ் கூட முடிஞ்சதுதானே.. எல்லாமே கையெழுத்து ஆகிடுச்சு.. எந்த பிரச்சனையும் இல்லை… அருணும் அவளும் என்ன யாரும் தெரியாதவங்களா?? ஒன்ஸ் ரெண்டு பேரும் பேசிக்கிட்டா எல்லாம் சரியாகிடும்…” என்று பிருந்தா சொல்ல,

“அதான் இவ்வளோ சொல்றாளே டா.. போயி தான் பேசேன்.. இவ்வளோ ஏன் பிகு பண்ற நீ.. கோவிலுக்கு வேற  போயிட்டு வந்திருக்க, போ.. போய் பேசிட்டு வா… எல்லாம் நல்லபடியா நடக்கும்…” என்று மோகனாவும் சொல்ல,

“ம்ம்ம் கடைக்கு போகலாம்னு நினைச்சேன்…” என்றபடி எழுந்தான் இளம்பரிதி.

அவனின் அப்பாவின் சிறு மளிகை கடை இப்போது பெரிய கடையாகவே மாறி இருந்தது. வீடும் அப்படியே, இரண்டு மாடி வீடாய் மாறியிருக்க, அம்மாவின் பெயரில் இடமும், தங்கையின் பெயரில் வங்கியில் ஒரு கணிசமான தொகையும் நகையும் என்று எல்லாம் சேர்த்திருக்க, தங்கையை மேற்படிப்பிற்காக சென்னை அனுப்பியிருந்தான்.

வேண்டாம் திருமணம் செய்து வைத்திடலாம் என்றதற்கு கூட “நான்தான் ஒரு டிகிரியோட நின்னுட்டேன்.. இவளும் அப்படியா??” என்று மேலே படிக்க வைக்கின்றான்.

இளம்பரிதி எழுந்து நிற்கவுமே, பிருந்தாவிற்கு சந்தோசமாகிப் போனது.

“எனக்கு தெரியும்டா நீ வருவன்னு…” என்றபடி எழுந்தவளிடம்,

“உன் நாத்துனா இப்போ எப்படி இருப்பா?? பார்த்தே ரொம்ப நாளாச்சு.. உன்னோட வளைகாப்பு அப்போ பார்த்தது..” என்று மோகனா சொல்ல,

“இதோ…” என்றவள், தன் அலைபேசியில் இருந்த போட்டோவினைக் காட்ட, “ம்ம் அழகா இருக்கா…” என்று மோகனா சொல்ல,

“அழகிதான் ம்மா.. அவ வாழ்க்கையும் அழகா இருக்கணும் தானே.. அதான் அருணுக்கே பேசி முடிக்கணும்னு துடியா துடிக்கிறேன்…” என்றாள் பிருந்தா..

‘நல்லா துடிச்சீங்க…’ என்று நக்கலாய் நினைத்துக் கொண்டான் இளம்பரிதி.

Advertisement