Advertisement

   காதல் – 1

“ஐ சே கெட்டவுட் தேவ்..” என்று அடிக்குரலில் பல்லவி கத்தினாலும் ஆடாமல் அசையாமல் அப்படியேத்தான் அமர்ந்திருந்தான் தேவ்.. ஷ்யாம் தேவ்..

முகத்தினில் ஒருவார தாடி.. கண்கள் வேறு சிவப்பேறி இருக்க, சும்மா பார்க்கவே கொஞ்சம் கடின தோற்றம் இருக்கும், இதில் இப்படி வேறு இருக்க,  புதிதாய் யாரும் அவனைப் பார்த்தால், உள்ளுக்குள்ளே ஒரு அச்சம் தோன்றும் தான்..

ஆனால் பல்லவி.. அவனை வீட்டை விட்டு தள்ளும் முயற்சியில் இருந்தாள். அவளது வீடுதான்.. ஆனால் சொந்தமில்லை.. வேலைக்கு என்று  ஹைதிராபாத் வர, ஹாஸ்டல் உணவு பிடிக்காமல் போக, தனி வீடு எடுத்து தங்கிவிட்டாள்.

உள்ளுக்குள்ளே அவளுக்குமே மனம் கதறிக்கொண்டு தான் இருந்தது. பின்னே ஷ்யாம்தேவின் மீது கொண்ட காதல் மனம் அல்லவா.. ஆனால் இப்போது அவனிடம் கடுமை காட்டாவிட்டால் அவன் சரிவரமாட்டான் என்றிருக்க, அதிலும் இந்நேரத்தில் அவன் இங்கு வந்து அமர்ந்துகொண்டால் அவன் வீட்டினர் என்ன நினைப்பர் என்றுமிருக்க அவனை கிளப்ப முயன்றாள்..

“தேவ்.. திஸ் இஸ் டூ மச்… இப்போ நீ கிளம்புறியா இல்லையா???” என்றபடி அவனருகே வந்து அவனின் கரங்களை பிடித்து எழுப்ப முயற்சிக்க,

அவனோ ஒரே இழுவையில் அவளை தன்மீது சாய்த்து இறுக அணைத்துக்கொண்டான், “பல்லவி…” என்ற ஆழ்ந்த அழைப்போடு.

“தேவ் என்ன பண்ற நீ.. ம்ம்ச்… டேய்…” என்று பல்லைக் கடித்து, அவனிடமிருந்து விலகப் பார்க்க, அவனோ விடாது தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

“தேவ் ப்ளீஸ்…” என்று அவன் கரங்களை விலக்க முயல, அது அவளால் முடியவேயில்லை.. 

காதல் யாரை விட்டது…??

பல்லவியும் ஷ்யாம்தேவும் காதல் பறவைகள்தான்.. மூன்று வருடக் காதல்.. பல்லவி ஹைத்ராபாத் வந்து கொஞ்ச நாளிலே அவளுக்கு காதலும் வந்துவிட்டது..

ஷ்யாம்தேவும் அவளும் ஒரே அலுவலகம். வெவ்வேறு பிரிவு. ஆபிஸ் பார்ட்டியில் தெலுங்கும் ஆங்கிலமும் மட்டும் காதில் கேட்டு கொஞ்சமே கொஞ்சம் சலிப்பாய் பல்லவி அமர்ந்திருக்கையில்,

திடீரென்று ஒருவன் மேடையேறி “நீ காற்று நான் மரம்.. என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…” என்று தமிழில் பாட, நிஜமாகவே அந்த படத்தில் நாயகி எப்படி நாயகன் பாடியதும் வேகமாய் ஒரு ரியாக்சன் கொடுப்பாளோ அதுபோல தான் பல்லவியும் கொடுத்தாள்.

‘அட தமிழா…’ என்று தள்ளி அமர்ந்திருந்தவள், வேகமாய் மேடை முன் போய் நிற்க, பாடியவன் பெயர் தெரியவில்லை என்றாலும், அவன் பாடிய விதமும், அவனது தமிழும் அவளை அங்கே நிற்க வைக்க,

அவனது நண்பர்களோ பின்னேயிருந்து “ஷ்யாம் ஷ்யாம்…” என்று கத்தவும்,

‘ஷ்யாம்..’ என்று சொல்லிக் கொண்டவள் அங்கேயே நிற்க, அவன் பாடி முடித்து இறங்கி வருகையில், சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கைத்தட்ட, சிலர் போய் அவனுக்கு கரம் கொடுக்க, பல்லவி எதுவுமே செய்யாமல் அப்படியேதான் நின்றிருந்தாள்.

மேடையிலிருந்து இறங்கி வந்தவன், அவளை தாண்டித்தான் செல்லவேண்டும், அவளோ நகராமல் அப்படியே நிற்க, ஒருநொடி பார்த்தவன், அவளை சுற்றிக்கொண்டு செல்ல,

“பல்லவி வாட் ஹாப்பன்..” என்று ஒருத்தி அவள் கையைப் பிடித்து இழுக்க,

“ஓ.. சாரி…” என்று லேசாய் தலையில் தட்டிக்கொண்டவள், ஷ்யாமை திரும்பிப் பார்க்க, அவனோ மேனஜிங் டைரக்டரோடு  வெகு சாதாரணமாய் பேசிக்கொண்டு இருந்தான்.

‘பெரிய பொசிஷன்ல இருப்பானோ…’ என்று நினைக்கையிலேயே, பேசியபடி இருந்தவனும் எதேர்ச்சையாய் இந்தப்பக்கம் திரும்ப, பல்லவி  வேகமாய் தலையை திருப்பிக்கொண்டாள்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் அந்த பார்ட்டி நல்லவிதமாகவே முடிய, அடுத்து பல்லவி அவனைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை..

ஆனாலும் யாரவன் என்று தெரிந்துகொள்ளும் ஒரு பரபரப்பு அவளுள் இருந்துகொண்டே இருக்க, ஒருவழியாய் நாள் செல்ல அதுவும் மறையத் தொடங்க,  மறுவாரமே அவளைத் தேடி  அவனே  வந்தான்..

பல்லவி ப்ரோமோசன் லெவெலில் தான் ஹைதராபாத் வந்ததே. ஆக அவளது பொறுப்புகள் என்று சிலது அங்கே இருக்க, ஒரு க்ளாரிபிக்கேசன் செய்ய ஷ்யாம் வர, அன்று பார்த்து பல்லவிக்கு சரியான சளித்தொல்லை இப்போது  தலைவலியும்..

முதல் நாள் மாத்திரை போட்டும் சரியான உறக்கமும் இல்லாமல் போக, பேசாமல் லீவ் போட்டுவிடலாமா என்றுகூட அவளுக்கு இருக்க, அடுத்த மாதம் மூன்று நாட்கள் வரும் அரசு விடுமுறையோடு, மேலும் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து செல்ல வேண்டும் என்ற கணக்கில் கிளம்பி வந்திருந்தாள்.

ஆனாலும் அவளால் அமரக்கூட முடியவில்லை.. கண்களில் இருந்து வேறு நீர் கசிந்துகொண்டு இருக்க,

“ஓ.. காட்…” என்று தலையை தாங்கிப் பிடித்தவள், கொஞ்சம் சமாளிக்கப் பார்க்க, அது அவளால் சுத்தமாய் முடியவில்லை..

பதினோரு மணிக்கு மேல் டீ டைமில் கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தால், “மேம்… அக்கவுன்ட் செக்சன் லீட் உங்களை பார்க்கணும் சொல்றார்…” என்று இன்டர்காமில் தகவல் வர,

‘இன்னிக்குன்னு பார்த்து தான் எல்லாம் வருவான்..’ என்று நொந்தவள், “சென்ட் ஹிம் ஆப்டர் பைவ் மினிட்ஸ்…” என்று சொல்லி, வேகமாய் போய் தன் முகத்தை சரி செய்துகொண்டு வந்து,

அவள் ஹான்ட் பேக்கில் இருக்கும் குட்டி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு இருக்க,

“எக்ஸ்கியூஸ் மீ..” என்றபடி உள்ளே வந்தமர்ந்தான் ஷ்யாம்தேவ்.

நிச்சயமாய் பல்லவி அவனை எதிர்பார்க்கவில்லை என்பது அவளது பார்வையில் தெரிய, கையில் கண்ணாடியோடு, அவனை திகைத்து பார்த்தவளின் உதடுகள் “எஸ்…” என்று அவளையும் அறியாமல் சொல்ல,

ஷ்யாம்தேவோ அவளை ஒரு பார்வை பார்த்தவனோ அவளுக்குத் தமிழ் தெரியாதென்று நினைத்து “எங்க இருந்துதான் இதுங்க வருதுங்களோ. இதுல ப்ரோமோசன் லெவல் வேற…” என்று முணுமுணுக்க, அது அவள் காதுகளில் நன்றாகவே விழுந்து, அவளது முக பாவனையை மாற்ற வைத்தது..

“ஹலோ அது இதுன்னு என்ன பேச்சு இது??” என்று அவளும் தமிழில் கேட்க,

‘ஓ.. தமிழ் தெரியுமா???’ என்பதுபோல் ஒரு பார்வை அவ்வளவே அவனிடம் பிரதிபலிப்பு.. மற்றபடி அவன் பேசியது தவறு என்று அவன் தோன்றவேயில்லை..

கையில் இருந்த சின்ன கண்ணாடியை மூடி மீண்டும் ஹான்ட்பேக்கில் வைத்தவள், “எஸ் Mr. ஷ்யாம்தேவ்.. வாட் யூ வான்ட்…” என்று தன் முகத்தையும் குரலையும் வெகுவாய் மாற்றி கேட்டவளை, இப்போதும் மௌனமாய் எடை போடும் பார்வைதான் பார்த்தான் அவன்..

யாரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று மனதில் சின்னதாய் ஒரு ஆவல் வந்து, அது லேசாய் இப்போது மறைந்து போனாலும், அவனே வந்து எதிரே அமர்ந்திருக்கையில், இப்போதென்னவோ அவளுக்கு எரிச்சலாய் தான் இருந்தது..

“Mr…” என்று பல்லவி லேசாய் மேஜையை தட்ட.

“நீ சொன்ன பைவ் மினிட்ஸ் ஓவர்னு நினைக்கிறேன்…” என்றவன் குரலில் நக்கல் இழையோட, ‘ஹவ் டேர்…’ என்று முறைத்தாள் பல்லவி..

“ஓகே…” என்று தோளைக் குலுக்கியவன், “லாஸ்ட் மனத் ப்ராடக்ட் டெலிவரி ரிப்போர்ட் வேணும்…” என,

“நீங்க அக்கவுன்ட் செக்சன் தானே??” என்று புருவத்தை உயர்த்தினாள் பல்லவி..

“எஸ்…” என்றவன் பார்வையே அத்தனை அலட்சியத்தைக் காட்ட, அவளோ பதிலே சொல்லாது நேருக்கு நேராய் அவனைக் காண,

“இன்னும் பைவ் மினிட்ஸ் ஆகுமா???” என்றான் வெளிப்படையான நக்கலோடு..

அவனையே முறைத்தவள், மேஜை டிராவை திறந்து ஒரு பைலைப் பார்த்து எடுத்து  அவன் முன்னே மேஜையில் வைத்தவள், ‘இந்தா நீ கேட்டது எடுத்துட்டு போ…’ என்பது போல் பார்க்க,

அவனோ லேசாய் அந்த பைல் மீது பார்வை பதித்தவன், “இது நான் கேட்டது இல்லை..” என்றான்..

அவளுக்கோ தலைவலி உயிரை வாங்கியது, ஆனால் இவனோ அதைவிட பெரிய தலை வலியாய் வந்தமர, “ம்ம்ச்…” என்று சலிப்போடு, மீண்டும் டிராவில் பார்வையை ஓட்டியவள், மற்றொரு பைலை எடுத்து நீட்ட,

“ஹ்ம்ம் ஓகே.. தேங்க்ஸ்…” என்று சொல்லி பைலை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

“இடியட்… ச்சே…” என்று மேஜையை டிராவை வேகமாய் மூடியவள், மேலும்  தலைவலி கூடியதாய் உணர, அப்படியே கொஞ்ச நேரம் இருக்கையில் சாய்ந்துவிட்டாள்..

உடல்நிலை சரியில்லாது போனாலே சலிப்பாய் இருக்கும், இதில் இவன் வந்து வேறு எரிச்சலை ஏற்றிவிட்டு போக அது நன்றாய் கொழுந்து விட்டு எரிந்தது.. கண்களை மூடி அமர்ந்தவளுக்கு அப்படியே உறங்கிடலாமா என்று தோன்ற, அடுத்த நொடி இண்டர்காம் ஒலிக்க எடுத்து,

“ஹலோ..” என்றவள், ஒரு நொடி மௌனத்திற்கு பிறது “ஓகே…” என்றுமட்டும் சொல்லி இருக்கையை விட்டு எழ அவளது மனமும் சரி உடலும் சரி மிக மிக தொய்வாய் இருந்தது..

‘லீவே போட்டிருக்காலம்.. இன்னிக்கு பார்த்துதான் அர்ஜன்ட் மீட்டிங் எல்லாம் வைப்பாங்க…’ என்று நொந்துகொண்டே மீட்டிங் ரூம் செல்ல, அங்கே ஷ்யாம்தேவ் உட்பட, அந்த கம்பனியின் மற்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஒருசிலரும் அமர்ந்திருக்க,

அனைவரையும் பொதுவாய் ஒரு பார்வை பார்த்து கடினப்பட்டே வரவழைத்த புன்னகையோடு பல்லவியும் அமர, ஷ்யாம்தேவோ இவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்பதுபோல் அமர்ந்திருந்தான்..

“ஹாய் பல்லவி வொய் ஆர் யூ லூகிங் டல்…??” என்று ஒருவர் கேட்க,

“கோல்ட் அண்ட் ஹெட்டேக்…” என்று பதில் அளித்தவளின் பார்வை ஷ்யாம்தேவைப் பார்த்துவிட்டு நகர, அவனும் அவள் சொன்ன பதிலை காதில் வாங்கியிருக்கிறான் என்று அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது..

அடுத்து ஒரு ஐந்து நிமிடத்தில் அவர்களின் JMD வரவும் மீட்டிங் தொடங்கிட, மதிய உணவு நேரத்தையும் தாண்டி இந்த மீட்டிங் சென்றுகொண்டு இருக்க, அதில் ஷ்யாமோ போன மாத ப்ராடக்ட் டெலிவரிக்கும், அதன் தொடர்பான அக்கவுன்ட் டீடைல்ஸுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் பற்றி சொல்லிட, அதன் தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டு இருக்க, பல்லவிக்கோ கொஞ்ச நேரத்திற்கு மேல் அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை..

பல்லவியோ “சர்.. ப்ராடக்ட் டெலிவரி ஃபைனல் ரிப்போர்ட்ல இருக்கிறது க்ளியரான டீடைல்ஸ்..” என்று சொல்ல,

ஷ்யாமோ “க்ளியரான டீடைல்ஸ்னா அக்கவுன்ட் டேலி ஆகணுமே…” என்று விடாது வாதிட, இதில் எங்கே தவறு நடந்தேறியிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

முடிவாய் பல்லவியும், ஷ்யாம்தேவும் அடுத்தவாரம் அவர்கள் கம்பனியின் கிளை அலுவலகம் சென்று சின்னதாய் ஒரு இன்ஸ்பெக்சன் நடத்துமாறு முடிவு எடுக்கப்பட,

‘இவனோடா…’ என்று அவளும்,

‘இவளோடா…’ என்று அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அனைவரும் வெளியேற, பல்லவியால் இருக்கையை விட்டு அவளால் சுத்தமாய் எழ முடியவில்லை.. காய்ச்சல் வருவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிய, இவன் எழுந்து போனால் கூட எப்படியோ சமாளித்து கிளம்பிடலாம் என்று பார்த்தால், அவனோ அங்கேயே அவனது மடிக்கணினி வைத்து வேலையைத் தொடங்கிட,

‘இனிக்கு நாளே எனக்கு சரியில்ல…’ என்று நொந்தவள், மெல்ல எழ முயற்சிக்க, கண்களோ இருட்டிக்கொண்டு வருவது போல் இருந்தது..

“நோ…” என்று மீண்டும் இருக்கையில் அமர்ந்தவள், கொஞ்சம் தண்ணீரைக் குடித்து வேகமாய் மூச்சுக்களை எடுத்துவிட, கொஞ்சம் நன்றாய் இருப்பதுபோல் இருக்க, மீண்டும் எழ முயன்றாள்.

ஷ்யாமோ அனைவரும் சென்றபின்னும் இவள் என்ன செய்கிறாள் என்று கணினி விட்டு பார்வையை அவள்புறம் திருப்ப, அவளது முகமே எதுவோ சரியில்லை என்று காட்டவும்,

“என்னாச்சு…” என்றபடி வேகமாய் அவளிடம் வந்துவிட்டான்..

“நத்திங்…” என்று கைகளை உயர்த்தியவளுக்கு, ‘இவன் முன்னாடியா இப்படியெல்லாம் நடக்கணும்…’ என்றிருக்க, தன் பலம் முழுவதும் திரட்டி எழ முயற்சிக்க, அவளுக்கோ குளிர் நடுக்கம் ஏற்படத் தொடங்கியது.

“டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்…” என்று கடிந்தபடி ஷ்யாம் அவள் கரங்களைப் பற்றி மீண்டும் இருக்கையில் அமர வைத்தவன், முதலில் ஏசியை அமர்த்தி, அவளருகே மீண்டும் வந்து நிற்க, 

“தேங்க்ஸ்..” என்று சொல்லக்கூட வாய் வரவில்லை அவளுக்கு..

“ரொம்ப பிரிலியன்ட்னு நினைப்பு.. ம்ம்…” என்று அவனே சொல்லிக்கொண்டு அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தவன்,

“ஹை  டெம்பரேச்சர் இருக்கும்போல..” என்று சொல்லியபடி  ரிசப்சனிஸ்ட்டுக்கு அழைக்க, அடுத்த பத்து நிமிடங்களில் பல்லவி மருத்துவமனை செல்ல வாகனம் தயாராய் இருந்தது.

“ஹாஸ்பிட்டல் வேண்டாம்.. வீட்டுக்கு போனா போதும்…” என்று மெல்ல முனங்கியவளை முறைத்தவன்,

“அது நீ என் கண் முன்னாடி இல்லாம போயிருந்தா… இப்போ ஹாஸ்பிட்டல் கிளம்பு…” என்று அவளை அவன்தான் அழைத்தும் சென்றான்.. மருத்துவமனையிலோ அங்கும் காய்ந்து கொண்டு தான் இருந்தான்..  

‘இதுக்கு இவன் வராமையே இருந்திருக்கலாம்…’ என்று முகத்தை அவளும் சுளித்தபடி தான் வைத்திருந்தாள்..

ஊசி போட்டு, மருந்து மாத்திரை வாங்கி ஒருவழியாய் திரும்பவும் காரில் ஏறியதும்,

“ஹெல்த் சரியில்லனா.. மூ… ம்ம்ச்.. பேசாம லீவ் போட்டு இருக்கணும்.. பொறுப்புகளாட்டம் கிளம்பி வந்து எல்லாரையும் டென்சன் பண்ண கூடாது…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

அவன் சொல்ல வந்த வார்த்தைகள் என்னவென்று அவளே யூகித்துவிட்டு, “என்னமாதிரி பேச்சிது.. உங்களை நான் கூப்பிட்டேனா??” என்று அவளும் சண்டைக்குத் தயாராக,

“ஹ்ம்ம் இப்போ இப்படித்தான் சொல்வீங்க.. ஹே லுக்.. உனக்கு த்ரீ டேஸ் லீவ்.. இன்ஸ்பெக்சன் பிஃப்த் டே போறோம்.. சோ நல்லாகிட்டு ஆபிஸ் வா..” என,

“என்ன மாதிரி பெர்சன் நீங்க…” என்று அவனை இளக்காரமாய் பார்த்தவள், அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவனோ அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.. காரில் ஏறியதும் “உன் அட்ரஸ் சொல்லு..” என்றவன், அப்படியே இறக்கி விடாமல், வீட்டினுள்ளே வந்து

“டேக் கேர்..” என்று சொல்லி, “உன் செல் நம்பர் என்ன??” என்று கேட்க, அவளோ அவனை வித்தியாசமாய் பார்த்தாள்.

“ஹலோ நான் கடலை போட நம்பர் கேட்கலை ரைட்…” என்றவன் “ஒரு பொறுப்பு எடுத்தா அதை உருப்படியா செஞ்சு முடிக்கணும்.. கிவ் மீ யுவர் நம்பர்…” என்று அதட்டலாய் கேட்க,

‘இவன் என்ன டிசைனோ..’ என்றெண்ணியவள் அவனை முறைத்துக்கொண்டே அவளது எண்ணை பகிர,

“ம்ம்…” என்றவன், அவளது அலைபேசிக்கு ஒரு மிஸ்ட் கால் விட்டு “திஸ் இஸ் மைன்” என்று சொல்லி மீண்டும் ஒரு டேக் கேர் சொல்லி கிளம்பிவிட்டான்.. அவன் கிளம்பிய பின்னேதான்  பல்லவிக்கு  இயல்பாய் மூச்சு விடவே முடிந்தது..

“ச்சே என்னமாதிரி ஆள் இவன்.. சாங் பாடினது வச்சு நானா தப்பா புரிஞ்சுக்கிட்டேன்..” என்று எண்ணியவள் தான்,

மூன்று நாட்கள் விடுமுறையில் இருந்து, பின் ஐந்தாவது நாள் அவனோடு இன்ஸ்பெக்சன்காக அவர்களது கிளை அலுவலகம் சென்று திரும்புகையில்,

“என்ன மாதிரி மனுஷன் இவன்.. ச்சே இவனைப் போய் தப்பா புரிஞ்சுக்கிட்டோமே…”  என்று அப்படியே வேறு மாடுலேசனில் எண்ணினாள்..

எண்ண வைத்தான் ஷ்யாம்தேவ்..

பொறுப்பு கடமை கண்ணியம் அதெல்லாம் சரி அதற்காக நம்மையும் நாம் கவனித்துகொள்ள வேண்டும் என்பதில் அவன் எப்போதுமே தெளிவாக இருப்பது நன்றாகவே புரிந்தது அவளுக்கு..

மதியம் உண்ணாமல் அவள் ஒரு பைலில் மூழ்கியிருக்க, “இப்போ நீ சாப்டாம பைல் பாக்குறன்னு யாரும் உனக்கு அவார்ட் கொடுக்கப் போறாங்களா.. கிளம்பு…” என்றபடி வந்து நின்றான்..

பல்லவிக்கு அவனோடு வந்த கொஞ்ச நேரத்தில் புரிந்துபோனது, அவனது பேச்சே இப்படித்தான் என்று..

இப்படி ஆரம்பித்த அவர்களின் பழக்கம் நாளடைவில் காதல் வந்து, இருவரையும் கட்டிக்கொள்ள, மூன்று ஆண்டுகள் ஓடிவிட, இப்போது காதலின் அடுத்த படியான கல்யாணத்திற்கு செல்வோம் என்று இருவரும் இருந்த நிலையில், ஷ்யாம்தேவிடம் இப்படி முகம் கொடுத்து பேசக்கூட முடியாத நிலை உருவானது..

காரணாம் ஷ்யாம்தேவுக்கு வேறொரு பெண்ணோடு நிச்சயம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது..

அவனோ அவள் வீட்டில் வந்து அமர்ந்திருக்கிறான்.. உன்னை விட்டு போக மாட்டேன் என்று.. எதுவந்தாலும் பார்த்துகொள்வோம் என்று.. பல்லவியோ பிடிவாதமாய் அவனை அனுப்பும் முயற்சியில் இருக்க,

“லுக் பல்லவி நான் போக மாட்டேன்… நீ என்ன சொன்னாலும் சரி நான் போக மாட்டேன்..” என்று அவளை இறுக அணைத்து அவளின் காதோரம் சொன்னவனின் மீது அந்த நேரத்திலும் அவளுக்கு காதல் பெருகினாலும், அவளாவது சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டுமே என்றிருக்க,

“நீ கிளம்பளைன்னா உன் அப்பா அம்மாக்கு கால் பண்ணுவேன்..” என்று அடுத்த மிரட்டலை ஆரம்பிக்க,

“தாராளமா.. அப்படியே உன் அப்பா அம்மாக்கும் கால் பண்ணு.. எல்லாம் வரட்டும்.. பேசி முடிக்கலாம்..” என்று ஒரு முடிவாய் திண்ணமாய்.. திடமாய் திமிராய் அமர்ந்திருந்தான் அவளின் தேவ்..   

                                 

 

 

Advertisement